Friday, January 10, 2020

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3


வாலாசாவிலிருந்து பூந்தமல்லி வருவதற்கு ஏற்கனவே நூறு ரூபாயை செலவழித்துவிட்டேன். எனவே அண்ணா சதுக்கத்திற்குச் சாதாரணக் கட்டணத்தில் பயணிப்பதுதான் நமது கையிருப்புக்கு நல்லது என எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு பழைய 25ஜி வந்து நின்றது. முதல் ஆளாக ஏறினேன். ஒரு சில இருக்கைகள் தவிர பெரும்பாலான இருக்கைகள் பெய்து கொண்டிருக்கும் மழையால் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாறியிருந்தன. வானத்தைப் பொத்துக் கொண்டு மழை பொழியும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே 25ஜி யைப் பொத்துக் கொண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. நனையாத இருக்கைகளில் ஒரு சிலர் அமர்ந்தனர். அப்பொழுது பின்னால் வந்து நின்ற சிவப்பு நிற புது 25ஜி யை நோக்கி சிலர் சென்றனர். அதில் டீலக்ஸ் என்று வேறு போட்டிருந்ததால் நான் செல்லவில்லை. டீலக்ஸ் என்றாலே கூடுதல் கட்டணம்தானே.

காலை மணி ஒன்பது. மழை சற்றே ஓய்ந்தது. பெரும்பாலான இருக்கைகளை பயணிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர். பாதி பேர் நின்று கொண்டனர். நடத்துநரிடம் இருபது ரூபாய் கொடுத்து அண்ணா சதுக்கம் என்றேன். முப்பத்தொரு ரூபாய் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வேலூரில் இதே தூரத்திற்கு இருபது ரூபாய்தான். சென்னையில் மட்டும் பணம் என்ன வானத்திலிருந்தா கொட்டுகிறது? 

பழுத்த அனுபவமுடைய ஓட்டுநர் 25ஜியை நகர்த்தத் தொடங்கினார். கடுமையான போக்குவரத்து நெரிசல். ஒரு அடிக்கு ஒரு முறை ஆக்சிலேட்டரில் கால் வைக்கும் போதெல்லாம் "உர்! உர்!" என 25ஜி உருமியது. பேருந்தின் ஒவ்வொரு உருமலுக்கும் கொஞ்சம் முன்னே சென்று பின்னே வரவேண்டும். உருமலின் போது முன் இருக்கையின் கைப்பிடியை இருகப் பிடித்து இரு கால்களையும் கீழே அழுத்த வேண்டும். இல்லையேல் மொகர கட்டை பேந்திடும்.

போரூர் போய்ச் சேரவே ஒரு மணி நேரம் ஆனது. ஒரு பழைய வண்டியை இந்த அளவுக்காவது நகர்த்துகிறாரே என்று திருப்திப்பட்டுக் கொள்வதை விடுத்து ஓட்டுநருக்கு வண்டி ஓட்டத் தெரியவில்லை என முணுமுணுக்கத் தொடங்கினர் ஒரு சிலர். திரை மறைவு முறைகேடுகளால்தானே இப்படி 25ஜிக்கள் உருமுகின்றன? ஓட்டுநனரை நொந்து என்ன செய்ய?

காலை மணி 10.15. போரூரைத் தாண்டி வடபழனி நோக்கி பயணித்தது 25ஜி. உருமலில் எந்த மாற்றமும் இல்லை. எந்த ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அதை ஒரு சாதாரண வேலையாகக் கருதினால்தான் சென்னையில் வாழ முடியும் என்பதை உணர வைத்த பயணம் இது. ஒரு வழியாய் 11 மணிக்கு அண்ணா சாலையைத் தொட்ட போது இனி நெரிசல் இருக்காது என ஒரு ஏக்கப் பெருமூச்சு.

திருவல்லிக்கேணியை நோக்கி நகர்ந்தது 25ஜி. நல்லிரவில் சொர்க்க வாசல் வழியாக வரதராசப் பெருமாள் வெளியேறிய போது அவரோடு போக முடியாதவர்கள் பகலிலாவது நுழையலாம் என படை எடுத்ததால் மீண்டும் உருமத் தொடங்கியது 25ஜி. நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் பையை நிரப்புகிறார். ஆண்டுக்கொரு முறை பெருமாள் கல்லா கட்டுகிறார். போகாத ஊருக்குத்தான் வழிகாட்டுகிறார்கள் என்பதை உணராதவரை சொர்க்கவாசல்கள் திறந்து கொண்டேதான் இருக்கும்.

காலை 10.30 மணிக்கு அண்ணா சதுக்கம் வந்து சேர்ந்தேன். இருபது கிலோமீட்டர் பயணிக்க இரண்டரை மணிநேரம். ‘பொருமை முக்கியம் அமைச்சரே’ என எண்ணிக் கொண்டே அங்கிருந்து கொடி நடையாய் விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்றேன். சாலையின் இருமருங்கிலும் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை மாற்றி அமைத்திருந்தனர். நூற்றுக்கணக்கான காக்கிச் சட்டைகளோடு அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!


No comments:

Post a Comment