Showing posts with label கோவன் ஊரான் மட்டவெட்டு போளூர் வேலூர் உறவு நட்பு. Show all posts
Showing posts with label கோவன் ஊரான் மட்டவெட்டு போளூர் வேலூர் உறவு நட்பு. Show all posts

Friday, 25 September 2026

உறவா? நட்பா? எது உயர்ந்தது? – கதிர்வேலு விட்டுச் சென்ற வாழ்வியல் பாடம்!

உறவா? நட்பா? எது உயர்ந்தது? – கதிர்வேலு விட்டுச் சென்ற வாழ்வியல் பாடம்!

கதிர்வேலு

செப்டம்பர் 24, காலை 11 மணி...
அலைபேசி வழக்கம்போலத்தான் ஒலித்தது. ஆனால் மறுமுனையில் ஜோதியின் குரல், “அப்பா தவறிட்டாரு…” என்று சொன்ன அந்த நொடி, காலம் எனக்குள் உறைந்துபோனது. அந்த மரணச் செய்தி என் நெஞ்சில் இறக்கிய இடி, என்னை முற்றிலுமாக உலுக்கிவிட்டது.

முட்டி மோதி வந்த கண்ணீரைத் தடுக்க முடியாமல் திணறினேன். குடும்பத்தினரின் முன்னால் அழுதுவிட்டால் நம்மைப் பலவீனமானவன் என்றோ, கோழை என்றோ எண்ணி விடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மைத் தடுமாற்றம். வேறு வழியின்றி கழிவறைக்குள் தஞ்சமடைந்து, கதவை மூடிக்கொண்டு கண்ணீரைச் சொரிந்து என் துயரத்தைக் கொட்டித் தீர்த்தேன். எழுபதைத் தொடும் இந்த வயதிலும் பிறர் முன்னால் கதறி அழுவது பலவீனமா அல்லது கோழைத்தனமா? இன்றுவரை எனக்கு விடை தெரியவில்லை.

கீழடி அகழாய்வு விவகாரத்துக்காக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைக் கண்டித்து திருச்சியில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் என்னால் பங்கேற்க இயலாது என்ற செய்தியைத் தோழர் கோவனிடம் வருத்தத்துடன் தெரிவித்தேன். அங்கே நான் பேச வேண்டிய உரையைப் பதிவாக வெளியிடலாம் என்று தொகுத்து வைத்துவிட்டு, மனப் பாரத்தோடு பயணத்திற்கு ஆயத்தமானேன்.

செப்டம்பர் 25...
மனைவியுடன் சொந்த ஊரை நோக்கிப் பயணம். நம் மனதை ஆழமாகப் பாதித்த மரணங்களுக்குச் செல்லும்போது, புறப்படும் இடத்தில் இருக்கும் துக்கத்தை விட, ஊரை நெருங்க நெருங்க அந்தத் துயரம் மனதுக்குள் கூடிக்கொண்டே போகும். வழிநெடுகிலும் முகத்தில் இழையோடும் சோகத்தைக் கைக்குட்டையால் மறைத்தபடியே பயணித்தேன். வேலூரிலிருந்து போளூர் வழியாக என் கிராமத்திற்குச் செல்லும் பாதையில், பசுமை போர்த்திய ஜவ்வாது மலைத்தொடரும், சாலையோர மரங்களும், வயல்வெளிகளும் கண்களைக் தழுவி என் துயரத்தை சற்று ஆசுவாசப்படுத்தின.

கீழ்பாலூர் கூட்டுச்சாலையில் இறங்கியதும் ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் எட்டு கிலோமீட்டர் தூரம் என்றாலும், கொடிநடையாய் நடந்து சென்ற அந்தப் பழைய நினைவுகள் கணப்பொழுதில் வந்து போயின. நல்லவேளையாக உறவினரின் இருசக்கர வாகனத்தில் தொற்றிக்கொண்டு அத்திமூரான் கொட்டாயை நோக்கிச் சென்றோம்.

வீட்டின் வாசலை அடைந்ததும், கதிர்வேலுவின் மகன் ஜோதியைக் கட்டித் தழுவினேன். அந்த அரவணைப்பில் என் துக்கத்தின் பாரம் சற்று குறைந்ததைப் போலிருந்தது. ஆனால், குளிர்பதனப் பெட்டிக்குள் சலனமின்றிச் சாய்ந்திருந்த கதிர்வேலுவைக் கண்டதும் என் கட்டுப்பாடு உடைந்தது; ஆனமட்டும் கதறி அழுதேன்.

நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் சூழ்ந்திருந்த அந்த இடத்தில், "அடுத்தவர் முன்னால் அழுகிறோமே" என்ற கூச்சமோ தயக்கமோ அங்கே யாருக்கும் இருக்கவில்லை. அனைவரும் தங்களுக்கு வேண்டியவர்களைக் கட்டிப்பிடித்து அழுதபடியே தங்கள் துயரைப் பகிர்ந்துகொண்டனர். நானும் அழுதேன். அழுத பிறகுதான் சோகத்தின் பெரும் சுமை நெஞ்சிலிருந்து இறங்கியது போலிருந்தது. ஏனோ தெரியவில்லை... அழும்போது நம்மையறியாமலேயே மூக்குச் சலசலவெனக் கொட்டிவிடுகிறது.

பின்னர் நெருங்கிய உறவுகளோடு அமர்ந்து சற்று ஆசுவாசப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினேன். 

மரணிப்பவர்கள் சும்மா பிரிவதில்லை. ஆண்டுகணக்கில் முகம் பார்க்காத உறவுகளைப் பார்க்க வைத்து, பேசாத உறவுகளைப் பேச வைத்துவிட்டுத்தான் சுடுகாட்டை நோக்கிப் பயணிக்கிறார்கள். ஆனாலும், சில பேசாத உறவுகள் இன்னமும் விலகியே நிற்பதையும் அங்கே பார்க்க முடிகிறது.

யார் இந்த கதிர்வேலு? அவன் மரணம் என்னை ஏன் இந்த அளவிற்கு உலுக்கியது?
அவன் என் உடன் பிறந்தவன் அல்ல. என் இரண்டாவது பெரியப்பாவின் (நான் செல்லமாக அழைக்கும் நடப்பாவின்) மூத்த மகன். என்னை விட ஒரு வாரம் மூத்தவன். "மூத்தவனை 'அவன்' என்று ஒருமையில் விளிக்கலாமா?" என்று சிலருக்கு ஐயம் எழலாம். ஆனால், அவன் எனக்கு வெறும் உறவினன் மட்டுமல்ல, என் ஆத்மார்த்தமான நண்பன்!

ஒரே தூலத்தின் கீழ் அமைந்த கூரை வீட்டில் அக்கம் பக்கமாய் வாழ்ந்தவர்கள் நாங்கள். ஒரே பள்ளியில் படித்தோம்; தெருக்கூத்துகள் ஆடினோம்; நிலவொளியில் அணிசேர்ந்து மண் குவித்தல் ஆட்டம் ஆடினோம்; இரவில் ஏரி, கால்வாய்களில் மீன்பிடிக்கக் கை கோர்த்துச் சென்றோம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு அவன் வயலோடு நின்றுவிட, நான் மேற்படிப்புக்காகச் சென்னை சென்றேன். பின்னர் பணி நிமித்தமாகத் திருச்சி, இராணிப்பேட்டை என என் இடங்கள் மாறினாலும், அவனுடனான என் உறவு ஒருபோதும் மாறியதில்லை. தனது இறுதி மூக்சுவரை தெருக்கூத்துக் கலைஞனாய், வன்னிய நாடகத்தில் வரும் வாதாபியாய் வாழ்ந்தவன் அவன். 

உறவுகள் வெறும் 'உறவுகளாக' மட்டுமே இருக்கும்வரை, அங்கே ஏதோவொரு பிரதிபலனும் எதிர்பார்ப்பும் ஒட்டியே இருக்கும். ஆனால், அந்த உறவு 'நட்பாக' மாறும்போது, பிரதிபலன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அன்பும், அரவணைப்பும், வழிகாட்டுதல்களும் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். உறவுகளே நட்பாய் மாறும்போது உருவாகும் பிணைப்பு, கரும்பாறையைப் போல மிகவும் இறுக்கமானது; அதற்குள் கசியும் பாச நதி பிறர் கண்ணுக்குத் தெரியாதது!

குடிக்கு அடிமையாகி, குடும்பத்தினரைத் தவிக்கவிட்டுத் தள்ளாடுபவர்களைப் பார்த்து, "இவனுக்கு ஒரு சாவு வராதா?" என்று வேதனையில் புலம்பும் எத்தனையோ குடும்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், என் ஆத்மார்த்த நண்பன் கதிர்வேலுவுக்கு மதுவோ, புகையோ எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. அப்படிப்பட்டவன், எழுபதைத் தொடவிருந்த நிலையில் நோய்க்கு ஆட்பட்டு மாண்டுபோனது பெரும் கொடுமை. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவனை மீட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போயின.

மரணம் விட்டுச் செல்லும் பாடம் மிகவும் அளப்பரியது...
"உறவுகளையும் தாண்டி எல்லாரிடமும் நட்போடு பழகுவோம். அந்த உண்மையான நட்பிற்கு ஈடு இணையேதுமில்லை!"

என் ஆத்மார்த்த நண்பன் கதிர்வேலு தன் வாழ்நாளில் நமக்கு உணர்த்திச் சென்ற உயரிய பாடம் இதுதான்!

கண்ணீருடன்,

பொன்.சேகர்