Showing posts with label டீசல். Show all posts
Showing posts with label டீசல். Show all posts

Monday, 16 March 2015

அரை டிரவுசர்களால் ‘லோல்படும்’ இந்தியா! - 2

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலோ போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

முந்தைய தொடர்ச்சி... 

28. வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் நூறு நாட்களில் இந்தியாவுக்கு மீட்பதில் அவசரப்பட முடியாது என பல்ட்டி – ஙொப்பன் குதிருக்குள் இல்லையாம்!

29. ஆதார் அட்டை அவசரம் – ஆள்காட்டி வேலையை சுலபமாக்க.

30. ரேசன் மான்யம் இரத்து – “அம்மா தாயே! கஞ்சிக்கு வந்திருக்கேம்மா!” என உடைந்த ஓட்டை எடுத்துக் கொண்டு போ. பழையதும் புளித்ததும் தாராளமாய் கிடைக்கும்.

31. சமையல் எரிவாயு மான்யம் – மான்யமும் தானமும் உனக்கில்லையப்பா. மனுவைக் கேள். யாருக்கு என்பதை அவன் சொல்லுவான்.

32. மளிகைக் கடைகளில் ஐந்து கிலோ எரி வாயு – அப்பதானே அதானிகள் கொழிக்க முடியும்.

33. பெட்ரோல் - டீசல் மான்யம் வெட்டு: காசு இருந்தால் வண்டி ஓட்டு. இல்லை என்றால் காயலாங்கடையைப் பாரு.

34. மண் எண்ணெய் வெட்டு – மண் எண்ணெய் இருந்தால் என்ன; இல்லாவிட்டால் என்ன? பஜனை செய்ய பூஜை விளக்கு எண்ணெய் இருந்தால் போதுமே! அவாள் வீட்டில் எப்பொழுதும் வெளிச்சம்தானே!

35. நூறு நாள் வேலைத் திட்டம் முடக்கம் – அம்மா இலவசமாகவே படி அளக்கும் போது இத்தாலிகாரிக்கு இங்கே என்ன வேலை!

36. ‘கிளீன் இந்தியா' – மடிப்பு கலையாத 10 லட்ச ரூபாய் கோட்டு மட்டும்தான கிளீனாகத் தெரியுது. மத்தபடி கூவம் நாத்தம் கோயம்புத்தூர் போனாலும் நம்ம கூடவே வருது.

37. ‘மேக் இன் இந்தியா' – மாமா வேலையின் மறுபெயரோ!

38. தொழில் நடத்துவது, சேவை செய்வது அரசின் வேலை அல்ல; நிர்வாகம் செய்வது மட்டுமே (குட் கவர்னன்ஸ் - good governance) அரசின் வேலையாக இருக்க வேண்டும் - உச்சிக் குடுமிகளின் உரத்த கூப்பாடு.

39. ரயில்வே துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வெளிநாட்டு தனியார் முதலீடு – அவாளுக்கு ஆர்டினரி கிளாஸ் அலுத்துப் போச்சாம். எ.சி கிளாஸ் இல்லாட்டி வேர்த்துக் கொட்டுதாம்!

40. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 26% லிருந்து 49% மாக அனுமதி – அமெரிக்கா போன அம்பிகள் கையில் டாலர்கள் குவிந்திருக்காம்!

41. கெயில் (GAIL), பெல் (BHEL) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை – எதுக்கடா ஒங்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு? ஆப்பு வெச்சுட்டோமில்ல!

42. எச்.எம்.டி. (HMT) நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று பொதுத்துறை ஆலைகள் உட்பட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை மூடப்படும். இதுதவிர ஏர் இந்தியா, எம்.டி.என்.எல். (MTNL) உட்பட 65 பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளதால் அவைகளுக்கும் விரைவில் மூடுவிழா நடத்தப்படும் – எதுக்கடா ஒங்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு? ஆப்பு வெச்சுட்டோமில்ல!

43. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் – பக்தியினால் வேலை செய்பவனுக்கும், தேவடியாள் மகனுக்கும், குலவழியாக தொழில் செய்பவனுக்கும் எதற்கு சட்ட பாதுகாப்பு? (மனு: 8-415).
44. தொழிற்சாலைகளில் ஆய்வு தேவையில்லை – ஆன்லைனே போதும்: ஆலை விபத்துகளில் செத்துப் போனவர்களை கணக்கெடுக்க மட்டும் நேரில் வந்தால் போதும்!

45. ஒப்பந்த மற்றும் பயிற்சிப் பணியாளர்களை வரைமுறையின்றி அமர்த்திக் கொள்ளலாம் – கடந்த முப்பது ஆண்டுகளாக டி.வி.எசும், சிம்சனும் செய்வதைத்தான் தற்போது எல்லோருக்குமானதாக விரிவு படுத்துகிறோம்!

46. இ.எஸ்.ஐ (ESI) மருத்துவக் கல்லூரிகள் மூடல் – சூத்திரன் மேலோருக்கு சேவை செய்ய வேண்டும் என விதி இருக்கும் போது சூத்திரனுக்கு எதற்கு மருத்துவச் சேவை?

47. திட்டக் குழு கலைப்பு – நிதி ஆயுக் உருவாக்கம்: குரங்குக் கையில் ஆப்பம்!

48. சுகாதாரத்திற்கு 6000 கோடி ரூபாய் குறைப்பு – இங்கே குறைத்தால்தானே அவர்கள் (தனியார் மருத்துவமனைகள்) கொழுக்க முடியும்.

49. அதானிக்கு கடன் கொடுக்க நான்கு வங்கிகளுக்கு அரசு உத்தரவு – ஆட்சிக்கட்டிலை பெற்றதற்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா!

50. கார்பரேட் நிறுவனங்களுக்கு 2.70 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை. இதுவும் நன்றிக் கடனுக்காகத்தான்!

51. விவசாயக் கடனுக்கு வட்டி அதிகரிப்பு – விவசாயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இதுதானே வழி.

52. நிலம் கையகப்படுத்தும் சட்டம்: நிலத்துக்காரன் அனுமதி தேவையில்லை. ”உழுதுண்டு வாழவாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்றான் ஐயன் வள்ளுவன். 

“பயிரிடுதல் இம்சையான தொழில், கீழான தொழில், சிலர் வேண்டுமானால் பயிரிடுதல் சிறந்ததென்று சொல்லலாம், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூழியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுவதால் பயிர்த் தொழிலை பெரியோர்கள் (பார்ப்னர்கள்தானே அன்றைய பெரியோர்கள்) நிந்திப்பதால் பிராமணர்கள் இத்தொழிலை ஒருபோதும் செய்யக்கூடாது; போஜனத்துக்கு வேறு வழி இல்லை என்றால்தான் பிராமணர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடலாம். அதுவும் அந்நியனைக் கொண்டுதான் செய்ய வேண்டும். நேரடியாக பார்ப்பனர்கள் பயிர்த் தொழிலில் ஈடுபடக்கூடாது” என்றான் மற்றொரு அய்யன். (மனு: 10-83, 84). 

அதனால்தானோ என்னவோ “கண்டதுண்டா! கண்டதுண்டா! ஏர் ஓட்டும் பார்ப்பானைக் கண்டதுண்டா? களை பறிக்கும் பாப்பாத்தியைக் கண்டதுண்டா!” என அன்று பெரியார் தொண்டர்கள் முழங்கினார்களோ! உன் தொழிலையே மதிக்காதவன் உன்னையா மதிக்கப் போறான்!

53. கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்குவது – பாமரனின் பானைகளை உடைக்காமல் விடமாட்டான் போலிருக்கே!

தொடரும்......

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

Tuesday, 28 October 2014

விலைவாசி உயர்வும் வெண்டைய்க்காயும்!



பதிவெழுதி ஒரு மாதகாலத்திற்கு மேல் ஆகிவிட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் தட்ப வெட்ப நிலைகளில், அரசியல் தளங்களில், ஆட்சியாளர்களின் கொள்கைகளில், சமூக நடப்புகளில் இமயம் முதல் குமரி வரை பல்வேறு பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. மேற்கண்ட மாற்றங்கள் குறித்து அன்றாடம் ஒரு பதிவு எழுதி இருந்தால்கூட குறைந்தது ஒரு முப்பது பதிவுகளாவது எழுதி இருக்க முடியும். என்ன செய்ய! கணினிக் கோளாறு என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.

கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால்  கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சேதாரம் அதைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணிகளைப் போல கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் போது முடுக்கிவிடப்பட்டதா என்கிற கேள்வி என்னுள் மட்டுமள்ள காஷ்மீரத்தின் சேதாரத்தை உற்று நோக்கியவர்கள் அனைவருக்குள்ளும் எழுந்திருக்கும் என்றே கருதுகிறேன். காஷ்மீர் சேதாரத்திற்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்க முனைந்த பல்கலைக்கழக பேராசியர்கள் மீது பீகாரில் சங்பரிவார ‘தேசபக்தர்கள்’கள் தொடுத்த தாக்குதலின் போது இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது மட்டுமல்ல ‘பாரதத்தின்’ ‘சகோரத்துவ’ லட்சணமும் பளிச்சென வெளிப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தும் செல்வந்தன் வெளியே வரும் போது வாசலில் தட்டேந்தும் பிச்சைக்காரர்களின் தட்டில் வீசப்படும் சில்லரைகள் போலத்தான் சியாச்சின் சென்று திரும்பிய குஜராத்தின் முன்னாள் கோமகனும் பாரதத்தின் இந்நாள் பிதாமகனும் கொஞ்சம் சில்லரைகளை பனிமலையின் வாசலிலும் வீசிவிட்டு வந்துள்ளார்.

வடக்கே பனிமலை மட்டுமல்ல; சுனாமியால் கொத்துக் கொத்தாய் மக்கள் தென் கோடியில் அன்று மாண்ட போதும், அதைத் தொடர்ந்து தானே புயல் சீற்றத்தால் தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு தலைமுறை சேதாரம் ஏற்பட்டபோதும்கூட ‘இந்தியாவின்’ லட்சணமும் இப்படித்தான் இருந்தது.

அக்டோபர் மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை குறைவாகப் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும் இந்த மழை குறைவு வரும் காலங்களில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி ஆட்சியாளர்கள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இடையே “வூட் வூட்“ புயலும் வந்தது; விசாகப்படடிணத்தை புரட்டிப் போட்டது. வழக்கத்தைப் போலவே நட்டக் கணக்கும் போடப்பட்டு அடுத்த புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆயத்தமாகிவிட்டனர் ஆட்சியாளர்கள்.

வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய சில நாட்களிலேயே தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கூடுதல் மழை என ரமணன் வாசிக்கும் அறிக்கை மட்டுமே நமக்கு மழை பற்றிய மதிப்பீடைத் தருகிறது. ஆனால் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போதிய மழை இன்மையால் விவசாய வேலைகள் முடங்கிப் போய் விவசாயிகள் மாடுகளை மேய்த்துக் கொண்டு எஞ்சிய நேரத்தில் தாயம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியப் போகிறது? வரும் நவம்பரிலும் மழை பொய்த்துப் போனால் இம்மாவட்டங்கள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது.

‘அக்கினி பகவானும்’, ‘வருண பகவானும்’ குடியானவனின் வயிற்றில் நெருப்பையும் மண்ணையும் வறட்சியாய்-புயலாய் மாறி மாறி கொட்டும் போது அவன் எரிந்து போனானா இல்லை புதைந்து போனானா என எட்டிப் பார்க்கக்கூட நாதி இல்லை.

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தால் அதற்கு பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டுவார்கள் ஆட்சியாளர்கள். இப்போது பெட்ரோல் - டீசல் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலைதான் இதற்குக் காரணம் என்றாலும் விலை குறைப்புக்கு நாங்கள்தான் காரணம் என ஒரு பக்கம் மார் தட்டுகிறார்களே; பெட்ரோல் - டீசல் விலை குறைந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைய வேண்டுமே என கேள்வி கேட்டால் கள்ள மௌனத்தையே பதிலாகத் தருகிறார்கள் தமிழிசைகள். என்ன செய்ய? ”மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்” என சண்ட மாருதம் செய்யும் தமிழிசைளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!