Wednesday, August 21, 2024

திருக்குறள்: முக்காலத்திற்கும் ஏற்றதா? அப்படியானால்...?

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". -குறள்.

இதில் எதைக் கற்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா என்ன? நல்ல நூல்களைத்தான் கற்க வேண்டும், அதில் கூறப்பட்டுள்ள
நல்லவைகள்படிதான் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே பொழிப்புரை எழுதிக் கொள்கிறோம்.

எதைக் கற்றாலும் அதற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் என்பதுதானே இந்தக் குறளின் பொருள். 

அப்படியானால், மத்தியப் பிரதேச கிராமங்களில் சிறுவர்கள் கற்பதும், அதற்குத் தக அவர்கள் நடப்பதும் சரியன்றோ?

"ம.பி கிராமங்களில் திருட்டு, கொள்ளை பற்றி சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கும்பல்! 

மத்திய பிரதேசம் ராஜ்கர், மாவட்டத்தில் காடியா, குல்கேடி ஹல்கேடி ஆகிய கிராமங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பிக்பாக்கெட், வழிப்பறி, கூட்டமான இடங்களில் பைகளைப் பறிப்பது, வேகமாக ஓடுவது, போலீஸ்காரரை ஏமாற்றுவது, பிடிபட்டால் தாக்குதலை சமாளிப்பது என சகல பயிற்சி அளிக்கப்படுகிறது." 

இது இந்து தமிழ் திசை நாளேட்டில், ஆகஸ்டு 21, 2024 அன்று வெளியான செய்தி. 


பயிற்சி பெற்ற இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேற்கண்ட திருட்டுச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கற்றதைத்தானே இவர்கள் செயல்படுத்துகிறார்கள் "நிற்க அதற்குத் தக" என்பது இங்கும் பொருந்தும்தானே? இப்படியும் பொழிப்புரை எழுதலாம்தானே?

நேர்மையாய் வாழ வழியற்ற நிலைமை இருப்பதனால்தானே இப்படி மாற்று வழிகளில் வாழ மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முறையற்ற வழியில் பணம் பறிக்கும் பயிற்சி அங்கு மட்டுமா அளிக்கப்படுகிறது? அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் கையூட்டு பெறும் பயிற்சியை எங்கே கற்றுக் கொண்டார்கள்? யார் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது? இதையும் சேர்த்து அல்லவா நாம் பரிசீலிக்க வேண்டும்.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்கணக்கு நூல்கள் அனைத்துமே சமுதாயம் மிகவும் கெட்டுச் சீரழிந்திருந்த ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. சமுதாயத்தை மாற்றி அமைக்கத் துணியாமல் உபதேசங்களை மட்டும் அன்று அழகாய் வடித்துக் கொடுத்தார்கள்.

அதே உபதேசங்கள் இன்றும் போதிக்கப்படுகின்றன. குறள் முக்காலத்துக்கும் பொருந்தும் என்கிறார்கள். அப்படியானால், சமுதாயம் கெட்டுச் சீரழிந்த சமுதாயமாகவே தொடரட்டும்,  ஊதேசங்களை மட்டுமே நாம் போதித்துக் கொண்டே பழம் பெருமை பேசிக்கொண்டே இருப்போம். சமுதாயம் எக்கேடு கெட்டுச் சீரழிந்தால் என்ன என்கிற கவலை இன்றி, அதை மாற்றி அமைக்கின்ற போர்க்களத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாமல் வெறும் உபதேசங்களை மட்டுமே போதிப்பது மேதைத்தனம் பொருந்திய கோழைத்தனம் அல்லவோ? 

பழைய உபதேசங்களுக்கு பொழிப்புரை எழுதுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் புது பொழிப்புரை எழுதாதவரை, ஞானிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள், உபதேசங்களும் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்! 

ஊரான்

1 comment:

  1. //பழைய உபதேசங்களுக்கு பொழிப்புரை எழுதுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் புது பொழிப்புரை எழுதாதவரை, ஞானிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள், உபதேசங்களும் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்!//

    100% உண்மை.

    ReplyDelete