Friday, 17 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3

 III

மன்ஹாட்டன் மடோஃப் வழியில் அதானி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வர்த்தகம் மற்றும் நிதி ஆதார மையமாக விளங்கும் மன்ஹாட்டன் (manhatten) என்கிற பகுதியைச் சேர்ந்த பெர்னார்டு லாரன்ஸ் மடோஃப் (Madoff) என்பவன் 64.8 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி) ஃபோன்சி (ponzi) முறைகேட்டுக்குப் பெயர் போன ஒரு நிதி மோசடிக்காரன். புதிய முதலீட்டார்களிடமிருந்து பணத்தைக் கவர்ந்து பழைய முதலீட்டாளர்களுக்கு லாபமாகத் தரும் ஒரு ஏமாற்று முறைக்குப் பெயர்தான் ஃபோன்சி முறைகேடு என்று சொல்லுவார்கள்.

அதானிக்கும் மடோஃபிதான் வழிகாட்டி போல. அதனால்தான் அதானி சொத்துக் குவிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை மன்ஹாட்டனின் அடோஃப்ஸ் (adoff’s of manhattan) என்ற பெயரில்தான் வெளியிட்டது. கார்ப்பரேட் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய முறைகேட்டை, உலகின் மூன்றாவது பெரிய பணக்காரனான அதானி குழும் எப்படிச் செய்துள்ளது என்பதை விளக்கி 88 கேள்விக் கணைகளோடு ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை 24.01.2023 அன்று வெளியிட்டது.

அதானி மீதான குற்றச்சாட்டுகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.70 லட்சம் கோடி. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அதன் சொத்து மதிப்பு மேலும் ரூ.8.10 லட்சம் கோடி அதிகரித்து 2022 இறுதியில் மொத்த சொத்து மதிப்பு ரூ.17.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதில் பாதிதான் அதானியினுடையது. மீதி பாதி வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன். கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளிடமிருந்து திரட்டப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால் இதை வங்கியின் பணமாகக் காண்பிக்காமல் தனது சொத்தாகக் காட்டுகிறது அதானி குழுமம்.

அதனால்தானோ என்னவா வங்கிகளிடமிருந்து அதானி பெற்றுள்ள கடன் விவரங்களை வெளியிட முடியாது என 13.03.2023 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளாரோ?  அதானி குழுமம் கடனால் வளர்ந்த நிறுவனம் என்கிற ஹிண்டன்பர்க் அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டை ஒதுக்கிவிட முடியாது என்பதைத்தான் நிர்மலா சீத்தாராமனின் பதில் நமக்கு உணர்த்துகிறது. என்னதான் முந்தானையைக் கொண்டு மூடி மறைக்க முயன்றாலும் அதானிக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) கொடுத்துள்ள ரூ.74000 கோடியும், இந்திய ஸ்டேட் வங்கி (SBI) கொடுத்துள்ள ரூ.21320 கோடியும் முந்தானையின் கிழிசலுக்கிடையில் துருத்திக் கொண்டு வெளியே தெரியத்தானே செய்கிறது.


பெரிய அளவில் உற்பத்தியில் ஈடுபடாமலேயே இவ்வளவு சொத்துக்களை அதானியால் சேர்க்க முடிந்ததற்குக் காரணம் அது ஒரு பங்குச் சந்தை நிறுவனமாகச் செயல்படுவதால்தான். 75% பங்குகள் அதானி குழுமத்தின் பெயரிலும் மீதி 25% பங்குகள் பொது மக்கள் பெயரிலும் இருப்பது போலக் கணக்குக் காட்டி ஏய்ப்பது ஒரு வகை. இதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், கரீபியன் தீவுகள் (மேற்கு இந்தியத் தீவுகள்), சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட் என பல்வேறு நாடுகளில் பினாமி பெயரில் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பினாமி நிறுவனங்களின் பெயரில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்குவதோடு கருப்புப் பணத்தை வெள்ளையாகவும் மாற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு பொருளை அல்லது எந்திரத்தை ரூ.10 கோடியாக மதிப்பைக் கூட்டி அந்த பினாமி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.9 கோடியை வெள்ளையாக மாற்றி அந்தப் பினாமி நிறுவனத்திற்கே அத்தொகை செல்வதால் அதானியின் பங்கு மதிப்பு மேலும் அதிகரிக்கிறது.  

22 இயக்குநர்களில் கௌதம் அதானிதான் மிகமுக்கிய நபர் என்றாலும் இவருடைய அண்ணன் வினோத் அதானி, தம்பி ராஜேஷ் அதானி, மைத்துனர் சமீர் ஹோரா உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இதில் இயக்குநர்களாக இருப்பதால் அதானி குழுமம் ஒரு குடும்ப நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது.

அதே வேளையில் சட்டவிரோதமாக இரும்புத் தாது மற்றும் நிலக்கரி இறக்குமதி, வைர வர்த்தகத்தில் சுங்க வரி ஏய்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற குற்றவழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் போது இவர்கள் எப்படி அதானி குழுமத்தில் இயக்குநர்களாக பதவி வகிக்க முடிகிறது? அயல்நாடுகளில் உள்ள அதானியின் பினாமி நிறுவனங்களின் பெயரில் உள்ள பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் அந்த நிறுவனங்களுக்கு எப்படி வந்தது? என அடுக்கடுக்காக 88 கேள்விகளை எழுப்புகிறது ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கை.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

Thursday, 16 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2

 II

நிகோலா

இலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பெருநிறுவனங்களாலும், பொறுப்பற்ற அரசுகளாலும், நீர்-நிலம்-காற்று என அனைத்தும் பாழாகி, மக்கள் வாழ முடியாத நிலைக்கு இப்புவிப் பரப்பு மாசடைந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இனம்புரியாத பல்வேறு புதுப்புது நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவதோடு, பலர் அன்றாடம் மாண்டும் வருகின்றனர். வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையும், சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறதுதானே!

ஒருபுறம், புவி மாசடைவதைத் தடுக்கத் தமிழகத்தில் செயல்படும் பூவுலகின் நண்பர்களைப் போல உலகமெங்கும் எண்ணற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். மற்றொருபுறம், நச்சுப் புகையை வெளியேற்றாத வாகனங்களைத் தாங்கள் வடிவமைத்துள்ளதாகவும், நச்சுப் புகையை வெளியிடாத இயற்கை எரிபொருளை கண்டுபிடித்து விட்டதாகவும் சிலர் கூறுவதை நாம் அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டுதான் வருகிறோம். இந்த வழியில் பிரபலமாகப் பேசப்பட்ட இராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.

முன்பு ‘நிகோலா மோட்டார்ஸ்’ (Nikola Motors) என்று அறியப்பட்ட, ட்ரீவர் மில்டன் என்பவரைத் தலைவராகக் கொண்ட, அமெரிக்காவைச் சேர்ந்த நிகோலா (Nikola Corporation) என்கிற ஒரு நிறுவனம் நச்சுப்புகையைக் கக்காத (zero emission) ‘லித்தியம் பேட்டரி’ மற்றும் ‘ஹைட்ரஜன் செல்’லில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறி, டிரக் வகையைச் சார்ந்த ஒரு மோட்டார் வாகனம் சாலையில் ஓடும் வீடியோவை 2020 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அத்தகைய வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வராத போதிலும், நிகோலா நிறுவனத்தின பங்குகள் உச்சத்தைத் தொட்டன. அதைத் தொடர்ந்து பிரபல ஜெனரல் மோட்டார் (GM) நிறுவனமும் நிகோலாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.

நிகோலா நிறுவனம் வடிவமைத்ததாகச் சொல்லப்படும் டிரக், லித்தியம் மற்றும் ஹைட்ரஜன் செல்லில் ஓடவில்லை, மாறாக அது சாய்வான மலைப் பாதையில் தானாக ஓடுவதாகவும், ஒரு டஜன் பொய்களைச் சொல்லி நிகோலா நிறுவனம் மக்களை ஏமாற்றுவதாகவும் கூறி, 21.09.2020 அன்று ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கையை வெளியிட்ட அடுத்த சில நாட்களில், நிகோலா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 30% அளவுக்கு மளமளவென சரிந்தது. இதைத் தொடர்ந்து ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனமும் நிகோலாவுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டது.

க்ளோவர் ஹெல்த்

மருத்துவம் மற்றும் காப்பீடு தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான க்ளோவர் ஹெல்த் (Clover Health) என்ற நிறுவனம் முதலீட்டார்களை தவறாக வழிநடத்தி சொத்துக் குவித்து வருதாக அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட பிறகு க்ளோவர் ஹெல்த் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 12.3% சரிவைக் கண்டது.

மேற்கண்ட இரு நிறுவனங்கள் மட்டுமன்றி, 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மோசடிகளை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை 2023, ஜனவரி 27 ஆம் தேதிவரை பலருக்கும் ஹிண்டன்பர்க் என்றால் என்னவென்றே தெரியாது.

அதானி

மோடி ஆட்சிக்கு வரும் வரை இந்தியாவைப் பொருத்தவரை டாடா-பிர்லா என்கிற இரு பெருமுதலாளிகளைத்தான் நாம் அறிவோம். 1857 ல் தொடங்கப்பட்ட பிர்லா நிறுவனம் சிமெண்ட், ஜவுளி மற்றும் இரசாயணம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும், 1868 ல் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம் ஜவுளி, இரும்பு, நீர் மின் நிலையங்கள், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

அதன் பிறகு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து 1966 ல் தொடங்கப்பட்ட அம்பானி மற்றும் 1988 ல் தொடங்கப்பட்ட அதானி ஆகிய இரு நிறுவனங்களும் முதலில் பலருக்கும் பரிச்சயமில்லாத நிறுவனங்களாக இருந்து வந்தன. இவர்களைத்தவிர கோத்ரெஜ், பஜாஜ், மித்தல், ஜிண்டால் என பல்வேறு முதலாளிகளும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், இன்று குறிப்பாக மோடி பிரதமராக வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோலியம், ஜவுளி, இரசாயணம், துறைமுகங்கள், மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவர் மட்டுமே கொடிகட்டிப் பறக்கின்றனர். அதிலும் குறிப்பாக அதானி கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்கார முதலாளியாகவும் உலகின் மூன்றாவது பெரிய பணக்கார முதலாளியாகவும் வளர்ந்து நிற்கிறார்.  இது எப்படிச் சாத்தியமானது?


நேற்றுவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக இருந்த நம்ம ஊர் பிரமுகர் ஒருவர் திடீரென சில லட்சங்களைச் சேர்த்துவிட்டால் உடனே நாம் கொந்தளிக்கிறோம். அதுவும் அவர் மாற்றுக் கட்சிக்காரர் எனில் வறுத்தெடுத்து விடுகிறோம். இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஒருவன் திடீர் பணக்காரனாக வளரமுடியும் என்பது நாம் அறிந்த பால பாடம்.

அரசியல்வாதிகள் மக்களோடு சேர்ந்து வாழ்வதாலும் பழகுவதாலும் அவர்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரு முதலாளிகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாததால், பெருமுதலாளிகள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவதற்கான வாய்ப்பும் இல்லை அல்லது தெரிந்து கொள்வதற்கு நாம் முயற்சிப்பதும் இல்லை.

அதனால்தான், அதானி எப்படி உலகின் மூன்றாவது பணக்காரனாக வளர முடிந்தது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவன் வந்து நமக்குப் புரிய வைக்க வேண்டி உள்ளது. இதற்காக நாம் வெட்கப்படத்தானே வேண்டும்.

தொடரும்...

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, 15 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி!

 I

ஹிண்டன்பர்க்

1937, மே மாதம் 3 ம் தேதி மாலை 7.36 மணிக்கு ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரிலிருந்து புறப்படுகிறது அந்த வான்கப்பல். ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பட்ட அந்த வான்கப்பல் 97 பேரைச் சுமந்து கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலின் மேலே அமெரிக்காவை நோக்கி வானில் சிறகடித்துச் செல்கிறது.

கடல் வழியாகப் பயணம் செய்யும் நேரத்தைவிட பாதி நேரத்தில் வான்வழியாகப் பயணம் செய்தால் அமெரிக்காவை அடைந்துவிட முடியும் என்பதாலும், பியானோ இசையின் மயக்கத்தில், அறுசுவை உணவோடு, சிகரெட் வளையங்களை இரசித்தவாறு வான்கப்பலில் பயணிப்பதென்றால் அந்தக் காலத்தில் யாருக்குத்தான் பிடிக்காது.

மே மாதம் 6 ம் தேதி காலை 6.00 மணிக்குத் தரை இறங்க வேண்டிய அந்த வான்கப்பல், மோசமான வாநிலை காரணமாக, மாலை 6.00 மணிக்குத் தரை இறங்குவது எனத் திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. தரை இறங்க வேண்டிய நியூயார்க் நகரின்மேல் மாலை 3 மணி அளவில் வட்டமடிக்கிறது அந்த வான்கப்பல்.

ஆனால் தரை இறங்குவதற்கு முன்பாகவே, ஹைட்ரஜன் வாயுக் கசிவால் அந்த வான்கப்பலில் தீவிபத்து ஏற்படுகிறது. வான்கப்பல் தீப்பற்றி எறிவதைக் கண்ட சிலர் வான்கப்பலிலிருந்து குதித்து உயிர் பிழைக்கின்றனர். 35 பேர் வான்கப்பலோடு தீயில் கருகி மாண்டு போயினர். ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்பட்டு வந்த வான்கப்பல் பயணம் அத்தோடு முடிவுக்கு வருகிறது.

அந்த வான்கப்பலுக்கு ஹிட்லரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்கிற கோயபல்ஸின் கோரிக்கை ஏற்கப்படாததால், ஜெர்மனியின் முன்னாள் அதிபர்களில் ஒருவரான பால் வான் ஹிண்டன்பர்க் என்பவரின் நினைவாக “ஹிண்டன்பர்க்” என்று அந்த வான்கப்பலுக்குப் பெயரிடப்படுகிறது. வான்கப்பல் வரலாற்றில் ஹிண்டன்பர்க் விபத்து ஒரு கோர விபத்து என்பதால் அது வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

கல்வெட்டுகளும், ஏடுகளும் வரலாறுகளை சுமந்த அன்றைய காலமானாலும், வான் அலைகளின் மூலம் தாவி வரும் இன்றைய டிஜிட்டல் காலமானாலும், யாரோ ஒரு சிலர் வரலாற்றை நினைவூட்டும்போதுதான் அவை மக்களிடையே எடுத்துச் செல்லப்படுகின்றன.

உலகெங்கிலும் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்வதற்கென, அமெரிக்காவைச் சேர்ந்த நாதன் ஆண்டர்சன் என்பவர் 2017 ம் ஆண்டு, தான் தொடங்கிய ஒரு நிதி ஆய்வு நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என பெயரிட்டபோது, ஹிண்டன்பர்க் வான்கப்பலும் அந்தக்கோர விபத்தும் நம் கண்முன் தோன்றத்தானே செய்கிறது.

ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்பட்டு வந்த வான் கப்பல் பயணத்தை ஹிண்டன்பர்க் கோர விபத்து முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போல, நிதி மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களின் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தனது ஆய்வு நிறுவனத்திற்கு ஒருவேளை ஹிண்டன்பர்க் என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் ஆண்டர்சன் தனது நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என பெயரிட்டிருக்கக் கூடும்.

தொடரும்

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).


Sunday, 15 January 2023

உழவர்களை உழைப்பின் உச்சாணியில் வை!

எல்லா நாட்களையும் போலத்தான் பண்டிகை நாட்களும்! எனது நீண்ட நெடிய உளவியல் இதுதான். உழைப்பை மதிப்பதும், போற்றுவதும் மட்டுமே மகத்தானது எனக் கருதுபவன் நான். உழைக்கும் ஒவ்வொரு நாளும் எனக்குச் சிறப்பு நாட்கள்தான். அதனால்தான் உழைக்காத சோம்பேறிகள் மீது, அவர்கள் எவ்வளவுதான் பிரபலமானவர்களாக இருந்தாலும், எனக்கு அவர்கள் மீது மரியாதை எதுவும் ஏற்படுவதில்லை. 

யாரெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உழைப்பில் ஈடுபடுகிறார்களோ, அதாவது உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உழைக்கின்றார்களோ அவர்கள்தான் உழைப்பின் உச்சாணியில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள். இதில் முதலிடம் வகிப்பவர்கள் உழவர் பெருமக்களே. 

உழவர் பெருமக்கள் உள்ளிட்ட உழைப்பாளர்களின் வாழ்வு மலர யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களும் போற்றப்பட வேண்டியவர்களே. அதனால்தான் காரல் மார்க்ஸ் உலக உழைப்பாளர்களின் உள்ளத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

சங்கிகள் எதை உளப்பூர்வமாக ஏற்காமல், பட்டும் படாமலும் சற்றே ஒதுங்கியும் இருக்கிறார்களோ அந்த நாட்களெல்லாம்தான் எனக்குச் சிறப்பு நாட்களாகத் தோன்றுகிறது. எனது தற்போதைய உளவியல் அதைத்தான் உணர்த்துகிறது. 

அந்தப் பட்டியலில் உழவர் பெருநாள், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல் இவையெல்லாம் ஒன்றிணைகிறது. 

உயிர் வாழ ஆதாரமாய்த் திகழும் உழவர் பெருநாளையும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவம் கண்ட வள்ளுவனையும் உயர்த்திப் பிடிப்போம். பிறப்பிலேயே பேதம் காணும், உழவுத் தொழிலை இழி தொழில் என பழித்துரைக்கும் சங்கிகளை, வேங்கடத்திற்கு வடக்கே விரட்டியடிப்போம். காவிச் சாயம் பூசி வரும் எடுபிடி சங்கிகளுக்குப் பாடை கட்டுவோம்.

ஊரான்

Wednesday, 11 January 2023

பதிப்புலகம் பாட்டாளிகளை நோக்கிப் பயணிக்குமா?

‌‌08.01.2023 ஞாயிறு அன்று முற்பகலில் நந்தனம் ஒய் எம் சி ஏ வில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் மாலையில் தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் மாத இதழான சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழா என இரு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.‍‌ ‌‌

காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்து வெறும் கழுகுப் பார்வையோடு பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்த எனக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி ஒருபுறம் நேர்மறை எண்ணங்களையும் மற்றொருபுறம் எதிர்மறை எண்ணங்களையும் என்னுள் ஏற்படுத்தியது.

கட்டுக் கட்டாய் பொன்னியின் செல்வன்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தாலும், "இவர் தமிழர் இல்லையென்றால் வேறு யார்தான் தமிழர்?" என்ற வினாவோடு கைத்தடியில் வீரு நடை போடும் பெரியாரே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் நாயகன்.
யாரெல்லாம் கருத்துக்களை விதைத்துச் சென்றார்களோ அவர்களே வரலாறு நெடுக தொடர்ந்து கடத்தப்படுவார்கள் என்பதை அரங்குகளில் முறுவலித்த அண்ணாவையும், ஆனந்தச் சிரிப்போடு கலைஞரையும் பார்த்தபோது எனக்குத் தோன்றியது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அடிமைகளும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் அசை போடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை சொல்லாமலேயே உணர்த்தியது புத்தகக் கண்காட்சி.

மார்க்சியக் கோட்பாடும், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைகளுமே இனி தேவை என்பதை ஆங்காங்கே விரவிக் கிடக்கும் முற்போக்கு நூல்கள் நமக்கு உணர்த்துகிறது. 

வண்ணத் திரை நட்சத்திரங்களையும் மிஞ்சும் வகையில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிலைகள் பலரை வசீகரித்துக் கொண்டிருந்தன.

அல்லவற்றைப் புரிந்து கொண்டால்தான் நல்லவற்றை நாட முடியும் என்பது போல பிற்போக்கு நூல்களையும் படித்தால்தான் முற்போக்கு நூல்களின் தேவையை உணர முடியும்.  ஏதோ ஒரு வகையில் எல்லாமும் நமக்கு தேவைப்படுபவைதான்.

பொன்னியின் செல்வனைப் புரட்டிப் பார்க்க, வேள்பாரியை விரித்துப் படிக்க, சங்க இலக்கியங்களை ஊடுருவிப் பார்க்க, வேதங்களின் வேர்களைத் தேட, மூலதனத்தை முத்தமிட ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, ஆயிரம் ஆயிரமாய் நோட்டுக் கட்டுகள் இருந்தால்தான் முடியும் போல. 

வர்க்க உணர்வு உள்ளவனோ வறியவனாய் இருக்க, வாங்கிப் படிக்க வசதி உள்ளவனை மட்டும் நம்பினால் மாற்ற‌‌ம் வந்து விடுமா என்ற வினாதான் எஞ்சி நிற்கிறது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவத்தை ஓரடியில் அடித்துச் சொன்னான் ஐயன் அன்று. பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்"?, ஒரு சில பக்கங்களில் மாமிகளைக்கூட மடைமாற்றுகிறது.  

ஆனால் இன்று, பலர் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார்கள்,  அவர்களுக்குள்ளேயே அது முடங்கிப் போகிறது.   வாழ்க்கைப் பாடுகளை, ஓரிரு பக்கங்களில், மக்கள் மொழியில் எளியோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் இன்றைய தேவையும் கூட.

ஆயிரம் பக்கங்களைக் கொண்ட பகவத் கீதையை வெறும் 260 ரூபாய்க்கு  நாக்பூரில் இருந்து கடத்தி வருகிறான் தமிழ்நாட்டுக்கு. 50 பதிப்புகளில் 5 லட்சம் பிரதிகளைக் கடந்து எதிரி ஊடுருவிக் கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ, நான்கு பதிப்புகளில் நாற்பதாயிரம் பிரதியைக் கடந்ததற்கே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம்.  படைப்புலகம் இதை பரிசீலிக்கவில்லை என்றால் வரலாறு உங்களை மன்னிக்காது.

காரிருள் சூழ்ந்தால் வயல்கள் துளிர்க்கும், காவி இருள் சூழ்ந்தால் களைகள் முளைக்கும். காவி இருள் ஏற்கனவே தமிழகத்தை சூழ்ந்து விட்டது‌. ஆங்காங்கே களைகள் முளைத்து விட்டன. களைகளைப் பிடுங்கி எறியவில்லை என்றால், வயல்களில் ஒரு குண்டு மணிகூட மிஞ்சாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது மார்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் "சிந்தனையாளன்" பொங்கல் மலர் வெளியீட்டு விழாவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கமும்.

பேராசிரியர் சுப வீரபாண்டியன், பேராசிரியர் கருணானந்தம், தோழர் தியாகு, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஒரு சில பாடங்களை உணர்த்தியது.

சனாதனம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சி உள்ளிட்ட சங்பரிவாரக் கும்பலை வீழ்த்த வேண்டுமானால், முற்போக்கு பேசுபவர்கள் வெகுமக்கள் இருக்கிற மேடைகளைப் பயன்படுத்த வேண்டும். திமுக மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அங்குதான் பெருவாரியான வெகுமக்கள் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் திமுகவை ஒதுக்கி வைத்துவிட்டு சனாதனத்தை வீழ்த்துவது என்பது சாத்தியமா என்பதையும் யோசிக்க வேண்டும். 

குடிநீரில் மலம் கலக்கும் சிந்தனை கொண்ட மக்களை வைத்துக் கொண்டா காவிகளை வீழ்த்த முடியும்? சனாதன சிந்தனையிருந்தும், சனாதன வாழ்க்கை முறைகளிலிருந்தும் வெகுமக்களை மீட்டெடுக்காமல் சங்பரிவாரக் கூட்டத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.‌‌ முற்போக்கு பேசுபவர்கள் வெகு மக்களை நோக்கிச் செல்வதைத் தவிர இதற்கு வேறு வழி ஏதுமில்லை.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சி: எதற்காக?‌‌

சென்னை புத்தகக்‌ காட்சி: அப்படி என்னதான் இருக்கிறது அங்கே?