Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts

Saturday, 17 August 2024

தீண்டாமைக்கு தூபம் போடும் "காளியாத்தா" மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயுமா?

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், ஜெம்மன் குப்பம் கிராமத்தில் உள்ள  வன்னியர்கள், யாதவர்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து காளியாத்தா கோவிலை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலில் உள்ள ஆத்தாளை, கிராமத்தில் சரிபாதியாக உள்ள பட்டியல் சாதி மக்களும் இதுவரை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், மெல்ல மெல்ல சாதி இந்துக்களால் பட்டியல்  சாதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததோடு, இந்த ஆண்டு ஆடி மாத திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என ஒரு பூசாரியின் கனவிலே வந்து ஆத்தா சொன்னாளாம். அதையே சாதி இந்துக்களும் அப்படியே ஏற்றுக் கொண்டார்களாம். அதனால், இந்த ஆண்டு ஆடி திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். கோவிலை இடிக்கச் சொல்லி எந்த ஆத்தா யாருடைய கனவில் வந்து சொன்னாள் என்று தெரியவில்லை.

இதற்கு எதிராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் காவல்துறையில் புகார் கொடுக்க, அந்தப் பூசாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்கள் கோவிலையே இடித்துத் தள்ளி இருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள நாலு சாதிக்காரர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இடையேயும் சாதியப் படிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. ஆனாலும் அவர்களுக்கிடையே தீண்டாமை கிடையாது. 

பட்டியல் சாதி மக்களும் இந்துக்கள்தான். அவர்களும் இந்து கடவுள்களைத்தான் வணங்குகிறார்கள் என்றாலும் கூட அவர்களை சாதி இந்துக்கள் உடன் சேர்த்துக் கொள்வதில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான், தீண்டாமை. 

தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டம் எழுதி 78 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  அன்று, தொட்டால் தீட்டு என்றார்கள். இன்றோ உடன் வந்தாலே தீட்டு என்கிறார்கள். இப்படி தீண்டாமை என்பது நவீன வடிவில் அரங்கேறி வருகிறது.

கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் தனிமனித விவகாரமாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு வீட்டுக்குள் முடக்கப்பட வேண்டும். பொது வெளியில் வரக்கூடாது.

கோவில்கள் தீண்டாமையின் மையமாக விளங்குவதாலும், புறம்போக்கு நிலங்களையும் காடுகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாலும் கோவில்கள் அனைத்தையும் இடித்துத் தரை மட்டமாக்க வேண்டும். எங்கெல்லாம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வெளியில் கோவில்கள் கட்டப்படுவதால் குறிப்பாக காடுகளையும் ஆறுகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. 

பொது இடங்களை தனிநபர்கள் ஆக்கிரப்பு செய்தால் சட்டவிரோதம்; அதையே கடவுளின் பெயரால் செய்தால் அங்கீகாரமா? சட்டத்தின் முன்னால் கடவுளும் ஒரு நபர்தானே? அந்தக் கடவுளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அஞ்சுகிறது அரசும் நீதிமன்றங்களும்?

ஊரான்

Sunday, 19 April 2020

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!


துபாயிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்த இராணிப்பேட்டை மாவட்டம், கீழ்விசாரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா இருப்பது (tested positive) வாலாசாப்பேட்டை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கண்டறிப்பட்டதாக மார்ச் 26 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானால், 8 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைவருக்கும் கரோனா இருக்கிறதா என்பது சோதித்தறியப்படும் என்றும் சொல்கிறார்கள். அப்படியானால் கீழ்விசாரத்தைச் சுற்றி 8 கிலோ மீட்டருக்குள் ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாசாப்பேட்டை, மேல்விசாரம் ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் ஏராளமான கிராமங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரிடமும் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதா? அந்த இளைஞர் மூலம் இந்த வட்டாரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா என்பதைக் கண்டறிய வேண்டாமா?

கரோனாவைக் கண்டறிய தற்போது தமிழகத்தில் உள்ள மொத்த ஆய்வுக் கூடங்கள் - 34. அதில் அரசு - 25, தனியார் - 9. இவை அதிவிரைவு ஆய்வு (rapid test) முறைக் கூடங்கள் அல்ல. 6 மணி நேரம் முதல் 2 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும் ஆய்வுமுறைகள். 18.04.2020 அன்றுதான் அதிவிரைவு அதாவது, அரை மணி நேரத்தில் கரோனா இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான கருவியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இதுவரை தமிழக அரசு அறிக்கை வாசித்து வந்தது. உதாரணமாக, 13.04.2020 அன்று மட்டும் 98 பேருக்குக் கரோனா கண்டறியப்பட்டதாகக் கூறுகிறது அரசு. அதில் 91 பேர் அதே மூலத்தைச் (same source) சேர்ந்தவர்கள் என்றும் பீலா விட்டார்கள். நம்முடைய ஆய்வு முறைகளுக்கும் வெளியிடப்படும் முடிவுகளுக்கும் இடைவெளி அதிகம் என்பது மட்டும் புரிகிறது.

தமிழகக் களநிலவரம்

தமிழகத்தில் 18.04.2020 வரை கரோனா நோய்த்தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டவர்கள் 1372 பேர். இதுவரை சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 365 பேர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்கள் 15 பேர்.

கரோனாவுக்கு இதுவரை மருந்து எதுவுமே கண்டறியப்படவில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே மற்றொரு பக்கம் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்கிறது அரசு. குணமடைந்தவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது? மருந்துகள் ஏதேனும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா? அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் அவை என்னென்ன? மருந்து இல்லாமல் தனிமைப் படுத்தல் மற்றும் உணவு முறையால்தான் குணமடைந்தார்களா? அப்படியானால் அவர்களுடைய உணவு முறைதான் (regimen) என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

18.04.2020 அன்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அப்படியானால் கரோனாவிற்கு நம்மிடம் அதிநவீன சிகிச்சை முறை இருக்கிறதா? அப்படி இருந்தால் இந்த அனுபவத்தை உலக நாடுகளுக்குத் தெரிவித்தால் அவர்களும் பயனடைவார்களே? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

கேரளாவில் முதல் கரோனா

சீனாவின் வூகான் மாநிலத்திலிருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா இருப்பது ஜனவரி 20 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதமே கரோனா இந்தியாவிற்குள் வந்துவிட்ட பிறகு பல வெளிநாட்டினர் கலந்து கொண்ட கோவை ஈஷா மையத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி மகாசிவராத்திரி விழா நடைபெற எப்படி அனுமதித்தார்கள்? குஜராத் அகமதாபாத்தில் பிப்ரவரி 24, 25 தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட விழாவை எப்படி நடத்தினார்கள்? மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு கரோனா இருக்கிறதா எனச் சோதனை செய்தார்களா? அவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் மூலமாகக்கூட ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே இந்தியாவில் கரோனா பெருமளவில் பரவி இருக்கலாமல்லவா? மேலும் ஊரடங்கு அறிவித்த பிறகு, அவர்கள் கூற்றுப்படி மார்ச் 11 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டின் மூலம்தான் இந்தியாவில் கரோனா பரவியது என ஒரு பக்கம் குற்றம் சாட்டிக் கொண்டே, ஏப்ரல் 2 ஆம் தேதி இராமநவமி அன்று அயோத்தியில் இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை ஏன் நடத்தினார்கள்? இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் மூலம் கரோனா பரவி இருக்காதா?

ஜனவரி 20 ஆம் தேதியே இந்தியாவிற்குள் கரோனா நுழைந்து விட்டது. தப்லீக் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கர்நாடகாவில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். லண்டலிருந்து அரியானாவுக்கு வந்த 23 வயதுப் பெண் ஒருவருக்கு கரோனா இருப்பது மார்ச் 15 ஆம் தேதி உறுதி செய்யப்படுகிறது. அன்றைய தேதியில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 170 பேர், இறந்தவர்கள் 3 பேர். அப்படியானால் தப்லீக் மாநாடு முடிந்து அதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு முன்பாகவே கரோனா இந்தியாவில் பரவிவிட்டது என்பதுதானே உண்மை.

தமிழகத்தில் கரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் காரணமா?

டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் மூலமாகத்தான் தமிழகத்தில் கரோனா பரவியதாக ஒவ்வொரு நாளும் பீலா விடுகிறார்கள். மார்ச் 15-க்கு முன்பாக வெளிநாடுகளிலிருந்து யாருமே தமிழ் நாட்டுக்கு வரவில்லையா? ஜனவரி 19 லேயே அமெரிக்காவில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு உலகிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. நமது கேள்வி இதுதான். ஜனவரி 19 க்குப் பிறகு, அதாவது அமெரிக்காவில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து மார்ச் 15 வரை அந்நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு யாருமே வரவில்லையா? பிற நாடுகளிலிருந்தும் ஒருவர்கூட வரவில்லையா?

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஏராளமானோர் வந்துள்ளனர் என்பதுதான் உண்மை. அப்படி வந்தவர்களை சோதனைக்குப் பிறகுதான் தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தார்களா? வந்தவர்கள் கரோனாவையும் கொண்டு வந்திருக்க மாட்டார்களா? இவற்றை எல்லாம் மூடி மறைத்துவிட்டு மார்ச் 15 க்குப் பிறகு டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால்தான் தமிழகத்தில் கரோனா பரவி வருகிறது என்று பேசுவதும், கரோனா அதிகரித்து வருவதால்தான் ஊரடங்கை நீட்டிக்க வேண்டி உள்ளது என்கிற கருத்தை உருவாக்குவதும் யாரைத் திருப்திப் படுத்த? உண்மை என்னவென்றால் மார்ச் 7 ஆம் தேதியே தமிழகத்தில் முதல் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லிக்குச் சென்று வந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை உங்களால் கண்டறிய முடியவில்லையா? டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக, தாமாக முன்வந்த 1103 பேரில் 110 பேருக்கு மட்டுமே கரோனா இருப்பதாக ஏப்ரல் 1 அன்று அறிவித்த அரசு, அதே மூலத்தைச் (same source) சேர்ந்த 91 பேருக்கு கரோனா இருப்பதாக ஏப்ரல் 13 அன்று அறிவிக்கிறது. அப்படியானால், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் தமிழகம் தோற்று விட்டதா? இதில் எங்கோ இடிக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் தமிழக சுகாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். “வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 95 சதவீதம் பேர் எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள்” என்கிறார் அமைச்சர். (செய்தி ஆதாரம் - இந்து தமிழ் திசை, வேலூர், 19.04.2020). அதாவது, தொற்று இருப்பதாகக் கூறப்படும் 1372 பேரில் 69 பேருக்கு மட்டுமே கரோனா இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனாத் தொற்று இருப்பதாகவும், அவர்களால்தான் தமிழகத்தில் கரோனா பரவி வருவதாகவும் இதுவரை கூறப்பட்டவை அனைத்தும் பீலாதான் என்பது உறுதியாகி விட்டது.

தொடரும் ஊரடங்கு

அன்றாட வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் லட்சக் கணக்கானோர் ஒரு வேலை உணவுக்கே வழி இன்றி பரிதவிக்கின்றனர். ஏற்கனவோ உதவி செய்வோர் கரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை மட்டும் சோதித்தறிவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் யாரும் உதவியே செய்யக் கூடாது என்று சொல்வதன் மூலம் ஏழை எளிய மக்களைச் சாவச் சொல்கிறதா அரசு? உதவி செய்ய விரும்புவோர் அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாடுவோர் பற்றிய விவரங்களை அரசு கணக்கெடுத்துள்ளதா? இரண்டாம் கட்ட ஊரடங்கின் போதாவது பசியால் வாடுவோரின் வாட்டத்தைப் போக்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா அரசு? அரசே உதவி செய்தால் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டிய அவசியம் இருக்காதே? உதவி செய்வதற்குக்கூட நீதிமன்றத்தை நாடவேண்டிய அவல நிலையில் தமிழகம் உள்ளது.

“விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்களை வெளியே வரவழைப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? காலை நேரத்தில் பல நகரங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் ரேசன் கடைகளில் ஆயிரம் ரூபாய்க்காக கூட்டப்படும் கூட்டம் தனி. பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் இதற்கு மிக முக்கியக் காரணம். எனவே அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச் சென்று ஏன் வழங்கக் கூடாது? அதற்கு ஏன் அரசு முயற்சிக்கவில்லை? இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது, வரும் மே 3 வரையிலாவது இந்த முறையைப் பின்பற்றினால் புதிதாக நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். அதன் பிறகு ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியமும் இருக்காது. 

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக, "காய்கறிகள் வீடு தேடி வரும், மளிகைப் பொருட்களை ஆப்ஸ் மூலமாக வாங்கிக் கொள்ளுங்கள்" என விளம்பரம் செய்கின்றனர். ஆப்ஸை பதிவிறக்கம் செய்து முயற்சி செய்தால் நம்மை வெளியே துரத்துகிறது. கடைகளும் திறந்திருக்காது. ஆப்ஸூம் வேலைக்கு அகாது என்றால் மளிகைக்கு என்ன செய்வது? அவற்றையும் - அதிலும் குறிப்பாக - அத்தியாவசியமானவற்றை மட்டும், காய்கறிகளைப் போல குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றால் மக்கள் வெளியில் வருவதை முற்றிலுமாகத் தவிர்க்கலாமே? 

எனவே, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்துவதைவிட்டுவிட்டு கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்குவதே சாலச்சிறந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக்குப் பின்னால் CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டங்கள் நம் கண்முன்னே வந்து போவதைத் தவிர்க்கமுடியவில்லை. 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்



Friday, 2 December 2011

மழை: அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும்!


இரண்டாவது முறையாக தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை தற்போது ஓய்ந்துள்ளது. வெளுத்துக் கட்டும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பினவோ இல்லையோ தொலைக்காட்சிக்காரர்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. எழவு வீட்டிலும் காசு பார்ப்பவர்கள் இந்த மழையை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? 

முன்பு நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்ட போதும் சரி; தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்கள் உடமைகளை இழந்த மக்களை பேட்டி காணும் போதும் சரி இத்தகைய இழப்பிற்கு யார் பொறுப்பு என்பதை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு மக்களின் அவலங்களைக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இயற்கையின் சீற்றமா இல்லை அரசின் குற்றமா?

போதிய நீராதாரம் இல்லாத காரணத்தாலும், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமையாலும்  இனி கிராமங்களில் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்பதனால் கிராம மக்கள் அணி அணியாக நகரங்களுக்குப் படை எடுக்கிறார்கள். கட்டின துணியோடு நகரங்களைச் சென்றடையும் இம்மக்கள் எங்கே தங்குவார்கள்? இவர்களுக்கு முன்பே நகரங்களுக்கு வந்து கிடைக்கின்ற வேலைகளைச் செய்து அவற்றில் கிடைத்த கொஞ்சம் காசில் வயிற்றிற்குப் போக மீதியை மிச்சப்படுத்தி ஏரி ஓரங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் குடிசைகளை அமைத்துக் கொண்டு வசிக்கும் தங்கள் தூரத்து உறவினர்கள் அல்லது நண்பர்களின் வசிப்பிடங்களில் புதிதாய் வந்தவர்கள் சில நாட்கள் தங்குகிறார்கள். நான்கு பேர் உட்காரவே முடியாத இத்தகைய ‘வசிப்பிடங்களில்’ எத்தனை நாட்களுக்குத்தான் தங்க முடியும்? பிறகு இவர்களும் அதே பாணியில் ‘வசிப்பிடங்களை’ அமைத்துக் கொள்கின்றனர்.

இப்படிக் குடிசைகளை அமைத்துக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் இதுவும் சாத்தியம். அதன் பிறகு மின் இணைப்பும், குடும்ப அட்டைகளும், வாக்காளர் அட்டைகளும் கிடைக்க வேண்டுமா? அதற்காகத்தானே அரிப்பெடுத்த கைகளோடு அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரூபாய்த் தாள்கள் அவர்களின் கைகளை உரசினால் போதும் அவர்களின் அரிப்பும் நின்று போகும். மக்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைத்துவிடும். வாழ்வதற்குத் தேவையான சட்டப்படியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகக் கருதிதான் குடிசைவாசிகள் அவ்விடத்தில் காலத்தைத் தள்ளுகிறார்கள்.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆசியோடு ஆறுகளிலும் ஏரிகளிலும் வீடுகள் புகுந்து விடுகின்றன. பிறகு மழைக் காலங்களில் இத்தகைய வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இது மழையைப் பொய்வித்த ‘வருண பகவானின்’ குற்றமா? இல்லை ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து ‘வீடுகுள்’ கட்டிக்கொண்டது ஏழைகளின் குற்றமா? அல்லது பிழைப்பு தேடி நகரங்களில் குடியேறுபவர்களுக்கு முறையான வசிப்பிடங்களை ஏற்பாடு செய்யாமல் ஆறுகளிலும் ஏரிகளிலும் குடிசைகள் அமைத்துக் கொள்வதற்கு தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டு அவற்றிற்கு துணைபோகும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குற்றமா?

ஒரு நாள் பிழைப்பா இல்லை ஓர் ஆண்டு வாழ்வா?

“வேலைக்குச் செல்ல முடியவில்லை,  பால்காரன், பேப்பர்காரன் வரவில்லை,  போக்குவரத்து நெரிசல், ரொம்ப கஷ்டமா இருக்கு”  என மண்ணையே மிதிக்காத மகிழுந்துக்காரர்களின் (car) பேட்டியும், நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அங்கலாய்ப்பும்-சலிப்பும் நிறைந்த பேட்டிகள் மற்றொரு பக்கம். ஒரு நாள் செய்தித்தாள் படிக்கவில்லை என்றாலோ அல்லது டீ, காபி குடிக்கவில்லை என்றாலோ குடியா முழுகிப் போய்விடும்?

இவை எல்லாம் தொலைக் காட்சிக்காரனுக்கு முக்கியச் செயத்திகளாகி விடுகின்றன. “சைதாப்பேட்டையிலிருந்து எமது செய்தியாளர் என்ன கூறுகிறார் பார்ப்போம்” என இதில் ‘லைவ்’ வேற!

ஒரு நாள் மழைக்கு இன்றைய பொழப்பு போச்சே என்பது இவர்களின் கவலை. ஆனால் இந்த ஒரு நாள் மழை இல்லை என்றால் எம் உழவனுக்கு ஓர் ஆண்டல்லாவா பொழப்பு போகிறது!

“ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் கன மழையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதி; குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்கத் தடை,  பயணிகள் ஏமாற்றம்” என செய்தி ஒருபக்கம். “ரொம்ப ஏமாற்றமாயிடுச்சு. மழை விடாம பெய்யுது. அதனால “டூர் வந்தும் எதையும் எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு” என நடுத்தர மக்களின் பேட்டி மற்றொரு பக்கம்.

மழை என்னமோ ஒன்றுதான். நகர்ப்புறங்களில் வீடுகளை இழந்து பேட்டியளிக்கும் மக்களின் அவலம் ஒருபக்கம் ‘எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு’ என்கிற நடுத்தர வர்க்கத்தின் ‘கவலை’ மறுபக்கம் என இரு வேறு விளைவுகள்.

தமிழகத்தில் மழை அதிகமா?

”தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இதுவரை பெய்துள்ள மழையின் அளவு 450 மில்லிமீட்டர். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 430 மில்லிமீட்டர். மேலும் டிசம்பர் முழுக்க மழை பெய்ய வாய்ப்புகளுண்டு. இனி பெய்கின்ற மழை உபரிதான்” இப்படி பேட்டியளிக்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி இரமணன்.

வாலாஜா, ஆர்க்காடு, இராணிப்பேட்டை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரூர், செங்கம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, பகுதிகளை உள்ளடக்கிய வேலூர்-கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம்-திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழகத்தில்தான் உள்ளனவா என இரமணனின் பேட்டியை கேட்ட பிறகு எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டுவிட்டது. 27.11.2011 அன்று பருகூரில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மழையின் ‘பாதிப்பை’ பார்த்த பிறகுதான் இந்த இடுகையை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் மேற் கூறிய பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று வந்துள்ளேன்; சென்று வந்தவர்களைக் கேட்டுள்ளேன்; தொலைபேசி மூலம் விசாரித்து அறிந்துள்ளேன். இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் கால் பங்குகூட நிறையவில்லை; சில ஏரிகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை; சாலையோரக் குழிகளில் ‘குண்டி கழுவக்’ கூட தண்ணீரைக் காணோம். விதிவிலக்காக இப்பகுதிகளில் ஒரு சில ஏரிகள் நிரம்பிருக்கலாம்;  ஒரு சில சிற்றோடைகளில் சிறிதளவு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் இப்பகுதிகளில் இனியும் வலுவான மழை வரவில்லை என்றால் இந்த ஆண்டு குடி நீருக்கே பஞ்சம் வரும் என்பதே நிதர்சனம்.

“தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தும் வேலூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்”  என்று 28.11.2011  தேதியில் தினமணி நாளேடும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுதான் நிலைமை என்பதை மறுநாள் அதே தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆர்க்காட்டுக்காரனின் கனவு நனவாகுமா?

பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் தண்ணீரைப் பார்ப்பது அரிது.-ஆந்திராவிலிருந்து பொன்னை-திருவலம் வழியாக ஆர்க்காடு அருகே பாலாற்றில் இணையும் ஓர் ஆறுதான் பொன்னை ஆறு. தண்ணீர் ஓடினால்தானே ‘கலக்கும்’ ஆறு என சொல்ல முடியும். பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் வெள்ளப் பெருக்கை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரு முறைதான் இப்பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். கடைசியாகப் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. கல்லூரிச் சாலையில் குளு குளு அறைக்குள் அமர்ந்து கொண்டு ‘இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரியை விட மழை அதிகம்,  இனி பெய்வதெல்லாம் உபரிதான்’ என பேட்டியளிக்கும் இரமணனுக்கு, அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும் ஒன்றுதான் என்பது எப்படித் தெரியும்?

Friday, 29 April 2011

கையிலோ நவீன ஆயுதங்கள்; அஞ்சுவதோ கொசுக்களுக்கு..!


வேலூர்
கையிலோ நவீன ஆயுதங்கள்; அஞ்சுவதோ கொசுக்களுக்கு..!
First Published : 29 Apr 2011 10:39:31 AM IST


”வேலூர், ஏப். 28: நவீன ரக ஆயுதங்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக்களுக்கு பயந்து கொசு வலைக்குள் பதுங்குகின்றனர்.
வேலூர் பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), சிறப்பு அதிரடிப்படை, ஆயுதப்படை, உள்ளூர் போலீஸார் ஆகியோரைக் கொண்ட 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எப் வீரர்களிடம் ராக்கெட் லாஞ்சர்கள், ஒரே நேரத்தில் 100 ரவுண்டுகள், 200 ரவுண்டுகள் சுடக் கூடிய நவீனரக ஆயுதங்கள் உள்ளன.
கொசு தொல்லை அதிகரிப்பு:
இந்நிலையில், தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்னர் இங்கு கொசுமருந்து அடிக்கபட்டுள்ளது. இருந்தபோதும், கொசுத் தொல்லை தொடர்கிறது.
தினந்தோறும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கொசுமருந்து அடித்தால்தான் கொசு பிரச்சனை தீரும் என்கின்றனர் காவலர்கள். இதையடுத்து, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க கொசுவலைக்குள் பதுங்கிய நிலையில் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.”
-------------------------------------------------------------------------------
தினமணியில் வந்த இந்தச் செய்தியைப் படித்து பலரும் சிரித்திருப்பார்கள். "ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எப் வீரர்கள் இரவு நேரங்களில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க கொசுவலைக்குள் பதுங்கிய நிலையில்" என்று படித்தால் யார்தான் சிரிக்க மாட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான் கொசு மருந்து அடித்தார்களாம். ஆனாலும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையாம். அதனால் தினந்தோறும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் கொசுமருந்து அடித்தால்தான் கொசு பிரச்சனை தீரும் என்கின்றனர். 
30 நாள் தொல்லைக்கே இப்படி அஞ்சி நடுங்கினால் 365 நாட்களுக்கும் இந்தத் தொல்லைகளை அனுபவிக்கும் நாங்கள் எங்கே சென்று பதுங்குவது? இந்தக் கேள்வியை இதுவரை தினமணிகூட கேட்டதில்லையே.

கொசுத் தொல்லையைப் பற்றிய விரிவான ஒரு அலசல் இதோ:
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html