ஆதிமனிதனிலிருந்து நாகரிக மனிதன் வரை: உழைப்பும் வரலாற்று இடப்பெயர்வுகளும்
மெய்நிகர் உலகப் பயணம் தொடர்கிறது…
மனித சமூகத்தின் வரலாற்றை வெறும் அரசர்கள், போர்கள், பேரரசுகள் என்ற கோணத்தில் பார்த்தால் அதன் உண்மையான வரலாற்று மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
மனிதன் என்ன உற்பத்தி செய்தான்?
அதை எப்படித் தயாரித்தான்?
அந்த உற்பத்தியில் கிடைத்ததை எவ்வாறு பகிர்ந்து கொண்டான்?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளில்தான் மனித சமூகத்தின் உண்மையான வரலாறு ஒளிந்திருக்கிறது.
ஆதிமனிதனும் நவீன மனிதனும்: வரலாற்றின் இரு வேறு அலைகள்
மத்தியப் பிரதேசத்தின் பீம்பேட்கா குகைகளில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் கொற்றலை ஆற்றுப் படுகையிலுள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்த பழங்கற்காலக் கருவிகள் மூலம் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
அதேவேளையில், சிந்துவெளி மற்றும் கீழடி போன்ற நகர நாகரிகங்களைக் கட்டியமைத்த நவீன மனிதர்கள், சுமார் 60,000 முதல் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று மரபியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படியானால், 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களும், 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களும் ஒன்றுதானா? இல்லை என்கிறது அறிவியல்!
முதல் அலை (ஹோமோ எரெக்டஸ்): சுமார் 18 முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய ‘ஹோமோ எரெக்டஸ்’ (Homo Erectus) என்ற ஆதிமனித இனம், உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அத்திரம்பாக்கம் மற்றும் பீம்பேட்காவில் வாழ்ந்தவர்கள் இந்த ஹோமோ எரெக்டஸ் மனிதர்களே. கடுமையான இயற்கைச் சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களால் இவர்கள் காலப்போக்கில் அழிந்துபோயினர்.
இரண்டாம் அலை (ஹோமோ சேப்பியன்ஸ்): அடுத்து, சுமார் 60,000 – 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (Homo Sapiens) எனப்படும் நவீன மனிதர்கள். இன்று உலகம் முழுவதும் வாழும் அனைத்து மனிதர்களின் நேரடி மூதாதையர்களும் இவர்களே.
வேட்டையிலிருந்து வேளாண்மைக்கு: உற்பத்தியின் தோற்றம்
ஆதிகால ஹோமோ சேப்பியன்ஸ் மனிதன் தொடக்கத்தில் இயற்கையிடமிருந்து உணவைச் சேகரித்து உண்டானே தவிர, அதை உருவாக்கவில்லை. ஆனால், ஒரு விதையைக் கவனித்து அதை மண்ணில் விதைத்து வேளாண்மை செய்யத் தொடங்கியபோது, மனிதன் இயற்கையை மாற்றித் தனக்குத் தேவையானதை உற்பத்தி செய்யத் தொடங்கினான்.
பயிர்களைப் பராமரிக்க ஒரே இடத்தில் தொடர்ந்து வாழ வேண்டிய தேவை ஏற்பட்டதால், நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்து நிலையான குடியிருப்பு வாழ்க்கை உருவானது. இதுவே மனித வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!
‘உபரி’ மற்றும் வாணிபத்தின் வளர்ச்சி
வேளாண்மை வளர்ச்சி தங்களுக்குத் தேவையான அளவை விட அதிகமான தானிய உற்பத்தியை உருவாக்கியது. இந்த அதிகப்படியான உற்பத்தியே ‘உபரி’ (Surplus) எனப்படுகிறது.
ஒருவரிடம் தானியம் இருந்தது.
மற்றொருவரிடம் மட்பாண்டம் இருந்தது.
இன்னொருவரிடம் கருவிகளும், வேறு ஒருவரிடம் துணியும் இருந்தன.
தேவைக்கேற்ப பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை வளர்ந்தது.
உற்பத்தி உபரியை உருவாக்கியது; உபரி பரிமாற்றத்தை உருவாக்கியது; பரிமாற்றம் வாணிபத்திற்கான அடித்தளத்தை அமைத்தது.
கருவி — மனிதனின் மூன்றாவது கை!
மண்ணை உழ, மரத்தை வெட்ட, தானியத்தை அறுக்க மனித உடலின் வலிமை மட்டும் போதவில்லை. தேவைக்கேற்ப மனிதன் கருவிகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் தொடங்கினான்.
கருவி என்பது மனிதனின் கைகளுக்கு வலு சேர்த்தது! கருவிகள் வளர்ந்தபோது உற்பத்தியும் தேவைகளும் விரிவடைந்தன; புதிய தொழில்களும் உருவெடுத்தன.
வேலைப் பிரிவினையும் சமூகச் சார்பும்
ஒரு சமூகத்தில் அனைவரும் விவசாயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை வந்தபோது, உழுதல், பானை வனைதல், நெசவு செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் என வேலைகள் பிரிந்தன. இதையே நாம் ‘வேலைப் பிரிவினை’ (Division of Labour) என்கிறோம்.
வேலைப் பிரிவினை வளர்ந்தபோது, மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் சமூக அமைப்பாக மாறினர்.
கூட்டு உழைப்பு உருவாக்கிய மொழியும் பண்பாடும்
விவசாயம், உற்பத்தி மற்றும் வாணிபத்தில் மனிதர்கள் இணைந்து செயல்பட்டபோது சைகைகள் மட்டுமே போதவில்லை. கூட்டு உழைப்புக்குத் துல்லியமான தகவல் பரிமாற்றம் தேவைப்பட்டது. இதனால் ஒலிகளும் சொற்களும் வளர்ந்து மொழியானது.
மொழி: பல தலைமுறைகளின் உழைப்பையும் அறிவையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சமூகக் கருவியாகவும், சமூகத்தின் நினைவகமாகவும் மாறியது.
பண்பாடு: தலைமுறை தலைமுறையாகச் சேமிக்கப்பட்ட தொழில்நுட்பம், கலைகள், வாழும் முறைகளின் கூட்டுச் சேமிப்பாகக் கட்டமைக்கப்பட்டது.
உற்பத்தியும் நகரமைப்பின் தோற்றமும்
உபரி உற்பத்தி, வேலைப் பிரிவினை, வாணிப வளர்ச்சி ஆகியவை குடியிருப்புகளை நகரங்களாக மாற்றின.
நீர் மேலாண்மை, கழிவுநீர் வாய்க்கால்கள், தெருக்கள், சுட்ட செங்கல் கட்டிடங்கள் ஆகியவை வெறும் கல்லும் மண்ணும் அல்ல; அவை ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஒருங்கிணைந்த கூட்டு உழைப்பின் மாபெரும் வெளிப்பாடு.
சிவகளையா? சிந்துவெளியா? எது முந்தையது?
கீழடி மற்றும் சிந்துவெளியை வெறும் பழங்காலக் கட்டிடத் தொகுப்பாகப் பார்க்க முடியாது. பானை ஓடுகள், நெசவுக் கருவிகள், சுட்ட செங்கற்கள் மற்றும் தமிழி எழுத்துகள் போன்றவை அங்கே வாழ்ந்த உழைக்கும் மக்களின் உற்பத்தி அறிவு, தொழில் நுட்பம், வேலைப் பிரிவினை மற்றும் எழுத்தறிவிற்கான வரலாற்றுச் சான்றுகளாகும்.
சிந்துவெளியும் கீழடியும் நிலவியல் ரீதியாக வேறு வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும், இவ்விரண்டு இடங்களிலும் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி ஒன்றே என அண்மைய ஆய்வுகள் (ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற அறிஞர்களின் ஆய்வுகள்) சுட்டிக்காட்டுகின்றன.
சிந்துவெளி நாகரிகம் கீழடியை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்பதால், அங்கிருந்து மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து கீழடிக்கு வந்திருக்க வேண்டும்; அல்லது, பொருநை (தாமிரபரணி) நதிப்படுகையில் வாழ்ந்த சிவகலை மக்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 3000 வாக்கில்) சிந்துவெளியை நோக்கி இடம்பெயர்ந்திருக்கக் கூடும். சிவகளையில் கிடைத்த பழமையான இரும்புப் பயன்பாட்டுச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது, தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய இடம்பெயர்வை நாம் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது.
(குறிப்பு: சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் இதுவரை ஈமக்காடுகளில் மட்டுமே அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. கீழடியைப் போல இத்தடங்களில் மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளை அகழ்வாய்வு செய்தால் இதற்கான கூடுதல் சான்றுகள் கிடைக்கக்கூடும்.)
ஸ்டெப்பி மேய்ச்சல் சமூகமும் ‘ஆரியவர்த்தமும்’
இதே காலகட்டத்தில், மத்திய ஆசியாவின் ‘ஸ்டெப்பி’ (Steppe) புல்வெளிப் பிரதேசங்களில் வாழ்ந்த மேய்ச்சல் சமூகத்தினர் கி.மு. 2000–1500 வாக்கில் இடம்பெயரத் தொடங்கினர்.
வேளாண்மை குறித்தோ, குடியிருப்பு வீடுகள் மற்றும் நகர வாழ்க்கை குறித்தோ எந்த அனுபவமும் இல்லாமல், கால்நடைகளுடன் நாடோடிகளாக வந்தவர்கள் (ஆரியர்கள்), யமுனை மற்றும் கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறினர். ஏற்கனவே அங்கிருந்த சிந்துவெளியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்த அவர்கள், மெல்ல மெல்ல அம்மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அப்பகுதிக்கு ‘ஆரியவர்த்தம்’ என்று பெயர் சூட்டிக்கொண்டனர்.
இங்கிருந்தே அவர்கள் தங்களின் சாதியக் கட்டமைப்பையும், நால்வர்ணக் கோட்பாடுகளையும் உருவாக்கி ஆதிக்கத்தை திணிக்க முயன்றனர். ஆனால், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த திராவிடப் பழங்குடிகளும் தமிழர்களும் இந்த ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், தற்சார்புடனும் சுயமரியாதையுடனும் வாழும் மதச்சார்பற்ற அறநெறி வாழ்க்கையைச் சங்க இலக்கியங்களாக வடித்தனர்.
சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வரும் தருவாயில்தான் ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகின்றனர். எனவே, அவர்கள் கூறும் இந்திய வேத நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடைவெளி ஆயிரம் ஆண்டுகள்.
கண்டங்கள் பிரிவும் மனித இடப்பெயர்வும்: அறிவியலின் பார்வை
இங்கே ஒரு முக்கியமான நிலவியல் மற்றும் மானுடவியல் கேள்வியையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்:
“ஒரு காலத்தில் கண்டங்கள் பிரியாமல் (பாஞ்சியா / குமரிக்கண்டக் கோட்பாடு) ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்திருந்த காலத்தில் உருவான பூர்வகுடிகளா தமிழர்கள்?”
அறிவியல் இதற்கான பதிலை மிகத் தெளிவாகக் கூறுகிறது. புவியியல் அடிப்படையில் கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ‘பாஞ்சியா’ (Pangaea) என்ற ஒரே நிலப்பரப்பாக இருந்ததும், பின்னர் அது பிளவுபட்டு ஆப்பிரிக்கா, ஆசியா, அண்டார்டிகா எனக் கண்டங்கள் பிரிந்ததும் சுமார் 15 முதல் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளாகும்.
ஆனால், மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) தோன்றியதே சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். எனவே, கண்டங்கள் பிரிந்தபோது மனிதர்களும் பிரிந்து பரவினார்கள் என்பது அறிவியலுக்கு முரணான கருத்து.
உண்மையில், கண்டங்கள் பிரிந்து பல கோடி ஆண்டுகள் கழித்து, நிலப்பரப்புகள் இன்றைய நிலையை அடைந்த பிறகே, சுமார் 60,000 – 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கடற்கரை ஓரங்கள் மற்றும் நிலவழியாக ஆசியாவிற்கும், இந்தியத் துணைக்கண்டத்திற்கும் நடந்து இடம்பெயர்ந்தார்கள் (Out of Africa Migration). இவ்வாறு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியத் துணைக்கண்டத்தைச் வந்தடைந்த மனிதர்களே இந்த நிலப்பரப்பில் உழைத்து நாகரிகங்களை உருவாக்கிய பூர்வகுடிகள் ஆவர்.
என்னுள் எழுந்த பெருவினாவும் தெளிவும்
இந்த மெய்நிகர் வரலாற்றுப் பயணத்தின் முடிவில் எனக்குள் ஒரு பெருவினா எழுந்தது:
“ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான் தமிழர்கள் என்றால், நாமும் வெளியிலிருந்து வந்தவர்கள்தானே? அப்படியிருக்க, வெளியிலிருந்து வந்த ஆரியர்களை மட்டும் ‘வந்தேறிகள்’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?”
65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகெங்கும் பரவிய ஆதி மனிதனின் வழியில் வந்து, இந்த நிலத்தின் முதன்மை உற்பத்தியாளர்களாகவும் (Producers), உழைப்பால் நாகரிகத்தை உருவாக்கியவர்களாகவும் மாறியவர்களே தமிழர்கள்!
ஆனால், உற்பத்தியிலும் நாகரிக உருவாக்கத்திலும் பங்கெடுக்காமல், பிறப்பால் உயர்வு தாழ்வைக் கற்பித்து, சாதியக் கட்டமைப்பைத் திணித்து ஆதிக்கம் செலுத்த வந்தவர்களுக்கும்—இந்த மண்ணோடு கலந்து உழைத்து நாகரிகம் அமைத்த பூர்வகுடிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிவியல் தெளிவாக விளக்குகிறது.
இந்த மெய்நிகர் உலகப் பயணத்தில் பல கேள்விகளுக்கான விடைகள் எனக்குக் கிடைத்ததால், எனது மெய்நிகர் உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு, உண்மையான சான்றுகளைத் தேடி எனது மெய்யுலகப் பயணத்தைத் தொடங்கினேன்…
மெய்யுலகில் நான் கண்டது என்ன?
(காத்திருங்கள்… தொடரும்)
(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)
- தமிழ்மணி

No comments:
Post a Comment