Saturday, August 17, 2024

தீண்டாமைக்கு தூபம் போடும் "காளியாத்தா" மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயுமா?

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், ஜெம்மன் குப்பம் கிராமத்தில் உள்ள  வன்னியர்கள், யாதவர்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து காளியாத்தா கோவிலை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலில் உள்ள ஆத்தாளை, கிராமத்தில் சரிபாதியாக உள்ள பட்டியல் சாதி மக்களும் இதுவரை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், மெல்ல மெல்ல சாதி இந்துக்களால் பட்டியல்  சாதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததோடு, இந்த ஆண்டு ஆடி மாத திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என ஒரு பூசாரியின் கனவிலே வந்து ஆத்தா சொன்னாளாம். அதையே சாதி இந்துக்களும் அப்படியே ஏற்றுக் கொண்டார்களாம். அதனால், இந்த ஆண்டு ஆடி திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். கோவிலை இடிக்கச் சொல்லி எந்த ஆத்தா யாருடைய கனவில் வந்து சொன்னாள் என்று தெரியவில்லை.

இதற்கு எதிராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் காவல்துறையில் புகார் கொடுக்க, அந்தப் பூசாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்கள் கோவிலையே இடித்துத் தள்ளி இருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள நாலு சாதிக்காரர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இடையேயும் சாதியப் படிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. ஆனாலும் அவர்களுக்கிடையே தீண்டாமை கிடையாது. 

பட்டியல் சாதி மக்களும் இந்துக்கள்தான். அவர்களும் இந்து கடவுள்களைத்தான் வணங்குகிறார்கள் என்றாலும் கூட அவர்களை சாதி இந்துக்கள் உடன் சேர்த்துக் கொள்வதில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான், தீண்டாமை. 

தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டம் எழுதி 78 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  அன்று, தொட்டால் தீட்டு என்றார்கள். இன்றோ உடன் வந்தாலே தீட்டு என்கிறார்கள். இப்படி தீண்டாமை என்பது நவீன வடிவில் அரங்கேறி வருகிறது.

கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் தனிமனித விவகாரமாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு வீட்டுக்குள் முடக்கப்பட வேண்டும். பொது வெளியில் வரக்கூடாது.

கோவில்கள் தீண்டாமையின் மையமாக விளங்குவதாலும், புறம்போக்கு நிலங்களையும் காடுகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாலும் கோவில்கள் அனைத்தையும் இடித்துத் தரை மட்டமாக்க வேண்டும். எங்கெல்லாம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வெளியில் கோவில்கள் கட்டப்படுவதால் குறிப்பாக காடுகளையும் ஆறுகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. 

பொது இடங்களை தனிநபர்கள் ஆக்கிரப்பு செய்தால் சட்டவிரோதம்; அதையே கடவுளின் பெயரால் செய்தால் அங்கீகாரமா? சட்டத்தின் முன்னால் கடவுளும் ஒரு நபர்தானே? அந்தக் கடவுளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அஞ்சுகிறது அரசும் நீதிமன்றங்களும்?

ஊரான்

No comments:

Post a Comment