Saturday, 9 May 2026

வேம்புப் பூத்த வேனில் காலமும்... திசை மாறும் தேன் துளிகளும்!

வேப்ப மரமும், புங்கை மரமும் துளிர்விட்டு, இலை செழித்து, நிழல் பரப்பிப் பூத்துக் குலுங்கும் ஒரு கோடையின் வசந்த காலம். மரத்தின் தண்மையான நிழலில் மனிதர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, அதன் கிளைகளிலோ சுட்டித்தனமான சிறுவர்களைப் போல 'அணில்கள்' தாவிக் குதித்துக் கொண்டிருந்தன. 


கோடையின் வெப்பம் சுட்டெரித்த போதும், எங்கோ மறைந்திருந்த மலர்களில் இருந்து நற்சுவையை உறிஞ்சித் தேனீக்கள் கொண்டு வந்து கிளைகளில் சேமிக்கத் தொடங்கின.

உண்மையில், அந்தத் தேன் மற்றவர்களுக்கானது அல்ல; அந்தக் கூட்டில் வளரும் தன் வாரிசுகளுக்கானது. வாரிசுகள் சிறகு முளைத்துப் பறக்கும் வரை சேமிக்கப்படும் அந்தத் தேனை, அவை வெளியேறும் முன் உறிஞ்சிவிட்டு வெறும் கூட்டையே விட்டுச் செல்லும். ஆனால், மனிதர்களோ அதற்கு முன்பாகவே பல உயிர்களை அழித்து, அந்தத் தேனைத் திருடிக்கொள்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கட்டத் தொடங்கிய ஒரு 'அரசியல் தேன்கூடு', ஏப்ரல் இறுதியில் முழுமையடைந்து, மே மாதத் தொடக்கத்தில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. அந்தத் தேனைச் சுவைக்க இப்போது ஆளாளுக்குப் போட்டி! தொடக்கத்தில் இருந்தே அணில்கள் அந்த மரத்தைச் சுற்றி வட்டமடித்ததால், பெரும்பகுதியை அவை பங்கிட்டுக் கொண்டன. இருந்தபோதும் அணில்களின் வயிறு இன்னும் நிறையவில்லை.

அதே வேளையில், தலைக்கு மேலே தேன்கூடு தொங்குவதைப் பார்த்துவிட்டு, அதன் சுவைக்காகக் கீழே நாவில் எச்சில் ஊறச் சிலர் காத்துக் கிடந்தனர். "வெறுமனே காத்திருப்பதில் பயனில்லை" என்று உணர்ந்தவர்கள், ஒரு வாரம் கழித்து மேலிருந்து சொட்டுச் சொட்டாக வடியும் தேனைத் தங்கள் ‘கை’களாலேயே ஏந்திச் சுவைக்கத் தொடங்கினர். இன்னும் சிலரோ, பொறுமையிழந்து அந்தத் தேன்கூட்டை ‘அரிவாளால்’ கொத்தத் துணிந்தனர்; சிதறி விழும் தேனைத் தங்கள் ‘பானை’களில் பிடிப்பதற்கு வேறு சிலர் தயாராக நின்றனர்.

எப்படியோ... அந்தத் தேன்கூட்டை அணில்களோடு சேர்ந்து, சிலர் ‘கை’யில் ஏந்தியும், சிலர் அரிவாள் நுனியால் சுவைத்தும், சிலர் பானை நிறையப் பிடித்தும் தங்களுக்குரிய பங்கை உறுதி செய்து கொண்டனர். 

மரத்தின் அடியில் சிதறிக்கிடக்கும் தேன் துளிகளுக்காகக் காத்திருந்த காலம் போய், இப்போது மொத்தக் கூட்டின் மீதே பலரது பார்வையும் படிந்துவிட்டது. அந்தத் தேன் எத்தனை நாவுகளுக்கு இனிப்பைத் தரப்போகிறது என்பதும், தேனின் சுவை யாருக்குச் சொந்தம் என்பதும், அணில்களின் அணிவகுப்பிற்குத் தலைமை தாங்கும் அந்த அணில் தலைவருக்கே  (Squirrel leader) வெளிச்சம்!

இந்தத் தேன்கூடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கட்டப்படுவதால், தேனுக்காகக் காத்திருந்து ஒரு சொட்டுத் தேனும் நாவில் படாதவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டும். அப்பொழுது அணில்களோடு புதிதாகக் குரங்குகள் கூடப் போட்டிக்கு வரலாம். ஆனாலும் தேனுக்காக நாக்கு அதுவரை தொங்கிக்கொண்டுதான் இருக்கும்.

தேனைச் சுவைக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?

ஊரான்

No comments: