Friday, February 13, 2026

எழுதப்படாத பக்கங்கள்: ஒத்தையடிப் பாதையிலே ...!(2)

மலையடிவாரத்தின் மந்திரம்

மலையடிவாரத்துக் காத்து லேசா மேல பட்டுச்சுன்னாலே போதும், பழைய நெனப்பெல்லாம் தானா வந்து ஒட்டிக்கும். ஒரு காலத்துல எங்க ஊரு தனி உலகமாவே இருந்து வந்தது.

போளூர்லருந்து செங்கம் போற ரோட்டுல, வலதுபக்கமா நீண்டு நெடிந்து நிக்குற அந்த ஜவ்வாது மலைத்தொடர்... கடலாடி பருவதமலைக்கு அடுத்து வர்ற மலைத்தொடரோட அடிவாரத்துல, எங்க ஊருக்கு வடக்கே பெருமாள் மலையும், எங்க மலையும் அரண் கணக்கா நிக்கும். இந்த ரெண்டு மலையையும் ஒரு தொங்கு பாலம் மாதிரி இணைக்கிற இடத்துக்குப் பேரு 'மடலு'. அது எப்பவும் பச்சைப் பட்டுப் போத்துன மாதிரி ரம்மியமா இருக்கும்.

மட்டவெட்டு மலையும் ஏரியும் 

புரட்டாசியின் மாலை நேரப் பொழுதுகளில் மேகக்கூட்டமெல்லாம் அந்த மடலுக்குள்ள இறங்கி வந்து ‘மழை வருது, மழை வருது’ என ஜெகபேரிகை கொட்டும். மடல்ல லேசா தூறல் எறங்றப்போ, அந்த மேகமும் மலையும் ஒண்ணுக்கொண்ணு அணைச்சுக்குற அழகப் பாக்க ரெண்டு கண்ணு பத்தாது. கலக்கா (வேர்க்கடலை) பறிக்கிறவங்களும் நெல்லு அடிக்கிறவங்களும் உஷாரா இல்லேன்னா, பட்டுன்னு வர்ற பொரட்டாசி மழையில எல்லாம் நனைஞ்சு வீணாப் போவும்.

மட்டவெட்டும் மலைபடுகடாமும்

எங்க கண்ணன் அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு, "மன்னன் நன்னனைப் பாடும் சங்க இலக்கிய நூலான மலைபடுகடாம் பாட்டுல வர்ற அந்தச் செங்கண் மாநகர் நம்ம மட்டவெட்டா கூட இருக்கலாம்”ன்னு. அவரு சொல்றதுலயும் ஒரு நியாயம் இல்லாம இல்ல. ஏன்னா, மலைஅடிவாரத்தில் மட்டவெட்டு மாரியம்மன் கோவிலைச் சுத்தி அங்கங்க பழங்காலத்துச் சுவடுகளும் புதைபொருள்களும் அடிக்கடி எட்டிப் பார்க்கும். நெலத்துல ஏர்ஓட்டும் பொழுது பழங்கால கெணறுகளும் பழைய கட்டட இடிபாடுகளும் தட்டுப்பட்டதோட, ஒருத்தரு நெலத்துல பொதையல்கூட கெடச்சதா பேசிக்கிறதப் பாத்தா அதுல உண்மை இருக்கும் போலத்தானே நம்ப வேண்டியிருக்கு. ஆனா அரசாங்கத்தோட காதுக்கு இது எட்டியதான்னு தெரியல.

பீய் ஓடையும் பீய்க் கொல்லையும்

இயற்கை எங்க ஊருக்குக் கொடுத்த கொடை ரொம்ப அதிகம். மேற்கே வண்ணான் ஓடை, ஊருக்குக் கிழக்குப் பக்கமா இன்னொரு ஓடை. அதுக்குத்தான் 'பீய் ஓடை'ன்னு பேரு. அப்போதெல்லாம் வீட்ல கழிவறை வசதியெல்லாம் கிடையாது. ஆம்பளைங்க, பொம்பளைங்க எல்லாரும் அந்த ஓடை ஓரத்தையோ இல்ல கொல்லைப் (புஞ்சை நிலம்) பக்கத்தையோதான் ஒதுங்கறதுக்கு வச்சிருந்தாங்க.

ஓட ஓரம் இருந்தவங்க ஓடைப் பக்கம் ஒதுங்குவாங்க. மத்தவங்க அவங்க அவங்க கொல்லையில ஒதுங்குவாங்க. எங்களுக்கும் இதுக்கான ‘பீய்க் கொல்லை’ ஒன்னு இருந்தது. மணற்பாங்கான பூமிங்கரதால கழித்த பிறகு காலாலேயே மண்ணைத் தள்ளி மூடிடுவோம்.

இதுல வேடிக்கை என்னண்ணா, அதுல கலக்கா, மொச்சை, தர்பூசணி எல்லாம் மாணவாரில வெளையும். தர்பூசணிய மத்தவங்க திருடாம இருக்க குழி தோண்டி அத பொதைச்சு வெப்போம். பொதச்சது தெரியாம ஒரு நாள் அது குபுக்குனு மொளச்சிகூட வந்திருக்கு. பீய் ஓடை, பீய்க் கொல்லை, பேரு கேக்க ஒரு மாதிரியா இருந்தாலும், அதுதான் அந்தக்காலத்து எதார்த்தம்.

தற்பெருமை

வடமேற்கிலிருந்து புரண்டு வரும் கோரையாற்று வெள்ள நீரும், மடலுல இருந்து ஓடி வரும் ஓடைத் தண்ணியும் ஒண்ணா சேந்தா ஊரு ஏரி கோடி போவும் (ஏரி நிரம்பி வழியும் திறந்தநிலை மதகுப் பகுதி). ஏரிக்கு மூனு கோடி உண்டு. ரெண்டு கோடிய கட்டிட்டா ஏரி நிரம்பி தத்தளிக்கும். ஏரிக்குக் கீழே பச்சைப் பசேல்னு கழனிக் காடுகள் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் விரிஞ்சு கிடக்கும்.

ஒவ்வொரு வீட்டுக்கும் கழனிக்காடும், கொல்லமோடும் என கொஞ்சம் நஞ்சை-புஞ்சை நெலம் இருக்கும். கழனிக் காட்டு நெல்லும், கொல்லமோட்டுப் பயிரும் வீட்டுத் தேவைக்கு வெளஞ்சிருக்கும்.

என்னதான் வெளஞ்சாலும் குடும்பம் பெருசா இருந்தா சேமிப்பெல்லாம் நிக்காது. நடுவுல ஒரு வருஷம் மழை பொய்த்துப் போனாலும் வீட்டுக் களஞ்சியம்தான் காலியாகுமே ஒழிய யாரும் சோத்துக்குக் கையேந்தும் நெலம வந்ததில்ல. எங்க உழவுக் குடி சனங்களுக்கு இதுல ஒரு தற்பெருமை உண்டு.

ஒத்தையடிப் பாதையும் ஒசரமும்

ஆனா, ஊருக்குள்ள வர்றதுக்குச் சரியான வண்டிப் பாதை வசதி கிடையாது. மட்டவெட்டு ஊரிலிருந்து கொல்லமோடு, வயக்காட்டு வரப்பு, ஏரிக்கரை வழியா அந்த ஒத்தையடிப் பாதைதான் கதி. அந்தப் பாதையிலதான் கடைகண்ணிக்கும் நல்லது கெட்டதுக்கும், படிப்புக்கும் நாங்க ஓடணும்.

ரெண்டு கிலோமீட்டர் நடந்து போயித்தான் மட்டவெட்டு தொடக்கப் பள்ளியில 'அ-னா', 'ஆ-வன்னா' கத்துக்கணும். அஞ்சாம் கிளாஸைத் தாண்டினா நடுப்பாலூர் நடுநிலைப் பள்ளிக்கு நாலு கிலோமீட்டர் நடக்கணும். எட்டாம் கிளாஸைத் தாண்டினா காஞ்சி உயர்நிலைப்பள்ளிக்கு எட்டு கிலோமீட்டர் சைக்கிள உருட்டணும்.

இந்த ஓட்டப்பந்தயத்துக்கு எங்களைத் தயார் பண்றதுல எங்க ஊரு வாத்தியாருங்க ரொம்ப உஷார். 1960-களின் பாதியில நான் அஞ்சாம் கிளாஸ் முடிச்சப்போ, மறுபடியும் அதே கிளாஸ்ல உட்கார வச்சாங்க. படிப்பு வரலன்னு இல்ல, என் ஒசரம்தான் பிரச்சனை! நான் உண்மையிலேயே ரொம்பக் குட்டையாதான் இருந்தேன்.

பெரிய பள்ளிக்கூடத்துக்கு அத்தனை தூரம் போறதுக்கு என் குட்டிப் பாதம் எட்டாதுன்னு நெனச்சாரோ என்னவோ, எங்க விட்டல் வாத்தியாரு என் மேல இருந்த பாசத்துல, "தம்பி... நீ இன்னும் கொஞ்சம் வளரணும்டா, அதுவரைக்கும் இங்கேயே இன்னொரு வருஷம் உட்காரு"ன்னுட்டாரு.

உசரம் கம்மியா இருக்குறது படிப்புக்கே தடையா வரும்னு அந்த வயசுல நான் நெனச்சுக்கூட பாக்கல. அப்படி ஒரு வருஷம் அதே அஞ்சாம் கிளாஸ் பெஞ்சுல தேமேன்னு உட்கார வேண்டி நேர்ந்தது.

எங்களை 'கொட்டாக்காரங்க'ன்னு ஊர்க்காரங்க சில பேரு ஏளனமா பேசுவாங்க. ஆனா, அந்தப் பேச்சையெல்லாம் ஒடைச்சு எறிஞ்சவர் எங்க கண்ணன் அண்ணன். எழுபதுகளுக்கு முன்னாடியே பட்டப் படிப்பைத் தொட்டு, எங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியா நின்னாரு. அவரோட படிப்புதான் எனக்குள்ள ஒரு பெரிய நம்பிக்கையை வெதச்சதா? அந்த வயசுல அதெல்லாம் எனக்குத் தெரியாது. "உசரம் முக்கியமில்லடா... நாம தொடுற உயரம்தான் முக்கியம்"னு ஒரு வைராக்கியம் இருந்ததான்னும் தெரியாது.

“படித்தால் மட்டும் போதுமா?”
'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா…  
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்  
அதுதாண்டா வளர்ச்சி’ என்று அன்றைக்கு சும்மாவா பாடினார் பட்டுக் கோட்டையார்!

ஆளு வளரலேன்னாலும் நான் ஆறாம் கிளாசு போறதுக்குத் தயாரானேன்.

குறிப்பு:
மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) நூலில் நவிர மலையை ஆண்ட நன்னனின் தலைநகரான செங்கண்மாநகர் பற்றிக் குறிப்பிடும் வரிகள், "செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை" (அடி 10) என்பதாகும்.

இது இன்றைய செங்கம் என்று சொல்லப்பட்டாலும், மட்டவெட்டு மாரியம்மன் கோயில் அருகில் புதையுண்டுபோன நகரமும் செங்கண்மா நகரமாக இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்தான் இதை ஆராய்ந்தறிய வேண்டும்.

தொடரும்…

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்

1 comment:

Anonymous said...

நிறைய எழுதுங்க பா இந்த பதிவுகள் தொடரட்டும்