Friday, 6 June 2014

பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1



காலை 5.30 மணிக்கு கண் விழித்த போது கீழ்வானம் சற்றே வெளுத்திருந்தது. வயது 56 ஐக் கடந்து விட்டது. விடலைகளைப் போல விடிந்த பிறகும் தூங்குவது இந்த வயதுக்காரர்களிடம் காண முடியாது. காலைக் கடனை முடித்துவிட்டு நடைபயிற்சி. காலை நடைபயிற்சி மிகவும் உற்சாகமானதாகவே இருக்கும். இதயத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் வேண்டி இருப்பதால் காலை நடைபயிற்சியை பெரும்பாலும் தவிர்ப்பதில்லை. அரை மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தேன். 

இருபது நிமிட நேரம் மட்டுமே நடை பயிற்சி மேற்கொள்வதால் நமக்கு பயன் ஏதும் ஏற்படுவதில்லை; நமது ஆற்றலை செலவழித்தால் மட்டுமே நடைபயிற்சியின் பலன் நமக்குக் கிட்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. இருபது நிடம் நடந்த பிறகே நமது ஆற்றல் செலவாகத் தொடங்கும். ஆற்றல் செலவானால்தான் வேர்க்கத் தொடங்கும். குறைந்தது ஒரு மணி நேரம் நடந்தால்தான் நடைபயிற்சியின் முழு பலனும் நமக்குக் கிட்டும் என்றாலும் எனது உடல் நிலையை கணக்கில் கொண்டு  அரை மணி நேர பயிற்சியை மேற்கொள்கிறேன்.

நடை பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும் நடைபயிற்சிக்காக இரண்டு கால்களிலும் சாக்சைச் சொருசி, அதன் பிறகு கேன்வாஸ் ஷீவை திணித்து, போதுமான அளவு அழுத்தம் கொடுத்து லேசைக் கட்டுவதும், அதே போல ஷீவையும் சாக்சையும் கழற்றுவதும் ஒரு சுமையாகவேத் தோன்றும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு செய்தாலும் இவ்வேலையை குனிந்து கொண்டுதான் செய்ய வேண்டும். 
 
மணி 6.00.

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டருக்குக் கீழே சென்றுள்ளது. நகரங்களில்தான் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை இது வரை இருந்தது. ஆனால் இன்று கிராமங்களிலும் அதே நிலைதான். முப்போகம் விளையக்கூடிய பகுதிகளில்கூட குடிநீருக்கும் வீட்டு தேவைகளுக்கும்கூட காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கே மக்கள் அல்லாடும் போது விவசாயத்திற்கு வழி ஏது?

ஆனால் நாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள ஊராட்சி பொதுக்குழாயில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை. அன்றாடம் குறைந்தது அரைமணி நேரத்திற்கு தண்ணீர் விடுவார்கள். நாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு நாள்கூட தண்ணீர் வற்றியதே இல்லை.
 
நாங்கள் முதல் மாடியில் குடியிருப்பதால் அங்குள்ள குழாயில் தண்ணீர் வரவேண்டுமானால் மேநீர்த் தேக்கத் தொட்டி நிறைந்தால் மட்டுமே சாத்தியம். பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மாடியில் உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை. எனவே தெரு பொதுக் குழாயில்தான் குடி தண்ணீர் பிடிக்க வேண்டும். நடை பயிற்சி முடித்து வந்த உடனே தேவையைப் பொருத்து இரண்டு குடம் தண்ணீரோ அல்லது மூன்று குடம் தண்ணீரோ பிடிப்பது வழக்கம். இருபது படிகள் ஏற வேண்டி இருப்பதால் குடத்தை தோள் மீது சுமந்துதான் எடுத்துச் செல்வேன். அவ்வாறு எடுத்துச் செல்வது வேலையை சற்றே சுலபமாக்கும். இது எனது அன்றாடப் பணிகளில் ஒன்று. குடத்தைத் தூக்கி தோள்மீது வைப்பதற்கு பலமும் அதே போல தோளிலிருந்து குடத்தை இறக்குவதற்கு லாவகமும் தேவை; இல்லையேல் முதுகு பிடித்துக் கொள்ளும்.

குடத்தை ஏற்கனவே அலம்பி இருந்தாலும் தண்ணீர் பிடிக்கும் போது இரண்டு முறை குடத்தை அலம்புவது இயல்பாகிவிட்டது. குடத்தின் கழுத்தை இடது கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக இடப்புறமாக திருப்பியவாறே குடத்தின் வெளிப்பகுதியை வலது கையால் அலம்புவதும் அதே போல குடத்தின் உட்பகுதியில் தண்ணீரை மேலும் கீழுமாக சலக் சலக் என அடித்து அலம்பி கீழே ஊற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை அவ்வாறு செய்வது வழக்கமாகிவிட்டது. இப்படிச் செய்யும் போது குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது செலவாகும். குடத்தை அலசுவதற்கே இவ்வளவு தண்ணீரை செலவழிக்கிறோமே என்று எண்ணத் தோன்றினாலும் குடத்தை இவ்வாறு அலம்புவது ஒரு அனிச்சைச் செயலாகவே மாறிவிட்டது. தண்ணீர் பிடிக்கும் வேலையை குனிந்தவாறுதான் செய்ய வேண்டும். தண்ணீர் நிரம்பும் போது மட்டும் சற்றே நிமிர்ந்து நிற்கலாம். இப்படி மூன்று குடம் தண்ணீர் பிடிப்பதற்குள் மூச்சிரைத்துவிடும்.

வீட்டிற்குள் குடிதண்ணீர் குழாய் இணைப்பு வைத்துள்ளவர்களில் ஒரு சிலர் தண்ணீர் நின்றவுடன் குழாயை மூடாமல் விட்டுவிடுவார்கள். மறுநாள் இவர்கள் எழுந்து தண்ணீர் பிடிப்பதற்குள் ஏராளமான நீர் வெளியேறி சாக்கடையில் கலப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும். ஒரு முறை இப்படி வீனாகினால்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் சில வீடுகளில் இது அன்றாட நிகழ்வாகவே இருக்கிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு ஆத்திரம் வரும். இது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் குழாயை மூடி வைப்பதில்லை.

மணி 6.15.

அடுத்து தேநீர் தாயாரிக்க வேண்டும். அதற்கு முன் இரண்டு டம்ளர் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தேன். சமைப்பதற்கு முன்பு 1/2 மணி நேரம் அரிசி ஊறினால் சோறு மிருதுவாக இருக்கும்; விரைவில் சோறு வெந்துவிடும் என்பதற்காக இந்த முன் ஏற்பாடு.

நேற்று மாலை வாங்கிய பால் 200 மில்லி மீதம் இருந்தது. கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் வால்வை கீழ்புறமாக திருப்பிய பிறகு  கேஸ் அடுப்பின் வால்வை இடது கையால் இடது புறமாக திருப்பிய அதே நேரத்தில் வலது கையால் லைட்டரை அழுத்தி அடுப்பைப் பற்ற வைத்தேன். அலுமினியத்தால் ஆன பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை அதில் ஊற்றிய பிறகு இரண்டு தேக்கரண்டி த்ரீரோசஸ் தேயிலைத் தூளை போட்டு அதே அளவு சர்க்கரையையும் போட்டேன். சிறிது நேரத்தில் தேயிலையோடு பாலும் சேர்ந்து பொங்கியது. அடுப்பை சிம்மிற்கு குறைத்து மீண்டும் வால்வை முழுவதுமாக திறந்தேன். மீண்டும் பால் பொங்கியது. மீண்டும் சிம்மில் வைத்து…......இப்படியாக மூன்று முறை செய்து அடுப்பை அனைத்து விட்டு தேநீரை வடிகட்டி இரண்டு டம்ளரில் ஊற்றி ஒன்றை எனது தாய்க்குக் கொடுத்துவிட்டு மற்றொன்றை நான் எடுத்துக் கொண்டேன். தேநீரை இரண்டு முறை மட்டுமே ஆற்றினேன். இச்செய்முறைப்படி தயாரிக்கப்படும் தேநீரின் சுவை நட்சத்திர வீதிகளில்கூட இருக்காது. இந்த செய்முறையை நான் வட இந்தியாவிற்குச் சென்றிருந்த போது பார்த்து கற்றுக் கொண்டது. தேயிலையை அதிகமாக கொதிக்க வைத்தாலோ அல்லது அதிக முறை ஆற்றினாலோ தேநீரின் சுவை குன்றிவிடும் என்பது எனது அனுபவம். தேநீர் தாயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் பிளாஸ்டிக் கைப்பிடி ஏற்கனவே உடைந்து விட்டது. ஒரு துணியைக் கொண்டு அலுமினிய கைப்பிடியைப் பிடித்துதான் அந்த பாத்திரத்தைக் கையாள வேண்டும். அவ்வாறு செய்யும் போது துணியை சரியாகப் பிடிக்கவில்லை என்றால் கையில் சூடுபடுவதை தவிர்க்க முடியாது. இன்று எனது வலது கையின் நடு விரலில் சூடு பட்டுவிட்டது. பிறகு அது தீக்கொப்புளமாகவும் ஆகிவிட்டது.

தேநீர் குடித்து முடித்த பிறகு டம்ளரைக் கழுவி அதன் இடத்தில் கவிழ்த்து வைத்தேன். தேநீர் தாயாரிக்கப் பயன்படுத்திய அலுமினியக் பாத்திரத்தையும் அப்பொழுதே கழுவிவிட வேண்டும். பாத்திரத்தைத் தேய்ப்பதற்கு பயன்படுத்தப்படும் செயற்கை நாரை விம் பவுடர் மற்றும் சபீனா பவுடர் இரண்டிலும் ஒத்தி எடுத்து கிண்ணத்தை இடது கையால் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு வலது கையால் பாத்திரத்தின் உட்பகுதியை அழுத்தி அழுத்தித் தேய்க்க வேண்டும். அழுத்தித் தேய்க்கும் போது பாத்திரத்தையும் லேசாக சுழற்றியவாறே செய்தால்தான் பாத்திரத்தின் முழுபகுதியையும் சுத்தம் செய்ய முடியும். தேய்த்து முடித்த பிறகு தண்ணீரால் அலம்பி உட்பகுதியைப் பார்க்க வேண்டும். ஒரு முறை கழுவினால் முழு கரையும் போகாது. பால் காயும் போது பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் கரை அவ்வளவு லேசில் போவதில்லை. அதற்கு சில கே.ஜி.போர்ஸ் (kgf) அழுத்தம் கொடுத்தால்தான் முழு கரையும் நீங்கும். அவ்வாறு அழுத்தம் கொடுக்கும் போது வலது கை விரல்களின் மூட்டுகள், மணிக்கட்டு மூட்டு, முழங்கை மூட்டு, தோள்பட்டை மூட்டு என அனைத்து மூட்டுகளும் ஓராயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கிக் கொள்கின்றன. அந்த அழுத்தத்தால் ஏற்படும் வலியை உணரத்தான் முடியுமே ஒழிய விவரிக்க முடியாது. கையோடு வடிகட்டியையும் கழுவி வைத்தேன்.

மணி 6.30.

குளியலறை சென்று ஒரு வாளியில் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் பிடித்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சர்ப் பவுடரைப் போட்டேன். மீண்டும் தண்ணீரைத் திறந்து வலது கையால் வாளியிலிருந்து தண்ணீரை வேகமாக சுழற்றி சுழற்றி பவுடர் முழுவதுமாக கரைந்து நுரை பொங்கும் வரை கலக்கினேன். நேற்று பயன்படுத்திய துணிகளை நுரைபொங்கிய நீரில் அமுக்கினே். இதற்கு ஒரு 5 நிமிடம் ஆகிற்று. இந்த வேலையையும் குனிந்தேதான் செய்ய வேண்டும்.

மணி 6.35

குளிர் சாதனப்பெட்டியைத் திறந்து 5 பச்சை மிளகாய், 2 முருங்கைக் காய், 20 வெண்டைய்காய், 4 கேரட், ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை, கொஞ்சம் மல்லித்தழை  ஆகியவற்றை வெளியில் எடுத்து வைத்தேன். 4 வெங்காயம், 4 தக்காளி, 10 பல்லு பூண்டு ஆகியவற்றையும்  எடுத்து வைத்துக் கொண்டேன். அகலமான தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். பச்சை மிளகாய்களை இரண்டாக நறுக்கி பிறகு அதை பாதி அளவு குறுக்காக பிளந்து அகலமான தட்டின் ஒரு ஓரத்தில் வைத்தேன். பூண்டை லேசாகத்தட்டி அதன் தோலை உறித்து எடுத்து அவற்றை சிறு துண்டுகளாக்கினே். வெங்காயத்தை இரண்டாகப் பிளந்து மேல் தோலை நீக்கி அதன் பிறகு நீள்வாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தேன்.  ஒரு சிறு கத்தியைக் கொண்டு இஞ்சியின் தோலை நீக்கி பிறகு அதை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மத்தைக் கொண்டு மேலும் அதை நசுக்கி வைத்தேன். தக்காளியைக் கழுவி நெடுக்குவாட்டில் ஒவ்வொன்றையும் எட்டுத் துண்டுகளாக்கி வைத்தேன். முருங்கைக்காயை சிறு துண்டுகளாக்கினேன். வெண்டைக்காயை நன்றாகக் கழுவி காம்மையும் நுனியையும் நறுக்கி ஒதுக்கிவிட்டு மற்றதை இரண்டு துண்டுகளாக்கினேன்.

அறுவா மனையின் அடிப்பகுதி இரும்புத் தகட்டினால் ஆனது. தொடர் பயன்பாட்டின் காரணமாக அடிப்பகுதி இத்துப் போனதால் காய்கறிகளை நறுக்கும் போது சற்றே ஆட்டம் கண்டது. இந்த ஆட்டத்தோடுதான் காய்கறிகளை நறுக்கினேன். கொஞ்சம் அவசரப்பட்டாலும் காய்கறி உண்ட பிறகு நம் உடலில் ஊறும் ரத்தத்தை இப்பொழுதே காய்கறிகள் எடுத்துக் கொள்ள நெரிடும். காய்கறி நறுக்கும் போது எச்சரிக்கை மிக மிக அவசியம்.

கேரட்டை நன்றாகக் கழுவி ஒரு கத்தியால் அடிப்பகுதியையும் நுனிப்பகுதியையும் நறுக்கி ஒதுக்கிவிட்டு கேரட்டின் மேல் தோலை லேசாக சீவி எடுத்தேன். மேல் தோலை லேசாக நீக்கினால் கேரட் வீணாவதை குறைக்க முடியும். இதற்கு அனுபவம் தேவை. இல்லையேல் கத்தி கையைப் பதம் பார்த்தவிடும். அகலமான தட்டு ஒன்றை எடுத்து கேரட் துறுவியை அதன் நடுவில் வைத்து இடது கையால் அதன் கைப்பிடியை பிடித்து அழுத்திக்கொண்டு வலது கையின் கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் ஒத்துழைப்புடன் மேலிருந்து கீழ்நோக்கி அழுத்தித் தேய்த்து ஒவ்வொரு கேரட்டையும் லேசான நீள் துண்டுகளாக துருவிக் கொண்டேன். கேரட்டின் கடைசித் துண்டை துருவும் போது கவனம் சிதறினால் விரல் நுனி சதையையும் சேர்த்து கூட்டு செய்ய நேரிடும்.

மணி 6.45

அரை மணி நேரம் அரிசி ஊறிவிட்டது. ரைஸ் குக்கரை எடுத்து பிளக்கைச் சொறுகினேன். அரிசியை இரண்டு முறை நன்றாக அலசி பின் குக்கருக்குரிய பாத்திரத்தில் கொட்டி அரிசியின் அளவைப் போல மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை அதற்குரிய மூடியால் மூடி மெயின் சுவிட்சைப் போட்டு அதன் பிறகு ரைஸ் குக்கரின் சுவிட்சை கீழ்பக்கம் அழுத்தினேன். சிவப்பு லைட் எறியத் தொடங்கியது.

5 லிட்டர் குக்கரை நன்றாகக் கழுவி கேஸ் அடுப்பின் இடதுபுற பர்னரில்  வைத்து ஒரு 300 மில்லி அளவு தண்ணீரை ஊற்றினேன். ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீரால் அலசிக் கழுவி குக்கரில் போட்டேன். இரண்டு உருளைக்கிழங்குகளை நன்றாகக் கழுவி ஒவ்வொன்றையும் நீள்வாக்கில் நான்கு துண்டுகளாக்கி அவற்றையும் குக்கரில் போட்டு குக்கரை மூடினேன். பர்னரைப் பற்றவைத்தேன். சிறிது நேரத்தில் உஸ் என நீராவி வெளியேறிபோது குக்கர் குண்டைப் போட்டு மூடினேன்.

தொடரும்....

Sunday, 25 May 2014

உயிரோடு விளையாடும் ‘ரயில் நீர்’!

உடன் பணிபுரியும் நண்பரின் மகளுக்கு திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள்தான் ஆகி இருக்கும். அவரது மனைவி - மகள் மற்றும் மருமகன் ஆகிய நான்கு பேரும் அரியலூரிலிந்து திருச்சிக்கு பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்கின்றனர். அது கோடை காலம். எடுத்து வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அடுத்த இரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது அவரது மருமகன் இரண்டு காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி குடிநீர்க் குழாயைத் தேடுகிறார்.

அவர்கள் பயணம் செய்தது எஞ்சினை ஒட்டி இருந்த இரண்டாவது பெட்டி. எனவே நடைமேடையில் பின்னோக்கி சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி குடிநீர்க் குழையை அடைந்த போது அங்கே ஏற்கனவே நான்கு - ஐந்து பேர் முண்டியடித்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் கடைசியாக இவர் தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக் கொண்டு திரும்புவதற்குள் வண்டி மெதுவாக நகரத் தொடங்கிவிட்டது.

அருகிலுள்ள பெட்டியிலேயே இவர் ஏறி இருக்கலாம். பாசஞ்சர் இரயிலில் அப்படி ஏறினால், தான் பயணம் செய்த பெட்டிக்குச் செல்ல முடியாது. தண்ணீர் பிடிக்கப் போனவரைக் காணவில்லையே என உடன் வந்தவர்களும் தவித்துப் போவார்கள் என்பதால் இரண்டு கைகளிலும் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வருகிறார். அப்படி ஓடி வரும் போது நடைமேடையைத்தாண்டி இவர் பயணித்த பெட்டி நகர்ந்து விட்டது. நடைமேடையின் முடிவில் இருந்த சாய்வான பகுதியை கவனிக்காமல், ஓடி வந்த வேகத்தில் இடறி விழுந்ததில் இரயில் தண்டவாளங்களுக்கிடையில் சிக்கி அவ்விடத்திலேயே மாண்டு போகிறார்.

இச்சம்பத்தை நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர் சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும் ஆனால் அவர் சொன்ன நிகழ்ச்சி என் கண் முன்னால் நடந்தது போல பத்து ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தாகம் தீர்ப்பதற்காக ஐந்து மாத கர்ப்பினி மனைவியை நிரந்தரமாய் தவிக்கவிட்டுவிட்டு ஒரு உயிர் பலியாகிப் போனது.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதா என்று இன்றும் நாம் எண்ணுவதில்லையா? அப்படிகூட அவர் நினைத்திருக்கலாம். காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் சிறிய இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில்லையே! இன்று வேண்டுமானால் “ரயில் நீர்” பாட்டில்களில் கிடைக்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லையே.

நான் ஒவ்வொரு முறை தொடர் வண்டியில் பயணிக்கும் போதெல்லாம் இச்சம்பவம் என் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தேன். ஒரு இருபது நிமிட நேரம்தான் நடந்திருப்பேன். காலை நேரம் என்றாலும் கோடை காலம் என்பதால் இருபது நிமிட பயணத்திலேயே நா வறண்டு விட்டது. இந்தத் தொடர் வண்டி நிலைய நடைமேடையில் உள்ள குழாயில் எப்பொழுதுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். இந்த நல்ல தண்ணீர் கிடைப்பதுகூட இரயில்வே நிர்வாகத்தின் முயற்சியினால் அல்ல; அருகிலுள்ள நடுவண் அரசின் குடியிருப்பு நிர்வாகத்தின் தயவினால்தான். குடியிருப்பு நிர்வாகத்திற்கு நன்றி கூறி குழாயைத் திறந்து வயிறு முட்ட குடித்தேன். பாட்டில் எதுவும் கைவசம் இல்லாததால் வீட்டிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரமுடியவில்லை; தொடர் வண்டி நிலையத்திலும் தண்ணிர் பிடிக்க முடியவில்லை.

படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய ஸ்லீப்பர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு எஸ்-5 பெட்டியில் ஏறினேன். உட்கார இடம் கிடைத்த மகிழ்ச்சியை தொடர் வண்டிக்குள் இருந்த நாற்றம்  பறித்துக் கொண்டது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து  கேரள மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் மிக நீண்ட தூர தொடர் வண்டி அது. இந்த வண்டியில் எப்பொழுதுமே இந்த நாற்றம் இருக்கும். வண்டியை சுத்தம் செய்யாமல் நாட்கணக்கில் இயக்கினால் நாறாமலா இருக்கும்?

சுமார் ஒன்றரை மணி நேர பயணம். காலை நேர தண்ணீர் தாகத்தை அடக்கிக் கொண்டேன். திருமண மண்டபத்திற்கு சென்ற உடனே காலை உணவு. தண்ணீர் தாகத்தையும் தீர்க்க முடிந்தது. இரயிலிலேயே தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கலாமே என கேள்வி எழுவது இயல்புதான். ஒன்றரை மணி நேரத்திற்கு 15 ரூபாயை செலவழிக்க வேண்டுமா என்கிற எண்ணம்தான்.

திருமணம் முடிந்து 11 மணிக்குத் திரும்பும் போதும் இரயில் பயணம்தான். பகல் நேரப் பயணம், தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என மண்டப டைனிங் ஹாலில் தேடினேன். பாட்டில்கள் தீர்ந்துவிட்டன என்றனர். வெறுங்கையோடு திரும்பினேன். 11.30 மணிக்கு தொடர் வண்டி வந்தது. அதே ஸ்லீப்பர் முறையில் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி எஸ்-3  பெட்டியில் ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். நண்பகல் ஆனதால் வெப்பம் வாட்டியது. காலையில் சாப்பிட்ட பொங்கலும் கடும் வெப்பமும் இரண்டும் ஒன்று சேர எனது நாக்கு தண்ணீருக்காக ஏங்கியது. சிக்கனம் பார்த்தால் சீக்காகி விடுவொம் என்பதால் 15 ரூபாய் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டேன். வீடு போய்ச் சேரும் வரை இந்த ஒரு லிட்டர் தண்ணீரை வைத்தே சமாளிப்பது என முடிவெடுத்து அவ்வப்பொழுது தொண்டையை நனைத்துக் கொண்டு 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு ஐந்து மணி நேர இரயில் பயணத்திற்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீருக்கு 30 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கு. ஜார்கண்டிலிருந்தும், ஒடிசாவிலிருந்தும் கேரளா மற்றும் தமிழகத்திற்கு நாட்கணக்கில் பயணம் செய்யும் போது எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்?

பொரியையும் மிக்சரையும் கலந்து நான்கு வாய்ப்பிடி அளவு மென்று தின்று தண்ணீரைக் குடித்து வயிற்றை நிறப்பி காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளும் வட இந்தியர்களே இன்று மிக அதிகமாகத் தொடர் வண்டிகளில் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். 

சொந்த மண்ணில் வாழ வழி இல்லாமல் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லும் இந்த ஏழை எளிய மக்களால் தண்ணீருக்காக மட்டும் நூற்றுக்கணக்கில் செலவழிக்க முடியுமா? ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது இருக்கிற பாட்டில்களை அள்ளிக் கொண்டு குடிநீர்க் குழையை தேடிப்பிடித்து பாட்டில்களை நிரப்பிக் கொண்டு ஓடோடி வந்து மூச்சிறைக்க இவர்கள் வண்டியில் ஏறுவதைப் பார்க்கும் போது நண்பரின் மருமகன் மரணம் என் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஊரான்

Thursday, 22 May 2014

இந்தியாவே திருமங்கலமாக மாறி வருகிறதோ!



இது வேலூர் தொகுதியில் நடந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் மொத்தம் நான்கு வாக்குகள். பா.ஜ.க. சார்பில் கொடுத்தது தலா ரூ.300 வீதம் மொத்தம் ரூ1200. அ.தி.மு.க சார்பில் கொடுத்தது தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ800. இருப்பதோ நாக்கு வாக்குகள். யாருக்கு எத்தனை வாக்கு போடுவது என்பதில் குழப்பம்தான். இருந்தாலும் ‘நடு நிலை’ எடுத்து தாமரைக்கு இரண்டு வாக்கும், இரட்டை இலைக்கு இரண்டு வாக்கும் என வாக்களித்து தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார்கள். இவர் ஒன்றும் அன்றாடம் காய்ச்சி அல்ல. பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40000 ஊதியம் பெறும் ஊழியர். 

இந்த பணப்பட்டுவாடாவையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் தமிழகமே திருமங்கலமாக மாறுமா? என மார்ச் 29 ல் நான் எழுதியது நடந்தேறிவிட்டது என்று. 

ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை ! யை வினவில் படித்த போது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திருமங்கலமாக மாறி வருகிறது என்பது புரிந்தது.

Tuesday, 20 May 2014

மோடி லேகியம் வேலை செய்ய வேண்டுமென்றால் 'இறைவன்' அருள் புரிய வேண்டுமாம்!



வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் செல்லவும், ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர் அமைக்க இருக்கும் அமைச்சரவை சகாக்களும் அதற்கு ஒத்துழைப்புத் தந்தால்தான் அது சாத்தியமாகுமாம்.
  
மக்களவை உறுப்பினர்களில் இளைஞர்கள் குறைவாம். படித்தவர்கள் குறைவாம். குற்றப் பின்னணி உள்ளவர்கள் அதிகமாம். கோடீஸ்வரர்கள் அதிகமாம்.

அதனால்,

சாமானியனின், அடித்தட்டு வர்க்கத்தினரின், அன்றாடம் கஞ்சிக்கு வழியில்லாமல் தெருவோரம் தஞ்சமடைந்திருக்கும் பராரியான ஏழைகளின் பிரச்னைகள் எப்படி முன்னுரிமை பெறும்? தாகத்திற்குக் "கோக்' குடிப்பவர்கள், பசிக்குத் கேப்பைக் கூழ் குடிப்பவர்களின் பிரச்னைகள் பற்றி கவலைப்படமாட்டார்களாம்.

கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் அதிக அளவில் இருக்கும் போது எந்த அளவுக்கு சாமானியர்களுக்குச் சாதகமாகவும், ஆதரவாகவும் அந்த ஆட்சி செயல்படும் என்கிற நியாயமான ஐயப்பாடும், பயமும் ஏற்படுகிறதாம்.

கோடீஸ்வரர்களுக்கும், கிரிமினல் பின்னணி உடையவர்களுக்கும்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொன்னால், அதற்குக் காரணம் ஏமாளி வாக்காளர்கள்தானாம். இப்படிப்பட்வர்களை வேட்பாளர்களாக நிறுத்திய கட்சிகள் கிடையாதாம்? இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, நல்லாட்சி அமையவில்லை என்று ஓலமிடுவதில் அர்த்தம் இல்லையாம்.

அதிக அளவில் இளைஞர்களும், விழிப்புணர்வுடன் வாக்காளர்களும் நல்லாட்சி அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், நரேந்திர மோடி என்கிற தனிமனிதன்மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களாம். இத்தனை கோடீஸ்வரர்களையும், கிரிமினல் பின்னணியாளர்களையும் மீறி மோடி செயல்பட்டாக வேண்டுமாம். அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டுமாம்.

மக்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனைகளுக்கும் மோடி லேகியம் ஒன்றுதான் சர்வரோக நிவாரணி என மக்களிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு இப்போது மக்கள் மீதே பழியைப் போடுவதோடு மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் மோடி லேகியம் வேலை செய்யாது என  பத்தியக் கட்டுப்பாடு வேறு! இதற்குப் பேர்தான் ஊடக நரித்தனம் என்பதோ! தினமணியின் இன்றைய (20.05.2014) தலையங்கம் இதைத்தான் உணர்த்துகிறது. (யார் மீது தவறு?)

Sunday, 11 May 2014

அன்னையர் தினத்தில் சொல்வதற்கு என்ன இருக்கு?

”இன்றையச் சூழலில் கணவனும் காலமாகி, பெற்ற மகனும் கைவிடும் போது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் தான் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதால் ஒரு கட்டத்தில் தனது மூச்சைத் தானே நிறுத்திக் கொள்கிறாள் தாய்.”

அன்னையர் தினத்தில் சொல்வதற்கு இதைத்தவிர வேறென்ன இருக்கு?

தொடர்புடைய பதிவுகள்: