Showing posts with label மூத்திரம். Show all posts
Showing posts with label மூத்திரம். Show all posts

Sunday, 17 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-8

சாதியத் தீட்டு... தொடர்ச்சி...

மூத்திரத்தை அடக்கு

ஏதாவது ஒரு வேலையாக வெளியே போய் கொண்டிருக்கும் போது, சிறு நீர் முட்டிக் கொண்டு வருகிறது என்றால் உடனடியாக எங்கேயாவது ஒதுங்குவதுதான் மனித இயல்பு. ஆத்திரத்தை அடக்கலாம்; ஆனால் மூத்திரத்தை அடக்கக் கூடாது என்பார்கள். ஆனால், ஐயர் எதிரில் வந்து விட்டால் மூத்திரத்தை அடக்கிக்த்தான் ஆக வேண்டும் என்கிறது சனாதனம். உங்கள் பிளாடர் வெடித்தாலும் பரவாயில்லை; ஆனால் ஐயர் மட்டும் தீட்டும் பட்டு விடக்கூடாது. இது சனாதன தருமம்; மீறக் கூடாது. 

அது போல, ஐயர் ஆத்துப்பக்கமா வரும்போது, உங்களுக்கு வெளிக்கு வந்தா அமுக்கிக் கொள்ளனும்; ஏற்கனவே உட்கார்ந்திருந்தா, வந்ததை உள்ளிழுத்துக் கொண்டு படால்னு எந்திரிச்சடனும். 

"வாயு, அக்கினி, பிராமணாள், சூரியன், சலம், பசு, இவைகளைப் பார்த்துக் கொண்டு ஒரு போதும் மல மூத்திரங்களை விடப்படாது" (மனு 4-48).

பள்ளிக் குழந்தைகளின் வயிற்றிலடிக்கும் சனாதனம்

கரூரில்

அன்றாட சோத்துக்கே திண்டாடும் ஏழைகளின் பிள்ளைகள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரும் சிறார்களின் பசியைப் போக்க தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தால் அங்கேயும் சனாதனம் தனது கோரமுகத்தைக் காட்டுகிறது.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 15 பேர் பட்டியல்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். 15 பேர் இடைநிலைச் சாதியினர். இந்த 15 மாணவர்களும் காலை உணவை புறக்கணித்துள்ளனர். காரணம் கேட்டபோது ஒரு சக்கிலியப் பெண் சமைப்பதால் அதை சாப்பிடக்கூடாது என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நஞ்சை ஊற்றி அனுப்பிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மூன்று வேளை கஞ்சிக்கே வழி இல்லாமல், இடைநிலைச் சாதியைச் சேர்ந்த மாணவர்களின் தாய்மார்கள் ஆறு பேர் அருகில் உள்ள பஞ்சாலைகளில் தினக்கூலிகளாக வேலை செய்பவர்கள். சம்பவம் நடந்தது இந்த ஆண்டு. இது போன்று நடந்து கொண்டால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வோம் என்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் எச்சரித்து அனுப்பி உள்ளார்

தூத்துக்குடியிலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் தலையிட்டு, அனைத்து சாதி மாணவர்களுடன் உணவருந்தி, சாதி வெறிக்கு ஆட்பட்ட பெற்றோர்களுக்கு பாடம் புகட்டி உள்ளார்.

திருப்பூரில்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், திருமலை கவுண்டன்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பள்ளியில் பாப்பம்மாள் என்ற சக்கிலியப் பெண் சமைத்த மதிய உணவை புறக்கணித்ததனால் 88 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது நடந்தது 2018 இல்.

"அம்பட்டன், வேடன், தோணிக்காரன், கருமான் (கொல்லர்), விஸ்வகர்மா, செம்படவன், பிரம்பு வேலை செய்யும் குறவன், ஆயுதம் விற்கும் கருமான்,  நாய் வளர்க்கும் பறையன், கள் விற்கும் சாணார், துணி துவைக்கும்-துணிக்கு சாயம் போடும் வண்ணான், இவர்கள் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்கிறது சனாதனம். அப்படி சாப்பிட்டால் சாப்பிடவனுக்கு பலம் குறையும், ஆயுள் குறையும், இந்த உலகமும் கெட்டழியும், தோஷம் உண்டாகும், தெரியாமல் சாப்பிட்டு விட்டால் அதற்கு பட்டினி விரதம் இருந்து பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது சனாதனம். (மனு 4: 207-223)".

எய்தவன் இருக்க அம்பை நோவானேன். நியாயமாகப் பார்த்தால், சனாதனத்தை நியாயப்படுத்தும் மோடி-நிர்மலா கும்பல் மீதல்லவா வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாயவேண்டும்?

சாணார்கள்

இன்று நாடார்கள் என்று அறியப்படும் சாணார்கள் தீண்டத்தகாத சாதியில்தான் இருந்துள்ளனர். அதனால்தான், 'பள்ளனைத் தொட்டால்தான் தீட்டு; ஆனால் சாணானை பார்த்தாலே தீட்டு" என்ற பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு சாணார், பனை மரத்தின் உச்சியில் இருக்கும் பொழுது அவ்வழியாக ஒரு பார்ப்பனர் வந்தால், "சாமியோ" என்று குரல் கொடுக்க வேண்டும்.  தெரியாமல்கூட பார்ப்பனர் மேலே பார்த்து விடக்கூடாது, பார்த்துவிட்டால் தீட்டாகிவிடும் என்கிற ஒரு முன்னெச்சரிக்கைதான் இதற்குக் காரணமாம்.

மேலும் சாணார்கள் ஊருக்குள் வசிக்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, ஊருக்கு வெளியே, வயல் வெளிகளில் மரத்தடியிலோ, கிணற்று மண்மேடுகளிலோதான் வசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. நா வறண்டு போனாலும், சாணார் வீடுகளில் இடைநிலைச் சாதியினர் தண்ணீர்கூட அருந்த மாட்டார்கள்.
எனது பள்ளிப் பருவ காலத்தில் நான் கண்கூடாகக் கண்ட காட்சிகள் இன்னும் என் நினைவைவிட்டு அகலவில்லை.

சாணார் சாதி உள்ளிட்ட தீண்டத்தகாத கீழ் சாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது; மீறி அணிந்தால், முலை வரி கட்ட வேண்டும் என்ற சட்டம், நம்பூதிரிப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கர் சமஸ்தானத்தில் இருந்தபோது, அதற்கு எதிராக நடைபெற்ற தோல் சீலைப் போராட்டத்தை மறைத்துவிட/ மறந்துவிட முடியுமா என்ன?

சாணார்கள் மீது ஏவப்பட்ட இந்த சனாதன அதர்மத்திற்கு எதிராகத்தான் அய்யா வைகுண்டர் அவர்கள் தனி வழிபாட்டு முறையை உருவாக்கினார். ஆங்கிலேயர் காலத்தில் பலர் மதம் மாறுவதற்கும் இந்த சனாதன தருமமே அடிப்படை. 

மெர்கண்டைல் வங்கி போன்ற ஏற்பாடுகள் மூலம் நாடார்கள் பல்வேறு தொழில்களில் கடுமையாக உழைத்து இன்று பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளதோடு இடைநிலைச் சாதியாகவும் அறியப்படுகின்றனர். இன்று சனாதனத்திற்காக ஓயாமல் கூப்பாடு போடும் தமிழிசை சௌந்தரராஜனும், கரு.நாகராஜனும் இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பதை உலகறியும். ஆனால், நாடார்கள் இன்னமும் சனாதனவாதிகளின்- பார்ப்பனர்களின் நெஞ்சங்களில் சாணார்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், இவர்கள் இன்னமும் நாடார்கள், சாணார்கள், கிராமணிகள் என்றுதான் குறிக்கப்படுகின்றனர். 

தல புராணங்கள் எழுதி தற்பெருமை பேசுவதனால் வரலாற்றை மறைத்து விட முடியாது. கடந்த கால வரலாற்றை நினைவு கூர்ந்தால்தான், அடுத்த கட்டத்தை நோக்கி சமூகத்தை நகர்த்த முடியும். 

வரலாற்றுக் காரணங்களுக்காக நாம் பழி தீர்க்க வேண்டும் என்றால், சனாதனத்தை ஆதரித்துப் பேசும்  ஒருவன் இன்று பொது வெளியில் நடமாட முடியுமா?

கும்பாபிஷேகமும், கிரகப்பிரவேசமும் சாதியத் தீட்டா? வாழ்வியல் தீட்டா? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7

Tuesday, 20 August 2013

மூத்திரக்காடு!

அது ஓங்கி வளர்ந்த பெருங்காடு. அந்தக் காட்டிற்குள் நுழையும் போது நம்மை அறியாமலேயே நமது கண்கள் விரிந்து விடும். வகை வகையான மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் என பரந்து விரிந்த காட்டைக் காண நாலா பக்கமும் நம் கண்கள் சுழலும். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். ஆனால் இந்தக் காட்டை பார்க்கவே நமது கண்கள் கூசும். பாதி மூடிக் கொண்டு ஓரக்கண்ணால், ஒற்றைப் பார்வையுடன்தான் இந்தக் காட்டில் நுழைய முடியும். அக்கம் பக்கம் எட்டிப் பார்ப்பது அபாயகரமானது.
அந்தக் காட்டில் சிறகடிக்கும் பறவைகளும், வண்ண வண்ணப் பூச்சிகளும் எழுப்பும் ரீங்கார ஓசைகள் நம் காது மடல்களை இதமாய் வருடிச் செல்லும். பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசத்தை உள்ளிழுக்க நாசித் துவாரம் போதாது என்பதால் நம்மை அறியாமலேயே வாய் பிளந்து நிற்போம். உடன் வந்தவர் குரல் கொடுக்கும் வரை எத்தனை நேரம் வாய் பிளந்து நின்றோம் என்பதே தெரியாது. ஆனால் இந்தக் காட்டில் நுழையும் போதே கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் கூட்டணி அமைத்துக் கொண்டு மூக்குத் துளையை அடைக்க முற்படும் போதே பற்கள் இறுகி தொண்டைக் குழியும் ஒட்டிக் கொள்ளும். இந்தக் காட்டின் வாசம் மூக்கைத் துளைத்து குடலைப் புரட்டி வாந்தி எடுப்பதற்குள் காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். இல்லை எனில் எந்த உறவுகளைப் பார்க்கச் சென்றோமோ அந்த உறவுகள் நம்மைப் பார்க்க மருத்துவ மனை நோக்கி வர நேரிடும்.
அந்தக் காட்டில் முட்களும், கற்களும் நமது கால்களை பதம் பார்த்து விடலாம் என்பதால்தான் காலணி தேவைப்படுகிறது. இல்லை எனில் வெறுங்காலால் நடப்பதே சுகமானது. அதுவும் ஈர மண்ணில் நடக்கும் போது பாலில் ஊறிய பிஸ்கட்டின் மென்மையை உணர முடியும். ஆனால் இந்தக் காட்டில் காலணி இல்லாமல் நடக்க முயற்சிப்பது தற்கொலை முயற்சியே. காலணி இருந்தால் கூட சில நேரங்களில் ஆளையே கவிழ்த்து விடும். திருடர்கள் ஜாக்கிரதை என்பதைப் போல காலணிகள் ஜாக்கிரதை என எழுதி வைப்பது நலம் பயக்கலாம்.
அந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் மண்ணைத் தட்டி விட்டு பயணத்தைத் தொடரலாம். ஆனால் இந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் பயணம் அதோ கதிதான்.
அந்தக் காட்டில் புலி, சிங்கம், கரடி, யானை, குரங்கு, முயல், பன்றி, மான், பாம்பு என வித விதமான மிருகங்கள் - விலங்குகள் உண்டு. அவற்றில் சில ஆபத்தானவை என்றாலும் ஆயுதம் கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இந்தக் காட்டிலும் மிருகங்கள் உண்டு. மஞ்சளாய், வெள்ளையாய் நெளியும் கொழுத்த புழுக்களை பார்த்த மாத்திரத்திலேயே நம் நெற்றிப் பொட்டு தானே சுறுங்கும். நம் உதட்டின் ஈரத்தை ஈர்ப்பதற்கு படை எடுக்க அணி வகுத்து நிற்கும் பருத்த ஈக்களும், தடித்த கொசுக்களும் நம்மை அச்சுறுத்தும். இந்தக் காட்டு மிருகங்கள் வடிவத்தில் சிறிதென்றாலும் சற்று நேரத்தில் நம்மை கிலி கொள்ள வைத்து விடும்.
அந்தக் காட்டில் மிருகங்கள் பெய்யும் மூத்திரத்தால் காடு செழிக்கும். மரங்கள் வான் முட்ட ஓங்கி உயர்ந்து வளரும். ஆனால் இந்தக் காட்டில் மனித(மிருகங்கள்)ர்கள் பெய்யும் மூத்திரத்தால் தாவரங்கள் பட்டுப் போகும். நெடிதுயர்ந்த இலுப்ப மரத்தின் வேர் நூறு அடி ஆழத்தில் ஒளிந்திருந்தாலும் தேடிப் பிடித்து கருவறுக்கும் ஆற்றல் மனித மூத்திரத்திற்கு உண்டு. வீட்டின் கேட்டையும், நாட்டின் எல்லையையும் காக்கும் இரும்புக் கம்பிகளே இத்துப் போகும் போது காங்கிரீட் காடுகள் மட்டும் தப்புமா என்ன? 
அந்தக் காட்டில் வானம் பொழிந்தால் எட்டுத் திக்கும் மண் வாசம் வீசும். இந்தக் காட்டில் மண்ணைத் தொடும் முன் ஒரு வாடையும், மண்ணைத் தொட்டபின் மற்றொரு வாடையும், நனைந்த மண் காய்ந்த பிறகு புதியதொரு வாடையும், குட்டையில் தேங்கி புழுக்கள் நெளியும் போது மற்றொரு வாடையும் என மூத்திரத்திற்குத்தான் எத்தனை எத்தனை வாடைகள். பேஷினோடு இணைக்கப்பட்ட குழாய் இல்லாததால் பாதி மூத்திரம் நம் முழங்காலை நனைத்திருப்பது அப்போது தெரியாது. பேண்ட் காய்ந்த பிறகு வரும் வாடையைத் தேடும் போதுதான் நம் முழங்கால் நனைந்தது நினைவுக்கு வரும். நினைவாற்றல் அற்றவர்களையும் ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும் வல்லமை இந்த வாடைக்கு உண்டு.
அந்தக் காடுகளுக்குள் நுழையக் கட்டணம் ஏதுமில்லை. பயணச் செலவு மட்டும்தான். ஆனால் இந்தக் காடுகளே கட்டணக் காடுகள்தானே! இந்தக் காடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் ஆடை நனைந்து விடுமோ என்கிற அச்சத்தில் பேருந்திலிருந்து இறங்கி அவசர அவசரமாக அருகில் உள்ள சுவற்றின் ஓரமாய் ஒதுங்கினால் “மிருகங்கள் மட்டுமே இங்கே….- என்கிற வரவேற்பு அர்ச்சனையால் வெளியேர முனைந்த மூத்திரம் கூட வற்றி விடுகிறது. ஆத்திரத்தை அடக்கலாம். ஆனால் மூத்திரத்தை அடக்க முடியுமோ! என்ன செய்ய? இதுதானே இந்தியா!
ஏழை – நடுத்தரவாசிகளே இந்தக் காடுகளில் அடிக்கடி சிக்குபவர்கள். மேட்டுக் குடி மகிழுந்துக்காரர்கள் இந்தக் காட்டில் கால் வைப்பது அரிது என்பதால் இதன் அருமை பெருமைகள் அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது; புரியாது.
ஆண்களுக்கு கூச்சமில்லை. எங்கு வேண்டுமானாலும் மூத்திரம் போவார்கள். நின்றபடியே போவதால் மூத்திரத் தொற்று (urinary infection) தாக்குதல் நடத்த கால தாமதமாகலாம். ஆனால் பெண்களின் பாடோ பெரும் பாடு. இவர்கள் உட்கார்ந்தே போவதால் மூத்திரத் தொற்றின் அதிரடித் தாக்குதல் உடனே தொடங்கும்.  
அந்தக் காடுகள் முதுமலை, ஜவ்வாது மலை, கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, கவுத்தி மலை, நீலகிரி - ஏலகிரி மலை என தமிழகத்தில் தொடங்கி ஏழுமலை, தண்டகாரண்யா, நியாம்கிரி, விந்திய - சாத்பூரா என படர்ந்து விரிந்து இமயமலையாய் உயர்ந்து நிற்கின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பேருந்து நிறுத்தங்கள் - நிலையங்கள் என கன்யாகுமரி முதல் காசுமீரம் வரை நீண்ட நெடிய அடர்ந்த பெருங்காடுகள் இந்தக் காடுகள். தொடர் வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என இந்தக் காடுகள் பல்கிப் பெருகவேச் செய்கின்றன.
அந்தக் காடுகளிலிருந்து மனிதர்களை விரட்டுகிறார்கள் மன்மோகனின் ஏஜெண்டுகள். கோடிகளைச் சுருட்ட அவர்களுக்குத் தேவை கனிம வளங்கள். ஆனால் இந்தக் காடுகளுக்கோ மனிதர்களை அழைக்கிறார்கள் ஆளும் கட்சியின் ஏஜெண்டுகள். நமது கோவணத்திலிருந்தே இவர்கள் இலட்சங்களைப் பார்ப்பவர்களாயிற்றே!.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தக் காடுகளில் சிறந்ததைத் தேர்வு செய்ய நடுவர்களையும் தாண்டி சிறப்பு வல்லுனர்களை நாடினாலும் போட்டி மிகக் கடுமையானது என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்வதே சாலச் சிறந்தது. இன்றைய நிலவரப்படி எட்டுத் திக்கும் நாற்றமடித்து பயணிகளை திக்கு முக்காடச் செய்யும் வேலூர் பேருந்து நிலையக் காடுதான் தமிழகத்தின் முன்னணி மூத்திரக் காடாகத் திகழ்வதாக பயணிகள் கருதுகிறார்கள். சுவாசச் காற்றை நுரையீரலுக்குள் அடைத்து வைக்கும் மூச்சுப் பயிற்சி கலையை கற்க வேண்டுமா? ஒரு முறை வேலூர் மூத்திரக்காட்டிற்கு விஜயம் செய்யுங்கள். ஈஷா யோகிகளைத் தேடி நீங்கள் வெள்ளியங்கிரி போக வேண்டிய அவசியமிருக்காது.
நிலத்தடி நீரைக் கொண்டுதான் அவ்வப் பொழுதாவது இந்தக் காடுகளைக் கழுவுகிறார்கள். அந்த நீருக்கும் இனி ‘ரேட்டு’ வைக்கப் போகிறது தேசிய நீர்க் கொள்கை. எலவசனூர் கோட்டையிலேயே இப்போது ஆறு ரூபாய் எனில் இனி கட்டணம் இரட்டிப்பானால் எவனுக்கய்யா மூத்திரம் வெளியே வரும்? தேசிய நீர்க் கொள்கையால் இனி நமது வீடுகளிலும் இந்தக் காடுகள் முளைக்கப் போகின்றன. குடிக்கவே தண்ணீர் இல்லாத போது மூத்திரத்தையா அலச முடியும்?
இந்தக் காட்டில் பெய்யும் மழையில் 95% தண்ணீர் போக மீதி யூரியா, குளோரைடு, சோடியம், பொட்டாசியம் என கனிமங்கள் உண்டு. இக்கனிமங்களை பிரித்தெடுத்தால் தோல் தொழிற்சாலைகள் (tanning), நெசவாலைகள் (textiles), வெடி மருந்து (gun powder) ஆலைகளுக்குத் தேவையான நீரை இந்தக் காடுகளிலிருந்தும் பெற முடியும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். மாணாக்கர்களுக்கு மூத்திர மேலாண்மை (Urine Management) குறித்து வகுப்பெடுக்க கலாம்கள் வருவார்களா? 

தொடர்புடைய பதிவுகள்: