Monday, December 30, 2024

படைப்புகள் பாமரனின் கைகளில் தவழுவது எப்போது?

சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!
ஒவ்வொரு ஆண்டும் 
ஓடிச் செல்லும் நான், 
இந்த ஆண்டு எட்டிப் பார்ப்பேனா? தெரியவில்லை!

தொடங்கிய இரண்டு நாட்களில் சிலரது அலப்பறைகளும் அங்கலாய்ப்புகளும் 
மெய்நிகர் உலகை மேவு(ய்)கின்றன.

பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்து, 
பக்கங்களும் விலையும் ஆயிரங்களைத் தாண்டிக் 
கனக்கும் பொழுது, 
எளியோரால் எட்டித்தான் பார்க்க முடியுமே ஒழிய, 
பொறுமையாய் புரட்டிப் பார்க்க இயலுமோ?


"விலையைப் பற்றிக் கவலைப்படாமல், 
வாங்குவோரே உண்மையான வாசகர்கள்" என்றும், "மற்றோரை வழிப்போக்கர்கள்" என்றும் வசைபாடுகின்றான்,
தனது கவிதைக் கட்டுக்கு ஆயிரத்துக்கு மேல் விலை குறிக்கும் ஒரு கவிஞன்!

ஒன்றரை அடியில், 
பத்து ரூபாயில், 
உலகையே வலம் வருகிறான் வள்ளுவப் பெருந்தகை!
ஆனால், சிலர்
நீட்டி முழக்கி எழுதினாலும்
சில அடிகள் கூட நகர முடியாமல் தடுமாறுவது ஏனோ? ஏனோ?

பாக்களின் வரிகள் 
"பேரண்டத்தின் ஊடே 
ஓர் சூறைக்காற்று 
சுழன்று வீசுவது போல், 
துயரச் சிக்கல்களைப் பிரித்தெடுக்க வேண்டும்" (1)

இல்லையேல், அரசு நூலகங்களிலும் பரன்களிலும் 
பலரது படைப்புகள் 
உறங்குமே ஒழிய
பாமரனின் கைகளில் 
ஒரு போதும் தவழாது! 

ஊரான்

குறிப்பு: (1). செஞ்சீனப் புரட்சியாளன் தோழர் மாவோவின் கவிதை வரிகள். "மா சேதுங் கவிதைகள்". பொதுமை வெளியீடு, 1981

தொடர்புடைய பதிவுகள் 

Sunday, December 29, 2024

'சொல்' அம்புகள்!

காசாவின் இதயத்தைத் துளைக்கும் இஸ்ரேலின் ஏவுகணைக் 'கொல்' அம்புகள் போல,
நம் நெஞ்சுக் கூட்டை ஓயாது துளைக்கும் நாவின் 'சொல்' அம்புகள்! (4)

எதிரிகளின் கொலைக் களத்திலிருந்துக் 'கொல்' அம்புகள் ஏவப்படுகின்றன.
ஆனால், 
உறவெனும் பசப்புத் தளத்திலிருந்து அல்லவோ 'சொல்' அம்புங்கள் வீசப்படுகின்றன? (8)


காசாவின் சிதிலமடைந்த இதயத் துண்டுகளை எப்பாடுப் பட்டேனும் ஒட்டவைத்துவிட முடியும்.
ஆனால்,
சிதறிய நம் நெஞ்சத் துண்டுகளை..., 
அந்த 'இறைவனே' முயன்றாலும்...? முடியாத ஒன்று! (12)

காசாவில் 'கொல்' அம்புகளைத் தாங்கும் 'பதுங்குக் குழி' எனும் கவசங்கள் உண்டு.
ஆனால், 
பஞ்சு போன்ற நம் நெஞ்சுக் கூட்டைக் காக்க,
கல்லோ, இரும்போ, தங்கமோ எதைக் கொண்டு வேய்ந்தாலும்,
அவற்றையும் கரைத்து, அரித்து, தேய்த்துத் துளையிடும் 
ஆற்றல் வாய்ந்தவை அன்றோ நாம் வீசும் 'சொல்' அம்புகள்! (14)

'கொல்' அம்புகள், ஒன்று உடலை முடமாக்கும், இல்லையேல் உயிரை ஒரேயடியாய்ப் போக்கிவிடும். ஆனால்,
'சொல்' அம்புகளோ, உள்ளத்தை முடமாக்கி, சாகவும் விடாமல், வாழவும் விடாமல், ஒவ்வொரு நொடியும் நம்மைத் துளைத்துக் கொண்டே இருக்கும்! (16)

'கொல்' அம்புகள் ஒரே நேரத்தில் ஒன்றாய், பத்தாய், நூறாய்கூட கொத்தாய் வரக்கூடும்.
ஆனால்,
'சொல்' அம்புகளோ, 
நா மொழியோடு முக மொழியும் சேர்ந்து 'மூஞ்சைக் காட்டுவதால்', அந்த 'உலகளந்தப் பெருமாளே' வந்தாலும் அளவிட முடியாததாய், 
ஒன்று இரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாய், பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய்... பிஷனாய்ப் (fission) பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்! (20)

'பாசிஸ்ட்டுகள்' 'கொல்' அம்புகளை ஏவுகிறார்கள்.
'சேடிஸ்ட்கள்' 'சொல்' அம்புகளை வீசுகிறார்கள்! (22)

'கொல்' அம்புகளால் மாண்டவர் போக, எஞ்சியவர் உண்டு.
ஆனால், 
'சொல்' அம்புகளால் மீண்டவர் எவரும் உண்டோ? (24)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

(குறள் 129)

என்று சும்மாவா சொன்னான் வள்ளுவன்?

ஊரான்

Thursday, December 26, 2024

2025 புத்தாண்டு ராசி பலன்: செவ்வாய் மேல வழக்கு வருமா?

செவ்வாயோட ஆதிக்கத்துல 2025 பொறக்கறதனால சட்டம் ஒழுங்கு சீராகுமாம். காவல்துறை, ராணுவத்தின் கை ஓங்குமாம். தீவிரவாதிகள் ஒடுங்கிப் போவாங்களாம்”.

அடேய், ஆட்டுக் குட்டி, சேக்கிழாரு! இனி சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு முதல்வர் மேலப் பாயாதீங்கப்பா. செவ்வாய வெறட்டுனாதான் வர்ற வருசம் ஒங்களுக்கு அரசியல் பொழப்பாவது ஓடும். மொதல்ல அதுக்கான வேலையப் பாருங்கப்பா. 

ஓ! செருப்ப கழட்டிட்டு, சாட்டையால அடிச்சுகிட்டா செவ்வாய் ஓடிடும்னு ஆக்ஸ்போர்டுல சொல்லிக் கொடுத்தாங்களோ? இருக்கும்! இருக்கும்!


அப்புறம் முதல்வர் கிட்ட எனக்கு ஒரு ரிக்வெஸ்ட். நீங்க செய்ய வேண்டிய வேலைய செவ்வாயே செஞ்சிடறதால, ஸ்டாலின் சார், யூ டேக் ரெஸ்ட் சார்.

ஒருவேளை சட்டம் ஒழுங்கு எங்கயாச்சும் கெட்டுப் போச்சுன்னா, டூட்டிய சரியாப் பாக்காத செவ்வாய் மேல ஒரு கேஸப் போடுங்க. என்ன நான் சொல்றது சரிதானே?

***
பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வார்களாம்”.

செவ்வாயால சேருவாங்கன்னா, இதுக்கு முன்னாடி பிரிஞ்சது யாரால? அடேய்! ஜோதிடப் பசங்களா, சொத்துச் சண்டை இருக்கிற வரைக்கும் சகோதரச் சண்டை நிக்காதுடா. அவிங்க பிரிஞ்சுதான்டா கெடப்பாங்க. ஒங்க ஒன்பது கெரகமும் ஒச்சத்துல வந்தாலும்கூட நம்ம சகோதரர்கள ஒட்ட வைக்க முடியாதுடா. அது சொத்துடமையோட கூடப்பொறந்த பண்புடா. சொத்துடமை இருக்கிற வரைக்கும் ஓயாதுடா இந்தச் சண்டை.

அப்புறம் "செவ்வாயோட ஆதிக்கத்துல பூமி வெலை ஒசருமாம்..”

ஏற்கனவே ஏழை பாழைங்க பிளாட்டு வாங்கி வீடு கட்ட முடியலடா. அந்த செவ்வாய்கிட்ட சொல்லி ரியல் எஸ்டேட் புரோக்கர் பசங்கள கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கடா.

காடுகள் எல்லாம் செழிப்படையுமாம்...கிளி, மயில் பட்சிகளின் எண்ணிக்கை கூடுமாம்".

கேஸ் அடுப்பு, கான்கிரீட் வீடு, தகரக் கொட்டாய், டிராக்டர் கலப்பைகளின் தயவால எங்க காடுகள் எல்லாம் செவ்வாயோட பார்வை இல்லாமலேயே செழித்து வளர்ந்து நிக்குதுடா. 

காடுகள் செழித்ததால் மயில்கள் மட்டுமா பன்றிகள், குரங்குகள்கூட பெருகிவிட்டன. இதனால் வேளாண் பயிர்கள் நாசமாகின்றன. தெரியுமா உனக்கு?

இதெல்லாம் நாட்டு நடப்புடா. அதுக்கு எதுக்குடா 12 கட்டம்? 

லக்னத்தின் மீது அமர்ந்திருக்க குரு பகவான் பார்ப்பதால ஆன்மீகமும், தெய்வீகமும் வளருமாம். சந்திரனுக்குப் பக்கத்தில் கேது இருப்பதால கோவில் கும்பாபிஷேகம் அதிகம் நடக்குமாம்… மலை கோவில்களுக்குப் பாதை அமைக்கப்படுமாம்"

அடிச்சு வுடுறான் பாருங்களேன். இவன் தன்னம்பிக்கைய உண்மையிலேயே பாராட்ட வேண்டும். துன்பங்களும் துயரங்களும் பெருகப் பெருக, ஆன்மீகமும் தெய்வீகமும் வளரத்தான் செய்யும். அதையொட்டி கோயில்கள் பெருகத்தான் செய்யும். கும்பாபிஷேகமும் நடைபெறத்தான் செய்யும். கோவிலுக்குப் பாதை போடத்தான் செய்வார்கள். 

அது எப்படிடா வருஷா வருஷம் கிரகங்கள் எடத்தை மாத்திக்கிட்டே இருக்கு. ஆனா நீங்க சொல்ற இந்த ஆன்மீகப் பலன்கள் மட்டும் எப்பவும் மாறவே மாட்டேங்குது? 

சரி! இந்த ஆன்மீகத்தைக் குறைப்பதற்கு எந்த கிரகமும் கிடையாதா? கொஞ்சம் கருணை காட்டி ஒரு கெரகத்தையாவது எத்தியிஸ்ட் பக்கம் பார்வையைத்
திருப்பச் சொல்லக் கூடாதா? நாங்களும் கத்தி கத்திப் பார்த்துட்டோம். ஆன்மீகம் கொறைஞ்சதா தெரியல. 

அட்லீஸ்ட் 2026  லாவது, ஒரே ஒரு வருசத்துக்கு மட்டும் இந்த ஒம்பது மெயின் ரோடு பார்ட்டிங்களுக்கு  ஒர்க் லோடு ஜாஸ்தின்னா, இந்த ராகு, கேது அப்ரன்டிஸ்ங்களையாவது எங்களப் பார்க்கச் சொல்லுங்கப்பா. நாங்க எவ்ளோ நாளைக்குத்தான் பெரியாருக்காகக் காத்துக் கிட்டுக் கெடக்கறது?

அப்புறம், "சாலை வசதி பெருகுமாம். ஆறு வழிப் பாதை எட்டு வழிப் பாதை எல்லாம் புதுசா வருமாம்” 

சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஹைவே முடியப் போறத எவ்ளோ நாசுக்காகச் சொருவுறான் பாருங்க. 

சுக்கிரன் சனி பகவான் வீட்ல இருப்பதனால நிலக்கரிச் சுரங்கம் மூழ்குமாம்”. 

இந்தியாவுல ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், நெய்வேலி உள்ளிட்ட 352 நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கு. இதுல எந்தெந்த சுரங்கம் மூழ்கும்ன்னு சொல்லிட்டா நாங்க உஷாராயிடுவோமில்ல. குத்து மதிப்பா சொன்னா எப்படி? அப்ப, ஜோதிடம் துல்லியமானதுன்னு சொல்றதெல்லாம் பொய்யா கோபால்?

"செவ்வாய் நீசமாகி நிற்பதனால தினசரி மற்றும் வார பத்திரிகைகளின் விற்பனையை உயர்த்தப் பாடுபட வேண்டி இருக்குமாம்".

செவ்வாய் நீசமாக இருப்பதனால் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் மவுசு கொறையல ராசா. வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூபு, கூகுள் எல்லாம் சுத்தறதனால வந்த வெனை இது. வேணும்னா அவங்களோடு, செவ்வாயைப் பேச்சு வார்த்தை நடத்தச் சொல்லு. சர்குலேஷன கூடுறதுக்கு ஏதாவது சலுகை காட்டுவாங்க.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பெருகுமாம். பால் உற்பத்தி அதிகரிக்குமாம்” 

இது உண்மைதானே? அசைவப் பிரியர்கள் அதிகரித்து வருவதால காளை மாடுகளும், ஆடுகளும்  பெருகித்தானே ஆகணும். பால் கறந்தாதான் வீட்டில் அடுப்பு எரியும் என்று நிலையில் விவசாயி இருக்கிறதனால பால் உற்பத்தியும் அதிகமாகும்தானே? இதுக்கு செவ்வாய் எங்க இருந்தா என்னடா? நாங்க எங்க இருக்கோங்கிறதுதான்டா முக்கியம்!

அப்புறம், "வாகன உற்பத்தி உயரும், பேட்டரி கார், சோலார் பயன்பாடு அதிகரிக்கும்... கம்ப்யூட்டர் மற்றும் ஏ.ஐ துறைகள் வளர்ச்சி அடையும். ஷேர் மார்க்கெட் ஏறி இறங்கும். தங்கம் விலை உயரும்".
என அள்ளி வுடுறானுங்க. 

பொருளாதாரம் படிச்சவனே இதெல்லாம் சொல்றானே? கைநாட்டுப் பசங்க, நீங்க எதுக்குடா கட்டத்தத் தூக்கிகிட்டு இதில் எல்லாம் மூக்க நொழைக்கிறீங்க?

இப்படி இன்னும் பலப் பல, 26.12.2024, இந்து தமிழ் திசை நாளேடு, ஆனந்த ஜோதி பக்கத்தில்,  2025 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன் பற்றி ஜோதிஷ பூஷன் வேங்கடசுப்பிரமணியனின் பொதுப் பலன்கள் எனும் புருடாக்கள் இவை.

இவை தவிர 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனி கணிப்புகள். 

நமது மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் நிகழும் சமூக நடப்புகளை ஓரளவுக்குப் புரிந்து கொண்டு, அவற்றை ராசிகளோடு பொருத்தி, கட்டத்தை வைத்து கலந்து கட்டி அடிப்பது ஜோதிடக்காரர்களுக்குக் கைவந்த கலை. 

ஜோதிடம் மிகவும் துல்லியமானது என்று இவர்கள் கதை அளப்பார்கள். ஆனால் நாலு ஜோதிடர்களின் கணிப்புகளை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தாலே இவர்கள் அடிப்பது கப்சா என்பது அம்பலமாகும். அதேபோல கடந்த ஆண்டுகளின் ராசி பலன்களையும், இந்த ஆண்டு ராசி பலனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கப்சா இன்னும் உறுதியாகும். (கட்டுரையின் விரிவு கருதி நான் இதற்குள் செல்லவில்லை).

ராசிபலன் பகுதியில், நம்ம ராசிக்கான பலனை மட்டும்தானே நாம் பார்க்கிறோம். மத்ததையும் படிச்சாதானே ஒரே மேட்டரை வரிசை மாத்தி, வார்த்தை மாத்தி போட்டிருக்கானுங்க என்பதே தெரியும். அதை ஒருபோதும் நாம் செய்ய மாட்டோம் என்பதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான். 

ஜோதிடத்தால் பத்திரிகைகளின் பக்கங்கள் நிறைகின்றன. தொலைக் காட்சிகளில் நேரங்கள் கழிகின்றன. மொத்தத்தில் ஜோதிடர்களுக்கும் ஊடகங்களுக்கும் பைகள் நிறைகின்றன. நாமோ கைநாட்டு ஜோதிடக்காரனுக்கு முன்னால் வாய் பொத்தி மௌனியாய் நிற்கின்றோம். 

பசியாற, தாகம் போக்க புல்வெளிகளை, நீர் நிலைகளை நாடும் அப்பாவி மாடுகளும், மான்களும் கொடிய விலங்குகளிடம் சிக்கித் தவிப்பதைப் போல, துன்பங்களாலும், துயரங்களாலும் சிக்கி மீள வழி தெரியாமல் முழிக்கும் நம்மை ஜோதிடம் கவ்விக் கொள்கிறது.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 



Tuesday, December 24, 2024

கலகக்காரர்களையும் கடவுளாக்கிவிட வேண்டாம்!

தலைவர்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பது குறித்துத் தெரிந்து கொள்வதைவிட, அவர்களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாட்களில், சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, 'கோஷமிட்டு' கலைந்து செல்வது ஒரு 'ஃபேஷனாகி' விட்டதோ?


ஆலயங்களில் பக்தன் தெண்டனிட்டு 'போற்றி! போற்றி!' என்கிறான். நாமோ சிலை அருகில் நின்று கொண்டு 'வாழ்க! வாழ்க!' என்கிறோம்.

அதைத் தாண்டி என்ன செய்கிறோம் என்பதுதான் பக்தனையும் நம்மையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கோடு.

என்ன, 
கோர்த்தப் பூக்களைக் கோவில்களில்
மாலையாய் சாத்துகிறான். 
உதிரிப் பூக்களை கிள்ளிப் போட்டு அதையே புஷ்பாஞ்சலி என்கிறான். 

ஆனால், நாமோ கோர்த்தப் பூக்களை மாலையாய் சிலைகளுக்கு அணிவிக்கிறோம். உதிரி மலர்களை அள்ளித் தூவுகிறோம்.

அங்கே, கோவில்களில் இடைத்தரகர்கள் உண்டு. 
அதனால் கடவுளின் சிலைகளைக் காணத்தான் முடியுமே ஒழிய 
தொட முடியாது. 
ஆனால் இங்கோ,
வீதிகளில்  தலைவர்களின் சிலைகளை நம்மால் தொட முடியும். ஏன் கன்னத்தில் முத்தம்கூட இடமுடியும்

"அம்பாள் என்னைக்கடா பேசி இருக்கா, அற்பனே?" என்று கோவில் சிலைகள் பேசாதென்பதை அன்றே 'பராசக்தி'யில்  போட்டுடைத்தான் எங்கள் குணசேகரன். 

ஆனால், தலைவர்களின் சிலைகளோ ஓயாது பேசிக் கொண்டிருப்பவை. 

இங்கும்கூட எல்லாச் சிலைகளும் பேசிவிடாது. 

'செம்மல்கள்', 'அம்மா'க்களின்  இரசிகத் தலைமுறை முடியும் போது அவர்களின் சிலைகளும்கூட அன்றோடு மறைந்து போகும்.

ஆனால், 
எளியோரின் வலி உணர்ந்து, 
வலிப் போக்கும் வழி அறிந்து, 
கருத்தை விதைத்துப் பாடுபட்ட காரல் மார்க்சின், அண்ணலின், தாடிக்காரக் கிழவனின் சிலைகள், 
அவர்கள் மாண்டு ஆண்டுகள் பல கடந்தாலும் தலைமுறைகளையும் தாண்டிப் பேசிக் கொண்டே இருக்கும். 

சிலைகள் மட்டுமா? கிழவனின் கோடுகள்கூட பேசுகின்றனவே!

அவர்கள் தொடர்ந்து பேச வேண்டுமானால், வீதிகளில் உள்ள சிலைகள் அருகிலோ அல்லது பொது இடங்களில் படங்களை வைத்தோ ஒன்று கூடி, வீர வணக்கம் செலுத்தி சிறு உரையாற்றினால் வழிப்போக்கர்களின் காதுகளுக்குள்ளும் தலைவர்கள் ஊடுருவிச் செல்வார்கள்.

மாலைகளுக்கும் மலர்களுக்கும் செய்யும் செலவில் தலைவர்களின் கருத்துக்களை எழுத்தாகக் கோர்த்து நாலு பக்க அளவில் நாலு பேரிடம் சேர்த்தாலாவது, வீதிகளில் மட்டும் நில்லாமல் வீடுகளுக்குள்ளும் தலைவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்

கலகக்காரர்களையும் கடவுளாக்கிவிட வேண்டாம்!  

ஊரான்

Monday, December 23, 2024

ஊசிப்போன ஊறுகாய்!

வரிக்கு மேல வரிய போடுற அரசாங்கம்

கடந்த வெள்ளி அன்று நகராட்சி ஊழியர்கள் வீடு தேடி வந்து. வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டச் சொல்லி விவரச் சீட்டுக் கொடுத்தார்கள். தாமதிக்கத் தாமதிக்கத் தண்டம் கட்ட வேண்டி வரும் என்று அவர்கள் அச்சுறுத்தியதால், அன்றே இணையவழியில் முயன்றேன், ஆனால், அரசு அலுவலகங்களில் அடுத்த மேசைக்கு நகர மறுக்கும் மனுக்களைப் போல, இங்கே இணையமும் அடுத்தப் பக்கத்திற்குப் போக மறுத்தது. 

மறுநாள் காலை அலுவலகத்தில் கணினி காட்டியத் தொகையைக் கட்டிவிட்டு இரசீதைப் பார்த்தேன். ஓராண்டின் இரு தவணைகளும் பாக்கி, அதுவும் காலம் கடந்து கட்டியதால் ரூ.120 தண்டம், அதோடு தாமதத்திற்குக் கூடுதலாக ஒரு சதவீதம் என ரூ.15 தண்ட வட்டி ஆக மொத்தம் ரூ.135. 


கட்டுறதே 'வீட்டு வரி', இதுல தாமதத்துக்குத் தண்டம் வேற, சரி. அதுக்கு மேல ஒரு சதவீதம் வட்டி எதுக்கு?  இது என்ன 'வரிக்கு மேல வரியை போடுற' கதையா இருக்கு? எல்லாம் ஊறுகா மாமியோட 'ட்ரெயினிங்' போல?

சொற்ப ஓய்வூதியத்தில் காலம் தள்ளுவோருக்கு இது பெரிய தொகை என்பதை என் முகம் காசாளருக்குக் காட்டிவிட்டது போல! "தவணைத் தேதிக்குள் வரியை செலுத்தினால், 10 சதவீதம் கட்டணத்தில் சலுகை" என்றார். மிச்சப்படுத்த வேண்டிய அளவுக்கு தண்டமாகச் செலுத்துகிறோமே என்ற ஏமாற்றத்துடன், "தவணைத் தேதிக்கு முன்னரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாமே?" என்று எனது ஆதங்கத்தை மட்டும் அவரிடம் வெளிப்படுத்திவிட்டு வெளியே வந்தேன்.

"இதுக்கே அலுத்துக்கிட்டா எப்பூடி? கார் வாங்கும் போது சாலையில் நுழைவதற்கு முன்பே ரோடு டேக்ஸ் கட்றோம், அப்புறம் ரோடுல ஓடும் போதெல்லாம் டோல் டேக்ஸ் கட்றோம். இது ஒரு மாட்டை ரெண்டு முறை தோலுரிக்கறதா தெரியலையா உங்களுக்கு?" என கார்காரங்க விம்முறது என் காதுல கேட்குது. என்ன செய்ய?

ஊசிப்போன ஊறுகாயத் தூக்கி வீசாதவரைக்கும் ஊறுகளை அனுபவிச்சுத்தானே ஆகணும்?

ஊரான்

40 ஆண்டுகளுக்கு முந்தைய மகஇக பாடல்

வரி...வரி...வரி

வரிக்கு மேல வரியப் போடுற அரசாங்கம்... 
நம்ம, வாழ்வக்கெடுத்து வறுமையாக்குது அரசாங்கம்...      இந்த அரசாங்கம் (2)
(வரிக்கு மேல...)

தாத்தாப் பாட்டி முதல் பொம்பள ஆம்பள போடுற வெத்தல பாக்குக்கு வரி!
காஞ்சத் தொண்டைய நனையக் குடிக்கிற 
காப்பிக்கும் போடுறான் விற்பனை வரி!
காலையில் எழுந்துக் கஞ்சிக் குடிக்கிற பானைக்கும் போடுகிறான் பானை வரி!
சினிமா டிராமா காட்சிக்குப் போனா
அங்கேயும் போடுறேன் கேளிக்கை வரி!
பார்த்தா வரி... சிரிச்சா வரி... கேட்டா வரி (வரிக்கு மேல...)

கட்டாதப் பணத்துக்குப் பீசப் புடுங்குறான் 
அங்கே இருக்குது மின்சார வரி!
ஓட்டச் குடிசையில் கதவை ஒடைக்கிறான் அங்கே போடுறது வீட்டு வரி!
கொழாயத் தொறந்தாத் தண்ணியும் வராது
அதுக்கும் போடுறான் தண்ணி வரி!
குடிசையில் எரியும் சிமினி விளக்குக்கு
ஊத்துற சீமெண்ணைக்கும் போடுறான் வரி!

வீட்டு வரி... தண்ணீ வரி... சீமெண்ணெய் வரி...(வரிக்கு மேல...)

வெளைஞ்ச நெல்லையே கொறைஞ்ச வெலைக்காகக்
கொள்முதல் செய்வது தானிய வரி! 
கஷ்ட ஜீவனம் நடத்தும் தொழிலாளி விவசாயிக் கட்டுற துணிக்கு வரி!
டீக்கடை சைக்கிள் கடை பெட்டிக் கடை மளிகைக் கடை 
அத்தனைக்கும் போடுறான் தொழில் வரி!
திருடர்கள் போக்கிரிகள் கொள்ளைக்காரர்கள் 
கோர்ட்டில் கட்டுவது குண்டர்கள் வரி!
வரவுக்கு வரி... தொழிலுக்கு வரி... கோர்ட்டுக்கு வரி...

நபர் 2: வர்ற காலத்துல இன்னும் எதெதுக்கெல்லாம் வரி போடப் போறானுங்களோ?

நபர் 1: சொல்றேன் கேளு!

பொஞ்சாதிப் புரசன் ஒண்ணாகப் போனா அதுக்கும் போடுவான் தம்பதி வரி!
நாட்டில்... பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கு எல்லாம் 
அவனும் போடுவான் குழந்தை வரி!
விலைவாசி ஏற்றத்தாலப் பட்டினியாக் கிடந்தா
அதுக்கும் போடுவான் பட்டினி வரி! 
பெத்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தா 
அதுக்கும் போடுவான் தாய்ப்பால் வரி!

குனிஞ்சா வரி... நின்னா வரி... நெளிஞ்சா வரி...
(வரிக்கு மேல...)

***

Sunday, December 22, 2024

வயசானா வீட்லயே கெடக்க வேண்டியதுதானே?

நேற்று காலை ஒன்பது மணிக்கு வேலூர் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது, வந்து நின்ற ஆற்காடு நகரப் பேருந்திலிருந்து எண்ணற்ற எளிய மகளிர் இறங்க, அதே அளவு மகளிர் பேருந்தில் ஏற, சற்றே அங்கு தள்ள முள்ளு. 

கோப்புப் படம்

"வயசானதுங்கல்லாம் வீட்லயே கெடக்க வேண்டியதுதானே? யாரு கூப்டா இந்த வயசுல? எதுக்கு இப்டி முட்டி மோதிக்கினு போவனும்? ஓசின்னா வந்துட வேண்டியது" என மகளிர் இலவச பேருந்துப் பயணத்தை நக்கலடித்தார் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சாமான்யர். ஒரு சாமான்யருக்கே இந்த எண்ண ஓட்டம் என்றால் பகட்டானவர்களின் எண்ணம் எப்படி இருக்கும்? 

ஒருவர் ஆயாவாகிவிட்டால் "வீட்டில் முடங்கிக் கிட" என்பதுதானே எல்லோருடைய எண்ண ஓட்டமும்கூட. ஊறுகாப் பாட்டின்னா மட்டும் பம்முறாங்க, நாட்டுப்புறப் பாட்டின்னா நக்கல் பண்றாங்க.

வேறு வேறு இடங்களில் வாழும் தாங்கள் நேசித்தக் குடும்ப உறவுகள், வாழ்க்கைப் பயணத்தில் உடன் பழகிய நண்பர்கள் உள்ளிட்டோரைப் பார்ப்பதற்கும், அவர்களது வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வதற்கும், கோவில்களுக்குச் சென்று விருப்ப தெய்வங்களை வழிபடுவதற்கும், அவர்கள் விரும்பினாலும் நம்ம பாட்டிமார்களை வெளியே அழைத்துச் செல்ல ஒரு நாதி உண்டா? 

விசேசங்களுக்குக் குடும்பமே வெளியில் சென்றாலும், அவர்கள் திரும்பும் வரை பாட்டிமார்கள்தானே வீட்டைக் காக்கிறார்கள். வெளியே சென்று வந்தவர்கள் தனக்கு ஏதேனும் வாங்கி வந்திருப்பார்களா என ஏக்கத்துடன் பார்க்கும் முதியோரும் இருக்கத்தானே செய்கின்றனர்?

நேசமானவர்களை நேரில் சென்று பார்க்க, விரும்பிய தெய்வத்தை நேரில் சென்று வழிபட, கட்டணமில்லாப் பேருந்துகள்தானே இவர்களை அங்கே அழைத்துச் செல்கின்றன. வெளியில் அழைத்துச் செல்வதையே தொல்லையாய்க் கருதுகிறாய் நீ. ஆனால், அரசாங்கம் அழைத்துச் செல்கிறது இலவசமாய். போவட்டுமே, உனக்கென்ன நட்டம்?

அது மட்டுமா? இன்று வாணியம்பாடியில் பேருந்து நின்ற பொழுது, பனங்கிழங்குகளை விற்பதற்காக இரண்டு பாட்டிமார்கள் கூவிக்கொண்டிருந்தார்கள். கட்டணமில்லாப் பேருந்து இல்லை என்றால், அரிய வகை கிராமத்துக் கிழங்குகள்கூட பைபாஸ்களை நோக்கி வருவது அரிதுதானே?

இப்படி கத்தரி வெண்டை கீரை முருங்கை தேங்காய் கொய்யா வாழை என வகைவகையான பழங்களும் காய்கறிகளும் நகரில் உள்ள நமது வீட்டுக் கதவுகளைத் தட்டுகின்றனவே! எப்படி? அதுவும் மலிவாய். இந்த மலிவிலும் பேருந்தின் இலவசம் இருக்குதானே? 'வயசானா வீட்ல கெடக்க வேண்டியதுதானே, யாரு கூப்டா' என்று அலுத்துக் கொள்ளும் சிலரைப் போல, அவிங்க என்ன டாஸ்மாக் கடைக்காப் போறாங்க?
***
ஒருவர் குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைத்த போதும் வயசானால் அவரை பைசாவுக்குப் பேறாதவர் என உயிரோடு இருக்கும் போதே ஒதுக்கி வைக்கும் உலகம் இது. அவர் இறந்த பிறகு மட்டும் நினைத்துப் பார்க்குமா என்ன? 

நடு வீட்டில், மையத் தூண்களாய் கூரையைத் தாங்கி நின்ற தலைவனும் தலைவியும், மாமனார் மாமியாராய் அவதாரம் எடுத்த பிறகு, மாட்டுக் கொண்டாயின் மாடுகளானார்கள். புறக் கடையில் அடைக்கலமானார்கள். பேரன் பேத்திகள் வளர வளர, தாத்தா பாட்டிகளாய் மூப்பும் இவர்களை ஆட்கொள்ள, காய்ந்த வைக்கோலுக்காக காத்திருக்கும் மாடுகளைப் போல ஒரு சொம்பு கூளுக்காய் ஏங்கி நிற்கும் ஏதிலிகளானார்கள். 

இணையாய் இருக்கும்போது, பேச்சையே ஒருவருக்கொருவர் பரிமாறி வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். இணை ஒன்று உதிர்ந்து போனால் பேச்சுத் துணைக்கே ஆளின்றித் தவிப்பார்கள்.
 
இறுதி மூச்சு நிற்கும் போது தலையணை படுக்கைக்கடியில் துழாவித் துழாவி, காதையும் மூக்கையும் கழுத்தையும் தடவி, அகப்பட்டதை கமுக்கமாய் அமுக்கி, கடைசியில் தாம்புக் கயிரையும், இடுப்பு முடிச்சையும் உருவி எடுத்து அன்றோடு அவர்களை மறந்து போகும் மாந்தர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.



இதற்கு முற்றிலும் மாறாக இங்கே, பேரன்களும் பேத்திகளும் சேர்ந்து, உறவுகளை அழைத்து, தங்களது ஆயா மறைவின் ஓராண்டை நினைவு கூர்ந்தார்கள் இன்று. அவர் தொன்னூறைத் தாண்டியும் முடங்கி விடாமல் துடிப்போடு வாழ்ந்ததற்கும் இந்தப் பேரன் பேத்திகளின் அரவணைப்பே ஆதாரம். 

வழக்கமானவைகளைவிட அபூர்வமானவைககள்தானே நம் மனதிலும் ஆழப் பதிகின்றன. 

பெரியார் உணர்வாளர்களின் குடும்பக்கூடல் நிகழ்வுக்கு வீடுதேடி அழைப்பு வந்த போதும் அதைத் தவிர்த்து இங்கு நான் வரக் காரணம் அவர் எனது மாமியாருமன்றோ!

முதியோர்கள், நாம் குழந்தையாய் தவழ்ந்த போது, நம் கரம்பிடித்து வளர்த்தவர்கள், முதிர்ந்து தளர்ந்து தள்ளாடும் பொழுது, அவர்களை அரவணைக்க வேண்டியது நமது கடமையன்றோ? 

வஞ்சம் இல்லா நெஞ்சம் இருந்தால் வாழ்க்கையும் இனிக்கும்தானே?

ஊரான்

Thursday, December 19, 2024

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், இடப் பங்கீடும் - 16

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், இடப் பங்கீடும்

மண்டல் குழு பரிந்துரையின் போது 'மண்டலுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை; நாங்கள் நடுநிலை வைக்கிறோம்' என்பது போன்ற "கடமை தவறிய" நிலைப்பாடுகளை எடுக்காமல், தற்போது உருவாகி வரும் சாதிவாரி இட ஒதுக்கீடு கோரிக்கையில் ஒரு சரியான திசையை நோக்கி மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைவருமே சிந்திக்க வேண்டும்.

எனவே, சாதிவாரி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சாதி வாரியாக ஏற்கனவே உள்ள பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விவரங்களைக் கணக்கெடுத்து, தற்போதைய வகுப்புவாரி இட ஒதுகீட்டிற்குப் பதிலாக, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப, விகிதாச்சார அடிப்படையில் சாதிவாரி இடப் பங்கீடு கொடுப்பதற்கானப் பணிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்வது ஒன்றுதான், மக்களிடையே பெருகி வரும் சாதியக் காழ்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். 


வண்ணார், நாவிதர், இருளர் போன்ற ஒரு சில மிகவும் பின்தங்கிய சாதியினரின் நிலைமையைக் கண்டறிந்து, இதுவரை கல்வியிலும் அரசுப் பதவிகளிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், முதலில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடத்தை ஒதுக்கலாம். இத்தகைய சிறுசிறு சாதிகளை ஒரு தொகுப்பாகவும் பகுக்கலாம்.

OC, EWS, SC, ST, OBC, MBC என்கிற வகுப்புவாரிப் பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மேற்கண்டவாறு சாதி வாரியாகவோ அல்லது சிறு சிறு சாதிகளின் பகுப்பாகவோ பிரித்து புதிய முறையில் இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்துவதே இன்றைய சூழலில் சாலப் பொருந்தும்.

அதந்தச் சாதிகளுக்கு உரியப் பங்கை அவரவர்களுக்குக் கொடுத்து விட்டால், தனது வாய்ப்பை 'அவன் எடுத்துக் கொண்டான், இவன் எடுத்துக் கொண்டான்' என்பது போன்ற சாதியப் பொறாமைகளுக்கும் புலம்பல்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்க இது உதவக்கூடும். 

ஐயா ஆனைமுத்து அவர்கள் விரும்பியதைப் போல, இதுவரை இடஒதுக்கீடு (reservation) என்றிருந்ததை, இனி இடப்பங்கீடு (share) என மாற்றி அழைப்போம். 

மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனியார் துறைகளிலும் சாதிவாரி இடப் பங்கீட்டைக் கொண்டுவரக் கோருவோம். இல்லையேல் அங்கும் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஒரு சில உயர் சாதியினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி அங்கேயும் பிற சாதி மக்களை கீழ்நிலையிலேயே வைத்திருக்க முயல்வர்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வழங்கப்படும் EWS இட ஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டு, விகிதாச்சார அடிப்படையில் உயர் சாதியினருக்கும் தனியாகப் பிரித்து, அவர்களுக்கு உரியப் பங்கைக் கொடுத்துவிடலாம். ஏழ்மைதான் அளவுகோல் என்று அவர்கள் விரும்பினால், அதை அவர்கள் சாதிக்குள் அமல்படுத்தட்டும். அது அவர்களுடைய விருப்பம்.

கல்வி நிலையங்களில் சேருவதற்கும், வேலைகளில் சேருவதற்கும் ஒரு குறிப்பிட்ட சாதியில் ஆட்கள் இல்லை என்ற நிலை ஏற்படாமல் இருக்க, பள்ளிக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலும், கல்வியின் தரத்தை மேம்படுத்திப் பரவலாக்க வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அந்தந்தச் சாதிகளில் இருந்து நிரப்பப்படாத இடங்கள் (back log) என்ற பேச்சுக்கே இடம் தரக்கூடாது.

உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நகர்ப்புறத்தில் உள்ளவர்களே அதிகமாக அபகரித்துச் செல்வதால், நகர்ப்புறங்களில் கிடைப்பது போன்ற தரமானக் கல்வி கிராமப்புறங்களில் கிடைப்பதற்கும், கிராமப்புற மாணவர்களுக்கான இடப்பங்கீட்டில் நடைபெறும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தொடரவும், கல்வியைக் காசாக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், கல்வி தொடர்பான அனைத்தையும் மாநிலப் பட்டியலில்
உறுதி செய்வதும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியப் பணிகளாகும். 
***
இவை எல்லாம் அவ்வளவு எளிதில் சாத்தியமா?

ஆரியர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை, அன்றைய கல்வியாக இருந்த வேதத்தைக் காதால் கேட்டலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சட்டம் எழுதி வைத்தவர்கள்,

இதை மீறி கல்வி புகட்டிய சாவித்திரிபாய் புலே மீது சாணியை வீசியர்கள்,

மெக்காலே காலத்தில் ஆங்கிலேயர்கள் கல்வியை பரவலாக்கிய போது மொத்தத்தையும் அபகரித்துக் கொண்டவர்கள்,

மைசூர் சமஸ்தான அரசின் 1895 இட ஒதுக்கீடு அரசாணை, சென்னை மாகாண அரசின் 1921 இட ஒதுக்கீடு அரசாணைகள் நடைமுறைக்கு வராமல் இருக்க இடையூராய் இருந்தவர்கள்,

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு, சென்னை மாகாணத்தில் கல்வியில் இருந்த இட ஒதுக்கீட்டை வழக்குத் தொடுத்து முடக்கியவர்கள்,

ஒரு சில மத்திய அரசு வேலைகளில் மகாண அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 1947 க்குப் பிறகு இரத்து செய்தவர்கள்,

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தில் வழி வகை செய்த அம்பேத்கரின் முயற்சியை முடக்க சூழ்ச்சி செய்தவர்கள்,

1953 காகா கலேல்கர் குழு அறிக்கையை நாற்பது ஆண்டு காலம்  கிடப்பில் போட்டவர்கள்,

1990 மண்டல் குழு பரிந்துரை அமலுக்கு வந்த போது அதற்கு எதிராக நாடெங்கிலும் கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டவர்கள்,

2019 இல் EWS என்ற பெயரில் நயவஞ்சகமாக தங்களுக்கு என தனி ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டவர்கள்,

இன்று மட்டும், கல்வி வேலை வாய்ப்புகளில் நமக்கானப் பங்கை நாம் எடுத்துக் கொள்ள விட்டுவிடுவார்களா என்ன?; அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ?

எனவே, எப்பொழுதுமே நமக்கு எதிராக இருக்கும் பார்ப்பன பாசிச காவிக் கும்பலை அதிகாரத்திலிருந்து அகற்றாமல் நமக்கான உரிமையை நாம் பெறவே முடியாது.

***
இதுவரை நான் விவரித்து வந்த அனைத்து விவரங்களும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் நிறுவனரும், மண்டல் குழு மூலம், பிற்படுத்தப்பட்டோருக்கு உரியப் பங்கைப் பெறுவதற்கு ஓயாது உழைத்த ஒப்பற்றத் தலைவருமான ஐயா தோழர் ஆனைமுத்து அவர்களின் "மக்கள் நாயக உரிமைப் போர்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த நூல் வலியுறுத்தும் சாரத்தைப் புரிந்து கொள்வதற்காகத் தற்போதைய சில நிகழ்வுகளையும் ஆங்காங்கே நான் சேர்த்துள்ளதோடு, இறுதியாகச் சாதிவாரி இடப் பங்கீட்டுக்கான அவசியத்தையும் முன்வைத்திருக்கிறேன்.

ஆனைமுத்து ஐயா அவர்கள், ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் அல்ல. அதனால் வாசகனை மயக்கம் வசீகரச் சொற்கள் இந்நூலில் இல்லை. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடப் பங்கீட்டைப் பெறுவதற்கு நடத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இடப் பங்கீடு போராட்டம் குறித்த ஒரு வரலாற்று ஆவணம் இந்நூல். 146 பக்கங்கள் கொண்ட இந்நூலை நான் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். வரலாற்றுச் செய்திகளைக் கால வரிசைப்படுத்தி, மேலும் சில கூடுதல் விவரங்களோடும், களப் போராட்டப் புகைப்படங்களோடும் இந்த நூலை செழுமைப்படுத்தி வெளியிடுவது இன்றைய காலத்தின் அவசியமாகப் படுகிறது. 

ஐயா ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டில் இந்த நூல் குறித்து அறிமுகம் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன். ‌ திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மு.க.ஸ்டாலின் அரசு, ஐயா ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடிப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்.

முற்றும் 

ஊரான்


நூல் வெளியீடு:
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி
2/12, சி.என்.சந்து,
சேப்பாக்கம்
சென்னை
அலைபேசி: 86681 09047

தொடர்புடைய பதிவுகள்














முதலைக் கண்ணீர்! - 2

திருவண்ணாமலை, மத்தாளங்குளத் தெரு முனையில் கம்பி வலைக்குள் பெரியார். வலப்பக்கம் ஸ்ரீ கெங்கையம்மன். அதற்கு அருகிலே கிறிஸ்தவ தேவாலயம்.

சிலைகளுக்கு வலை போடலாம், ஆனால் சிந்தனையைச் சிறைப்படுத்திவிட முடியுமோ? அதனால்தானோ என்னவோ, கிழவன் அமர்ந்தாலே அலறுகிறது ஒரு கூட்டம். சிலைகளுக்குப் 'பவர்' உண்டா? நம்புகிறேன் நானும் இந்தக் கிழவனைக் கண்ட பிறகு.


பேருந்துத் திரையில் விஜயகாந்தின் 'பெரியமருது'வைப் பார்த்துக் கொண்டே தண்டராம்பட்டைத் தாண்டி விட்டேன். திரையில் ஒரு கண்ணுமாக, வெளியில் ஒரு கண்ணுமாக பார்வை அலைபாய, திரையில் மகேஷ் ஆனந்த், ரஞ்சிதாவை கொத்திக் குதரத் துரத்த, தனது 'கற்பைக்' காக்க அவள் மாடியிலிருந்து விழுந்து மாண்டு போகிறாள். வெளியில், கிரானைட் காடையர்களால் கொடூரமாய் சிதைக்கப்பட்டு வீழ்ந்து கிடந்தன சீரிளம் குன்றுகள்.

ஃபெஞ்சலால் உலகின் கவனத்தை ஈர்த்த சாத்தனூர் அணையை நோக்கிப் பேருந்து விரைந்தது. 'காரியத்துக்கு' என்று சொல்லி கட்டணம் இன்றி உள்ளே சென்றேன். பைரவனைச் சுமந்த கலைப்போ என்னவோ, பைரவனின் வாகனங்கள் சில சாலையில் படுத்துக் கிடந்தன. 

வழக்கமாகக் 'காரியம்' நடக்கும் ஒன்பதுகண் பாலத்திற்கு அருகில் ஐயர் சம்மணமிட்டு அவரது வேலைகளைத் தொடங்கியிருந்தார். உறவுகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அதற்குள், தமிழ்நாட்டின் அழகிய அணையை ஒரு சுற்றுப் பார்த்து வரலாம் என்று உறவுப் பேரனோடு புறப்பட்டேன். 

முதலைப் பண்ணைக்குப் போகும் வழியில் சிற்றோடையில் ஊற்றுநீர் ஓடிக்கொண்டிருந்தது. இடப்பக்கம் அடர்ந்த மரங்கள். மரங்களுக்கு அடியில் ஆட்கள் அடிக்கடி சென்று வரும் பாதைத் தடம். எட்டிப் பார்த்தேன். அங்கே மதுப் பிரியர்களின் கண்ணாடிக் காடுகள். 

பார்வையைத் திருப்பி நேரே சென்று பண்ணைக்குள் நுழைந்தோம். ஆசியாவிலேயே பெரிய பண்ணை. 500 இருந்த இடத்தில் இன்று 300 மட்டுமே. ஆறுகளிலும் அணைகளிலும் சுதந்திரமாய் உலாவும் முதலைகள், பாவம் இங்கே மக்களை மகிழ்விக்கச் சிறு சிறு குட்டைகளில் கைதிகளாய். 

வஞ்சக நெஞ்சுடன் நாம் வடிக்கும் போலிக் கண்ணீரை, முதலைக் கண்ணீர் என்று எவன்தான் சொன்னானோ? ஆனால் இங்கே முதலைகளின் நிஜக் கண்ணீரைக் காண முடிந்தது.

கொட்டடிக்குள், சிறு தொட்டிகளில் வண்ண மீன்கள், கண்ணாடிச் சுவர்களில் முட்டி மோதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தன.


கூரைகளுக்குக் கீழே, கம்பி வலைகளுக்குள் பச்சைக்கிளிகளும், பலவண்ணப் பறவைகளும், மாடப் புறாக்களும், மயில்களும், முயல்களும் என வாயில்லா ஜீவன்கள் அடைக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்தன.

சுதந்திரமாய் நீந்தி, பறந்து, ஓடி ஆடி உல்லாசமாய் வாழ வேண்டிய இடத்தில், சிறைக் கைதிகளாய் நம் கண்முன்னே. சிறைக்குள் வாடுவோரின் கண்ணீரைக் கண்டு இரசிக்கிறோமே, நாம் 'சேடிஸ்டுகளா' என்ற எண்ணம் ஒரு பக்கம் என்னைக் குடைய, அணையின் பதினோருகண் நீர்ப்போக்கியை நோக்கி மெதுவாய் நடந்தோம்.

பசி இல்லை என்றாலும், சுற்றுலாத் தளங்களில் பார்த்ததை எல்லாம் வாங்கித் தின்ன நாம் பழகிக் கொண்டதால், ஐஸ்கிரீம், பஜ்ஜி, நொறுக்குத் தீனிகளுக்குப் பஞ்சம் இல்லை. பஜ்ஜியை கையில் வாங்கிய அடுத்த நொடியே, தாவிப் பாய்ந்து பறித்துச் சென்றது வானரம் ஒன்று. இது அவர்களின் தேசமன்றோ?

காரப்பட்டைப் புரட்டிப் போட்டு, கடலூரை மூழ்கடித்த லட்சம் கனஅடி எப்படி இருக்கும் என்பதன் சுவடுகள் மட்டுமே அங்கே தென்பட்டன. பதினோருகண்
நீர் போக்குப் பாதையில், சிறு குன்றுகளை ஏறி மிதித்து, மரங்களை எல்லாம் வளைத்து நெளித்து, பாய்ந்து சென்ற பெருவெள்ளத் தடங்கள் பளிச்செனத் தெரிந்தன. நாங்கள் பார்த்தபோது வெளியேறிய 2000 கனஅடியே பேரிரைச்சலோடு சீறிப்பாய்ந்தது. அப்படியானால் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கன அடி எப்படி இருந்திருக்கும்? நினைக்கையிலே உடல் சிலிர்க்கிறது.


பிற்பகல் 2 மணி. அணையின் பரந்த நீர் பரப்பைப் பார்த்தவாறு கீழே இறங்கினோம். மீனவர்கள் மேலே ஏறிக் கொண்டிருந்தார்கள். "என்ன மீனுக்கா?" என்று வினவிய போது, "ஆம், நாளை காலைதான் திரும்புவோம்" என்று கடந்து சென்றனர்.

அணையின் காட்சிகள் இங்கு கவர்ச்சிக் காட்டியதால், நாங்களும் சில இடங்களில் மயங்கினோம்.  கைபேசியில் அவற்றை உள்ளடக்கியவாறு பேசிக்கொண்டே வந்தபோது, திடீரென, "நீங்கள் எத்தியிஸ்டா?" என்று கேட்டான் பேரன். "ஆம்" என்றேன். "நானும்தான்" என்றான். எனக்குள் ஒரு இளமைத் துள்ளல். 'அடடா, நம்மைப் போல் ஒருவன்' என்ற பெருமை என்னுள்.


50 ஆண்டு இடைவெளியில்,
இருவருமே ஒரே பருவத்தில், ஆம், பள்ளிப் பருவத்தில், பிறரின் தூண்டுதல் ஏதுமின்றி தானாகவே "எத்தியிஸ்ட்" ஆன ஒற்றுமை ஒன்று போதாதா பெருமை கொள்ள? நம்பிக்கைகளை விதைக்காமல் இருந்தால் நாமும் இங்கு 'நார்வே'க்கள்தானே?
(எத்தியிஸ்ட் - atheist)- நாத்திகன்)

"ஐயர் வந்தார், அள்ளிச் சென்றார்" என்பதற்கிணங்க 'காரிய' வேலைகள் கனஜோராய் நடந்து கொண்டிருந்தன. ஆண்கள் முகம் மழித்து, காசு பணம் வேட்டி சேலை என முறையுள்ளவர்கள் சம்பந்தம் கட்ட, கடைசியில் ஆற்று நீரை தலையில் தெளித்து தீட்டுக் கழிக்க, எதுவும் செய்யாதிருந்த என்னைப் பார்த்து "ஏன் நீங்கள் மட்டும் எதுவும் செய்யவில்லை?" என மற்றொரு பேரன் கேட்டான். 

"பிறப்பு, இறப்பு, பெண் பருவம் எய்தல், மாத விடாய், கிரகப்பிரவேசம் என எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நமக்குத் தீட்டாக்கி, அதைக் கழிக்க சடங்குகள் சம்பிரதாயங்களைப் புகுத்தி, அன்றே நம்மை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி உள்ளனர். இவை எல்லாமே புரோகிதர்கள் தங்களுடைய வருமானத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதானே தவிர, இதனால் கால நேர பண விரயத்தைத் தவிர, நமக்கு ஆவப்போவது ஒன்றுமில்லை என்பதனால், நான் இவற்றை எல்லாம் செய்வதில்லை" என்று எடுத்துச் சொன்னேன். 

கம்பி வலைகளால் சூழப்பட்ட சமுதாயக் கூடத்திற்கு வெளியே, பைரவனின் சில வாகனங்களும், எண்ணற்ற வானரங்களும், ஒரு சில வராகன்களும், தங்கள் வயிற்றுப் பாட்டுக்கு சமுதாயக் கூடத்தைச் சுற்றி வளைக்க, கூரைக்கு உள்ளே சிறைக் கைதிகளாய் நாங்கள், கோழி பிரியாணியுடன் பசியாறினோம். 

இறப்பின் தீட்டைக் கழிக்க சடங்குகள் சம்பிரதாயங்கள்  இருக்கு. ஆனால், உறவுகளுக்கிடையில் எழும் பகைமையைப் போக்க அப்படி ஏதேனும் உண்டா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்க, அவரவர் வந்த திசை நோக்கிப் பயணமானோம்? 

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவு 

Wednesday, December 18, 2024

கத்திரிக்காய் விலை கூட கட்டுமீறல் ஆச்சு! - 1

'போலாமா வேணாமா?' என்ற ஊசலாட்டம் ஒரு பக்கம் இருந்த போதும், புறப்பட்டு விட்டேன் காலை ஆறு மணிக்கு. பேருந்தில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. மூன்று சீட்டு இருக்கையில் சன்னல் ஓரத்தில் நான் மட்டுமே. 

கழுத்திலும், கைகளிலும் தோல் முடிச்சுகளோடு இருந்த கருத்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் ஆற்காட்டில் ஏறினார். பெரும்பாலும் உடலில் தோன்றும் இந்த முடிச்சுகள் தீங்கற்றவை என்றாலும், இத்தகையவர்களை இச்சமூகம் இன்னமும் இழிவாகப் பார்ப்பதனாலோ என்னவோ, இவர்கள் தங்களை தீண்டத்தகாதவர்களைப் போலக் கருதிக்கொண்டு, ஒருவித குற்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாகிறார்கள் என்பதை நமதருகில் அமரும் போதே நம்மால் உணர முடிகிறது.

ஆரணியில் பலர் இறங்க, அந்த அம்மணியும் இடம் மாறி அமர எனதருகில் பட்டாபட்டி ட்ரவுசர் வெளியே தெரிய, கையில் பையுடன் ஒரு விவசாயி என் அருகில் அமர்ந்தார். உட்காரும்போதுகூட அவர் வேட்டியை கீழே இறக்கி விடவில்லை. மிடுக்கு உடை நடுத்தர வர்க்கம் என்றால் இந்நேரம் முகம் சுளித்திருக்கும். 

மிடுக்கு உடை மனிதர்கள் அருகில் உட்கார்வதற்குக்கூட, அழுக்கு உடை மனிதர்கள் கூச்சைப்படுவதும் ஒரு பக்கம் இருப்பதனால், நான் மிடுக்கும் அழுக்கும் இன்றி சாதாரண உடையில் செல்வதே வழக்கம்.

பேச்சு கொடுத்தேன். 
"எந்த ஊர்?" என்றேன். 

'அத்திமூர்" என்றார். 
"அடடே நம்ம மூதாதையர் ஊராச்சே" என்று அவரோடு மனம் நெருக்கமாச்சு. 

"பையில் என்ன?" என்றேன். 
திறந்து காட்டினார். காலிபிளவர், கேரட், கத்திரிக்காய் இருந்தது.

விலை கேட்டேன். 
"கத்தரிக்காய் அரை கிலோ ரூ.30, காலிபிளவர் ஒன்று ரூ.50, கேரட் பரவாயில்லை கிலோ ரூ.30" என்றார். 

விலை உயர்வைக்கூட, 'பரவாயில்லை' என்று திருப்திப் பட்டுக் கொள்கிற நிலைக்குத் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்


கத்திரிக்காயைப் பார்த்த போது "அரை கிலோ மாதிரி தெரியலையே?" என்று நான் கேட்டபோது, 

"ஆமா, எடை மோசடி, நானும் சத்தம் போட்டுட்டுத்தான் வறேன், காயப் பாருங்க, வதங்கனது, அதனாலதான் அரை கிலோ 30, நல்ல காயினா அரை கிலோ 40" என்றார். 

அன்று (1951),

"அஞ்சு ரூபா மாத்தி... மிச்சமில்ல, காசு மிச்சமில்ல..,
கத்திரிக்கா விலைகூட கட்டுமீறலாச்சி, காலம் மாறிப்போச்சு..."

என்ற "அந்தமான் கைதி" பாடல் 

இன்று,

"ஐநூறு ரூபா மாத்தி... மிச்சமில்ல, காசு மிச்சமில்ல" என்றல்லவா பாட வைக்கிறது.

"இதுவாவது பரவாயில்ல, முருங்கக்கா கிலோ 500, அதுவும் கெடைக்கறதில்ல" என்றார். விலையைக் கேட்டவுடன் கொஞ்சம் அதிரத்தான் செய்தது.

"ஏன் இங்கேருந்து வாங்கிட்டுப் போறீங்க, போளூரிலேயே வாங்கிக்கலாமே?" என்று கேட்டதற்கு, அங்க இன்னும் வெல அதிகம்" என்றார். 

"என்னடா, ஒரு கிராமத்துக்காரன், அதுவும் ஒரு சிறு விவசாயி காலிபிளவர் எல்லாம் வாங்கிட்டு போறானே, கிராமத்துல சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய கத்திரிக்காயைக்கூட வாங்கிட்டுப் போறானே, இவ்வளவு காசு கொடுத்து வேற வாங்கிட்டுப் போறானே?" என்று என்னுள் ஓடிய மன ஓட்டத்தை அவர் புரிந்து கொண்டது போல,

"காசா சேத்து வெச்சி என்ன பண்ணப் போறோம்? சாப்புடுவோம்", என்றபோது எனது எண்ண ஓட்டத்தில் நறுக்கென்று ஊசியால் குத்தியது போல் இருந்தது.

தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் அண்மையில் அறுவடை செய்த நெல்லை, மூட்டை ரூ.1600 க்கு போட்டுவிட்டு, அவர் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் மற்றவரோடு கைபேசியில் பேசியிதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

அத்திமூரில் வாழ்ந்த எங்களது மூதாதையர், அந்த ஊரில் இன்னமும் இருக்கும் எங்களது உறவினர்கள், இரண்டொரு முறை அந்த ஊருக்கு நான் சென்று வந்தது, அத்திமூர் மலையில் உள்ள கோட்டை, கோட்டையைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பம், கோட்டையைப் பார்க்க அவர் சென்று வந்தது, ஜமனாமரத்தூர் மலையில் வாழும் மக்களின் வசதி வாய்ப்பு, 

அவரது விவசாயம், கழிவறை குளியல் அறை வசதியுடன் விவசாய நிலத்திலேயே வீடு கட்டிக்கொண்டு அவர் வசிப்பது, தனது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தது, அண்மையில் பெய்த மழை என அவரோடு பேசிக் கொண்டே சென்றதால் போளூர் வந்ததே தெரியவில்லை. 

செய்யாற்றில் ஓரளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பொங்கல் நெருங்குவதால், சாலையின் இரு புறங்களில் இருந்த சில கான்கிரீட் வீடுகளின் சுவர்களில் ஷாரோன்களும், பூம்புகார்களும் நகரம் நோக்கி வருவோரைக் கவர வெற்றிலை பாக்குடன் இளித்துக் கொண்டிருந்தன.

திருவண்ணாமலையில் இறங்கிய போது, திண்டிவனத்திலிருந்து சாத்தனூர் அணை செல்லும் பேருந்து வந்து நின்றது. பேருந்து உடனே புறப்பட இருந்ததால், காலை சிற்றுண்டிக்கு அவகாசம் இல்லை. பத்து ரூபாய் 'குட்டே'யுடன் பயணத்தைத் தொடர்ந்தேன்.

தொடரும்

ஊரான்

சமூக நீதி: உங்களுக்கானத் தலைவர்கள் யார்? - 15

ஊழியர்களிடையே சாதியப் பாகுபாடு 

1980 மற்றும் 1990 களில் 'பெல்' (BHEL) போன்ற பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

அதன் பிறகு, பதவி மூப்பின் காரணமாகவும், இட ஒதுக்கீட்டின் மூலமாகவும் பட்டியல் சாதிப் பிரிவிலிருந்து ஒரு சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சிலரும் உயர் பொறுப்புகளுக்கு வர முடிந்தது. 

உயர் பொறுப்புகளுக்கு வரும் இத்தகைய எவர் ஒருவரும் சாதியைத் துறந்தவர்களும் அல்ல; தீவிர கம்யூனிஸ்டுகளும் அல்ல. அவர்களிடமும் சாதியச் சாயல் இருக்கவே செய்கிறது. அதன் காரணமாக, வேலைக்கு ஆள் எடுக்கும் போதும், ஊழியர்களின் பதவி உயர்வுகளின் போதும், இவர்களும் தங்கள் தங்கள் சாதியினருக்குச் சலுகை காட்டி முன்னுரிமையும் கொடுக்கின்றனர்.

ஓராண்டு 'தொழிற் பழகுநர்' (Apprentice) பயிற்சிக்கு ஆள் எடுக்கும்போதுகூட இந்தச் சாதியச் சாயலைப் பார்க்க முடியும். 

'திறமை' என்ற அளவுகோலை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, இவர்களே அதற்கானக் கூடுதல் மதிப்பெண்களையும் வழங்கி,  முடிந்தவரை எத்தனை பேரை பொதுப் பிரிவில் (Open Category - OC) கொண்டுவர முடியுமோ அதற்கு ஏற்ப, தங்கள் சாதிக்காரர்களுக்கான இவர்களது சலுகை நீளும். இட ஒதுக்கீட்டில் பெறுவது தனி.

பெரியார்

சாதிகளின் தொகுப்பாக இருக்கும் SC, ST மற்றும் OBC வகுப்புகளில், 
இட ஒதுக்கீட்டின் மூலம் வருபவர்களைக்கூட, இந்தத்,  தொகுப்புகளில் பல்வேறு சாதிகள் உள்ளடங்கி இருப்பதனால், தங்கள் தங்கள் சாதி ஆட்களாகப் பார்த்துத் தேர்வு செய்வதில் அந்தந்தச் சாதிக்காரர்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். 

எல்லாச் சாதிகளைச் சார்ந்தவர்களும் இதைச் செய்த போதும், பட்டியல் சாதியினர் செய்யும் போது மட்டும், அது மிகப் பெரியக் குற்றமாகப் பிறரால் பார்க்கப்படுகிறது. 

பட்டியல் சாதியினர் மீது ஓராயிரம் வன்மங்களை மனதில் வைத்துக் கொண்டே, தனக்கு ஆதாயம் தேவை என்றால், உயர் பதவியில் உள்ள  பட்டியல் சாதி அதிகாரிகளுக்கு 'எடுபிடி' வேலை செய்து பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஆதாயங்களை அடையும் பிறசாதி காரியவாதிகளும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கின்றனர்.

வேலைக்கு ஆள் எடுக்கும் போதும், ஊழியர்களின் பதவி உயர்வின் போதும், எல்லா அரசு அலுவலகங்களிலும் இது போன்ற சாதி அடிப்படையிலான பாரபட்சம்
தொடர்ந்து நீடிப்பதால் ஊழியர்களுக்கு இடையிலான சாதியக் காழ்ப்பும் அவர்களிடையே வழிந்தோடுகிறது. 

இத்தகையப் பாரபட்சம்தான், தமிழ்நாட்டில் உள்ள 'பெல்' (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், இரயில்வேயிலும் இன்று வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கிறது. இங்கே நாம் சாதி அடிப்படையில் பாராபட்சம் பார்க்கிறோம். அங்கே, அவன் வடக்கு தெற்கு என்ற அடிப்படையில் பாரபட்சம் பார்க்கிறான். 

தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கே பெரும்பான்மை இடங்களை ஒதுக்குவதற்கும் நாம் போராட வேண்டி உள்ளது என்பதைத்தான்
மேற்கண்ட வடக்கு தெற்கு பாரபட்சம் நமக்கு உணர்த்துகிறது.

நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில், தேர்வுக்கான வினாத்தாள்களை உயர் பதவியில் இருப்பவர்கள், தங்கள் தங்கள் சாதிக்காரர்களுக்கு மட்டும் இரகசியமாகச் சுற்றுக்கு விட்டுத் தங்கள் சாதிக்காரர்களைச் 'சாதிக்க' வைப்பதும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எதற்கு இரகசியம், நுழைவுத் தேர்வை நேரடியாகப் பார்த்தே எழுது என்கிறான் வட இந்தியன். இல்லை என்றால் விடைகளையும் அவனே சொல்லி விடுகிறான்.

அவ்வளவுதாங்க 'மெரிட்டு'.

எல்லா அரசு அலுவலகங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. நேரடிக் கள அனுபவம் என்கிற வகையில் BHEL ஐ இங்கே நான் உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

***
உங்களுக்கானத் தலைவர்கள் யார்?

ஆலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தச் சமூகத்தில் மிகச் சொற்பமே. ஆனால், ஓரளவு விவரம் தெரிந்தவர்களாகவும் இருப்பதால் இந்தச் சாதியக் காழ்ப்பை இவர்கள் ஒட்டுமொத்தச் சமூகம் முழுவதற்கும் எடுத்துச் செல்கின்றனர்.

தன் சாதி மக்கள் தரமானக் கல்வியைப் பெறுவதற்கும், அரசு வேலைகளைப் பெறுவதற்கும் படிப்பகங்கள் உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழிகாட்டுவதற்குப் பதிலாக, பெரும்பாலும் அடுத்த சாதியினர் மீதான வன்மத்தையே இவர்கள் தங்கள் தங்கள் சாதி மக்களிடம் பரப்பி வருகின்றனர். 

ஏதுமறியா அப்பாவி மக்களும் இத்தகையோரின் தவறான வழிகாட்டுதலுக்குப் பலியாகி, கல்விக்கு வழிகாட்டிய மகாத்மா ஜோதிராவ் புலேவையும், பெரியாரையும், அம்பேத்கரையும், ஆனைமுத்துவையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, வன்மத்துக்கும், வன்முறைக்கும் வழிகாட்டும் பசும்பொன்களையும், காடுவெட்டிகளையும், சந்தனக் கட்டைகளையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, கையில் பேனா பிடிப்பதற்குப் பதிலாக அருவாவைப் பிடித்துக் கொண்டுத் திரிகின்றனர். போதாக்குறைக்கு இப்போது 'காவி' சூலத்தையும் கையில் எடுத்துக் கொண்டனர்.

எனவே, இன்றைய சூழலில் தகுதி திறமை என்பதிலும் மோசடி நடக்கிறது. வகுப்புவாரித் தொகுப்பில் போனாலும் சாதியக் கசடு வழிகிறது. வேறு என்ன செய்ய?

சாதிவாரிப் பங்கீடு நோக்கித்தானோ? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்














Tuesday, December 17, 2024

அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள்! - 14

அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள்

1978 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மூன்றாண்டு பொறியியல் பட்டயப் (Engineering Diplamo) படிப்பை முடித்தபோது, இரு எழுத்துத் தேர்வுகளை நடத்தி 500 பேரை திருச்சி பாரத மிகு மின் நிறுவனம்
(BHEL) தேர்வு செய்தது. இதில் நானும் ஒருவன். ஆண்டுக்கு 200 பேர் வீதம் அவர்களுக்கு ஓராண்டு தொழிற் பழகுநர் (Technician Apprentice) பயிற்சி கொடுத்து இறுதியாக ஒரு நேர்முகத் தேர்வு வைத்து அவர்களை பொறுப்பாளர் (Chargeman) பதவியில் அமர்த்தியது நிர்வாகம்.


அப்பொழுது பட்டியல் சாதியினருக்கு மட்டுமே நடுவண் அரசு பொதுத்துறைகளில் இட ஒதுக்கீடு இருந்ததனால், மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பட்டியல் மற்றும் பழங்குடி சாதியினர் அனைவருமே மூன்றாவது தொகுப்பில் (Technician Apprentice III Batch) சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதற்கடுத்த நான்காவது தொகுப்பில் (IV Batch) பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டச் சாதியினர் (FC and OBC) மட்டுமே இருந்தனர். 

அரசின் பல்வேறு நிறுவனங்களில், வேலைக்குச் சேர்ந்த புதிதில் சாதிகளை மறந்து நண்பர்களாக மட்டுமே பழகி வந்தவர்களுக்கு, ஆலையில் அடுத்தடுத்து சந்தித்த பதவி உயர்வுகளின் போது, தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் என எல்லா நிலைகளிலும் அவர்களுக்குள் மறைந்திருந்த சாதி வெளிக்காட்டத் தொடங்கியது. பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு, பதவி உயர்வு பெற்றவர்களின் மீதான காழ்ப்பாக, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வெறுப்பாக அது மாறியது. 

வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அன்றே சட்டம் இருந்தது. அதனால் அவர்கள் பதவி உயர்வு பெறுவது நீதியானது, சட்டப்படியானது. அது தவிர்க்க முடியாதது. அதே போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அவர்களுக்குரிய விகிதாச்சாரப் பங்கீட்டைப் பெற்றிருக்க முடியும் என்றல்லவா இவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், இட ஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்புகளை இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அம்பேத்கர் அவர்கள் உறுதி செய்திருந்த போதும், அதை நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின் மீது கோபப்படுவதற்குப் பதிலாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானக் கோபமாகச் சிலரால் அது மடை மாற்றப்பட்டுவிட்டது. 

இதில் கொடுமை என்னவென்றால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்குச் சட்ட உரிமை வழங்கிய அம்பேத்கரையே தங்களுக்கு எதிரானத் தலைவராகச் சித்தரித்ததுதான். மண்டல் குழு அமலுக்கு வந்த பிறகும் தாழ்த்தப்பட்டோர் மீதான காழ்ப்பு மனநிலைதான் இன்றுவரை பிற சாதிக்காரர்களிடம் நீடிக்கிறது.

தொழிலாளர்கள் மேற்பார்வையாளர்கள் அதிகாரிகள் என ஒவ்வொரு மட்டத்திலும் இத்தகையப் போக்கே நிலவியது; இன்றும் அதுவே தொடர்கிறது. 


இதன் விளைவாக, அரசு நிறுவனங்களில் அதுவரை ஒற்றுமையாய் இருந்த ஊழியர்களும், தொழிலாளர்களும், சாதி அடிப்படையில் பிளவு பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கென தனி சங்கங்களையும், பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கென தனி சங்கங்களையும் அமைத்துக் கொண்டனர். ஒற்றுமையாக ஒன்றிணைந்து போராட வேண்டிய ஆற்றலை இவர்களே சிதைத்துக் கொண்டதால் அது நிர்வாகத்திற்கு மட்டுமே சாதகமாய் அமைந்து போனது.
***
SC, ST மற்றும் OBC என வகுப்பு வாரியாக ஊழியர்கள் பிளவு பட்டுப் போனாலும், ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் பல்வேறு சாதிகள் இருப்பதால், பதவி உயர்வு உள்ளிட்ட சிலவற்றைப் பெறுவதில் இவர்களுக்குள்ளேயே சாதிய அடிப்படையில் முட்டி மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது.

இது குறித்து அடுத்து பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்