Showing posts with label மலைபடுகடாம். Show all posts
Showing posts with label மலைபடுகடாம். Show all posts

Thursday, 17 October 2024

இலக்கியத்திற்கு வடார்க்காடு தூரமா? - இறுதிப் பகுதி

மக்களோடு மக்களாய் வாழ்ந்து அவர்களின் பாடுகளை படைப்பாக்கும் இராணிப்பேட்டை வசூரைச் சேர்ந்த

ஈமம், சேங்கை, மடவளி, ஜிகிட்டி, நீவாநதி, உள்ளிட்ட நாவல்கள்,

ஊர்ப் பிடாரி, சாவடி, பாலி, பரவெளி, பிணங்களின் கதை, உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள்,

என பல்வேறு படைப்புகளைத் தந்த, கவிப்பித்தன் அவர்களை வாலாசா வல்லவன் அவர்களும் நானும் 05.10.2024 அன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து 
உரையாடினோம். 

கவிப்பித்தன், வாலாஜா வல்லவன், நான்


இதுவரை அவரை நான் வாசித்ததில்லை என்றாலும் இன்று அவர் எனக்குப் பரிசாகக் கொடுத்த 'பிணங்களின் கதை'யே  என்னை அவருடன் பிணைக்கும் இழையானது. 

எந்த வட்டார வழக்கை இலக்கிய உலகம் இழிவாகக் கருதியதோ, அதே வட்டார வழக்கில் எழுதப்பட்ட அவரது படைப்புகள் இன்று பலராலும் பேசப்படுகிறது. அவரது படைப்புகள் கற்பனையில் ஊற்றெடுப்பதல்ல, மாறாக இயற்கையாய் பொழியும் மழையைப் போல வாழ்க்கையின் அனுபவங்களே படைப்பாய் மலர்கிறது

நம் மூதாதையர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாததால்தானே 'இருக்கிறது' என்பதை "கீது" என்றார்கள். இப்படி - ஒய்ங்கா, பூட்ச்சி, போயிகினு, அயகா, அய்தது, இசுக்கறாம்பாரு, குட்தானுங்க, மேய்ச்சிகினு, மீங்கினமாதிரி, கொயந்த, 
என பலப் பல. 

இதுவே பழக்கமும் வழக்கமுமாகி படித்த நாமும், இன்றும் அதற்குள் உழன்று கொண்டிருக்கிறோம். வடார்க்காடு வட்டார மொழியை ஏளனமாய் பார்ப்போரின் செவுட்டில் அரையுங்கள், இது எம் குற்றமல்ல; எமக்குக் கல்வியை மறுத்த பாதகர்களின் சதி என்று!


பிணங்களின் கதை'களைப் புரட்டினேன். "புதிய தரிசனம்", முதல் கதையே வடார்க்காட்டு வழக்கு மொழியில்  பட்டிக்காட்டைப் படம் பிடித்துக் காட்டியது.
வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்டு பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்கு வந்த சங்கீதா, அன்றாடம் காலையில் தன்னைக் கண்கொட்டாமல் பார்க்கும் மனநலம் குன்றிய முனியம்மாவின் தாய்மை உணர்வின் பின்னணியை உணர்ந்து, இறுதியில் ஒருநாள் முனியம்மாவின் பாதந்தொட்ட போது, அவளது ஸ்பரிசத்தால் சங்கீதாவின் கண்களில் நீர் கோர்த்ததைப்போல, வாசகனின் கண்களிலும் நீரைக் கசிய வைக்கிறார் கவிப்பித்தன்.

பேருந்துப் பயணத்தின் போது வாந்தி எடுக்கும் ஒரு குழந்தையை அருவெறுக்கும் ஒரு பயணி, அரவணைக்கும் ஒரு பயணி என இரு வேறு எதிர் குணம் கொண்ட மனிதர்களை "மாய பிம்பங்கள்",

சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினரின் நிலையை "தலைமுறைகள்",

இரவு நேரங்களில் மணல் திருடுவதற்குச் சாதகமாக, பேய்க் கதைகளைக் கட்டமைக்கும் மணற்கொள்ளையர்களை "நடுநிசிக் காட்டேரிகள்",

தனது மகன் முறை தவறி பிறந்தவன் என்பதை அறிந்திருந்தும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் மீது பாச மழை பொழியும் ஒரு தந்தையை "கொண்டுப்புளி",

குடும்பமே வெறுக்கும் ஒரு குடிகாரத் தந்தையைக் காக்க கடன் வாங்கி மருத்துவம் பார்க்கும் ஒரு பொறுப்பு மிக்க மகனை "எட்டிமரம்", 

காமக் கண்கொண்டு மகளிரை நோக்கும் ஆண்களை "தெருநாய்கள்",

நகைகளை மாட்டி, பொது இடங்களில் பகட்டுக் காட்டி, பின் பறிகொடுத்துப் பரிதவிக்கும் நகைப் பித்தர்களை "பின்கட்டு",

உழைப்புக்கு ஏற்ற சன்மானம் இல்லை என்பதைக்கூட அறியாமல் ஊருக்காக உற்சாகமாக உழைக்கும் சேரி மக்களின் கோல்காரன் பற்றி "கோல்மாத்து" , 

உலகிலேயே முதல் பறையனாய் பிறந்து, முதலில் பூணூல் தரித்து, அரிச்சந்திர மகாராஜனையே அடிமையாக்கிய வம்சம் என  பிணங்களைப் புதைப்பதும் எரிப்பதும் பெருமைக்குரிய தொழில் என பெருமை பேசும் சேரி மக்களைப் பற்றி  "பிணங்களின் கதை" என வேறு வேறு கருப்பொருளைக் கொண்ட பதினைந்து தலைப்புகளில்  சிறுகதைகளைப் பதிவு செய்கிறார் கவிப்பித்தன்.

கவிப்பித்தன் சொல்லும் சம்பவங்கள் அன்றாடம் நடப்பவைதான், ஏதோ ஒரு வகையில் தெரிந்தவைதான் என்றாலும் அவைகளை இலக்கிய நயத்தோடு எழுத்தாக்கி கொடுக்கும் பொழுது, அவை மக்களின் மனங்களில் ஊடுருவுகிறது.  நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை கழித்துக் கட்ட, அது வாசகனைத் தூண்டுகிறது. அதனால்தானே, என்றோ எழுதப்பட்ட அய்யன் வள்ளுவனின் "திருக்குறள்" இன்றும் போற்றப்படுகிறது.

நமக்குத் தொடர்பே இல்லாத, கற்பனை புராணக் கட்டுக்கதைகளை நம்பி இதுவரை ஏமாந்தது போதும். இனி நமக்குத் தெரிந்த, நம் மக்களின் வாழ்வியல் கதைகளை நமக்காகப் படைப்போம்.

இராணிப்பேட்டை, பெல் வளாகத்தில் நான் வசித்தபோது  பொன்னை ஆற்றில் (நீவாநதி) கால் நனைத்திருக்கிறேன், ஆனால் நீந்தியதில்லை. பெருவெள்ளமாய் பீறிட்டுப் பாயும் கவிப்பித்தனின் 'நீவாநதியில்' நீந்துவதற்காகக் காத்திருக்கிறேன்.

முற்றும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Wednesday, 16 October 2024

இலக்கியத்திற்கு வடார்க்காடு தூரமா? - தொடர் 3

ஒரு காலத்தில் குமுதம், ஆனந்த விகடன் என பெட்டிக்கடைகளில் சரஞ்சரமாய் தொங்கும் வார மாத இதழ்களில் வரும் தொடர்களை, சிறுகதைகளைப் படித்து ரசிக்க வரிசைகட்டி நின்றது ஒரு இளைஞர் கூட்டம்.
 
இன்றைய இளைஞர் கூட்டமும் பெட்டிக்கடைகளை மொய்க்கின்றனர், கமுக்கமாய் விற்கப்படும் கஞ்சா-போதைப் பொட்டலங்களில் மயங்கிக் கிடக்க.
 
இதழ்களின் அட்டைகளிலும், நடுப்பக்கங்களிலும் ஆடுகளைப் போல் தோலுரித்துக் தொங்கவிடப்பட்ட திரை நட்சத்திரங்களின் மின்னலில், 
மயங்கிக் கிடந்தது அன்றைய இலைஞர் கூட்டம். அது மகளிர் மீதான கண நேர கிரக்கம் மட்டுமே என்பதனால் அடுத்தடுத்த வேலைகளில் அவர்களால் நாட்டம் கொள்ள முடிந்தது. ஆனால் இன்றோ போதையில் சிக்கிய இளைஞர்கள் மதி இழந்து, உடல் நலிந்து எதற்கும் உதவாத நடைபிணங்களாய் 
நடமாடுகின்றனர்.
 
மிச்சமிருக்கின்ற இளைஞர்களோ ரீல்ஸ்களிலும், டிக்-டாக்குகளிலும் சிக்கிக் கொள்ள, இல்லத்து மகளிர் எல்லாம் தொலைக்காட்சித் தொடர்களில் தொலைந்து போக, வேலைக்குச் செல்வோர் எதிர்கால அச்சத்துடன் ஓய்வின்றி ஓட, வேளாண் குடிகளும்-உதிரிப் பாட்டாளிகளும் டாஸ்மாக்குகளில் தஞ்சம் புக, பிறகு யார்தான் படிப்பது இலக்கியங்களை?

அதனால்தானோ என்னவோ, கோடி பேர் கூடி வாழ்ந்தாலும் ஆயிரம் பிரதிகளைக் கரை சேர்ப்பதற்குள் ஒரு படைப்பாளிக்கு நாக்கல்லவா தள்ளி விடுகிறது. பிறகு எப்படி இலக்கியம் செழிக்கும்?
இருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் இலக்கியங்கள் படைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
 
இலக்கியத்திற்குக் கற்பனை அவசியமென்றாலும் அவை மக்களின் பாடுகளைப் பேச வேண்டுமல்லவா?
 
ஏழ்மை-வறுமையினாலும், சுரண்டல்-அடக்குமுறைகளினாலும், சாதி-தீண்டாமையினாலும் அல்லல் படுகின்ற மக்களின் பாடுகளை வெளிக்கொணர்வதோடு அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கான முனைப்புகளையும் முன்னெடுக்கின்ற வகையில் இலக்கியப் படைப்புகள் இருக்க வேண்டுமல்லவா?
 
இலக்கியத்திற்கு எந்த மண், தூரம் என்று இதுவரை ஒதுக்கப்பட்டு வந்ததோ, அதை உடைக்கும் வகையில் இன்று,
 
இராணிப்பேட்டை வசூரிலிருந்து கவிப்பித்தன், ஆம்பூரிலிருந்து யாழன் ஆதி, பேரணாம்பட்டிலிருந்து அழகிய பெரியவன், லாலாப்பேட்டையிலிருந்து சுகிர்தராணி, வந்தவாசியிலிருந்து வெண்ணிலா, செங்கம்-முன்னூர் மங்கலத்திலிருந்து ஸ்டாலின் ராஜாங்கம் என எண்ணற்றோர் வடார்க்காட்டு மண்ணிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் இன்று 
வலம் வருகின்றனர். வறண்ட பாலாற்று மணலில் இலக்கியமும் ஊற்றெடுக்கிறது.

கவிப்பித்தன்

ஆம்! அந்த வரிசையில் பொன்னை ஆற்றங்கரை வசூர் எனும் சிற்றூரிலிருந்து  பிறப்பெடுத்த சிறு ஊற்று, இன்று பெருவெள்ளமாய் பாய்கிறது பாலாற்றையும் தாண்டி.
 
எப்போதோ ஒருமுறை பாலாறு பெருக்கெடுத்தாலும், ஒரு சில ஆண்டுகளுக்கு அதனால் மக்கள் பயனுறுவதைப் போலவடார்க்காட்டில் ஊற்றெடுக்கும் இலக்கியமும் குறைவேயாயினும், இளைப்பாற, களைப்பு நீங்கி களமாட அது நிழல் தரும் பெருவிருட்சமாய் செழித்தோங்க, நீர் ஊற்றி உரமிட்டு வளர்த்து பாதுகாப்பது வாசகர்களின் கடமையன்றோ?
 
தொடரும்
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

இலக்கியத்திற்கு வடார்க்காடு தூரமா? - தொடர் 2

செய்யுள் வடிவில் உள்ள இலக்கியங்களின் மொழிச் செழுமையும், வளமையும் இன்றைய நாவல்களில் இருப்பதில்லை என்பதனால் அவை இலக்கியங்கள் இல்லை என்று யாரும் அவற்றை ஒதுக்குவதில்லை. ஒருவரின் எழுத்துக்களை அச்சாக்கி நூலாகக் கொண்டு வந்தால்தான் அது இலக்கியப்  படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
 
எல்லாம் டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய நவீன உலகில், பலரது படைப்புகள் அச்சுக்கு வராமலேயே சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் உலகிலும் பகிரப்பட்டு மென் நூலாக பலரால் படிக்கப்படுகிறது. இத்தகையப் படைப்புகள் இலக்கியத்திற்குள் அடங்குமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
 
பாரதியும், கல்கியும்
சாண்டில்யனும், சுஜாதாவும் கி.ராஜநாராயணனும், ஜெயகாந்தனும்
அசோகமித்திரனும், பாலகுமாரனும்,
சிவசங்கரியும்-அனுராதா ரமணனும்,
வாலியும், வைரமுத்துவும்,
பெருமாள் முருகனும், சு.வெங்கடேசனும்
சாருநிவேதிதாவும், ஜெயமோகனும்
என இவர்களைப் போன்ற சிலரை மட்டும்தான் இலக்கியவாதிகள் என தமிழ் இலக்கிய உலகம் அங்கீகரிக்கிறது, கொண்டாடுகிறது

ஆனால், இதில் வேதனை என்னவென்றால் இலக்கியம் என்றாலே உலக அளவில் முதலில் வருவது தமிழ்தான் என்று ஒரு பக்கம் பழம்பெருமை பேசினாலும், இன்று இந்திய அளவில் இலக்கியப் பங்களிப்பு செய்யும் முதல் 75 எழுத்தாளர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்பதுதான். 

நிற்க, கதை, நாவல்களைப் தாண்டி, சமூகத்தின் இழிவுகளை, அரசின் கொள்கைகளை விமர்சித்து எழுதும் எழுத்துக்களை எதில் சேர்ப்பது? இந்த வரிசையில் ஏராளமாக எழுதிக் குவித்த அம்பேத்கரும், பெரியாரும் இலக்கியவாதிகள் இல்லையா? இன்றும் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கும் கொளத்தூர் மணி, வாலாசா வல்லவன், முகிலன், பொழிலன், மருதையன், கோவன் உள்ளிட்ட படைப்பாளிகள் இலக்கியவாதிகள் இல்லையா? 

வரலாற்று அதிர்ச்சியை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை அம்பலப்படுத்தும் கவித்துவமான உரைநடைக்காகத்தானே தென் கொரியாவின் ஹான் கங் இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுகிறார். 
 
பலரது படைப்புகள் இலக்கியங்கள் என்று சொல்லப்பட்டாலும் அவைகள் படிக்க, ரசிக்க, பொழுதுபோக்க என்பதோடு முடிந்து போகின்றன. பட்டுக் கோட்டைப் பிரபாகரைப் போல படித்துவிட்டு எடைக்குப் போடுவதற்கு அல்ல இலக்கியங்கள்.
 
1980 இல் வெளியான ஜம்பு திரைப்படத்தில், ஜெயமாலாவின் கணநேர ஆடைவிலகளை திரைகளில் கண்டு ரசித்த அடுத்த நொடியே திரையரங்குகளை விட்டு வெளியேறியதைப் போல, இலக்கிய நாயகிகளின் அவயங்களை நாவல்களில் அங்குலம் அங்குலமாய் வர்ணிக்கும் வரிகளை மட்டுமே அசைபோட்ட வாசகர் கூட்டமும் இருந்ததுதானே?
 
இன்று கதை நாயகிகளே அனைத்தையும் அப்பட்டமாய் திரைகளில் காட்டி விட்டதால் வரிகளுக்கு இங்கே வேலை இல்லாமல் போனது‌. ‘சரோஜாதேவிகளும், பட்டுக் கோட்டைகளும் சீந்துவாரின்றி ஒதுக்கப்பட்டது இதனால்தானோ?
 
மக்களின் துன்பங்களும் துயரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த அதே வேளையில் மக்களின் பாடுகளைப் பேசிய படைப்புகளும் தோன்றாமல் இல்லை.
 
இலக்கியங்கள் மனித அவலத்தை பேசுவதோடு மட்டும் நில்லாமல் அவற்றைக் களைவதற்கான தூண்டுதலையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்;  இன்றும் உலகை வலம் வரும் மக்சிம் கார்க்கியின் தாய் நாவலைப் போல.
 
ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அப்படி ஒருவரை அடையாளம் காண்பது அத்திப்பூவாய் அல்லவோ இருக்கிறது?
 
திரைப்படச் சுருளையெல்லாம் ஒரு தீக்குச்சிக்குத் தின்னக்கொடுப்போம்என்று தீவிரம் காட்டியவர்கள் கடைசியில் திரைப்படச் சுருளுக்குள் அடைக்கலமானார்கள்,
 
புலமையையும் வறுமையையும் பிரிக்க முடியாத பாணனைக் கண்ட இலக்கிய உலகம்தான் இன்று கோடிகளில் புரளும் ஒரு சில கோமான்களைக் காண்கிறது. அச்சில் ஏற்றினால் ஆயிரங்களையும், மேடையில் முழங்கினால் பல்லாயிரங்களையும் விழுங்கும் இலக்கிய வியாபாரிகளும் இங்குதான் உள்ளனர். இன்று காசு கொடுத்தால்தான் இலக்கியச் சுவையையும் ரசிக்க முடியும். இலக்கியம் வியாபாரப் பொருளாய் மாறியதன்றோ

நூல்களின் விலை ஐம்பதோ, நூறோ என்றால் அடித்தட்டு மக்களாலும் வாங்கப்படும். ஆனால் அதுவே ஆயிரங்களில் என்றால் யாரால்தான் வாங்க முடியும்? சிறிதாய் எழுதினால் எல்லோரையும் சென்றடையுமே? ஏன் பெரிது பெரிதாய் எழுத வேண்டும்? விருதுகளுக்கும் விளம்பரத்துக்கும் இவை பயன்படுமே ஒழிய, எளியோரை ஒருக்காலும் சென்றடையாது. எளியோர் இல்லாமல் எதைத்தான் மாற்ற முடியும்?
 
தொடரும்
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்