உலகில் ஆகச்சிறந்த மொழி ‘வலி’தான்.
அந்த வலியைத் தன் உடம்பில் படாமலேயே, பிறர் படும்போது தன் இதயத்தில் உணர்வதுதான் உண்மையான மனிதநேயம்.
ஒருவன் அழுகையைத் தன் கண்ணீராக்கி, ஒருவன் ரத்தத்தைத் தன் நெஞ்சில் துடிப்பாக்கும்போதுதான் சமூகம் உயிர்த்தெழுகிறது.
இந்த உணர்வு இல்லையென்றால், இந்த உலகம் நெடுநாட்களுக்கு முன்பே அழுகிப் புழுத்து நாற்றமெடுத்துப் போயிருக்கும்.
கலை தரும் வலியின் அதிர்வுகள்
நாம் ஜவுளிக்கடை ஊழியர்கள் அல்ல. ஆனால் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில், இருக்கை இல்லாமல் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்கும் தொழிலாளர்களின் வலி நம் கால்களில் இறங்கவில்லையா?
நாம் சாலை விபத்தில் அடிபட்டவர்கள் அல்ல. ஆனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடும் ஒரு மனிதனைப் பார்க்கும்போது நம் உடல் பதறி, நெஞ்சு துடிப்பதில்லையா?
அலெக்ஸ் ஹேலி எழுதிய வேர்கள் நாவலைப் படிக்கும்போது, நாம் ஆப்பிரிக்க அடிமைகளாக இல்லாவிட்டாலும், அவர்களின் முதுகில் விழும் ஒவ்வொரு சவுக்கடியும் நம் நெஞ்சைப் பிளப்பதில்லையா?
ஈழத்தில் கொத்துக்கொத்தாகச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் உடல்களின் வலியும், இன்று காசாவில் பசியால் துடிக்கும் குழந்தைகளின் அலறலும் நம் இரத்தத்தில் ஓடுகிறதுதானே?
இதுதான் மனிதம்.
வர்க்கம் கடந்த தோழமை
மனித வரலாற்றில் பெரிய மாற்றங்கள் அனைத்தும், பிறர் வலியைத் தன் வலியாக உணர்ந்த மனிதர்களால்தான் நிகழ்ந்தன.
பாட்டாளி வர்க்கத்தின் வலியைத் தன் உயிரில் உணர்ந்ததால்தான், பணக்காரரான ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்-ஆல் காரல் மார்க்ஸ் உடன் கைகோர்க்க முடிந்தது.
தீண்டத்தகாதவர்களின் வலியைத் தன் மனதில் ஏற்றதால்தான், பல உயர்சாதி இளைஞர்கள் சாதி-தீண்டாமையை எதிர்த்து வீதிக்கு வந்தனர்.
ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு சாதாரண கான்ஸ்டபிளை மணிக்கணக்கில் நிற்க வைத்து அவமானப்படுத்தும்போது, அந்த அதிகாரத் திமிருக்கு எதிராக நம் மனம் கொதிக்கிறது. இங்கே வலி வர்க்கத்தையோ, சாதியையோ, மதத்தையோ பார்த்து வருவதில்லை.
வலியை அரசியலாக்கும் இன்றைய போக்குகள்
ஆனால் இன்றைய அரசியல் மிகவும் வேதனையளிக்கிறது.
பிறர் வலியை உணர்வதற்குப் பதிலாக, அதை அடையாள அரசியலின் சந்தைக்குள் அடைத்து விற்பனை செய்யும் மனநிலை வலுப்பெற்று வருகிறது.
நேற்றுவரை “சனாதனத்தின் பிள்ளைதான் விஜய்” என்று முழங்கிய அதே 'முற்போக்கு' முகங்கள், இன்று பதவி மோகத்தில் “ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு” என்று கரம் கோர்க்கின்றன.
இதை விமர்சித்தால், “உனக்கு வேங்கைவயலின் வலி தெரியுமா?” என்று திசைதிருப்புகின்றனர்.
ஒரு மனிதன் அனுபவித்த வலியின் முழு ஆழத்தை, அதை அனுபவித்தவனே முழுமையாக உணர முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் பிறர் அந்த வலியை உணரவே முடியாது என்று சொல்லிவிட்டால், மனிதநேயத்தின் அடிப்படையே சிதைந்து போகாதா?
எந்தச் சனாதன அமைப்புகள் தீண்டாமையையும் மனித இழிவையும் உருவாக்கினவோ, அந்தச் சக்திகளோடு சமரசம் செய்துகொண்டே, அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையே ‘பிற்போக்குவாதிகள்’ என முத்திரை குத்தினால் அவர்களுடைய மனமும் ஒருநாள் வலிக்காதா?
“பட்டியலினத்தைச் சேர்ந்தவனாக ஒருவன் இல்லையென்றால் தீண்டாமையின் வலியை உணர முடியாது” என்ற வாதம், வரலாறு முழுவதும் பிறர் வலியைத் தன் வலியாக ஏற்றுப் போராடிய எண்ணற்ற மனிதர்களின் தியாகத்தை அவமதிப்பதோடு, இன்றும் கூட அந்த உணர்வோடு களத்தில் நிற்பவர்களை அந்நியப்படுத்தும் அபாயத்தையும் உருவாக்குகிறது.
வலியைப் போக்கும் அரசியல் வேண்டும்
“அவனவன் வலியை அவனவன்தான் உணர முடியும்” என்றால், பிறகு அடுத்தவர்களின் வலியைப் போக்கப் போராடும் இயக்கங்களும், கட்சிகளும், தியாகங்களும் எதற்காக?
அடுத்தவனின் வலியைத் தன் சொந்த வலியாகக் கருதுபவன்தான் உண்மையான போராளி. ஆனால் பதவியும் அதிகாரமும், பிறர் வலியை உணரும் இதயத்தை மங்கச் செய்யும் போது, அரசியல் இயக்கங்கள் தங்கள் ஆன்மாவையே இழக்கத் தொடங்குகின்றன.
வலி என்பது சாதி, வர்க்க, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. அடுத்தவனின் வலியைத் தன் வலியாக உணரும் இதயம்தான் உண்மையான மனித இதயம்.
வலியை அரசியலாக்காமல் —
வலியைப் போக்கும் அரசியலே இந்த மண்ணுக்கு அவசியம்.
ஊரான்

3 comments:
பல பேர் தங்களது பிழைப்பை நடத்துவதற்கு அரசியலை ஒரு அங்கமாக கொண்டிருக்கிறார்கள். அதில் பொறுக்கித் தின்பதற்காக என் வலி உனக்குத் தெரியுமா என்ற கேள்வியை வைத்து அன்னியப்படுத்துதல் என்பதை அரங்கேற்றி வருகிறார்கள்.
அடிபட்டவர்களுக்கு தான் வலியின் அளவு தெரியும் என்றால் மருத்துவர்கள் எதற்காக?
நேற்று வரை தோழமையாக தெரிந்தவர்கள் இன்று எதிரியாக தெரிவதன் வெளிப்பாடு பிழைப்பு வாதமே.
தொடர்ந்து எழுதுங்கள். தோழமை கருதி வருபவர்கள் வரட்டும் மற்றவர்கள் தூரமாகவே நிற்கட்டும்.
ஜெயராமகிருஷ்ணன்: வணக்கம்
இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களின் கண்கள் அழகை பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே என்று ஏராளமானவர்கள் நினைக்கும் இவ்வுலகில்...
தங்களின் சிந்தனையை செயலை நினைத்து பார்த்தால் எங்களது மனம் மிகுந்த மகிழ்ச்சியில் ஆச்சரியத்தில் திளைக்கிறது...
தங்களைப் போன்றவர்களுக்கு நாங்கள் நண்பர்களாக இருப்பது எங்களின் பாக்கியமே...
பாஸ்கரன்: 'அடுத்தவனின் வலியைத் தன் வலியாக உணரும் இதயம் தான் உண்மையான மனித இதயம்'
அருமையான வரி.
Post a Comment