Tuesday, 8 March 2011

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

எனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அண்ணன் முறை வேண்டும். அவர் இறந்த போது நான் வெளியூரில் இருந்ததால் சாவுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் காரியத்தில் கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் ஊருக்குச் சென்றேன்.


உழவனின் மரணம் பேரிழப்பல்லவா?

அவரது வீடு மலையடிவாரம் காட்டோரத்தில் இருந்தது. ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்செடிகளே காணப்பட்ட கரட்டு மேட்டில் இன்று வேர்க்கடலையும் கரும்பும் செழித்திருந்ததைக் கண்டு நான் வியந்து போனேன்.

ஒரு பக்கம் பொன் விளையும் பூமியெல்லாம், நகரவாசிகளால் நாசமாக்கப்படும் போது, ஏதும் அறியா எனது அண்ணன் போன்ற விவசாயிகள் எதற்கும் உதவா மண்ணை, பொன் விளையும் பூமியாக மாற்றி விட்டல்லவா இறக்கிறார்கள். உறவினர் என்பதைவிட ஒரு உழைப்பாளியை இந்த உலகம் இழந்த விட்டது என்பதல்லவா எனக்கு..... ஏன் நமக்கு பேரிழப்பு.

தலை நிறைய பூச்சூடி, பட்டுப் புடவை கட்டி, மணப் பெண் போல ஜோடிக்கப்பட்ட எனது அண்ணி மாட்டுக் கொட்டகையில் தனியாக உட்கார்ந்திருந்தார். அண்ணன் இறந்த பிறகு பதினைந்து நாட்களாக மாட்டுக் கொட்டகையில்தான் வாசம். காரியம் முடியும் வரை வீட்டிற்குள் செல்லக் கூடாதாம். வீடு என்ன மாடி வீடா? கதவு வைத்த கொட்டகை அவ்வளவுதான். இவைதான் இன்று இந்தியாவில் எண்ணற்ற ஏழை விவசாயிகளின் பங்களாக்கள்.

துக்கம் விசாரிக்க வருபவர்கள் எல்லோருடனும் வாஞ்சையாய் கையைப் பிடித்தும், கட்டியழுதும் தனது சோகத்தை தணித்துக் கொண்டிருந்தார் அண்ணி. என்னாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் “எப்பிட்ரா இருக்க?” என்று கேட்ட அவரது குரல் மட்டும் என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. ஆனால் அவர் எப்பொழுதும் பீடியும் கையுமாகத்தான் இருப்பார்.  இப்படித்தான் நூறு வயது வாழ வேண்டியவர்கள் அறுபது வயதிலேயே ஆயுளை முடித்துக் கொள்கின்றனர்.

புண்ணியாதானம்!

ஐயர் வந்தார். வீட்டில் செய்யும் புண்ணியாதானம் என்ற சடங்கை முடித்தார். வடக்கே காட்டுப் பக்கம் ஒரு சிறுவனோடு சென்றார்.

”எங்கே இந்தப் பக்கம் போறார்?” எனக் கேட்டேன்.

 ”தண்ணி அடிக்கப் போறார்” என்றார் அருகிலிருந்த உறவினர்.

கல்லாணமோ கருமாதியோ தண்ணியடிப்பதுதானே இன்றைக்கு 'பேஷன்' என்பதால் நான் தப்புக் கணக்குப் போட்டு விட்டேன்.

"என்ன தண்ணி அடிக்கவா”? என ஆச்சரியமாய் நான் கேட்க, புண்ணியாதானம் முடித்து பங்காளி வீடுகளின் கூரைகளில் புனித நீரைத் தெளித்து வரவேண்டுமாம். அது ஐதீகம். எதற்கு என்றெல்லாம் எவரும் கேட்பதில்லை. ஐயர் சொன்னால் ஏன் என்று கேட்கக்கூடாது. இப்படித்தானே பல சப்பிரதாயங்களைப் புகுத்தி மக்களை மடமையில் வைத்துள்ளார்கள். அதுதானே பார்ப்பனர்களுக்கு மூலதனம். இல்லை என்றால் அவாளெல்லாம் அமெரிக்கா செல்லும் போது இவாளைப் போன்ற சிலர் இன்னும் மலைக் கிராமத்தைக்கூட விடவில்லையே ஏன்?

ஆங்காங்கே நிலத்ததையொட்டியே உறவினர்களின் வீடுகளும் இருந்ததால் ஒவ்வொரு வீடாகச் சென்று தண்ணீர் அடித்துவிட்டு ஏரி ஓரம் உள்ள குளக்கரைக்கு வந்து சேர்ந்தார் ஐயர். சம்பந்தம் கட்டும் சடங்கை முடிக்க வந்தவர்கள் ஏற்கனவே அங்கே கூடியிருந்தனர்.

ஊர்ப்பக்கம் வரும் ஒற்றைப் பேருந்தை நம்பி, தொலை தூர ஊர்களிலிருந்து ஒரு சிலர் வந்திருந்தனர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களிலும், மிதி வண்டிகளிலும் பலர் வந்திருந்தனர். பெரும்பாலானோரின் கைகளில் ஜவுளிக்கடைகளின் பைகள் தொங்கின.

சம்பந்தம் கட்டுதல்!

இறந்து போனவரின் உறவினர்களுக்கு, அவரவர்களின் சம்மந்தி முறை உறவினர்களும், திருமணமாகிச் சென்ற அக்கா-தங்கைகள் தங்களது அண்ணன்-தம்பிகளுக்கும் சம்மந்தம் கட்டுவது காரியத்தில் காலம் காலமாய் கடைபிடிக்கப்படும் ஒரு சம்பிரதாயம். வேட்டி மற்றும் துண்டு என இருந்த சம்மந்தம், பிறகு 'பேண்ட்' சட்டையாய் மாறியது. சில சமயங்களில் சிறுவர்களுக்கான 'ரெடிமேடு'களாய்க்கூட மாறுவதுண்டு. ஆனால் இன்று பணத்தையே சம்மந்தமாய் மொய் போல சிலர் கொடுத்து விடுகிறார்கள். துணியோ பணமோ எல்லாமே கல்யாண மொய் போல பின்னால் செய்ய வெண்டிய கடன்தானே. அதனால் இன்று ஆயிரங்களில்கூட சம்மந்தம் போடுகிறார்கள்.

நான் இது போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் கடைபிடிப்பதில்லை . சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில்லை என்றாலும் வெறுத்து ஒதுங்கிக் கொள்வதில்லை. நல்லது கெட்டதுகள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். பெரும்பாலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் அர்த்தமற்றவைகளாக இருந்தாலும் அவற்றை கடைபிடிப்பதால் அவர்கள் கெட்டவர்கள் இல்லையே. அறியாமையால்தானே இவைகளை மக்கள் கடைபிடிக்கிறார்ள். அறியாமையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிதான் இங்கு தேவையேயொழிய ஒதுங்கிக் கொண்டு அவர்களை வைவதல்ல.

ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

பூஜைகள் முடிந்தன. சம்மந்தம் கட்டும் சடங்கு தொடங்கியது. ஒவ்வொருவரும் ஊரையும் பேரையும் சொல்ல, அதையே ஐயர் திருப்பிச் சொல்லி, துணியையும் பணத்தையும் வாழ்த்திக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் சம்மந்தம் கட்டும் போதும் தட்டில் விழுந்த ஐந்தும் பத்தும் ஐயர் மடிக்குச் சென்றன. ஆண்டவனின் ஆசிபெற்றல்லவா கொடுக்கிறார். சும்மாவா கொடுக்க முடியும்? 

சுமார் 250 பேர் சம்பந்தம் கட்டியிருப்பார்கள். மொத்தமாக ஐயர் மடியில் சுமார் இரண்டாயிரம் சேர்ந்திருக்கும். சடங்குகள் செய்ய அழைத்து வந்தவர் கொடுக்கும் கட்டணம் தனி. அது ஒரு ஆயிரம் என்றாலும் மூன்று மணி நேரத்தில் ஐயருக்கு வரும்படி மூவாயிரம் ரூபாய். 'ஐ.டிஐ' முடித்து ஆலையில் வேலை செய்பவன் மாதத்தில் மூவாயிரம் தேத்துவதற்கு மூன்று 'ஷிப்டும்' உழைத்தாலும் முடிவதில்லையே.

அப்படி என்னதான் படித்துள்ளார் எங்க ஊர் ஐயர். ஐந்தாங் 'கிலாஸ்'கூட தாண்டவில்லை. ஐயராய் இருந்தால் என்ன? யாராக இருந்தாலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் படித்தால் எப்படித் தாண்ட முடியும்?

இவரது தந்தை பத்து ஏக்கர் நிலத்தோடு விவசாயம் பார்த்த அதிசய ஐயர். அவர் வயலில் இறங்கி உழைக்கவில்லை என்றாலும் ஒரு பணக்கார விவசாயியாய் வாழ்க்கை நடத்தியவர். என்னை ”கரிபால்டி” என்பார்கள் எனது பள்ளி நண்பர்கள். அவர் என்னைவிட கருப்பு. வாரிசும் அப்படியே. ஆரிய திராவிட இனக்கலப்புக்கு ஒரு எடுப்பான உதாரணம். இதை இழிவாக நான் சொல்லவில்லை. திராவிடர்களிலும் செக்கச் சிவப்புகளும் ஏராளமாய் இருக்கத்தானே செய்கிறார்கள். இது எதார்த்தம்.

பையனுக்கு படிப்பு இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சாலையே கிடையாது. போக்கு வரத்துக்கு நடராஜாதான். பையனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? ஆனாலும் துணிந்து வந்தார் ஒருவர் நிபந்தனையோடு. பையன் புரோகிதம் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. திருமணத்தோடு சில மந்திரங்களை மனப்பாடம் செய்ய அடித்தது யோகம். வேறு ஒரு ஊரில் இருந்து மிதி வண்டியில் வந்து புரோகிதம் பார்த்த ஐயரும் மூப்பாகி முடியாமல் போனதால் சுத்துப் பட்டு பத்து கிராமங்களுக்கும் சேர்த்து இன்று இவர் ஒருவரே “ஆஸ்தான“ புரோகிதர்.

முக்கி முக்கிப் படித்து வக்கீலாகி வாழ்க்கையில் “செட்டில்“ ஆவதற்குள் வழுக்கை விழுந்த எனது மற்றொரு அண்ணன் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம். "என்னடா தொழில் பரவாயில்லையா?" என்றபோது பெரு மூச்சு விட்டான் “டி.வி.எஸ்.ஃபிப்டியில்“ புறப்படத் தயாராய் இருந்த ஐயரைப் பார்த்து.

அவ்வை பிராட்டி இன்று இருந்திருந்தால் "அரிது அரிது பார்ப்பனராய்ப் பிறத்தல் அரிது" எனப் பாடியிருப்பாரோ!

ஊர் வந்து சேர்ந்தேன். பயணம் முடிந்தது.

Sunday, 6 March 2011

கேப்டன் கேடட் ஆன கதை!

வாள் எடுத்து வீசுவதில் சூராதிசூரன். தோள்களைக் கொண்டு எதிரிகளைத் தூக்கி எறிவதில் இவருக்கு இணை யாரும் இல்லை. 'ஏ.கே.பார்ட்டி செவன்களும்', ஏவுகனைகளும் சரமாரியாய் குண்டு மழை பொழிந்தாலும் கையடக்க 'ரிவால்வரிலேயே' எதிரிகளை எமலோகம் அனுப்பவதில் இவர் ஒரு 'ரிவால்வர் ரீட்டா'. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இவர் பந்தாடும் போது இவரது படையணிகள் வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். இவர் ஒருவரே முடிப்பார். 'கேப்டன்' ஆயிற்றே.

அம்மாவும் அய்யனும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் எதிர் வரும் யுத்தத்தில்  குறுக்கே நுழைந்து எதிரிகள் இருவரையும் கோடரியால் போட்டுத்தள்ள இது ஒன்றும் கோடம்பாக்க 'ரிகர்சல்கள்' அல்லவே. இந்த யுத்தத்திற்கு படையணிகள் இல்லாமல் பப்பு எதுவும் வேகாது. ஏற்கனவே நடந்த யுத்தங்களில் இருக்கின்ற துண்டையும் தொலைத்து விட்டு கோவணத்தோடு நிற்கும் அல்லக்கைகைள் இம்முறை தனித்து நின்றால் அம்மனமாவது, அல்லக்கைகள் மட்டமல்ல 'கேப்டனுக்கே' கோவணம்கூட மிஞ்சாது.

ஏற்கனவே தனியாக வாள்வீசி, கோவணமும் பறிபோய், ஒட்டு (இரட்டை) இலையால் மானம் காத்து, இலை விலகாமல் இருக்க இன்று 'சைலன்ட்டாய்' இருக்கும் வைகோ கற்ற பாடம் பண்ருட்டிக்குத் தெரியாதா என்ன? பக்குவமாய் எடுத்துச் சொல்ல 'கேப்டனும் கேடட்' ஆனார். அம்மா தலைமையில் கண்டபடி வாள் எடுத்து வீச முடியாதுதான். என்ன செய்ய? 

இது 'டி-புரமோஷன்தானே'.வேலை ஒன்றும் போய்விடவில்லையே! யுத்தத்தில் அம்மா வென்று, அல்லக்கைகள் அள்ள வாய்ப்பளித்தால் 'ரிவோக்' ஆகாமலா போகும். அம்மாவின் ஆணையின் கீழ் இப்போதைக்கு 'கேடட்டாய்' இருப்பதே மேல்.

அம்மா இருக்க ஆண்டவன் எதற்கு?

Saturday, 5 March 2011

நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!

இரண்டு நாட்களுக்கு முன்பு மகாசிவராத்திரி. சிறப்பு வழிபாடு, நாட்டியாஞ்சலி என சிவன் கோயில்கள் கலைகட்டியிருந்தன. நாட்டியாஞ்சலியைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தார்களாம். வெளிநாட்டினர்கூட மெய்சிலித்தார்களாம். இருக்காதா பின்ன? காஞ்சிச் சின்னவனின் தூக்கத்தைக் கலைத்த சுவர்ணமால்யா ஈசனை எழுப்ப ருத்ரதாண்டவம் ஆடினால் பார்ப்பவன் பரவசமடையமாட்டானா?

அம்மி அரைக்கும் மாமிகள்கூட அசைக்க முடியாத கால்களைத் தூக்கி தாண்டவமாடிய காட்சிகள் அரங்கேறின. இதெல்லாம் அவாளுக்கு வரும்படி 'சீசன்'. அமெரிக்காவிலிருந்து வந்து ஆடுகிறார்கள் என்றால் சும்மாவா வந்து ஆடுவார்கள்? 

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் கேளிக்கை விருந்து நடனங்களைப் போல மகாசிவராத்திரி மேன்மக்களின் திருவிழா.

மகாசிவராத்திரியை அடுத்து மயானக் கொள்ளை. அம்மனைக் கட்டி இழுத்து ஆற்றுக்குச் செல்கிறார்கள். கூட்டம் அலைமோதுகிறது. மக்களின் முகங்களில் மலர்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து பாட்டிமார்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போல அம்மனைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்த மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் கீழ்தட்டு மக்கள். 

எதற்காக மயானக் கொள்ளைத் திருவிழா?

மகாசிவராத்திரியையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நடத்தப்படுவது மயானக் கொள்ளைத் திருவிழா.  இதற்கு ஒரு புராணக் கதை உண்டாம்.

சிவ பெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். தனக்கும் ஐந்து தலைகள் வேண்டும் என சிவனிடமே முறையிட்டு தவம் செய்து ஐந்து தலைகளைப் பெற்றானாம் பிரம்மா. கர்வத்துடன் கயிலாயம் சென்ற பிரம்மாவை சிவன்தான் வந்துவிட்டான் என்று பார்வதி வணங்கினாளாம். பிறகு உண்மையை அறிந்த பார்வதி சிவனிடம் முறையிட்டாளாம். சிவனும் பிரம்மாவின் ஐந்து தலைகளையும் துண்டித்தானாம்.

இருப்பினும் வெட்டப்பட்ட தகைள் மீண்டும் மீண்டும் வந்தனவாம். 999 தலைகள் வந்ததும் அவைகளை மாலையாக அணிந்து கொண்டானாம் சிவன். ஆயிரமாவது தலையை சிவன் எடுத்த போது பிரம்ம கபாலம் சிவனது கையுடன் ஒட்டிக் கொண்டதாம்.

இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம். ஆண்டவனுக்கே தோஷமா எனக் கேட்காதீர்கள். தோஷம் பிடித்து காடு மேடுகளில் அலைந்த சிவனைக் கண்ட மகாவிஷ்ணு, பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க அங்காளம்மனுக்கு ஆலோசனை தெரிவித்தானாம். அதர்மத்தை அழிக்க பல அவதாரங்கள் எடுத்த மாவிஷ்ணு அந்த வேலையை ஏன் அங்காளம்மனுக்கு ஒப்படைத்தான் என கேள்வி கேட்கக் கூடாது. 'ஒர்க் லோடு' அதிகமாய் இருந்திருக்கும். 

உலகில் உள்ள பயிர்களை ஒன்று சேர்த்து, உணவாக படைத்து, அதை மூன்று கவளமாக்கி, அவற்றில் இரு கவளங்களை கபாளத்தில் போடு. மூன்றாவது கவளத்தை தரையில் வீசு. அதை எடுக்கக் கபாலம் கீழே இறங்கும் போது அதை அழித்து விடு என அங்காள பரமேஸ்வரிக்கு 'பிராசஸை' விளக்கினானாம் மகாவிஷ்ணு.

அதன்படி அங்காளம்மன் பிரம்ம கபாளத்தை தனது காலடியில் மிதிக்க, சிவனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாம். இதுவே மயான கொள்ளைத் திருவிழாவாக நடத்தப் படுகிறதாம்.

அது அவாளின் கட்டுக் கதை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னதான் புராணங்களை எழுதி வைத்தாலும் உண்மையை ஒருக்காலும் மறைக்க முடியாது. அதனால்தான் மயானத்தில் அதாவது இடுகாட்டில் புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாக இத்திருவிழா இப்பொழுது மாறிஉள்ளதாக தினமணி எழுதுகிறது.

இப்பொழுது மாறவில்லை. எப்பொழுதும் அதுதான் உண்மை. புராணப்படி மும்மூர்த்திகளும் சம்பந்தப்பட்ட இந்த விழாவில் பார்ப்பணர்கள் ஏன் கலந்து கொள்வதில்லை? உயர் சாதியினர் ஒருவர்கூட எடுத்து நடத்துவதில்லையே? இது ஒன்று போதாதா இது புராணக் கதை அல்ல, புருடாக் கதை என்பதற்கு.

பாட்டிகளே படைத்தலைவிகளாய்...

இது தாய்வழிச் சமுதாயத்தின் எச்சமாய் தொடரும் ஒரு விழா. இங்கே ஈசனுக்கு வேலை இல்லை. ஏழைகளைக் கொடுமைப்படுத்திய கயவர்களை நம் மூதாதைய மகளிர் குத்திக் கொன்று வீர மரணம் அடைந்ததைக் கொண்டாடும் நாள். கயவர்கள் யாராய் இருந்திருக்க முடியும்? ஆண்டைகளைத் தவிர.

இரத்தக் கறையோடு தொங்கும் நீண்ட நாக்கும், மடித்துக் கடித்துத் தடித்த நாக்கும்,  இரண்டுக்குப் பதிலாய் நான்கு கைகளும், அக்கைககளில் வீச்சரிவாளும் கோடரியும், உருட்டி மிரட்டும் கண்களும், அட்டைக் கரியாய் மேனியும் என சூர்ப்பநகை போல யார் இருந்திருக்க முடியும்? ஏழைகளைத் தவிர.

ஆட்டைக் கடித்து இரத்தம் குடிப்பதும், பச்சைக் கறியை கொத்துக் கொத்தாய் தின்பதும் இன்றும் இவ்விழாக்களில் நடக்கின்றனவே. இவை ஆக்ரோஷத்தின் வெளிப்பாடல்லவா? 

அம்மன்கள் இப்படி ஆக்ரோஷமாய் யாருக்கெதிராய் வெகுண்டெழுந்திருப்பார்கள்? வெள்ளையனுக்கு எதிராய் வேலுநாச்சியார் வெகுண்டெழுந்ததைப் போல அன்று ஆண்டைகளுக்கெதிராய் சில தாய்மார்கள் ஆர்த்தெழுந்திருக்க வேண்டும். அவர்களே இன்று அம்மனாய்த் தெரிகிறார்கள் நம் மக்களுக்கு. அங்காளத்தாள் தலைமையேற்றிருக்க வேண்டும். பிறகு பார்ப்பனர்கள் அவளை பரமேஸ்வரியாக்கி நிறுவனப் படுத்தியிருக்க வேண்டும்.

யார் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

மேல் மலையனூர் போன்ற சில ஊர்களில் செம்படவர்களும் (மீனவர்கள்), ஆற்காடு போன்ற சில ஊர்களில் வன்னியர்களும் வேலூர் விருதம்பட்டு தோட்டப்பாளையம் போன்ற சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே இதைத் தங்கள் வீட்டுத் திருவிழாவாக நடத்துகிறார்கள். விழாவில் பங்கேற்போரும் இப்பிரிவு மக்களே. அதிலும் குறிப்பாக கீழ் வருவாய் பிரிவினர் (lower income group) மற்றும் அன்றாடங்காய்ச்சிகளே. மருந்துக்குக்கூட ஒரு உயர் சாதிக்காரனை பார்க்க முடியாது. தெரு வழியாக அம்மன் வரும் போது கும்பிடாமல் விட்டால் மரியாதை போய்விடும் என்பதாலும், சாமி குத்தம் வந்து விடுமோ என்ற அச்சத்தாலுமேயொழிய உயர் சாதியினர் யாரும் அம்மனை விரும்பி வழி படுவதில்லை.  

அங்காளம்மனைப் போல கொடுமைக்கெதிராய் கொதித்தெழவா இன்று இதுபோன்ற விழாக்கள் நடத்தப் படுகின்றன? விழாவை நடத்தும் பொருப்பு ஊர்ப் பெரியவர்களுக்கு இருந்தாலும் நடைமுறை வேலைகளை இளைஞர்கள்தான் முன்னெடுக்கிறார்கள்.

நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!

அண்ணன்களுக்கும், அய்யாக்களுக்கும், தளபதிகளுக்கும், கேப்டன்களுக்கும் அல்லக்கைகள் வைக்கும் கட் அவுட்களைப் போல இங்கே அம்மன்களுக்கும் கட் அவுட்டுகள். இதில் ஆக்ரோஷமாய் காட்சியளிக்கும் அம்மன்கள் அதிகம் என்றாலும் பத்மினி, கே.ஆர்.விஜயாக்களும் அம்மனாய் அவதரித்துள்ளதும் இருக்கத்தான் செய்கின்றன. குத்தாட்டம் போட்ட ரம்யாக்கள்கூட அம்மனாய் அவதாரம் எடுத்துள்ளார்கள். நல்ல வேளை நமீதாக்கள் இதுவரை அம்மன் வேடம் போட்டதில்லை.   பாவம் ஓவியர்கள்தான் என்ன செய்வார்கள்? 'ஒரிஜினல்' அம்மனை யார்தான் பார்த்தார்கள்? மனப் பதிவுகள்தானே படைப்பாய் வரும்.

இந்த ஆண்டு மயானக் கொள்ளையை என்னால் மறக்கவே முடியாது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் 80 வயதான எனது தந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மூத்திரப் பையை மாற்றிக் கொண்டு திரும்பி வர மாலை மூன்று மணியாகிவிட்டது. பேருந்து நிலையத்தில் ஐந்து மணிவரை காத்திருந்த பிறகே ஒரு பேருந்து வந்தது. ஏறிப் பயணித்தோம். முப்பது கிலோ மீட்டர் தூரப் பயணம்தான். ஆனால் மூன்று நகரங்களைக் கடக்க வேண்டும். 

வழி நெடுக மயானக் கொள்ளை. கூட்டம் அலைமோதியது. பேருந்துகள் ஊர்ந்துகூட செல்ல முடியவில்லை. சில இடங்களில் போக்குவரத்து நிலைகுலைந்து போனது. காவல் துறையினர்தான் என்ன செய்வார்கள்? கட்டுப் படுத்தமுடியவில்லை.

மூன்று மணி நேரப் பயணம். பேருந்து நிலையத்தில் காத்திருந்த இரண்டு மணி நேரம். ஆக மொத்தம் ஐந்து மணி நேரம். ஒரு மணி நேரத்திற்குப் பதிலாக ஐந்து மணிநேரமானால் எரிச்சல் வராமலா இருக்கும்? பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு ஆட்டோவில் சென்றபோது மயங்கிச் சுருண்டுவிட்டார் எனது தந்தை. வாந்தியும் வேறு. எப்படி இருந்திருக்கும் எனக்கு? எவன் கண்டு பிடித்தான் 'பஸ் டேவை' என்று சில பதிவர்கள் கேட்பது போல எவன் கண்டுபிடித்தான் மயானக் கொள்ளையை என்று கேட்கவா முடியும்.

விழாக்கள் தேவைதானா?

துன்ப துயரங்களால் அவதிப்படும் மக்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தவும்,  மயானத்தில புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாகவும் இது போன்ற விழாக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவர்களும் பொது மக்கள்தானே. வேறு ஒரு தரப்பினர் ஒரு விழா கொண்டாடும் போது அவர்களும் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகத்தானே செய்கிறார்கள். யாரை யார் நொந்து கொள்வது?

விழாக்கள் தேவைதானா என்பது பரிசீலனைக்குரியவைதான். தேவையற்ற விழாக்களை தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்தான். அதுவும் இன்றைய விழாக்கள் எதுவாக இருந்தாலும் தண்ணியில் மிதக்காமல் நடப்பதில்லையே. குறிப்பாக குடிக்காத இளைஞர்களே இன்று இல்லை என்ற நிலைதான் எங்கும் நிலவுகிறது. இதற்காகவே விழாக்களை ஒழித்துக் கட்டினால் தவறொன்றும் இல்லைதான்.

ஆனால், மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்ட விழாக்களை ஒரேயடியாக ஒழித்துவிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாமல் யாராலும் இப்போதைக்கு வாழமுடியாது. விழாக்களில் கிடைக்கும் மகிழ்ச்சி அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு கிடைக்கும் போது தேவையற்ற விழாக்கள் கண்டிப்பாய் காணாமல் போகும்.

ஊரான்

Friday, 4 March 2011

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, தனியார்ப் பேருந்தைப் போலல்லாமல் விரைவிலேயே நகரைக் கடந்து மாநில நெடுஞ்சாலையில் விரைந்து சென்றது. காலை நேரம் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து பயணத்திற்காகத் தூக்கத்தைக் தொலைத்தவர்கள் சிலர் தூங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும், ஒரு சிலர் கண்களை மூடியவாறு காதுகளில் 'ஹியர் ஃபோனை' மாட்டிக் கொண்டு தாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வந்தனர். தூக்கம் கெட்டிருந்தாலும் நான் பேருந்துப் பயணத்தின் போது தூங்குவதில்லை.  பயணங்கள் தரும் பாடங்கள் நிறைய இருக்கே.

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், வாழை மரங்களும் கண்களைக் குளிர வைக்கும் போது தூக்கம் எப்படி வரும்?

அடுத்து வட்டத் தலைநகர் வந்தது. இறங்கி அடுத்தப் பேருந்தில் ஏறி பயணமானேன். முப்பது கி.மீ. தூரப் பயணம். விரைவுப் பேருந்து என்பதால் உரிய நேரத்தில் சென்று விடும். எனது கிராமத்துக்குச் செல்லும் நகரப் பேருந்தை பிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியோடு இருந்தேன். இன்னும் பத்து நிமிடம் பயணித்தால் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம் என எண்ணிய போது ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டினார். 

எனக்கு சற்றே கலக்கம். அது ஒரு சிறிய கிராமம். எதற்கு இங்கே ஓரம் கட்டுகிறார் என எண்ணிக் கொண்டிருந்த போது ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் இருந்த சிறிய சிற்றுண்டியகத்திற்குச் சென்றார்கள். அவர்களோடு 'பேண்ட்' சட்டை போட்டவர்களும் செல்லவே நானும் சென்றேன். நான்கு இட்லி, இரண்டு வடை. மொத்தமே பத்து ரூபாய்தான். போதுமானதாக இருந்தது. காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என தூக்கலாய்தான் இருந்தது. ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சாப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள ஒரு சில 'மோட்டல்களை' நினைத்துப் பார்த்தேன். அவைகள் பசியாற்றும் 'ஓட்டல்கள்' அல்ல. தொலைதூரப் பயணிகளை மறித்து காசு பறிக்கும் வழிப் பறி கொல்லையர்களின் கூடாரங்கள்.

இரண்டு மொடக்குக்குக்கூட ஆகாத டீ, பாதி சோடா மாவு மற்றும் ஆமணுக்குக் கொட்டையால் குஷ்பு இட்லியாக மாறிய ரேசன் அரிசி. இட்லி ஆறிப் போனால் நாறிவிடும் என்பதால் சூடாகத்தான் கொடுப்பார்கள். ஆவி பறக்கும் இட்லியைப் பார்த்த உடனே நம்மாளு மயங்காமலா இருப்பான். அதுவும் நல்லிரவு லேசான குளிரும் சேரும் போது விடவா முடியும். இட்லி சூடாக இருக்கும் போது பூப் போலத்தான் இருக்கும். குடலின் ஈரம் பட்டு 'கொன்ச்சிங்' ஆன இட்லி கடினமாகி குடலை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும். அதன் விளைவை பிறகு தவிர்க்கவா முடியும்?

இங்கு விலையோ மூன்று மடங்கு. 'லீ மெரிடியனில்'கூட உணவருந்திவிட்டு பத்து ரூபாயை மிச்சப் படுத்தி வெளியே வந்து நகரப் பேருந்தில் வீடு போய்ச் சேரலாம். ஆனால் 'மோட்டல்களுக்குச்' சென்றால் 'பர்சு' காலி. 'ஏ.டி.எம் கார்டு' இருந்தால் ஊர்ப் பயணம் தொடரலாம். இல்லை என்றால் ஊராவது பயணமாவது வேலை கிடைத்து விட்டது எனக் கருதி அங்கேயே 'செட்டிலாகலாம்'.

உள்ளே சென்றால்தானே காசைப் பறிக்கிறார்கள். வெளியிலேயே 'பிஸ்கட் பாக்கெட்' ஒன்றை வாங்கித் தின்று தண்ணீர் குடித்தால் போதும் எனக் கருதி வாங்கச் சென்றால் விலையோ எகிறிக் கிடக்கும். ஐந்து ரூபாய் 'பிஸ்கட்' ஏழு ரூபாயாம். எங்கே சென்று முறையிடுவது? காய்ந்த தொண்டையை இரண்டு ரூபாய் 'பாக்கெட்' தண்ணீரால் ஈரப்படுத்தி பயணத்தைத் தொடர வேண்டியதுதான், ஊர்ப் போய்ச் சேர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. 

காலை சிற்றுண்டி முடித்து பேருந்து புறப்பட்டது. நடத்துநரிடம் பேச்சுக் கொடுத்தேன். "முன்ன மாதிரி கஷ்டமில்ல சார்", "ரோடு நல்லாயிருக்கு" என்றார். ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட சாலை. பல தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்ட தரத்தோடு போடப்பட்டிருந்தது. இப்பொழுது அதில் பயணிப்பது அலாதி சுகம்தான்.

இதே சாலையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக அவ்வப் பொழுது பயணித்துள்ளேன். முப்பது கிலோ மீட்டருக்கு மூன்று மணி நேரம் ஆகும். 'கார்ப்' பந்தயங்களை நடத்த காடு மேடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. குறை மாத கர்ப்பிணிகள் முப்பது கிலோ மீட்டரிலேயே நிறைமாதமாகி குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் உண்டு. கூடுதலாக ஒரு இட்லியை வயிற்றில் திணித்து அவசரமாய்ப் பேருந்தில் பயணிக்கும் வயதுப் பெண்கள் பேருந்து குலுக்கும் குலுக்கலில் வாந்தி எடுத்து பிறரின் சந்தேகத்திற்கு ஆளாவதும் உண்டு. இன்று நெடுஞ்சாலைகள்தான் மேம்பட்டுள்ளன. கிராமச் சாலைகளில் பயணித்தால் மூன்று கிலோமீட்டர் பயணத்திலேயே மேற்கண்ட அதிசயங்கள் நிகழும். 

எனது ஊருக்குச் செல்லும் கூட்டுச் சாலை வந்தது. காலை மணி ஒண்பதைத் தாண்டிவிட்டது. நகரப் பேருந்து சென்று விட்டது. ஏழு கி.மீ தூரம் எப்படிச் செல்வது? படிக்கும் காலத்தில் பெரும்பாலும் நடந்தே செல்வேன், இள வயசு.

அப்பொழுதெல்லாம் வாடகை சைக்கிள் கடை ஒன்று இருக்கும். உடனே திரும்புவதாக இருந்தால் சில நேரங்களில் சைக்கிள் எடுத்துச் செல்வேன். திரும்புவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஆகும் என்றால் சைக்கிளை யார் திரும்ப ஒப்படைப்பது? இரண்டு நாள் வைத்திருந்து எடுத்து வரலாம் என்றால் நாள்வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? அதனாலேயே பெரும்பாலும் நடந்தே சென்றுவிடுவேன்.

வாடகை சைக்கிள் கடைகளைல்லாம் இன்று பழங்கதைகளாகி வருகின்றன. கிராமமோ, நகரமோ 'ஸ்பிலண்டர்களும்' 'பல்ஸ்சர்களும்' சீறிப் பாயும் காலம் இது. ஊர்ப்பக்கம் செல்லும் ஒரு வாகனத்தில் ஒட்டிக் கொண்டேன். ஊரைச் சென்றடைந்தேன். ஏரி நிறைந்திருந்தது. நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் கண்களைக் குளிர வைத்தன. எல்லாம் இந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் ஏற்ப்பட்டதன் விளைவு.

தேர்தல் வருகிறது. கருணாநிதி ஆட்சி என்றால் மழைகூட பெய்யாது என்பது காலங்காலமாய் இருக்கும் கிராமத்து நம்பிக்கை. இந்த அறியாமைதானே சில தேர்தல்களில் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கோட்டைக் கதவுகளை திறக்க உதவின.

மேம்பட்ட நெடுஞ்சாலைகளால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் இன்று சீறிப்பாய்கின்றன. சாதாரண மக்களையும் விழி பிதுங்க வைத்த தக்காளி, பூண்டு, வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகளின் விலை வெகுவாய்க் குறைந்துவிட்டன. கருணாநிதியின் தயவால் குறையவில்லைதான். இது விளைச்சல் காலம். இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு இது சாதகம் இல்லையே.

எதைச் சொல்லி எதிர்க்கட்சிகள் ஓட்டுக் கேட்பார்கள்?. கருணாநிதிக்கு 'ஓட்டு' விழுமா? கூட்டணி பலமாய்ப் போட்டாலும் ராஜா-கனிமொழியின் கூட்டு கலைஞரின் கோட்டைக் கனவுக்கு வேட்டாய் மாறுமா? ஐயம் தொடர்கிறது.

ஊர்ப் பயணமும் தொடரும். மீண்டும் சந்திப்போம்!

Wednesday, 2 March 2011

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து நாலரை மணிக்கு பேருந்து பிடிக்கச் சென்றேன். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிற்றூரில் குடியிருந்தாலும் அந்த நேரத்தில் போக்குவரத்து அதிகம் இருக்காது. நாலரை மணிக்கு வரவேண்டிய பேருந்து வராததால் ஐந்து மணிக்கு வேறு பேருந்தில் ஏறி அருகில் உள்ள சிறு நகரை அடைந்தேன். அங்கு ஒரு மணி நேரம் காத்துக் கிடந்து பிறகு வந்த பேருந்தில் ஏறி மற்றொரு நகரை அடைந்தேன்.

இது சற்றே பெரிய நகரம். மாவட்டத் தலைநகரம் எனபதாலும் பல்வேறு ஊர்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இருப்பதாலும் பேருந்து நிலையத்தில் இங்குமங்குமாக மக்கள் பேருந்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருந்தார்கள்.

எனது ஊருக்கு நேரடிப் பேருந்து கிடையாது. நான் இங்கிருந்து மற்றொரு ஊருக்குச் சென்று அங்கிருந்து வேறு ஒரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். அவசரமாகச் செல்ல வேண்டும்தான். இருந்தாலும் புறப்படுவது போல உருமிக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறத் தயக்கம். 

அப்பொழுது மணி ஆறரை. அந்த நேரத்திலும் தள்ளு வண்டியில் ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களுடன் ஒரு இளைஞனும் சிறுவனும் நின்று கொண்டிருந்தார்கள். அவசரமாய் புறப்பட்டு வந்தவர்கள் ஊருக்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டுமென்றால் பேருந்து நிலையக் கடைகள்தானே கதி. வேறு வழி கிடையாது. 

சற்று முன்னெச்சரிக்கையோடு கொஞ்சம் தின்பண்டங்களை நேற்று மாலையிலேயே வாங்கி வைத்துவிட்டேன். கூடுதலாக கொஞ்சம் பழம் வாங்கிச் செல்லலாமே என திராட்சை விலையைக் கேட்க எண்ணிய போது கிராமத்துப் பெண்மணி ஒருத்தர் கால் கிலோ திராட்சையை வாங்கினார். காலை நேரக் குளிரைத் தாங்க 'ஜெர்க்கின்' போட்டிருந்த இளைஞன் எடை போட்டபோது அதிர்ந்து போனேன். ஒரு நூறு கிராம் அளவுக்கு திராட்சையை எடுத்துப் போட்டவுடனே பட்டென எடைத்தட்டு அந்தப்பக்கம் இறங்கிவிட்டது. மேலும் ஒரு கொத்து திராட்சையை எடுத்துப்போட அருகில் இருந்த சிறுவன் அதை பாலிதின் பையில் போட்டுக் கொடுக்க அந்தப் பெண் அதைவாங்கி பக்குவமாய் 'ஒயர்' கூடையில் வைத்துவிட்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினார். அவன் 80 ரூபாய் மீதி கொடுத்தான். 

”எவ்வளவுப்பா?” என அவர் கேட்க 

”கால் கிலோ இருபது ரூபாய்” என்றான். 

”என்னப்பா இவ்வளவு விலை?” என்றார். 

”முன்னமே சொன்னேனம்மா கால் கிலோ இருபது ரூபாய்னு” என்றான்.

பாமரர்களுக்கு கால் கிலோ எடையின் அளவு எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. ஆனால் காசு அதிகம் என்றால் எல்லோருக்கும் புரியும்தானே. அந்தம்மாவுக்கு விலை அதிமாய்த் தோன்றியிருக்க வேண்டும். கவரை கொடுத்துவிட்டு நூறு ரூபாயைத் திரும்ப பெற்றுக் கொண்டு பேருந்துக்குச் சென்றுவிட்டார். 

அடுத்து ஒருவர். தனது உறவினரை வழியனுப்ப வந்தவர். கால் கிலோ வாங்கினார். அதே எடை. அதே விலை. காசைக் கொடுத்தார். புறப்படத் தயாராய் இருந்த பேருந்தில் உடன் வந்தவரை ஏற்றி வழியனுப்பினார். விலை மற்றும் எடையில் கவனம் செலுத்த அவருக்கு அது நேரமில்லை. அவ்வளவு அவசரம். இந்த அவசரம்தானே எமாற்றுவோருக்கு சாதகமாய் அமைந்து விடுகிறது.

ஒரு கிலோ ஐம்பது ரூபாய், கால் கிலோவாக வாங்கினால் பதினைந்து ரூபாய் விற்கும் போது இருபது ரூபாய் என்பது அநியாய விலைதான். விலையையாவது தாங்கிக் கொள்ளலாம் போல இருந்தது அவன் போட்ட எடையைப் பார்த்த போது. மிஞ்சிப் போனால் 175 லிருந்து 200 கிராம் இருக்கும். எனக்குப் பழம் வாங்கும் ஆசையே விட்டு விட்டது. போகும் வழியில் ஏதாவது கிடைக்காதா எனக் கருதி தனியார் பேருந்து புறப்பட்டவுடன் அடுத்து பத்து நிமிடத்தில் புறப்படத் தயாராய் இருந்த அரசுப் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

இது மோசடிதான். இங்கே மோசடி செய்பவன் டாட்டாவோ அம்பானியோ அல்லதான். இத்தகைய மோசடியால் இவன் குபேரனாக முடியாதுதான். இருந்தாலும் ஒருவன் செய்கிற மோசடி அவனோடு நிற்பதில்லை. ஏமாற்றுகிறப் பண்பு ஒரு பரிணாமமாய் உருப்பெற்று மொத்த சமூகத்தையும் பீடிக்க வழி வகுக்கின்றனவே. அதுதானே சமூகத்தை சீரழிக்கும் மிகப் பெரிய ஆபத்து.

தனியார் பேருந்தில் என்னதான் ஆடியோக்களையும், வீடியோக்களையும் போட்டு பயணிகளைக் கவர்ந்தாலும் ஆள் பிடிக்க, அதுவும் காலை நேரப் பயணத்தின் போது... 

நிற்பதும்... ஊர்வதுமாய்..

அப்பப்பா... நான்கு கிலோ மீட்டர் தூர நகரைக் கடப்பதற்குள் நாற்பது கிலோ மீட்டர் சென்றிருக்கலாம். போகும் வழி நெடுக நின்று நின்று சாவகாசமாய் பயணிகளை ஏற்றும் போது நமக்கோ எரிச்சல் செம கடுப்பாய் மாற 'பிரஷர்' தலைக்கு ஏறி நெற்றிப் பொட்டு பட்.. பட்டெனத் துடிக்கும். 

இருக்காதா பின்ன? இந்த வேகத்தில் போனால் ஊர் செல்லும் அடுத்தப் பேருந்தை கோட்டை விட்டுவிட்டால் பிறகு ஊருக்கு எப்படிச் செல்வது? சற்றே 'டர்ரு புர்ரெனப்' புறப்பட்டாலும் உரிய நேரத்தில் அடுத்த ஊரைச் சென்றடையலாம் என்பதால் நான் அரசுப் பேருந்துகளையே பெரும்பாலும் நாடுவேன். வேறு வழியே இல்லை என்றால் தனியார் பேருந்துதான் கதி.  

ஊர்ப் பயணம் தொடரும்... மீண்டும் சந்திப்போம்!.