Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Wednesday, 5 November 2025

பஞ்சணைப் பிரச்சாரம் (Arm Chair Criticism)!

"சுயமரியாதை இயக்கம் சட்டசபைகளைக் கைப்பற்றாமல், அதாவது பஞ்சணையில் படுத்துக் கொண்டு மதங்களையும், பழக்கவழக்கங்களையும், மதஸ்தாபனங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தால் போதுமா?" (Arm Chair Criticism)

என்று கேள்வி எழுப்பி,

"உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?"

என்று வினவி,

"இந்துமதச் சபையார் சட்டசபையில் புகுந்து கொண்டு, சுயமரியாதைப் பிரச்சாரங்களைத் தடுக்க ஆரம்பித்தால் அவர்களை யார் தடுப்பது? நாஸ்திகக் கூட்டத்தைச் சட்டசபை மூலமாகத் தடை செய்தால் சபையில் யார் அதனை எதிர்த்துப் போர் புரிவது?”

என்று கேட்டதோடு,

“சமதர்மம் ஆகாய மூலமாவா_ வருமாமென்று கேட்கின்றோம்?”

“புரட்சிக்காரர்கள் சட்டசபைகளில் போகக் கூடாதென்ற மனப்பான்மையைக் குழந்தைகள் வியாதி என்றார் தோழர் லெனின்” 

என சுயமரியாதை இயக்கம் மேற்கொள்ளவேண்டிய பாதை குறித்து ‘ஈரோட்டுத் திட்டம் “புரட்சி”!’ (16) என்ற தலைப்பில் “புரட்சி” இதழில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் அன்று சமதர்மக் கொள்கையையும் பேசியது.


புரட்சி
பக்கம் 5-17
24.12.1933

சான்று: சிங்காரவேலர் கட்டுரைகள், NCBH வெளியீடு,
***
ஆங்கிலேயரின் அடிமை இந்தியாவில், சனாதனிகள் மட்டுமே படித்துவிட்டு, சென்னை மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது, மேற்கண்ட வழிகாட்டுதல் எந்த அளவுக்கு சாலப் பொருந்துமோ, அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்துவரும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது "புரட்சி" இதழின் வழிகாட்டுதல் அப்படியே இன்றும் நூறு சதவீதம் பொருந்துவதாகத்தான் நான் கருதுகிறேன்?

அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு சனாதனிகள் மேற்கொள்ளும் இன்றைய தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை  (SIR) ஒன்று போதாதா?

இதையெல்லாம் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு கூக்குரலிடுவதைப் பார்க்கும் போது, “பஞ்சணையில் படுத்துக்கொண்டு” என்று அன்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அதிமுக போன்ற அடிமைகளும், விஜய் போன்ற தற்குறிகளும் அதிகாரத்தில் இருப்பதாலோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை எதிர்ப்பவர்கள், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பலமற்றிருப்பது அல்லது ஒருசிலர் பிழைப்புவாதிகளாக இருப்பது என்ற இன்றைய சூழலில், அரசியலில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் பலமற்று இருப்பது அல்லது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்பதைப் பார்க்கும் போது,

“உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?" என்று,

அன்று சுயமரியாதைக்காரர்களை நோக்கி கேட்டதைத்தான், மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட்களை நோக்கி இன்று கேட்கத் தோன்றுகிறது.

காலத்திற்கேற்ப செயல் திட்டம் வகுத்துச் செயல்படுபவர்களே தங்களைக் காத்துக் கொள்வதோடு, சனாதனிகளிடமிருந்து மக்களையும் காக்க முடியும்!

தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பது, ஒருசில மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகளுக்கு நெருடலாகத் தோன்றலாம். அத்தகையோர், ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காகத் தேர்தல் களம் காணும் கட்சிகளை, கூட்டணிகளை (தற்போதைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி) நேரடியாக ஆதரிப்பதோடு, குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலுக்கு எதிரான
பஞ்சணைப் பிரச்சாரத்தையாவது (Arm Chair Criticism) 
மேற்கொள்ள வேண்டும்! தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத இன்றைய சுயமரியாதைக்காரர்களுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இது பொருந்தும்.

ஊரான்

Thursday, 18 April 2024

65 வயதில் நான் ஏன் முதன்முறையாக வாக்களித்தேன்?

பதின்ம வயதில் இயல்பாகவே நான் கடவுள் மறுப்பாளனாக வளர்ந்தவன். சென்னையில் தொழில் நுட்ப பட்டயப் படிப்பை முடித்து, திருச்சி பெல் நிறுவனத்தில் 20 வயதில் பணிக்கு சேர்ந்த தொடக்க காலத்தில், பொதுவுடமை கோட்பாடு என்னை ஈர்த்தது‌. அது முதல் மார்க்சிய லெனினிய பொதுவுடமை இயக்கத்தோடு என்னை இணைத்துக் கொண்டேன். 

இந்திய ஜனநாயகம் போலியானது, இரட்டைத் தன்மையுடையது. ஒரு பக்கம் நிரந்தரமான அதிகாரிகள் மறுபக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இதில் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறது. மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டம் இயறறும் அதிகாரம் மட்டுமே உண்டு, மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் கிடையாது, என்பதோடு மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் அவர்களைத் திருப்பி அழைக்கின்ற உரிமையும் தேர்ந்தெடுத்த மக்களுக்குக் கிடையாது.


எனவே, இது போலி ஜனநாயகம், இந்த ஜனநாயகத்தில் பங்கேற்பதன் மூலம் சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது, மாறாக மக்கள் புரட்சியின் மூலம், தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சட்டம் இயற்றவும் அதை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் உள்ள ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டும் என மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தொடர்ந்து தேர்தலை புறக்கணித்து வந்தன. அதனால் நானும் நேற்று வரை தேர்தல்களில் வாக்களித்ததில்லை.

தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில்தான் நான் வாக்களிக்கவில்லையே ஒழிய, திருச்சி பெல் ஆலையில் பணியாற்றிய போது 1990 இல் நடைபெற்ற உணவக நிர்வாகக் குழு தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். இதன் மூலம் நாலரை கோடி ரூபாய் திருச்சி பெல் உணவக ஊழலையும் எம்மால் வெளிக் கொணர முடிந்தது. தவிர, பெல் ஆலையில் நடைபெற்ற சேமநல நிதிக் குழு, மற்றும் உணவக நிர்வாகக் குழு உள்ளிட்ட தேர்தல்களிலும், தொழிற்சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களிலும் வாக்களித்திருக்கிறேன்.

இராணிப்பேட்டை பெல் ஆலையில் பணியாற்றிய போது 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நுண் பார்வையாளராக (micro observer) வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றியிருக்கிறேன்.

காலங்கள் உருண்டோடின.  இந்திய அரசியல் வானில் மதவாத சக்திகள் காலூன்றத் தொடங்கி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவும் நோக்குடன் ஒரு பாசிச வடிவிலான காட்டாட்சியை மோடி தலைமையில் அரங்கேற்றி வருகின்றனர். 

மதவாதச் சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமேயானால், இந்திய போலி ஜனநாயகக் கட்டமைப்பில் இருக்கிற அரைகுறை ஜனநாயகமும்கூட முற்றிலுமாக பறிக்கப்பட்டு மனுதர்ம வடிவிலான ஒரு காட்டாட்சிதான் இனி நடைபெறும். 

அரசியல் அரங்கில் மாற்றுக் கருத்துக்களோடு குறைந்தபட்சம் செயல்பட வேண்டும் என்றாலும் கூட அதற்கு ஆட்சி அதிகாரத்தை மதவாத சக்திகள் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா கூட்டணி தவிர வேறு மாற்று தற்போதைக்கு இல்லை என்பதனால், இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது என பெரும்பாலான மார்க்சிய லெனினிய இயக்கங்கள் முடிவு செய்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 

மேற்கண்ட கருத்தோடு எனக்கு முழுமையான உடன்பாடு ஏற்பட்டதனால், நானும் இந்தத் தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை மையமாக வைத்து, இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறேன். 

தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் முதன்முறையாக நான் வாக்களித்ததை ஒரு அரிய சாதனையாகக் கருதவில்லை. மாறாக தேர்தலிலும் பாசிச பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும், அதே வேளையில் தொடர்ந்து வீதிகளிலும் பாசிச சக்திகளுக்கு எதிராக களமாடி அவர்களை முற்றிலுமாக துடைத்தெரிய வேண்டும் என்கிற நோக்கத்தோடு எனது களப்பணியும் தொடரும். 

தமிழ்மணி

Sunday, 14 January 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்?

பார்ப்பனியம் கோலோச்சிய மன்னராட்சி காலங்களில், ஒடுக்கப்பட்ட மற்றும் சூத்திர சாதி மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவெங்கும், ஏன் பார்ப்பனியம் கோலோச்சிய எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. 

நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் தற்குறிகளாக இருந்ததற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதனால்தான். இன்றைய 'சீனியர் சிட்டிசன்கள்' இதை நேரடியாகக் கண்டவர்கள்.

மராட்டியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுக்க முயன்ற ஜோதிராவ்-சாவித்திரி பாய் புலேயின் போராட்டங்கள் இதைத்தான் உணர்த்துகிறது. தமிழ் நாட்டில் நீதிக் கட்சி, அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் கல்வியை பரவலாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவர்களின் காலனி ஆதிக்கத் தேவைக்காக கல்வி அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு திராவிட இயக்கங்களைக் குறை கூற புறப்பட்ட சங்கிக் கூட்டம், 

"திராவிட இயக்கம்தான் தமிழர்களுக்குக் கல்வி கொடுத்ததா? அதற்கு முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கவில்லையா? சங்க இலக்கியங்களைப் படைக்கவில்லையா? பக்தி இலக்கியங்களைப் படைக்கவில்லையா?" என்று எதிர்வாதம் செய்கின்றனர். 

சில தமிழ் தேசிய அரைகுறைகளும், நாம் தமிழர் சீமானின் தம்பிகளும் இதை அப்படியே வாந்தி எடுக்கின்றனர். சீமானின் தந்தை யாக்கோபுவும், அவரது பாட்டனும் முப்பாட்டனும்,  ஏன் வள்ளுவனைப் போல, ஔவைப் பாட்டியைப் போல, கம்பனைப் போல  இலக்கியங்களைப் படைக்க முடியவில்லை? இலக்கியம் இருக்கட்டும், குறைந்த பட்சம் கைச்சாத்தாவது இடத் தெரிந்ததா? இதற்கெல்லாம் விடை தேடாமல் விடலைத்தனமாக பேசுவதால் யாருக்கு இலாபம்?

தமிழ் செழித்து விளங்கியதும், சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டதும் பார்ப்பனியம் கோலோச்சாத காலகட்டத்தில். ஒரு காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழ்ச் சமூகம், இடையில் தற்குறிகளாக மாறியதற்கு பார்ப்பனியம்தான் காரணம்; சனாதனம்தான் காரணம் என்பதை மூடி மறைப்பதற்காக, திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கின்ற வேலையை சங்கிக் கூட்டம் செய்கிறது. 

இவர்கள் திராவிட இயக்கத்தை வசை பாடுவது என்பது, மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவையும் வசை பாடுவதற்கு ஒப்பாகும்.

சனாதன-பார்ப்பனிய எதிர்ப்பின்  அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இன்றளவும் இருப்பது திராவிட கருத்தியல்தான். திராவிடக் கருத்தியலை ஒழித்துக் கட்டினால், பார்ப்பன எதிர்ப்பு மட்டுப் பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கருதுகின்றனர். 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிரான, சனாதனக் கோட்பாடு, அதாவது இந்து மதக் கோட்பாடு நடைமுறையில் இருக்கும் வரை, அதாவது சாதியும், தீண்டாமையும் நீடிக்கும் வரை திராவிடக் கருத்தியல் தேவைப்படுகிறது. 

சாதியும், தீண்டாமையும் சரியானது, அவசியமானது, தேவையானது என்பதுதான் சனாதனத்தின் மையக் கருத்து. இதை மேலும் உயிர்ப்பிக்கவும் நிலைநாட்டவும் பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பாரதிய ஜனதா கட்சி. அதை பார்ப்பனிய ஜனதா கட்சி என்று அழைப்பதுதான் சாலப் பொருந்தும். 

மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது பார்ப்பனிய மீட்டுருவாக்கத்தின் பொற்காலம். இந்த 10 ஆண்டு காலத்தில் கோவில்கள் பெருகின. கோவில்கள் பெருகினால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும்தான் நிறையும்.

அரசு நடத்தும் ஆலைகளும், கல்விச்சாலைகளும் இழுத்து மூடப்பட்டு ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையும் வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டு வருவதை கடந்த 10 ஆண்டுகளில் நிறைவே பார்த்து விட்டோம்.

இத்தகைய மக்கள் விரோத, பார்ப்பன பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் பேசுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதற்கு ஒப்பாகும்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்? நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.

ஊரான்

Thursday, 6 April 2023

இப்பி ஃபக்கீர்: உமர்முக்தாரை நினைவுபடுத்தும் வரலாற்றுப் புதினம்!

விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் சிங்கள பேரினவாத அரசுப் படைகளால் மிகக் கொடூரமான முறையில் அழித்தொழிக்கப்பட்டது சமீபத்திய வரலாறு.

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார், அவர் மீண்டும் வருவார், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடருவார் என்ற கூறுவோரும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். பிரபாகரன் வருகிறாரோ இல்லையோ, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் பல்வேறு நாட்டுப் போராளிகளுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்மறை அனுபவங்களையே விட்டுச் சென்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சீமான் போன்ற பித்தலாட்டக்காரர்களுக்குத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் பயன்படுகிறது.

ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட அனுபவங்கள், புதிய தலைமுறையினருக்கு நேர்மறை அனுபவங்களையும், உத்வேகத்தையும் அளிக்கவல்லதாக இருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதப் போராட்ட அனுபவங்களும், லிபியா மீதான இத்தாலி முசோலினின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான உமர்முக்தாரின் கொரில்லாப் போர் முறை அனுபவங்களும், ஆண்டுகள் பலவாயினும் இன்னமும் பேசப்படுகின்றன.

இளம் வயதில் பகத்சிங்கும்,  தள்ளாத வயதில் உமர்முக்தாரும், ஆக்கிரமிப்பாளர்களால் தூக்கிலிடப்பட்ட போதும் அவர்களின் போராட்ட அனுபவங்கள் நம் நாடி நரம்புகளைப் புடைக்கச் செய்கின்றன.

நட்டநடு பாலைவனத்தில், ஒரு சிறிய கொட்டகையில் இத்தாலியப் பிரதிநிதிகளோடு உமர்முக்தார் நடத்திய சமாதானப் பேச்சு வார்த்தையின் காட்சிகள் கொரில்லா போர் காட்சிகளை விடவும் விஞ்சியது என்றால் அது மிகையல்ல.

*****

1937- 39 வாக்கில் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதியில், மலை உச்சியில், நெடிதுயர்ந்த அடர்ந்த மரங்களுக்குக் கீழே அமைக்கப்பட்ட கொட்டகையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது,

எங்களில் யாருக்கும் மனைவி மக்களோ வீடு வாசல்களோ எதுவும் இல்லை. நாங்கள் வாழும் பூமிதான் எங்கள் வீடு. இங்கு வாழும் மக்கள்தான் எங்கள் குடும்பத்தினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமியை விட்டு வெளியேறு மட்டும் முஸ்லீம்களில் ஒரு பகுதியினராவது அவர்களுக்கு அடிமைப் படாமல் வாழ்ந்தார்கள் என்ற சரித்திரத்தை எழுத எங்கள் இரத்தத்தை மையாகக் கொண்டிருப்பதே எங்கள் தொழில். எங்களில் யாரையும் விலைக்கு வாங்க முடியாது. எங்களுடைய பூமி என்று நாங்கள் எல்லை வைத்துக் கொண்டுள்ள பகுதியில் ஒரு இஞ்ச் அளவில் கூட உங்கள் ஆட்சி ஒருபோதும் அடியெடுத்து வைக்க முடியாது. நீங்கள் எங்கள் எஜமானர்களாக ஆகும் எண்ணத்தை கைவிட்டதாக உங்கள் பாராளுமன்றத்தின் மூலம் அறிவிப்புச் செய்து விடுவதே புத்திசாலித்தனம்

என கர்ஜிக்கிறான் போராளிக் குழுத் தலைவன் இப்பி ஃபக்கீர்.

நீண்ட நெடிய பேச்சு வார்த்தைக்குப் பிறகு,

சமாதானத்துக்கு வழி? என்று கேட்கிறான் பிரிட்டிஷ் தரப்பு ஜார்ஜ் மிலான் பிரபு.

உங்கள் வழியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களை அடிமைப்படுத்த முயற்சிக்காதீர்கள். அது ஒன்றுதான் சமாதானத்திற்கான வழி" என்கிறான் இப்பி ஃபக்கீர்.

ஆம். 1947-இல் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை வஜ்ரிஸ்தானை அடிமைப்படுத்த முடியவில்லை.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் கைபர் கனவாயையொட்டி அமைந்துள்ள, இஸ்லாமிய மதத்தைத் தழுவும் பத்தான் பழங்குடி மக்கள் வாழும் பகுதிதான் வஜிரிஸ்தான்.

பிரிட்டிஷார் வெளியேறிய பிறகு, அப்பகுதி பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டாலும் பதான்களின் இன விடுதலைக்கான போராட்டமும் தொடர்ந்தது என்பது பிந்தைய வரலாறு. 1960 இல் இப்பி ஃபக்கீர் மரணிக்கும் வரை பிரிட்டிஷ் இராணுவமோ அல்லது பாகிஸ்தான் இராணுவமோ அவரை நெருங்கக்கூட முடியவில்லை.

உமர்முக்தாரின் வீரத்தை, உமர்முக்தார் திரைப்படம் வெளிப்படுத்தியதைப் போல, ஏ.எம்.யூசுப் அவர்களின் இப்பி ஃபக்கீர் வரலாற்றுப் புதினம், இப்பி ஃபக்கீரின் வீரத்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகை அல்ல. 

பரங்கியருக்கு எதிரான கொரில்லாப் போராட்டத்தை மிக நேர்த்தியாக திரைக்கதை போல் அமைத்து நவீன க்ரைம் சப்ஜெக்ட் சினிமாவைத் தோற்கடிக்கும் விதமாக பல்வேறுத் திருப்பங்களுடன் இந்த வரலாற்றுப் புதினத்தை, ஏ.எம்.யூசுப் அவர்கள் படைத்துள்ளார்கள் என்ற பதிப்பாசிரியரின் கூற்றை மெய்ப்பிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்.

அடிமைத்தனத்தை வெறுக்கும், விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஊடுருவ வேண்டிய வீரன் இப்பி ஃபக்கீர்.

ஊரான்

குறிப்பு: படிப்பதற்கு நூலைத் தந்துதவிய வாலாஜா ஜெ.அசேன்,  Ex.MLA, அவர்களுக்கு நன்றி.


நூல்: இப்பி ஃபக்கீர்,
ஆசிரியர்: ஏ.எம்.யூசுப்
விலை: ரூ.90/-
இரண்டாம் பதிப்பு: 2016
நூல் வெளியீடு: புது யுகம்,
84-3, அங்கப்பன் தெரு, மன்னடி,
சென்னை-600 001.
 
தொடர்புடைய பதிவுகள்

Sunday, 28 August 2011

தற்போது சின்னத்திரையில் ....காணத்தவறாதீர்கள்!


Are bhaiyo...... khana khane ke baad ek film break to banta hi hai.................

Enjoy most romantic, most suspenseful, most terrific , most terrible and most expensive film ever................Please response
Hi..........An interesting movie is running house - full in India .........
Havent you seen or heard about it...........better watch it during the weekend................

Starring 


Hero :- Manmohan Singh


Heroine :- Sonia Gandhi


Supporting Hero :- Suresh Kalmadi, A Raja  


Supporting Heroine :- Kanimozhi


Main Villain: - Anna Hazare


Supporting Villain: - Baba Ramdev


Script By :- Pranab Mukherjee


 Comedy Role :- Kapil Sibal & P Chidambaram


Friendly Appearance:- Dig Vijay Singh


Characterless actor: Sharad Pawar


Item Girl : Main Dancer:- Mayavati


Action:- Delhi Police



Banking Partners:- Madhu Koda , Laloo Prasad yadav & Hasan Ali


Guest appearance: Ajmal Kasab & Afzal Guru


 Financed By: - POOR TAXPAYERS OF INDIA


கடந்த ஒரு வார காலமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த இப்படம் வசூலில் உலக சாதனையை படைத்துவிட்டதால் இனியும் இப்படத்தை ஓடவிட்டால் அது ரசிகர்களிடம் அலுப்பை ஏற்படுத்தும் என்பதால் இன்றைய (28.08.2011) காலைக் காட்சியோடு முடிக்கப்பட்டது. எனினும் முழுப்படத்தைக் காணத் தவறியவர்களுக்காக அதன் பிளாஷ்பேக் காட்சிகள் தற்போது சின்னத்திரைகளில்…….

ஹசாரே குழுமம் இனி எந்த நேரத்திலும் அடுத்த அதிரடி காமெடிப் படத்தைத் திரையிடலாம். எதற்கும் ரசிகர்கள் தயாராய் இருப்பது நல்லது.
 
மேலே உள்ள கருத்து மட்டுமே என்னுடையது. மற்றவை நேற்று எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. உங்களோடு பகிர்கிறேன்.