Tuesday, January 25, 2011

கால் செருப்பு ஏ.சி.யிலே! கத்தரிக்காய் சாலையிலே!

நான் இந்த கட்டுரையை பேனாவைக் கொண்டு எழுதியிருந்தால் பேனாவின் அவசியமும் அதன் தரமும் முக்கியமானதாய் இருந்திருக்கும். பொத்தான்களை அழுத்தியே கட்டுரையை முடிக்கும் காலம் இது. ஆனாலும் பேனாவின் பயன்பாட்டைத் தவிர்த்தவிட முடியாது.

நாம் பயன்படுத்தும் பேனா சிறந்த பேனாவாக இருக்குமேயானால் நமக்கு எரிச்சல் வராது. எனவேதான் சிறந்த பேனாவைத் தேடுகிறோம். சிறந்த பேனா எது என எப்படி கண்டுபிடிப்பது? மத்திய அரசின் ஐ.எஸ்.ஐ (I.S.I) முத்திரை பெற்றிருந்தால் அது சிறந்த பேனாவாக இருக்கும் என்பதால் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என பார்த்துவிட்டுத்தான் வாங்குவோம். முன்பு ஐ.எஸ்.ஐ என்றிருந்த முத்திரை இன்று பி.ஐ.எஸ்.(B.I.S) ஆக பெயர் மாற்றம் அடைந்துள்ளது.

ஆனால் இன்று பொருள் வாங்கும் போது பி.ஐ.எஸ் மட்டுமல்ல அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனம் ஐ.எஸ்.ஓ-9001 (I.S.O-9001) தரச்சான்று பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதற்காகவே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று பெறுவதோடு "இது ஒரு ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று பெற்ற நிறுவனம்" என பெருமையாக அறிவித்துக் கொள்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலாளித்துவ அறிஞர் டெமிங் என்பவர் ஜப்பானில் இருந்தபோது உருவாக்கிய திட்டமிடு-செய்-ஆராய்-நிறைவேற்று (Plan-Do-Check-Act/PDCA Cycle) என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து ஒரு நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்கான முறைமையை (system), விதி முறைகளாக வகுத்திருக்கிறது ஐ.எஸ்.ஓ (I.S.O) என்கிற பன்னாட்டு அமைப்பு. இந்த விதிமுறைகளுக்கு ஐ.எஸ்.ஓ-9001 என்று பெயர்.  இந்த விதிமுறைகளின்படி ஒரு நிறுவனம் செயல்படும் பட்சத்தில் பி.வி.கியூ.ஐ (B.V.Q.I)  என்ற நிறுவனம் தனது தணிக்கையாளர்களை (auditors) அனுப்பி சோதித்தறிந்து ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்றிதழை வழங்குகிறது.  ஒரு முறை பெற்றால் மட்டும் போதாது ஆண்டுக்கு ஒருமுறை கவனக் கண்காணிப்பின் மூலமும் (surveillance) இரண்டாண்டுக்கு ஒருமுறை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மறு சான்றிதழுக்கு (re-certification) உறுதி செய்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஓ-9001 என்று குறிப்பிட்டாலும், ஐ.எஸ்.ஓ-9001-2008 என்பதுதான் அதன் தற்போதைய தர மேலான்மை முறைமைகள் (Quality Management Systems-QMS) குறித்த ஆவணம்.

எனவே பொருளுக்கான தரச்சான்று மட்டுமல்ல, நிறுவனத்துக்கான தரச்சான்றும் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

பொருள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல,சேவைத்துறையில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

ஐ.எஸ்.ஓ-9001 விதிமுறைகளை அவ்வப்பொழுது மாற்றியவண்ணம் உள்ளனர். வெளிப் பணிகள் (out sourcing) குறித்த விதிகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதால் வெளிப்பணிகள் குறித்த விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகின்றன. 

இதுவரை தொழிற்சாலைகள் மட்டுமே பெற்று வந்த இந்தச் தரச்சான்று இன்று ஜவுளிக்கடைகள், பள்ளிகள்,கல்லூரிகள்,காவல் நிலையங்கள் என பல்துறையினரும் பெறுவதற்கானதாக மாறி வருகிறது. அனைத்து வகையான மோடி மஸ்தான் வேலைகளைச் செய்துதான் பல நிறுவனங்கள் இத்தரச் சான்றை பெறுகின்றனர்.சுருங்கச் சொன்னால் வாடிக்கையாளார்களின் உவகையே (delight) எங்களது இலட்சியம் எனக் கூறிக்கொண்டு ஒரு நிறுவனம் புகழடையவும், லாபமீட்டவும்தான் இத்தகைய பீடிகைகள். 

சமீபத்தில் ஒரு நிறுவனத்திற்கு தணிக்கையாளராகச் (auditor) சென்ற ஒருவர் தனது வீட்டிற்கு ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று பெறப் போவதாகக் கூறியுள்ளாராம்.  ஒருவர் வீடு கட்டும் போது பின்பற்ற வேண்டிய முறைமைகளை (system) ஐ.எஸ்.ஓ நிறுவனம் விரைவில் வகுக்கும் என எதிர்பார்க்கலாம்.  பிறகென்ன? இனி 'இது ஒரு ஐ.எஸ்.ஓ தரக்சான்று பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு' என 'புரமோட்டர்கள்', விளம்பரம் செய்து கோடிகளை சுருட்டுவார்கள். ஆக இனி இலட்சங்களைக் கொட்டி வீடு வாங்க முடியாது என குடிசை போட்டால் ஐ.எஸ்.ஓ-9001 தரச்சான்று இருக்கிறதா? எனக்கேட்டு இடித்துத் தள்ள ஊராட்சி-நகராட்சி நிர்வாகிகள் வருவார்கள் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்!

'தரமான வீடு' நல்லதுதானே என ஒருசிலர் வாதிடலாம்.தரம் என்ற போர்வையில் இலாபத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் முதலாளித்துவ கோட்பாடு இருக்கும் வரை இந்த அக்கப் போர்களை நாம் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

வழக்குக்காக காவல் நிலையம் செல்வோரின் உவகையையும், நகராட்சி மற்றும் பேருந்து நிலைய கக்கூசுகளைப் பயன்படுத்துவோரின் உவகையையும் "வாடிக்கையாளார்களின் உவகையே (delight) எங்களது இலட்சியம்" என பறைசாற்றுவார்களா?

ஐ.எஸ்.ஓ தரச்சான்று குறித்து ஆய்வு செய்ய வந்த அயல் நாட்டு அறிஞன் ஒருவன் கேட்டானாம்,  "காலில் போடும் செருப்பை ஏ.சி அறைகளில் வைத்து விற்கிறீர்கள், உணவாக உட்கொள்ளும் காய்கறிகளையும் பழங்களையும் ரோட்டோரத்தில் விற்கிறீர்களே?" என்று.




தொழிலாளர்களைச் சுரண்டவும், வாடிக்கையாளர்களைக் கவரவும், பொதுவில் மக்களை ஏய்க்கவுமான ஒரு யுக்கிதான் ஐ.ஒஸ்.ஓ தரச்சான்று. இதற்கு மேல் இதில் வாடிக்கையாளரின் உவகையும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை. விஜய்களும், விஜய்காந்த்துக்களும் "டாக்டர்" பட்டம் வாங்கிக் கழுத்தில் மாட்டிக்கொள்வதைப் போலத்தான் இதுவும்.  

No comments:

Post a Comment