Wednesday, 7 December 2011

மூனாவதா பொறந்து எவ தாலிய அறுக்கப் போறானோ!

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை. அதையொட்டிய தொழிலாளர்கள் வாழும் குடியிருப்பு. 

முன்பு கம்பும்-கடலையும் விளைந்த புஞ்சய் பூமியில் இன்று எங்கு நோக்கினும் கட்டடங்கள். அருகில் உள்ள ஊர்களில் தங்கினால் பேருந்து பிடித்து வேலைக்கு வந்து, பிறகு மீண்டும் வீட்டிற்குச் செல்வது இன்னுமொரு 'ஷிப்ட்' வேலை பார்ப்பது போலுள்ளதால் தொழிற்சாலைக்கு அருகில் தங்குவதற்கே தொழிலாளர்களும் ஊழியர்களும் விரும்புவதால் வாடகை வீடுகளுக்கு ஏக கிராக்கி. 

நெடுக்க நீட்டினால் கால் இடிக்கும்; குறுக்க நீட்டினால் கை மடங்கும். இதுதான் 'பேச்சுலர்'களுக்கான அறைகள். இதற்கு வாடகை ஆயிரங்களில் என்பதால் 'கக்கூசில்'கூட மாடி அமைப்பவர்கள் 'ஹவுஸ் ஓனர்கள்'.

நமது பொருளாதாரப் புலிகள் சொல்வதைப் போல 'சப்ளை அண்ட் டிமாண்ட் 'அதிகம் என்பதால் பெட்ரோல் விலையைப் போல எப்போதும் வாடகை ஏறு முகத்தில்தான். 

வாடகை கொடுத்து கட்டுப்படியாகாது என்பதால் சிரமம் இருந்தாலும் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து பேருந்தில்தான் வேலைக்கு வருகிறார்கள். 

அப்படி வந்திறங்கும் தொழிலாளர்களை மட்டுமல்ல, சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் பலரின் கண்களையும் உறுத்திக் கொண்டிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரிலேயே காலியாகக் கிடக்கும் விசாலாமான நிலப்பகுதி. 'பிளாட்' போட்டால் பல லட்சங்களைத் தாண்டும். 

நிலம் யாருக்குச் சொந்தம் என சில பத்து ஆண்டுகளாக நடக்கும் வழக்கு- வாய்தா.வாய்தாவுக்கு நடந்தே கால் தேய்ந்து போன பெண்மணி. சாலையையொட்டி அந்நிலத்தின் மேற்கு முனையில் ஒடிசா பழங்குடியினரை நினைவுபடுத்தும் ஓலைக் குடிசை ஒன்றில் தனது கணவனோடும் ஊணமாய் வீழ்ந்த்துவிட்ட தனது மகனோடும் காலத்தைத் தள்ளுபவர்.

முடவன் நடக்கிறான்-குருடன் பார்க்கிறான்-ஊமை பேசுகிறான் என ஊர் ஊராய் அற்புத சுகமளிக்கும் அங்கிக்காரர்கள் இக்குடிசைக்கு பல முறை படை எடுத்தார்கள். 

மரித்துப் போன கர்த்தர்கூட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கதைகள் சொல்கிறார்கள். ஆனால் முப்பதாண்டு காலம் படுக்கையை விட்டு எழாமலேயே வளர்ந்த வாலிபனை குறைந்த பட்சம் எழுந்து நிற்க வைத்திருந்தால்கூட கர்த்தர் கருணை உள்ளவர் எனக் கருத வாய்ப்புண்டு. சென்ற ஆண்டு அவன் கட்டிலை விட்டு இறந்கினான் கல்லரை நோக்கிச் செல்வதற்காக. 

 தனது கையே உடைந்தது போல நொறுங்கிப் போனாள் அந்தத்தாய். கணவன் என்கிற மற்றொரு கை இருந்தாலும் அது டான் பாஸ்கோவின் வலது கரமா என்ன போற்றி வணங்க. நடக்கும் போதுகூட அசையாத கணவனின் கைகள். இதையும் சேர்த்தல்லவா தன்னோடு சுமந்து வந்தார். 

உயிர் பிழைக்கவும்,அவ்வப் பொழுது ஓட்டையாகிப் போகும் ஓலைக் குடிசையின் ஓட்டையை அடைக்கவும் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அவர் நடத்தி வந்த சின்னஞ் சிறிய பெட்டிக்கடை. அதில் கிடைத்த சொற்ப வருவாயில் குடிசையின் ஓட்டை அடைந்ததோ இல்லையோ கணவனின் வயிறு மட்டும் 'குவார்ட்டரால்' நிறைந்து விடும். 

'குவார்ட்டரால்' கணவனின் வயிறு முட்டும் போது அந்தப் பெண்ணின் வயிறு ஒட்டிவிடும். என்ன செய்ய? 'என்னைக்குத்தான் தாலி அறுப்பானோ' என அங்கலாய்ப்பதைத் தவிர வேறெதையும் இச்சமூகம் பெண்களுக்கு வழங்கவில்லையே! 

பெட்டிக்கடையை நம்பினால் இனி பட்டினி கிடந்தே சாக வேண்டும் என எண்ணியதாலோ என்னவோ ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கோழி இறைச்சி விற்பனை செய்வார். அதில் கிடைக்கும் வருவாயில் வயிற்றைக் கழுவி வந்தார். முதுமையில் முடங்கிப் போகும் போது உதவுமே எனக் கருதி ஒரு சிறு தொகையை சேமிக்கவும் செய்தார். 

திடீரென கணவன் சீக்காகிப் போனான். கொண்டவன் கொடியவன் என்றாலும் அவன் சாவதற்கு மனம் இடம் கொடுக்குமா என்ன? மருத்துவ மனைக்கு தன் சேமிப்புடன் கணவனோடு உள்ளே சென்றவர் வெறுங்கையோடு வெளியே வந்தார். இவர் வீடு வந்து சேர்வதற்குள் கணவனும் “வீடு பேறு“ அடைந்து விட்டான்.

எல்லாம் முடிந்தது. இதுவரை எட்டிப் பார்க்காத உறவுகள் இறுதிச் சடங்கிற்கு வந்தார்கள். இதைச் செய்,  அதைச் செய் என சடங்குகளுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அங்கிக்காரர்களும் வந்தார்கள். 'மூன்றாவதாய் இவர் மீண்டும்  உயிர்த்தெழுவார்' என ஜெபித்தார்கள். 

'மூனாவதா பொறந்து இவன் எவ தாலிய அறுக்கப் போறானோ' என தன் மனதில் ஓடிய எண்ணத்தை அடக்கிக் கொண்டே வழிந்த கண்ணீரை முந்தானையால் ஒத்திக்கொண்டாள்.

Monday, 5 December 2011

நம்புங்கள்! முதலாளித்துவம் இன்னமும் வாழும்!

அயர்லாந்து நாட்டின் சின்னஞ் சிறிய நகரம் அது. மழையும் ஈரமும் கலந்த காலைப் பொழுது. தெருக்களில் மழை நீர் வழிந்தோடுவதால் வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.  மக்கள் வாழ்க்கையும்தான். அனைவரும் கடனில் மூழ்கியுள்ளனர். கடன் வாங்கித்தான் காலத்தை ஓட்டுகிறார்கள்.

அந்த காலைப் பொழுதில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த ஜெர்மானியர் ஒருவர் ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்துகிறார். அயர்லாந்தின் அழகை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணி அவர். ஓட்டலுக்குள் சென்று 100 ஈரோவை ஓட்டல் முதலாளியின் மேசை மீது வைத்துவிட்டு "இன்று இரவு இங்கு தங்க வேண்டும். மாடியில் ஒரு வசதியான அறை வேண்டும், அதற்கு முன்பு அறையை பார்வையிட வேண்டும்" என்கிறார். ஓட்டல் முதலாளி சில சாவிகளைக் கொடுக்க, அதை பெற்றுக் கொண்ட பயணி மாடிக்குச் செல்கிறார். 100 ஈரோவை லபக்கென்று எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிய முதலாளி ஓட்டலுக்குப் பக்கத்திலேயே இருந்த இறைச்சிக் கடைக்காரரிடம் சென்று தனது கடனை அடைக்கிறார்.

கைக்கு வந்த 100 ஈரோவை எடுத்துக் கொண்டு தெரு முனைக்கு ஓடுகிறார் இறைச்சிக் கடைக்கார்.  பன்றி வளர்க்கும் விவசாயியிடம் 100 ஈரோவைக் கொடுத்து தனது கடனை அடைக்கிறார்.

100 ஈரோவை பெற்றுக் கொண்ட விவசாயி பன்றிக்கு வாங்கிய தீவனக் கடனை அடைக்க விரைகிறார். 100 ஈரோவை தீவனக் கடைக்காரரிடம் கொடுத்து கடனை முடிக்கிறார்.

அத்தொகையைப் பெற்றுக் கொண்ட தீவன கடைக்காரர் கேளிக்கையும் விருந்தும் ஒருங்கே கிடைக்கும் பப்புக்கு விரைகிறார். ஏற்கனவே குடித்துத் தீர்த்த மதுக்கடனுக்காக 100 ஈரோவை பப் உரிமையாளரிடம் சேர்க்கிறார்.

தனது பப் சென்ட்டரில் வழக்கமாக மது அருந்தும் விலை மாதுவின் கைகளில் அந்த 100 ஈரோவும் நழுவுகிறது. விலை மாதுவின் தொழிலிலும் நெருக்கடி என்பதால் இப்பொழுதெல்லாம் அவர் தாராள மனதுடன் தனது சேவையை கடனாளிகளுக்கும் விரிவு படுத்தி வருபவர்.

தனது கைகளில் நழுவிய 100 ஈரோவை எடுத்துக் கொண்ட விலை மாது ஓட்டலுக்கு விரைகிறார். ஓட்டல் முதலாளியிடம் அதைக் கொடுத்து தனது அறை வாடகை பாக்கியை அடைக்கிறார்.

வசதி படைத்த ஜெர்மன் பயணி சந்தேகப்படக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அந்த 100 ஈரோவை பழையபடி மேசை மீது வைத்துவிடுகிறார் ஓட்டல் முதலாளி. அந்த நேரத்தில் படிகளில் இறங்கி கீழே வந்த ஜெர்மன் பயணி அந்த 100 ஈரோவை எடுத்துக் கொண்டு "ஓட்டல் அறைகள் திருப்திப் படும்படியாக இல்லை" என்று கூறிவிட்டு நகரை விட்டு வெளியேறுகிறார்.

இங்கே யாரும் எதையும் உற்பத்தி செய்யவும் இல்லை. யாரும் எதையும் சம்பாதிக்கவும் இல்லை.

எனினும் ஒட்டு மொத்த நகரமே இப்போது கடனிலிருந்து விடுபட்டு விட்டதால் இனிமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல விழைகிறது அந்நகரம்.

எனவே, சீமான்களே! சீமாட்டிகளே!

ஆம்.நம்புங்கள்!குப்புற வீழ்ந்தாலும் ஐரோப்பிய மீசையில் மண் ஒட்டவில்லை. இப்படி முதலாளித்துவம் இன்னமும் வாழும்!

Sunday, 4 December 2011

மீண்டும் உச்சத்தில் மல்லிகைப் பூ!

"மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு ஒரு இடுகையை வெளியிட்டேன். முதலில் வினவு தளத்தில் வெளியானது. அதன் பிறகு எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ! என்ற தலைப்பில் ஊரான் வலைப் பூவில் மீள் பதிவு செய்யப்பட்டது.

 ஒரு கிலோ மல்லைகைப் பூவின் நேற்றைய விலை ரூபாய் 1500, இன்றைய விலை ரூ 2000. அப்படியானால் ஒரு முழம் என்ன விலை இருக்கும்? எப்படி கணக்குப் போடுவது? ஒன்றும் விளங்கவில்லை. சரி, இந்த விலை விற்கிறதே அவ்வளவு சாசு கொடுத்து வாங்குவார்களா என ஒரு கணம் யோசித்தேன். பலரின் கூந்தலைப் பார்த்து திகைத்துப் போனேன். இன்று திருமண நாள் என்பதால் திருமணங்களும் புது மனை புகு விழாக்களும் அதிகமாக நடைபெற்றன. மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறதே என்பதற்காக யாரும் கூந்தலை காயப் போடவில்லை. கொண்டையில் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கத்தான் செய்தன. 

தலையில் சூடிய ஆறு மணி நேரத்திற்குள் வாடி வதங்கி குப்பைக்குச் செல்லும் மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறது. என்னக் கொடுமை சார் இது? 

ஒரு பொருளின் பயன்பாடு பற்றியோ அதன் அத்தியாவசியம் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. உற்பத்தியாளனுக்கும் விற்பனையாளனுக்கும் கை நிறை காசு சேர்ந்தால் சரி. அவன் ஜோலி முடிந்தது.

ஒன்றை நாம் செய்யும் போது அதுவே நம் வழக்கத்திற்கொன்றானதாக மாறிவிட்டால் அதை யாரும் சொல்லாமலேயே செய்வோம். அப்படித்தான் பூச் சூடிக் கொள்வதும். அழகுக்கும் பெண்மைத்தன்மைக்கும் பூ அவசியமானது என பெண்கள் மீது அவர்கள் அறியாமலேயே ஒரு கருத்தியல் திணிக்கப்பட்டுள்ளதால் பெண்ணானவள் பூ அவசியமாதா இல்லையா என்பதைப் பற்றி அறியாமலேயே ஒரு வக்கமான செயலாக பூச்சூடிக் கொள்வதை செய்து வருகிறாள். வழக்கமாகிவிட்ட ஒரு செயலை அதற்கான செலவு அதிகம் என்பதால் அவ்வளவு இலகுவில் அதை விட்டுவிடுவதில்லை. வேண்டுமானால் குறைத்துக் கொள்வார்களே ஒழிய வழக்கத்தைக் கைவிட மாட்டார்கள். 

குடிப்பழக்கம் ஒருவனின் வழக்கமான செயலாக மாறிவிட்டபிறகு ஒரு குவார்ட்டர் ஆயிரம் ரூபாய் என்பதற்காக குடிப்பதை விட்டுவிடுவானா என்ன? குவார்ட்டரை வேண்டுமானால் கட்டிங்காக குறைத்துக் கொள்வானே ஒழிய குடியை விட்டுவிட மாட்டான்.

Friday, 2 December 2011

மழை: அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும்!


இரண்டாவது முறையாக தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை தற்போது ஓய்ந்துள்ளது. வெளுத்துக் கட்டும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பினவோ இல்லையோ தொலைக்காட்சிக்காரர்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. எழவு வீட்டிலும் காசு பார்ப்பவர்கள் இந்த மழையை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? 

முன்பு நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்ட போதும் சரி; தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்கள் உடமைகளை இழந்த மக்களை பேட்டி காணும் போதும் சரி இத்தகைய இழப்பிற்கு யார் பொறுப்பு என்பதை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு மக்களின் அவலங்களைக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இயற்கையின் சீற்றமா இல்லை அரசின் குற்றமா?

போதிய நீராதாரம் இல்லாத காரணத்தாலும், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமையாலும்  இனி கிராமங்களில் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்பதனால் கிராம மக்கள் அணி அணியாக நகரங்களுக்குப் படை எடுக்கிறார்கள். கட்டின துணியோடு நகரங்களைச் சென்றடையும் இம்மக்கள் எங்கே தங்குவார்கள்? இவர்களுக்கு முன்பே நகரங்களுக்கு வந்து கிடைக்கின்ற வேலைகளைச் செய்து அவற்றில் கிடைத்த கொஞ்சம் காசில் வயிற்றிற்குப் போக மீதியை மிச்சப்படுத்தி ஏரி ஓரங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் குடிசைகளை அமைத்துக் கொண்டு வசிக்கும் தங்கள் தூரத்து உறவினர்கள் அல்லது நண்பர்களின் வசிப்பிடங்களில் புதிதாய் வந்தவர்கள் சில நாட்கள் தங்குகிறார்கள். நான்கு பேர் உட்காரவே முடியாத இத்தகைய ‘வசிப்பிடங்களில்’ எத்தனை நாட்களுக்குத்தான் தங்க முடியும்? பிறகு இவர்களும் அதே பாணியில் ‘வசிப்பிடங்களை’ அமைத்துக் கொள்கின்றனர்.

இப்படிக் குடிசைகளை அமைத்துக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் இதுவும் சாத்தியம். அதன் பிறகு மின் இணைப்பும், குடும்ப அட்டைகளும், வாக்காளர் அட்டைகளும் கிடைக்க வேண்டுமா? அதற்காகத்தானே அரிப்பெடுத்த கைகளோடு அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரூபாய்த் தாள்கள் அவர்களின் கைகளை உரசினால் போதும் அவர்களின் அரிப்பும் நின்று போகும். மக்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைத்துவிடும். வாழ்வதற்குத் தேவையான சட்டப்படியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகக் கருதிதான் குடிசைவாசிகள் அவ்விடத்தில் காலத்தைத் தள்ளுகிறார்கள்.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆசியோடு ஆறுகளிலும் ஏரிகளிலும் வீடுகள் புகுந்து விடுகின்றன. பிறகு மழைக் காலங்களில் இத்தகைய வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இது மழையைப் பொய்வித்த ‘வருண பகவானின்’ குற்றமா? இல்லை ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து ‘வீடுகுள்’ கட்டிக்கொண்டது ஏழைகளின் குற்றமா? அல்லது பிழைப்பு தேடி நகரங்களில் குடியேறுபவர்களுக்கு முறையான வசிப்பிடங்களை ஏற்பாடு செய்யாமல் ஆறுகளிலும் ஏரிகளிலும் குடிசைகள் அமைத்துக் கொள்வதற்கு தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டு அவற்றிற்கு துணைபோகும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குற்றமா?

ஒரு நாள் பிழைப்பா இல்லை ஓர் ஆண்டு வாழ்வா?

“வேலைக்குச் செல்ல முடியவில்லை,  பால்காரன், பேப்பர்காரன் வரவில்லை,  போக்குவரத்து நெரிசல், ரொம்ப கஷ்டமா இருக்கு”  என மண்ணையே மிதிக்காத மகிழுந்துக்காரர்களின் (car) பேட்டியும், நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அங்கலாய்ப்பும்-சலிப்பும் நிறைந்த பேட்டிகள் மற்றொரு பக்கம். ஒரு நாள் செய்தித்தாள் படிக்கவில்லை என்றாலோ அல்லது டீ, காபி குடிக்கவில்லை என்றாலோ குடியா முழுகிப் போய்விடும்?

இவை எல்லாம் தொலைக் காட்சிக்காரனுக்கு முக்கியச் செயத்திகளாகி விடுகின்றன. “சைதாப்பேட்டையிலிருந்து எமது செய்தியாளர் என்ன கூறுகிறார் பார்ப்போம்” என இதில் ‘லைவ்’ வேற!

ஒரு நாள் மழைக்கு இன்றைய பொழப்பு போச்சே என்பது இவர்களின் கவலை. ஆனால் இந்த ஒரு நாள் மழை இல்லை என்றால் எம் உழவனுக்கு ஓர் ஆண்டல்லாவா பொழப்பு போகிறது!

“ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் கன மழையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதி; குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்கத் தடை,  பயணிகள் ஏமாற்றம்” என செய்தி ஒருபக்கம். “ரொம்ப ஏமாற்றமாயிடுச்சு. மழை விடாம பெய்யுது. அதனால “டூர் வந்தும் எதையும் எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு” என நடுத்தர மக்களின் பேட்டி மற்றொரு பக்கம்.

மழை என்னமோ ஒன்றுதான். நகர்ப்புறங்களில் வீடுகளை இழந்து பேட்டியளிக்கும் மக்களின் அவலம் ஒருபக்கம் ‘எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு’ என்கிற நடுத்தர வர்க்கத்தின் ‘கவலை’ மறுபக்கம் என இரு வேறு விளைவுகள்.

தமிழகத்தில் மழை அதிகமா?

”தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இதுவரை பெய்துள்ள மழையின் அளவு 450 மில்லிமீட்டர். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 430 மில்லிமீட்டர். மேலும் டிசம்பர் முழுக்க மழை பெய்ய வாய்ப்புகளுண்டு. இனி பெய்கின்ற மழை உபரிதான்” இப்படி பேட்டியளிக்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி இரமணன்.

வாலாஜா, ஆர்க்காடு, இராணிப்பேட்டை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரூர், செங்கம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, பகுதிகளை உள்ளடக்கிய வேலூர்-கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம்-திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழகத்தில்தான் உள்ளனவா என இரமணனின் பேட்டியை கேட்ட பிறகு எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டுவிட்டது. 27.11.2011 அன்று பருகூரில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மழையின் ‘பாதிப்பை’ பார்த்த பிறகுதான் இந்த இடுகையை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் மேற் கூறிய பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று வந்துள்ளேன்; சென்று வந்தவர்களைக் கேட்டுள்ளேன்; தொலைபேசி மூலம் விசாரித்து அறிந்துள்ளேன். இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் கால் பங்குகூட நிறையவில்லை; சில ஏரிகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை; சாலையோரக் குழிகளில் ‘குண்டி கழுவக்’ கூட தண்ணீரைக் காணோம். விதிவிலக்காக இப்பகுதிகளில் ஒரு சில ஏரிகள் நிரம்பிருக்கலாம்;  ஒரு சில சிற்றோடைகளில் சிறிதளவு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் இப்பகுதிகளில் இனியும் வலுவான மழை வரவில்லை என்றால் இந்த ஆண்டு குடி நீருக்கே பஞ்சம் வரும் என்பதே நிதர்சனம்.

“தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தும் வேலூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்”  என்று 28.11.2011  தேதியில் தினமணி நாளேடும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுதான் நிலைமை என்பதை மறுநாள் அதே தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆர்க்காட்டுக்காரனின் கனவு நனவாகுமா?

பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் தண்ணீரைப் பார்ப்பது அரிது.-ஆந்திராவிலிருந்து பொன்னை-திருவலம் வழியாக ஆர்க்காடு அருகே பாலாற்றில் இணையும் ஓர் ஆறுதான் பொன்னை ஆறு. தண்ணீர் ஓடினால்தானே ‘கலக்கும்’ ஆறு என சொல்ல முடியும். பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் வெள்ளப் பெருக்கை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரு முறைதான் இப்பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். கடைசியாகப் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. கல்லூரிச் சாலையில் குளு குளு அறைக்குள் அமர்ந்து கொண்டு ‘இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரியை விட மழை அதிகம்,  இனி பெய்வதெல்லாம் உபரிதான்’ என பேட்டியளிக்கும் இரமணனுக்கு, அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும் ஒன்றுதான் என்பது எப்படித் தெரியும்?

Monday, 21 November 2011

கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?

பொதுவாக வெளியூர் பயணம் சென்றால் அவ்வூர் எதற்குப் பெயர் பெற்றது என்பதை அறிந்து அதை வாங்கி வந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது இன்றும் நம் வழக்கத்தில் உள்ள ஒன்று. திருநெல்வேலி அல்வா என்றாலே 'பாவ்லோ' கூற்றுப்படி நாவில் ஊறும் எச்சிலை யாரால்தான் நிறுத்தமுடியும்? 

திருவில்லிபுத்தூர் பால்கோவா, நாக்பூர் சோன்பப்டி, லோனேவாலா கடலை மிட்டாய், கிருஷ்ணன் கோவில் கொய்யா, ஆக்ரா பூசனிக்காய் அல்வா, நாக்பூர் ஆரஞ்சு, திண்டுக்கல் பன்னீர் திராட்சை, சந்தவாசல் வாழைப்பழம், திருப்பதி லட்டு, சேலம் மாம்பழம், பன்ருட்டி பலா, மணப்பாறை முருக்கு, ஊட்டி வறிக்கி, அய்தராபாத் பேப்பர் ஸ்வீட், சிம்லா ஆப்பிள், கொல்லிமலை அண்ணாசி, கொடைக்கானல் பேரிக்காய் என இவற்றிற்கு இவ்வூர்கள் புகழ் பெற்றுள்ளதால் அவ்வூர்களுக்குச் சென்று வெறுங்கையோடு திரும்ப முடியுமா? என்னப்பா திருநெல்வேலிக்குப் போயிட்டு அல்வா வாங்காம சும்மா வந்திட்டியே என உறவினர்களும் நண்பர்களும் கேட்காமல் விட மாட்டார்கள். 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன் முறையாக இராசபாளையம் சென்றிருந்தேன். இராசபாளையம் நாய் புகழ் பெற்றது என்பதால் அதையா வாங்கி வரமுடியும்? பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு இனிப்புக் கடையைப் பார்த்தேன். விறகு மிலார்களைப் போல குவிக்கப்படிருந்த காராசேவும், ஆள் உயரத்துக்கு சுருட்டி அடுக்கப்பட்டிருந்த வெள்ளை நிற தேன்மிட்டாயும் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த ஊரின் சிறப்பு என்னவென்று வினவினேன். தேன்மிட்டாய் என்றார்கள்.  விலையோ மிகக் குறைவு. ஒரு கிலோ முப்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஒரு கிலோ வேண்டும் என்றேன். உடனே பெரிய பனை ஓலைக் கூடை ஒன்றை எடுத்தார்கள். எடை போட்டபிறகு தேன்மிட்டாயை பக்குவமாய் கூடைக்குள் அடைத்தார்கள். என் கையிலோ கூடுதலாக இன்னுமொரு சுமை என்றாலும் புதிதாய் ஒரு தின்பண்டத்தை வாங்கிச் செல்கிற மகிழ்ச்சியில் அது சுமையாகத் தெரியவில்லை. கூடவே சொஞ்சம் மிலார்களையும், தேன் குழலும் வாங்கிக் கொண்டேன். திருச்சிக்குத் திரும்பி வரும் போது, வரும் வழியில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவையும், கிருஷ்ணன் கோவில் கொய்யாவையும் வாங்கிக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. இருக்காதா பின்ன! ஒரே நேரத்தில் மூன்று சிறப்புகளையும் வாங்கிவிட்டேனே!

'பாலிதின் கேரி பேக்'

அப்படி வாங்கிய பொருள் எதற்கும் அன்று 'கேரிபேக்' இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு. ஆனால் இன்று ஐந்து ரூபாய்க்கு 'ஐஸ்கிரீம்' வாங்கினாலும் அதற்கும் ஒரு பாலிதின் கேரி பேக். இப்படி எதற்கெடுத்தாலும் கேரிபேக் என எங்கும் குவிந்துவிட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் கேட்டை விளக்க வேண்டிய அவசியமில்லை. அன்று தேன்மிட்டாய் ஒழுகி துணியெல்லாம் பாழாகிவிடுமோ என அச்சப்பட்டேன். அது உடனடி பாதிப்பு என்றாலும் துணியை துவைத்த பிறகு பாதிப்புக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. ஆனால் இன்று பாலிதின் கேரிபேக்குகளில் அடைத்துக் கொடுப்பதால் உடனடி பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்பாக பொருளை எடுத்து வருகிறோம். ஆனால் பாலிதின் கேரிபேக்குகளால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு மனித குலத்திற்கே சவாலாய் உருவெடுத்து வருகிறது. அதனால்தான் கேரிபேக்குகளை தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கிறோம்.

பல்வேறு நச்சு ஆலைகளால் பலருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைத்தன-கிடைக்கின்றன. ஆனால் அவற்றால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு சுற்று வட்டாரத்தையே வாழ இலாயக்கற்றதாக மாற்றிவருகிறது. பிரிட்ஜ் உள்ளிட்ட சில சொகுசுப் பொருட்கள் இன்று நமக்கு உடனடி சுகத்தை அளிக்கின்ற அதேவேளையில் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதால் அவற்றைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் என்கிறோம். ஏன்? ஓசோன் ஓட்டையாகிவிட்டால் எதிர்காலத்தில் மனித இனம் வாழ இலாயக்கற்றதாக இப்புவி மாறி விடும் என்பதால் புவி வெப்பமயமாவதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.

'மம்மி' நாயகன் வருவானா?

உடனடித் தேவையா அல்லது எதிர்காலப் பாதுகாப்பா? எது முதன்மையானது என்று பரிசீலித்தால் மனித குலத்தைக் காக்க வேண்டும் எனில் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானதே. இப்படித்தானே கூடங்குளத்தையும் பார்க்க வேண்டும்.

மின்சாரம் நமக்குத் தேவைதான்.மறுப்பதற்கில்லை.அதற்கு மாற்று வழிகளைத்தான் தேட வேண்டும். ஒரு முப்பது ஆண்டு காலத்திற்கோ அல்லது நாற்பதாண்டு காலத்திற்கோ கூடங்குளம் அணு உலை மின்சாரத்தைக் கொடுக்கும். அதுவரை பூகம்பமோ அல்லது சுனாமியோ வராது என்றே நம்புவோம். ஆனால் நாற்பதாண்டுகள் கழித்து ஆலையில் வேலைசெய்த ஊழியர்களும் அதிகாரிகளும் இலட்சங்களைச் சம்பாதித்துக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்று 'செட்டில்' ஆகிவிடுவார்கள்.  ஆனால் கூடங்குளம் மக்கள் எங்கே செல்வார்கள்?

புதைக்கப்பட்ட மனிதன் ஒருமுறையோ அல்லது அதிகப்படியாக மூன்று முறையோதான் 'உயிர்த்தெழுவான்'. இது சமய நம்பிக்கை. கூடங்குளத்தில் நியூட்ரான் என்கிற எமனை இன்று வேண்டுமானால் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கலாம் அல்லது எமனை அடக்க மாடரேட்டர்களை ஏவலாம். ஆனால் புதைக்கப்ட்ட பிறகு ஒரு முறையல்ல, ஓராயிரம் முறையல்ல, ஒன்று-இரண்டாய்,இரண்டு-நான்காய்,நான்கு-பதினாறாய், பதினாறு-இருநூற்று ஐம்பத்தாறாய்,இருநூற்று ஐம்பத்தாறு-அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்று முப்பத்தாறாய்.... எனப் பல்கிப் பெருகி கோடி கோடியாய் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை விழுங்க அன்று மாடரேட்டர்கள் இருக்கமாட்டார்கள். இத்துக் கொண்டு வரும் சுவற்றின் ஓட்டைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறப் போகும் நியூட்ரான் எமன்களை வெட்டி வீச 'மம்மி' நாயகன் வரப்போவதில்லை?

கோடிக்கணக்கில் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை எதிர்கொள்வதா அல்லது அவற்றைக் கருவிலேயே அழிப்பதா என்பதே கூடங்குளம் மக்களின் இன்றைய போராட்டம்.