Friday, 6 November 2026

"உடையிலும் முடியிலும்" – ஏகாதிபத்திய நச்சுப் பண்பாடும், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் "மொட்டை" மனநிலையும்!

"என் உடை என் உரிமை" என்ற குரல் தனிநபர் சுதந்திரத்திற்கான பேச்சாகத் தொடங்கினாலும், அதன் பின்னணியில் இயங்கும் சந்தை அரசியலை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

அடிப்படையில் உடை என்பது என்ன? வெயில், மழை, குளிர், செய்யும் வேலை மற்றும் காலநிலை மாறுபாடுகளிலிருந்து மனித உடலைப் பாதுகாக்கும் ஒரு கவசம். ஆனால், இன்று முதலாளித்துவமும் ஏகாதிபத்திய நச்சுப் பண்பாடும் உடையை வெறும் பாதுகாப்புக் கவசமாகப் பார்க்க விடுவதில்லை; அதை ஒரு "ஃபேஷனாக" (Fashion) மாற்றிவிட்டன. நுகர்வுச் சந்தையின் வலைக்குள் சிக்கி, ‘ஃபேஷன்’ என்ற பெயரில் சீரழியும் சாமானியனை வைத்து முதலாளி தன் கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொள்கிறான்.

அதேநேரத்தில், சீருடை (Uniform) என்று வரும்போது இந்த "என் உடை என் உரிமை" என்ற வாதம் அடங்கிவிடுகிறது. ஏனென்றால், அங்கு ஒரு நிறுவனத்தின் ஒழுங்கு மற்றும் விதிமுறைகள் முதன்மை பெறுகின்றன.

வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் உடையும் முடியும்

உடையையும் தலைமுடியையும் வெறும் தனிநபர் விருப்பங்களாகவோ அல்லது ‘ஃபேஷன்’ உலகத்தின் வித்தைகளாகவோ சுருக்கிப் பார்க்க முடியாது. மனித சமூகத்தின் உற்பத்தி முறைகளின் வரலாற்றை ஊடுருவிப் பார்த்தால், உடை மற்றும் முடி அலங்காரம் என்பவை ஒவ்வொரு சமுதாயத்தின் வர்க்க அமைப்பையும், அதிகாரம் செலுத்தும் முறையையும் பிரதிபலிப்பதாகவே இருந்து வந்துள்ளன:

இனக்குழு சமுதாயம் (Primitive Communism)

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த ஆதி மனிதர்கள், உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் காலநிலையை எதிர்கொள்ளவும் மட்டுமே இலைகளையும் தோல்களையும் உடையாகப் பயன்படுத்தினர். அங்கே சொத்துரிமையோ, வர்க்கமோ, 'உயர்ந்தவன்-தாழ்ந்தவன்' என்ற பாகுபாடோ இல்லாததால், உடையும் முடியும் எளிய இயற்கைத் தேவைகளாகவும், இனக்குழு அடையாளங்களாகவும் மட்டுமே இருந்தன. 

நிலவுடமைச் சமுதாயம் (Feudal Society)

சமுதாயத்தில் நிலமும் உற்பத்திச் சாதனங்களும் மன்னர்கள், பண்ணையார்கள் உள்ளிட்ட ஒருசிலரின் கையில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் வர்க்கங்களாகப் பிளவுபட்டபோதும் உடையும் முடியும் ஆளும் வர்க்கத்தின் அதிகார அடையாளங்களாக மாற்றப்பட்டன.

மன்னர்களும், பண்ணையார்களும், பார்ப்பனர்களும் அணிந்த ஆடம்பர உடைகளும், பார்ப்பனர்களின் பஞ்சகச்சம், உச்சிக் குடுமி, பூணூல் உள்ளிட்ட உடை, முடி அடையாளங்களும் உழைக்கும் மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கும், சாதி-வர்க்க ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்குமான கருவிகளாகவே பயன்பட்டன. உழைக்கும் மக்கள் எளிய உடைகளையும், கசங்கிய தோற்றத்தையுமே சுமக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

முதலாளித்துவ சமுதாயம்

உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாக வைத்துள்ள முதலாளித்துவம், மனிதனின் உடலையும் தோற்றத்தையும் ஒரு மாபெரும் வணிகச் சரக்காக (Commodity) மாற்றியது. மனிதர்களின் தேவைகளுக்காக உற்பத்தியைச் செய்யாமல், சந்தையின் லாபத்திற்காக ‘ஃபேஷன்’ பண்பாட்டைத் திணித்தது. 

புதிய ஜனநாயக மற்றும் சோசலிச சமுதாயம்

எதிர்கால புதிய ஜனநாயக மற்றும் சோசலிச சமுதாயங்களிலோ, உடையும் முடியும் வணிகச் சந்தையின் வெறிக்கோ அல்லது அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கோ பலியாகாமல்; மனிதனின் உழைப்புக்கும், சமத்துவத்திற்கும், கூட்டு வாழ்விற்கும் பொருத்தமான எளிய, அழகான, சுதந்திரமான வடிவத்தைப் பெறும்.

 

தலைமுடியும் முதலாளித்துவ நுகர்வியமும்

வரலாற்றின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்துகொண்டால், உடையைப் போலவேதான் தலைமுடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்! நமது அன்றாட வாழ்விலும், செய்யும் வேலையிலும் இடையூறு ஏற்படுத்தாதவாறு அதை ஒழுங்குபடுத்திக் கொள்வது மட்டுமே அதன் இயற்கை சார் நடைமுறைத் தேவை. ஆனால், முடி அலங்காரத்தையும் (Hair Styling) ஒரு மிகப்பெரிய வணிகச் சந்தையாக மாற்றி, மனிதர்களின் மனங்களில் ‘ஃபேஷன்’ போதையை ஏற்றி வைத்திருக்கிறது இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு.

அமைச்சரின் பேச்சு உணர்த்தும் அதிகார வெறி

இதையெல்லாம் தாண்டி, சமீபத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள், "பள்ளி மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டிக்கொண்டு வராவிட்டால் அவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள்" என்று பேசியிருப்பது கடும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் அளிக்கிறது.

மாணவர்களின் தலைமுடி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதேனும் அறிவியல் பூர்வமான விதியோ, மனித உரிமைச் சட்டமோ இருக்கிறதா? உழைக்கும் வர்க்கக் குழந்தைகளின் தோற்றத்தின் மீது அதிகார வர்க்கம் ஏன் தன் சாதிய-அடக்குமுறை நாட்டாண்மையைச் செலுத்த முயல்கிறது?

செய்யும் வேலைக்கும், வாழும் சூழலுக்கும் ஏற்ப உடையையும் முடியையும் எப்படி வைத்துக்கொள்வது என்பதைச் சம்பந்தப்பட்ட மனிதர்தான் முடிவு செய்ய வேண்டும். அதை விடுத்து, பள்ளிக் குழந்தைகளைச் சகிப்புத்தன்மையற்ற முறையில் மொட்டை அடிக்கச் சொல்வது என்பது அமைச்சரின் குரூர நாட்டாமை மனநிலையையே காட்டுகிறது.

இந்த உலகத்தில் செய்கிற தொழிலுக்கும் வாழுகிற சூழலுக்கும் பொருத்தமற்ற உடை மற்றும் முடி அலங்காரம் என்றால் அது உச்சிக் குடுமியும் பஞ்சகச்சமும்தான். பள்ளி மாணவர்களின் தலையை மழிப்பதற்குப் பதிலாக, வேண்டுமானால் அமைச்சர் அவர்கள் உச்சிக் குடுமிகளை மழிக்கலாம்; பஞ்சகச்சத்தை உருவலாம்!

உடையும் முடியும் மனிதனின் இயற்கை சார் தேவைகள். அவற்றை முதலாளித்துவப் பண்பாட்டு நச்சுக்கும் பலியாக விடாமல், அதேநேரத்தில் அதிகார வர்க்கத்தின் பாசிச மொட்டை மனநிலைக்கும் விட்டுக்கொடுக்காமல் போராடுவதே உண்மையான புதிய ஜனநாயகப் பண்பாடாக இருக்க முடியும்!

- தமிழ்மணி

 

No comments: