Showing posts with label YouTube. Show all posts
Showing posts with label YouTube. Show all posts

Friday, 2 January 2026

ஊரான் வலைப்பூ : google gemini AI யின் மதிப்பீடு!

2010 இல் தொடங்கப்பட்ட ஊரான் வலைப்பூ 600க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் 15 ஆண்டுகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பூவை பலரும் விரும்பி வலம் வந்தனர். முகநூல், எக்ஸ் தளம்,  யூடியுப், ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய பிறகு வலைப்பூக்கள் பக்கம் வாசகர்கள் வருவது வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனாலும் நான் சோர்ந்து விடவில்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். கணிசமான வாசகர்கள் வரவேற்பு கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி.

முன்பெல்லாம் எனது பதிவுகள் குறித்து வாசகர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்வார்கள். இன்று அத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். பதிவுகளை வாட்ஸ்அப்பிலும், முகநூலிலும் பகிரும்பொழுது தெரிந்த நண்பர்கள் சிலர் தங்களுடைய எண்ணங்களைப் பகிர்கின்றனர். அவர்களுக்கும் நன்றி.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய சூழலில் எனது வலைப்பூ பதிவுகளை மதிப்பீடு செய்யுமாறு google ஜெமினி AI  யிடம் கோரினேன். அதன் மதிப்பீடு, உங்கள் பார்வைக்கு...

***
To
Google Gemini AI 

https://hooraan.blogspot.com
இந்த வலைப்பூவில் உள்ள படைப்புகளின் தன்மை குறித்து சுருக்கமாக மதிப்பீடு செய்க.

"பொன். சேகர் (தமிழ்மணி) அவர்களின் 'ஊரான்' (hooraan.blogspot.com) வலைப்பூவில் உள்ள படைப்புகள் குறித்து ஒரு சுருக்கமான மதிப்பீடு:

இந்த வலைப்பூவின் படைப்புகளைப் பொறுத்தவரை, அவை வெறும் இலக்கியப் பதிவுகள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றத்திற்கான கருத்துக் கருவூலங்கள். இதன் முக்கியத் தன்மைகள் வருமாறு:

1. பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தச் சிந்தனை: இந்த வலைப்பூவின் தாரக மந்திரமே "புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை" என்பதாகும். மூடநம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பஞ்சாங்கக் கவிதை போன்றே, மற்ற பதிவுகளும் சமூகக் கேடுகளைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

2. பெண்ணியச் சிந்தனை மற்றும் சமத்துவம்: சமீபத்திய பதிவுகளில் மாதவிடாய் கால விடுப்பு குறித்த அவசியம், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல் மிக ஓங்கி ஒலிக்கிறது. பாரதி போன்ற ஆளுமைகளின் கருத்துக்களைக் கூட விமர்சனப் பூர்வமாக அணுகும் துணிச்சல் இவரது படைப்புகளில் உள்ளது.

3. சித்தர் பாடல்களின் வழி பகுத்தறிவு: "சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்" என்ற தொடர் மூலம், சிவவாக்கியர் போன்ற சித்தர்களின் பாடல்களைத் துணைக்குக் கொண்டு, உருவ வழிபாடு மற்றும் வேதங்களின் போலித்தனத்தை இவர் விளக்குகிறார். பழங்கால இலக்கியங்களிலேயே பகுத்தறிவு வேர்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுவது இவரது தனிச்சிறப்பு.

4. சமூக நீதி மற்றும் அரசியல் விமர்சனம்: மதவாதம், சாதியப் பாகுபாடு மற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் போக்குகளைச் சாடுவதில் சமரசமற்ற போக்கைக் கடைப்பிடிக்கிறார். எளிய மக்களுக்குப் புரியும் வகையில் ஆழமான தத்துவார்த்தக் கருத்துக்களைச் சாதாரணச் சொற்களில் கொண்டு சேர்ப்பது இவருடைய எழுத்தின் பலம்.

5. நடை மற்றும் பாணி: இவரது எழுத்துநடை ஆவேசமானது, அதே சமயம் தர்க்கரீதியானது (Logical). வாசகர்களிடம் கேள்விகளை எழுப்பி, அவர்களைச் சிந்திக்கத் தூண்டும் வினாபாணிகளைத் தனது கட்டுரைகளிலும் கவிதைகளிலும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.

சுருக்கமாகச் சொன்னால்: 'ஊரான்' வலைப்பூ ஒரு "நவீன காலத்துப் பகுத்தறிவுப் பாசறை". வெறும் புகழ்ச்சி பாடும் இலக்கியமாக இல்லாமல், சமூகத்தின் அழுக்குகளைத் துடைக்கும் ஒரு துடைப்பமாகத் தனது பேனாவை பொன். சேகர் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்".

நன்றி ஜெமினி.

ஊரான்

Thursday, 18 May 2023

யூடியூப் சேனல்கள்: காசு! பணம்! துட்டு! மணி! மணி!!

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, ஊடகத் துறையில் இன்று கோலோச்சுவது யூடியூப் சேனல்கள். படிப்பதை விட, பார்ப்பதும் கேட்பதும் சுலபமாகிவிட்டது மக்களுக்கு. இதை சோம்பேறித்தனம் என்பதா அல்லது நவீன தொழில்நுட்பத்துக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டார்கள் என்பதா? இதுதான் யூடியூப் சேனல் காரர்களின் மூலதனம்.

 

கொஞ்சம் குரல் வளமும், பேச்சுத் திறமையும், சில விவரங்களைச் சேகரிக்கின்ற ஆற்றலும் இருந்தால் போதும். உடனே ஒருவர் யூடியூப் சேனலைத் தொடங்கி விடுகிறார். ஏதோ சமூகத்தைப் புரட்டிப் போடுவதற்காகவே தான் யூடியூப் சேனல் ஆரம்பித்து நடத்துவதாக ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள் இவர்கள்.


ஆனால் உண்மை அதுவல்ல. வருவாயை மனதில் கொண்டுதான் இவர்கள் யூடியூப் சேனலையே தொடங்குகிறார்கள். சிலருக்கு ஆயிரங்களையும், சிலருக்கு லட்சங்களையும் வாரிக் கொடுக்கிறது யூடியூப் சேனல்கள். அவரவர் தனக்குத் தெரிந்த கலையைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். சமையல், மருத்துவம், உடல் ஆரோக்கியம், கோலம், அரசியல் என மக்களின் அன்றாடத் தேவைகள்/ பிரச்சனைகள் தொடர்பான தலைப்புகளில் யூடியூப் சேனல்கள் பல்கிப் பெருகிவிட்டன


எது, பற்றி எறிகிற பிரச்சனையோ அந்தப் பிரச்சனை பற்றி அரசியல் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டால், அது பலரிடம் சென்றடையும் என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தற்போதைய 'ட்ரெண்ட்' கள்ளச்சாராயச் சாவுகள். சில நாட்களுக்கு இது தொடரும். அடுத்து வேறு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் அதில் யாரைக் குறை கூறினால் அந்தப் பதிவைப் பலரும் பார்ப்பார்களோ, அதற்கு ஏற்ப கருத்தைத் தெரிவிப்பார்கள். மற்றபடி அந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான அறிவோ, ஆலோசனையோ அவர்களிடம் இருக்காது. சமூகத்தில் நடைபெறுகின்ற சம்பவங்கள் மக்களுக்குத்தான் பிரச்சனைக்குரியது; ஆனால் இவர்களுக்கோ அது வருமானத்துக்குரியது.


எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஆயிரம் பேரை நீங்கள் சந்தாதாரர்களாக சேர்த்துக் கொண்டால் போதும்; வருமானத்துக்கு உத்திரவாதம் உண்டு. சந்தாதாரராக சேருவதற்கு பணம் எதுவும் கிடையாது. இலவசம் தான்.


இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு பார்வைக்கும் (view) வருவாய் ரூ.0.053. 10000 பார்வைக்கு ரூ.200-500, ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.2000-5000, பத்து லட்சம் பார்வைக்கு ரூ.7000-30000, 1.5 கோடி பார்வைக்கு ரூ.150000-600000. 

என்ன தலையை சுற்றுகிறதா? இப்படித்தான் யூடியூபில் சம்பாதிக்கிறார்கள்.  கோலம் போட்டதற்கே 4000 ரூபாய் வந்ததாக எனது தங்கை மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறிய போதுதான் எனக்கு இது தெறிய வந்தது


ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலின் பதிவு ஒன்றைப் நீங்கள் பார்க்கும் பொழுது, அந்தப் பதிவை அதுவரை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அந்த மாதத்தில் அவர் எத்தனைப் பதிவுகளை வெளியிட்டிருக்கிறார், மொத்தப் பார்வைகள் எவ்வளவு என்பதையும் கணக்கிடுங்கள். அதன் பிறகு அதற்கான வருவாய் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும். மதனும், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட யூடியூபர்களும் இப்பொழுது உங்கள் கண் முன்னே வந்து சென்றிருப்பார்களே? சமையல் கலை வல்லுநர்கள் பலரும் காட்சியளித்திருப்பார்களே?


சமையல் மற்றும் மருத்துவம், உடல் நலம்  சார்ந்த யூடியூப் சேனல்களைப் பார்த்து அதன்படி ஒருவர் செய்ய/நடக்கத் தொடங்கினால் அது சம்பந்தப்பட்ட தனி நபரை மட்டுமே பாதிக்கும். அதையே அதிகமானோர் கடைபிடித்தால் மொத்த சமூகமும் பாதிக்கும். இவை எதுவும் அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரவுகள் அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அரசியல் சார்ந்து போடக்கூடிய பதிவுகள் மிகவும் ஆபத்தானவை. உண்மையை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அத்தகையப் பதிவுகள் பலரையும் சென்றடையாது. மாறாக பொய்யையும் புரட்டையும் கலந்து அடித்து ஒரு 'திரில்லர்' போல வெளியிட்டால்தான் மக்களை ஈர்க்க முடியும் என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். சும்மாவா பின்ன? பணம்! துட்டு! காசு! மணி! மணி!


பெரும்பாலான யூட்யூப் சேனல்கள் இந்த வகையைச் சார்ந்தவையே. அவர்கள்தான் அதிகமாக துட்டு பார்க்கிறார்கள். நமது அறியாமையே அவர்களது மூலதனம். புலனறிவு-பகுத்தறிவு-நடைமுறை என்கிற சுழலேனி முறையில் நாம் உண்மையைக் கண்டறியத் தவறினால் நமது 'பாக்கெட்' மட்டுமல்ல மூளையும் சேர்ந்தே 'எம்டி'யாகிவிடும்


சமூக அக்கறையோடு நடத்தப்படுகின்ற தனிநபர் மற்றும் அமைப்பு சார்ந்த யூடியூப் சேனல்களும் சில இருக்கவே செய்கின்றன. ஆனால், அவை பெரிய அளவில் மக்களால் ஈர்க்கப்படவில்லை என்பதே எதார்த்தம்.


சொல்றத சொல்லிட்டேன். யூடியூப் சேனல்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் போகிறீர்களா அல்லது ஏமாறப் போகிறீர்களா? அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது.


ஊரான்