சங்ககால நகர நாகரிகத்தின் அடையாளமாகத் திகழும் கீழடி, இப்போது உலகத் தொல்லியல்
வரலாற்றில் மற்றுமொரு புதிய மைல்கல்லைத் தொடவிருக்கிறது. பண்டைய காலத்திலேயே நீரை
மறுசுழற்சி செய்வதற்காகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு
அமைப்பைக் (Water Recycling System) கொண்ட உலகின் முதல் தொல்லியல் களமாகக் கீழடி உருவெடுக்கும்
வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள தொல்லியல்
எச்சங்கள் குறித்த தற்போதைய ஆய்வு முடிவுகள், மேலதிக அறிவியல் பரிசோதனைகள்
மூலம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், இந்த வரலாற்றுச் சாதனை
நிரூபணமாகும்.
சாயப்பட்டறையும்
நீர் சுத்திகரிப்பு அமைப்பும்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தொல்லியல் அலுவலரும், கீழடி அகழாய்வுடன் தொடர்புடைய
முக்கிய ஆய்வாளருமான மு. ரமேஷ் இது குறித்துத் தெரிவிக்கையில், "அகழாய்வில் கிடைத்துள்ள
எச்சங்கள், ஒரு சாயப்பட்டறையுடன் (Dyeing Unit) இணைக்கப்பட்ட நீர் வடிகட்டும்
அமைப்பு (Water Filtration Arrangement) இருந்ததற்கான
சாத்தியக்கூறுகளைக் காட்டுகின்றன. இருப்பினும், இந்தக் கருதுகோளுக்குத்
தொழில்நுட்ப ரீதியான மற்றும் அறிவியல் பூர்வமான மேலதிக உறுதிப்படுத்தல்கள்
தேவைப்படுகின்றன" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "மேற்கொள்ளப்பட்டு வரும்
அறிவியல் ஆய்வுகள் மூலம் எங்களது இந்தக் கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், நீர்
மறுபயன்பாட்டிற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பண்டைய நீர் சுத்திகரிப்பு
அமைப்பிற்கான சான்றுகளை வழங்கும் உலகின் முதல் அகழாய்வுத் தளமாகக் கீழடி திகழும்.
இதன் தன்மையையும் செயல்பாட்டையும் துல்லியமாக நிறுவ, சேகரிக்கப்பட்ட மாதிரிகள்
பல்வேறு ஆய்வகங்களில் விரிவான பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
சங்ககாலச் செங்கல், கற்கட்டுமானங்கள் மற்றும் நீர்
மேலாண்மை குறித்து நடைபெற்ற விளக்க உரையின்போது இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்ட
ரமேஷ், கீழடியின்
பண்டைய மக்கள் வைகை ஆற்றிலிருந்து நீரைப் பெற்று, திறந்தவெளி மற்றும் மூடப்பட்ட
கால்வாய்களின் (Open and Closed Channels) வலையமைப்பு வழியாகச் சாயப்பட்டறைக்குக் கொண்டு
சென்றிருக்கலாம் என்று தெரிவித்தார்.
"சாயமிடும் பணியின்போது வெளியேறும் கழிவுநீர், மணல்
மற்றும் கூழாங்கற்களைக் (Sand and Pebbles) கொண்ட ஒரு வடிகட்டும் அமைப்பின் வழியாகச் செலுத்தப்பட்டு,
அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இது
உறுதி செய்யப்பட்டால், ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி மக்கள் நீர்
சேமிப்பை எவ்வாறு புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும், தொழிற்சாலைக் கழிவுநீரை
மேலாண்மை செய்ய எத்தகைய அமைப்புகளை உருவாக்கியிருந்தார்கள் என்பதையும் அறிய இது
மிக முக்கியத் தடயமாக அமையும்" என்று அவர் விளக்கினார்.
அவுரிச் சாயமும் (Indigo Dye) ஐரோப்பிய ஏற்றுமதியும்
கீழடியில் சாயமிடும் தொழில் நடைபெற்றதற்கான சாத்தியத்தை
உறுதிப்படுத்தும் விதமாக, மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பள்ளியின் மரபியல் துறை (Department
of Genetics) ஆராய்ச்சியாளர்கள்
முக்கிய ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர். 'கேஸ் குரோமடோகிராபி மாஸ்
ஸ்பெக்ட்ரோமெட்ரி' (GC-MS) எனப்படும் நவீன வேதியியல் பகுப்பாய்வின் மூலம், 20 வகையான அவுரிச் சாய (Indigo
dye) மூலக்கூறுகளை
அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அகழாய்வில் கிடைத்த ஏழு
மண்பாண்ட ஓடுகள், கால்வாய்
செங்கற்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மண் மாதிரிகளில் இந்த வேதித் தடயங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.
உலகின் மிகப் பழமையான நீல நிறச் சாயங்களில் ஒன்றான அவுரிச்
சாயம், பாரம்பரியமாக இண்டிகோஃபெரா டிங்க்டோரியா (Indigofera
tinctoria) போன்ற
தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 4,000 ஆண்டுகளுக்கும் மேலாகப்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொல்லியல் தளங்களில் பழங்காலத்
துணிகள் அழிந்துபோகாமல் எஞ்சியிருப்பது மிகவும் அரிது என்பதால், நுண்ணிய சாய எச்சங்களை அறிவியல்
ரீதியாகக் கண்டறிவதே வரலாற்றுக் காலச் சாயமிடும் தொழிலை நிரூபிக்கும் முக்கிய
வழியாக உள்ளது.
கால்வாய் கட்டுமானங்களுடன் தொடர்புடைய மாதிரிகளில் அவுரிச்
சாய மூலக்கூறுகள் கண்டறியப்பட்டிருப்பது, கீழடியில் சாயப்பட்டறை
இயங்கியதற்கான வலுவான சான்றாக அமைகிறது. இருப்பினும், சாயப்பட்டறை, நீர் கால்வாய்கள் மற்றும் இந்த
வடிகட்டும் அமைப்பு ஆகிய மூன்றிற்கும் இடையிலான நேரடித் தொடர்பை நிறுவ மேலும் பல
ஆய்வுகள் அவசியமாகின்றன.
அக்காலத்தில் அவுரி நீல நிறம் மிகுந்த விலைமதிப்புடையதாக
இருந்ததால், இவ்வாறு
சாயமிடப்பட்ட துணிகள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். "துணி வணிகம் மற்றும்
சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாடு குறித்துத் தொடர்ந்து விரிவான ஆய்வுகள்
மேற்கொள்ளப்படும்" என்று தொல்லியல் அலுவலர் ரமேஷ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அசுத்த நீர்
எப்படிச் சுத்தமாகிறது? — இயற்கையும் நவீன அறிவியலும் காட்டும் சாட்சி!
சாயப்பட்டறையிலிருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவுநீரை, மணல் மற்றும் கூழாங்கற்களைக்
கொண்டு எவ்வாறு மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கான விடை நம் கண்முன்னே
ஓடும் இயற்கையிலும், இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஒளிந்திருக்கிறது.
- பாலாறு காட்டும் இயற்கை வித்தை: நமது பாலாற்றை மேலோட்டமாகப் பார்த்தால், காய்ந்து கிடக்கும் மணல் பரப்பும், ஆங்காங்கே முளைத்திருக்கும் செடிகொடிகளுமே கண்ணுக்குத் தெரியும். ஊர்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் சாக்கடை நீரும் ஆற்றில் கலந்தாலும், சற்றுத் தொலைவில் ஆற்று மணலுக்கு அடியில் ஊற்றுத் தோண்டிப் பார்த்தால், பளிங்கு போன்ற தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். கழிவுநீரில் உள்ள அசுத்தங்களைத் தன்னுள் தேக்கிக்கொண்டு, நீரை மட்டும் தெளிய வைக்கும் ஒரு பிரம்மாண்ட இயற்கை வடிகட்டியாக (Natural Filter) ஆற்று மணல் செயல்படுவதே இதற்குக் காரணம்.
- நவீன கடல்நீர் சுத்திகரிப்பு (Desalination) தொழில்நுட்பம்: இதே இயற்கை அடிப்படைதான் இன்றைய நவீன கடல்நீரைக் குடிநீராக்கும் (Desalination) திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கடல்நீரை நேரடியாகச் சுத்திகரிக்க முடியாது. முதலில் கடல்நீர் பெரிய கூழாங்கற்கள், அதன்பிறகு சிறு கற்கள், அதற்கடுத்து மணல், அதன்பின் நிலக்கரித் துகள்கள் (Activated Carbon) ஆகிய அடுக்குகளின் (Dual Media Filters) வழியாகச் செலுத்தப்பட்டு, கண்ணுக்குத் தெரியும் மற்றும் நுண்ணிய கழிவுகள் வடிகட்டப்படுகின்றன. அதன் பிறகே 'மெம்பிரேன்' (Membrane) எனப்படும் நுண்ணிய சவ்வு வடிகட்டிகள் மூலம் உப்பு நீக்கப்பட்டு, கடல்நீர் குடிநீராக மாற்றப்படுகிறது.
நிறைவாக
தொழிற்சாலைக் கழிவுகளால் இன்று நமது ஆறுகளும் நிலத்தடி
நீரும் நஞ்சாகிக்கொண்டிருக்கும் சூழலில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே "கழிவுநீரைச்
சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது" என்ற சூழலியல் அறத்தோடு வாழ்ந்த
கீழடி மக்களின் தொழில்நுட்ப அறிவு, தொடர் ஆய்வுகளின் மூலம்
உலகிற்கு முழுமையாக வெளிக்கொணரப்பட சம் போட்டுக் காட்டப்பட
வேண்டும்.
ஒரு பக்கம் கீழடி அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்கப்
பார்க்கிறது மோடியின் ஒன்றிய அரசு. மறுபுறம் தொல்லியல் துறைக்கு
ஒரு கோடி ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கித் தொல்லியல் ஆய்வுகளை அலட்சியப்படுத்துகிறது
ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த செல்லப்பிள்ளையின் அரசு. இந்தச் சூழலில், இனி மக்களாகிய நாம் என்ன
செய்யப் போகிறோம் என்று கீழடி நம்மைப் பார்த்துக் கேட்கிறது.
தமிழ்மணி
செய்தி ஆதாரம்: DT Next (நவம்பர் 21, 2026)
மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை.

