Thursday, 5 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

VI

"சமத்துவத்தை இந்துமதம் அங்கீகரிக்கிறதா?

இந்தக் கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்படவில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும், ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளதொரு அமைப்பு அது‌. சாதிகளைத் தோற்றுவித்ததில் மனுவுக்கு பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்;  நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்தவகையில் சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து மனுவில் குற்றம், அவர் தரப்படுத்தி,  படிமப்படுத்தும் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் பொறுப்பு வகித்தார் என்பதில் ஐயமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தளத்தில் வைக்கப்பட்டான்‌. அதற்கு அடுத்து சத்திரியர்; சத்திரியருக்குக் கீழே வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்பதாகும்; எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவை கூடத்தின் விழா கூட்டத்திற்காக வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல அது. மக்களினத்தவரிடையே கடைபிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும் அமலாக்கப் படவேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக்கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்."

-பக்கம்-38, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 6.

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1


Wednesday, 4 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2

 II

"இந்துக்களின் மத, ஆசார, சமுதாய வாழ்வினை ஆளும் விதிகளை எடுத்துரைக்கும் ஒரு தெய்வீக நெறிமுறைதான் மனுஸ்மிருதி. அதனை இந்துக்களின் விவிலியம் என்று கருதலாம். இந்து மதத் தத்துவமே அதில் அடங்கியுள்ளது" 

- பக்கம் 12, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி-6

III

"ஒரு இந்துவின், வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது‌. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாறு கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி, எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையில் உள்ள முடியை  எவ்வாறு கத்தரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும், ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்த ஒரு செயலும், இந்துவின் வாழ்வில் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற ஒரு சகஜ விஷயமாக, படித்த இந்துக்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது விந்தையே" 

- பக்கம் 34, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி 6

IV

"எல்லா மதங்களும் நல்லவை மற்றும் உண்மையானவை என்று கருதுவது தவறான நம்பிக்கையாகும். ... மதங்களிடையே பாகுபாடு காண்பது தேவையற்றது என்ற கருத்தும் மிகவும் தவறானதாகும்..... மதம் என்பது ஓர் அமைப்பு அல்லது ஓர் ஆதிக்க விளைவு; சமுதாயத்திற்கு அது உதவலாம் அல்லது தீங்கு பயக்கலாம்....இந்து மதம் எந்த லட்சியத்திற்கு உதவுகிறது, எத்தகைய சமூக லட்சியத்தை முன்வைக்கிறது என்கிற பரிசீலனைக்குச் செல்லாமல் மதங்கள் பலவாயினும் அவை அனைத்துமே சிறந்தவைதான் என்று இந்துக்கள் கூறுவதன் மூலம் இந்து மதத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதை தவிர்க்க முயலுகின்றனர் இந்துக்கள்.

இந்து மதத் தத்துவப் பிரச்சினையை மூடி மறைக்க எவ்வளவுதான் ஒரு இந்து முயன்றாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது."

- பக்கங்கள் 35, 36, 37-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6

V

"இந்து மதத் தத்துவத்தை நிர்ணயிக்க நியாயச் சோதனை, பயனீட்டுச் சோதனை (test of justice and test of utility) என்ற இரண்டு சோதனைகளையும் பிரயோகிக்க நான் எண்ணியுள்ளேன். முதலில் நான் நியாயப் பரிசோதனையை நடத்துகிறேன். அவ்வாறு செய்வதற்கு முன்பு நியாயம் அல்லது நீதி என்ற கொள்கைக்கு நான் எவ்வாறு பொருள் கொள்கிறேன் என்பதை விளக்க விரும்புகிறேன்.

நியாயம் என்பது எப்போதுமே சமத்துவம், வீதாச்சாரம், "சமன் செய்தல்" என்ற கருத்துக்களைத் தூண்டுகிறது. நடுநிலை, நேர்மை என்பது சமத்துவத்தைக் குறிக்கிறது. விதிகளும், கட்டுப்பாட்டு முறைமைகளும், நேர்மையையும், மதிப்பின் சமத்துவத்தைப் பொறுத்தது‌. எல்லா மனிதர்களும் ஒரே சாராம்சத்தைக் கொண்டவர்களே; அந்தப் பொதுவான சாராம்சம், அவர்களுக்கு ஒரே சீரான அடிப்படை உரிமைகளையும், சமமான சுதந்திரத்தையும் பெற்றுத் தருகிறது.

சுருங்கக் கூறின், நீதி என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மற்றொரு பெயரே. இந்து மதத்தை மதிப்பிடுவதில், நான் இந்தப் பொருளில்தான் நீதியை உரைகல்லாக பயன்படுத்துகிறேன்.

இவற்றில் எந்தக் கூற்றினை இந்துமதம் அங்கீகரிக்கிறது? இந்தக் கேள்வியை ஒன்றன்பின் ஒன்றாக ஆராய்வோம்!"

- பக்கம் 37, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்








Tuesday, 3 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1

I

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காகப் பார்ப்பன இந்துத்துவாக் கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டவர்களைத் தமிழக பாஜக தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதேபோல பட்டியலின மக்கட்பிரிவினரில் பிரபலமாக உள்ளவர்களை இழுக்க பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி. அந்த வரிசையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, திரைத்துறை பிரபலங்களான இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட ஒரு சிலரை ஏற்கனவே ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பல் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டது. 

பிரபலமான தலித்துக்களை மட்டும் தங்கள் பக்கம் இழுத்தால் மட்டும் போதாது, பெருவாரியான தலித் மக்களையும் தங்கள் பக்கம் இழுக்கவேண்டும் என்பதற்காக அம்பேத்கரை ஒரு இந்துத்துவா ஆதரவாளராகக் காட்டுவதற்குப் பார்ப்பன பாஜக கும்பல் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் பார்ப்பன சனாதன இந்து மதத்தின் நேரடிப் பிரதிநிதியான மோடியை, இந்து மதத்தையும் அதன் தத்துவத்தையும் தனது இறுதி மூச்சு வரை மிகக் கடுமையாகச் சாடியும், எழுதியும், போராடியும் வந்த அம்பேத்கரோடு ஒப்பிட்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளையராஜாவைக் கொண்டே முகவுரை எழுத வைத்தனர். இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கங்கை அமரன் இந்துத்துவாவிற்கு ஆதரவாக் காட்டுக் கூச்சல் போடும் அளவிற்கு அது தற்போது வேகம் எடுத்துள்ளது. 

ஒரு வேளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமா ஒருவர் இல்லையென்றால், ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் கிருஷ்ணசாமி, இளையராஜா, கங்கை அமரன் போன்ற பட்டியலின பிரபலங்களை அடியொற்றி இந்துத்துவாக் கும்பலுக்கு பலியாகி இருக்கக்கூடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. சனாதன தர்மத்தையும், அம்பேத்கரையும் பெரியாரையும், திராவிடக் கருத்தியலையும் திருமா மிகத்தெளிவாக உள்வாங்கி இருப்பதால்தான் அவர் இந்துத்துவாக் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்கிறார். அவரது தொண்டர்களும் அவருடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து பார்ப்பன இந்துத்துவாக் கும்பலுக்கு எதிராகக் களமாடி வருகின்றனர்.

இன்றைய அரசியல் சூழலில் அம்பேத்கரின் கருத்துக்களை உள்வாங்கினால் மட்டுமே பார்ப்பனக் கும்பலை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியும்‌. அம்பேத்கரை கொண்டாடுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். அம்பேத்கரின் எழுத்துக்களில் உள்ள ஒரு சில விவர முரண்களை எடுத்துக் கொண்டு அவரை இந்துத்துவா ஆதரவாளராகக் காட்ட முயற்சிப்பது மடமைத்தனம் மட்டுமல்ல, கயமைத்தனமும் ஆகும். 

பாரதிய ஜனதா கட்சியும், பார்ப்பன ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பலும் நிலைநாட்ட விரும்பும் சனாதன தர்மம் எத்தகையது என்பதை, சனாதன தர்மத்தின் மூல நூலான மனுதர்ம சாஸ்திரத்தை, உலகில் வேறெவரையும் விட அம்பேத்கர் மட்டுமே மிக ஆழமாக அலசி, ஆராய்ந்து, இந்துமதம்  என்பது இந்து மக்களிடையே சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை மறுக்கும் ஒரு மக்கள் விரோத மதம் என்பதை மிகவும் ஆணித்தரமாக, 'இந்து என்பது ஒரு மதமே அல்ல' என நிறுவியுள்ளார். 

எந்த அம்பேத்கரை தூக்கிப் பிடித்துக்கொண்டு பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பல் வருகிறதோ அதே அம்பேத்கரின் எழுத்தீட்டிகளைக் கொண்டே பார்ப்பனக் கும்பலின் குடலை உருவி இந்தியாவெங்கும் தொங்க விடுவோம். இனியும் தாமதிப்பது ஆபத்து. இந்துத்துவாவிற்கு எதிராகக் களமாட விரும்புவோரே! அம்பேத்கரைப் படியுங்கள்! பரப்புங்கள்!

இதன் ஒரு பகுதியாக "இந்து மதத் தத்துவம்" என்ற கட்டுரையில் (பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6, இயல் 1, இந்து மதத் தத்துவம், பக்கம்  1 முதல் 127 வரை) அம்பேத்கர் தொகுத்து வழங்கியுள்ளவற்றில் சில முக்கியப் பகுதிகளை மட்டும் அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முழுமையாகப் படிக்க விரும்புவோர், அம்பேத்கரின் முழு கட்டுரையையும் படியுங்கள். படிக்கும்போது மனுதரும சாஸ்திரத்தையும் சேர்த்துப் படியுங்கள்.

ஊரான்

தொடரும்

Saturday, 5 February 2022

'நீட்'டும், வெங்காயம் வெள்ளப் பூண்டும்!

பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அல்லது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள், இவற்றில் படித்த பாடம் பற்றிய ஒருவரின் அறிவாற்றலை தீர்மானிப்பது பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே.

இரண்டு தேர்வுகளிலும் குறைந்தது ஐந்துக்கும் குறையாத எண்ணிக்கையில் கேள்வித்தாள்கள் வெவ்வேறு குழுவினரால் தயாரிக்கப்படும். குழுக்களில் யார் யார் இருக்கிறார்கள் என்பதும், ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் தொடர்பு ஏதும் இல்லாமல், தேர்வு அன்று கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்படும் வரை இரகசியம் காக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே அதிகார அமைப்புகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி இருப்பதால் மேற்கண்ட கேள்வித்தாள்களை சேகரித்து, வேண்டிய பார்ப்பன மாணவர்களுக்கு மட்டுமே இரகசியமாக சுற்றுக்கு விடுவது வழக்கம்.

பொதுத் தேர்வு வினாத்தாள்களை சேகரித்தாலும், கிட்டத்தட்ட மொத்தப் பாடங்களையும் மீண்டும் மீண்டும் படித்து தயாரிக்க வேண்டுமென்பதால் அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். நாமக்கல் போன்ற பகுதிகளில் உள்ள சில தனியார்  பள்ளிகளால் மட்டும் பொதுத்தேர்வு முறையில் அதிகமான மாணவர்களை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்களைக் கைப்பற்ற  முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் கோடிகளை செலவு செய்து கேள்வித்தாள்கள் அனைத்தையும் இரகசியமாகப் பெற்று மீண்டும் மீண்டும் அதே கேள்விகளைக் கொடுத்து மாணவர்களுக்குத் தொடர் மாதிரித் தேர்வுகளை நடத்தியதால்தான். 

ஆனால், நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள், கோடிட்ட இடத்தை நிரப்புதல் அல்லது சரியான விடையை ‘டிக்’ செய்து தேர்வு செய்தல் என்ற எளிமையான வடிவில் இருப்பதால் அதற்குத் தயாரிப்பது மிக மிக சுலபம். தில்லுமுல்லு செய்து தங்களது சாதி மாணவர்களை மட்டும் தேர்வுக்குத் தயார் படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு நுழைவுத் தேர்வு முறைதான் சுலபமானது என்பதனால் நுழைவுத்தேர்வு முறையை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். அதுவும் நீட் போன்ற தேர்வுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் கேள்வித்தாள்களை முன்கூட்டியே பெற்று தங்களுக்கு வேண்டிய சாதி மாணவர்களுக்கு இரகசியமாக சுற்றுக்கு விடுவது பார்ப்பனர்களுக்குச் சுலபமானது. பணம் இருந்தால் மட்டும் கேள்வித்தாள்களை பெற்றுவிட முடியாது. மாறாக தங்களுக்கான ஆட்கள் அதிகார பீடத்தில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். சாத்தியம் என்பதால்தான் பார்ப்பனர்களால் சாதிக்க முடிகிறது. இது காலங்காலமாக நடந்து வரும் ஒரு மோசடி. மற்றபடி பார்ப்பனர்களைப் பொருத்தவரை வெங்காயம் வெள்ளப் பூண்டும் போல அறிவும் திறமையும் வாழ்வதற்குத் தேவையற்றவைதான். இது மிகவும் ‘பரம இரகசியம்' என்பதால் அந்தப் பரமனே வந்தால்கூட இதைக் கண்டுபிடிக்க முடியாது.

குறிப்பு: தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கு முயன்ற ஒரு சில பெற்றோர்களுக்கு இது புரிந்திருக்கும்.

ஊரான்


Thursday, 27 January 2022

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!

நெற்றிப் பொட்டு துடிக்கிறது, கண்கள் குளமாகி  விட்டன. நா வறண்டு விட்டது. இதயம் துடிக்கிறது. என்ன வென்று சொல்ல? எழுத வார்த்தைகள் கிடைக்க வில்லை.

சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு மூன்று மணி நேரம் கழித்து பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தேன். அகோரப் பசி. வலது கையோ சோற்றுப் பருக்கைகளை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தது. இடது கையோ கைபேசியில் முகநூல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தது.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. வலது கையில் சோற்றுப் பருக்கைகள் சிதறின. இடது கை விரல்களோ அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல நடுங்கின.

“விவசாயிகள் விடுதலை முன்னணி, கடந்து வந்த கரடுமுரடான பாதையில், நெடியதொரு காலம் உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கு, தனது சுக போகங்களைத் துறந்து, குடும்பத்தை மறந்து இன்முகத்துடன் ஒப்படைத்த ஒப்பற்றத் தோழனே ஓய்வெடு!” இதுதான் அந்தப் பதிவு.

எனது நாற்பதாண்டு கால புரட்சிகர அரசியல் வாழ்க்கையில் எண்ணற்றோருடன் பயணித்திருக்கிறேன். எல்லோருமே மனதில் நீங்கா இடம் பெற்று விடுவதில்லை. ஒரு சிலரே இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கின்றனர்.

1980 களின் தொடக்க காலத்தில் புதியதொரு புரட்சிகர மாற்று அரசியலை என்னுள் ஆழமாக ஊன்றிய அரசியல் ஆசான் அவர். பிரியமான ‘ரகு’வாகத்தான் அவரை நான் அறிவேன். சுமார் பத்து ஆண்டுகாலம் அவருடன் நான் பயணித்திருப்பேன். அதன் பிறகு அரசியல் பணிக்காக அவர் வேறு பகுதிக்குச் சென்று விட்டாலும், அமைப்பின் மாநாடுகளில், பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவரைக் காண எனது கண்கள் ஏங்கும்.’கண்டேன் சீதையை’ என்பதைப் போல அவரைக் கண்டு விட்டால் எனது நெஞ்சம் பூரித்து போகும்.

யார் சொன்னது புரட்சியாளர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்று? ரகுவோடு உறவாடியவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் ரோசாவின் ராசாக்கள் என்பது.

மக்கள் கலை இலக்கியக் கழக முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் மறைந்த போது அழுதேன்! அழுதேன்! கண்கள் கனலாய் ஆன போதும் அழுதேன்.

என் ஆசான் ஆருயிர்த் தோழன் ரகுவின் மறைவால் இன்று மீண்டும் அழுகிறேன், நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தை மட்டுமே சுமந்து கொண்டு!

துயரத்துடன்

தமிழ்மணி

குறிப்பு: எதிர்த்து நில் வலைப் பூவிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்