Friday, 15 May 2026

நாவிதர், வண்ணார் சாதிகளின் வாழ்வியலில் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?

சாதியம் என்பது வெறும் மனோபாவம் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு. இந்தியாவில் குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்களைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும், அந்தத் தொழில்கள் இழிவாகக் கருதப்பட்டதும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாய் அமைந்தன. 

ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில் இந்தச் சாதியக் கட்டமைப்பில், குறிப்பாக நாவிதர்கள் மற்றும் வண்ணார்கள் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றம், இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கு மிக முக்கியமானது. 


புத்தர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் என தொடர்ச்சியாகச் சாதிய இழிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த போதிலும், இந்த மாற்றத்திற்கு அடிப்படைக் காரணம்—வெறும் மனமாற்றமோ, மேடைப் பேச்சுகளோ மட்டும் அல்ல; மாறாக, உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சியும், அதன் விளைவாக உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களுமே ஆகும்.

சாதிகளின் உற்பத்தி: மனுவின் தந்திரமும் வரலாற்று இருட்டடிப்பும்

சாதிகளின் தோற்றம் மற்றும் அதற்கான தொழில்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாகவும், தத்துவார்த்தப் பூர்வமாகவும் பார்க்க வேண்டும். சாதிகளின் உற்பத்தி குறித்து மனுஸ்மிருதி மிகத் தந்திரமான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறது. நான்கு வருணங்களுக்கு இடையிலான கலப்பில் பிறந்தவர்களை (சங்கரா ஜாதிகள்), மனு புதிய வகைச் சாதிகளாக வகைப்படுத்துகிறான். 

அவ்வாறு வருணக் கலப்பில் உண்டான புதிய சாதிகளுக்கு என்று பிரத்யேகத் தொழில்களையும், (மனு: 10 வது அத்தியாயம்) சமூகப் படிநிலையில் அவர்களுக்கான கீழான இடத்தையும் மனுதர்மம் திட்டமிட்டு நிர்ணயித்தது.

ஆனால், இந்தத் தொழில்கள் எல்லாமே மனித குல வரலாற்றில் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் உருவானவை என்பதை மனு தர்மம் மூடி மறைக்கிறது.
  • சவரத் தொழிலின் தோற்றம்: தொடக்க கால மனிதன்—அதாவது இரும்பு கண்டுபிடிக்கப்படாத, கத்தி போன்ற கருவிகள் கண்டறியப்படாத காலத்தில்—முடிகளைச் சவரம் செய்வதற்கான வாய்ப்பே கிடையாது. அப்பொழுது மனிதன் இயற்கையான நீண்ட முடியுடனும் தாடியுடனும்தான் வாழ்ந்திருக்க வேண்டும். இரும்பு உலோகம் கண்டறியப்பட்டு, கத்தி போன்ற உற்பத்திக் கருவிகள் உருவாக்கப்பட்ட பிறகே சவரம் செய்கிற தொழிலும், அதற்கான தேவையும் மனித சமூகத்தில் தோன்றியிருக்க முடியும். ஆனால், வரலாற்றுப் பூர்வமாக உருவான இந்தத் தொழிலை, ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் செய்ய வேண்டும் என்று வருணக் கலப்பின் அடிப்படையில் மனு தர்மம் இதை ஒரு சாதித் தொழிலாக மாற்றியது. (மனு-8, 47)
  • சலவைத் தொழிலின் தோற்றம்: அதேபோல்தான் ஆடைத் தொழிலும். மனிதன் பருத்தி நூலைக் கண்டுபிடித்த பிறகுதான் நாகரிக ஆடைகள் தோன்றியிருக்க வேண்டும். ஆடைகள் தோன்றி, மனிதன் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே, அதை வெளுப்பதற்கான (துவைப்பதற்கான) தேவையும் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும். தொடக்க காலத்தில் ஆடை வெளுப்பது, துவைப்பது போன்ற வேலைகளை அவரவர் தத்தமது தேவைகளுக்காகத் தாங்களேதான் செய்திருக்க வேண்டும். ஆனால், இதையும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உரிய இழி தொழிலாக ஒதுக்கியது வருணக் கலப்பில் ஏற்பட்ட சாதி அடிப்படையிலான அடக்குமுறைதான்.

இவ்வாறு, மனித குல வளர்ச்சியில் உருவான தொழில்நுட்பங்களை, குறிப்பிட்ட மனிதர்களின் மீது நிரந்தர இழிவாகச் சுமத்தியதுதான் வருணக் கோட்பாடு.

அடிமைத்தனத்தின் வடிவம்: 'இலவச' சேவை முறை

மனு வகுத்த இந்தச் சாதியக் கோட்பாட்டின் நீட்சியாகவே, சுமார் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமப்புறங்களில் சவரம் செய்வதும் துணி வெளுப்பதும் வெறும் 'தொழிலாகப்' பார்க்கப்படாமல், அவை மேலாதிக்கச் சாதிகளுக்கான 'இலவசச் சேவையாகவே' பார்க்கப்பட்டன.

அன்றாட உழைப்புக்கான கூலி பணமாக வழங்கப்படவில்லை. காலையிலோ மாலையிலோ ஆதிக்கச் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று, “ஏகாளி வந்திருக்கேம்மா” என்று குரல் எழுப்பி அவர்கள் போடும் பழைய களி, கூழ் அல்லது மிச்சமான சோற்றை வாங்கிச் செல்லும் அவல நிலை இருந்தது. நாவிதர்களின் நிலையும் இதுதான். ஆண்டு முழுமைக்குமான உழைப்பிற்கு, நெல் அறுவடை காலங்களின் போது 'ஒரு கட்டு நெல்' தர்மமாக வழங்கப்படும்.

தொழில் நிமித்தமாக மற்றவர்களையும், துணிகளையும் தொட வேண்டியது இருந்ததால் இவர்களை சூத்திரச்சாதிகளில் ஆகக் கீழ்நிலையில் வைத்து தீண்டத்தக்கவர்களாக  நடத்தினார்களே ஒழிய அது உண்மையான மனித மரியாதையோ அல்லது உழைப்புக்கான அங்கீகாரமோ அல்ல; அது எஜமானன்-அடிமை உறவின் நீட்சி.

மாற்றத்தை ஏற்படுத்திய உற்பத்திக் கருவிகள்

சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள், நகரமயமாதல் மற்றும் மக்கள் புலம்பெயர்தல் (Migration) ஆகியவை இந்த 'இலவச' மற்றும் 'பண்ணை' அடிமைமுறைச் சேவைக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கிராமத்துச் சாதியக் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு மக்கள் நகரங்களை நோக்கிப் புலம்பெயர்ந்த போது, 'சேவை' என்பது 'வணிகமாக' மாறியது. 

சவரக் கடைகளும் (Saloons), சலவைக் கடைகளும் (Laundries) தனியாக உருவெடுத்தன. 'வீட்டு வாசலில் வந்து நின்ற உழைப்பாளி' என்ற நிலை மாறி, 'உழைப்பாளியின் கடைக்குத் தேடிச் சென்று காசு கொடுத்துச் சேவை பெறும்' புதிய உற்பத்தி உறவு உருவானது. இது அவர்களுக்குப் பொருளாதார விடுதலையையும், ஓரளவு தார்மீக மரியாதையையும் தந்தது.

சுயமரியாதையை மீட்டெடுத்ததில் நவீன தொழில்நுட்பத்தின் பங்கு

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி இவர்களின் உழைப்புச் சுரண்டலை மேலும் குறைத்தது. குறிப்பாக, துணி துவைக்கும் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி—வாஷிங் மெஷின் (Washing Machine), அயன் பாக்ஸ் (Iron Box), நவீன சோப்புகள் மற்றும் பிரஷ்கள்—பலரையும் தங்களின் துணிகளைத் தாங்களே துவைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தியது. இதனால், வண்ணார் சமூகத்தினர் மீதான ஆதிக்கச் சாதிகளின் நேரடிச் சார்புநிலை குறைந்தது.

ஆனால், சவரம் செய்யும் தொழில் (Hairdressing) மட்டும் இன்னும் முழுமையாகச் சுயமாகச் செய்து கொள்ளும் அளவுக்கு மாறவில்லை. இன்றும் அதற்கு மனித உழைப்பு இன்றியமையாததாக உள்ளது. 

ஆயினும், நவீனக் கருவிகளின் வரவும், குளிரூட்டப்பட்ட சலூன்களின் பெருக்கமும் அந்தத் தொழிலை ஒரு நவீனத் தொழில்துறையாக (Grooming Industry) மாற்றி, அதன் மீதிருந்த சாதியக் கறையைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

மனுதர்மம் பிறவிச் சட்டமாக உறுதிப்படுத்திய சாதித்தொழிலை, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே இன்று வருமானமாகவும், சுயமரியாதையாகவும் மாற்றியமைத்துள்ளது என்பதற்கு இதுவே சான்று.

முடிவுரை

நாவிதர் மற்றும் வண்ணார் சாதி மக்களின் சாதிய இழிவு இன்று பெருமளவு குறைந்து போனதற்கு, உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள், நகரமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக நீதிப் போராட்டங்கள் முக்கியக் காரணங்களாகும்.

கருத்தியல் ரீதியான விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், நடைமுறையில் சாதியத்தை ஒழிக்க வேண்டுமானால், சாதி சார்ந்த உழைப்பு முறைகளை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

உற்பத்தி உறவுகளும் உற்பத்திக் கருவிகளும் நவீனமயமாகிப் பொதுமைப்படுத்தப்படாதவரை, சாதியப் படிநிலைகளை முழுமையாக உடைக்க முடியாது என்பதை இந்தச் சமூக மாற்றங்கள் நமக்கு அழுத்தமாக உணர்த்துகின்றன.

ஊரான்

No comments: