உடைக்கு எது அடிப்படை?
மனிதன் உடை அணியத்
தொடங்கியதன் அடிப்படை நோக்கம் என்ன? இயற்கையின் பாதிப்புகளிலிருந்து தனது உடலைப்
பாதுகாத்துக் கொள்வது; வாழும் தட்பவெப்பநிலைக்கும், ஈடுபடும் உழைப்புக்கும் ஏற்ப உடலைப்
பாதுகாத்துக் கொள்வது. இதுதான் உடையின் அடிப்படைத் தேவை. மனிதனின் வாழ்வியல்
தேவைகளிலிருந்தும் உற்பத்தி முறைகளிலிருந்தும்தான் உடையின் தன்மையும் வடிவமும்
தீர்மானிக்கப்பட வேண்டும்.
அடிக்கிற
வெயிலுக்கும் கடுமையான உடல் உழைப்புக்கும் இடையே பாடுபடும் பலர் மேலாடையின்றி வேலை செய்வதைக் காண முடிகிறது. வெப்பமான சூழலில்
காற்றோட்டமும் உடலின் வெப்பத்தை வெளியேற்றுவதும் முக்கியம். அதேவேளையில், உடல்
உழைப்பு அதிகம் கோராத அலுவலகப் பணிகளுக்கு இலகுவான மேலாடை போதுமானதாக இருக்கலாம்.
விவசாயம், கட்டுமானம், தொழிற்சாலை என ஒவ்வொரு பணிச்சூழலுக்கும் ஏற்றவாறு உடை அமைய
வேண்டும். உடல் பாதுகாப்புக்குத் தேவையான இடங்களில் பாதுகாப்பு ஆடைகளும் அவசியம்.
கோட்டு-சூட்டும்
காலனிய அடிமை மனநிலையும்!
ஆனால், நம்மிடையே
உள்ள சில படித்த மேதாவிகளும் தொழில்முனைவோர்களும் ஐரோப்பியர்களைப் போலக்
கோட்டு-சூட்டு அணிவதையே நாகரிகத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வெப்பமண்டலச்
சூழலில் வாழும் நாம், நமது தட்பவெப்பநிலைக்கும் உழைப்புக்கும் ஏற்ற உடைகளைத்
தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, மேலைநாட்டுப் பண்பாட்டைப் பின்பற்றுவதில் பெருமை
கொள்கிறோம். குறிப்பாக, மேற்கத்திய உடையை உயர்ந்த நாகரிகமாகவும், நமது எளிய
உடைகளைத் தாழ்ந்தவையாகவும் பார்க்கும் மனநிலை காலனியப் பண்பாட்டு ஆதிக்கத்தின்
தொடர்ச்சியன்றி வேறென்ன?
கோட்டு-சூட்டு என்பது
ஐரோப்பிய ஆடை வரலாற்றில் உருவாகி வளர்ந்த உடை. அதன் வளர்ச்சியில் குளிர்காலத்
தேவைகள் மட்டுமல்லாமல் சமூகத் தகுதி, தொழில்சார் அடையாளம், அரசியல் அதிகாரம்
போன்றவையும் பங்கு வகித்துள்ளன. ஆனால், அந்த உடையை இந்தியா போன்ற வெப்பமண்டல
நாடுகளில் அணிவதற்குப் பின்னால் இருக்கும் காலனிய மனநிலையைக் கேள்விக்குள்ளாக்க
வேண்டியிருக்கிறது. ஆங்கிலேயர்களைப் போல உடையணிந்தால் நாமும் உயர்ந்தவர்களாகிவிடுவோம்
என்ற அடிமை மனப்பான்மைதான் இங்கு வெளிப்படுகிறது.
கழுத்தை இறுக்கிக்
கட்டிக்கொள்ளும் அந்த 'டை'யின் வரலாறும் ஐரோப்பிய ஆடைப் பண்பாட்டோடு தொடர்புடையது.
குரோஷிய வீரர்களின் கழுத்துத் துணி மரபிலிருந்து ஐரோப்பிய சமூகத்தில் பரவி,
பின்னர் முறையான ஆடையின் அடையாளமாக அது மாறியது. இன்று வெப்பத்தில் வியர்த்துக்
கொண்டிருந்தாலும் கழுத்தில் டை கட்டிக்கொண்டு அலுவலகத்தில் அமர்வதை நாகரிகத்தின்
உச்சம் என்கிறார்கள்.
நீதிமன்றங்களில்
வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அணியும் கோட்டு, கழுத்துப்பட்டை, அங்கிகள்
ஆகியவற்றின் பயன்பாட்டையும் நமது தட்பவெப்பநிலை, தொழில்முறைத் தேவை, நடைமுறைப்
பயன் ஆகியவற்றின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பதற்கு உடலை
வாட்டும் ஆடைகள் அவசியமா? தொழில்முறை அடையாளத்தைக் காப்பதற்கு இலகுவான உடைகளே
போதாதா?
அதேபோல்,
பாதிரியார்களின் நீண்ட அங்கிகளும் மத அடையாளத்தோடு மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஆடை
வரலாற்றுடனும் தொடர்புடையவை. ஒரு காலத்தில் நிலவிய காலநிலை, சமூகச் சூழல், மதப்
பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான உடைகளை, அவற்றின் பயன்பாட்டையும்
தேவையையும் மறுபரிசீலனை செய்யாமல் இன்றும் தொடர வேண்டிய கட்டாயம் என்ன?
ஐரோப்பியர்களின்
கோடைக்கால ஆடைகளும் நமது தட்பவெப்ப சூழலும்!
மறுபுறம், ஐரோப்பிய
நாடுகளில் குறிப்பாக குளிர் பிரதேச நாடுகளில் கோடைக்காலத்தில் குட்டைப் பாவாடை,
இலகுவான ஆடைகள், குறைந்த உடல் மூடல் கொண்ட ஆடைகள் ஆகியவற்றை அணிவதைக் காண்கிறோம்.
குளிரான காலநிலையிலிருந்து கோடைக்காலத்திற்கு மாறும்போது உடல் வெப்பநிலைக்கு ஏற்ப
ஆடைகளும் மாறுகின்றன. சூரிய ஒளி உடலில் படுவது வைட்டமின் D உற்பத்திக்கு உதவுகிறது என்பதும் உண்மை.
ஆனால், அவர்கள் குறைவான ஆடைகளை அணிவது முழுக்க முழுக்க வைட்டமின் D தேவைக்காக உருவானது என்று கூற முடியாது.
தட்பவெப்பநிலை, வசதி, சமூகப் பழக்கவழக்கம் ஆகியவை இதில் பங்கு வகிக்கின்றன.
இங்குள்ள முக்கியமான
செய்தி என்னவென்றால், உடை என்பது வாழும் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்க
வேண்டிய ஒன்று என்பதுதான்.
இதைப்
புரிந்துகொள்ளாமல், அபரிமிதமான சூரிய ஒளி கிடைக்கும் நமது மண்ணில், வேறொரு
நிலப்பரப்பில் உருவான உடை முறைகளை அப்படியே பின்பற்றுவது பொருத்தமானதா? இது
பூனையைப் பார்த்துச் சூடு போட்டுக் கொள்ளும் கதையாகத்தானே இருக்கிறது! உடையின்
தோற்றுவாயில் இருந்த இயற்கைத் தேவையை மறந்துவிட்டு, அதன் பின்னர் உருவான நாகரிக
அடையாளத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பது அறிவார்ந்த அணுகுமுறையாகாது.
அரபு
உடைகளும் மத அடையாளங்களும்!
இதேபோன்றுதான் அரபு
நாடுகளின் ஆடை முறைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். பாலைவனச் சூழலில் கடுமையான
வெயில், மணல், புழுதிப் புயல் போன்றவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில்
தளர்வான நீண்ட ஆடைகள், தலைத்துணிகள் உள்ளிட்டவை பயன்பட்டுள்ளன. பெண்களின் நீண்ட
மேலாடைகளுக்கும் தலை மூடல்களுக்கும் காலநிலைக் காரணங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவை அனைத்தையும் ஒரே
காரணத்தைக் கொண்டு விளக்கவிட முடியாது. ஆனால், அந்தந்த
நிலப்பரப்பின் வாழ்வியல் சூழலோடு தொடர்புடைய ஆடைகள் பின்னர் மத அடையாளங்களாகவும்
பண்பாட்டு அடையாளங்களாகவும் மாறியிருக்கின்றன.
பாலைவனப் புழுதிப்
புயல் இல்லாத இந்தியா போன்ற நாடுகளிலும் இத்தகைய உடைகள் மத அடையாளங்களாகப்
பின்பற்றப்படுகின்றன. அதேபோல், ஐரோப்பிய கோட்டு-சூட்டும் இந்தியாவில் சமூகத் தகுதி,
நாகரிக அடையாளம் போன்றவற்றைப் பெற்றிருக்கிறது.
இவற்றின்
தோற்றுவாயில் இருந்த காரணங்கள் காலப்போக்கில் மாறியிருக்கலாம். ஆனால், பண்பாடாக
மாறிவிட்டதால் அதன் தோற்றுவாயில் இருந்த இயற்கைத் தேவையும் வரலாறும்
மறைந்துவிடுவதில்லை. ஒரு நடைமுறை பண்பாடாக மாறிவிட்டது என்பதற்காகவே அது
என்றென்றும் தொடரப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
தமிழர்களுக்கென்று
பாரம்பரிய உடை என்று ஒன்று இருக்கிறதா?
சமீபத்தில்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு அலுவலகங்களில் வாரத்தில்
ஒருநாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய வேட்டி, சட்டை, சேலை அணிந்து வருவதற்கான 'மரபு ஆடை தினம்' அறிமுகப்படுத்தப்படும்
என்று அறிவித்துள்ளார். இதற்குக் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை
ஊக்குவிப்பதும் தமிழர் மரபுக்கு அங்கீகாரம் அளிப்பதும் காரணங்களாகக்
கூறப்பட்டுள்ளன.
இங்கே ஒரு
அடிப்படையான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. தமிழர்களுக்கென்று ஒரு
குறிப்பிட்ட பாரம்பரிய உடை என்று எதையாவது வரையறுக்க முடியுமா?
மனிதன் தொடக்க
காலத்தில் இயற்கையில் கிடைத்த இலை, தழை, மரப்பட்டை, விலங்குகளின் தோல் போன்றவற்றை
உடல் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தினான். பின்னர் நார் பிரித்தல், நூல் நூற்றல்,
நெசவு செய்தல் போன்ற உற்பத்தித் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன. பருத்தி, பட்டு போன்ற
துணிகள் பயன்பாட்டுக்கு வந்தன. தையல் தொழில்நுட்பமும் வளர்ந்தது. உடையின் வடிவமும்
அளவும் பயன்பாடும் தொடர்ந்து மாறின.
சங்க
இலக்கியங்களிலேயே பருத்தி ஆடைகள், பட்டாடைகள், இலை ஆடைகள் போன்ற பலவகையான உடைகள்
பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களும்,
வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்ட மக்களும் ஒரே மாதிரியான உடைகளை அணியவில்லை. சமூகப்
பொருளாதார நிலைக்கும் ஏற்ப ஆடைகளில் வேறுபாடுகள் இருந்தன.
அப்படியிருக்க,
வேட்டி, சட்டை, சேலை ஆகியவற்றை மட்டுமே தமிழர்களின் மாறாத பாரம்பரிய உடை என்று
எப்படிச் சொல்ல முடியும்? வேட்டி, சேலை ஆகியவை நமது ஆடை வரலாற்றில் முக்கியமான
இடத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால், அவைதான் தமிழர்களின் ஒரே இயற்கையான அல்லது மாற்ற
முடியாத பாரம்பரிய உடை என்று வரையறுக்க முடியாது.
இன்று நாம் அணியும்
சட்டை, பேண்ட், சுடிதார், சேலை, வேட்டி என எல்லா உடைகளுமே பல்வேறு காலகட்டங்களில்
ஏற்பட்ட உற்பத்தித் தொழில்நுட்ப வளர்ச்சி, துணி உற்பத்தி, தையல் முறை, சமூகப்
பயன்பாடு ஆகியவற்றின் விளைவுகள்தான்.
எனவே, தமிழர்களின்
உடைக்கு வரலாறு இருக்கிறது; ஆனால் மாற்றமில்லாத
தமிழர் பாரம்பரிய உடை என்று ஒன்றை நிர்ணயிக்க முடியாது.
பாரம்பரியம்
என்ற பெயரில் வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கலாமா?
ஒரு காலத்தில் நமது
முன்னோர்கள் அணிந்த ஆடைகளை இன்று நாம் ஏன் அப்படியே அணிய வேண்டும்? அவர்கள்
வாழ்ந்த காலத்தின் உற்பத்திக் கருவிகள் வேறு; உற்பத்தி உறவுகள் வேறு; தட்பவெப்பச்
சூழலும் உழைக்கும் முறையும், வாழ்வியல் தேவைகளும்
வேறு. இன்று அவை அனைத்தும் மாறிவிட்டன. நெசவுத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.
துணி உற்பத்தி முறைகள் மாறியிருக்கின்றன. மனிதனின் தொழில்கள் மாறியிருக்கின்றன.
அலுவலகப் பணிகள், தொழிற்சாலைப் பணிகள், போக்குவரத்து, நகர்ப்புற வாழ்க்கை என வாழ்வியல்
முறைகளே மாறிவிட்டன.
அப்படியிருக்க,
பழங்காலத்தில் அணிந்த ஆடையைப் பாரம்பரியம் என்ற பெயரில் இன்றைய மனிதன் மீண்டும்
அணிய வேண்டும் என்று வலியுறுத்துவதில் என்ன அறிவியல் இருக்கிறது?
பாரம்பரியம் என்பது
வரலாற்றில் நிகழ்ந்த ஒரு தொடர்ச்சிதான்; அது மாற்றமில்லாத இயற்கை விதி அல்ல.
மனிதன் வாழும் சூழல் மாறும்போது அவனுடைய உடையும் மாறுகிறது. உற்பத்திக் கருவிகள்
வளரும்போது துணி உற்பத்தி
முறையும் மாறுகிறது. உற்பத்தி உறவுகள்
மாறும்போது உடையின் பயன்பாடும் மாறுகிறது.
பழங்காலத்தில் மனிதன்
பயன்படுத்திய எல்லாவற்றையும் இன்று நாம் பயன்படுத்துவதில்லை. போக்குவரத்துக்கு
மாட்டு வண்டி இருந்தது என்பதற்காக மோட்டார் வாகனங்களைத் தவிர்க்கிறோமா? தகவல்
தொடர்புக்கு ஓலைச்சுவடி இருந்தது என்பதற்காகக் கணினியைப் புறக்கணிக்கிறோமா?
அப்படியிருக்க, உடையில் மட்டும் பழைய மரபை ஏன் கட்டாயமாகத் தூக்கிப் பிடிக்க
வேண்டும்?
பாரம்பரியத்தைப்
பாதுகாப்பது என்ற பெயரில் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மனிதன்
பயன்படுத்திய உடையை இன்றும் கட்டாயப்படுத்துவது, சமூகத்தை வரலாற்றில் பின்னோக்கி
இழுக்கும் சிறுபிள்ளைத்தனமல்லவா?
தோல்சீலைப்
போராட்டம் சொல்லும் சமூகப் பாடம்!
உடைக்கும் சமூக
அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள தென்னிந்தியாவின் தோல்சீலைப்
போராட்ட வரலாற்றை நினைவுகூர வேண்டும்.
திருவிதாங்கூரில்
நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியும் உரிமைக்காக நடத்திய போராட்டம் நமது
வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்
மேலாடை அணிவதற்குக்கூடச் சாதிய அதிகாரம் தடையாக இருந்தது. மேலாடை அணிவது
உயர்சாதியினருக்குரிய உரிமை என்ற சமூகக் கட்டுப்பாட்டை எதிர்த்து அவர்கள் போராட
வேண்டியிருந்தது.
1820-களில் தொடங்கி
1859-ஆம் ஆண்டின் முக்கியமான மோதல்கள் மற்றும் அரசுப் பிரகடனங்கள் வரை நீண்ட
இந்தப் போராட்டம், உடை என்பது வெறும் உடல் பாதுகாப்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல;
அது சாதிய அதிகாரத்தையும் சமூகத் தகுதியையும் தீர்மானிக்கும் கருவியாகவும்
பயன்படுத்தப்பட்டது என்பதை உணர்த்துகிறது.
ஒரு பெண்ணின் உடலை
எவ்வளவு மூட வேண்டும் என்பதைச் சாதி தீர்மானித்த காலம் நம் வரலாற்றில் உண்டு.
எனவே, உடையின் பெயரால் உருவாக்கப்படும் சாதி, மத, பாலின ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும்
நிராகரிக்கப்பட வேண்டும்.
பெண்களின்
உடற்கூற்றியல், மார்பகப் பாதுகாப்பு, பணிச்சூழல், உடல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு
ஏற்ற ஆடைகள் தேவைப்படலாம். ஆனால், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பதைச்
சாதியோ, மதமோ, ஆணாதிக்கமோ தீர்மானிக்க முடியாது. இயற்கையான உடல் பாதுகாப்புத்
தேவைகளையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
வண்ண
வண்ண ஆடைகளும் முதலாளித்துவ நுகர்வியமும்!
உடைகளில்
தங்களுக்குப் பிடித்த வண்ணங்களைத் தேடி அலையாதவர் எவரும் இருக்க முடியாது. ஆனால்,
வண்ணங்களின் மீதான இந்தத் தேடலுக்குப் பின்னால் இருக்கும் வணிக நோக்கத்தையும் நாம்
கவனிக்க வேண்டும். அடர் வண்ணங்கள் அழுக்கை ஓரளவு மறைக்க உதவலாம். சில வண்ணங்கள்
வெயிலையும் வெப்பத்தையும் உறிஞ்சும் தன்மையில் வேறுபடலாம். ஆனால், ஒரே
பயன்பாட்டைக் கொண்ட ஒரு சட்டையைப் பத்து வண்ணங்களில் தயாரித்து விற்பதால் மனிதனின்
அடிப்படை உடைத் தேவை பத்து மடங்கு அதிகரித்துவிடுகிறதா?
இங்குதான்
முதலாளித்துவத்தின் லாப நோக்கம் செயல்படுகிறது.
மனிதனுக்குத் தேவையான
பொருளை உற்பத்தி செய்வதோடு சந்தை நின்றுவிடுவதில்லை. ஏற்கெனவே இருக்கும் பொருளைப்
பயன்படுத்திக்கொண்டிருக்கும் மனிதனிடமே, இன்னொரு புதிய பொருளை வாங்குவதற்கான
விருப்பத்தையும் தேவையையும் உருவாக்குகிறது.
கடந்த ஆண்டு வாங்கிய
ஆடை இந்த ஆண்டு பழைய ஃபேஷன் என்றும், இந்த ஆண்டின் புதிய கலர் டிரெண்ட்தான்
நாகரிகம் என்றும் விளம்பரப்படுத்துகிறது. புதிய டிசைன், புதிய கலெக்ஷன், புதிய
ஃபேஷன் என்று ஒவ்வொரு பருவத்திலும் புதிய விற்பனைச் சந்தையை உருவாக்குகிறது.
இதற்குத்
திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், பிரபலங்கள், சமூக ஊடகங்கள், விளம்பரங்கள் எனப்
பலவற்றையும் பயன்படுத்துகிறது. ஒரு நடிகர் அணியும் ஆடை, ஒரு பிரபலம் பயன்படுத்தும்
வண்ணம், ஒரு விளம்பரத்தில் காட்டப்படும் புதிய வடிவம் ஆகியவை மக்களிடையே புதிய
நுகர்வு விருப்பங்களை உருவாக்குகின்றன. ஏற்கெனவே பயன்பாட்டுக்கு உகந்த ஆடை
இருந்தாலும் அதை அணிவது பழைய நாகரிகம் என்ற எண்ணம் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.
இதுதான் தேவையை
நிறைவு செய்வதிலிருந்து தேவையை உருவாக்கும் முதலாளித்துவச் சந்தையின் உத்தி.
அதிலும் சேலையின்
வண்ணத்திற்கு ஏற்ப இந்த 'மேட்சிங் பிளவுஸ்' தேடுகின்ற வேலையைப் பாருங்கள்! ஒரு
சேலைக்குப் பல வண்ணங்களில் பிளவுஸ், ஒவ்வொரு விழாவுக்கும் தனி ஆடை, ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும் தனி அலங்காரம் என்று முடிவில்லாத தேடல். இவை அனைத்தும் மனிதனின்
அடிப்படைத் தேவையிலிருந்து தோன்றியவையா? அல்லது சந்தையின் விற்பனை உத்திகளால்
வளர்க்கப்பட்ட நுகர்வுப் பழக்கங்களா?
ஃபேஷனின் பின்னால்
மறைந்திருக்கும் சுற்றுச்சூழல் அழிவு!
ஒருபுறம் வண்ண வண்ண
ஆடைகளை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்; மறுபுறம் அவற்றை உற்பத்தி
செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நீர், சாயங்கள், வேதிப்பொருட்கள் ஆகியவை இயற்கையை
மாசுபடுத்துகின்றன. சாயக் கழிவுகள் ஆறுகளில் பெருக்கெடுக்கின்றன. தேவைக்கு அதிகமான
துணி உற்பத்தி, விற்பனையாகாத ஆடைகளின் குவியல், பயன்படுத்திய சிறிது காலத்திலேயே
தூக்கி எறியப்படும் துணிகள் எனச் சுற்றுச்சூழலின் சுமை அதிகரிக்கிறது.
ஐரோப்பிய
சுற்றுச்சூழல் முகமையின் மதிப்பீடுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் ஐரோப்பிய
ஒன்றியத்தின் நுகர்வுப் பாதிப்புகளில் ஜவுளி நுகர்வு நீர் மற்றும் நிலப்
பயன்பாட்டில் மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும்,
மூலப்பொருள் பயன்பாடு மற்றும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் ஐந்தாவது இடத்தில்
இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணி உற்பத்திக்கான
நிலம், நீர், ஆற்றல், வேதிப்பொருட்கள், சாயங்கள், போக்குவரத்து, கழிவு மேலாண்மை என
ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.
இங்கே ஒரு முக்கியமான
பொருளாதார முரண்பாடு இருக்கிறது. மனிதனின் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட வேண்டிய
பொருள், முதலாளியின் லாபத்திற்காகத் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த
உற்பத்திப் பொருட்களை விற்பதற்காக மனிதனிடம் செயற்கையான தேவைகள் உருவாக்கப்படுகின்றன.
உற்பத்தியின் நோக்கம் மனிதத் தேவையை நிறைவு செய்வதாக இல்லாமல், முதலாளித்துவ
லாபத்தைப் பெருக்குவதாக மாறிவிடுகிறது.
இதன் விளைவாக
நுகர்வோர் பணத்தை இழக்கிறார்; இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன; சுற்றுச்சூழல்
பாதிக்கப்படுகிறது. இதுதான் ஃபேஷன் தொழிலின் பின்னால் இயங்கும் முதலாளித்துவ
நுகர்வியத்தின் முகம்.
உழைக்கும்
மனிதனின் வெற்றுடம்பும் புரோகிதரின் புனித வெற்றுடம்பும்!
ஒரு விவசாயி
அழுக்குச் சட்டையோடு பொது இடத்திற்கு வந்தால் நாம் அவரை ஏளனமாகப் பார்க்கிறோம்.
அதுவும் உழைத்துக் களைத்துப் போய் மேலாடையின்றி வந்துவிட்டால் சொல்லவே
வேண்டியதில்லை.
ஆனால், பார்ப்பனப்
புரோகிதர்கள் வெற்றுடம்போடு பொது இடங்களில் உலா வரும்போதும், கோவில்களில்
மேலாடையின்றி சடங்குகளைச் செய்யும்போதும், அவர்கள் தரும் பிரசாதத்தைப்
பெறும்போதும் அந்த வெற்றுடம்பை பக்தி எனும் மயக்கம் புனிதமாக்கிவிடுகிறது.
உழைக்கும் மனிதனின்
உடல் இழிவாகவும், மத அதிகாரம் கொண்டவரின் அதே வெற்றுடம்பு புனிதமாகவும்
பார்க்கப்படும் இந்த இரட்டை அளவுகோலை என்னவென்று சொல்வது?
இங்கே விமர்சிக்கப்பட
வேண்டியது ஒருவரின் வெற்றுடம்பு அல்ல; ஒரே சமூகத்தில் உடலை மதிப்பிடுவதற்குப்
பயன்படுத்தப்படும் சாதி, வர்க்க, மத அதிகாரத்தின் இரட்டை அளவுகோல்தான்.
நிலவுடைமைப் பண்பாடும் புரோகித ஆதிக்கமும் இன்னமும் இப்படித்தான் எடுப்பாக
நடைபோடுகின்றன.
உடை தனிமனித
விருப்பமா, சமூகப் பொறுப்பா?
தனிமனித விருப்பம்
என்ற பெயரில் தேவையற்ற நுகர்வையும் சுற்றுச்சூழல் அழிவையும் நியாயப்படுத்த
முடியாது. உடை என்பது அடிப்படையில் மனிதனின் வாழ்வியல் தேவையை நிறைவு செய்ய
வேண்டிய பொருள். அந்தத் தேவையைத் தாண்டி உருவாக்கப்படும் ஃபேஷன், சமூகத் தகுதி, சாதி அடையாளம், மத அடையாளம், காலனிய
மோகம் ஆகியவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும்.
உடையைத்
தீர்மானிக்க வேண்டியது எது?
இங்கே நாம்
புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை உண்மை ஒன்றுதான்.
உடையைத் தீர்மானிக்க
வேண்டியது பாரம்பரியமோ, மதமோ, சாதியோ, காலனிய மோகமோ, ஃபேஷனோ, சமூகத் தகுதியோ
அல்ல. மனிதன் வாழும் தட்பவெப்பநிலை, அவன் மேற்கொள்ளும் உழைப்பின் தன்மை,
உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள், உடல் பாதுகாப்பு மற்றும்
வாழ்வியல் தேவைகள் ஆகியவையே உடையைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணிகளாக இருக்க
வேண்டும்.
ஒரு உடை நமது
பாரம்பரியம் என்பதற்காகவே அதைத் தொடர்ந்து அணிய வேண்டியதில்லை. ஒரு உடை மத
அடையாளம் என்பதற்காகவே அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. மேற்கத்திய உடை என்பதற்காக
உயர்வாகக் கருதுவதும், உள்ளூர் உடை என்பதற்காகக் கண்மூடித்தனமாகப் பெருமை
பேசுவதும் இரண்டுமே அடையாள அரசியலின் வெளிப்பாடுகள்தான்.
மனிதனின் வாழ்வியல்
தேவைக்கு உகந்ததாக இல்லாத எந்தப் பாரம்பரியத்தையும் மாற்றியாக வேண்டும். எந்தப்
புதிய உடை வடிவம் தோன்றினாலும் அதன் பயன், உற்பத்திச் செலவு, சுற்றுச்சூழல்
தாக்கம், சமூக விளைவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதை மதிப்பிட வேண்டும்.
நாம் வாழும் மண்ணின்
தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடை, நாம் மேற்கொள்ளும் உழைப்புக்கு ஏற்ற உடை, நமது
உற்பத்தி முறைகளுக்கு ஏற்ற உடை, உடலுக்குப் பாதுகாப்பான உடை, இயற்கைக்கு அதிகச்
சுமையை ஏற்படுத்தாத உடை — இதுவே நமக்குத் தேவையான உடை முறையாக இருக்க வேண்டும்.
உடை என்பது மனிதனின்
வாழ்வியல் தேவைக்கானது; மனிதன் உடையின் பெயரால் சாதி, மதம், பண்பாடு, காலனிய
அடிமைத்தனம், முதலாளித்துவ நுகர்வியம் ஆகியவற்றைச் சுமந்து திரிய வேண்டியதில்லை!
மனிதனைப் பாதுகாக்க
வேண்டிய உடை, மனிதனை அடிமைப்படுத்தும் அடையாளமாக மாறிவிடக் கூடாது!
ஊரான்
தமிழ்மணி
.jpeg)
No comments:
Post a Comment