Wednesday, November 6, 2024

லேவ் தல்ஸ்தோய்: சிறுகதைகளும் குறு நாவல்களும். தொடர்-3

ருசிய எழுத்தாளர் லேவ் தல்ஸ்தோய் (Leo Tolstoyஅவர்களின், “சிறுகதைகளும் குறுநாவல்களும்

இரண்டாவது கதை “குடும்ப மகிழ்ச்சிகுறுநாவல்

நாட்டுப்புறத்தில் வாழும் ஒரு 36 வயது ஆணுக்கும், ஒரு 17 வயது பருவப் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் காதல்பிறகு திருமணம்இரு குழந்தைகள்இடையில் நகர்புற மேட்டுக்குடி மக்களோடு பழகும் போது அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இளைஞன் மீதான ஈர்ப்புகாதல் தடம் மாறுகிறதோ என்கிற தடுமாற்றம்இறுதியில் காதலோடு கலந்த கடந்த கால வாழ்க்கை முடிவுற்று, தனது கணவன் குழந்தைகள் மீதான பாச உணர்ச்சியோடு அவள் தொடரும் புதிய வாழ்க்கையைச் சித்தரிக்கிறது இக்குறு நாவல்.

 
இருவருக்கும் இடையிலான மன உணர்வுகளையும், அவர்கள் வாழும்  புறச்சூழலின்  இயற்கைக் காட்சிகளையும் வாசிக்கும் போது, நம் மனதும் அவற்றோடு சேர்ந்தே பயணிக்கிறது

அந்த வீட்டில் மரணம் தயங்கி நின்று கொண்டிருப்பது போலத் தோன்றியது. அந்தக் காற்றில் துயரமும் மரணத்தின் ஆவியும் கலந்திருந்தன. அம்மாவின் அறை பாசமின்றிக் காலியாக இருந்தது” 

அந்த இளம் வயது பெண்ணின் தாய் இல்லை என்பதை இவ்வாறு காட்சிப்படுத்துகிறார் நாவலாசிரியர்.
 
அவர் விவரிக்க முடியாத குதூகல உணர்ச்சியில் இருக்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதை நாங்கள் கட்டுக்கடங்காத பரவசம் என்று கூறினோம்.  அவரிடம் அந்த உணர்ச்சியை நான் மிகவும் ரசித்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து தப்பியோடி வந்த சிறுவனைப் போல அவர் இருந்தார். அவர் உடலில் ஆனந்தம், மகிழ்ச்சி சிறுபிள்ளைத்தனமான சுறுசுறுப்பு தளும்பி நின்றது 

என்று தன்னை சந்திக்க வந்த காதலனைப் பற்றி காதலி விவரிக்கிறார். இந்த நாவலே அவள் கதை சொல்வது போலத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
 
"கதிரவன் அப்பொழுதுதான் உதித்திருந்தது. எலுமிச்சை மரங்களின் மஞ்சள் நிறக் கிளைகளின் வழியாகத் தன் ஒளியை சிதறிக் கொண்டிருந்தது. பாதை முழுவதும் உதிர்ந்த இலைகள் கிடந்தன. காட்டுச் செர்ரி புதர்களின் சுருக்கம் விழுந்த பழங்கள் கிளைகளில் நெருப்புப் போலச் சிவப்பு நிறத்தில் தோற்றமளித்தன. அந்தக் கிளைகளில் எஞ்சி நின்ற ஒரு சில இலைகள் மூடு பணியால் உருக் குலைக்கப்பட்டு வளைந்திருந்தன. பூக்கள் துவண்டு போய்க் கறுப்பு நிறத்தில் இருந்தன. வெளிறித் தோன்றிய பசும் புல்வெளியிலும் வீட்டுக்குப் பக்கத்தில் காலடிகள் பட்டுச் சிதைந்திருந்த புல் தரையிலும் மூடுபனின் வெள்ளி முதல் தடவையாக பூத்திருந்தது. வானம் தெளிவாக, குளிர்ச்சியாக இருந்தது, அதில் ஒரு மேகம் கூட இல்லை; அங்கே அது இருக்கவும் முடியாது"

என்று விவரிக்கிறார் ஒரு காலைப் பொழுதை.

இவர்கள் இருவரின் குடும்பங்களும் விவசாய வேலைகளுக்கு பண்ணை ஆட்களையும், வீட்டு வேலைகளுக்குப் பணியாட்களையும் வைத்துக் கொள்கிற அளவுக்கு வசதி படைத்த குடும்பங்கள்.  அந்த ஆண், அந்தப் பெண்ணின் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதனால் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அவர் வந்து போகும் பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது

இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு குழந்தையும் பிறந்து விடுகிறது. ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் இவர்களுக்கிடையிலான காதல் மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது.
 
 "உயர்ந்த வட்டாரங்களோடு அதிகமாக ஒன்றிவிடக்கூடாது. அப்படி ஒன்றிவிட்டால் நமக்குக் கடன் ஏற்படும்"
 
என்று நகர்ப்புற வாழ்க்கையைப் பற்றி எச்சரிக்கிறார் கணவர்.

நகர்ப்புற மேட்டுக்குடி மக்களோடு பழகும் பொழுது அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞன் மீது, குழந்தைக்குக் தாயான பிறகும் இந்தப் பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுத் தடுமாறுகிறாள்
 
"இந்த அந்நியர், .... எவ்வளவு பரபரப்பையும் உணர்ச்சியும் என்னிடம் எழுப்பி விட்டார்! அந்தத் தடிப்பான, அழகான உதடுகளின் முத்தங்களுக்காக, அழகான நரம்புகளும், விரல்களில் மோதிரங்களும் அணி செய்த அந்தக் கரங்களின் அணைப்புக்காக என்னிடம் தடுக்க முடியாத ஆசை கிளர்ந்தெழுந்தது. விலக்கப்பட்ட ஆனந்தம் என்ற சேற்றுக் குழி திடீரென்று எனக்கு முன்னால் வாயைப் பிளந்து 'இங்கே வா' என்று என்னை அழைத்தது. அந்தச் சேற்றுக் குழிக்குள் தலை குப்புற விழுவதற்கு நான் எவ்வளவு துடித்தேன்"

என்று தான் தடுமாறிய தருணங்களை விவரிக்கிறார் அந்த பெண்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு கருத்து முரண்கள்கூட புதிய சூழலில், புதிய பழக்க வழக்கங்களால், எவர் ஒருவரும் தடம் மாற வாய்ப்புகள் உண்டு என்பதை உணர்த்துகிறது இந்நாவல்.
 
வயது வித்தியாசம்தான் அந்தப் பெண் தடுமாறுவதற்குக் காரணம் என்றுகூட நினைக்கத் தோன்றும். ஆனால், தற்காலச் சூழலில், இங்கும்கூட கிட்டத்தட்ட ஒத்த வயதுடைய கணவன் மனைவிக்கு இடையே, அது காதல் திருமணமாக இருந்தாலும்சரி அல்லது ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும்சரி, வாழ்க்கையின் ஓட்டத்தில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் பொழுது காதலும் பாசமும் மெல்ல மெல்ல குறைந்து மறைந்து கோபமும் வெறுப்பும் வளர்ந்து மணமுறிவுக்கோ அல்லது தடம் மாறுவதற்கோ இட்டுச் செல்கிறது.
 
பாலியல் உறவில் ஏற்படும் சிக்கல்களாலோ அல்லது பொருளாதாரப் பிரச்சனைகளால் ஏற்படும் முரண்பாடுகளாலோ, கணவன் மனைவிக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, அவர்களுக்கிடையிலான பாசம் குறைந்து மறைந்து வெறுப்பும் பகைமையும் மேலோங்கி விடுகிறது.

இத்தகைய நிலையில்தான், புற உலகில் அவர்கள் பழகும் வேறு சிலரோடு நேசம் ஏற்பட்டு, அதுவே காதலாக மலர்ந்து, 
தடம் மாறவும் வழி வகுக்கிறது. இதற்கான காரணங்களைப் பரிசீலித்தால் மட்டுமே கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகளைக் களைய முடியும் என்பதைத்தான் இந்த நாவல் உணர்த்துவதாக நான் புரிந்து கொள்கிறேன்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


நள்ளிரவில் நடைமுறைக்கு வந்த வர்ணா வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2024

நள்ளிரவில் நடைமுறைக்கு வந்த வர்ணா வன்கொடுமை தடுப்புச் சட்டம் - Varna (Prevention of  Atrocities) Act 2024 

பார்ப்பான், பூணூல், நூலிபான், கைபர் போலன், ஆரியன், அவாள், மாம்பலம், மடிசார், நாமம், பட்டு, ஊறுகாய், மடிசார், மாமி போன்ற சொற்களை பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கிறதாம் இந்தச் சட்டம். பிராமணர்களை இழிவு படுத்தும் வகையில் வேறு ஏதேனும் புதிய சொற்களைப் பயன்படுத்தினால் அத்தகையச் சொற்களும் தானாகவே தடைசெய்யப்பட்ட  சொற்களாக இச்சட்டம் கருதிக் கொள்ளுமாம்.

மேற்கண்ட சொற்கள் வேறு ஏதேனும் பொருள் குறிக்கும் வகையில் ஏற்கனவே பொதுவெளியில் பயன்படுத்தப்பட்டு வந்தால், அதற்கு உரிய மாற்றுச் சொல்லை ஒரு மாத காலத்திற்குள் உருவாக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று இச்சட்டம் பரிந்துரை செய்கிறதாம். எ.கா:  மாங்கா ஊறுகாய் இனி மாங்கா தொக்கு என்றவாறு மாற்றி அமைக்கப்படுமாம்.

நேற்று நல்லிரவு முதல் நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம் பின்தேதியிட்டு அதாவது, முதன் முதலில் பார்ப்பான் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட காலம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாம். இதில் முதல் குற்றவாளி  தொல்காப்பியர் என்பது இன்று விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் மாம்பலம் காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

பார்ப்பான் என்ற சொல்லை ஏற்கனவே பயன்படுத்தியவர்களை தங்களின் முப்பாட்டன் என்றோ, கொள்கை வழிகாட்டி-ஆசான் என்றோ யாராவது உரிமை கோரினால், அவர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமாம். 

மேலும், பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் உடனடியாகத் தடை செய்யப்படுவதாகவும் இச்சட்டம் கூறுகிறதாம்.

சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதால் சென்னையில் உள்ள "மாம்பலம்" என்ற பகுதியின் பெயரையும் மாற்றுவதற்கு அரசு மாற்றுச் சொல்லை தேடி வருவதாகவும் இன்று இரவுக்குள் நிபுணர்கள் முடிவு செய்து விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறதாம்.

இந்தப் புதிய சட்டத்தின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் உடனடியாக வெளிவர முடியாதாம். குற்றம் சுமத்தப்பட்டவர், தான் குற்றமற்றவர் என்பதை அவராகவே நிருபித்தால் மட்டுமே அவர் சிறையில் இருந்து வெளிவர முடியுமாம். மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர் வழக்கறிஞர் யாரையும் வைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடையாதாம். 

இச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினாலோ, கைது-வழக்கைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டாலோ, போராட்டம் நடத்தினாலோ அவர்கள் மீதும் உடனடியாக இச்சட்டம் பாயுமாம்.

இச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர், குற்றவாளி என்று ஒரு முறை தீர்ப்பு சொல்லப்பட்டு விட்டால், அவருக்கு உரிய தண்டனையை அவர் அனுபவித்தே தீர வேண்டும் என்றும் மேல்முறையீடு எல்லாம் செய்ய முடியாது என்றும் ஒரு சட்டப்பிரிவு கூறுகிறதாம்.

மிகக் கொடூரமான முறையில் கடந்த 2000 ஆண்டுகளாக பிராமணர்கள், பிற 
பிராமணர் அல்லாதவர்களால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் விளைவாக சமீப காலங்களில் கஞ்சிக்குக்கூட வழி இன்றி அவர்கள் நியூயார்க் சிக்காகோ, சின்சினாட்டி போன்ற அமெரிக்க நகரங்களுக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றதாலும், இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக, சட்ட முகப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இந்தச் சட்டத்தின் முழுமையான விவரங்களை  www.brahatrovarna.com என்ற இணைய தளத்தில் அறியலாமாம்.

இச்சட்டம் குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அடையாறு ஆற்றுப் படுகை மாளிகையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனவாம்.

சென்னையிலிருந்து நமது சிறப்பு நிருபர் அளித்த தகவலின்படி மேற்கண்ட தகவல்கள் இங்கே பதிவு செய்யப்படுகிறது. இதில் உள்ள குறைகளுக்கும் நிறைகளுக்கும் அந்த சிறப்பு நிருபரே பொறுப்பாவார் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஊரான்

Monday, November 4, 2024

லேவ் தல்ஸ்தோய்: சிறுகதைகளும் குறு நாவல்களும். தொடர்-2

ருசிய எழுத்தாளர் லேவ் தல்ஸ்தோய் (Leo Tolstoyஅவர்களின், “சிறுகதைகளும் குறுநாவல்களும்

முதல் கதை இரண்டு ஹுஸ்ஸார்கள்”. 


ஹுஸ்ஸார்கள் என்றால் இராணுவ குதிரைப்படை வீரர்கள் என்று பொருள். 

தந்தை, மகன் என இரண்டு குதிரைப்படை வீரர்களைப் பற்றிப் பேசுகிறது இந்த நாவல். தந்தை காலத்தில் சதா குடி, ஆட்டம், பாட்டம், சூதாட்டம் என சமூகம் சீரழிந்து கிடந்ததையும், மகன் காலத்தில் அவை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்ததையும் நாவலில் புரிந்து கொள்ள முடிகிறது

அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டிய பணத்தையும் சேர்த்து சூதாட்டத்தில் இழந்து விடுகிறான் தந்தை. இந்தத் தந்தையைப் படிக்கும் பொழுது சூதாட்டம் எவ்வளவு கேடானது என்பதை உணர முடிகிறது. தந்தையை ஒப்பிடும் பொழுது மகன் பரவாயில்லை என எண்ணத் தோன்றுகிறது. 

***
இன்றைய நமது சமூகத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள், இதற்கு நேர் மாறாக, அதாவது தந்தையைவிட மோசமானவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. 

படிக்காத பாமரன், தான் சம்பாதிக்கிற கூலியில் பெரும் பகுதியை குடியிலே செலவழித்துவிட்டு, குடும்பத்தின் அன்றாட அவசியத் தேவைகளுக்கே அல்லல்படுவது, படித்த முட்டாள்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் இலட்சக் கணக்கில் பணத்தை இழந்து மனைவியின் நகைகளை அடகு வைப்பது அல்லது மனைவி மூலமாக மாமனார் வீட்டில் காசு வாங்கி வரச்சொல்வது, இதனால் கணவன் மனைவி இடையே சச்சரவுகள் ஏற்பட்டு மணமுறிவு வரை செல்வது என இன்றைய தமிழ்ச் சமூகம் சீரழிந்து கிடக்கிறது.

புறச் சூழல்களே மனிதனுடைய பழக்க வழக்கங்களையும், நடத்தைகளையும் தீர்மானிக்கின்றன. எனவே, புறச் சூழல்களை மாற்றி அமைக்காமல் உபதேசங்களால் மட்டும் நம் வீட்டுப் பிள்ளைகளைத் தீய பழக்க வழக்கங்களில் இருந்து மீட்டு விட முடியாது. 

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தாமல், போதைப் 'பொருட்களுக்கு ஆட்பட வேண்டாம்' என இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதனால் மட்டும் எதுவும் மாறப் போவதில்லை. 

தீயொழுக்கம் கேடானது என்பதைத்தான் லேவ் தல்ஸ்தோய் 150 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறார்.
***
இந்தக் கதையில், இயற்கையை, மனிதர்களின் பழக்க வழக்கங்களை மிகத் துள்ளியமாகப் பதிவு செய்துள்ளார் லேவ் தல்ஸ்தோய்.

உங்களிடம் கடைசியாக யார் அன்பாக நடந்து கொள்கிறாரோ, அவர்தான் உங்களுக்கு மிகவும் சிறந்த மனிதர். அந்தக் காலத்தைக் காட்டிலும் இப்பொழுது மக்கள் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள் 

என்று, தான் நேசித்த பழைய காதலனைப் பற்றி தனது காதலனின் மகனிடம் சொல்லுகிறார் அந்தப் பெண்மணி. இந்தப் பெண்மணியின் மகளைத்தான் மேற்கண்ட காதலனின் மகனும் ஒருதலையாக நேசிக்கிறான்.

பணி மூடிய சமவெளிப் பிரதேசம் சலிப்பூட்டுகின்ற முறையில் நெடுந்தொலைவு வரை நீண்டிருந்தது. அதன் குறுக்கே அழுக்குப் பிடித்த மஞ்சள் நிற நாடாவைப் போலப் பாதை அமைந்திருந்தது. உருகிக் கொண்டிருக்கும் பனியின் மேல் தகட்டின் மீது நடனமாடிப் பளிச்சிட்ட சூரிய ஒளி முகத்திலும் முதுகிலும் பட்டபொழுது வெப்பத்தினால் சுகமான உணர்ச்சி ஏற்பட்டது” 

"அந்த இரவு அமைதிப்படுத்துகின்ற வருத்தத்தையும், காதல் ஏக்கத்தையும் ஒரு சமாதானக் காணிக்கையைப் போலக் கொடுத்தது. அங்குமிங்கும் சிறிதளவு புல் அல்லது உலர்ந்த குச்சிகள் நீட்டிக்கொண்டிருந்த அந்தக் களிமண் பாதை எலுமிச்சை மரங்களின் அடத்தியான இலைகளின் வழியாக நேரடியாக விழுந்த வெளிறிய நிலா வெளிச்சத்தில் கரும்புள்ளிகள் நிறைந்து காணப்பட்டதுசில சமயங்களில் ஒரு வளைந்த கிளையின் ஒரு பக்கத்தில் மட்டுமே வெளிச்சம் பட்டு அதன் மேல் வெள்ளைப் பாசி அதிகமாகப் படர்ந்திருப்பது போலத் தோன்றியது. வெள்ளி இலைகள் அவ்வப்பொழுது ஒன்று கூடி ரகசியம் பேசின

இப்படி ஏராளமான காட்சிப் படிமங்களை இந்தக் குறு நாவலில் காண முடியும்இத்தகைய அபாரமான வர்ணனைகளே வாசகனை கதைக் களத்திற்குள் நேரடியாக அழைத்துச் செல்கிறது.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

Sunday, November 3, 2024

மழைக்காலம்: வருண பகவானே நினைத்தாலும் நடுவீட்டுக்குள் நுழையும் நரகலைத் தடுக்க முடியாது?

கிராமம் முதல் நகரம் வரை மழைக் காலங்களில் கழிவு நீரும், மழை நீரும் சாலைகளில் தேங்குவதும், நரகலோடு வீடுகளுக்குள் புகுவதும் வாடிக்கையாகிவிட்டது. 

அதேபோல, ஆண்டுக் கணக்கில் வாய்க்கால்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும், ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால்கள் காணாமல் போனதனாலும், வயல்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் பாழாவதும்  வாடிக்கையாகி விட்டது.

சரி, மழை பெய்தால் நீர் பெருக்கெடுக்கத்தான் செய்யும். நிற்க, இப்பொழுது அப்படி ஒன்றும் பெருமழை எல்லாம் பெய்து விடுவதில்லை. கடந்த காலங்களில் பெய்ததைவிட மழையின் அளவு குறைவுதான். அகன்று கிடக்கும் ஆறுகளையும், ஓடி ஓய்ந்த ஓடைகளையும் கேளுங்கள். 'போடா வெண்ணெய்' என அவை உங்கள் செவிட்டில் அறையும்.
கோப்புப் படம்

சரி, கழிவு நீர் எங்கிருந்து வந்தது? கழிவு நீர் என்றால் அது அன்றாடம் வெளியேறிக் கொண்டே இருக்க வேண்டுமே?  இதுவரை ஏன் வெளியேறவில்லை? கழிவு நீர் வெளியேறுவதற்கான சாக்கடைப் பாதைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஆங்காங்கே அடைப்புகளும் ஆக்கிரமிப்புகளும் இருப்பதால் சாக்கடை நீர் அப்படியே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மழை இல்லாத காலங்களிலும் மக்களை தொல்லைக்கு உள்ளாக்கி வருகிறது. 

கழிவு நீர் வாய்க்கால்களோ, மழை நீர் வாய்க்கால்களோ முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது மழை பெய்தால் மட்டும்தான் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரிகிறது. ஏன், பொது மக்களுக்கும் அப்போதுதான் புரிகிறது. வயிற்று வலிக்காரனே வலியை உணராமல், நோய் முற்றிய பிறகு, 'ஐயோ வலிக்குதே' எனப் புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.
கோப்புப் படம்

சரி, ஒரு முறைதான் பட்டு அனுபவிக்கிறோமே, அடுத்த முறையாவது சரி செய்ய வேண்டாமா? தீபாவளி போன்ற ஒரு நாள் கூத்து போல மழைநீர் வெளியேற்றப்பட்டவுடன் அதிகாரிகளும் தேவைக்கேற்ப அவர்கள் வேலைகளைப் பார்க்கப்  போய் விடுகிறார்கள். மக்களும் அவரவர் வேலைகளில் மூழ்கி விடுகிறார்கள். மீண்டும் அடுத்த ஆண்டு, அதே கதை. அதே புலம்பல்.  

அதிகாரவர்க்கம் எதையும் தானாக செய்ததாக வரலாறு இல்லை. மக்களின் கோரிக்கைகளும்,  போராட்டங்களுமே அதிகார வர்க்கத்தை வேலை செய்ய வைக்கிறது. எனவே, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் மழைக்கால தத்தளிப்புகளிலிருந்து ஒரு காலம் யாரும் மீளவே முடியாது.

ஒரு பக்கம், பெரும்பாலான அரசியல் கட்சிகளில் துன்பங்களிலும் துட்டு பார்க்கும் ஆல்லக்கைகளை நிறைந்து கிடக்கிறார்கள்.  ஆனால், மறுபக்கம் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்கள் குறைந்தபட்சம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகளாகத்தான் இருக்கின்றன. இத்தகைய கட்சிகள், அமைப்புகள் வலுப்பெற்றால் மட்டுமே மழைக்கால அவலங்கள் அகல வாய்ப்புகள் உண்டு. 

நடிகர்கள் உள்ளிட்ட பிழைப்புவாத அரசியல்வாதிகள் பின்னால் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருந்தால், மழைக்காலங்களில் நரகல்கள் நடுவீட்டுக்கு வருவதை வருணபகவானே நினைத்தாலும் தடுக்க முடியாது.

ஊரான்