Sunday, August 25, 2024

இளங்கோவன் மரணம்: மேலும் ஒரு பெருந்துயரம்!

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை, சென்னையிலிருந்து கோவை வரை, என 1978 ஆம் ஆண்டில் பாலிடெக்னிக் படிப்பு முடித்த, தமிழ்நாடு பட்டயப் பொறியாளர்களின் (Diplamo in Engineering) குவி மையமாக விளங்கியது திருச்சி பெல் (BHEL) நிறுவனம்.
 
பன்முகப் பண்புகளைக் கொண்டவர்களோடு பழக, உறவாட பாலம் அமைத்துக் கொடுத்தது அந்நிறுவனம்.  


நடுவண் அரசின் நிறுவனம் ஒன்றில், நிரந்தரப் பணியில் சேர்ந்தோம், இனி தன் வீடு, தன் குடும்பம்மட்டும் என்றில்லாமல், சமூகத்தில், தாங்கள் கற்ற பாடங்களையும் ஒரு படிப்பாக எடுத்துக் கொண்டு, சமூக அவலங்களையும் அலசும் ஆவல் கொண்டவர்களில் தோழர் எஸ்.இளங்கோவனும் ஒருவர்.
 
பணி நிரந்தரம் ஆகுமா என்பது உறுதி ஆவதற்கு முன்பாகவே, பயிற்சிக் காலத்தில், மகத்தான தமிழறிஞர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்ச் சாற்றைக் பருகபெல் பயிற்சி விடுதி வளாகத்திலேயே ஏற்பாடு செய்தவர் நண்பர் இளங்கோவன் அவர்கள். ‘தென் மொழியும், ‘தமிச்சிட்டும் எம்மைந் பற்றிக்கொள்ள பாலம் அமைத்தவரும் இவரே.
 
இவர் திராவிட இயக்க அரசியலில் தீவிரமாகப் பயணித்தபோதும், நான் தீவிர இடதுசாரி அரசியலில் பயணித்த போதும், அரசியலில் ஆயிரம் கருத்து முரண் இருந்தாலும், முகம் காட்டாமல், முறுக்கிக் கொண்டு செல்லாமல் புன்முறுவலோடுப் பழகும் பண்பாளர் இவர்.
 
திராவிட இயக்கப் போராளிகளும், தீவிர இடதுசாரிகளும் கரம்கோர்த்து பயணிக்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், திருச்சியில்  மகஇக மேடைகளில்கூட அவர் 
முழங்கி உள்ளார்.
 
சமூகப் பணிகளுக்கு அவர் அதிக முன்னுரிமை கொடுத்து, அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டதால், அவர் எந்தப் பதவியில் (chargeman) பணிக்குச் சேர்ந்தாரோ அதே பதவியிலேயே  அவர் பணி ஓய்வும் பெற்றார். பெல் வரலாற்றில் அதிசயங்களிலும் அதிசயமான ஒரு அசாதாரணமான  நிகழ்வு இது. அதனால், அவர் உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பை மட்டும் இழக்கவில்லை; ஊதிய இழப்பாக பணமதிப்பில் பல இலட்சங்களையும் இழந்து, தான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்ந்தவர் அவர்.
 
தன்னை ஆட்டிப்படைத்த சோரியாசிஸ் எனும் நோய்கு எதிரானப் போராட்டமும் அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. ஹோமியோபதி கற்றுத் தேறி தனது இறுதி காலத்தில் பிறருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருவதாக என்னிடம் அவர் கூறுவார். இறை மறுப்பு, தமிழ்ப் பற்று, சோரியாஸிஸ், ஹோமியோபதி என எண்ணற்றவற்றில் என்னோடு ஒப்புமை உள்ளவர்.
 
சோரியாசிஸ் ஒரு நோய் அல்ல; அது ஆரோக்கியமானவர்களின் பிணி’ (healthy man disease) என்பார்கள். ஆனாலும் அவர் அறுபத்தி ஐந்திலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
வாழ்வின் மிக முக்கிய நண்பரை, தோழரை இழந்துவிட்டேன். அவரது இழப்பின் துயரங்கள் எம்மைத் துரத்திய போதும், அவரது லட்சியங்களைச் சுமப்பதே அவருக்கு யாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
 
ஊரான்.

1 comment: