Showing posts with label திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label திருவண்ணாமலை. Show all posts

Saturday, 20 July 2024

நாளேடுகளில் நாட்டு நடப்பு!

"வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட சில துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடம் என பெருமைபட்டுக் கொள்கிறது திராவிட மாடல் அரசு".

ஆனால், அதேவேளையில், பாலின சமத்துவம், தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், பசிப்பிணி அகற்றுதல் உள்ளிட்ட சில துறைகளில் உள்ள வளர்ச்சி பாதியைக்தானே தாண்டி உள்ளது.

வட இந்திய நோஞ்சான்களோடு ஒப்பிட்டு, நான்தான் பயில்வான் என பெருமிதம் கொள்வதால் என்ன பெருமை இருக்கு? மேற்கண்டத் துறைகளிலும் 100க்கு 100 சாதனை புரிந்தால் பெருமைபட்டுக் கொள்ளலாம். அதை நோக்கிப் பயணக்குமா திமுக அரசு?

*****

"இட ஒதுக்கீடு பிரச்சனை. வங்கதேசத்தில் கலவரம்! கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி. பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் சுமார் 1000 மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்".

வடஇந்தியாவின் கல்வித் தரத்தைவிட வங்கதேசக் கல்வித்தரம் உயர்ந்தது என்பதனால்தானே வங்கதேசத்திற்குப் படிக்கச் செல்கிறார்கள்.

வடக்கு இன்னும் வளரவில்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?

*****

"கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டி ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் அதிமுக-வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்".

ஆட்சிகள் மாறும்போது கள்ளச்சாராய வியாபாரமும் கைமாறும் என்பதுதானே இங்கு எழுதப்படாத சட்டம்?

கள்ளச்சாராயத் தொழில் தங்களிடமிருந்து கைமீறிப் போனதால் வந்த கோபமோ இது என்றுதானே மக்கள் கேட்கிறார்கள்.

*****

"திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம்! மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்!"

கோவில்களில் கூட்டம் கூடுவது மக்களின் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடு.  தங்களுடைய குறைகள் நீங்கத்தானே கோவில்களை நாடி ஓடுகிறார்கள். கோவில்கள் என்றைக்கு ஈ ஓட்டுகிறதோ அன்றுதான் நாட்டு மக்களின் நனவுகளும் கனவுகளும் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று பொருள். அப்பொழுது மக்கள் கோவில்களை நாடி ஓட மாட்டார்கள். சுற்றுலாத் தளங்களில் முட்டி மோதுவார்கள். 

வெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரங்களால் மட்டுமே கோவில்களில் கூடும் கூட்டத்தை குறைத்துவிட முடியாது. மாறாக மக்களின் வாழ்க்கையின் ஏக்கப் பெருமூச்சுகளை நீக்கவல்ல ஒரு அரசு அமைந்தால் மட்டுமே இதிலிருந்து மக்களை மீட்க முடியும்.

*****

"வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவர் அறிவழகனுக்குத் தொடர்பு!"

இதற்குத்தானே உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் கடும் போட்டி நிலவுகிறதோ? இதில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று கண்ணமங்கலத்தில் அதிமுக-வினர் பிரசுர விநியோகம் எனும் கேலிக்கூத்து!

ஊரான்

செய்தி ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளேடு. 21.07.2024

Saturday, 15 June 2024

கடவுள் என்ன காட்சிப் பொருளா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அபிசேகத்திற்கு கட்டணம் ரூபாய் 2500.

கட்டணத்தைப் பார்த்து ஆதங்கப்பட்டு இவ்வாறு எழுதுகிறார் ஒரு பக்தர்.

"காசு கொடுத்து கடவுளைக் காண கடவுள் என்ன காட்சிப் பொருளா?"

ஆம் இதில் என்ன சந்தேகம்? கடவுளர்களுக்கு மகிமையை ஏற்றிச் சொல்லி அவற்றை காட்சிப்படுத்திக் காசாக்குவதுதானே அன்றும் இன்றும் என்றும் நடப்பது. 

தமிழ்நாட்டுக்காரர்கள் திருப்பதி நோக்கி படையெடுக்கிறார்கள். அங்கே மொட்டை போட்டு பட்டை நாமத்தோடு திருப்பி அனுப்புகிறார்கள். ஆந்திரக்காரர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுக்கிறார்கள். இங்கே நாமத்திற்குப் பதிலாக பட்டை அடித்து திருப்பி அனுப்புகிறார்கள்.

கோவில் is nothing but an exibition centre. Consumer ஐக் கவரவும், கல்லாவை நிரப்புவதற்குமே காட்சிப்படுத்துதல்கள்.

கடவுளும் ஒரு நுகர் பொருள்தான். கடைகளுக்குச் சென்றால் காசு கொடுத்து பொருளை வாங்கி நுகர்ந்து மகிழ்கிறோம். கோவில்களுக்குச் சென்றால் காசு கொடுத்து அருளை வாங்கி அகமகிழ்கிறோம். 
முன்னதில் நுகர் பொருள் எதார்த்தமானது. பின்னத்தில் அருள் அருவமானது. 

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்கிறபோது மக்களின் வீடு நோக்கி அவர் ஏன் வருவதில்லை? மாறாக அவர் இருக்கும் இடம் நோக்கி ஏன் மக்களை அழைக்கிறார்? அழைப்பது அவர் அல்ல, அவரை நம்பி வாழும் ஒரு சிறு கூட்டம். மக்களின் துன்ப துயரங்கள்தான் அந்தச் சிறு கூட்டத்தின் இன்ப வாழ்வுக்கு மூலதனம்.

துன்பங்களும் துயரங்களும் தொடரும் வரை குன்றுகளில், ஆற்றுப்படுகைகளில் கடவுளர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். 

மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி, கடவுளர்களை காட்சிப் படுத்தி வேடிக்கைப் பார்க்கும் ஒரு சமூகக் கட்டமைப்பு வராமலா போகும்? 

ஊரான்

Friday, 15 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7

ஆ).சாதியத் தீட்டு

நான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட கலப்பினால் உருவான சங்கரா சாதிகளைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் பறையர் மற்றும் சக்கிலியர் எனும் அருந்ததியர் உள்ளிட்ட சாதிகளைத் தீண்டத்தகாத சாதிகள் என முத்திரை குத்தி, பிற சாதியினர் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறது சனாதனம். 

இத்தகைய சாதியினர் பிற சாதியினரைத் தொட்டால், பார்த்தால், மண்ணை மிதித்தால், காற்று பட்டால், நிழல் பட்டால் தீட்டு என்கிறான் மனு. இவர்கள் மீதான தீண்டாமையில், பிறப்பின் அடிப்படையிலான சாதி என்கிற சமூகக் காரணி மேலோங்கி இருப்பதால், இவை சாதியத் தீட்டு என அழைக்கப்படுகிறது. 

சண்டாளர்கள் எனும் பறையர்கள் 

சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த சண்டாளன் என்கிற பறையர் சாதியின் பிறப்பு, மிகவும் சிக்கல் வாய்ந்தது என்பதால், சமூகத்தின் இழி நிலைக்கு அவனைத் தள்ளிவிட்டதோடு, இழிவான தொழில்களையே செய்ய வேண்டும், என அவன் கட்டாயப்படுத்தப்பட்டான். 

மேலும், கெட்ட குணம், கெட்ட செயல், ஒழுக்கமின்மை, வன்முறை, நாகரிகமற்ற சேரி மொழி ஆகியவை அவனிடம் இருப்பதாகச் சொல்கிறது சனாதனம். இன்றும் சேரிக்காரர்கள் மீதான ஊர்க்காரர்களின் பார்வை இதுதானே! (மனு 10-58) 

காற்று பட்டால் தீட்டு

சண்டாளன் ஊருக்கு வெளியே வாழ வேண்டும் என்பதாலும், (மனு 10: 50)  சேரிக்காற்று ஊருக்குள் வரக்கூடாது என்பதாலும் பெரும்பாலும் சேரிகள் ஊருக்கு கிழக்கே அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு பீடை திசை என்பதால் சில இடங்களில் சேரிகள் ஊருக்குத் தெற்கேயும் உள்ளன. சேரியின் தண்ணீர் ஊருக்குள் வரக்கூடாது என்பதால் மேடான இடங்களில் ஊரும், பள்ளமான இடங்களில் சேரியும் அமைந்திருப்பதைப் பல இடங்களில் காண முடியும். 

'பைபாஸ் ரோடு'

இவை மட்டுமல்ல, ஊர்க்காரர்கள் அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் சேரிக்குள் நுழைந்து சென்றால் தீட்டுப் பட்டு விடுவார்கள் என்பதால், உயர்சாதியினரின் நலனுக்காக, ஒவ்வொரு சேரியிலும் புறவழிச்சாலை அமைத்தவர்கள் அன்றைய பார்ப்பனர்கள். சரக்குகளை எந்தவித இடையூறும் இன்றி விரைந்து எடுத்துச் செல்ல, பார்ப்பன-பனியா-அதானி-அம்பானிகளின் நலனுக்காக இன்று புறவழிச்சாலைகள் (பைபாஸ் ரோடு) அமைக்கின்றனர். 

இதுதான், இன்றைய இந்திய ஊர்-சேரிகளின் வரைபடம். இதன் மீதுதான் தீண்டாமை எனும் கற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. டெட்டனேட்டர்களையும், புல்டோசர்களையும் கொண்டு இந்த கற்கோட்டையை சிதைக்காமல் தீண்டாமை ஒழிப்பில் ஒரு அடிகூட முன்னேற முடியாது.

பறையர்களின் ஆடை அலங்காரம்

பறையர்கள் எப்போதும் தொழிலுக்காக அலைந்து திரிவதோடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கக் கூடாது, நாயை மட்டும் வளர்க்கலாம், பிணத்தின் துணியை உடுத்த வேண்டும், உடைந்த சட்டியில்தான் உணவு உண்ண வேண்டும், தங்க ஆபரணங்களை அணியக்கூடாது, இரும்பு பித்தளையிலான ஆபரணங்களை மட்டும் அணிய வேண்டும் என்கிறது சனாதன தருமம். (மனு 10: 51, 52, 54)

பறையர்கள் என்னதான் 'டிப்டாப்பாக' கோட்டு-சூட்டு போட்டு, பட்டாடை உடுத்தினாலும், இவர்கள் இழிந்த சாதியினர் என்ற பட்டம் மட்டும் மறைந்து விடாது. (மனு 10-57). இன்றைய சாதி இந்துக்களின் மன ஓட்டமும் இதுதானே!

முன்னால் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் ஆர் பி வி எஸ் மணியன் என்கிற ஒரு சனாதனி, அம்பேத்கரை மிகவும் தரக்குறைவாகப் பேசியதற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். 

தனிக்குவளை

ஒரு பாத்திரத்தை இவர்கள் தொட்டுவிட்டால், டெட்டால் போட்டு சுத்தம் செய்தாலும் அது பரிசுத்தமாகாது. இதனால்தானே தேநீர்கடைகளிலும் உயர்சாதியினரின் வீடுகளிலும் இன்றளவும் தனிக் குவளை-டீ கிளாஸ்-சொம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எச்சில் அனைவருக்குமான வாழ்வியல் தீட்டின் ஒரு அம்சம் என்றாலும், பறையன் எச்சில் மட்டும் பாலிடால் கலந்தது போல! மேலும், இவர்கள் உலோகப் பாத்திரம் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. டம்ளர்களைக் கழுவுனால்கூட தீட்டு போகாது என்பவனை காராகிரகத்தில் அல்லவா அடைக்க வேண்டும்! (மனு 10: 51)

இவர்களுக்கு நேரே அந்நம் போடக்கூடாது, வேலைக்காரரை விட்டு உடைந்த பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.‌ (மனு 10-54). 

முன்பெல்லாம் நெல் அளக்கப் பயன்படுத்தப்படும் படியில்தான் தண்ணீரோ, கஞ்சியோ, கூழோ ஊற்றிக் கொடுப்பார்கள். படியும் இல்லை என்றால் இரண்டு கைகளையும் விரிக்கச் சொல்லி ஊற்றுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது நேரில் கண்ட காட்சிகள் இவை.

இது டிஜிட்டல் யுகம் என்பதால், இன்று பறையர்கள் பயன்பாட்டிற்கென்றே வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒரு ஓரத்திலோ அல்லது மரக்கிளையிலோ, எவர்சில்வர் சொம்பு ஒன்றை நிரந்தரமாக வைத்துள்ளனர். சொம்பைப் பயன்படுத்திய பறையரே அதைக் கழுவி அடுத்த முறை பயன்பாட்டிற்காக அவ்விடத்திலேயே வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான் சமீபத்தில் கண்ட காட்சி இது. இது தீண்டாமை என்று தெரிந்தாலும், சொந்தக் காலில் நிற்க முடியாமல் அடுத்தவரை அண்டி வாழும் நிலை மாறாமல் தீண்டாமையும் வேறு வேறு வடிவங்களில் தொடரவே செய்யும். 

இது சட்டப்படி தீண்டாமைக் குற்றம் என்று உயர்சாதியினருக்குத் தெரிந்தாலும், இதுதான் இந்துக்களின் வாழ்வியல் முறை என்று சனாதனம் அவர்களுக்குப் போதித்திருக்கிறது.

அன்றே ஆதார்

கிராமத்திலும் ஊரிலும், ஏதாவது பொருளை விற்கவோ வாங்கவோ வேண்டும் என்றால் அரசன் கொடுத்த அடையாள அட்டையோடுதான் இவர்கள் ஊருக்குள் செல்ல வேண்டும். பார்த்தீர்களா! ஆதார் அட்டையை சனாதனவாதிகள் அன்றைக்கே கொண்டு வந்துள்ளனர். (மனு 10-55).

பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒருவன் தாழ்த்தப்பட்டவனா என்பதை அறிய அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கருப்புக் கயறு அணிய வேண்டும். (பக்கம் -77 அம்பேத்கர் தொகுப்பு: 25)

நிழல் பட்டால் தீட்டு

இவர்களின் நிழல் பட்டால் ஊர்க்காரர்கள் தீட்டுபட்டுவிடுவார்கள் என்பதால், ஊரிலும் பட்டணங்களிலும் இரவில் இவர்கள் சஞ்சரிக்கக்கூடாது. (மனு 10-54).

தீண்டத்தகாதவர்களின் நீண்ட நிழல்கள் ஒரு பிராமணன் மீது பட்டுவிட்டால் அவர் குளித்து தனது தீட்டைப் போக்கவேண்டியிருந்ததால், மாராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டத்தகாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

மேலும், அவர்களின் எச்சிலை ஒரு இந்து மிதித்து விட்டால் அவன் தீட்டுக்குள்ளாகக்கூடும் என்பதால், எச்சிலைத் துப்புவதற்காக தீண்டத்தகாதவர்கள் கழுத்தில் ஒரு பானையைத் கட்டிச் செல்ல வேண்டும். தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டும். (பக்கம் 76, 77: அம்பேத்கர் தொகுப்பு: 25).

தாங்கள் வாழும் பகுதி மட்டும்தான் ஊர் என உயர் சாதிக்காரர்கள் கருதுகிறார்கள். இதில் சேரி மக்களை அவர்கள் கணக்கில் கொள்வது கிடையாது. அதுபோல  சேரி மக்களுக்கான ஊர் என்றால் அது தீண்டத்தகாத மக்கள் வாழும் பகுதி மட்டும்தான் என்று தீண்டத்தகாதவர்கள் கருதுகிறார்கள். இதில் உயர் சாதியினர் வாழும் பகுதியை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

சாதியத் தீட்டு குறித்து மேலும் பார்க்கலாம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, 2 December 2011

மழை: அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும்!


இரண்டாவது முறையாக தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை தற்போது ஓய்ந்துள்ளது. வெளுத்துக் கட்டும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பினவோ இல்லையோ தொலைக்காட்சிக்காரர்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. எழவு வீட்டிலும் காசு பார்ப்பவர்கள் இந்த மழையை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? 

முன்பு நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்ட போதும் சரி; தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்கள் உடமைகளை இழந்த மக்களை பேட்டி காணும் போதும் சரி இத்தகைய இழப்பிற்கு யார் பொறுப்பு என்பதை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு மக்களின் அவலங்களைக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இயற்கையின் சீற்றமா இல்லை அரசின் குற்றமா?

போதிய நீராதாரம் இல்லாத காரணத்தாலும், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமையாலும்  இனி கிராமங்களில் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்பதனால் கிராம மக்கள் அணி அணியாக நகரங்களுக்குப் படை எடுக்கிறார்கள். கட்டின துணியோடு நகரங்களைச் சென்றடையும் இம்மக்கள் எங்கே தங்குவார்கள்? இவர்களுக்கு முன்பே நகரங்களுக்கு வந்து கிடைக்கின்ற வேலைகளைச் செய்து அவற்றில் கிடைத்த கொஞ்சம் காசில் வயிற்றிற்குப் போக மீதியை மிச்சப்படுத்தி ஏரி ஓரங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் குடிசைகளை அமைத்துக் கொண்டு வசிக்கும் தங்கள் தூரத்து உறவினர்கள் அல்லது நண்பர்களின் வசிப்பிடங்களில் புதிதாய் வந்தவர்கள் சில நாட்கள் தங்குகிறார்கள். நான்கு பேர் உட்காரவே முடியாத இத்தகைய ‘வசிப்பிடங்களில்’ எத்தனை நாட்களுக்குத்தான் தங்க முடியும்? பிறகு இவர்களும் அதே பாணியில் ‘வசிப்பிடங்களை’ அமைத்துக் கொள்கின்றனர்.

இப்படிக் குடிசைகளை அமைத்துக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் இதுவும் சாத்தியம். அதன் பிறகு மின் இணைப்பும், குடும்ப அட்டைகளும், வாக்காளர் அட்டைகளும் கிடைக்க வேண்டுமா? அதற்காகத்தானே அரிப்பெடுத்த கைகளோடு அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரூபாய்த் தாள்கள் அவர்களின் கைகளை உரசினால் போதும் அவர்களின் அரிப்பும் நின்று போகும். மக்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைத்துவிடும். வாழ்வதற்குத் தேவையான சட்டப்படியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகக் கருதிதான் குடிசைவாசிகள் அவ்விடத்தில் காலத்தைத் தள்ளுகிறார்கள்.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆசியோடு ஆறுகளிலும் ஏரிகளிலும் வீடுகள் புகுந்து விடுகின்றன. பிறகு மழைக் காலங்களில் இத்தகைய வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இது மழையைப் பொய்வித்த ‘வருண பகவானின்’ குற்றமா? இல்லை ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து ‘வீடுகுள்’ கட்டிக்கொண்டது ஏழைகளின் குற்றமா? அல்லது பிழைப்பு தேடி நகரங்களில் குடியேறுபவர்களுக்கு முறையான வசிப்பிடங்களை ஏற்பாடு செய்யாமல் ஆறுகளிலும் ஏரிகளிலும் குடிசைகள் அமைத்துக் கொள்வதற்கு தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டு அவற்றிற்கு துணைபோகும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குற்றமா?

ஒரு நாள் பிழைப்பா இல்லை ஓர் ஆண்டு வாழ்வா?

“வேலைக்குச் செல்ல முடியவில்லை,  பால்காரன், பேப்பர்காரன் வரவில்லை,  போக்குவரத்து நெரிசல், ரொம்ப கஷ்டமா இருக்கு”  என மண்ணையே மிதிக்காத மகிழுந்துக்காரர்களின் (car) பேட்டியும், நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அங்கலாய்ப்பும்-சலிப்பும் நிறைந்த பேட்டிகள் மற்றொரு பக்கம். ஒரு நாள் செய்தித்தாள் படிக்கவில்லை என்றாலோ அல்லது டீ, காபி குடிக்கவில்லை என்றாலோ குடியா முழுகிப் போய்விடும்?

இவை எல்லாம் தொலைக் காட்சிக்காரனுக்கு முக்கியச் செயத்திகளாகி விடுகின்றன. “சைதாப்பேட்டையிலிருந்து எமது செய்தியாளர் என்ன கூறுகிறார் பார்ப்போம்” என இதில் ‘லைவ்’ வேற!

ஒரு நாள் மழைக்கு இன்றைய பொழப்பு போச்சே என்பது இவர்களின் கவலை. ஆனால் இந்த ஒரு நாள் மழை இல்லை என்றால் எம் உழவனுக்கு ஓர் ஆண்டல்லாவா பொழப்பு போகிறது!

“ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் கன மழையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதி; குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்கத் தடை,  பயணிகள் ஏமாற்றம்” என செய்தி ஒருபக்கம். “ரொம்ப ஏமாற்றமாயிடுச்சு. மழை விடாம பெய்யுது. அதனால “டூர் வந்தும் எதையும் எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு” என நடுத்தர மக்களின் பேட்டி மற்றொரு பக்கம்.

மழை என்னமோ ஒன்றுதான். நகர்ப்புறங்களில் வீடுகளை இழந்து பேட்டியளிக்கும் மக்களின் அவலம் ஒருபக்கம் ‘எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு’ என்கிற நடுத்தர வர்க்கத்தின் ‘கவலை’ மறுபக்கம் என இரு வேறு விளைவுகள்.

தமிழகத்தில் மழை அதிகமா?

”தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இதுவரை பெய்துள்ள மழையின் அளவு 450 மில்லிமீட்டர். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 430 மில்லிமீட்டர். மேலும் டிசம்பர் முழுக்க மழை பெய்ய வாய்ப்புகளுண்டு. இனி பெய்கின்ற மழை உபரிதான்” இப்படி பேட்டியளிக்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி இரமணன்.

வாலாஜா, ஆர்க்காடு, இராணிப்பேட்டை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரூர், செங்கம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, பகுதிகளை உள்ளடக்கிய வேலூர்-கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம்-திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழகத்தில்தான் உள்ளனவா என இரமணனின் பேட்டியை கேட்ட பிறகு எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டுவிட்டது. 27.11.2011 அன்று பருகூரில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மழையின் ‘பாதிப்பை’ பார்த்த பிறகுதான் இந்த இடுகையை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் மேற் கூறிய பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று வந்துள்ளேன்; சென்று வந்தவர்களைக் கேட்டுள்ளேன்; தொலைபேசி மூலம் விசாரித்து அறிந்துள்ளேன். இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் கால் பங்குகூட நிறையவில்லை; சில ஏரிகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை; சாலையோரக் குழிகளில் ‘குண்டி கழுவக்’ கூட தண்ணீரைக் காணோம். விதிவிலக்காக இப்பகுதிகளில் ஒரு சில ஏரிகள் நிரம்பிருக்கலாம்;  ஒரு சில சிற்றோடைகளில் சிறிதளவு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் இப்பகுதிகளில் இனியும் வலுவான மழை வரவில்லை என்றால் இந்த ஆண்டு குடி நீருக்கே பஞ்சம் வரும் என்பதே நிதர்சனம்.

“தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தும் வேலூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்”  என்று 28.11.2011  தேதியில் தினமணி நாளேடும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுதான் நிலைமை என்பதை மறுநாள் அதே தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆர்க்காட்டுக்காரனின் கனவு நனவாகுமா?

பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் தண்ணீரைப் பார்ப்பது அரிது.-ஆந்திராவிலிருந்து பொன்னை-திருவலம் வழியாக ஆர்க்காடு அருகே பாலாற்றில் இணையும் ஓர் ஆறுதான் பொன்னை ஆறு. தண்ணீர் ஓடினால்தானே ‘கலக்கும்’ ஆறு என சொல்ல முடியும். பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் வெள்ளப் பெருக்கை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரு முறைதான் இப்பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். கடைசியாகப் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. கல்லூரிச் சாலையில் குளு குளு அறைக்குள் அமர்ந்து கொண்டு ‘இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரியை விட மழை அதிகம்,  இனி பெய்வதெல்லாம் உபரிதான்’ என பேட்டியளிக்கும் இரமணனுக்கு, அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும் ஒன்றுதான் என்பது எப்படித் தெரியும்?

Sunday, 27 February 2011

சாமியார்கள் அத்துப் போனால் இந்து மதம் இத்துப் போகுமா?

ஆதிசங்கரன் முதல் நித்யானந்தா வரை இந்து மதத்தை தாங்கி நிற்க இம் மண்ணில் தோன்றிய அவதாரப் புருஷர்கள் ஏராளம். அத்வைதம் முதல் ஆத்ம ஞானம் வரை இவர்கள் போதிக்காத தத்துவங்களே கிடையாது. சிலர் தத்துவங்களை உபதேசிக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் இறந்து போன பிரேமானந்தா முதல் காஞ்சி சங்கரன், நித்தியானந்தா வரை பலர் நடைமுறையில் பல தத்துவங்களை சோதித்தறிந்தவர்கள். அதிலும் குறிப்பாக காமத்துப் பாலை முந்திரி, பாதாம் பருப்புகளை அரைத்துச் சேர்த்து சுண்டக் காய்ச்சி கரைத்துக் குடித்து கரை கண்டவர்கள்.

முற்றும் துரந்த இந்த முனிவர்களுக்கு உல்லாசமாய் உலவ ஆசிரமங்களும், உலவிய பின் ஓய்வெடுக்க ஏ.சி. அறைகளும், ஏ.சி.அறையின் குளிரை சமாளிக்க காமக் களியாட்டங்களும் கட்டாயம். இவற்றில் எது வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் இரவு நேர லீலைகள் மட்டும் கண்டிப்பாய் நடக்க வேண்டும்.

இந்திய ஜனாதிபதியைக்கூட தீவிரவாதிகள் எளிதில் நெருங்கிவிடுவார்கள். ஆனால் ஒசாமா பின்லேடனே நினைத்தாலும் இந்தச் சாமியார்களை நெருங்க முடியாது. பாதுகாப்பு வளையங்களைத் தாண்டுவது அவ்வளவு எளிதானதல்ல. அதையும் தாண்டி ஒருவன் நித்யானந்தா-இரஞ்சிதாவின் காமக் களியாட்டத்தைச் சுட்டிருக்கிறான் என்றால் அவன் பின் லேடனுக்கேத் தலைவனாகும் தகுதி படைத்தவன்.

போலிச் சாமியார்கள்தான் கேடானவர்கள். நல்ல சாமியார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என நீங்கள் முனுமுனுப்பது எனது காதுகளில் விழுகிறது. நேற்று வரை 'ஒரிஜினல்' என்று நம்பியவன்தானே மறுநாள் காலையிலேயே போலி என்று நாறுகிறான். 'ஒரிஜினல்' என்று நம்புவதற்கான உத்தரவாதத்தை யாராவது 'பாண்டு பேப்பரில்' எழுதிக் கொடுக்கத் தயாரா?

எப்வளவுதான் நாறினாலும் சாமியார்கள் செல்வாக்கோடு உலாவுவதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது? நீண்ட நாட்களாக இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் நான் திணறிய போது நித்தியானந்தா சிக்கியதும் எனக்கு விடை கிடைத்து விட்டது. தமிழகத்தின் திருவண்ணாமலை,  வேலூர் மாவட்டங்களிலும், கர்நாடகாவின் மைசூரிலும் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இவர் அகமுடைய முதலியார் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான். இப்பகுதிகளில் அகமுடைய முதலியார்கள் அதிகமாக வசிப்பது நித்தியானந்தாவின் பலம்.

1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது இவரை தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்.

சைவ வேளாள முதலியார்கள் வேதாத்திரி மகரிஷியை தூக்கி நிறுத்தினார்கள். அவர் இறந்த பிறகு இவர்களது சாதிப் படிநிலையில் ஒரே 'குரூப்பில்' இருக்கும் நித்தியானந்தாவை ஆதரிக்கத் தொடங்கினார்கள். நித்தியானந்தாவும் அம்பலப்பட்டுப் போன பிறகு வேலூர் ஸ்ரீபுரம் சக்தி 'அம்மாவை' இப்போதைக்குப் பிடித்துக் கொண்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு முதலியார் பக்தனின் காணிக்கை தங்களது பரம எதிரிகளான வன்னியர்களின் மருவத்தூர் அம்மாவிடம் சென்று விடக்கூடாது.

மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் வைசியா பிரிவில் வரும் ஷெட்டி சாதியைச்  சேர்ந்த ஜக்கி வாசுதேவ், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வெள்ளாளக் கவுண்டர்களின் ஆதர்ஷ சாமியாராக அவதாரம் எடுத்ததோடு, பிற இடைநிலைச் சாதி மக்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் சாதி மக்களின் ஏகோபித்த சாமியாராக விளங்கிய அச்சாதியைச் சேர்ந்த பிரேமானந்தா மண்டையைப் போட்டுவிட்டார். இப்பொழுது அங்கே ஒரு 'வேக்கன்சி' ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

தென் மாவட்ட நாடார்களுக்கும், தேவர்களுக்கும் என அந்தந்த சாதிகளைச் சேர்ந்த சாமியார்கள் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றே கருதுகிறேன். 

பார்ப்பனர்களுக்கு?... சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. நாறிப்போன சங்கராச்சாரி முதல் வாழும் கலை ஸ்ரீ.ஸ்ரீ. இரவிசங்கர் வரை பிரபலங்கள் ஏராளம் உண்டு. மற்ற சாதிக்காரர்களாவது பக்தி பெருக்கெடுக்கும் போது பிற சாதி சாமியாரர்களைக்கூட ஒருசிலர் ஏற்றிப் போற்றுவதுண்டு;  வணங்குவதுண்டு. ஆனால் பார்ப்பனர்கள் பிற சாதி சாமியார்கள் ஒருவரைக்கூட அங்கீகரித்ததில்லை. அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

பாவம் தாழ்த்தப்பட்டவர்கள். பக்தியிருந்தும் தங்களுக்கென இதுவரை ஒரு சாமியைரைக்கூட உருவாக்க முடியவில்லை. கோயிலுக்கு நுழையவோ சாமியை வழிபடவோ உரிமை இல்லாத போது சாமியார்களை எங்கே உருவாக்கவது? இதுதான் சாதி இழிநிலைக்கு எடுப்பான ஆதாரம்.

சாமியார்களின் உயிரும் பலமும் சாதியில் ஒளிந்திருக்கிறதேயொழிய பக்தியில் அல்ல. தங்களது சாதிக்காரனின் பணம் பக்தியின் பேரால் மற்றொரு சாதி சாமியாரிடம் சென்றுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதுவே சாமியார்களின் பலமாகவும் இருக்கிறது.

சாதி எங்கும் வியாபித்திருக்கிறது. இதுவே இந்து மதத்தின் வேராகவும் இருக்கிறது. வேருக்கு நீர் பாய்ச்சும் சாமியார்கள் இத்துப் போனால் இந்து மதம் அத்துப் போகுமே என்ற கவலை இந்து மதவாதிகளுக்கு. அதனால்தான் சாமியார்களுக்கு பாதிப்புகள் வரும் போதெல்லாம் அர்ஜீன் சம்பத்துக்கள் குரல் கொடுக்கிறார்கள்.