Showing posts with label Modi. Show all posts
Showing posts with label Modi. Show all posts

Saturday, 22 November 2025

சரித்திர நாளா? தரித்திர நாளா?

44 தொழிலாளர் நல சட்டங்கள் (laws), நான்கு சட்டத் தொகுப்புகளாக (codes) 2019 இல் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கான விதிகளும் (rules) 2020 வாக்கில் உருவாக்கப்பட்டு, 01.04.2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது. இதை முன்னறிந்து, இராணிப்பேட்டை BHEL/BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் நான் ஆற்றிய உரையை அன்றே ஒரு தொடராக ஊரான் வலைப்பூவில் வெளியிட்டதோடு, அமேசானில் மென் நூலாகவும் வெளியிட்டிருந்தேன். 

“வேளாண் சட்டத்திருத்தங்களின் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். அவர்களது போராட்டம் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமல்கூட போகலாம். ஆனால் வஞ்சிக்கப்படுகிற மக்கள் எப்படிப் போராட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்களைவிடக் கொடிய தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகளின் ஆபத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டு களமாடவில்லை என்றால் எதிர்காலம் உங்களை மன்னிக்காது” 

என்று அந்தத் தொடரின் இறுதியில் எழுதி இருந்தேன். 

வேளாண் திருத்தச் சட்டங்கள் வந்த உடனேயே தாமதம் செய்யாமல் விவசாயிகள் உடனுக்குடன் களத்தில் இறங்கிப் போராடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தனர். 

சரித்திர நாளா? தரித்திர நாளா?

தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள்  21.11.2025 முதல் நடைமுறைக்கு வந்து விட்டன. முதலாளிகளுக்கு இது சரித்திர நாள். பாடுபடுவோருக்கு இது தரித்திர நாள். 

"முதலாளிகள் தொழில் செய்வதை சுலபமாக்குகிற (ease of doing business) அதே வேளையில், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிய நேரத்தில் ஊதியப்பட்டுவாடா உள்ளிட்ட  பல்வேறு நலன்களை இந்தச் சட்டத் திருத்தங்கள் உறுதி செய்கின்றன.  மகளிர் ஆற்றல் (Nari Shakti) மற்றும் இளைஞர் ஆற்றல்கள் (Yuva Shakti) மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் (Viksit Bharat)  முடுக்கிவிட இச்சட்ட திருத்தங்கள் உதவும்" என கதை அளந்துள்ளார் மோடி.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நவீன அடிமை முறையை தோற்றுவிப்பதோடு, கார்பரேட் பெரு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவே இச்சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இச்சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதோடு, அதற்காக சில போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. 

மோடி கொடுத்த ஐந்தாண்டு கால அவகாசத்தை தொழிலாளி வர்க்கம் வீணடித்துவிட்டு, தற்போது கண்டனக் குரல் எழுப்புவது ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஆகிவிட்டது. இப்பொழுதும்கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. தொழிலாளி வர்க்கம் உணர்வு பெற்றால், எதிரிகள் எல்லாம் எம்மாத்திரம்?

மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் நல சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறவில்லை என்றால் வெகுவிரைவில் இந்தியா ஒரு ஆண்டான்-அடிமைச் சமூகமாக உருமாறி நிற்கும். சமூகத்தைப் பின்னோக்கி இழுப்பது சனாதனிகளின் வேலை என்றால் அதை உடைத்தெறிந்து தொழிலாளி வர்க்கத்தை நிமிரச் செய்வது நம் அனைவரின் கடமை அல்லவா? 

ஊரான்

குறிப்பு: சட்டத் திருத்தங்களின் சாதக-பாதக அம்சங்களை விரிவாகத் தெரிந்து கொள்ள, ஊரான் வலைப்பூவில் வந்த தொடர் கட்டுரைகளையும், அமேசானில் உள்ள மென்நூலையும் வாசிக்கவும்.

Friday, 31 May 2024

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

மாலைநேர மறைவிடமாய் தமிழ்நாடு

சிறு பிள்ளைகளுக்கு 'போரடிக்கும்' பள்ளிகளின் விடுமுறைக் காலம் இது. வெளியே போகலாம் என சிறுவர்கள் அடம்பிடிக்க, மாலை ஐந்து மணி வாக்கில் அருகில் உள்ள ஜலகாம்பாறைக்குப் பயணமானோம்.  

கேரளாவில் பருவமழை தொடங்கி விட்டது, அதன் தாக்கம் திருப்பத்தூர் வரை எட்டிவிட்டதால், தூரலில் குழந்தைகள் குதூகலிக்க வெளியே அழைத்து வந்தது வீண் போகவில்லை.

ஜலகாம்பாறை வரத்தின்றி வற்றியிருந்தது. அடர்ந்த காடுகளும் நெடிதுயர்ந்த மரங்களும் நம் கண்களைக் கவர்ந்தாலும் சற்றே அச்சமூட்டும் மெல் இரவு நேரம் அது. படிகளில் ஏறி உலாவலாம் என்றால், பாட்டில்களோடு சில இளைஞர்கள் நமக்கு முன்னே மரங்களின் பின்னே ஒதுங்கினர். தமிழ்நாடே இன்று மாலை நேர மறைவிடமாய் மாறியபின் ஜலகாம்பாறை மட்டும் விதிவிலக்கா என்ன?

காடுகளையும் மலைகளையும் வயல்களையும் தோப்புகளையும் எத்தனைமுறை கண்டாலும் புதியவற்றைக் காணும் பொழுது அவை நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

நேற்று பெய்த மழையில் பூமித்தாய் நனைந்து குளிர்ந்து மலர்ந்திருந்ததால், தோட்டத்தில் சிறிது நேரம் களை எடுத்து,  பின் களைப்புக்கு சற்றே இளைப்பாரி மாலையில் தொடர் வண்டியில் வாலாஜா நோக்கிப் பயணமானேன்.

படுகளக் காட்சிபோல வலப்புறமாய் ஏலகிரி நீண்டிருக்க, கோடை மழையால் உழவு கண்ட புழுதி மண்ணின் வாசம் நாசிகளில் சங்கமிக்க, வலப்புறமும் இடப்புறமும் வரிசைகட்டி நிற்கும் தென்னைகள்  கேரளத்தை நினைவூட்ட,

சேலம்-அரக்கோணம் MEMU விரைவு வண்டியில் அறுபது ரூபாய்க்கு அலுப்பின்றி பயணமானேன். இதில் முப்பது ரூபாயை* ஆட்டயப் போட்டவன் குமரியிலே கொட்டமடிக்க, நானோ பயணத்தில் லயித்திருந்தேன்.

முடியாதவர்கள் காலை நீட்டிப் பயணிக்கவும், பதின்ம வயதினர் சன்னல் ஓர இருக்கைகளில் அரட்டை அடிக்கவும், முதுகு வலிப்போர் சற்றே எழுந்து நிற்க, நடமாடஇளைப்பாற, இருக்கைகள் ஏற்றதல்ல எனக் கருதும் உழைப்பாளிகள் தரையில அமர்ந்து இயல்பாய் பயணிக்க ஏற்ற வண்டி இது.

எளியோர்கள் பயணிக்கும் இந்த வண்டியின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்ச உணர்வோடு ஜூன் நான்கை** எதிர்நோக்கித் தூரலின் சாரல்களினூடே வாலாஜா ரோடில் இறங்கி, ஒரு தானி மூலம் இல்லம் சேர்ந்தேன்.

ஊரான்

* முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% பயணச் சலுகையை கரோனா காலத்தில் பறித்துக் கொண்டு மோடி கன்யாகுமரி வந்திருந்த போது எழுதப்பட்டது.

** ஜூன் 4 நடுவண் அரசின் வரவு செலவு தாக்கல்.

Tuesday, 21 May 2024

வங்கமே பங்கமாகும்பொழுது இனி வானரப் படைகளுக்கு சங்குதானோ?

ஒரு அவசர வேலையாக கோவையை நோக்கிப் பயணம்.‌
தொலைதூரப் பயணம், பேருந்தில் பயணிப்பது அவ்வளவு உசிதமல்ல என்பதால் தொடர் வண்டியில் பயணிக்க, தத்கல் முறையில் முதல் நாளே முயற்சித்தேன். காலை 11 மணிக்கு கைபேசியுடன் காத்திருந்தேன்.  419 இருக்கைகள் இருப்பதாகக் காட்டியது. இவ்வளவு இருக்கைகளா, கண்டிப்பாக கிடைக்கும் என நம்பி ஒரு சில நிமிடங்களில் விவரங்களை உள்ளீடு செய்து கட்டணமாக ரூபாய் 383 செலுத்தி வெளியே வந்தேன், 46, 47 என காத்திருப்போர் பட்டியலைக் காட்டியது.
 
வழமையான முறையில்தான் காத்திருப்போர் பட்டியல் என்றால் இதிலுமா? சரி, இது கதைக்குதவாது, வேறு வழியில்லை, முன்பதிவில்லாத பெட்டியில்தான் நமது பயணம் என‌ எண்ணியவாறு இன்று பிற்பகல் 300 ரூபாய் செலுத்தி இருவருக்கும் 
பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு நடைமேடையில் காத்திருந்தேன்.
 
பசியாற ஏதாவது கிடைக்குமா என அங்கே உலாவிய குரங்கு ஒன்று பயணிகளின் பைகளை நோட்டமிட, எச்சரிக்கையான பயணிகள் தங்களது பைகளைப் பாதுகாக்க, அங்கே இருந்த குப்பைத் தொட்டியைக் கவிழ்த்து ஒரு டப்பாவில் ஒட்டியிருந்த எச்சில் மிச்சத்தை மோர்ந்து பார்த்து, அது உண்பதற்கு உகந்ததல்ல என ஒதுக்கிவிட்டு அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தது அந்தக் குரங்கு. பிளாட்பாரத்தில் இருந்து நிரந்தரமாக அந்தக் குரங்கை அப்புறப்படுத்திவிட்டால் பயணிகளின் பைகளுக்கு பாதுகாப்புதானே?
 
நாங்கள் இருவரும் மூத்த குடிமக்களாக இருந்த போதும், 150 ரூபாய்க்குப் பதிலாக கூடுதலாக ஒரு 150 ரூபாயை டெல்லி வானரக் கூட்டம்  பிடுங்கிக் கொண்டதே? பிளாட்பாரக் 
குரங்கிடமிருந்து நமது பைகளைக் காக்க முடிந்த 
நம்மால்டெல்லி வானரக் கூட்டத்திடமிருந்து காக்க முடியவில்லையே என்கிற 
ஆதங்கத்தைச் சுமந்தவாறு வந்த வண்டியில் தொற்றிக் கொண்டேன்.

இங்கே 150 ரூபாயை லவட்டியது போதாது என்று தத்கல்லின் போது செலுத்திய 380 ரூபாயில் 240 ரூபாயைத்தான் திருப்பித் தருவோம் என‌குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். இது டெல்லி வானரக் கூட்டத்தின் வழிப்பறி அல்லவா? தத்கல் கதவைத் தட்டியதற்கு தண்டனையாடா இது? நான் என்ன உன்னை மாதிரி ஓசிச்சோறா? ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நகர்த்துபவன். ஏண்டா இப்படி வதைக்கிற?

முன்பதிவு பெட்டியில் ஏறி, டிடிஆர் ஐப் பார்த்து இடம் கேட்கலாம் என்றாலும் முன்பதிவில்லா பெட்டிகளில் நுழைவது என்பது ஏதோ சேரிக்காரன் ஊர் தெருவுக்குள் நுழைவதைப் போலத்தான் பல்வேறு சமயங்களில் பார்த்திருக்கிறேன். சுயமரியாதை கருதி முன் பதிவில்லா பெட்டியில் நுழைந்தேன்.

தத்கலில் முயன்று இடம் கிடைக்காதவர்கள், திடீரென பயணத்தைத் தொடங்கியவர்கள் என பலரும் முன்பதிவில்லா பெட்டியைத்தானே நாடமுடியும். பெட்டிக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நான்கு பேர் உட்கார வேண்டிய இருக்கையில் ஐந்து பேர் ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். ஒரு சில இருக்கைகளில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் அவர்களுக்கு அது இறுக்கமாகத்தான் இருந்தது. உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் உடல் உழைப்புக் குறைந்து போய் உடல் பருத்ததனாலும் வந்த விளைவு இது.

 
நீண்ட நேரம் நின்று கொண்டே பயணிக்க இயலாது என்பதால் இருக்கையின் விளிம்பிலாவது இடம் கிடைத்தால் போதும் என்றெண்ணி, ஏற்கனவே அமர்ந்திருப்பவர்களை
பரிதாபமாகப் பார்த்தால் சிலர் இறக்கப்பட்டு சற்றே நகருவார்கள். இங்கே அமர்ந்திருப்பவன் ஆண்டை போலவும், இடம் கேட்பவன் அடிமை போலவும்தான் கருதப்படுகிறான். எப்படியோ அரை மணி நேரப் பயணத்திற்கு பின் நானும் ஒரு விளிம்பில் ஒட்டிக் கொண்டேன்.

சோலையார்பேட்டையில் வட இந்திய இளைஞர்கள் சிலர் ஏறினர். என் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞனிடம் பேச்சுக் கொடுத்தேன். தான் திருப்பூரில் தையல் வேலை செய்வதாகவும், 
சோலையார்பேட்டை வரை வேறு ஒரு வண்டியில் முன்பதிவு பெட்டியில் வந்ததாகவும், அதன் பிறகு இந்த வண்டியில் முன்பதிவின்றி பயணிப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டீர்களா என்று கேட்டபோது, ஆம் என்றார். யார் வருவார்கள் என்று கேட்டபோது காங்கிரஸ் என்று கட்டைவிலை உயர்த்தினார். ஏன் மம்தா என்னவாயிற்று என்ற போது அவரது செல்வாக்கு குறைந்து வருவதாகக் கூறினார். பாஜக என்றபோது கட்டை விரலைக் கவிழ்த்துக் காட்டினார். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என வினவியபோது இனி எல்லாமே இராகுல்தான் என்றார். வங்கமே பங்கமாகும் பொழுது இனி வானரப் படைகளுக்கு சங்குதானோ?

எப்படியோ டெல்லியில் இருந்து வானரப் படைகள் விரட்டப்பட்டு நமது பைகளுக்கு  பாதுகாப்பு கிடைத்தால் சரி என்ற ஏக்கத்தோடு பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஊரான்