Showing posts with label கணவன் மனைவி குடும்பம் husband wife conflict. Show all posts
Showing posts with label கணவன் மனைவி குடும்பம் husband wife conflict. Show all posts

Saturday, 9 May 2026

ஈட்டி முனையில் ஒரு இதயம்

வசந்த காலத்தின் வரவு

படிப்பு முடிந்து முதல் வேலைக்கான ஆணை வந்தபோது வீடு திருவிழாக் கோலம் பூண்டது. அப்பாவின் கண்களில் பெருமிதம், அம்மாவின் ஆனந்தக் கண்ணீர், அண்ணன் தம்பிகளின் ஆரவாரம் இவை எல்லாம் மாணிக்கத்துக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்சின.


“என் குடும்பம், என் சொந்தம்” என்ற உணர்வு அவனை ஆட்கொண்டது. முதல் சம்பளம் முதல் ஒவ்வொரு ஊக்கத்தொகையும் குடும்பத்துக்கே சென்றது. தங்கைகளின் திருமணம், தம்பியின் படிப்பு என அவன் எல்லோருக்கும் ஏணியானான்.

முட்டுக்கட்டையும் முதல் கசப்பும்

திருமணத்துக்குப் பின் மரகதம் வீட்டுக்கு வந்தாள். மாணிக்கம் அவளை உயிருக்கு உயிராக நேசித்தான். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவளை ஒரு பெண்ணாகப் பார்க்கவில்லை. “என்ன கொண்டு வந்தாள்?” என்ற தராசிலேயே அவளை எடை போட்டனர்.

மாமனார், மாமியார், நாத்தனார்களின் ஏச்சுகளும் அவமான வார்த்தைகளும் அவளது மனதில் ஈட்டியாகப் பாய்ந்தன. மாணிக்கத்தின் காதுகளுக்கு அவை எட்டவில்லை. எட்டினாலும், “எல்லார் வீட்டிலயும் நடக்குறதுதானே?” என்று அலட்சியமாகக் கடந்து சென்றான்.

மரகதம் மெல்ல மெல்ல முட்டுக்கட்டை போடத் தொடங்கினாள்.  
“எல்லாத்தையும் வாரி வாரிக் கொடுத்தா நமக்கு பிள்ளை குட்டி இல்லையா? நமக்குன்னு ஒண்ணும் வேணாமா?”  

அவளது கேள்வியின் பின்னால், அவள் அனுபவித்த அவமானங்களின் நெருப்பு மாணிக்கத்துக்குப் புரியவில்லை. ஒருவேளை அவன் அவளோடு உட்கார்ந்து பேசி, தன் குடும்பத்துக்கு உதவிகளை அளவோடு செய்திருந்தால் இந்த நெருப்பு பூக்காமல் இருந்திருக்குமோ என்பது காலம் கடந்த பிறகுதான் அவனுக்கு உரைத்தது.

நினைவாற்றலின் கூர்மை

காலம் உருண்டது. பிள்ளைகள் வளர்ந்தனர். மாணிக்கம் ஓய்வு பெற்றார். ஆனால் மரகதத்தின் நினைவாற்றல் அவருக்கு சாபமாக மாறியது.

முப்பது வருடங்களுக்கு முன் நாத்தனார் சொன்ன ஒரு வார்த்தையை இன்று நடந்ததுபோலத் துல்லியமாக எடுத்து வைத்தாள்.  
“அன்னைக்கு உங்க அக்கா என்னை அப்படிப் பார்த்துச் சொன்னாங்களே... அப்போ நீங்க எங்கே இருந்தீங்க?”  

இப்படி ஒவ்வொரு நாளும் ஈட்டிகள் அவன் நெஞ்சைத் துளைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

ஓயாத உள்ள வெக்கை

முதுமையில் மாணிக்கத்தின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அவரது தும்மல் கூட அருவருப்பை ஏற்படுத்தியது. “எல்லாருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல் இப்ப எப்படி உக்காந்திருக்கார் பார்...!” என்ற நையாண்டி அவரை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியது.

தொடக்க காலத்தில் உதவிகளைப் பெற்ற உறவுகள் எல்லாம் இன்று ஒதுங்கிக் கொண்டதால் மாணிக்கத்திற்கு உறவாடுவதற்கு உறவுகள் இல்லை. ஓய்வு கால ஊதியம் சில நேரங்களில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் போது அதுவே மரகதத்திற்கு ஒரு ஆயுதமாக மாறிவிடுகிறது.

ஒரு அதிகாலையில் மின்விசிறியின் ஓயாத சத்தத்துக்கு நடுவில் அமர்ந்திருந்த மாணிக்கத்துக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

ஈருடல் ஓருயிர் என்பது வெறும் கவிதை மட்டுமே.  எதார்த்தத்தில் அவர்கள் இரு துருவங்களாகவே வாழ்ந்து முடித்திருந்தனர்.

வெளியே சாலைகள் சிதிலமடைந்து கிடக்கலாம்.  ஆனால் தன் மனதுக்குள் சிதைந்து கிடக்கும் விழுமியங்களை யார் சீரமைப்பார் என்ற ஏக்கத்துடன் அவர் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஊரான்