Tuesday, August 13, 2024

கொட்டும் மழையும் மொட்டை வெயிலும்! எங்கே நிழற் கூரை?

இன்று, ஹோண்டாவும் யமஹாவும்,
ரெய்டரும் ஃப்ரீடமும், ஸ்ப்லெண்டரும் ராயல் என்ஃபீல்டும், ஸ்கூட்டியும் ஆக்டிவாவும், ஆக்ஸசும் ஃபிளஷரும் என மாந்தரை சுமந்து செல்ல வித விதமாய் வாகனங்கள். 
எல்லாம், அறிவியலின் ஆக்கங்கள்! எல்லையில்லை, இனியும் வரும் புதிது புதிதாய்!

அன்று, எலிகளையும் எருமைகளையும், பூனைகளையும் நாய்களையும், மயில்களையும் கிளிகளையும், ஆடுகளையும் மாடுகளையும், சிங்கம் புலி மான்களையும், கடவுளரின் வாகனமாய் கற்பித்தான் கற்பனையில்! கடவுளோடு வாகனங்களையும் வணங்குகின்றோம். கட்டுண்டு கிடக்கின்றோம் இன்றும்!

கடந்த ஆண்டு, ஒரு நாள் 
சிவனை சுமக்கும்  தெருவோர பைரவனும், எனை சுமக்கும் ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், எனது முழங்கைதான் முறிந்து போனது! கடவுளர்தான் கற்பனையே ஒழிய அவைகளின் வாகனங்கள் நிஜம்தானே? நிஜம் என்றால் நிதானம் தேவைதானே? 

அன்றிலிருந்து இன்று வரை என்னை நானே சுமக்கின்றேன். குறும் பயணம் என்றால் தானியும், நெடும் பயணம் என்றால் பேருந்தும் என பழகிக் கொண்டேன்.

இன்று, நவீன ஆலைகளின் பேட்டைக்குப் பெயர் போனது இராணிப்பேட்டை. பாக்குக்கும் பஞ்சுக்கும் வெற்றிலைக்கும் சில்குக்கும் என, அன்றே தொன்மையான தொழிற்பேட்டையாய் உருவெடுத்து;
1866 இல் தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாய் பரிணமித்தது 
வாலாஜா பேட்டை.

பெருக்கெடுக்கும் மழை நீரை தடுப்பேதுமின்றி வழிந்தோடும் வகையில் நகரம் அன்றே வடிவமைக்கப்பட்டதால், புயலும் பெரு மழையும் ஒரு பொருட்டே அல்ல; இன்றும் கூட! இப்படி வாலாஜாவிற்கென பெருமைகள் பல உண்டு.

மாவட்டத் தலைநகரம் இராணிப்பேட்டை ஆயினும், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையை தன்னகத்தே கொண்டிருப்பதால் மாவட்டத்தின் 
நாற்திசைகளில் இருந்தும் அன்றாடம் நூற்றுக்கணக்கில் துயரர்கள் நாடி வருகின்றனர்.

ஒரு அலுவல் வேலையாய் பேருந்தில் வந்த நான் 
மருத்துவமனை வளாகப் பேருந்து நிறுத்தத்தில் வீடு திரும்பக் காத்திருந்தேன். தென்மேற்குப் பருவ மழை காலம் இது. கீழடுக்கு மேலடுக்கு சுழற்சியினால் இரவு நேர மழையினால்  நகரம் குளிர்ந்தாலும் பகல் நேர வெயிலோ மண்டையைப் பிளந்தெடுக்கும்.

மருத்துவமனை வளாகத்தில் நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நகருவதால் 
துயர் நீங்கி திரும்பும் மக்கள்  மொட்டை வெயிலிலும் கொட்டும் மழையிலும் பேருந்துக்காகக் காத்திருக்கும் அவலம்.
ஒதுங்க ஒரு நிழற் கூரை இல்லை. 
இதுவே எளிய மக்களின் ஏக்கப் பெருமூச்சு. ஏரெடுத்துப் பார்க்குமா மாவட்ட நிர்வாகம்? பெருமை சேர்க்குமா வாலாஜா நகராட்சி!

ஊரான்
 

x
x


No comments:

Post a Comment