இசை என்பது இராகங்களில் இல்லை; அது தாளங்களிலும் இல்லை; கவித்துவமான வரிகளிலும் இல்லை; மாறாக இசை என்பது அது எழுப்பும் போர் முழக்கங்களில்தான் உள்ளது என்பதை ஓங்கி உரைத்திருக்கிறது 22.08.2026 அன்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழா.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் இசை விற்பன்னர்கள் இல்லை, கவிதை வரிகளை வடித்துக் கொடுக்கும் புலவர்கள் இல்லை. அவர்களிடம் இருப்பது வெறும் பறையும் வர்க்கக் கோபமும் மட்டுமே! பறையும் கோபமும் கைகோர்க்கும்போது அது எழுப்பும் ‘அசுர’ ஓசை நம் காதுகளை மட்டும் எட்டுவதில்லை; அதையும் தாண்டி நமது மூளையில் ‘ருத்ர தாண்டவம்’ ஆடுகிறது. அதனால்தான் தஞ்சையில் தமிழ் மக்கள் இசை விழா என்றால் அது அகிலத்தையும் அதிர வைக்கிறது.
“கீழடியை உயர்த்திப்பிடி! வேத நாகரிகத்தைத் துரத்தியடி! இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவில் இருந்து திருத்தி எழுது!” என்ற போர் முழக்கம்தான் இந்த அதிர்வலைகளுக்கு அடிப்படை.
21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று திருப்பதியில் இருந்து இராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு தொடர் வண்டியின் S1 பெட்டியில் நான் பயணித்தபோது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வடஇந்தியர்களே.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உணவு தேடி மனிதக் கூட்டம் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயர்ந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் இன்றும்கூட மனிதர்கள் பிழைக்க வழிதேடி மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்கிறார்கள். அப்படித்தான் வடஇந்தியர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்.
ஆதிகாலத்தில் கடும் வறட்சியாலும் பேரிடர்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். ஆனால் இன்றோ ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்கிறார்கள்.
கணியம்பாடியைத் தாண்டி கண்ணமங்கலத்தை நோக்கி ரயில் விரைந்து கொண்டிருந்தபோது ‘சோ’வென மழை. பொதுவாக மழை என்றால் எனக்கு ஏகக் குஷி. இருக்காதா பின்ன... விவசாயியின் மகனாச்சே!
ஒருவழிப் பாதை என்றாலும் எதிரே எந்த ரயிலும் வரவில்லை என்பதால் விழுப்புரம் வரை விரைந்து சென்ற ரயில், கடலூருக்குப் பிறகு எதிரில் வரும் ரயில்களுக்கு வழிவிட்டு ஆங்காங்கே ஒதுங்கி நின்றதால், உற்சாகமாகத் தொடங்கிய ரயில் பயணம் அலுப்புத் தட்டத் தொடங்கியது. இதுபோன்ற அலுப்பான நேரங்களில்தான் நொறுக்குத் தீனிகள் நம்மைத் தேடி வருகின்றன. பசிக்கிறதே என்று வாங்கித் தின்றால் பரலோகம் நம் கண்களுக்குத் தெரியும்.
இரவு 8 மணி, சீர்காழி. நேரமின்மை காரணமாகப் பகல் உணவைத் தவிர்த்திருந்ததால் வயிறு கபகபவென்றது. பொதுவாக ரயிலில் நான் உணவு வாங்குவதில்லை என்றாலும் ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்பதனால் சப்ளையரிடம் ‘ஒரு பொட்டலம்’ என்று கேட்டபோது, ‘எல்லாம் முன்கூட்டியே புக்கிங் ஆகிவிட்டது’ என்று மறுத்துவிட்டார். ‘அட, இது என்னடா சோற்றுக்கு வந்த சோதனை!’ என்று எண்ணியவாறு, பாட்டிலில் மீதமிருந்த தண்ணீரை உள்ளே இறக்கி, ‘ரயில் பயணங்களில்’ வரும் ‘வசந்தும் சாந்தியும்’ நினைவிலாட என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
தஞ்சை ரயில் நிலையத்தை விட்டு இரவு பத்து மணிக்கு வெளியே வந்த பிறகு, இந்தக் காலத்திலும் பத்து ரூபாய்க்கு இட்லி தரும் வி.சுப்பையா அவர்களுக்கு நன்றி கூறி, இசை விழா நடைபெறும் திருவள்ளுவர் திடலை அடைந்தபோது இரவு 11 மணி. விழாவுக்கான மேடை ஏற்பாடுகளில் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒளி விளக்குகளால் திருவள்ளுவர் திடல் பகல்போல் காட்சியளித்தது. காவிகளால் விழாவிற்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால், இந்த நள்ளிரவிலும் நான்கு மூலைகளிலும் காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
விழாவில் நானும் ஒரு கருத்தாளராகப் பங்கேற்கவிருப்பதால் போதிய ஓய்வு தேவை என்பதற்காகத்தான் முதல் நாளே புறப்பட்டு வந்தேன். இல்லை என்றால் தோழர்களோடு பேருந்திலேயே பயணித்திருப்பேன்.
ஆய்வரங்கம்
ஆகஸ்ட் 22 காலை 9.30 மணி வாக்கில் திடலுக்குச் சென்றபோது, கருத்தரங்கம் நடைபெறும் இடத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். நேரம் செல்லச் செல்லத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலை அலையாகத் தோழர்கள் திடலை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
சுமார் 10 மணி வாக்கில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தொடக்க காலத் தோழர்களில் ஒருவரான தோழர் முகுந்தன் கொடியேற்றி, அருகில் இருந்த தியாகிகள் நினைவுத் தூணில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். நானும் மூத்த தோழர் என்பதனாலோ என்னவோ என்னையும் மலர் தூவ அழைத்தனர். மலர் தூவுவது குறித்து மாற்றுக்கருத்து உள்ளவன் என்பதனால் நான் வீரவணக்கம் மட்டும் செலுத்தினேன்.
தோழர் எழில்மாறன் தலைமையில் ஆய்வரங்கம் காலை 10 மணி வாக்கில் தொடங்கியது. அப்பொழுது அரங்கமும் நிரம்பி வழிந்தது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் கீழடி அகழாய்வு அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் மாலையில்தான் கலந்துகொள்வார் என்ற அறிவிப்பை அடுத்து, “இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி” குறித்துப் பேராசிரியர் வி.மாரப்பன் அவர்கள் தனது ஆய்வுரையை வழங்கினார்.
ஒரு அகழாய்வுத் தகவல்களை மக்களுக்குக் கொண்டுசெல்வதற்கு இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது இதுவே உலகின் முதல் முயற்சி என்று அவர் உரையைத் தொடங்கியபோதே, இந்த விழாவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்பதை என்னால் உணர முடிந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலை அலையாக வந்து கொண்டிருந்த கூட்டமும், 2007-ஆம் ஆண்டு கடைசியாக நடந்த விழாவை நினைவூட்டியதோடு இந்த விழாவின் வெற்றியை மேலும் உறுதி செய்தது.
கருத்தரங்கம்
தோழர் செங்கொடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில்,
1994-ஆம் ஆண்டு ‘தமிழில் பாடு; இல்லையேல் தமிழ்நாட்டை விட்டே ஓடு!’ என்ற முழக்கத்தோடு முதன்முதலில் தொடங்கிய தமிழ் மக்கள் இசை விழாவை நினைவு கூர்ந்த தோழர் பொழிலன் அவர்கள், “கீழடியை மறைப்பதன் மூலம் தேசிய இனங்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு எப்படிச் சிதைக்கிறது” என்பதை எடுத்துரைத்தார்.
அடுத்துப் பேசிய தோழர் ஓவியா அவர்கள், ‘வேத நாகரிகம் என்று சொல்வதை விட அதை வேத (அ)நாகரிகம் என்று சொல்வதே சாலப் பொருந்தும்’ என அழுகி நாறும் வேத (அ)நாகரிகத்தைத் தகுந்த சான்றுகளுடன் சம்மட்டியால் அடித்துத் துவைத்தார்.
கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேலும் மக்கள் அலை அலையாக வந்துகொண்டே இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு கருத்தரங்கம் தொடர்ந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் வராததால், அவருக்குப் பதிலாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் களப்பிரன் அவர்கள், ‘இந்திய வரலாறு எப்படி தெற்கு திசையில் இருந்து தொடங்குகிறது’ என்பதைத் தகுந்த சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
மனித உழைப்புதான் நாகரிகங்களைப் படைக்கிறது; உழைக்காத கூட்டம் அதற்கு உரிமை கோர முடியாது என்பதை அம்பலப்படுத்தி, ‘கீழடி நாகரிக உண்மையும் மார்க்சிய வரலாற்று வழிகாட்டலும்’ என்ற தலைப்பில் நான் (தமிழ்மணி) கருத்தரங்கில் இறுதியாக உரையாற்றி நிறைவு செய்தேன்.
தமிழ்மணி
18 ஆண்டுகளாக இசை விழா நடைபெறாததால் பலரும் வரலாற்றுப் பசியோடு இருந்துள்ளார்கள் என்பதைப் பார்வையாளர்கள் காட்டிய உற்சாகத்திலிருந்து உணர முடிந்தது.
மாலை நேரக் கலை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக ஓவிய அரங்கம், கண்காட்சி உள்ளிட்டவற்றை பலரும் பார்த்தவண்ணம் இருந்தனர். வாசிப்புப் பசியோடு இருந்த பலர் புத்தகக் கடைகளை மொய்த்திருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட தோழர்கள் ஒருவரையொருவர் குசலம் விசாரித்துக் குதூகலித்துக் கொண்டிருந்தனர்.
உடல் நலிவுற்ற நிலையில் இருந்த தோழர் கம்பம் மோகனைச் சந்தித்தபோது எனக்குள் ஏனோ ஒரு தோழமைப் பற்று பீரிட்டெழுந்தது.
கழுத்துப் பட்டை போடவில்லை என்றால் மயக்கம் வரும் நிலையிலும், இசை விழாவிற்காகச் சென்னை மின்சார ரயிலில் நிதி வசூல் செய்த தோழர் முகுந்தனைப் பார்த்தபோது ஒருவித நெகிழ்ச்சி ஏற்பட்டது.
அமைப்பு பிளவுக்குப் பிறகு நம்பிக்கையற்று இருந்தவர்களுக்கு இந்த விழா ஒரு விடிவெள்ளியாய் ஒளிர்ந்தது. விரக்தியுற்று ஒதுங்கியவர்கள், அமைப்பு வேலைகளில் சுணக்கம் காட்டுபவர்கள், முரண்பட்டு நிற்பவர்களை எல்லாம் சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் விழா இது என்றால் அது மிகையல்ல.
மாலை 5 மணி அளவில் தோழர் கோவன் தலைமையில் மாலை நேரக் கலை அரங்கம் ரெட்டிப்பாளையம் பறை இசையோடு தொடங்கியது.
இதில் புதுகை பூபாளம் குழுவினரின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
இடையில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் ராஜு, திரைப்பட இயக்குனர் ராஜு முருகன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் மகாலட்சுமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
‘கீழடி அகழ்வாய்வு உண்மையும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையும்’ என்ற தலைப்பில் கீழடி அகழ்வாய்வு அறிஞர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் சமரசமற்ற உரை இந்த இசை விழாவின் முத்தாய்ப்பான ஒன்றாய் அமைந்தது. இவரைப் போன்றவர்களால்தான் மண்ணில் புதைந்துபோன வரலாறுகள் உயிர்த்தெழுகின்றன. இவர் ‘திரு’ அல்ல, ‘தோழர்’தான் என்பதை இவரது ஒவ்வொரு சொல்லும் உணர்த்திக்கொண்டே இருந்தது.
தவிர்க்க முடியாத காரணங்களால் கிருஷ்ணகிரி பையணப்பள்ளி தெருக்கூத்துக் கலைஞர்கள் பங்கேற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் காம்ரேட் கேங்ஸ்டர், இசை சமர் பறை இசை, மாற்று ஊடக மைய கலை நிகழ்ச்சி, மகஇக. ஜென்சி இளைஞர்களின் பாடல், தெலுங்கானாவில் இருந்து புர்ர கதா அருணோதயா கலைக் குழு என மாலை நேர நிகழ்ச்சிகள் இரவு பத்து மணி வரை களைகட்டினாலும், நேரமின்மை காரணமாக மக்கள் கலை இலக்கியக் கழக கலை நிகழ்ச்சி ஒரே ஒரு பாடலோடு முடிந்தது பலருக்கும் ஏமாற்றமே.
இறுதியாக தோழர் இராவணன் நன்றி கூறி நிகழ்வை முடித்து வைத்தார்.
நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்களுக்கும் கலைக்குழுவினர்களுக்கும் சிறப்புப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
2000-க்கு முன்பு பிரபலமான தலைவர்களைக் கொண்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் மக்களிடம் அறிமுகமாகவில்லை. மாறாக, அதன் அழுத்தமான அரசியலே மக்களை ஈர்த்தது. 2000-க்கு பிறகு தனது அரசியல் பலத்தோடு பொதுமக்களை ஈர்க்கக்கூடிய பேச்சாற்றல் உள்ள தலைவர்களால் கவரப்பட்ட நிகழ்ச்சிகள், அமைப்பு பிளவுக்குப் பிறகு சற்றே தொய்வடைந்தன.
ஆனால் இன்று மக்களை ஈர்க்கக்கூடிய சில முக்கியமான தலைவர்கள் இல்லாதபோதும், இந்த இசை விழா மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது என்றால், அதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் எடுத்திருக்கும் கீழடிப் பிரச்சினையும் அதன் மீதான அரசியல் ஆளுமையும்தான் காரணம் என்றால் அது மிகையல்ல. அரசியலைக் கொண்டு மட்டுமே மக்களை ஈர்க்கும் வரலாறு மீண்டும் திரும்புகிறது.
“நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை” என்று ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவு முறையில் கூட்டாகச் சேர்ந்து உழைக்கும்போதுதான் எந்தவொரு நிகழ்வும் வெற்றியைத் தேடித் தரும்.
மாடுகள் ஒன்றாக இருக்கும்போதுதான் பாதுகாப்பு. தனித்தனியாகப் பிரிந்து புற்கள் கிடைக்கிறதே என்று மேயச் சென்றுவிட்டால், சிங்கங்கள் எளிதில் அவற்றையெல்லாம் அடித்து வீழ்த்திவிடும்.
சில இடர்கள் வரினும் உலகம் தன்னுடைய இயக்கத்தை எப்பொழுதும் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. இயங்கு. ஒருங்கிணைந்து இயங்கு. செயல்படு. கூட்டாகச் சேர்ந்து செயல்படு. அதுதான் வரலாற்றைப் படைக்கும். கீழடி உணர்த்தும் பாடம் இதுதான்! அதை இந்தத் தமிழ் மக்கள் இசை விழா உணர்த்தி இருக்கிறது.
எந்தவொரு கருத்தும் சிந்தனையும் பௌதிக சக்தியாக மாறவேண்டுமானால், ஒரு கை ஓசை போதாது; பல கை ஓசை எழ வேண்டும்!
எழுவோம் மீண்டும்... சீறிப்பாய்வோம் எதிரிகளை நோக்கி!
- தமிழ்மணி



No comments:
Post a Comment