Saturday, August 10, 2024

உள் ஒதுக்கீடும், 'தலித்' அரசியலும்!

பட்டியல் சாதிகளுக்குள்ளும், படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. சேரி அமைப்பில், குடியிருப்புகளும் அந்தந்த சாதிக்கு ஏற்ப வேறு வேறாகத்தான் அமைந்துள்ளன. அவர்கள் தனித் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கக் கூடியது. இந்துச் சாதிய சமூக அமைப்பில் ஒவ்வொரு சாதியும் மேலே உள்ள சாதியால் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகின்றனர். 

சாதி இந்துக்களால், பட்டியல் சாதியினரே தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது ஒன்றுதான் இவர்களுக்கிடையிலான மிக முக்கியமான பொதுவான அம்சம். அதனால்தான் பட்டியல் சாதியினரை தீண்டத்தகாதவர்கள் (untouchables) என்றே அம்பேத்கர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தி உள்ளார்.

தீண்டத்தகாதவர்களுக்கிடையிலும் படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத் தாழ்வுகளும் பாகுபாடுகளும் நிலவுவதால், இவர்கள் அனைவரையும் தலித் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி, இவர்கள் எல்லாம் ஒன்று போலக் காட்டுவது பொருத்தமற்றது என்பதே எனது புரிதல்.

இந்து மதம் இருக்கிற வரை சாதி இருக்கும். சாதி இருக்கிற வரை ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கும். 


முதலில் சாதிப்பற்றாகத் தொடங்கி, பிறகு அதுவே சாதி வெறியாக மாறி, தனது சாதிக்காரர்களுக்கு மட்டுமே சலுகை காட்டும் போக்கு அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருப்பதால்தான் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற சாதியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.

பட்டியல் சாதி உள் ஒதுக்கீடு குறித்த சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் சாதியினருக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குள்ளும் நாடு முழுவதும் ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது.

எனவே, இன்றைய சூழலில், இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில், OC, BC, OBC, MBC, SC, ST மற்றும் சிறுபான்மையினர் என வகைப்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதிக்கும் அவரவர்களுக்கு உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து விடுவதுதான் இட ஒதுக்கீடு சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட முடியும். 

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பதனால் ஒருவருக்குத் தனிப்பட்ட திறமைகள் எதுவும் தானாக வந்து விடுவதில்லை. மாறாக, ஒருவர் பெறுகின்ற கல்வியும் பயிற்சியும் மட்டுமே அவரின் திறமையைத் தீர்மானிப்பதால், திறமை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

எனது 40 ஆண்டுகால பெல் நிறுவன அலுவலக அனுபவத்தில், மக்கு ஐயர்களையும் பார்த்துள்ளேன், 
திறமைமிகு பட்டியல் சாதியினரையும் பார்த்துள்ளேன். இதுவரை கல்வி-வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், அவற்றைப் பெற்ற பிறகு, அவர்களின் வாரிசுகள், the so called பிற உயர் சாதியினரை முந்திச் செல்கின்றனர் என்பதையும் காண முடிகிறது. 

அனைவருக்கும் தாங்கள் விரும்பிய கல்வி கிடைப்பதற்கும், விரும்புகின்ற வேலையைப் பெறுவதற்குமான ஒரு சமூக கட்டமைப்பு உருவாகும் வரை, சாதி அடிப்படையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும்.

ஊரான்

No comments:

Post a Comment