Showing posts with label பாமக. Show all posts
Showing posts with label பாமக. Show all posts

Wednesday, 19 July 2023

மாங்கனியில் சாதியப் புழுக்கள்!

மாங்கனி - 
'சீசன்' முடியும் காலம்,
நேற்று,
ஐந்து கிலோ வாங்கினேன்,
பார்க்க
அழகாய்த்தான் இருந்தது.
மினுமினுப்பைப் 
பார்த்தேனே ஒழிய
தொட்டுப் பார்க்கவில்லை.
விளைவு,
அறுக்க அறுக்க 
புழுக்கள் நெளிந்தன!

மீதி 
மூன்று கிலோவை 
திருப்பிக் கொடுத்தேன்!
"ஏங்க இப்படி?" என்றேன்!
எமக்கு மட்டும் 
எப்படித் தெரியும் என்றார்!
அவர் வியாபாரி
அப்படித்தானே பேசுவார்!
'உமக்கு மூளை எங்கே போனது?'
உள் மனது முணுமுணுத்தது.


சாதி கூட 
சிலருக்கு
அழகாய்த்தான் தெரியும்
மாங்கனி போல,
அதை அறுக்காதவரை!
குறுக்கும் நெடுக்குமாக
வகுத்துச் பார்,
அங்கே
ஓராயிரம் 
சாதியப் புழுக்கள் 
நெளிவது தெரியும்!

நெளியும் புழுக்களை 
சுமக்கும் கனிகளை
வீசத் தெரிந்த நீ,
சாதியப் புழுக்களைக்
காக்கும் மாங்கனியை 
என்ன செய்யப்......?
சீசன் முடியப் போகிறது 
விரைந்து முடிவெடு 
இல்லையேல் 
நீயும்
நெளிவாய்
புழுவாய்!

ஊரான்

Saturday, 1 December 2012

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்!

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் கூடாது! - ராமதாஸ்
(தினமணி-30.11.2012)
தருமபுரி அருகே உள்ள நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக ராமதாஸ் பேசியதும் நாம் சொல்ல நினைப்பதும்:
ராமதாஸ் சொன்னது
“தமிழகத்தில் ஜாதிய மோதல்களைத் தடுக்கவும், வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஆண், பெண் இருபாலருக்கும் 21 வயது வரை பெற்றோர் சம்மதமின்றி திருமணம் நடத்தக் கூடாது”
நாம் சொல்ல நினைப்பது
அப்படினால் ஆண் பெண் இருபாலருக்கும் வயது 21 க்கு மேல் ஆனபிறகு பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டால் சாதி மோதல்களும் வன்முறை நிகழ்வுகளும் நிகழாதா?
ராமதாஸ் சொன்னது
“ "ஈவ்-டீசிங்' தடுப்புக்குத் தமிழக காவல் துறையில் தலித் அல்லாத போலீஸாரைக் கொண்டு தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்”
நாம் சொல்ல நினைப்பது
பொது இடங்களில் தலித் பையன்களைத்தவிர பிறசாதிப் பையன்கள்  ‘ஈவ்-டீசிங்' செய்வதில்லையா? பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கூட்ட நெரிசல் மிக்க ரயில்கள்-பேருந்துகளில் நடைபெறும் ‘ஈவ்-டீசிங்கை'த் தடுக்க உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டும் நெறிகளை  சமீபத்திய வழக்கு ஒன்றில் வகுத்துள்ளது அய்யாவுக்குத் தெரியுமா? எல்லா சாதிகளையும் சார்ந்த பையன்கள் செய்யும் இத்தகைய  ‘குலோபல்’ ‘ஈவ்-டீசிங்'கைத் தடுக்க எந்த சாதிப் போலீசைக் கொண்டு தனிப் பிரிவு ஏற்படுத்துவது?
ராமதாஸ் சொன்னது
“சமூக நல்லிணக்கத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் 14 மாவட்டங்களில் மாநாடு நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும்தான். வாழ்நாளில் இதுவரை தலித்களுக்கு எதிராகப் பேசியதும் இல்லை. எழுதியதும் இல்லை”
நாம் சொல்ல நினைப்பது
அப்படியாவது முதல்வர் நாற்காலி தேறுமா என பார்த்தீர்கள். ஆனா பப்பு வேகலயே!
ராமதாஸ் சொன்னது
“தங்களது இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தவறான பாதைக்கு வழி நடத்திச் செல்லும் திருமாவளவன், பாமக மீதும் அதன் தலைவர்கள் மீது குறை கூறி பேசுகிறார். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது”
நாம் சொல்ல நினைப்பது
காதலித்தால் வெட்டு! குத்து! தீ வைப்பு! வன்முறை!.... ஓ!.... இதெல்லாம்தான் நீங்கள் வன்னிய இளைஞர்களை வழி நடத்திச் செல்லும் சரியான பாதையோ!
 ராமதாஸ் சொன்னது
“நாயக்கன்கொட்டாய் வன்முறைக்கு காதல் திருமணமோ, பெண்ணின் தந்தை தற்கொலையோ, பாமகவோ, வன்னியர் சங்கமோ காரணமில்லை.
அந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பெண்களை கேலி செய்யும் பழக்கமும், இளம்பெண்கள் மீதான தொடர் அத்துமீறல்களும்தான் இத்தகைய வன்முறைக்குக் காரணமாக அமைந்துவிட்டது”
நாம் சொல்ல நினைப்பது
மைனர் கல்யாணம்’ என்றீர்கள்! ‘செட்டப் கல்யாணம்’ என்றீர்கள்! இப்போது "ஈவ்-டீசிங்' என்கிறீர்கள்! இன்னும் எத்தனை காரணங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்களோ!
ராமதாஸ் சொன்னது
“காதல் திருமணம், கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலரும் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை”
நாம் சொல்ல நினைப்பது
இப்போதைக்கு சாத்தியமில்லை என்றால்  பிறகு  எப்போதாவது  கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலரும் என்ற நினைப்பு அய்யாகிட்ட ஒட்டிக்கிட்டு இருக்கு போல!

ராமதாஸ் சொன்னது
“தலித் இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் திருமாவளவன் அறிவுறுத்த வேண்டும்”
நாம் சொல்ல நினைப்பது
தலித் இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் திருமாவளவன் அறிவுறுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். கிட்டத்தட்ட தலித் இளைஞர்களைப் போல பெரும்பான்மையாக உள்ள வன்னிய இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் நீங்க எப்ப அறிவுறுத்தப் போறீங்க?
ராமதாஸ் சொன்னது
“தமிழகத்தில் தலித் அல்லாத சமூகத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதனால்தான், இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், காதல் நாடக திருமணங்களுக்கு எதிராகவும் 81 சதம் பேர் ஓரணியில் திரண்டுள்ளனர்”
நாம் சொல்ல நினைப்பது
அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இதற பிற்படுத்தப்பட்டோர் OBC என்ற போர்வையில் ஏற்கனவே ஓரணியில் திரண்டுள்ளதைச் சொல்கிறாரோ! 


ஊரான்.



Thursday, 22 November 2012

நாளேடுகளில்.....! சொன்னதும் சொல்லாததும்!


சொன்னது
“நீ ராசி இல்லாதவள் என்று கூறியதால் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை! திருமணமான ஐந்து மாதத்தில் பரிதாபம்!”

சொல்லாதது
ராணுவ ‘வீரனை’ இதற்காக உள்ளே தள்ளலாம். ராசி பலன்கனை நம்ப வைக்கும் சோதிடக்காரர்களையும் அவைகளைப் பரப்பும் ஊடகங்களையும் எங்கே தள்ளுவது?

சொன்னது
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சத்து நாற்பதாயிரம் ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்!”

சொல்லாதது
ஆட்சி அதிகாரம் ஏதும் இல்லை என்றாலும் அல்லக்கைகள் ‘வெள்ளையும் சொள்ளையுமாக‘ ஸ்கார்பியோவில் திரிவதன் ரகசியம் இதுதானோ!

சொன்னது
“தருமபுரி கலவரத்துக்கு பா.ம.க காரணம் அல்ல! தாக்குதல் நடத்தியவர்களில் நாயுடு, செட்டியார், குறும்பர் என அனைத்து சுமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் அடங்குவர். பா.ம.க.மட்டுமல்ல எல்லா கட்சியினரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்!” டாக்டர் ராமதாஸ் பேட்டி!

சொல்லாதது
இப்படி நீங்களே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின் எதற்காக “மைனர் கல்லாணம்” என்கிற தகிடு தத்தங்கள்?

சொன்னது
“சுசி ஈமு பண்ணை நிர்வாக இயக்குநர் குரு குண்டர் சட்டத்தில் கைது!
இவர் மீது மோசடி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன!”

சொல்லாதது
பால்தாக்கரே மரணத்தையொட்டி வெளியான மிகச்சாதாரண ஒரு செய்திக்கு ‘லைக்’ கொடுத்ததற்கே கைது செய்கிறீர்களே! கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஈமு கோழி பண்ணைகளை மக்கள் ‘லைக்’ பண்ணக் காரணமான ஊடகங்களை என்ன செய்வது?

Sunday, 16 October 2011

மீண்டும் பன்றிகளின் படையெடுப்பு!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த இடுகையை எழுதுகிறேன். மிக விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு தேர்தல். உறவினரின் உடல் நலக் குறைவு; அதற்காக கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையிலேயே உழன்று கொண்டிருந்ததால் இத்தேர்தல் குறித்து மக்களின் கருத்துக்களையும் வேட்பாளர்களின் வாக்குறுதி மற்றும் நடவடிக்கைகளையும் அதிகமாக கவனிக்க முடியவில்லை. எனினும் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.
**********************************************************************************
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற எமது கிராமத் தலைவருக்கான தேர்தல்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது இரண்டு கிராமங்களும் ஒரே ஊராட்சியின் கீழ் இருந்ததால் ஒரே தலைவர்தான். முதன் முதலில் இருவேறு சாதிகள் மோதிக்கொண்ட அந்த நிகழ்வு எனது நினைவிலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை. வாக்கு எண்ணிய கிராமத்திலிருந்த தோற்றுப்போன வேட்பாளரின் சாதியினர் வெற்றிபெற்ற வேட்பாளரின் சாதியினரை விரட்டி விரட்டி அடித்தனர். சாதி பலத்தை நிறுவுவதற்கான ஒரு தேர்தல்தான் உள்ளாட்சித் தேர்தல் என்றால் அது மிகையாகாது என்றே கருதுகிறேன். இன்றும் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. அதே சாதி வெறியோடுதான் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்.

ஒரு ஊரில், ஒரேசாதியினர் இருந்தாலும் அங்கேயும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதற்குக் காரணம் 'நீயா? நானா?' என்கிற பதவிப் போட்டிதான். இருநூறு வாக்குகளை மட்டுமே கொண்ட ஒரு ஊராட்சி உறுப்பினருக்கானத் தேர்தலில் எனது தங்கை மகள் போட்டியிடுகிறார். அதே பதவிக்கு அவருடைய பங்காளி ஒருவரும் நிற்கிறார். வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்த பிறகு எனது தங்கை மகளிடம் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்லி அழுது மன்றாடுகிறார்களாம் அவரது பங்காளிகள். எனது தங்கை மருமகனோ வசதி குறைவு என்றாலும் தனது மனைவியை வார்டு உறுப்பினராக்கியேத் தீரவேண்டும் என்பதற்காக தலைக்கு ரூபாய் ஐம்பது வீதம் ரூபாய் பத்தாயிரம் வரை செலவு செய்யவும் தயாராய் இருக்கிறாராம். இப்படித் தங்களது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவும் சிலர் களத்தில் நிற்கின்றனர்.

சாதிபலம் மற்றும் கௌரவத்தை நிலைநாட்டத்தான் போட்டியிடுகிறோம் என்று எந்த வேட்பாளரும் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதில்லை. மாறாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எதைச் சொன்னார்களோ அதைத்தான் இப்பொழுதும் சொல்கிறார்கள். குடிநீர், சுகாதாரம், சாலை- போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்; குடும்ப அட்டை, முதியோர் பென்சன், சாதி - பிறப்பு - இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட வசதிகளை சுலபமாகப் பெறவும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிக்கின்றர்.

எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நானே நிர்வாகம் செய்வேன். எனது கணவர் எனது நிர்வாகத்தில் தலையிட மாட்டார் என சில பெண் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் ஆண்களின் ஆதிக்கம்தான் நிலவுகிறது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

புரட்டாசியில் 'பொன் உருகக்காயும் மண் உருகப் பெய்யும்' என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பொன் உருகக் காய்கிறது. ஆனால் மண் உருகப் பெய்யத்தான் காணோம். வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர், ஒன்றியக்கவுன்சிலர், மாவட்டக்கவுன்சிலர், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள், மேயர்கள் என பதவிகளோ ஏராளம். கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் வேட்பாளர்களும் ஏராளம். எனவே மக்கள் காட்டில் ஒரே பண மழையும் பரிசு மழையும் மாறி மாறிப் பொழிகிறதே. பிறகு புரட்டாசியில் பெய்தால் என்ன? பொய்த்தால் என்ன?

இந்த உள்ளாட்சித் தேர்தல்களால் பெரிதாக எதுவும் மாறிவிடப்போவதில்லை என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கொடுப்பதை வாங்கிக் கொள்வோம் என தாங்கள் கறைபடிகிறோம் என்பதை அறிந்தே கூசாமல் கை நீட்டுகிறார்கள். அனைவரையும் ஊழல்படுத்துவதைத் தவிர இந்தத் தேர்தல் வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

வாசகர்கள் அவசியம் மறுவாசிப்புச் செய்ய வேண்டிய பதிவுகள்: