Friday, 20 March 2026

EWS இடஒதுக்கீடு: SC, ST, OBC ஏழைகளுக்கு ஏன் இல்லை?

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்ட சமூகநீதியின் கருவியாக இருந்து வந்தது. ஆனால் “Economically Weaker Sections” (EWS) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட 10% இடஒதுக்கீடு, அந்த அடிப்படைத் தத்துவத்தையே மாற்றியமைத்துவிட்டது.

சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டு கொள்கைக்கு நடுவில், “பொருளாதார பலவீனம்” என்ற புதிய அளவுகோலைக் கொண்டு வந்து உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், நடைமுறையில் பார்க்கும்போது முற்பட்ட வகுப்பினருக்கான (OC) ஒரு பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது.

இது வெறும் அரசியல் வாதம் அல்ல; புள்ளிவிவரங்களே இதை வெளிப்படையாகச் சொல்லுகின்றன.

அதிர்ச்சியூட்டும் கட்-ஆஃப் தரவுகள் (2026)

சமீபத்தில் வெளியான அரசு நிறுவன ஆட்சேர்ப்பு (Artisan Recruitment) முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. 120 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெளியான கட்-ஆஃப் மதிப்பெண்கள்:



BHEL,

• BAP Ranipet – Welder:
EWS கட்-ஆஃப் – 48.75
SC – 57.75
OBC – 55.50

• HPBP Trichy – Fitter:
EWS – 55.75
SC – 68.75
OBC – 73.25

இந்தத் தரவுகள் எதைக் காட்டுகின்றன?

EWS பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் அதிக மதிப்பெண் பெற்ற SC, ST, OBC இளைஞர்கள் கடுமையான போட்டியில் வாய்ப்பை இழக்கிறார்கள்.

நேற்றுவரை “தகுதி” மற்றும் “திறமை” பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், இன்று குறைந்த மதிப்பெண்களுடன் வாய்ப்புகளைப் பெறும் இந்த நிலைமை, அந்த வாதங்களையே கேள்விக்குறியாக்குகிறது.

சட்டச் சிக்கல்: சாதியைத் துறந்தாலும் விடுபட முடியாத கட்டமைப்பு

இங்கே ஒரு சிக்கலான கேள்வி எழுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு SC/ST/OBC இளைஞர், தனது சாதி அடையாளத்தைத் துறந்து ‘சாதியற்றவர்’ (No Caste) சான்றிதழ் பெற்றால் EWS இடஒதுக்கீட்டைப் பெற முடியுமா?

சட்டப்பூர்வமாக “இல்லை” என்பதே இதற்கான பதில்.

103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, ஏற்கனவே SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்குள் வரும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குத் தகுதியற்றவர்கள். ஒருவரிடம் “சாதியற்றவர்” என்ற சான்றிதழ் இருந்தாலும், அரசின் பார்வையில் அவரது பிறப்பு சார்ந்த சமூக அடையாளமே இடஒதுக்கீட்டுத் தகுதியை நிர்ணயிக்கும்.

இதனால், சாதியைத் துறக்க விரும்பும் ஒருவருக்குக்கூட அந்த சமூகப் பெட்டியிலிருந்து வெளியே வர சட்டம் அனுமதிக்கவில்லை.

நாம் எழுப்ப வேண்டிய அடிப்படை கேள்விகள்

இந்தச் சூழ்நிலை சில முக்கியமான முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது.

1. பொருளாதார அளவுகோல் என்றால் அனைவருக்கும் ஏன் இல்லை?

EWS என்பது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்றால், அதில் ஏன் சமூக அடையாள அடிப்படையில் விலக்கு இருக்க வேண்டும்?

2. ஏழை என்றால் ஏழைதானே?

₹8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் ஒரு SC/ST/OBC இளைஞன் ஏழை இல்லையா?

3. தகுதி என்ற வாதம் எங்கே போனது?

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வெளியே தள்ளப்படுவது எந்த “தகுதி”க் கொள்கையை பிரதிபலிக்கிறது?

4. சாதி ஒழிப்பு எங்கே?

ஒருவர் சாதியையும் மதத்தையும் துறக்க முன்வந்தாலும் சட்டம் அவரை மீண்டும் அதே சாதிப் பெட்டிக்குள் அடைத்து வைப்பது, சாதி ஒழிப்பின் பாதையில் ஒரு பெரிய முரண்பாடு அல்லவா?

முடிவுரை

இன்றைய சட்ட அமைப்பில் SC, ST, OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள் EWS பிரிவுக்குள் நுழைவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் இந்த நிலைமை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், அது அனைத்துச் சமூகங்களிலும் உள்ள ஏழைகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது “பொருளாதார நீதியின்” பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அநீதியாகவே மாறிவிடும்.

ஒரு காலத்தில் மண்டல் கமிஷனை எதிர்த்து நாடு முழுவதும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. இன்று EWS இடஒதுக்கீட்டின் முரண்பாடுகளை எதிர்த்து அறிவார்ந்த விவாதங்களும் அரசியல் எதிர்ப்புகளும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.

சமூகநீதி என்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல; அது நடைமுறையில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.

ஊரான்

No comments: