Showing posts with label RSS. Show all posts
Showing posts with label RSS. Show all posts

Sunday, 12 May 2024

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவே கிடையாதா?

இராஜஸ்தானில் குடிநீர் பானையைத் தொட்ட ஒரு தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம், தமிழ்நாட்டில் வேங்கை வயல் சம்பவம்  என சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் குறித்து whatsapp நண்பர்கள் குழு ஒன்றில் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
அந்த விவாதத்தில் நான் பதிவு செய்த கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

***
நண்பா,

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாதிய முரண்களும் மோதல்களும் குறையப் போவதில்லை. இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கம்யூனிஸ்டுகள் வந்தால் ஓரளவுக்கு குறையக் கூடும். அவ்வளவுதானே ஒழிய முற்றிலுமாக சாதிய மோதல்கள் நின்று விடாது.


காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் பிணக்குகளும் இந்து மதத்தோடு, சொல்லப்போனால் மனுதர்ம சாஸ்திரத்தோடு பிணைக்கப்பட்டவை. மனுதர்ம சாஸ்திரத்தை ஆகப்பெரும்பான்மையோர் படிக்கவில்லை என்றாலும் அதைத்தான் ஒவ்வொரு சாதியினரும் கடைபிடித்து வருகின்றனர். இது மன்னராட்சி காலத்தில் மிக வலுவாக ஊன்றபட்ட ஒன்று.

தமிழ்நாட்டின் வள்ளலார் முதல் கேரளாவின் தர்மதீர்த்த அடிகளார் வரை எத்தனையோ மத சீர்திருத்த வாதிகள் இந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. காரணம் இந்து மதத்தில் குறிப்பாக மத அதிகாரத்தில் உள்ள பார்ப்பனியம்தான். இங்கு நான் தனிப்பட்ட பார்ப்பனர்களைச் சொல்லவில்லை.

பார்ப்பனியம் என்பது ஒரு சித்தாந்தம். மக்களை, ஏற்றத்தாழ்வுடைய வருணங்களாகவும் படிநிலைச் சாதிகளாகவும் பகுத்து அவர்களுக்கான கடமைகளையும் வகுத்து அதை நிலை நிறுத்தி வைத்திருப்பபது மனுதர்ம சாஸ்திரம்.

மனுதர்ம சாஸ்திர நூலைப் படித்தால் இது நன்றாக விளங்கும். "சனாதன தர்மம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! என்கிற தொடரில் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன்.

டாக்டர் அம்பேத்கரைப் போல மனுதர்ம சாஸ்திரத்தை மிக விரிவாக ஆய்வு செய்தவர் எவரும் இல்லை. இவருக்கு முன்பாகவே மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவும் அதைப் பற்றி அலசி இருக்கிறார்.  எனவே, மத அதிகாரத்திலிருந்து பார்ப்பனர்களையும், இந்து மதத்திலிருந்து பார்ப்பனிய சித்தாந்தத்தையும் அகற்றாமல், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் பார்ப்பனிய பண்பாட்டு நடைமுறைகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு நெறிமுறைகளை வகுத்து நடைமுறைப் படுத்தாமல் சாதியை முரண்களும் மோதல்களும் நிற்கப் போவதில்லை. 

இந்து மதத்திலேயே பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் பங்காரு அடிகளார், பிரேமானந்தா, அமிர்தானந்தமயி, நித்தியானந்தா உள்ளிட்ட நவீன கால ஆன்மீகவாதிகள். தனிப்பட்ட முறையில் இவர்களது நடைமுறையில் சில முறைகேடுகள் இருந்த போதிலும் உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனிய மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்தியவர்கள். 

பார்ப்பனியத்துக்கு எதிராகப் போராடிய ஆன்மீகவாதிகளில் வள்ளலாரே முன்னிலை வைக்கிறார். ஐயா வைகுந்தர் வழிபாடும் அத்தகையதே.  இன்றைய குன்றக்குடி அடிகளாரும், சுகிசிவம் போன்ற ஆன்மீக வாதிகளும் இதில் அடங்குவர்.

ஆன்மீகத்தில் நம்பிக்கையும் நாட்டமும் உள்ளவர்கள் மேற்கண்ட ஆன்மீகவாதிகளை பின்பற்றலாமே ஒழிய பார்ப்பன குருமார்களை அல்ல.

இந்து மதத்தில், மனுதர்ம சாஸ்திர நடைமுறைகளில் மாற்றமே நடைபெறவில்லையா என்று கேட்டால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்கு வித்திடுகிறது. அவரவர் அவரவர் சாதியிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதவாதிகளும் மனுதர்ம சாஸ்திரமும் வலியுறுத்தினாலும், சாதி மறுப்பு காதல்  திருமணங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நவீன கால உற்பத்தி முறையும் அது ஏற்படுத்தி உள்ள உற்பத்தி உறவுகளும்தான் என்றால் அது மிகையல்ல. சாதி மறுப்பு திருமணங்களுக்கு தாமாக முன்வரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே புதிய உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளை நோக்கி இந்தச் சமூகம் நகரும் போது, இது போன்ற மதமாச்சரியங்களும் அது தொடர்பான ஏற்றத்தாழ்வுகளும், மதத்தின் மீதான நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல மறைந்து போகும்.

ஊரான்

Sunday, 10 September 2023

சனாதன தருமத்தின் மூலம் எது?

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பதைப் போல, சனாதன தருமத்தை எதிர்ப்பதல்ல; மாறாக அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது, இன்று, சனாதன தருமம் குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டி உள்ளது. சனாதன தருமம் என்றால் என்ன என்பது பற்றி ஆளாளுக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். 

உண்மையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து மகஇக, வேலூர் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தரவுகளைத் தேடிய போது அதற்கான விடை கிடைத்தது. 

இன்று, இந்து மதம் என்று சொல்லப்படுகிற வைதீக-ஆரிய-பிராமண மதத்தின் மற்றொரு பெயர்தான் சனாதனம். அதனால்தான் இந்து மதம், சனாதன மதம் என்றும் அழைக்கப்படுகிறது. தருமம் என்றால் ஈகை அல்ல; மாறாக என்றென்றைக்கும் ஒரு இந்து தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்/கடமைகள் என்று பொருள். 

இந்து மதத்தைப் பின்பற்றுகிற ஒரு தனிமனிதன், அவனது குடும்பம், அவன் சார்ந்த சமூகம், வாழுகின்ற நாடு உள்ளிட்டவை அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களையும், விதிமுறைகளையும் பற்றியதுதான் சனாதன தருமம். இந்தச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கீழ்கண்ட இந்து மத நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர மற்ற இந்து மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை சனாதன தருமத்தில் சேராது.

1.ரிக்-யசூர்-சாம-அதர்வன‌ எனும் நான்கு வேதங்கள். (சுருதிகள்).

2.மனுதரும சாஸ்திரம் உள்ளிட்ட 18 தரும சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), மொத்தம் 128 ஸ்மிருதிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

3.பாகவத புராணம் உள்ளிட்ட 18 புராணங்கள். இவை தவிர, உப புராணங்கள் சில இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

4.மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள்.

5.பகவத் கீதை.

மேலுள்ளவற்றில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும், ஒரு சட்ட நூல் போல தொகுத்துத் தருவதுதான் மனுதரும சாஸ்திரம். எனவே, மனுதரும சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால், அதில் சொல்லப்பட்டுள்ள தருமங்களின் இன்றைய நடைமுறையையும் தெரிந்து கொண்டாலே சனாதனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைத்து விடும். விடையைத் தெரிந்து கொண்டால், சனாதன தருமத்தை ஒழிப்பதா அல்லது காப்பதா என்பதை ஒருவரால் முடிவு செய்ய முடியும்.

12 தலைப்புகளைக் கொண்ட மனுதரும சாஸ்திரத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். அவசியம் கருதி உடனடியாகப் படிக்க வேண்டிய சில முக்கியப் பிரிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.

தலைப்பு I: உலகத் தோற்றம், உயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் தோற்றுவாய்

31: நான்கு வருணங்களின் தோற்றம்
87,88, 89,90: நான்கு வருணங்களின் தொழில்
92, 93, 95, 96, 97, 100: வருணங்களில் உயர்வு தாழ்வு.

தலைப்பு II: வருண தருமம்

11- நாஸ்திகன்
21, 22: ஆரியர்களின் நாடு
27: சீமந்தம் எனும் தீட்டுக் கழிப்பு
30, 31, 32, 33:  பெயர் சூட்டல்
36, 39, 44, 66: பூணூல்
135, 137, 155, 156: மரியாதை

தலைப்பு III: திருமணம், திதி

4, 6, 8, 10, 11, 12, 13, 15, 16, 16, 21: திருமணம்
46: மாதவிடாய், தீட்டு
110: தாழ்ந்த சாதி

தலைப்பு IV: குடும்ப வாழ்க்கை

30: வேதத்தை நம்பாதவர்கள்
57: மாதவிடாய், தீட்டு
61: சூத்திரன் ஆளும் நாடு
79: மர நிழல் தீட்டு
162, 165: பிராமணச் சலுகை
215-219: உணவுத் தீண்டாமை

தலைப்பு V: உணவு

5, 6, 10, 14, 19, 27, 36, 48, 51: உணவுப் பழக்கம்
62, 85, 86,93: பிறப்பு இறப்பு தீட்டு
124: கிரகப்பிரவேசம், கும்பாபிசேகம் தீட்டு
147-169: மகளிர் தருமம்

தலைப்பு VI: சந்நியாசம்

தலைப்பு VII: அரசின் செயல்பாடு

32, 37-43, 54, 59, 63, 64: அரசாங்கத்தில் பிராமணர்களின் பங்கு

தலைப்பு VIII: நீதி பரிபாலனை

1, 3, 8, 11, 20-22, 24, 88 112, 123, 124: நீதித் துறையில் பிராமணர்களின் பங்கு
267-283, 352, 353: சொற்கொடுமை- தண்டனையில் பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்
379-381, 410:  தகாத உறவு, பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்.
413, 415: தொழிலாளர்கள்

தலைப்பு IX: ஆண்-பெண் தருமம்

2-3, 13, 14, 17, 19, 27-30, 46, 58, 59,69, 78, 81, 88, 94: பெண்ணடிமை
225: வேத நிந்தனை
229, 319, 320: அபராதம், பிராமணர்களுக்குச் சலுகை

தலைப்பு X: சாதிகள் உற்பத்தி, தொழில்

1-73: வருணக் கலப்பால் உருவான கீழ் சாதிகள், தொழில், வசிப்பிடம், உணவு, உடை
83, 84: பிராமணர்கள் ஏன் வேளாண்மை செய்வதில்லை.

தலைப்பு XI: பரிகாரம்
தலைப்பு XII: பாவ புண்ணியம்.

****

மனுதரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சில வாழ்வியல் நடைமுறைகள், புதிய சட்டத் திருத்தங்களால் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் சாதி, தீண்டாமை, பார்ப்பன மேலாண்மை உள்ளிட்ட பெரும்பாலானவை வழி வழியாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறுவதால் அவற்றை மனுதரும சாஸ்திரத்தோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால்தான், அது சனாதனமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்: 

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? தொடர்-2

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?.....தொடர்-1

Friday, 16 April 2021

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

மனிதக் காதலை திசை மாற்றிய பக்தி இயக்கம்

சனாதனம் என்றால் பழைமையானது; சனாதன தர்மம் என்றால் பழைமையான நீதி நெறி என்று பொருள். ‘நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை; சமூகத்திற்குப் பொருத்தமான நீதி நெறிகளை அன்றே வகுத்து வழிகாட்டி உள்ளார்கள். பழைய நீதி நெறிகளை கடைபிடிக்கத் தவறியததால்தான் நாட்டில் கேடுகள் பெருகிவிட்டன. எனவே சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதன் மூலம்தான் நற்சமூகத்தை மீட்டெடுக்க முடியும்” என்பதுதான் சனாதன தர்மத்தை உயர்ந்ததாகக் கருதுவோரின் கருத்து. பார்ப்பனர்கள் மட்டுமல்ல பார்ப்பனியத்துக்கு பலியாகிப் போன பலரின் கருத்தும் இதுதான்.

சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட நெறிமுறைகளையே தமிழர்கள் தங்களது மரபாகப் பார்க்கின்றனர். சங்க இலக்கியங்கள் சனாதனக் கருத்துக்களை வலியுறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. அப்படியானால் சனாதன தர்மத்தை எங்கிருந்து, எப்படிப் புரிந்து கொள்வது? பார்ப்பன இந்து மத நூல்களான, சுருதிகள் என்று சொல்லக்கூடிய ரிக்-யஜூர்-சாம-அதர்வன உள்ளிட்ட 4 வேதங்களிலும், ஸ்மிருதிகள் என்ற சொல்லக்கூடிய மனு-யாக்ஞவல்கியர்-அங்கிரஸ்-ஆபஸ்தம்பர் உள்ளிட்ட 18 தர்ம சாஸ்திரங்களிலும், நாரத-பாகவத-கருட-லிங்க-நாரத-சிவ-ஸ்கந்த-விஷ்ணு உள்ளிட்ட 18 புராணங்களிலும். இதிகாசங்கள் என்று அறியப்படுகிற இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதையிலும் சனாதன தர்மம் குறித்த விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் பகவத் கீதை ஸ்மிருதி வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்து மதத்தைச் சார்ந்த ஒருவன் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படிச் செய்யக் கூடாது என்பதை ஸ்மிருதிகள் வலியுறுத்துகின்றன. இதில் முதன்மையானது மனுஸ்மிருதி. அதனால்தான் இது சட்டமாகவும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் பார்ப்பனர்கள் மட்டுமே அவற்றை விரித்துக் கூறும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்ததால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.

மனுவின் காலம் கி.பி 185 க்குப் பிறகு என அறியப்பட்டாலும் சமணம் செழித்தோங்கிய களப்பிரர் ஆட்சி (கி.பி 250-575) வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில்தான் தமிழர் வாழ்வில் மனு ஸ்மிருதி கோலோச்சத் தொடங்கி உள்ளது. சண்டாளர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டார்கள் என்கிற பாஹியான் (கி.பி 400) கூற்றிலிருந்தும், தோட்டிகள் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்கிற யுவான் சுவாங் (கி.பி 620) கூற்றிலிருந்தும், அறிய முடிகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் (கி.பி 400-600) தீண்டாமையும் புகுத்தப்பட்டிருக்கிறது.

களப்பிரர் காலம்வரை படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை அடிப்படையாகக் கொண்டவை. பக்தியினால் முக்தி எளிதாகும்; இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் எனக் கூறி சமணத்தையும் பௌத்தத்தையும் அழிப்பதற்காக சைவமும் வைணவமும் தோற்றுவித்த பக்தி இயக்கம், மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை, தெய்வத்துக்கும் மனிதனுக்குமானக் காதலாக திசை மாற்றியது. கி.பி ஆறாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இல்லாதிருந்த விநாயகர் வணக்கம் பிற்கால நூல்களிலேயே காணப்படுகிறது. சனாதன தர்மம் தமிழகத்தில் ஆழமாகக் கால் பதிக்க பக்தி இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. பின்னாளில் சைவத்துக்கும் வைணவத்துக்குமான மோதல் என்பது தனிக்கதை.

சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் கால்பதிக்க முயலும் இத்தருணத்தில் சனாதன தர்மம் குறித்தப் புரிதல் காலத்தின் கட்டாயம் என்பதால் அது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்