Saturday, February 7, 2026

ஆக்கிரமிப்பு அகற்றம்: கடவுளுக்கு ஒரு நீதி, மனிதனுக்கு ஒரு நீதியா?

பனிமூட்டமும்... பதைபதைக்கும் நகரமும்! 

காலை 5:30 மணி. கைபேசியின் மெல்லிய மணி ஓசை உறக்கத்தைக் கலைத்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால், நரைத்த கிழவனின் தாடியைப் போல வாலாஜா ஹவுஸிங் போர்டு சாலைகளைப் பனிமூட்டம் போர்த்தியிருந்தது. "வழக்கமான நடைப்பயிற்சியைத் தொடங்கலாமா? அல்லது இராணிப்பேட்டை திருமணத்திற்குத் தயாராகலாமா?" என்ற ஊசலாட்டத்தில், அன்றைய நடைப்பயிற்சி அரைமனதோடு தடைப்பட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தபோது 'சிமெண்ட் காடுகளாக' நகரத்தின் கட்டடங்கள் மௌனமாய் வரவேற்றன. இதே தை மாதக் காலையில் ஒரு கிராமத்துச் சாலையாக இருந்திருந்தால், பொங்கல் கொண்டாட்டத்தின் எஞ்சிய கோலங்களும், தைப் பனியின் ஈரமும், தாலாட்டும் மேகங்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். அந்த இயற்கை எழிலை இந்தத் தார்ச் சாலைகளில் தேடுவது ஏனோ எட்டாக்கனியாகவே இருக்கிறது.


ஒரு கிலோமீட்டர் "நடை"யும்... சில கசப்பான உண்மைகளும்! 

காலை 7:00 மணிக்கு இராணிப்பேட்டை நோக்கியப் பயணம் தொடங்கியது. வாலாஜாவிலிருந்து முத்துக்கடை வரை பேருந்துப் பயணம். அங்கிருந்து தண்டலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம். "தடைப்பட்ட காலை நடைப்பயிற்சியை இந்த ஒரு கிலோமீட்டர் நடை ஈடு செய்துவிடும்" என்ற சமாதானத்தோடு நடக்கத் தொடங்கினேன்.

போகும் வழியில் சாலையை ஆக்கிரமித்திருந்த சில கோயில்கள் கண்ணில் பட்டன. பேருந்துகளும் லாரிகளும் திரும்ப முடியாத அளவுக்கு அங்கே சாலை குறுகிக் கிடந்தது. முறையான சாலை வசதியின்றி அந்தப் பகுதி வளர்ச்சி காணாது என்பது ஆண்டவனுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் மனிதனுக்குத் தெரியும்தானே?

ஆனால், கடவுள் மீதான அச்சம் வளர்ச்சிப் பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் அவனைத் தடுக்கிறது. அரசாங்க இடத்தை 'ஆட்டையைப்' போட்டு, போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் இந்தக் கோயில்கள்தான், மக்களின் இன்னல்களைத் தீர்ப்பதாக மக்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் காலத்தின் பெரும் முரண்!

சடங்குகளில் மறைந்திருந்த முற்போக்கு! 

எட்டு மணி அளவில் திருமண மண்டபம் சென்றடைந்தேன். மெல்ல மெல்லக் கூட்டம் கூட, இந்து முறைப்படி மணவிழாச் சடங்குகள் அரங்கேறின. ஆனால், அவற்றின் பின்னால் ஒரு முற்போக்கு ஒளிந்திருந்தது. அது சாதி மற்றும் மதக்கலப்புடன் கூடிய ஒரு திருமண நிகழ்வாக அமைந்திருந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டுத் திரும்பும் வழியில் நண்பரோடு உரையாடியபோது,

திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெருகிவரும் சாதி மறுப்புத் திருமணங்கள் குறித்துப் பேசினோம்.

"பட்டியல் சாதி இளைஞர்கள்தான் இடைநிலைச் சாதிப் பெண்களைக் காதலிக்கிறார்கள்" என்ற பொதுவான பிம்பத்திற்கு மாறாக, இடைநிலைச் சாதி இளைஞர்களும் பட்டியல் சாதிப் பெண்களை மனதாரக் காதலிக்கிறார்கள். ஆனால், இத்தகையக் காதலில் பெண் வீட்டார், "இடைநிலைச் சாதிப் பையனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தால், எங்கே ஆணவக் கொலை (Honor Killing) நடந்துவிடுமோ?" என்று அஞ்சும் நிலை இன்னும் நீடிக்கிறது.

இருப்பினும், இத்தகையத் திருமணங்கள் வட மாவட்டங்களில் வெற்றிகரமாக நிகழ்வது ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி. தென் மாவட்டங்களைவிட இந்த விஷயத்தில் வட மாவட்டங்கள் எவ்வளவோ பரவாயில்லை. நகரங்களோடு ஏற்பட்டுள்ள நேரடித் தொடர்பு மற்றும் முதியோர்களிடையே ஏற்பட்டுள்ள சமூக விழிப்புணர்வு போன்றவை இம்மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக இருப்பதை உணர முடிகிறது.

அதிகாரமும்... ஆக்கிரமிப்பும்!

முத்துக்கடையிலிருந்து வாலாஜா வரை சாலை விரிவாக்கப் பணிகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. சாலையின் இருபுறமும் இருந்த கட்டடங்களின் முகப்புகளும், வணிக நிறுவனங்களும் இரக்கமின்றி இடிக்கப்பட்டுச் சிதைந்து கிடந்தன. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அதே சாலையில் ஆக்கிரமித்திருந்த கோயில்கள் மட்டும் எவ்விதச் சேதமுமின்றி 'அரச மரியாதையோடு' அப்படியே நிற்கின்றன!

கேள்வி இதுதான்: 

சாலையை ஆக்கிரமிப்பது மனிதனா? கடவுளா? சட்டப்படி பார்த்தால் இரண்டுமே குற்றம்தான். ஆனால், மனிதர்களின் ஆக்கிரமிப்பை வேரோடு அகற்றும் அதிகாரம், கடவுளின் ஆக்கிரமிப்பு என்று வரும்போது மட்டும் தயங்கி நிற்பது ஏனோ? 'கடவுள் பழிவாங்குவார்' என்ற அச்சமா? அல்லது 'வாக்கு வங்கி' அரசியல் என்ற தந்திரமா?

குற்றவாளி யார்? 

இன்று இடிக்கப்பட்டுக் கிடக்கும் அந்த இடிபாடுகளைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது. ஒரு காலத்தில் இவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமான நிலமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? இடையில் இவை எப்படி ஆக்கிரமிக்கப்பட்டன? அப்போதெல்லாம் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஆக்கிரமித்துக் கட்டியவர்களைக் குற்றம் சொல்வதா? அல்லது கட்டுவதற்கு கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்த அதிகாரிகளைக் குற்றம் சொல்வதா? 

எனது பார்வையில் இரு தரப்புமே குற்றவாளிகள்தான். ஆனால், முதன்மைக் குற்றவாளி அரசு அதிகாரிகளே! அவர்கள் அன்று கடமை தவறாமல் இருந்திருந்தால், இன்று இத்தனை பேரின் உழைப்பும், கட்டடங்களும் இடிபாடுகளாகத் தெருவில் விழுந்திருக்காது. மக்கள் ஆக்கிரமிக்கும் போது, அதை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளின் துரோகம் என்றென்றும் மன்னிக்க முடியாதது.

- ஊரான்



4 comments:

sekar said...

அரசு: நரைத்த கிழவனின் தாடியை

மூத்தோரின் நரைத்த தாடி என்று எழுதலாமே!

கிழவன் கிழவி எள்ளி நகையாடும் வார்த்தை தானே?

கல்யாணத்துக்கு போனமா? வாழ்த்திட்டு வந்தோமா?
என்று இல்லாமல் போற பாதையில ஆக்கிரமிப்பு!. இடிபாடு, இடிப்பு.

இரு பேரின் துரோகம் (சாதாரண மக்கள் அதிகாரிகள்).

நல்லதொரு தொகுப்பு.

ஆனால் கடைசியில் உடன்பாடில்லை.
அறியாமையில் மக்கள் ஆக்கிரமித்து இருக்கலாம்.

தொன்று தொட்டு ஆக்கிரமிப்பு எல்லாம் அறிவோடு நடந்தது தானே? என்பது எனது கருத்து.

sekar said...

கனகராஜ்: அறியாமையினால் மக்கள் ஆக்கிரமிக்கவில்லை. பார்த்துக் கொள்ளலாம் என்று வேண்டுமென்றே தான் ஆக்கிரமிக்கின்றனர். யாரும் இப்பொழுது approved plan படி வீடு கட்டுவதில்லை. கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரிகளும் அதைக் கண்டு கொள்வதில்லை. சாலை ஆக்கிரமிப்புகளையும் ஆரம்பத்திலேயே களைவதில்லை. மாமூல் வாங்கிக் கொண்டு காவலர்களும் அதை ஊக்குவிக்கின்றனர். திடீரென்று ஒரு நாள் இடித்துத் தள்ளுகின்றனர். திருச்சி NSB சாலையில் நடக்கக் கூட இடமின்றி ஆக்கிரமிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவை அகற்றப்பட்டன. இப்பொழுது அவர்களுக்கு ஹோலி கிராஸ் கல்லூரிக்கு வடபுறம் உள்ள அரசு இடத்தில் கடைகள் கட்டப் பட்டு தெருவோர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

sekar said...

கடைசி பாரா திருத்தம் செய்துள்ளேன்.

sekar said...

கடைசி பாரா திருத்தம் செய்துள்ளேன்.