Showing posts with label fitter. Show all posts
Showing posts with label fitter. Show all posts

Saturday, 10 May 2025

கண்களைக் கசிய வைக்கும் "நீவாநதி"!

“அன்பளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்!’ என்று அன்பான வேண்டுகோள் விடுத்தும், எமது இல்ல மணவிழாவில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தோழர்கள் பரிசளித்திருந்தனர். திருப்பி செலுத்தப்பட வேண்டிய “மொய்” கணக்கில் நூல்கள் சேராது என்பதனால் இந்த அன்பளிப்புகளால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை; மாறாக மகிழ்ச்சிதான்.

திருமணம் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை என்றால் நூல்களும்கூட பலருக்கு வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த வல்லவைதானே?


இருபத்தோறு பகுதிகளைக் கொண்ட “பெரியாரின் போர்க்களங்கள்” என்ற நூலின் ஏழு பகுதிகளை வாசித்து முடித்த போது, எதற்காக ஒருவர் ஒரு நூலை எழுத வேண்டும், எதற்காக மற்றொருவர் அதை வாசிக்க வேண்டும், பெரியாரின் போர்க்களங்களைத் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் போன்ற கேள்விகள் என்னுள்ளே எழத் தொடங்கிய போது, 11.05.2025 அன்று கவிப்பித்தன் அவர்களின் “நீவாநதி” உள்ளிட்ட அவரது படைப்புகள் மீதான உரையாடல் நிகழ்வு ஒன்று வேலூரில்
நடப்பதாக முகநூல் செய்தி ஒன்றைப் பார்த்தேன். 
***
ஏற்கனவே, அவரது "பிணங்களின் கதை" சிறு கதைகள் குறித்த ஒரு பகுப்பாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருந்தேன். அதைப் படித்த ‘பெல்’ நண்பர் சங்கரநாராயணன் அவர்கள், நீவாநதி நாவல் பற்றி குறிப்பிட்டதோடு, தன்னிடம் உள்ள அந்த நாவலை எனக்குத் தருவதாகக் கூறி இருந்தார். மணவிழா அன்பளிப்புத் தொகுப்பில் அந்த நாவல் அவர் மூலம் எனக்குக் கிடைக்கப் பெற்றதால், “பெரியாரின் போர்க்களங்கள்” வாசிப்பதை நிறுத்திவிட்டு நீவாநதியை ஒரு வாரத்திற்கு முன்பு வாசிக்கத் தொடங்கினேன். 11.05.2025 க்குள் நாவல் குறித்த எனது கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, மற்ற சில வேலைகளின் ஊடே இந்த நாவலை இன்று முழுமையாகப் படித்து முடித்தேன்.

நாவலின் சாரம்

ஆந்திராவில் பெருமழை பெய்யும் காலங்களில், பொன்னை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை வாய்க்கால் வழியாகத் திருப்பி ஏரிகளை நிரப்பினால், நஞ்சை நிலங்களில் இரண்டு போகம் நெல் விளையும்; புஞ்சை நிலங்களில் வேர்க்கடலை, மொச்சை, காராமணி, துவரை என மானாவாரி பயிர்களுக்குப் பிறகு, கிணற்று நீரில்  கம்பு, சோளம், கேழ்வரகு என தானியங்கள் விளைந்து குவியும்.

களி, கூழ், சோறு என மீன் குழம்பும், கருவாட்டுக் குழம்பும் கமகமக்க வசூர் மக்களின் வயித்துப் பாட்டுக்குக் குறைவில்லை. 

கங்கையம்மன் திருவிழா, வள்ளிமலைத் தேர், பொங்கல், கார்த்திகை தீபம், தெருக்கூத்து என விழாக்களுக்கும்,  பண்டிகைகளுக்கும், கறி சோற்றுக்கும் பஞ்சமில்லை.

கடன ஒடன படாம, நகை நட்டு போட்டு விழி பிதுங்காம பெண்டு பிள்ளைகளைக் கரை சேர்க்க முடிந்தது.  ஆனால் படிப்பு மட்டும் பலருக்கும் எட்டிக்காயாய் கசந்து நின்றது. 

ஊர் நாட்டாமை சின்னசாமி ரெட்டியார் (வன்னிர்களுக்கான பட்டப் பெயர்) தனது மகனைப் படிக்க வைக்கப் படாத பாடுபட்டும், படிப்பு மட்டும் அவனுக்கு ஏறவில்லை.

ஆண்டுகள் உருண்டோடின. தவறாமல் பெய்யும், பருவ மழையும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி, ஆற்றில் நீர்வரத்தும் அருகிப் போனதால், கால்ஏரி அரைஏரி நிரம்புவதே பெரும்பாடாய் மாறிப்போனது. ஒரு போக சாகுபடியே கேள்விக்குள்ளானது.  
நிலத்தடி நீர் சுண்டிக் போனதால் புஞ்சை நிலங்களும் பொட்டல் காடாய் மாறிப் போயின.

1980 வாக்கில் ‘பெல்’ (BHEL) நிறுவனத்திற்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் லாலாப்பேட்டை
சுற்றுவட்டாரக் கிராமங்களில் வேளாண் நிலங்களை 
அடிமாட்டு விலைக்கு அரசாங்கம் பிடுங்கிக் கொண்ட அச்சம் வசூர் மக்களைத் தொற்றிக் கொள்ள,  பிறகு இவர்கள் ஊரிலும் புஞ்சை நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள மானாவாரியும் கனவாய்ப் போனது.

இனியும் விவசாயத்தை நம்பினால் கால் வயித்துக் கஞ்சிக்கே திண்டாட்டம் என்பதால் சிலர் ஆடு மேய்க்கவும், சிலர் பெங்களூரு, இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் எடுபிடி வேலைகளில் தங்களை பிணைத்துக் கொண்டனர்.

ஊர் நாட்டாமை சின்னசாமி தனது ஒரே மகனை பெங்களூருவுக்குப் பிழைக்க அனுப்ப, அது சரிபட்டு வராததால் உள்ளூரிலேயே ஆடு மேய்க்கச் சொல்ல, அப்போது வண்ணாரப் பெண்ணோடு அவன் காதல் வயப்பட, 'ஒரு வண்ணாரப் பொண்ணு வன்னியன் வீட்டுக்கு மருமகளா வருவதா?' என ஆத்திரங் கொண்டு, அதை உடைக்க ஆடுகளை விற்று அவனை ‘பெல் ஆன்சிலரி’க்கு வேலைக்கு அனுப்ப, அங்கே அவன் ஒரு விபத்தில் சிக்கி மாண்டு போகிறான். 

ஒரே மகனையும் பறிகொடுத்து விட்டு, ஒரு கட்டத்தில் வயித்துப் பாட்டுக்கே வழியற்றுப் போன நாட்டாமை, அவமானங்களையும் சுமந்து கொண்டு
ஒரு தோல் கம்பெனியில் எடுபிடி வேலை செய்ய, 

இராணிப்பேட்டையில் செயல்படும் இரசாயனத் தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுற்றுவட்டார ஏரிகள் தத்தளிக்க, நிலத்தடி நீரும் நஞ்சாகியதைக் கண்டு நொந்து போகிறார்.

மேலும் சில ஆண்டுகள் உருண்டோடின. நிலத்தை இழந்தவர்கள் நிவாரணத்திற்காக வழக்கு, வாய்தா என நீதிமன்றப் படிகளில் ஏறி ஏறி இறங்கிய போதும் நிவாரணத் தொகையும் வந்தபாடில்லை.

அவ்வப்பொழுது பெய்யும் மழையால் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிறைந்தாலும் பொன்னை ஆறு மட்டும் வறண்டே கிடந்தது. 

ஆந்திர மாநிலம் கலவகுண்டாவில் ஆற்றை மறித்து கட்டிய அணை மொத்த நீரையும் இழுத்துக் கொண்டதால், இனி ஆற்றில் எஞ்சி இருப்பது கானல் நீரே என்பதைக் கண்ட பிறகு, முன்பு ஆற்று நீரைத் திருப்ப மணல் அள்ளும் ‘மணல் செரா’ இனி எதற்கு என அதை விற்று வாங்கிய வெங்காயத்தைக் கூழுக்குக் கடித்த போது, காரத்தால் நாட்டாமையின் கண்கள் கலங்கியதைப் போல, நீவாநதியும் நம் கண்களைக் கசிய வைக்கிறது.

நாவலோடு எல்லோராலும் ஒன்ற முடியுமா?

கல்வியை பெரிதாகக் கருதாமல் வேளாண்மையை மட்டுமே நம்பி வாழும் வடார்க்காடு மாவட்ட கிராமப்புற மக்களின் வட்டார மொழியில் நாவல் எழுதப்பட்டுள்ளதால், 
இந்த மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த,

அக்கடா, மணல் செரா, ரொப்பி, இஸ்துகினு, குள்ளாக் கண்டை, குரவை, உலுவை, மீங்கிரிங்க, கீறத, கொய்ந்திங்க, வைக்கப் போர், புட்டுக்கூடை, தளுவு பொங்கல், கொண்டுகான், கலக்கா, பொய்து, காவலிக் கிழங்கு, பாலைப் பூண்டு, மடவல்ச்சி, கீச்சாங் குருவி, தாக்குப் பள்ளம், பீவேலி, கெய்வாம, காரை முட்செடி, கவலை, மரக்கால், தோணி, சால், இருசு, வடம், கண்ணி, ஒட்டந்தட்டு, கருகம்புல், சாணிப்புல், துரத்தி, கதண்டு, ஆரா, ஓராவதி, அட்டங்கால், தூரி வலை, சிங்க வலை, மானாவாரி, புணை, மொசுலு, மஞ்சுப் புல், சீக்கம் முட்செடி, பீகுருவி, மொய்லியாருங்க, கடேரி, பாட்டை, பாரி, ஏர் ஓட்ட, பரம்படிக்க, அண்டை வெட்ட, சால், பனை புடுக்கு, மொகுமாவு, கோணயா, ஒயவு, கவுண்கோலு, நுணா, கோங்கீர, புழுதிக்கால், கொர்ராடு, சாவியாகத்தான், தும்பைச் செடி, பேபர்சி, காஞ்சிகினு கீது, ஈச்ச ஓலை, சரடு, ருப்பினர், அண்டை வெட்டுதல், பாத்தி, கசிறு, தொண்டாம் புற்கள், அம்பாரம், பனஞ்செடி, மாவளி போன்ற சொற்களின் புரிதலோடு 1980 களின் கிராமப்புற வாழ்வியலைக் கண்டவர்கள் நாவலோடு ஒட்ட முடியும். 
"""
எனது இளமைக்கால வாழ்க்கையை அச்சு அசலாக அப்படியே இந்நாவலின் கிராமப்புற வாழ்வு பிரதிபலிப்பதாலும்,  பிற்காலத்தில் பெல் ஆலையில் பணியாற்றியதாலும் மற்றும் அதன் துணை நிறுவனங்களோடு தொடர்பு கொண்டதாலும், பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த பல்வேறு தொழிலாளர்களோடு பழகியதாலும், மாசடைந்த நகரங்களில் உலகில் பத்து இடங்களுக்குள் இராணிப்பேட்டை இருப்பதை  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் உதவியுடன் பல்வேறு தரவுகள் மூலம் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதாலும் இந்த நாவலோடு என்னால் ஒன்றிச் செல்ல முடிகிறது.
***
பொதுவாக ஒரு நாவல் என்றால் உண்மையும், கற்பனைப் புனைவும் இரண்டறக் கலந்திருக்கும். புனைவுகளே எடுப்பாகத் தெரியும். ஆனால் நீவாநதி நிஜத்தை மட்டுமே பேசுகிறது. 

நிஜத்தைப் பேச வேண்டுமானால் நிஜத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும். நாவலாசிரியர் கவிப்பித்தன் அச்சு அசலாக நிஜத்தோடு வாழ்ந்திருக்கிறார். நாவலின் ஒவ்வொரு வரியிலும் அதைக் காண முடிகிறது. 

கதைக்களம் பயணிக்கும் காலகட்டத்தில் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டுத் தலங்களில் ஏற்படும் நகர்வுகள் எப்படி மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும், பழைய பண்பாட்டுக் கூறுகளில் சாதி-ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை உள்ளிட்ட சில தவறானப் போக்குகளை நாசுக்காகச் சுட்டிக்காட்டும் பொழுது அது வாசகர்களுடைய சிந்தனையை மேம்படுத்த உதவும்.

நாட்டாமை சின்னசாமியின் மகன் மாண்டு போவதைவிட, வண்ணார-வன்னியர் காதலை வெற்றி பெற வைத்திருந்தால் நீவாநதி இன்னும் நெஞ்சுக்குள் ஆழமாய் பாய்ந்திருக்கும்.

மக்களின் வாழ்வியலை இந்நாவல் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இதை மீண்டும் அதே மக்களிடம் சொல்லும் போதுதான் நாவலின் வெற்றி அடங்கி இருக்கிறது. கூத்து வடிவில் புராணக் கதைகள் கிராமங்களில் சொல்லப்படுவது போல, நீவாநதி போன்ற நாவல்கள் கதைகளாக எளிய மக்களிடம் நேரடியாக சொல்லப்பட வேண்டும். வேலூரில் நடத்த வேண்டிய கலந்துரையாடலை வசூரில் நடத்த வேண்டும். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Saturday, 8 June 2024

தள்ளாத வயதில் அல்லாடும் பெற்றோர்கள்! : தொடர்-1

கிராமங்களில்….

1970 களின் தொடக்க காலத்தில், கிராமங்களில் படித்தவர்கள் மிகச் சொற்பமே. அந்தச் சொற்பமான ஒரு சிலரில், சிலர் தினத்தந்தியை எழுத்துக்கூட்டிப் படிக்கும் அளவுக்கு கல்வி அறிவு பெற்றவர்கள். அவர்களே நாட்டு நடப்புகளையும், அரசியல் நிலைமைகளையும் அசைபோட்டு மக்களிடம் கடத்துபவர்கள்.
 
படித்த மிகச் சொற்பமானோரில், எட்டாவதில் தேறவில்லை என்றாலும், எடுப்பான உடல் அமைப்பால் இராணுவ வீரர்களானவர்கள் சிலர். எஞ்சிய சிலரோ எஸ்.எஸ்.எல் சியை (11 ஆண்டுகள் கொண்ட பழைய SSLC)  எட்டிப் பிடித்து, அதில் தேறாதவர்கள் அரசு அலுவலகங்களில் கீழ்மட்ட ஊழியர்களானார்கள். மற்ற சிலரோ கல்லூரிகளில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்று அரசு பதவிகளில் அமர்ந்தவர்கள்.
 
1970 களின் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சியை முடித்த பிறகு, சிலர் டிப்ளமோ (Diplamo) படிக்க பாலிடெக்னிக்குளை நாடினார்கள். எஸ்.எஸ்.எல் சியில் தேறாத மற்றும் தேறிய சிலர் .டி. யை நாடினார்கள்

மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில் என டிப்ளமோ முடித்தவர்கள் சூப்பர்வைசர்களாகவும். மெஷினிஸ்ட், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் என .டி.(ITI) முடித்தவர்கள் தொழிலாளர்களாகவும் அரசு மற்றும் தனியார் ஆலைகளில் வேலைகளில் அமர்ந்தனர்.

டிப்ளமோ படிப்பில்கூட முதலாம் ஆண்டு படிப்பான பி.டி.சி (PTC - Pre Technical Course)யில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மெக்கானிக்கல், அதற்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எலக்ட்ரிகல், அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிவில் பாடப் பிரிவுகளும் ஒதுக்கப்பட்டன. அதிக வேலை வாய்ப்புகளுக்கான உத்திரவாதம் இருந்ததால் மெக்கானிக்கல் படிப்பு மற்றவைகளை விட உயர்வானதாகக் கருதப்பட்டது. 

அதேபோல எஸ்.எஸ்.எல்.சி யில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மெஷினிஸ்ட் படிப்பும், அதற்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஃபிட்டர் படிப்பும், அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு எலக்ட்ரீசியன் படிப்புகளும் ஒதுக்கப்பட்டன. அதிக வேலை வாய்ப்புக்கான உத்திரவாதம் இருந்ததால் மெஷினிஸ்ட் படிப்பு மற்றவைகளை விட உயர்வானதாகக் கருதப்பட்டது.
டிப்ளமோ மற்றும் ஐடிஐ களில், தாங்கள் விரும்பியப். பாடப் பிரிவுகளை தேர்வு செய்தவர்களும் உண்டு.


டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிக்க
நகரங்களைத்தான் நாடவேண்டும் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விடுதிக்கும் (Hostel) கூடுதலாக செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பத்துக்கான உணவுக்கும், உடைக்கும், வசிப்பிடத்திற்கும் போக ஏதோ ஒரு வகையில் உபரி உள்ளவர்கள் அல்லது சமாளிக்க முடியும் என்ற வசதி உள்ளவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் படிப்புக்காக நகரங்களில் கால் பதிக்க முடியும்.

ஓரளவுக்கு சொந்தமாக நிலம் வைத்திருப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோரால்தான் இதைச் செய்ய முடிந்ததுபின்தங்கிய மாணவர்களுக்கான சாதி ரீதியிலான இட ஒதுக்கீடும், ஸ்காலர்ஷிப்பும் இருந்ததால் இவர்களால் படிப்பில் கரைசேர முடிந்தது‌.

அன்று பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமாகவோ அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களாகவோ இருந்ததால் கல்விக் கட்டணங்களும் கட்டுக்குள் இருந்தன.
 
இடையிடையே படிப்பை விட்டவர்கள் தட்டச்சும், ஷார்ட் ஹாண்டும் பயின்று அலுவலகங்களில் டைப்பிஸ்டாக, ஸ்டெனோவாக மாறினார்கள்.
 
கிராமங்களில் இத்தகையோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான குடும்பங்களில் இவர்களே கிராமங்களின் முதல் தலைமுறை படிப்பாளிகள்.
 
நகரங்களில்
 
ஆனால், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம் போன்ற நகரங்களில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. ஏற்கனவே அரசு அலுவலகங்களிலும், ஆலைகளிலும் பணியாற்றவர்களின் பிள்ளைகள், வியாபாரிகளின் பிள்ளைகள் என பலரும் கல்விப் பின்புலம் கொண்டவர்கள் என்பதாலும், பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியும் என்பதாலும், வீட்டிலிருந்தே அன்றாடம் படிக்கச் சென்று வரக்கூடிய வாய்ப்பு இருந்ததால் விடுதிச் செலவுகள் கூடுதலாக இல்லை என்பதாலும் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக படிப்பு ஒரு சுமையாக இருக்கவில்லை.

இவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறை படிப்பாளிகள். இத்தகைய வாய்ப்புகளைப் பெற்றவர்கள் பெரும்பாலும் உயர்சாதி வீட்டுப் பிள்ளைகளாகவே இருந்தனர்!
 
இதுதான் அன்றைய காலகட்ட படிப்பும் வேலை வாய்ப்பும்.
 
தொடரும்
 
ஊரான்