Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Saturday, 15 June 2024

கடவுள் என்ன காட்சிப் பொருளா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அபிசேகத்திற்கு கட்டணம் ரூபாய் 2500.

கட்டணத்தைப் பார்த்து ஆதங்கப்பட்டு இவ்வாறு எழுதுகிறார் ஒரு பக்தர்.

"காசு கொடுத்து கடவுளைக் காண கடவுள் என்ன காட்சிப் பொருளா?"

ஆம் இதில் என்ன சந்தேகம்? கடவுளர்களுக்கு மகிமையை ஏற்றிச் சொல்லி அவற்றை காட்சிப்படுத்திக் காசாக்குவதுதானே அன்றும் இன்றும் என்றும் நடப்பது. 

தமிழ்நாட்டுக்காரர்கள் திருப்பதி நோக்கி படையெடுக்கிறார்கள். அங்கே மொட்டை போட்டு பட்டை நாமத்தோடு திருப்பி அனுப்புகிறார்கள். ஆந்திரக்காரர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுக்கிறார்கள். இங்கே நாமத்திற்குப் பதிலாக பட்டை அடித்து திருப்பி அனுப்புகிறார்கள்.

கோவில் is nothing but an exibition centre. Consumer ஐக் கவரவும், கல்லாவை நிரப்புவதற்குமே காட்சிப்படுத்துதல்கள்.

கடவுளும் ஒரு நுகர் பொருள்தான். கடைகளுக்குச் சென்றால் காசு கொடுத்து பொருளை வாங்கி நுகர்ந்து மகிழ்கிறோம். கோவில்களுக்குச் சென்றால் காசு கொடுத்து அருளை வாங்கி அகமகிழ்கிறோம். 
முன்னதில் நுகர் பொருள் எதார்த்தமானது. பின்னத்தில் அருள் அருவமானது. 

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்கிறபோது மக்களின் வீடு நோக்கி அவர் ஏன் வருவதில்லை? மாறாக அவர் இருக்கும் இடம் நோக்கி ஏன் மக்களை அழைக்கிறார்? அழைப்பது அவர் அல்ல, அவரை நம்பி வாழும் ஒரு சிறு கூட்டம். மக்களின் துன்ப துயரங்கள்தான் அந்தச் சிறு கூட்டத்தின் இன்ப வாழ்வுக்கு மூலதனம்.

துன்பங்களும் துயரங்களும் தொடரும் வரை குன்றுகளில், ஆற்றுப்படுகைகளில் கடவுளர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். 

மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி, கடவுளர்களை காட்சிப் படுத்தி வேடிக்கைப் பார்க்கும் ஒரு சமூகக் கட்டமைப்பு வராமலா போகும்? 

ஊரான்

Saturday, 11 May 2024

நான் கடவுளைக் கண்டேன்! --- இறுதிப் பகுதி

ஆபத்துக் காலங்களில் உதவி செய்வோரை 'ஆபத்தாண்டவன் மாதிரி வந்து காப்பாத்தனாம்பா' என்றுதான் சொல்கிறோம். அத்தகையோரை ஆண்டவனின் மாதிரியாகப் பார்க்கிறோம். அப்படியானால் ஆபத்துக் காலங்களில் உதவுவதற்கு ஒரிஜினல் ஆண்டவன் இருக்க வேண்டும் அல்லவா?

தெரு நாய் மோதி நான் கீழே விழுந்து அடிபட்டேனே, அதற்கு எதிரில்தான் ஸ்ரீ செல்வ விநாயகன் வீற்றிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் விநாயகனுக்கு எதிர் வீடுதான் என்னுடையது. அன்றாடம்  அவனுக்கு ஐயர் செய்யும் சேவையை நான் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல, எனது செயல்களையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் எனக்கு நேர்ந்த விபத்தை  அவன் தடுக்கவும் இல்லை; அடிபட்ட பிறகு எழுந்து ஓடி வரவும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டவனின் வாகனமான பைரவன்தானே என் மீது மோதியவன்? 

நடைபயிற்சியின் போது தடுக்கி விழுந்து கருங்கல்லில் மோதி மண்டை உடைந்ததையும், எதிரில் இருந்த ஐயப்பனும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். மற்ற மூன்று இடங்களிலும் விபத்து நடந்த போது அங்கிருந்த தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தன.

நான் கடவுள் மறுப்பாளன் என்பதனால்கூட இந்தக் கடவுளர்கள் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஒரு சிலர் எண்ணக்கூடும். ஆனால் அன்றாடம் நடைபெறும் எண்ணற்ற விபத்துகளில் பாதிக்கப்படுவோர், பலியாவோர்  ஆண்டவனை அனுதினமும் ஆராதிக்கும் அப்பாவிகள்தானே? வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டுத்தானே செல்கின்றனர்.  விபத்துகளைத் தடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், விபத்து நடந்த பிறகு ஓடோடி வந்து உலகின் எந்த மூலையிலாவது எந்த ஆண்டவனாவது பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டி இருக்கிறானா?

ஆனால் விபத்து நடக்கின்ற இடங்களில் எல்லாம் ஓடோடி வந்து உதவிக்தரம் நீட்டுபவர்கள் சக மனிதர்களே. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதல் உதவி செய்கிறார்கள். ஆம்புலன்சையோ ஆட்டோவையோ வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். மருத்துவமனைக்கு வருவோரை அரவணைத்து உடனடியாக செவிலியர்களும், மருத்துவர்களும் உரிய சிகிச்சை அளித்து உயிரைக் காக்கின்றனர்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களும் ஒப்பிட்டளவில் சிறியவைதான் என்றாலும்கூட, சக மனிதர்கள் உரியநேரத்தில் எனக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? 

ஐந்து முறையும் நான் அடிபட்ட போது எனக்கு மயக்கம் வரவில்லை, வாந்தி வரவில்லை, மூக்கில் இரத்தம் வரவில்லை; அதனால் அதிகம் அச்சப்பட வேண்டியதில்லை என்றாலும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும் அது ஆபத்துக்குரியதாகத்தான் பார்க்கப்படும். இதைத்தான் மருத்துவர்களும் முதலில் கேட்கிறார்கள். 


தெய்வங்களை சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்கள் என்கிறார்கள். பெருந்தெய்வங்கள் நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு யாருக்கோ படி ஆளந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுவோர் வீதி ஓரங்களில் கேட்பாரற்ற கிடக்கின்றனர். இவர்களை நம் மூதாதையர்கள் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். முந்தைய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகரம் நீட்டி இன்றும் நினைவு கூறப்பட்டு வணங்கப்படுபவர்கள். அன்றைய சகமனிதர்களே அவர்கள்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களில் மட்டுமல்ல, எனது உறவினர்கள், நண்பர்கள் என‌ப்பலரும் பாதிக்கப்பட்ட போது இத்தகைய சிறு தெய்வங்களை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். 

ஆபத்துக் காலங்களில் வேடிக்கை பார்க்காமல் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவோம். மனிதநேயம் காப்போம். கடவுள் வேறு யாருமல்ல, நாமே கடவுள்!

நன்றி!

முற்றும்

Saturday, 30 May 2015

நாட்டைப் பிடித்தாட்டும் நாமக்கட்டிகள்!

மோடியின் ஓராண்டு கால ஆட்சி சாதித்தது என்ன?  சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு மையத்திற்கான தடை சரியா? தவறா? என்கிற வாதப்பிரதிவாதங்கள் நடக்கும் இந்தத் தருணத்தில் இவர்களின் ஆட்சி எப்படி இருக்குமென்று  1993-ம் ஆண்டே கணித்த, “நாமக்கட்டி ஆளப் போகுது...” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.



பாரதீய ஜனதா… எப்பேற்பட்ட கட்சி தெரியுமா.  பார்ப்பனர்கள், பணக்கார சேட்டுக்கள், பழைய மன்னர்கள்  இவனுங்க நடத்துற கட்சி.
அத்வானியும், அசோக் சிங்காலும், முரளி மனோகர் ஜோஷியும், பஜாஜும், டால்மியாவும், விஜயராஜே சிந்தியாவும் எல்லாம் மேப்படி ஆளுங்கதான்.
இவனுங்க ஆட்சிக்கு வந்தா கேடு காலம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. உழைப்பாளி மக்கள் எல்லாருக்கும் ஊத்திக் கொழைச்சி ஒரே நாமமா போட்டுருவானுங்க. சாமானியப்பட்ட நாமம் இல்ல, ராஆஆஆம நாமம்.
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு
நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
ஏ படிச்சவனுக்கு பட்ட நாமம்,
பாட்டாளிக்கு குட்ட நாமம்
விவசாயிக்கு வட்ட நாமம்
நம்ம தேசத்துக்கே இரட்டை நாமம்
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
விடியகாலம் எழுந்திருச்சி, வேகமாக குளிச்சு முழுவி
மாட்டுக்கெல்லாம் நாமம் போட்டு, மறக்காம சாணம் போட்டு
ஏரு பூட்டி வயலில் இறங்கி, வேர்வை சிந்த பாடுபட்டு
அந்தி சாயும் நேரம் பார்த்து ஆண்டை வூடு திரும்பி வந்து
வுழுந்து அவனை கும்பிட்டாக்க
ரெண்டு உண்டக்கட்டி தந்திடுவான்
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஜாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
பறையடிக்கிற சாதிக்கு பட்டம் படிப்பெல்லாம் எதுக்கு
துணி வெளுக்குற சாதிக்கு தொழில் கல்விதான் எதுக்கு
அப்பன் தொழிலை செய்யிறதுக்கு இட ஒதுக்கீடு எதுக்கு
மண்டலுக்கு பண்டல் கட்டு, மனுநீதியை தூசி தட்டு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
சங்கம் வைக்க வேணுமா, இந்தா புடி சார்ஜ்ஷீட்
ஏ இன்குலாபு சிந்தாபாத், இன்கிரிமென்டு கட்டு
போனசு வேணுமா போயிட்டு வா டிஸ்மிஸ்ஸூ
அட கோரிக்கையை சொல்லணும்னா வேற ஒரு ரூட்டு இருக்கு
ஒரு கொட்டாய கட்டிகிட்டு பஜகோவிந்தம் பாடு.
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது
கடனப்பத்தி கவலை விடு, கடவுள் மேல பாரத்தை போடு
ஆலயங்கள் இருக்கும் போது ஆலைகள் எதுக்கு விடு
அகண்ட பாரதத்திலே அமெரிக்காவை இழுத்துப் போடு
அந்த அமெரிக்கா காரனையும் இந்துவாக மாத்திப்புடு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டைப் புடிச்சி ஆட்டப் போகுது
அம்மான்னு சொல்லாதே, மாதாஜின்னு சொல்லு
அப்பான்னு சொல்லாதே, பிதாஜின்னு சொல்லு
வணக்கத்தை தள்ளு, நமஸ்தேஜி சொல்லு
ஆழக் குழி தோண்டி தமிழ அதில் தள்ளு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
பண்டாரம் பரதேசிங்கதான் பள்ளிக்கூட வாத்தியாரு
பத்து அவதாரங்கதான் பாரதத்தின் வரலாறு
பூகோள பாடத்திலே சிவன் தலையில கங்கை ஆறு
அப்ப பாடம் நடத்துறது யாரு
வரலாறு சொல்லித் தர வாரியாரு வருவாரு
விஞ்ஞான தமிழ் வாத்தியாரெல்லாம் விட்டாப் போதும்னு ஓடுவாரு
அத்தனைக்கும் அத்தாரிட்டி காஞ்சி சங்கராச்சாரியாரு
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உஷாரு நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது
– மக்கள் கலை இலக்கியக் கழகம் 1993-ம் ஆண்டில் வெளியிட்ட “அசுர கானம்” என்ற பாடல் ஒலிக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ள பாடல்.
நன்றி: வினவு.

Sunday, 22 March 2015

கடவுள் ஒரு செங்கிஸ்கான்-வீழ்த்துங்கள் அவனை!

”நான் நாத்திகம் பேசுவதற்கு காரணம் என்னுடைய ஆணவமா? அகந்தையா?

எனது பாட்டனாரும் எனது தந்தையும் பக்திமான்களாக இருந்தும் எனது பள்ளிப் படிப்பின் போது காலையும் மாலையும் காயத்ரி மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்து சிறு வயதில் பக்தனாக இருந்த நான் எப்படி நாத்திகன் ஆனேன்?

ஒரு வழக்கு தொடர்பாக நான் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது அவ்வழக்கில் எனக்கு தூக்கு தண்டனைகூட விதிக்கப்படலாம் என்ற நிலையில் இரண்டு வேலையும் கடவுளை வணங்கச் சொல்லி காவலர்கள்  என்னைத் தூண்டிய போதும் மிகவும் இக்கட்டான நிலையிலும் நான் தொடர்ந்து நாத்திகனாகவே  இருக்க முடிந்ததேன்?

மதங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான் எனில் அவைகளுக்குள் வேறுபாடுகள் ஏன்? இந்து மதத்திற்குள்ளாகவே ஆரிய சமாஜம், சனாதன தர்மம் என பிரிவுகள் ஏன்?

துன்பமும் துயரமும் சதா நடந்து கொண்டிருக்கும் போது கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் எனில் இதை எல்லாம் போக்காமல் ஒரு நீரோ மன்னனைப் போல - ஒரு செங்கிஸ்கானைப் போல அவன் நடந்து கொள்வதேன்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் கடவுளிடம் இருக்கும் போது எதற்காக கடவுள் மக்களைப் படைத்தான்?

சாதித் திமிர்கொண்ட மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை தீண்டத் தகாதவனாக நடத்துவதற்கும், மமதையும் பேராசையும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கொண்ட ‘குதிக்கும்’ பார்ப்பனர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும் தாழ்த்த்தப்பட்ட மக்களின்  தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய பரிசுத்த ஞான நூற்களாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும் அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்?”

இப்படி கடவுள் மதம் குறித்து பகத்சிங் சரமாரியான கேள்விக் கணைகளைத் தொடுத்து “கற்றுணர் - எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும், கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்” என்கிற உணர்ச்சிகள் தன்னுடைய மனதின் வாசற்படியில் கடல் அலைகளைப் போன்று கிளம்பி தாவித்தாவி முட்டி மோதி விசயங்களை கற்றுணர ஆராய்ந்தறியத் தொடங்கியதின் விளைவாக அவரிடம் பெறும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் ஒரு நாத்திகன் ஆனார்.

புதியவற்றைக் கற்றுணர்வதற்கு பகத்சிங் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!

மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரின்  நினைவு நாள்.


சுகதேவ் - பகத்சிங் - ராஜகுரு
மேலும் படிக்க:

1.நான் நாத்திகன் ஏன்?
தமிழில் பா.ஜீவானந்தம்.
வெளியீடு கீழைக்காற்று வெளியீட்டகம். 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002. தொ.பே எண் 044-28412367
விலை: ரூ15/=

2.The Daring Youth of India : BAGATH SINGH. by: Col.Raghvinder Singh.
Published by: VIJAY GOEL, S-16, Naveen Shahdara, Delhi-110032 Phone: 22324833 e-mail: goelbooks@rediffmail.com
விலை: ரூ75/=

மேலும் பார்க்க:
The Legend of Bhagat Singh (2002) - Hindi Movie

https://www.youtube.com/watch?v=x-Zz6nobDik