Showing posts with label பகத்சிங். Show all posts
Showing posts with label பகத்சிங். Show all posts
Saturday, 26 September 2015
Sunday, 22 March 2015
கடவுள் ஒரு செங்கிஸ்கான்-வீழ்த்துங்கள் அவனை!
”நான் நாத்திகம் பேசுவதற்கு காரணம் என்னுடைய
ஆணவமா? அகந்தையா?
எனது பாட்டனாரும் எனது தந்தையும் பக்திமான்களாக
இருந்தும் எனது பள்ளிப் படிப்பின் போது காலையும் மாலையும் காயத்ரி மந்திரம் சொல்லி
பிரார்த்தனை செய்து சிறு வயதில் பக்தனாக இருந்த நான் எப்படி நாத்திகன் ஆனேன்?
ஒரு வழக்கு தொடர்பாக நான் கைது செய்யப்பட்டு
காவலில் இருந்த போது அவ்வழக்கில் எனக்கு தூக்கு தண்டனைகூட விதிக்கப்படலாம் என்ற நிலையில்
இரண்டு வேலையும் கடவுளை வணங்கச் சொல்லி காவலர்கள்
என்னைத் தூண்டிய போதும் மிகவும் இக்கட்டான நிலையிலும் நான் தொடர்ந்து நாத்திகனாகவே
இருக்க முடிந்ததேன்?
மதங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான் எனில்
அவைகளுக்குள் வேறுபாடுகள் ஏன்? இந்து மதத்திற்குள்ளாகவே ஆரிய சமாஜம், சனாதன தர்மம்
என பிரிவுகள் ஏன்?
துன்பமும் துயரமும் சதா நடந்து கொண்டிருக்கும்
போது கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் எனில் இதை எல்லாம் போக்காமல் ஒரு நீரோ மன்னனைப்
போல - ஒரு செங்கிஸ்கானைப் போல அவன் நடந்து கொள்வதேன்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும்
கடவுளிடம் இருக்கும் போது எதற்காக கடவுள் மக்களைப் படைத்தான்?
சாதித் திமிர்கொண்ட மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை
தீண்டத் தகாதவனாக நடத்துவதற்கும், மமதையும் பேராசையும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில்
கொண்ட ‘குதிக்கும்’ பார்ப்பனர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும்
தாழ்த்த்தப்பட்ட மக்களின் தண்டனைக்குப் பொறுப்பாளி
யார்? உங்களுடைய பரிசுத்த ஞான நூற்களாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள்
கேட்டாலும் அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு
அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்?”
இப்படி கடவுள் மதம் குறித்து பகத்சிங் சரமாரியான
கேள்விக் கணைகளைத் தொடுத்து “கற்றுணர் - எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி
ஆணித்தரமான ஆப்புகளும், கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம்,
கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்”
என்கிற உணர்ச்சிகள் தன்னுடைய மனதின் வாசற்படியில் கடல் அலைகளைப் போன்று கிளம்பி தாவித்தாவி
முட்டி மோதி விசயங்களை கற்றுணர ஆராய்ந்தறியத் தொடங்கியதின் விளைவாக அவரிடம் பெறும்
மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் ஒரு நாத்திகன் ஆனார்.
புதியவற்றைக் கற்றுணர்வதற்கு பகத்சிங் நமக்கெல்லாம்
ஒரு வழிகாட்டி!
மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்கள்
சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாள்.
சுகதேவ் - பகத்சிங் - ராஜகுரு
மேலும் படிக்க:
1.நான் நாத்திகன் ஏன்?
தமிழில் பா.ஜீவானந்தம்.
வெளியீடு கீழைக்காற்று வெளியீட்டகம். 10,
அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002. தொ.பே எண் 044-28412367
விலை: ரூ15/=
2.The Daring Youth of India : BAGATH SINGH. by:
Col.Raghvinder Singh.
Published by: VIJAY GOEL, S-16, Naveen
Shahdara, Delhi-110032 Phone: 22324833 e-mail: goelbooks@rediffmail.com
விலை: ரூ75/=
மேலும் பார்க்க:
The
Legend of Bhagat Singh (2002) - Hindi Movie
https://www.youtube.com/watch?v=x-Zz6nobDik
Sunday, 13 January 2013
புத்தகக் கண்காட்சி: எதற்காக?
இந்த ஆண்டு 750 அரங்குகள் - 10 இலட்சம் தலைப்புகள் 1 கோடி புத்தகங்கள் - சென்ற ஆண்டு ரூ12 கோடிக்கு விற்பனை என சென்னையில் நடைபெற்று
வரும் 36 வது புத்தகக் கண்காட்சி பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பைப்
பார்க்கும் போது எழுத்துலகில் ஒரு மொபெரும் புரட்சி நடப்பதைப் போன்ற ஒரு பிரமிப்புதான்
பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு நூல்களைத்
தேடிப்பிடித்து வாங்கிப் படித்து வந்த நான் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் சென்னை புத்தகக்
கண்காட்சியை எட்டிப் பார்க்கிறேன். சென்ற ஆண்டு நான் சில ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி
வந்த நூல்களில் கால் பங்கு நூல்களைக்கூட இன்னும் படித்து முடிக்கவில்லை. எனவே வாங்கியதைப்
படித்துவிட்டு பிறகு மேற்கொண்டு வாங்கலாம் என நினைத்திருந்தேன். எனவே இந்த ஆண்டு புத்தகக்
கண்காட்சிக்கு செல்வதில்லை என முடிவெடுத்திருந்தேன்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் எழுத்தாளர்கள்
பாமரன், கமலாலயன், கவிஞர் சல்மா, பதிப்பாளர்
காந்தி கண்ணதாசன் ஆகியோர் பங்கு கொண்ட புத்தகக் கண்காட்சி பற்றிய கலந்துரையாடலைப் பார்த்த
பிறகு இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென முடிவெடுத்தேன்.
8 கோடி பேர் வாழுகின்ற தமிழகத்தில், ஒரு நூலின் 1200 படிகளை விற்பனை செய்ய ஒரு நூலாசிரியரருக்கு 15 ஆண்டுகளானதாகவும், மக்கள் புத்தகங்களுக்காக
செலவிடுவதில்லை, வீடுகளில் படிப்பதற்கு தனி அறை கிடையாது, நூல்களைப் படிப்பதற்கு பெற்றோர்கள்
பிள்ளைகளை ஊக்குவிப்பதில்லை, இலக்கியம் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை, எழுதியது
விற்பனையாகாத போது எழுத்தாளன் சோர்ந்து விடுகிறான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்
சல்மா.
“பதிப்பாளனும் ஒரு வியாபாரிதான். புத்தககங்கள்
விற்பனையாகாமல் முடங்கிப் போனால் போட்ட முதலை எடுக்க முடியவதில்லை. தீவிர இலக்கியங்கள்
விற்பதற்கு புத்தகக் கண்காட்சி பெரிதும் உதவுகின்றன” என்கிற கண்காட்சியின் வியாபார
நோக்கத்தை தெளிவு படுத்தினார் காந்தி கண்ணதாசன்.
“கோடிகளில் நூல்கள் விற்பனையாகி என்ன பயன்?
எத்தகைய நூல்கள் விற்பனையாகின்றன என்பதே முக்கியம். ஆன்மீக - நியூமராலஜி போன்ற நூல்கள்
அதிகம் விற்பனையாகி என்ன பயன்? நூல்களின் உள்ளடக்கமே இங்கு முக்கியம். சரியான நூல்கள்
கோடிகளில் விற்பனையாகி இருந்தால் இந்நேரம் புரட்சியே நடந்திருக்கும். ஒரு எழுத்தாளன்
மக்களோடு இருக்கும் போது விற்பனை ஒரு பிரச்சனையே இல்லை. நான் எழுதிய 12 நூல்களும் தேங்கியதே இல்லை” என்பதைச்
சொன்னதோடு “சிங்கிள் டீ, லைட் டீ தெரியும், ஆனால் ராயல்டி பற்றி தெரியாது” என பதிப்பகத்தாரின்
மோசடிகளையும் போட்டுடைத்தார் பாமரன்.
கேரளத்தைப் போல, சில மேலை நாடுகளைப் போல
தமிழகத்தில் நூல்களுக்கு - குறிப்பாக இலக்கியங்களுக்கு அதிக வரவேற்பில்லை என்பதே இந்த
விவாதத்தில் மையமாக உணர்த்தப்பட்டது.
இந்த விவாதத்தைப் பார்த்த பிறகு ஒருவன் எதற்காக
இவர்கள் எழுதும் நூல்களை வாங்க வேண்டும், எதற்காப் படிக்க வேண்டும் என்கிற கேள்விதான்
என்னுள் எழுந்தது. இதற்கான விடையைத் தேடினேன். 2011 ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி
கீழைக்காற்று நூல்வெளியீட்டு விழாவில் தோழர் மருதையன் ஆற்றிய உரை நினைவுக்கு வர உரையின்
நூல் வடிவத்தை எடுத்துப் படித்தேன்.
எதற்காக?
அதன் பிறகு மேலும் சில ஐயங்கள் என்னுள் எழுந்தன.
எதற்காக எழுத்தாளன் எழுத வேண்டும் ஓவியன் எதற்காக வரைய வேண்டும்? கவிஞன் எதற்காகப்
பாடல் எழுத வேண்டும்? பாடகன் எதற்காகப் பாட வேண்டும்? பேச்சாளன் எதற்காக சொற்பொழிவாற்ற
வேண்டும்? நடிகன் எதற்காக நடிக்க வேண்டும்? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே சென்றன.
வாசகனோ, எழுத்தாளனோ, ஓவியனோ, பாடகனோ, பேச்சாளனோ,
நடிகனோ இவர்கள் தங்களின் இன்பத்திற்காகவோ,
இரசனைக்காகவோ, பொழுது போக்கிற்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, புகழ்
பெறுவதற்காகவோ, இன – மத – மொழி - பண்பாட்டு
பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவோ என சிலவற்றிற்காகத்தான் வாசிக்கவும், எழுதவும்,
வரையவும், பாடவும், பேசவும், நடிக்கவும் செய்கின்றனர் என்பதை புரிந்து கொண்டேன்.
ஒரு விவாதத்திற்காக ஒரு நுலைப் படிப்பதற்குப்
பதிலாக தான் இந்தியா டுடே படித்துக்கொண்டிருந்ததை இன்பத்துக்காகப் படிக்கிறேன் என்பதை
ஒரு தோழர் உணர்த்தியதாக மருதையன் தனது உரையிலே சுட்டிக்காட்டுகிறார். நான்கூட நோக்கமின்றி
நிறைய படிக்கிறேன். அப்படிப் படிப்பதில் ஒருவித இன்பம் இருக்கிறது. இத்தகைய இன்பத்திற்காகப்
படிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என்பதே உண்மை.
இன்பத்திற்காக, இரசனைக்காக, பொழுது போக்கிற்காக,
மகிழ்ச்சிக்காக, பொருள் ஈட்டுவதற்காக, புகழ் பெறுவதற்காக, இன – மத – மொழி - பண்பாட்டு
பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ஒருவன் செய்கிற செயல் மக்களின் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண்பதில்லை.
கடமை
படிப்பது, எழுதுவது, பாடுவது, வரைவது, நடிப்பது,
பேசுவது இவைகளை ஒரு கலைஞன் தனது கடமையாகக் கொள்ள வேண்டும். இந்தக் கடமைக்கு ஒரு நோக்கம்
இருக்க வேண்டும். இந்த நோக்கம் நடைமுறைக்கானதாக இருக்க வேண்டும். அந்த நடைமுறை சமூகத்தில்
நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளையும், ஏழ்மையையும், சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் பாதுகாத்து
வருகிற அல்லது அவற்றிற்கு காரணமாக இருக்கிற இச்சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான புரட்சிகர
நடைமுறையாக இருக்க வேண்டும்.
புத்தகக் கண்காட்சியின் பிரமிப்பைக் காணவே
நான் இந்த ஆண்டு கண்காட்சிக்குச் சென்று வந்தேன். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் பகவத்
கீதைகளோ, விவேகானந்தரின் போதனைகளோ, காந்தியின் சத்திய சோதனைகளோ, கல்கியின் பொன்னியின்
செல்வன்களோ, யோக - தியானக் கலைகளோ, உடல் நல - ஆரோக்கிய நூல்களோ, சுயமுன்னேற்ற நூல்களோ,
நியூமராலஜி - பக்தி இலக்கியங்களோ அல்லது உயிர்மை - காலச்சுவடுகளின் 'தீவிர' இலக்கியங்களோ
சமூகத்திற்குத் தேவையான பாரதூரமான மாற்றங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை. மற்றொருபுறம் சமூகத்தில் கேடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுகின்ற
உத்வேகத்தை ஏற்படுத்தும் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல்களும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் - பெண்ணடிமைத்தனத்தையும் அடித்து வீழ்த்துகிற ஆற்றலைத் தரும் பெரியாரின் பேச்சும் - அம்பேத்கரின் எழுத்துக்களும், அதிகரித்து வரும் ஆதிக்கச் சாதிவெறி கொட்டத்தை முட்டி மோதி வீழ்த்த
“ஆயிரம் காலம் அடிமை என்றாயே அரிசனன்ணு பேரு வைக்க யாரடா நாயே” போன்ற கோவனின் எழுச்சியூட்டும்
பாடல்களும், பன்னாட்டுச் சுரண்டலுக்கு வழிவகுத்து வல்லரசு நாடுகளுக்கு அடிமையாகி வரும்
இந்திய நாட்டை மீட்டெடுக்க பகத்சிங்கின் பேச்சும் - எழுத்துக்களுமே இன்றைய தேவை.
இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால்தான் பெண்கள்
மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட என்ன செய்யலாம் என்பதை கண்டறியவும் அவற்றை
மக்களிடையே எடுத்துச் செல்லவும் துணைபுரிகின்ற நூல்களாகத் தேடிப்பிடித்து வாங்கி வந்துள்ளேன்.
ஒருவன் தன் இரசனையை, பொழுது போக்கை, பொருள்
ஈட்டுவதை, புகழ்பெறுவதைத் தாண்டி தனக்கான பிரதி பலன் எதையும் எதிர்பாராத சமூகத்தில்
மாற்றம் நிகழுவதற்காக உழைப்பதில்தான் இன்பத்தைக் காணவேண்டும். அதுதான் நிறைவான இன்பமாக
இருக்க முடியும்.
Subscribe to:
Posts (Atom)


