Wednesday, December 21, 2011

சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி!

சனிபகவான் இன்று பால் காய்ச்சிவிட்டு புது வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டார்.  மன்னார்குடி சசிப் பெயர்ச்சியும், இன்றைய சனி பெயர்ச்சியும்  அடுத்தடுத்து நடந்தேறியுள்ளதால் தமிழகத்தில் வரும் நாட்களில் ராசிபலன்களில் பெறும் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பலன்களை நேற்று பார்த்தோம். மற்ற பிற ராசிக்காரர்களுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் இன்று பார்ப்போம்.

சிம்மம் 

அரசியல் மேடைகளில் சிங்கமென கர்ஜிக்கும் சீமா ராசிக்காரர்களே! அம்மாவின் அறிவிப்புகளையே ஆணைகளாக பாவித்து இதுவரை கர்ஜித்ததைப் போல இனியும் தொடர்ந்து கர்ஜிக்கலாம். ஆனால் மேஷ ராசிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உங்கள் கர்ஜனையை சற்றே அமுக்கி வாசிக்க வேண்டும். 'ஈழம் - கீழம்' என்று எல்லை மீறினால் கம்பி எண்ண வேண்டி வரும். அப்படி ஒரு நிலை ஏற்படுமேயானால் பரிகாரமாக 'தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன்னடி சரணம்!!' என தினமும் போயஸை நோக்கி உரக்க உச்சாடனம் செய்து வந்தால் சிறைக் கம்பிகள் விலகும்.   

கன்னி

செவ்வாய் தோஷ கன்னிகளும், வரதட்சணைக் கொடுக்க வழியின்றி முப்பதுகளிலும் மூன்று முடிச்சுக்காக ஏங்கும் கன்னிகளும் இனி கவலைப்பட வேண்டியதில்லை.திருமண ஏக்கத்தில் இனியும் கவலைப்படக்கூடாது என்பதால் இனி வரும் காலங்களில் அரசே மாப்பிள்ளைகள் இலவசமாக வழங்கவிருக்கிறது. இதுவரை கன்னிகளாக இருந்த நீங்கள் இனி தம்பதி சமேதராய் உலவலாம்.அப்படியும் ஒருசிலருக்கு மாப்பிள்ளைகள் கிடைக்கவில்லை என்றால் தட்சணையோடு புரோகிதரை நாடினால் பரிகாரம் கிடைக்கும்.

துலாம்

மேலே போவோமா இல்லை கீழு விழுவோமா என குழப்பத்தில் இருக்கும் சில்லரை வணிக துலாம் ராசிக்காரர்களே! சில்லரை வணிகத்தில் லாபமா-நட்டமா என குழம்பிப் போயிருந்த உங்களுக்கு இனி அந்நிய முதலீடு வரவிருப்பதால் 'சேல்ஸ்மேன்' வேலை நிச்சயம். சரக்கு 'குடோனில்' படுத்துறங்கவும் பட்டைச் சோறும் உத்தரவாதம் என்பதால் உங்கள் எதிர்காலம் ஓகோவென்றிருக்கும். பட்டைச் சோறு கிடைக்கவில்லை என்றாலும் இருபது கிலோ அரிசி இலவசமாய் கிடைப்பதால் நீங்கள் வருத்தப்பட வேண்யிருக்காது.

விருச்சிகம்

காவல் பணியாற்றும் விருச்சிக ராசிக்காரர்களே! இனி உங்களுக்கு பொற்காலம்தான். உயர் ரக மதுவிற்பனையும் தொடங்கப்பட்டு வருவதால் குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகமாகும். குடித்தவன் வீதிக்கு வந்துதானே ஆகவேண்டும். அப்படி வரும்போது அவன் கண்டிப்பாக அவனை அறியாமலேயே 'ஓவர் ஸ்பீடில்' வருவான். இந்த வாய்ப்பு உங்களின் வருவாயை அதிகரிக்க உதவும். பிள்ளையின் படிப்பையும் பெண்ணின் திருமணத்தையும் முடிக்க இது போதுமானதாகவே இருக்கும். அப்படியும் போதவில்லை என்றால் பரிகாரமாக நீங்கள் கலால் பிரிவுக்கு மாற்றல் வேண்டி மனு செய்யலாம். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் மேலும் விருத்தியடைவார்கள்

தனுசு

ஆலைகளில் உழலும் தனுசு ராசிக்காரர்களே! உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி உள்ள ஆலை மூடல் - ஆட்குறைப்பு - ஊதிய வெட்டு பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பிள்ளைகளை படிக்க வைக்கவும் பெண்களை கட்டிக் கொடுக்கவும் காசில்லை என்ற வருத்தம் இனி தேவையில்லை. மிதுன ராசிக்காரர்களான உங்கள் பிள்ளைகள் ஆடு மேய்த்தே முன்னேறுவார்கள் என்பதால் உங்களுக்கு படிப்புச் செலவு மிச்சம். கன்னி ராசிக்காரர்களான உங்கள் பெண்பிள்ளைகளுக்கு அரசே இலவசமாக பாப்பிள்ளைகள் கொடுத்துவிடுவதால் இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த வரன் தேடும் அவஸ்தை இனி அறவே இருக்காது.

மகரம்

வேளாண்மையில் ஈடுபடும் தனுசு ராசிக்காரர்களே! முல்லைப் பெரியாரை இடித்தாலும், பாலாற்றை முடக்கினாலும், மேட்டுர் வற்றினாலும் நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதில்லை. ஆற்று நீரை நம்பி இதுவரை வேதனைகளை அனுபவித்து வந்த நீங்கள் இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். தமிழகமே மேய்ச்சல் நிலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஆடு - மாடுகளை வளர்த்து பயன் பெறுவீர்கள். கறிக்காக மாடுகள் கேரளா செல்வதும் தடுக்கப்படும் என்பதால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு பால் உற்பத்தி அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்கள் கெட்டித் தயிரையும் வெண்ணையையும் எடுத்துக் கொண்டாலும் உங்களுக்கு மோர் நிச்சயம். மோர் அதிகமாக புளித்துப் போனால் பரிகாரமாக தேத்தாங் கொட்டையையை அதில் போட்டுவைத்தால் தெளிந்த மோர் கிடைக்க வழி ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி தாய்மார்களே! தமிழகத்தில் தற்போது உயிரோடு இருக்கும் யாரும் மரணத்தைத் தழுவதற்கும், புதிதாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால்  நீங்கள் பத்துமாதம் சுமந்து குழந்தை பெறும் வேதனையிலிருந்து இனி விடுபடுவீர்கள். 

மீனம்

மீன ராசிக்காரர்களே! மீன்களைத் தேடி கடலுக்குச் செல்லும் நீங்கள் இதுவரை சிங்களக் காடைகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி அடிபட்டு துவண்டு போனீர்கள். ஆனால் இனி இத்தகைய தாக்குதல்களுக்கு நீங்கள் ஆட்பட வேண்டி வராது. சிங்கி உள்ளிட்ட உயர்ரக மீன்கள் உட்பட அனைத்து மீன்களும் இனி கரையை நோக்கி வருவதற்கு வழி ஏற்படும். கரையில் அமர்ந்து கொண்டு தூண்டில் போட்டே இனி மீன்பிடித்துக் கொள்ளலாம். 

மீன்களின் துர்நாற்றம் அக்கிரகாரத்தின் மூக்குகளை துளைப்பதால் மீன்களை தமிழகத்தின் உள்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. இதனால் மொத்த மீன்களையும் நீங்களே சாப்பிடுவதற்கான வழி ஏற்பட்டுள்ளதால் உங்கள் தேக பலம் அதிகரிக்கும். கடற்கரைக்கே வந்து சிங்களவன் அடித்தாலும் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் தேக பலத்தால் வேகமாக ஓடிவந்து தமிழகத்தின் உள்பகுதிக்குள் தஞ்சம் புகலாம்.

இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்.

3 comments:

  1. ஊரான் அவர்கள் கணித்த ராசி பலன்கள் அருமையிலும் அருமை.இந்தக்கணிப்பு படிதான் நடக்கும். நடந்து கொண்டும் இருக்கும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கணித்த ராசி பலன்கள் அருமை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்

    ReplyDelete