Thursday, 15 August 2024

ஹோமியோபதி மருத்துவர் கொரட்டூர் சீனிவாசன் மறைந்தார்!

திருச்சி பெல் நிருவனத்தில் நான் பணியாற்றிய போது, போனஸ் தொடர்பான  ஒரு போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அது முதல் மூட்டு வலி என்னை ஆட்கொண்டு முடக்கிப் போட்டது. வேலூர் ஹோமியோபதி மருத்துவர் ஜக்ரியா அவர்களின் தொடர் கண்காணிப்பால் முடங்கிக் கிடந்த நான் மெதுவாய் மீண்டு வந்தேன். அது ஒரு மறுபிறப்பு. அதன் பிறகுதான் இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் புதிதாய் மீண்டும் பணிக்குச் சேர்ந்தேன். 

மூட்டு வலி இன்னும் முழுமையாய் நீங்கிவிடவில்லை என்பதால், பணிக்குச் செல்லும் போது நான் தாங்கித் தாங்கிதான் அலுவலகம் செல்வேன். அலோபதி மருத்துவம் என்னை அலசிப் பார்த்தது. சென்னை அப்பலோவில் 'போன் ஸ்கேனிங்' கூட எடுத்துப் பார்த்தார்கள். மூட்டு வலிக்கான காரணத்தையே கண்டறிய முடியாத போது, நம்பிப் பயனில்லை என்பதால் அலோபதியை கைவிட்டு மீண்டும் ஹோமியோபதியை நாடினேன். 

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பணியாற்றிய 20 ஆண்டு காலத்தில். அலுவலகத்தைத் தாண்டி நான் அடிக்கடி சென்று வந்த இடம் சென்னை கொரட்டூர். ஞாயிற்றுக் கிழமைகளில் மாதம் தவறாமல் ஒரு நாள் அங்கு சென்று விடுவேன். கொரட்டூர் இரயில் நிலையத்திலிருந்து கொடிநடையாய் நடந்து சென்று பத்து நிமிடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை அடைந்து விடுவேன். நடக்க முடியாத போது தானியிலும் சென்றதுண்டு. அதன் பிறகு கொரட்டூரிலேயே வேறு வேறு இடங்களுக்கு அவர் மாறிய போதும் தொடர்ந்து நான் அங்கும் சென்று வந்தேன்.

அங்குதான் அவரது ஹோமியோபதி கிளினிக் இருந்தது. ஒரு துயரரை முதல் முறையாகப் பார்க்கும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலே அவருடன் உரையாடுவார். நோய்க்கான காரணங்களைக் கண்டறிவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்.

நோய் குறித்த அவரது உரையாடல் அச்சமூட்டுவதாக இருக்காது; மாறாக நோயை எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை, நம்பிக்கையைத் தூண்டுவதாகவே இருக்கும். நாம் கேட்கிற சந்தேகங்களுக்கு பொறுமையோடு பதில் அளிப்பார். அவரது உரையாடல் நோயோடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி சமூக நடப்புகள் மீதும் இட்டுச் செல்லும். உலக நடப்புகள் குறித்தும் பேசுவார்.  அதனால்தானோ என்னவோ அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருடனான உரையாடலே என்னை உற்சாகப்படுத்திவிடும் என்பதால், அதன் பிறகு ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? சில ஆண்டுகளுக்குப் பிறகு மூட்டு வலியிலிருந்து நான் முற்றிலுமாக விடுபட்டேன். 

எனது குடும்பமே அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. நாங்கள் எதிர்கொண்ட பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கும் ஒரு மருத்துவராக, ஒரு ஆசானாக நின்று வழிகாட்டி இருக்கிறார். நான் பெரிதும் மதிக்கும் எனது பெரியப்பாவைப் போன்றவர் அவர். அவர் இல்லையேல் நான் என்றோ துவண்டு போயிருப்பேன். 

ஆம்! இன்று முதல் அவர் இல்லை. துயரத்தில் நான் துவண்டு போய் உள்ளேன். இத்துயரிலிருந்து நான் மீள, மீண்டும் அவரேதான் துணை புரிவார். ஆம், அவருடனான நினைவுகள் ஆற்றல் மிக்கது. அத்தகைய நினைவுகளே என்னைத் தூக்கி நிறுத்தும். 

ஹோமியோபதியர்கள் மத்தியிலே அவர் ஒரு கலங்கரை விளக்கம். அவர் ஒரு அரசு ஊழியராக இருந்தும் ஹோமியோபதியை முறையாகக் கற்றுப் பட்டம் பெற்றார். அதற்காகவே ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டார். மருந்துகளை ஜெர்மனியிலிருந்தே தருவித்தார். 

குப்பி குப்பியாக பல மருந்துகளைக்  (multy medicine) கொடுத்து காசு பார்ப்போர் மத்தியில், ஹோமியோபதி மருத்துவக் கோட்பாடு கூறுவதுபடி மிகக் குறைந்த அளவு மருந்தை மட்டுமே (single dose) அவர் கொடுப்பார். அதற்காக அவர் 'சிங்கிள் டோஸ்' சீனிவாசன் என்றே அழைக்கப்பட்டார். கொரட்டூரிலேயே அவர் சிகிச்சை அளித்து வந்ததால் அவர் "கொரட்டூர் சீனிவாசன்" என்றும் அறியப்பட்டார். 
மிகக் குறைந்த அளவு கட்டணத்தையேப் பெற்றுக் கொள்வார். துயரர்கள் நம்பிக்கைக்காக, கூடவே பிளாசிபோவும் கொடுத்தனுப்புவார். 


சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு, இந்தியா ஏன் உலக அளவிலும் ஹோமியோபதி மருத்துவத் துறையில் அவர் பிரபலமானவர். ஆங்கிலத்தில் எண்ணற்ற மருத்துவக் கட்டுரைகளை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஹோமியோபதியைக் கற்றுக் கொடுப்பதில் மிகச்சிறந்த ஆசிரியர். எண்ணற்ற இளம் ஹோமியோபதி மருத்துவர்களை பயிற்றுவித்து நாட்டுக்கு அளித்தவர். 

எப்பொழுதும் என் நினைவில் நீங்கா இடம் பிடித்தவர் அவர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவரை நினைத்ததுண்டு. சென்று பார்க்கலாம் என்றுகூட ஆவல் எழுந்தது. ஐயகோ! என் செய்வேன்? இன்று அவர் மாண்டு விட்டதாக தோழர் ஒருவர் இரவு 8 மணிக்கு செய்தி அனுப்பி இருந்தார். காலையிலேயே தெரிந்திருந்தால் கூட அவரது உடலையாவது நேரில் பார்த்திருக்க முடியும். அந்த வாய்ப்பும் எனக்குக் கிட்டாமல் போய்விட்டது. 

என்னைப் பொருத்தவரை அவர் மறையவில்லை. என்னுள் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் இம்மண்ணில் இருக்கும் வரை நினைவுகளால் அவர் எனக்கு வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையோடு, ஹோமியோபதி மருத்துவர் ஐயா கொரட்டூர் சீனிவாசன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலுடன் என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.

பொன்.சேகர்

Tuesday, 13 August 2024

ஆன்மாவும் ஆழ்ந்த இரங்கலும்!

ஒரு மனிதன், தன் வாழ்நாளில் பார்க்கின்ற, கேட்கின்ற, ருசிக்கின்ற, நுகர்கின்ற, உணர்கின்ற அத்தனை தகவல்களையும் தொகுத்துப் பார்த்து, தனக்கான ஒரு கருதுகோளை அல்லது உளவியலை உருவாக்கிக் கொள்கிறான். அதுவே அவனது உளவியலின் சாரம். இதற்கு ஏற்பவே, அவனது சிந்தனையும், ஆளுமையும் வெளிப்படுகிறது. 
 
துயரப்படுவோர் மீதான கழிவிரக்கம், கொடும் குற்றங்களுக்கு எதிரான கோபம், மன நிறைவு தரும் மகிழ்வான தருணங்கள் என ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்துவது அவனது உள்ளார்ந்த உளவியல் சாரத்தைத்தானே?

 
இந்த உள்ளார்ந்த உளவியல் சாரம், அனைவருக்கும் உண்டுதானே? இதுதானே அவனது ஆன்மாவாகவும் இருக்க முடியும். இங்கே பக்தியை மட்டும் ஆன்மாவோடு முடிச்சுப் போடுவது ஒருதலையானது. பக்திமானின் சாரமும் பகுத்தறிவாளனின் சாரமும் தன்மையில் வேறுபட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் சாரம் இருக்கும்தானே?
இப்படித்தான் வாழ வேண்டும் என ஒருவன் தனக்காக வகுத்துக் கொண்ட வழிமுறைதான் ஆன்மீக நெறி என்றால் அது சரிதானே?
 
எனவே, ஆன்மா அல்லது ஆத்மா பக்தியோடு மட்டும் தொடர்புடையதாகப் பார்ப்பது பிழையானது. ஆன்மீகம் என்கிற உளவியல் சார்ந்த மனித சாரம் அனைவரிடமும் குடிகொண்டுள்ளது.
 
ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகு, அந்த மனிதனின் உளவியல் சார்ந்த சாரமும் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், அவன் வெளிப்படுத்திய அவனது சாரம்  பிறரால் உள்வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.
 
ஒருவனுக்குக் கெடுதல் செய்தால், அவனது ஆவி அல்லது ஆன்மா அல்லது ஆத்மா 'உன்னை சும்மா விடாது' என கெடுதல் செய்வோரை எச்சரிக்கும் நோக்கிலும் இந்த ஆன்மா கோட்பாட்டை பலரும் நம்புகின்றனர்.

பிறருக்காய் ஓயாது உழைத்தவர்கள் இதுவரை பட்டது போதும் என்பதனாலோ,
இதுவரை பிறரை பாடாய்ப் படுத்தியது போதும், இனியும் படுத்த வேண்டாம் என்பதனால்தானோ என்னவோஒருவரின் உயிர் பிரிந்த பிறகு,
அவர் எவராயினும், ‘அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என ஆழ்ந்து இரங்குகிறதோ நம் மனம்?
 
ஒரு மனிதனின் உளவியல் சாரத்தைத்தான் நான் ஆன்மாவாக அல்லது ஆத்மாவாக புரிந்து கொள்கிறேன். ஆன்மா நம் கண்ணுக்குப் புலப்படாதது, ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகும், அது உலவிக் கொண்டிருக்கிறது அல்லது பிரிதொரு உடலில் மீண்டும் தஞ்சமடைகிறது அல்லது அடைக்கலமாகிறது என்கிற புனைவு பொருத்தமற்றது என்றே நான் கருதுகிறேன்.
 
புறத்தே இருந்து பெறப்படும்  உள்ளீடுகள் மாறும் பொழுது அல்லது வேறுபடும் பொழுது ஒரு மனிதனின் உள்ளார்ந்த உளவியல் சாரமும் வேறுபடத்தானே செய்யும். ஆன்மா நிலையானது என்பதும் இங்கே நிலையற்றதாகிறது. இங்கே, பழைய ஆன்மா முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய ஆன்மா தோன்றுவதும் இயல்புதானே? எனவே, ஆன்மா அழிவற்றது என்ற கருதுகோளும் இங்கே அடிபட்டுப் போகிறது.
 
வாகனங்கள் பரபரக்கும் சாலையைக் கடந்து செல்ல பரிதவிக்கும் ஒரு மூதாட்டியைக் கரம் பிடித்து மறுபக்கம் சேர்ப்பவனுக்கோ ஆத்ம திருப்தி.
 
பசியால் வாடும் ஏழைகளின் பசியாற்றுவதில் சிலருக்கு ஆத்ம திருப்தி.
 
கோடி கோடியாய் கொள்ளை அடித்ததில்
நலிந்தோரின் துயர் துடைக்க
கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பதில் ‘வள்ளல்களுக்கும்’
ஆத்ம திருப்திதானே?
 
கொடுஞ் செயல் புரிவோனை, தடுக்கத் துணிவில்லை என்றாலும் நாக்கப் பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டு விட்டால் சிலருக்கு ஆத்ம திருப்தி.
 
கெட்டழியும் இச் சமூகத்தை சீராக்கத் துடிக்கும் இளைஞனின் நெஞ்சக் குமுறல் அவனது ஆத்மாவின் வெளிப்பாடுதானே?
 
பார்ப்பதையெல்லாம் பதிவாய்ப் போடுவதில் எனக்குள் எழுவதும் ஒரு ஆத்ம திருப்திதானே?
 
துணிந்தவனின் ஆன்மா ஆக்கபூர்வமானது. கோழைகளின் ஆன்மா கதைக்கு உதவாதது.
 
உங்களிடம் இருப்பது எத்தகைய ஆன்மாவோ?

ஊரான்

கொட்டும் மழையும் மொட்டை வெயிலும்! எங்கே நிழற் கூரை?

இன்று, ஹோண்டாவும் யமஹாவும்,
ரெய்டரும் ஃப்ரீடமும், ஸ்ப்லெண்டரும் ராயல் என்ஃபீல்டும், ஸ்கூட்டியும் ஆக்டிவாவும், ஆக்ஸசும் ஃபிளஷரும் என மாந்தரை சுமந்து செல்ல வித விதமாய் வாகனங்கள். 
எல்லாம், அறிவியலின் ஆக்கங்கள்! எல்லையில்லை, இனியும் வரும் புதிது புதிதாய்!

அன்று, எலிகளையும் எருமைகளையும், பூனைகளையும் நாய்களையும், மயில்களையும் கிளிகளையும், ஆடுகளையும் மாடுகளையும், சிங்கம் புலி மான்களையும், கடவுளரின் வாகனமாய் கற்பித்தான் கற்பனையில்! கடவுளோடு வாகனங்களையும் வணங்குகின்றோம். கட்டுண்டு கிடக்கின்றோம் இன்றும்!

கடந்த ஆண்டு, ஒரு நாள் 
சிவனை சுமக்கும்  தெருவோர பைரவனும், எனை சுமக்கும் ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், எனது முழங்கைதான் முறிந்து போனது! கடவுளர்தான் கற்பனையே ஒழிய அவைகளின் வாகனங்கள் நிஜம்தானே? நிஜம் என்றால் நிதானம் தேவைதானே? 

அன்றிலிருந்து இன்று வரை என்னை நானே சுமக்கின்றேன். குறும் பயணம் என்றால் தானியும், நெடும் பயணம் என்றால் பேருந்தும் என பழகிக் கொண்டேன்.

இன்று, நவீன ஆலைகளின் பேட்டைக்குப் பெயர் போனது இராணிப்பேட்டை. பாக்குக்கும் பஞ்சுக்கும் வெற்றிலைக்கும் சில்குக்கும் என, அன்றே தொன்மையான தொழிற்பேட்டையாய் உருவெடுத்து;
1866 இல் தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாய் பரிணமித்தது 
வாலாஜா பேட்டை.

பெருக்கெடுக்கும் மழை நீரை தடுப்பேதுமின்றி வழிந்தோடும் வகையில் நகரம் அன்றே வடிவமைக்கப்பட்டதால், புயலும் பெரு மழையும் ஒரு பொருட்டே அல்ல; இன்றும் கூட! இப்படி வாலாஜாவிற்கென பெருமைகள் பல உண்டு.

மாவட்டத் தலைநகரம் இராணிப்பேட்டை ஆயினும், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையை தன்னகத்தே கொண்டிருப்பதால் மாவட்டத்தின் 
நாற்திசைகளில் இருந்தும் அன்றாடம் நூற்றுக்கணக்கில் துயரர்கள் நாடி வருகின்றனர்.

ஒரு அலுவல் வேலையாய் பேருந்தில் வந்த நான் 
மருத்துவமனை வளாகப் பேருந்து நிறுத்தத்தில் வீடு திரும்பக் காத்திருந்தேன். தென்மேற்குப் பருவ மழை காலம் இது. கீழடுக்கு மேலடுக்கு சுழற்சியினால் இரவு நேர மழையினால்  நகரம் குளிர்ந்தாலும் பகல் நேர வெயிலோ மண்டையைப் பிளந்தெடுக்கும்.

மருத்துவமனை வளாகத்தில் நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நகருவதால் 
துயர் நீங்கி திரும்பும் மக்கள்  மொட்டை வெயிலிலும் கொட்டும் மழையிலும் பேருந்துக்காகக் காத்திருக்கும் அவலம்.
ஒதுங்க ஒரு நிழற் கூரை இல்லை. 
இதுவே எளிய மக்களின் ஏக்கப் பெருமூச்சு. ஏரெடுத்துப் பார்க்குமா மாவட்ட நிர்வாகம்? பெருமை சேர்க்குமா வாலாஜா நகராட்சி!

ஊரான்
 

x
x


Saturday, 10 August 2024

உள் ஒதுக்கீடும், 'தலித்' அரசியலும்!

பட்டியல் சாதிகளுக்குள்ளும், படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. சேரி அமைப்பில், குடியிருப்புகளும் அந்தந்த சாதிக்கு ஏற்ப வேறு வேறாகத்தான் அமைந்துள்ளன. அவர்கள் தனித் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கக் கூடியது. இந்துச் சாதிய சமூக அமைப்பில் ஒவ்வொரு சாதியும் மேலே உள்ள சாதியால் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகின்றனர். 

சாதி இந்துக்களால், பட்டியல் சாதியினரே தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது ஒன்றுதான் இவர்களுக்கிடையிலான மிக முக்கியமான பொதுவான அம்சம். அதனால்தான் பட்டியல் சாதியினரை தீண்டத்தகாதவர்கள் (untouchables) என்றே அம்பேத்கர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தி உள்ளார்.

தீண்டத்தகாதவர்களுக்கிடையிலும் படி நிலை சாதி அமைப்பு முறையில் ஏற்றத் தாழ்வுகளும் பாகுபாடுகளும் நிலவுவதால், இவர்கள் அனைவரையும் தலித் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி, இவர்கள் எல்லாம் ஒன்று போலக் காட்டுவது பொருத்தமற்றது என்பதே எனது புரிதல்.

இந்து மதம் இருக்கிற வரை சாதி இருக்கும். சாதி இருக்கிற வரை ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கும். 


முதலில் சாதிப்பற்றாகத் தொடங்கி, பிறகு அதுவே சாதி வெறியாக மாறி, தனது சாதிக்காரர்களுக்கு மட்டுமே சலுகை காட்டும் போக்கு அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருப்பதால்தான் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற சாதியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.

பட்டியல் சாதி உள் ஒதுக்கீடு குறித்த சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் சாதியினருக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குள்ளும் நாடு முழுவதும் ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது.

எனவே, இன்றைய சூழலில், இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில், OC, BC, OBC, MBC, SC, ST மற்றும் சிறுபான்மையினர் என வகைப்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதிக்கும் அவரவர்களுக்கு உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து விடுவதுதான் இட ஒதுக்கீடு சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட முடியும். 

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பதனால் ஒருவருக்குத் தனிப்பட்ட திறமைகள் எதுவும் தானாக வந்து விடுவதில்லை. மாறாக, ஒருவர் பெறுகின்ற கல்வியும் பயிற்சியும் மட்டுமே அவரின் திறமையைத் தீர்மானிப்பதால், திறமை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

எனது 40 ஆண்டுகால பெல் நிறுவன அலுவலக அனுபவத்தில், மக்கு ஐயர்களையும் பார்த்துள்ளேன், 
திறமைமிகு பட்டியல் சாதியினரையும் பார்த்துள்ளேன். இதுவரை கல்வி-வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், அவற்றைப் பெற்ற பிறகு, அவர்களின் வாரிசுகள், the so called பிற உயர் சாதியினரை முந்திச் செல்கின்றனர் என்பதையும் காண முடிகிறது. 

அனைவருக்கும் தாங்கள் விரும்பிய கல்வி கிடைப்பதற்கும், விரும்புகின்ற வேலையைப் பெறுவதற்குமான ஒரு சமூக கட்டமைப்பு உருவாகும் வரை, சாதி அடிப்படையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும்.

ஊரான்

Monday, 5 August 2024

ஆறும் நீரும் இல்லை என்றால் அவாளுக்குச் சோறு இல்லை!

ஆடியில்
கரைபுரளும் காவிரியால்
வீடுகளும் பயிர்களும் 
மூழ்கினால் என்ன?

வறண்ட பாலாற்றில்
ஆடிக் காற்றில்
மணற்துகள்கள்
பறந்தால் என்ன?

மேகவெடிப்புகளும்
பெருமழை 
நிலச்சரிவுகளும் 
நம் அன்பிற்கினிய 
உயிர்களைக் 
காவு கொண்டால் என்ன?

கடல் சீற்றம் 
கடற்கரைகளைக்
கபளீகரம் செய்தால் என்ன?

எங்கும் மரண ஓலம் 
நம் நெஞ்சைப் 
பிளந்தால் என்ன?

அவர்களுக்குத் தேவை
ஆறும் நீரும் மட்டுமே!

இந்து தமிழ் திசை, 05.08.2024

 
ராமேஸ்வரம், அம்மா மண்டபம், திருவையாறு

பாலாறு, வேலூர்

நமக்கோ
பிறப்பென்றால் மகழ்ச்சி
இறப்பென்றால் துக்கம்!
ஆனால்,
இரண்டையும் சமநோக்கில் பார்க்கும் கூட்டமொன்று,
 
முன்னோர்கள் என்றும்
படையல் என்றும்
திதி என்றும்
தர்ப்பணம் என்றும்
ஆற்றை நோக்கி 
நீரை நோக்கி
நம்மை
இழுத்துச் சென்றது!
 
இனி வரும் காலம்
நலமாய் இருக்கும்
என நம்பி
இருந்ததை எல்லாம்
எடுத்துச் சென்றாய் அங்கு!

அங்கே,
தர்ப்பப் புல்லில்
உனைக் கட்டிப் போட்டு
நீ எடுத்துச் சென்றதை 
சுருட்டிச் சென்றது
ஒரு கூட்டம்!
 
ஆறும் நீரும் 
இல்லை என்றால்
அவாளுக்குச் சோறு இல்லை!
இதை உணர்ந்ததால்
அவர்கள் வாழ்கிறார்கள்!
உணராத நீயோ 
ஒவ்வொரு ஆண்டும் 
ஆடிப்பெருக்கில்
ஓடுகிறாய்
ஆற்றை நோக்கி
நீரை நோக்கி!
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்