Friday, 11 August 2023

நாங்குநேரியும் நடிகர் யோகி பாபுவும்!

நடிகர் யோகி பாபு கைகுலுக்கச் சென்ற போது 'கிட்ட வராதே!' என்று ஒரு அர்ச்சகர் நடந்து கொண்ட விதமும், நாங்குநேரியில் பள்ளி மாணவனை வீடு புகுந்து வெட்டிய இடைநிலைச் சாதியைச் சேர்ந்த சிறுவர்களின் செயலும் வடிவத்தில்தான் வேறு வேறானவை; ஆனால், தன்மையில் இரண்டிலும் தீண்டாமைதான் அடிப்படையானது.



ஏதோ, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில்தான் சாதி வெறி தலைவிரித்தாடுவது போலவும், மற்ற இடங்களில் எல்லாம் யாரும் சாதி, தீண்டாமை பார்ப்பதில்லை என்பது போலவும் ஒரு கருத்து நிலவுகிறது.

கிராமமோ நகரமோ ஒருவன் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு இந்துவாக வாழ்கின்ற போது அவன் உள்ளத்தில் தீண்டாமை தவிர்க்க முடியாமல் குடி கொண்டிருக்கும். சாதி மத சடங்கு சம்பிரதாயங்களை ஒரு இந்து தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் வரை,  இந்து மத உணர்வும், சாதி-தீண்டாமை உணர்வும் ஒருக்காலும் மறையாது. மாறாக மேற்கண்ட சடங்கு சம்பிரதாயங்களைத் தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல், அதிலிருந்து மாறுபட்டு வேறொரு பண்பாட்டு வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் போது சாதி, மத உணர்வும், தீண்டாமை உணர்வும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். எனது நடைமுறை அனுபவமும் அதுதான். இத்தகையோரை அரிதிலும் அரிதாகத்தான் காண முடியும்.

இந்து மதம் இருக்கும் வரை சாதியும் இருக்கும். சாதி இருக்கும் வரை தீண்டாமையும் இருக்கும். தீண்டாமை என்பது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு சாதியப் படிநிலையிலும் கடைபிடிக்கப்படுகிறது. அது கீழே செல்லச் செல்ல மிகவும் கொடூரமாக வெளிப்படுகிறது. இந்து மத-சாதி-தீண்டாமை ஒழிப்பு என்பது  அவ்வளவு எளிதானதல்ல; அது ஒரு நீண்ட நெடியப் போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் உள்ளடக்கியது. 

தீண்டாமை ஒரு சாதி இந்துவிடம் எவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது என்பது குறித்து 2011 இல் எழுதிய இரண்டு கட்டுரைகளையும் தொகுத்து உங்கள் முன் வைக்கிறேன்.

ஊரான்

*****

Wednesday, June 15, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 'இப்பவெல்லாம் படிச்சவங்கதான் அதிகமா சாதி பாக்கிறாங்க' என்றார் உடன் வந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். படித்தவர்,  நல்ல ஊதியத்துடன் நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்துபவர். பொருளாதாரத்தில் அவருக்கு குறையேதும் இல்லை. பிறகு ஏன் இத்தகைய சலிப்பு!

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து பள்ளிப் பருவத்தில் எனக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தது என்பதைவிட எப்பொழுதும் எனது நினைவில் நிலைத்திருப்பது.

என்னுடன் படித்த மாணவ நண்பன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் சைவப்பழக்கம் உள்ள உயர்சாதி என்பது பிறகு தெரிய வந்தது. பகல் நேரத்தில் அவனுடன் அவனது வீட்டிற்குச் சென்றேன். அவனது தாயார்தான் வீட்டில் இருந்தார். முன் பின் தெரியாத ஒருவனை தனது மகன் அழைத்து வந்துவிட்டால் அவனை உடனடியாக வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள். இது கிராமப்பகுதிகளில் அன்று நிலவிய நடைமுறை. ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் கொண்டு வந்து திண்ணையில் வைத்தார் அவனது தாயார். கையில் கொடுக்கமாட்டார்கள். தீட்டுப் பட்டுவிடுமாம். இருந்தாலும் வந்தவர்களுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுக்க மட்டும் மறுக்கமாட்டார்கள். கேட்கவில்லை என்றாலும் அவர்களாகவேத் தருவார்கள். இது தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்கிறார்கள் சிலர். ஆனால் இந்த சிறந்த விருந்தோம்பலில் இருக்கும் தீண்டாமை,தாகம் தீர்க்கும் தண்ணீரைக்கூட கொடிய நஞ்சாகவல்லவா மாற்றிவிடுகிறது. இது அந்தத் தண்ணீரைக் குடிப்பவனுக்குத்தான் உரைக்கும்; கொடுப்பவர்களுக்கு அது ஒரு நடைமுறைப் பண்பாடு. சமூகம் அப்படித்தான் மக்களை பயிற்றுவித்திருக்கிறது. எனது கருப்புத்தோலும் ஏழ்மையின் உருவத்தோற்றமும் நான் என்ன சாதியாயிருக்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த நிகழ்வு எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இது நடந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான நண்பர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என பலதரப்பட்ட மக்களோடு பழகியிருக்கிறேன், பழகி வருகிறேன். இதில் பட்டியலின மக்கள் முதல் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் என கசல தரப்பு மக்களும் அடங்குவர். படிக்கிற காலத்தில் பார்ப்பன மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் என்ன சாதி என்பதை கண்டுபிடிப்பது கடினம். சாதிகளைக் கடந்து சக மாணவன் என்கிற உணர்வு மட்டுமே நிலவியது. ஆண்டுக் கணக்கில் ஒரே அறையில் தங்கிய நண்பர்கள்கூட என்ன சாதி என்பதை தெரிந்து கொள்ளவில்லை. அவர்களும் காட்டிக்கொள்ளவில்லை. இதுதான் அன்றைய இளைஞர்களின் மனநிலை.

தீண்டாமை என்பது எத்துனை கொடியது என்பது சாதியப் படிநிலையில் தனக்கு மேலே உள்ள சாதிக்காரர்களால் ஒருமுறையேனும் அனுபவப்பட்டவர்கள் மறக்க முடியாது. சாதியப் படிநிலையில் ஆகக் கடைகோடியாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே தீண்டாமைக் கொடுமையை அதிகம் அனுபவிப்பவர்கள்.
கிராமங்களில் பல்வேறு சாதிப் பிரிவு மக்களுக்கிடையில் கூலி விவசாயி, சிறு விவசாயி, பணக்கார விவசாயி என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்தாக வேண்டும். ஒருவரின் உழைப்பு இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது. சாதியால் வேறுபட்டாலும் உழைப்பால் ஒன்றிணைவதால் மனதில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இன்றி 'அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான்களாகப்' பழகுகிறார்கள்.  கிராமப்புற தீண்டாமை என்பது தனிப்பட்ட நபர்களின் எண்ணத்தினால் கடைபிடிக்கப்படுவதல்ல. மாறாக கிராமப்புற தீண்டாமை என்பது தான் சார்ந்த சாதிய சமூகத்திற்குப் பயந்து கடைபிடிக்கப்படும் ஒருவித 'சமூக ஒழுங்கு'. தனிநபர்கள் மனம் மாறினாலும் சமூகக் கட்டமைப்பை மீறி அவர்களால் நடந்து கொள்ள முடியாது. கோவில் திருவிழாக்கள் மற்றும் காதல் போன்ற விவகாரங்கள் தோன்றும் போது உயர் சாதி பணக்காரர்களாலும், நாட்டாமைகளாலும்தான் தங்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் தேவைகளுக்காக பெரும்பாலான சாதிக்கலவரங்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்படுகின்றன.

திருச்சி உறையூரில் குழுமாயி-குழுந்தலாயி அம்மன் திருவிழா மிகவும் பிரபலம். அறிவியல் வளர்ந்தாலும் கிராமங்கள் மாநகரங்களாக வளர்ச்சி பெற்றாலும், இதுபோன்னற திருவிழாக்களின் போது அவை குக்கிராமங்களாக மாறிவிடுவதும், மக்கள் காட்டுமிராண்டிக் காலத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொள்வதையும் காணமுடியும். ஆடுகளின் கழுத்தை அறுத்து அதிலிருந்து கொட்டும் இரத்தத்தை சளைக்காமல் குடித்து பிரமிப்பூட்டும் நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  இரத்தம் குடிப்பதில் மட்டுமல்ல சாதிய ஒடுக்குமுறையிலும் தாங்கள் காட்டுமிராண்டிகள்தான் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.

தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவிலில் இருக்கிறது குழுமாயி அம்மன் கோவில். அலங்கரிக்கப்ட்ட அம்மன் இங்கிருந்து புறப்பட்டு பறையர்கள் வாழும் காந்திபுரம் வழியாக உறையூர் செட்டித் தெருவை சென்றடையும். பூசைக்காக அம்மன் காந்திபுரத்தில் நிற்காது. படையாச்சி,வெள்ளாளர்,  செட்டியார், முத்தரையர் என பிற உயர்சாதி தெருக்களில் நாள் வாரியாக உலா வரும் அம்மன் அங்குள்ள மக்களுக்கு அலங்காரத்துடன் காட்சியளிப்பாள். உலா முடித்து மீண்டும் அம்மன் தில்லைநகருக்கு வரவேண்டும். அப்படி வரும் போது காந்திபுரத்திற்குள் நுழையும் முன்பு செட்டித் தெருவில் நிறுத்தப்படும். அம்மனின் மொத்த அலங்காரமும் அங்கே உருவப்பட்டு அம்மனமான அம்மன் மட்டுமே காந்திபுரத்திற்குள் நுழையும். உருவப்பட்ட இந்த அம்மனைத்தான் காந்திபுரம் பறையர்கள் பூசை செய்து வழிபட வேண்டும். இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தைவிட இது மிகக் கொடிய காட்டுமிராண்டித்தனம்.

இக்கொடுமையை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திபுரம் மக்கள் ம.க.இ.க தலைமையில் போராடினார்கள். அரசு சார்பில் ஒரு பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். அம்மனின் அலங்காரத்தை கலைக்காமல் அப்படியே அனுப்பி வையுங்கள் என்பதுதான் காந்திபுரம் மக்களின் கோரிக்கை. காலம் காலமாக உள்ள முறையை மாற்ற முடியாது என பிற உயர் சாதியினர் அனைவரும் ஒரே குரலில் பேசினர். காந்திபுரம் மக்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் கோவில் சாவியை நீந்களே வைத்துக் கொண்டு திருவிழாவையும் நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு அம்மனும் வேண்டாம்; திருவிழாவும் வேண்டாம் என பிற உயர் சாதியினர் அனைவரும் ஏகக் குரலில்  பேசினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றிணைவதில் மட்டும் பிற சாதிக்காரர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு.

காந்திபுரம் மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்ட போது கோவில் சாவியைக் கொடுத்துவிட்டார்கள் வன்னியர்கள், ரெட்டியார்கள் உள்ளிட்ட பிற உயர் சாதியினர். இன்றைய உத்தபுரங்கள் வரை இதுதான் நிலைமை.

படிக்காதவர்கள்தான் சாதி பார்க்கிறார்கள். படித்தவர்கள் யாரும் சாதி பார்ப்பதில்லை என்கின்றனர் சிலர்.

ஆனால் இன்று...... அரசு அலுவுலகங்களில்... பொதுத்துறை நிறுவனங்களில்.... நகரங்களில்.....

தொடரும்

ஊரான்

*****

Friday, June 17, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....

தொடர்ச்சி

எனது உடல் உருவத்தையும் கரிய நிறத்தையும் வைத்து இவன் நமது சாதிக்காரனாய் இருப்பானோ என கருதிக் கொண்டு வணக்கம் வைப்போரும் அல்லது இவன் அந்த சாதிக்காரனோ எனக் கருதி, கண்டு கொள்ளாமல் இருப்பதும் என இரு வேறு மக்கள் பிரிவினரை நான் அன்றாடம் பார்க்கிறேன். நான் யாருடைய ஆளு எனத் தெரியாமலேயே 'நம்ம ஆளுதான்' என எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபரைப் பற்றி என்னிடம் அறிய வைக்க ஒரு சிலர் முயலவும் செய்கிறார்கள். இரு வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் அச்சாதிப் பெண்களுக்கு வரன் பார்க்கவேறு சொல்வார்கள். மேற்கண்ட இரு தரப்பாருமே அவ்வாறு முயல்கிறார்கள்.  நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. நான் அவர்களின் சாதிக்காரனா என்பதே அவர்களுக்குக் கவலை.

இதுவரை வணக்கம் வைத்தவன் நான் அவனது சாதிக்காரன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வணக்கத்தை நிறுத்திவிடுகிறான். இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவன் நான் அவனது சாதிக்காரன் எனத் தெரிந்து கொண்ட பிறகு வணக்கம் வைக்கத் தொடங்குகிறான்.முன் பின் அறிமுகமே இல்லாதவன் தனது மகனுக்குத் திருமணம் என அழைப்பிதழ் கொடுக்கிறான். நான் குழம்பிப் போகிறேன். நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இதைப் பகிர்ந்த போது, தெரியவில்லை என்றாலும் தங்களது சாதிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுப்பது என முடிவெடுத்து அவ்வாறு ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் திட்டமிட்டு செய்வதாகச் சொன்னார்.

ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்தால் உறவினர்கள்கூட ஒரு சிலர் சில காரணங்களுக்காக கோபித்துக் கொண்டு வராமல் இருப்பார்கள். ஆனால் தனது அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்தாலும் அதில் தனது சாதிக்காரர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இதுதான் இன்று அலுவலகங்களில் நடுத்தர வர்க்க மக்களிடம் காணப்படும் சாதித் தீட்டு. படித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இச்சாதியத் தீட்டுதான் அலுவலக ஊழியர்களிடம் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பனர்களில் ஐயர், ஐயங்கார், பட்டர், தீட்சிதர் என்றும்; முதலியார்களில் செங்குந்தர், துளுவ வேளாளர், அகமுடையர் என்றும்; நாயுடுகளில் கவரா, கம்மவா என்றும்;  முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையர் என்றும் உட்பிரிவுகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் எந்த உட்சாதிப் பிரிவும் பிற உட்சாதிக்குள் குடும்ப உறவு எதையும் வைத்துக் கொள்வதில்லை.  அதாவது ஒரு செங்குந்த முதலியார் அகமுடைய முதலியாரிடம் சம்பந்தம் செந்து கொள்ள மாட்டார். குடும்ப உறவுகளில் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றாலும் அலுவலகங்களில் "நம்ம ஆளு" என்கிற கருத்தியலில் ஒன்றுபடுகிறார்கள்.

இவர்களுக்கிடையில் குடும்ப உறவு கிடையாது.பிறகு எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? படிநிலையில் தங்களின் சாதிக்கு மேலே இருக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினர் ஒன்றுபட்டால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் பார்ப்பனர்கள் எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? தங்களுக்கு மேலே யாரும் வந்துவிடக்கூடாது என்பது பார்ப்பனர்களின் கவலை. இதே கவலைதான் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் சில இடங்களில் ஆளுமைக்கு வந்துள்ளனர். இந்த ஆளுமையைத்தான் பிற உயர் சாதியினரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தனது வாய்ப்பை தாழ்த்தப்பட்டவன் தட்டிப் பறித்துவிட்டதாகத்தான் பிற உயர் சாதிக்காரன் நினைக்கிறான். அரசு வகுத்திருக்கிற கொள்கை மற்றும் சட்டங்களின்படிதான் ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியைப் பெறுகிறான்; வேலைவாய்ப்பைப் பெறுகிறான்; பதவி உயர்வு பெறுகிறான். இதற்கு சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்டவன் எப்படி பொறுப்பாக முடியும்? தனிப்பட்ட முறையில் அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது எந்த வகையில் நியாயமாகும்? அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாயப்பு என்பதை உத்தரவாதப் படுத்தாத அரசின் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது கோபம் கொள்வது கோழைத்தனமல்லவா!

பார்ப்பனர் உள்ளிட்ட பிற ஒடுக்கும் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வகையான சதி வேலைகளையும் அரங்கேற்றுகின்றனர். துறைத் தலைவராகவோ, நிறுவனத் தலைவராகவோ, தொழிற்சங்கத் தலைமைக்கோ தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிடக்கூடாது என்பதே இவர்களின் கவலை. உயர் சாதியினர் அனைவரும் ஒன்றாகக்கூடி தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவர்களுக்குள்ளேயே கிண்டலடித்துக் கொள்வார்கள். 'கவர்மெண்ட் ஐயர்' என்றும் 'கோட்டா' என்றும் 'மேற்படி' என்றும் பேசும் இவர்களது பேச்சு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவானது.

தரமான கல்வி கிடைக்காத கிராமப்புற மாணவனின் திறமை, நகர்ப்புற மாணவனைவிட குறைவாகத்தானே இருக்கும்.  இதை ஏற்றுக் கொள்ளும் உயர் சாதியினர் காலம் காலமாக கல்வி மறுக்கப்ட்ட தாழ்த்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் சற்றே திறமை குறைவானவர்களாக இருப்பது மட்டும் எப்படி குற்றமாகும்? இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட ஊழியர்களை 'ஜீரோ ' என்றும் 'வேஸ்ட்' என்றும் மிகக் கேவலமாகப் பேசுவது அன்றாடம் அலுவலகங்களில் நடக்கிறது.  இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் அவர்களை எட்டாமல் இல்லை.

இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை தண்டணையிலிருந்து காப்பாற்ற தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகளின் தயவை நாடுகின்றனர் சாதிச் சங்கத்தினர். என்ன இருந்தாலும் "நம்ம ஆளு" இல்லையா என சப்பைக் கட்டு கட்டுகின்றனர். தனது சாதிக்காரன் என்றால் தாராளவாதமும், பிற சாதிக்காரன் என்றால் கறார் தன்மையும் என்பது இன்று அலுவலகங்களில் காணக்கூடிய ஒரு கேடு கெட்ட நடைமுறை. இத்தகைய சாதிப் பற்றுதான் அலுவலகங்களில் நடைபெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு மிகப் பெரிய தடையாக நிற்கிறது. ஐம்பது ரூபாய் கையூட்டு வாங்கிய கடை நிலை ஊழியன் பிற சாதிக்காரன் என்றால் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனால் இலட்சக் கணக்கில் கையூட்டு பெற்ற தனது சாதிக்காரனை காப்பாற்றுவதற்கு சென்னை முதல் டெல்லி வரை படை எடுக்கிறார்கள்.

கற்பழிக்கும் காமுகனைக்கூட காப்பாற்ற சாதி எனும் ஆயுதத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

நீதியும் நியாமும் இந்கே சாதியச் சாக்கடையில் மூழ்கடிக்கப்படுகிறது. இந்தச் சாதியப் போர்வையை பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் முதல் தாழ்த்தப்பட்ட சாதியனர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். பிற உயர் சாதியினர் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத சாதியப் போர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் போது மட்டும் பிற சாதியனரின் கண்களுக்கு 'பவர்' கண்ணாடி போடாமலேயே தெரிகிறது. உயர்சாதிக்காரன் தவறு செய்யலாம், தாழ்ந்த சாதிக்காரன் செய்யக்கூடாது என்கிற நால்வர்ணக் கோட்பாடுதான் இங்கே கோலோச்சுகிறது. இப்படிச் சொல்வதனால் தாழ்த்தப்பட்டவர்களின் தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். தவறுகளைக் காண்பதில்கூட சாதியப் பார்வை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன். மற்றபடி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனபதே எனது கருத்தும்.

கிராமமோ நகரமோ தீண்டாமை இன்னும் அகலவில்லை. தன்மையில்தான் மாறுபடுகிறது.

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

முற்றும்

ஊரான்

Saturday, 5 August 2023

'அக்கா'வின் ஆட்டுக் குட்டி தலையாட்டுமா?

ஆடு வளர்த்தாவது பெரியாளாகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் அந்தத் தாடிக்காரன். சீமைக்(காய்)குட்டியே சிறந்த குட்டி என்று கணக்குப் போட்டு தேடிப் பிடித்து ஓட்டி வந்தான். இலை கிடைக்கும் இடமாய்ப் பார்த்து வளர்க்கத் தொடங்கினான். 

ஆடு குட்டியாய் இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாய்த்தானே இருக்கும். அதனால் போவோர் வருவோரெல்லாம் குட்டியை கொஞ்சத் தொடங்கினர். 

பலமுறை, பிடறியால் தன்மொகரையைப் பேர்த்தபோதும்,  பாவம் குட்டிதானே' என்று பொறுத்துக் கொண்டான் இலை கொடுத்தவன்.

கொங்கக்காவின் பராமரிப்பில் பக்குவமாய் வளர்ந்து வந்தது ஆட்டுக் குட்டி. குட்டிக்குப் பசி எடுக்கும் போதெல்லாம், அது வேலி தாண்டக்கூடத் தயங்கியதில்லை. அக்கம் பக்கம் சண்டைக்கு வந்த போதும், அவள் பொருமை காத்தாள். எப்படியாவது எதையாவது தின்று குட்டி பெருத்தால் சரி என்பது அவள் கணக்கு.

குட்டி இப்பொழுது கொழுகொழுவென வளர்ந்து கிடாவாகி விட்டது. கோவிலுக்கு நேர்ந்து விட்டாற்போல அது ஊரெங்கும் திரியத் தொடங்கியது. 

தூர விரட்ட நினைத்தோரை அது முன்னங்கால்களால் எட்டி உதைத்தும், குட்டைக் கொம்புகளால் முட்டப்பார்த்தும் துரத்த முனைந்தது. அது பாவ்லாதான் எனப் புரிந்து கொண்டோர் துரத்தி விரட்டினர்; பயந்து நடுங்கியோர் ஒதுங்கிச் சென்றனர்.

மாதங்கள் உருண்டோடின. ஆடியும் வந்தது. சீமையிலே மழை சரியாய்ப் பொழியாததால் ஆற்றிலும் நீர் பெருக்கெடுக்கவில்லை. இருந்தாலும் என்ன? கசியும் நீரிலாவது கடமையை முடிக்க வேண்டுமல்லவா?

இதோ பதினெட்டும் வந்து விட்டது. கிடாவைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, பூ மாலையிட்டு, வீதி வழியாக ஆற்றை நோக்கி ஓட்டலானாள் கொங்கக்கா. போகும் வழி நெடுக, மாலைநேர கறிவிருந்தை நினைத்து நாக்கில் எச்சில் ஊற, ஆட்டுக்குக் கட்டுக் கட்டாய் புல்' கொடுத்து குதூகலித்தது உடன் சென்ற கூட்டம்.

ஆறும் நெருங்கியது. அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் ஆட்டுக்காகக் காத்திருந்தது. பூஜைகள் கனஜோராய் நடக்கத் தொடங்கின. பூஜை முடிந்து மேடைநோக்கி ஆட்டை ஓட்டிச் சென்றனர். பூசாரி தீர்த்தச் செம்போடு மேடையை நெருங்கினான். 

உள்ளூர் கிடாவென்றால் தீர்த்தம் தலையில் பட்டவுடன் தலையாட்டிவிடும். ஆனால், இது சீமைக்காய் கிடாவாச்சே! தலையை ஆட்டுமா ஆட்டாதா என்ற பதட்டத்தில்  கொங்கக்கா!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Wednesday, 2 August 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "விவசாயிகளுக்கு விடிவே இல்லையா?" இறுதிப் பகுதி!

வேளாண்மையில் இன்று உழவுக்கும், சில இடங்களில் விதைப்புக்கும், அறுவடைக்கும் டிராக்டர்கள் மற்றும் எந்திரங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. மற்ற வேலைகள் பெரும்பாலும் இன்னமும் மனிதர்களைத்தான் நம்பி இருக்கின்றன. 

விவசாய வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் 100 நாள் வேலைக்குச் சென்று விடுவதால் விவசாயம் அழிந்து வருவதாக ஒரு பக்கம் அறியாமையில் சிலர் பிதற்றி வருகின்றனர். 100 நாள் வேலை வருவதற்கு முன்பு ஏதோ விவசாயம் செழித்தோங்கி இருந்தது போலவும் இவர்கள் கதைக்கின்றனர். ஓராண்டில் 100 நாள் போக மீதி 265 நாட்கள் மனித சக்தியை வேளாண்மையில் ஈடுபடுத்தினால் விவசாயம் வளர்ச்சி அடைந்து விடுமா?

தற்போதைய சூழலில் அரசு அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டே விவசாயம் செய்பவர்கள், ஆயிரக் கணக்கில் அரசிடமிருந்து மாதஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வேளாண்மையில் ஈடுபடுபவர்கள், கள்ளச்சாராயம்-கந்துவட்டி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு விவசாயம் செய்பவர்கள் என விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் தங்களுடைய வசதிகளை பெருக்கிக் கொள்ள முடியும். ஏனைய பெரும்பான்மை வேளாண் குடிகளின் வாழ்க்கையில் கடந்த ஆண்டுகளில் பாரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவுமில்லை; இனி நிகழப் போவதுமில்லை.

உலக அளவில் வேளாண் உற்பத்திக் கருவிகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் பங்கு-பாகப்பிரிவினைகளால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலங்கள் துண்டு துண்டாக விரவிக் கிடப்பதனால்  ஒரே நேரத்தில் ஒரே வகையான பயிர்களை நவீனக் கருவிகளைக் கொண்டு சாகுபடி செய்யவதில் சிரமங்கள் இருக்கின்றன. 

சிறுவீத உற்பத்தியிலிருந்து பெருவீத உற்பத்திக்கு வேளாண்மை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்குத் துண்டு துக்காணி நிலங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சமன்படுத்தி பெரும் பண்ணைகளாகக் கட்டமைக்கப்பட வேண்டும். உற்பத்திக் கருவிகள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேளாண்மை ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அதில் பணிபுரிபவர்கள் தொழிலாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இன்றைய கிராமப்புற குடியிருப்புகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் வரவு செலவு, இலாப-நட்டக் கணக்குப் பார்க்கப்படுவதைப் போல வேளாண்மையிலும் பார்க்கப்பட வேண்டும். இலாபம் இல்லாத வேளாண் பண்ணைகளை மேம்படுத்துவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். 

அனைத்து வகை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உள்ள சம்பள வேறுபாட்டைக் குறைத்து, கிட்டத்தட்ட உழைப்புக்கேற்ற ஊதியம் அல்லது சமமான ஊதியம் பெறுகின்ற வகையில் ஊதியக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 

இத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்கவும் அதற்கு இசைவான ஒரு அரசை நிறுவவும் முயற்சிப்பது ஒன்றுதான் வேளாண் குடிகளின் விடுதலைக்கு வழி வகுக்கும்.

*****

வாலாஜாவில் அடுத்த சில வேலைகள்  எனக்காகக் காத்திருந்ததால், நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனம்பழத்தை ருசி பார்க்கும் ஆசை என்னைத் துரத்தியதால், தொடர் சாரல் மழை காரணமாக இரண்டு நாள் முயற்சித்து பழத்தைச் சுடமுடியாமல்,  கடைசி நாளில் அது கைகூடியதால் ஒரே நேரத்தில் மூன்று கொட்டைகளைக் கொண்ட ஒரு முழு பழத்தையும் சுவைத்து முடித்தேன்.

இத்தனை நாள் இருந்தும் காட்டுக்குள் போகாமலா ஊர் திரும்புவது என உள்ளம் துள்ளியதால், கணுக்காலில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்திக் கொண்டு மாலை வேளையில் மெல்ல நடந்து காட்டுக்குள் சென்றேன். கலாக்காயைத் தேடிச் சென்ற போது, எலந்தை, சூரை, காரை, பூலாச் செடிகள் கண்ணில் பட்டன. பழங்கள் கிடைக்கும் பருவம் இது இல்லை என்றாலும் ஒரு பூலாச்செடியில் மட்டும் சில பழங்கள் பளிச்சிட்டன. இனிப்பு கசப்பும் புளிப்பும் துவர்ப்பும் கொண்ட சில பூலாப்பழங்களை வாயில் போட்டு அதக்கியவாறு காட்டுக்குள் நீண்ட தூரம் சென்றேன். கலாச்செடி மட்டும் கண்ணில் படவேயில்லை. ஆனால் கண்ணில் பட்டவையோ காலி பாட்டில்களே!

கண்ணாடிக் காடுகளை வளர்க்கும் அரசை நம்பினால் வேளாண் குடிகளுக்கு இனி விடுதலை இல்லை; வேறு வழியைத்தான் நாடு வேண்டும் என எண்ணியவாறு காட்டை விட்டு வெளியேறினேன்.

எட்டி நின்று பார்த்தால் கிராமங்கள் பசுமையாகத்தான் தெரியும். நெருங்கினால்தான் அதன் துயரம் புரியும். 

பச்சை வேர்க்கடலைகளை கொஞ்சம் பையிலே திணித்ததனால் முதுகுப் பாரம் சற்று கூடியதே ஒழிய, இந்த ஒரு வாரத்தில் மனசு லேசாகி உறவுகளிடம் விடைபெற்றுக் கொண்டு மறுநாள் ஊர் திரும்பினேன்.

முற்றும்.

ஊரான்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5



Tuesday, 1 August 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5

'கைய கால வெச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டியா?' என்று என்னைப் பார்த்து எனது தங்கை அடிக்கடி கேட்கும் கேள்வி இது. ஆம்! கிராமங்களுக்குச் சென்றால் நான் சும்மா இருப்பதில்லை. மண்வெட்டி, கடப்பாறை, கொடுவா என எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மண்டிக் கிடக்கும் புற்களையும், புதர்களையும், முச்செடிகளையும் அப்புறப்படுத்தி அழகு பார்ப்பவன்.

இந்த ஆறு நாட்களில், கொடுக்காப்புளி முட்செடிகளை வெட்டிய போது அதனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்த சீங்கை முட்கள் என் கைகளைப் பதம் பார்த்தன. மாமரத்துக்கடியில் மண்டிக் கிடந்த தேங்காய் மட்டைகளை அப்புறப்படுத்தி செருப்பணியாமல் சமன் செய்த போது மண்ணில் புதைந்து கிடந்த கவரிங் தோடு ஒன்றின் ஊசி முனை என் பாதத்தைத் துளைத்தது. தேவையற்ற கொளஞ்சிச் செடியின் கிளைகளை வெட்டிக் கழித்து அப்புறப்படுத்திய போது வலது தோள்பட்டை வலி கண்டது. மேட்டுக்கும் பள்ளத்திற்கும் இடையில் ஏறி இறங்கி வேலை செய்த போது வலது கணுக்காலில் ஏற்பட்ட உட்காயம் இன்னும் வலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இந்த நாட்களில் நான் கல்லக்கா பறித்தேன். முல்லை, கனகாம்பரம் எடுத்தேன். மண்டிக் கிடந்த காய்ந்த சரகுகளை அப்புறப்படுத்தி வாழை மரங்களை மிடுக்காக்கினேன். 

இவையெல்லாம் நான் சிறு வயதில் செய்த வேலைகள்தான் என்பதனால், வயது மூப்பால் களைப்பு தெரிந்தாலும் அலுப்புத் தட்டவில்லை. விவசாயிகளின் அன்றாட வேலைகளில் இவை ஒரு சிறு பகுதிதானே?. 

எனது தாத்தாவுக்கு ஊருக்குள் பழைய வீடு ஒன்றிருந்தது. நாள் பட்டதால் அது சிதைந்து சிதிலமடைந்து இன்று வெறும் மனையாய் காட்சியளிக்கிறது. அதனால் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கொல்லையில், 10×12 அளவில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட ஒரே அறை கொண்ட வீட்டில்தான் நீண்ட காலம் ஐந்து பேர் கொண்ட எனது தங்கை குடும்பம் வசித்து வந்தது. 

இளைய மகளுக்கு வரன் பார்க்க வேண்டி இருந்ததால் ஊருக்குள்ளே வாடகைக்கு வீடெடுத்து சிலகாலம் வசித்து வந்தனர். இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு இல்லை என்றால் வரன் கிடைப்பது கொம்புத்தேன் என்ற கதையாகிப் போனதனால், தாய்மாமன் மறைவிற்குப் பிறகு அவரும் அத்தையும் வசித்து வந்த வீட்டை, மகனுக்கு வரன் பார்ப்பதால் சற்றே புணரமைத்து அங்கே தற்போதைய வாசத்தைத் தொடர்கின்றனர். 

மூன்று படி ஏறி உள் நுழைந்தால் 6×10 அடி அளவில் ஒரு வெராண்டா. அதன் இடது மூளையில் ஒரு மேசை, அதற்கு மேலே ஒரு சிறிய ஸ்மார்ட் டிவி. வலது பக்க ஓரத்தில் சமையல் மேடை. மேசைக்கருகில் ஒரு ஒற்றைப் பாய் விரிக்கும் அளவு இருந்த இடம்தான் ஆறு நாட்களிலும் நான் படுத்துறங்கிய இடம். இந்த வெராண்டாவுக்கு ஒரு கிரில் கேட் மட்டுமே. எந்த நேரத்திலும் பூச்சி பொட்டு உள்நுழைய வாய்ப்புண்டு. 

அடுத்து, இரும்புக் கதவை பலம் கொண்டு திறந்து உள் சென்றால் வெளிச்சத்திற்கு பின்பக்கம் ஒற்றைச் சன்னலைக் கொண்ட 10×10' அறை. இடப்பக்க தெற்கு மூலையில் ஒரு இரும்புக் கட்டில், வடக்கு மூலையில் ஒரு பீரோ, போக கல்லக்கா உள்ளிட்ட வேளாண் பொருட்களை அடுக்கி வைக்க கொஞ்சம் இடம். இதுதான் இந்த வீட்டின் படுக்கை அறை மற்றும் பாதுகாப்பு அறை எல்லாமுமே! வெளிப்புற படியேறி மேலே சென்றால், பகலில் கல்லக்கா உள்ளிட்டவைகளைக் காய வைக்கவும், இரவில் மைத்துனர் படுத்து உறங்கவுமான மொட்டை மாடி.

அவசரத்துக்கு ஒதுங்க வேண்டுமானால் 
திறந்தவெளிதான். கதிரவன் மேலெழுந்து வருவதற்குள் காலைக் கடனை முடித்துக் கொள்வது சாலச் சிறந்தது. இல்லையேல் இடம் தேடித் திண்டாட வேண்டி வரும். உரிய இடம் ஏதும் கிட்டவில்லை என்றால் மாலை இருட்டும் வரைக் காத்திருக்க நேரிடும். 

20 ஆண்டுகளாக 'வெஸ்டர்ன் டாய்லெட்டி'லேயே வெளிக்குப் போயி பழகிப்போனதால் திறந்த வெளியில் குத்துக்காலிட்டு கடனைக் கழிப்பது எனக்குக் கடினம்தான் என்றாலும் கடனைக் கழித்து எழ கைத்தடியை நாடியதால் சமாளிக்க முடிந்தது. கடன் முடித்து குதம் கழுவ பிளெக்சிபிள் ஹோசுடன் பிளஷர் கிடையாது.  நெல் வயலில் தேங்கி நிற்கும் சேறு கலந்த கழனி நீரையோ, பாசன நீர்தொட்டியில் மீதமிருக்கும் நீரையோதான் நாட வேண்டும். 

உடலும் மனமும் பேசும் மொழி ஒன்று என்பார்கள் ஹோமியோபதியில். இத்தகைய சூழலில் வாழ்வதற்கு மனம் வெறுத்தால் மலம்கூட கட்டிப் போகும். ஆனால், இதுதான் வாழ்க்கை என்று மனம் ஏற்றுக் கொண்டால் எல்லாமே இயல்பாய் கடந்து போகும்.

தாளிட்டுக் குளிக்க இங்கே தனி அறை இல்லை, வாழை மரத்தடிதான். வயதுப் பெண்கள் வெட்டவெளியில் குளிப்பதென்பது சங்கடமாய் இருந்தாலும் இருட்டிய பிறகே பெரும்பாலும் குளியல். காலை முதல் மாலை வரை ஓய்வின்றி உழைப்பவர்க்கு உகந்த நேரமும் இதுதான். உடை கலைந்து குளிக்கும் போதும், பின் உடைமாற்றும் போது நிகழும் கணநேர ஆடை விலகல்கள்கூட இங்கே ஆபாசமாய்த் தெரிவதில்லை. 

காலையில் கஞ்சியோ, கூழோ இருப்பதை குடித்துவிட்டு, பிற்பகலில் முழு உணவு, பின் ஏழு மணிக்கெல்லாம் இரவு நேர உணவை முடித்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் உறங்கினால்தான் மறுநாள் அதிகாலை எழுந்து பூப்பறிக்க முடியும். நேரம் தொலைப்பவருக்கு மட்டுமே தொலைக்காட்சித் தொடர்கள்; உழைப்பவருக்கு வாழ்க்கையே ஒரு தொடர்தானே!

உழைப்பினூடே அன்றாடம் பூரான்களையும் சொய்யான்களையும்,  பாம்புகளையும் பல்லிகளையும், தேரைகளையும் தவளைகளையும், பூச்சிப் புழுக்களையும் வண்டுகளையும், தேளையும் நட்டுவாகத் தெறிக்கிகளையும், மரவட்டைகளையும் பிற எண்ணற்ற பூச்சிகளையும் எதிர்கொள்ளலாமல் கிராம வாழ்க்கையைக் கடந்து செல்ல முடியாது.

தொடரும்

ஊரான்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உயிரைப் பணயம் கேட்கும் முல்லைகள்!" தொடர் - 4

இது முல்லை அரும்புகள் முகிழ்க்கும் காலம். 
கணவன் மனைவி இருவரும் அதிகாலை மூன்று மணிக்கு தலைச்சுடரொளியை (head torch light) மாட்டிக் கொண்டு ஐந்து செண்ட் அளவுள்ள முல்லைத் தோட்டத்திற்குள் நுழைகிறார்கள். தலைச்சுடரொளியின் சிறு ஒளிவட்டத்தில் வெண்மையாய் உள்ள முல்லை அரும்புகளை மட்டும் மென்மையாய்ப் பறித்து மடியிலே போடுகிறார்கள். 

கடலைச் செடியை பிடுங்கும் போதும், கடலையைப் பறிக்கும் போதும் கரடு முரடாய் இயங்கும் விரல்கள், முல்லையைத் தொட்ட உடன் மென்மையாகி விடுகின்றன. இல்லையேல் அரும்புகள் நைந்து போகுமென காய்த்துப் போன விரல்கள்கூட உணர்கின்றனவே!? கனகாம்பரத்தைப் பறிக்கும் போது மேலும் மேலும் மென்மை தேவை. 

பார்வை சற்றே பிசகினால், மறுநாள் பறிக்க வேண்டிய முகிழ்க்கா அரும்புகளும் கையில் சிக்கிவிடும். என்னதான் உற்று உற்றுப் பார்த்து பறித்தாலும், சில முகிழ்த்த மொட்டுக்கள் இலைகளுக்கிடையில் ஒளிந்து கொள்ளும். அவைகள் அடுத்த நாள் பூத்துக் குலுங்கி வீணாய்ப் போகும். 

சில சமயம் கொடிய வஞ்சகர்கள்கட தோட்டத்திற்குள் வாசம் செய்ய முயல்வர். வஞ்சகர் இருக்கும் பக்கம் நீங்கள் காலடி எடுத்து வைத்தால் அவைகள் 'உஸ்! உஸ்!' என ஒலி எழுப்பும். எச்சரிக்கையாய் இல்லையெனில் அவை உங்களை போட்டுத் தள்ளும். 

குரல் எழுப்பி, கும்மிருட்டில் வயல் வரப்புகளுக்கிடையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே, கொடிய நாகனின் நஞ்சு உங்கள் கதையை முடித்திருக்கும். வசீகரிக்கும் வாசமும் வெண்மையும் நிறைந்த முல்லைக்குப் பின்னே உள்ள ஆபத்து யாருக்குத் தெரியும்? உயிரைப் பணயம் வைத்தல்லவா மங்கையரை மகிழ்விக்கிறான் விவசாயி.

இளைய மகளின் இரண்டு வயதுக் குழந்தையை வீட்டில் தூங்கவைத்துவிட்டு, கதவை சரியாகத் தாழிடாமல், தாயும் தாத்தா பாட்டியும் அதிகாலையில் தோட்டத்துக்குச் சென்றுவிட, கண்விழித்தக் குழந்தை இவர்களைத் தேடி தோட்டத்தை நோக்கிச் சென்று 'அம்மா' என குரல்  எழுப்ப, அதிர்ந்து போய் குழந்தையை அரவணத்தச் செய்தியை அவர்கள் சொல்லும் போது யாரால்தான் பதறாமல் இருக்க முடியும்? வரும் வழியில் புற்களும் புதர்களும் நிறைந்த வாய்க்கா வரப்புகளில் ஏதேனும் தீண்டியிருந்தால், வரப்பை ஒட்டி மதிர்ச்சுவரில்லா ஆழ்கிணற்றில் இடரி விழுந்திருந்தால்....? அப்பப்பா, நினைத்தாலே நமக்கே நெஞ்சம் பதறுகிறதே! பெற்ற தாய் என்ன பாடுபட்டிருப்பாள்?

கீழ் வானம் சிவக்கும் வேளையில்  மொட்டுக்கள் பறிப்பதை நிறுத்திவிட்டு பசு மாட்டைத் தட்டிக் கொடுத்து பால் கறக்க வேண்டும். கறந்த பாலை பால்காரிடம் சேர்த்து விட்டு மீண்டும் தோட்டத்திற்குச் சென்று மீதமுள்ள மொட்டுக்களை பறித்து வந்து, எடை போட்டு ஏழு மணிக்கெல்லாம் காட்டோர கூட்ரோட்டுக்கு ஓடோடிச் சென்று முல்லைப் பாக்கெட்டை பேருந்தில் சேர்க்க வேண்டும். அது கோணாகுட்டை கேட்டில் உள்ள இடைத்தரகரிடம் சென்று, பிறகு  அங்கிருந்து செங்கம் அல்லது திருவண்ணாமலை நகரில் உள்ள மொத்த பூ வியாபாரிகளைச் சென்றடையும். இறுதியாக அங்கே எடை பார்த்து பின் மாதம் கழித்து கணக்குப் பார்த்து காசு கொடுப்பார்கள். 

நிலம் உழுது, குழி தோண்டி, எருவிட்டு, செடி நட்டு, உரமிட்டு, நீர் பாய்ச்சி, களை எடுத்து, கவ்வாத்து பண்ணி, வறட்சி என்றால் குடம் சுமந்து நீர் ஊற்றி, பெருமழை என்றால் நீர் வடித்து பாதுகாத்து வளர்த்த முல்லையல்லவா? முல்லை முகிழ்த்தலுக்குள் எத்தனை உழைப்பு? உழைப்புக்கான பலன் கிடைக்கும் என  எல்லாவற்றையும் நம்பித்தான் விவசாயி உழைத்துக் கொண்டிருக்கிறான்.


குடும்பமே மூன்று மணி நேரம் இடுப்பொடிய, கால்கடுக்க நின்று பறித்தாலும், இரண்டு கிலோவைத் தாண்டுவதே சிரமம். வெளிச்சந்தையில் ஒரு கிலோ ஐநூறோ ஆயிரமோ விற்றாலும் மொத்த வியாபாரிகள் வைப்பதே விலை. இதில் விவசாயிக்கு நூறு இருநூறு கிடைத்தாலே பெரிது. கூலிக்கு ஆள் வைத்து பறித்தால் கிலோவுக்கு ரூபாய் ஐம்பதைக் கூலியாகத் தரவேண்டுமே என்பதால் இங்கேயும் குடும்பமே உழைக்கிறது, ஏதாச்சும் மிச்சப்படுத்த முடியாதா என்று! 

பூக்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள் விலைவிக்கின்ற பொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிற உரிமையும் அதை சந்தைப்படுத்துகிற வசதியும் கிடைக்காத வரை இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும் கொழுப்பார்களே ஒழிய விவசாயிக்கு என்ன கிடைக்கப் போகிறது? 'உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது' என்று அதனால்தான் அன்றே சொல்லி வைத்தானோ?

பூ உற்பத்தி ஒன்றும் மனிதனுக்கு அத்தியாவசியமானதல்ல. அதில் செலுத்தப்படும் உழைப்பு அர்த்தமற்ற உழைப்புதான். அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்காத வரை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியாது என்பான் மக்சிம் கார்க்கி. என்ன செய்ய? இங்கு, இன்று, இந்தப் பூக்களாவது பாடுபடும் விவசாயப் பாட்டாளிகளின் அடிவயிற்றை ஈரப்படுத்துகிறதே என்று இப்போதைக்கு ஆறுதலடைவதைத் தவிர? 

சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைபேசி, சுண்ணாம்பு, சிமெண்ட், பெயிண்ட், சேலை, சுடிதார், செருப்பு, ஜட்டி, சட்டை, பேண்ட் என மக்கள் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களே அதற்குரிய விலையை தீர்மானித்து சந்தைப்படுத்தும் உரிமை இருக்கும் பொழுது விவசாயிக்கு மட்டும், தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து சந்தைப்படுத்தும் உரிமை ஏன் இல்லை என்று கேட்க நாதி இல்லை. 

தொடரும்

ஊரான்