Showing posts with label ராசி. Show all posts
Showing posts with label ராசி. Show all posts

Wednesday, 17 December 2014

சனிப் பெயர்ச்சி: கோத்ரா ராசியை விட்டு அயோத்தி ராம ராசிக்குள்….. பொதுப்பலன் (26.05.2014 முதல் 25.05.2019)

”இந்தச் சனியன் எப்ப வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சதோ அப்பத்தலிருந்து குடும்பத்துல பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாப் போச்சு. எதச் செஞ்சாலும் வௌங்கல”

மருமகள்களைப் பார்த்து இத்தகைய வசவுகள் வெளிப்படாத வீடுகளே இருக்க முடியாது. நல்லது நடந்தால் மருமகளை ‘மகாலட்சுமி’ என்பதும் கெட்டது நடந்தால் ‘சனியன் – பீடை’ என்பதும் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாகவே நீடிக்கிறது. நல்லது நடக்காததற்கு புறக்காரணங்கள் பல இருந்தாலும் எல்லாவற்றையும் சனியின் மீது போடும் பழக்கம் காலம் காலமாக மக்களிடையே நிலவி வருகிறது. ஒருவரும் சனியை பார்த்ததில்லை என்றாலும் இங்கே மருமகளைத்தான் சனியின் வடிவமாகப் பார்க்கிறார்கள்.

“இந்தச் சனியன வெறட்டனாதான் நம்ம குடும்பம் உருப்படும்” என எண்ணுவோரும் உண்டு. சனியன் என்றால் ஒருவித அச்சம் கலந்த உணர்வும், அது தம்மை விட்டு அகன்றுவிட வேண்டும் என்கிற பதை பதைப்பும் மக்களிடையே வெகுவாக ஊறிப் போயுள்ளது. இன்று பெருகி வரும் சமூக நெருக்கடிகளில் தங்களின் வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து மக்கள் மீளமுடியாமல் தவிக்கும் போது, சனிப் பெயர்ச்சி என்கிற பூச்சாண்டி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திவிடுகிறது.

மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக அமைவது பண்டாரங்களால் சொல்லப்படும் சனிப் பெயர்ச்சிப் பலன்களே.  சனிப் பெயர்ச்சியால் நன்மையா? தீமையா என எனக் கேள்வி எழுப்பி, ஒரு சில நன்மைகளை மட்டும் சொல்லிவிட்டு அதிக அளவில் தீமைகளைப் பட்டியலிட்டால் அப்பாவிகள் அச்சப் படாமலா இருக்க முடியும்? இந்த அப்பாவிகள் பட்டியவில் அதிக இடம் பிடிப்போர் மெத்தப் படித்த நடுத்தர வர்க்கமே  என்பது ஒரு அவலமான உண்மை.

இந்த அச்சம், பரிகாரங்களை நோக்கி மக்களை விரட்டுகிறது. பரிகாரங்களைச் செய்வதன் மூலம் இந்தச் சனியின் பிடியிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக சனி பற்றிய நம்பிக்கை  மக்களை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. பரிகாரங்கள் அதிகரிப்பதால் பரிகாரங்களைப் பரிந்துரைக்கும் பண்டாரங்கள் தங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்கிறார்கள். சனிப் பெயர்ச்சியினால் உண்டாகும் பலன் இது ஒன்றுதான். சனிப் பெயர்ச்சியால் வேறெதுவும் நடப்பதில்லை. ஆக, உண்மையில் சனியால் ஆதாயம் அடைவோர் ஒரு சிலர்; பாதிக்கப்படுவோரோ பலர்.

இந்த ஆண்டு 16.12.2014 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைந்து இங்கு (விருச்சிகம் ராசிக்குள்) 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்தப் போகிறாராம். அண்டத்திலிருந்து கதிரவன் வீசும் கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ள மனிதன் குளு குளு அறைகளை ஏற்படுத்திக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பூமிக் குண்டையே குளு குளு அறைக்குள் அமுக்கி வைத்தாலும் திருநள்ளாரில் கருவறைக்கள்ளே கல்லாக சமைந்து கிடக்கும் சனிபகவான் வீசும் கதிர்வீச்சிலிருந்து மட்டும் யாரும் தப்ப முடியாதாம்.

இனி, இந்தக் கதிர்வீச்சினால், அதாவது சனி பகவானின் பார்வையினால் உலக மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைகளை ஒரு பண்டாராம் பட்டியலிட்டுள்ளதை அடுத்த பதிவில் பார்ப்போம்.  

தொடரும்….

தொடர்புடைய பதிவுகள்:

Friday, 3 December 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்----2


திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் முதலில் பத்துப் பொருத்தம்தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட நாட்களாக வரன் கிடைக்காதவர்களுக்கு பத்துப் பொருத்தமும் பொருந்தி ஒரு வரன் அமைந்து விட்டால் எப்படியாவது அதை முடித்துவிட வேண்டும் என்று அரும்பாடு படுகிறார்கள்.

பிறந்த நேரம், பிறந்த நாள் மற்றும் ஜாதகத்தைத்தான் முதலில் பரிமாறிக் கொள்கிறார்கள். அவரவருக்குத் தெரிந்த புரோகிதரிடம் ஜாதகத்தைக் காட்டுகிறார்கள். புரோகிதர் தனக்குத் தெரிந்த வரையில் ஜாதகத்தைப் பார்த்து எத்தனைப் பொருத்தம் பொருந்துகிறது என்பதையும், திருமணம் செய்யலாமா கூடாதா என்பதையும், பொருத்தத்தில் சிலவற்றை 'அட்ஜஸ்ட்' செய்துகொள்ள என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறார். புரோகிதர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இது கம்ப்யூட்டர் யுகமாயிற்றே. பிறந்த நேரத்தையும் பிறந்த நாளையும் கொடுத்தால் ஜாதகம் 'ரெடி'.

புரோகிதர் ஜாதகமானாலும், கம்ப்யூட்டர் ஜாதகமானாலும் ஒரு துண்டுச்சீட்டில் பத்து கட்டங்களை வரைந்து நடுவில் ஒர பெரிய கட்டத்தையும் போட்டு சில கட்டங்களில் ராகு, கேது, சந்திரன், சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், சனி என எழுதுகிறார்கள். சில கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்களைக்கூட சேர்ந்தார்போல எழுதுவதுண்டு. நடுவில் உள்ள பெரிய கட்டத்தில் ராசியையும் நட்சத்திரத்தையும் போடுகிறார்கள். சில கட்டங்களை காலியாகவும் விடுகிறார்கள். கேட்டால் ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள். அதற்காகத்தான் சில கட்டங்களைக் காலியாக விட்டு வைத்திருக்கிறார்களோ?

படிக்காத பாமரானாலும் சரி, பி.எச்.டி பட்டம் வாங்கிய முனைவரானாலும் சரி, இந்த துண்டுச் சீட்டுதான் இவர்களின் வாழ்கையைத் தீர்மானிக்கும் 'அத்தாரிட்டி'. இந்தத் துண்டுச் சீட்டைப் படிக்கவோ, படித்துவிட்டு விளக்கம் சொல்லவோ அண்ணா பல்கலைக் கழகத்திலோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலோ பயின்றவனால்கூட முடியாது; விளங்காது. 

வான்வெளியில் அதிநவீன ராக்கெட்டுகள் விட்டபிறகும்கூட கிரகங்களைக் கணிப்பதில் விஞ்ஞானிகளே திண்டாடுகின்றனர். ஆனால் கையளவு கட்டத்தில் நம்ம ஊர் புரோகிதன், 'அஞ்சாங்கிலாஸ்'கூட தாண்டாதவன், கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்!

பார்ப்பனக் குடும்பங்களில் சிறு வயதுமுதலே பள்ளிப்படிப்பு மண்டையில் ஏறாத சில மரமண்டைகளை, "இவனுக்கு சுட்டுப்போட்டாலும் இனி படிப்பு வராது, இவன் படித்தவிட்டு இஞ்ஜீனிராகவோ, டாக்டராகவோ, ஏன் ஒரு குமாஸ்தாவாகவோகூட வரமுடியாது. இவனுக்கு ஏத்தது புரோகிதம்தான்” என முடிவு செய்து அவனை இத்தொழிலுக்குள் இறக்கிவிடுகிறார்கள். நம் வீட்டுப் பிள்ளைகளுக்குப் படிப்பு வரவில்லை என்றால் நாம் என்ன செய்கிறோம்? ஆடு மாடு மேய்க்க அனுப்புகிறோம். அவர்கள் புரோகிதம் பார்க்க அனுப்புகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த 'அதி உயர்ந்த' தொழிலில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு வாய்ப்பு கிடையாது. இங்கும் ஆண் ஆதிக்கம்தான். படிப்பு வராத பார்ப்பனப் பெண்கள் முருக்கு சீடைதான் சுட வேணடும்.

இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள்தான் கிரகங்களின் நடமாட்டத்தைக் கணித்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள். இந்த அதிபுத்திசாலிகளுக்கு சில இடங்களில் ஏக கிராக்கி ஆகிவிடுகிறது. இன்று உலகமே ஒரு கிராமமாகி விட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலிலும் புரோகிதர்களுக்கு ஏக கிராக்கியாம். புரோகிதர் பற்றாக்குறை ஏற்படுகின்ற இடங்களில் பார்ப்பனரல்லாத பிற சாதிகளிலிலும் இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள் 'சைடு பிசினஸாக' இத்தொழிலில் இறங்கி உள்ளனர்.

திருமணத்திற்கான பத்துப் பொருத்தங்கள்:

"நமது முன்னோர்கள் திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்துள்ளனர். நாளடைவில், அவற்றில் முக்கியப் பொருத்தங்களாக 10 மட்டும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதன. அவை:

1.தினப்பொருத்தம் அல்லது நட்சத்திரப் பொருத்தம்
2. கணப்பொருத்தம்.
3. மகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப்பொருத்தம்
6. ராசிப்பொருத்தம்
7. ராசி அதிபதிப் பொருத்தம்
8. வசியப் பொருத்தம்.
9. ரஜ்ஜூப் பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்"

இவை ஒரு பஞ்சாங்கத்தில் படித்தது. கணிப்புகள் புரோகிதருக்கு புரோகிதர் மாறுபடலாம். 

தொடரும்

ஊரான்