Monday, 13 April 2026

அடுப்பங்கரை என்ன கர்ப்பக்கிருகமா?

இன்று கைபேசிகளில் எப்படி கார்ட்டூன் படங்கள் சிறுவர்களை ஈர்க்கின்றனவோ, அது போல ஒரு காலத்தில் தினத்தந்தியின் சிந்துபாத் கதை. தலைமுறைகளைக் கடந்தும் லைலாவுக்காக சிந்துபாத்தின் சாகசங்கள் இன்றும் முடிவே இல்லாமல் தொடர்கின்றன. 

கைபேசியின் கார்ட்டூன் படங்களுக்கு, கண்ணும் காதும் இருந்தால் மட்டும் போதும். ஆனால் சிந்துபாத்துக்கு நாலு எழுத்து கூட்டிப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


பள்ளிப் பருவ காலங்களில் மேல்பாலூர் சங்கரன் டீக்கடையில் தினத்தந்தி இரண்டாம் பக்கத்தைப் புரட்டாமல் இல்லம் திரும்பினால்,  லைலாவுக்கு என்ன ஆனதோ என்ற ஏக்கத்தில் அன்றைய இரவுத் தூக்கம் சற்று எட்டியே நிற்கும்.

காலையில் மொடமொடப்போடு வரும் தினத்தந்தி பகல் முழுக்க முரட்டுக் கைகளால் புரட்டப்பட்டு ஒவ்வொரு எழுத்தும் அலசப்படுவதால், மாலையில் அது சலசலத்து நைந்து போயிருக்கும். மறுநாள் அவை போண்டாக்களின் அம்மணத்தை மறைக்கும் ஆடைகளாய் மாறியிருக்கும். 

ஊருக்கு ஒரு டீக்கடை இருந்தால் போதும்,  உள்ளூர் கிசுகிசு முதல் உலக நடப்பு வரை அத்தனையையும் அசைபோட வைக்கும். 

இல்லங்களில் ‘தினமணி’யும் இளைஞர்களின் கைகளில் ‘த இந்து’ (THE HINDU) ஆங்கில நாளேடு தஞ்சமடைவதும், பெட்டிக்கடைகளில் வார மாத நாளேடுகள் சரஞ்சரமாய் தொங்குவதும், பேருந்துப் பயணங்களின் போது அவைகளைப் புரட்டுவதும் கடந்த கால நினைவலைகள். 

அறிவு ஜீவியாய் அடையாளப்படுத்திக் கொள்ள நாளேடுகளின் நடுப்பக்கக் கட்டுரைகளும், கல்லூரிக் காலங்களில் என்னதான் பாடங்களை ஆங்கில வழியில் படித்தாலும், நாட்டு நடப்புகளை ‘த இந்து’ நாளேட்டில் வாசிக்கும் போது சில சொற்களுக்கு பொருள் புரியவில்லை என்றாலும் ஆங்கிலத்தை அனாயசமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்ற தருணங்களும் தன்னம்பிக்கையின் தடயங்களே.

ஆனால் இன்று டீக்கடைகளில் பெஞ்சுகள் இல்லை, வீடுகளில் நாளேடுகள் இல்லை, இளைஞர்களின் கைகளில் ‘த இந்து’வும் இல்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான் கைபேசி. 

வாட்ஸப்பின் குறுஞ்செய்திகளிலும், அரை நிமிட ரீல்ஸ் வீடியோக்களிலும், AI யின் வேகத்தில் பயணிக்க விரும்புவதால்  ‘ஆஃப் பாயில்களாக’ நாம் ஆகிவிட்டோமோ என அஞ்ச வேண்டியுள்ளது. 

இதற்குமேலும் இதை நீட்டித்தால் நம் விரல்கள் அனிச்சையாக மேலே நகர்ந்துவிடும் என்பதால் மீதியை நாளை பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

Sunday, 12 April 2026

பழைய அறநெறிகள் ஏன் தோற்றுப் போகின்றன?

சமூக வலைதளங்களிலும் நண்பர்கள் குழுக்களிலும் அறநெறி இலக்கியங்கள், குறிப்பாகத் திருக்குறள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

ஒரு சாரார் இலக்கியங்களின் தொன்மையையும் பெருமையையும் பேச, மற்றொரு சாரார் அந்த அறநெறிகள் ஏன் ஈராயிரம் ஆண்டுகளாகியும் மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்கிற யதார்த்தமான கேள்வியை முன்வைக்கின்றனர். இந்த முரண்பாடுகளைச் சமூகக் கட்டமைப்பின் பின்னணியில் நின்று அலசுவது அவசியமாகிறது.


1. அறநெறி நூல்கள்: அன்றைய கண்ணாடிகள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் அன்றைய காலத்தின் நிலைக்கண்ணாடிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கிரேக்க, இலத்தீன் போன்ற செம்மொழிகளில் பல இலக்கியங்கள் இன்று வழக்கொழிந்து போன நிலையில், தமிழில் இன்றும் அவை புழக்கத்தில் இருப்பது தமிழ் மொழியின் தனிச்சிறப்பு.
அக்கால புலவர்கள் மக்கள் நீதிநெறி தவறாமல் வாழ வேண்டும் என்று விரும்பினர். அதன் விளைவாகவே 'அறம், பொருள், இன்பம்' எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் திருக்குறள் போன்ற நூல்கள் உருவாகின. "சாமி கண்ணைக் குத்தும்" என்று குழந்தைகளைப் பயமுறுத்துவது போல, சமூக ஒழுக்கத்தை நிலைநாட்ட வள்ளுவர் போன்ற அறிஞர்கள் சில இடங்களில் கடுமையான சொற்களை (மாக்கள், அவியினும் வாழினும் என்) கையாண்டிருக்கலாம் என்பது ஒரு பொதுவான அனுமானம்.
2. அறநெறி போதனை: சீரழிவின் அறிகுறியா?
எந்த ஒரு சமூகத்தில் அறநெறிகள் அதிகமாகப் போதிக்கப்படுகின்றனவோ, அந்தச் சமூகம் அத்துணை தூரம் சீரழிந்து போயுள்ளது என்பதே கசப்பான உண்மை. ஒரு நோயாளிக்குத்தான் மருந்து அதிகம் தேவைப்படும். 
அதுபோல, சமூகத்தில் கள்ளுண்ணாமை, கொல்லாமை, கூடா ஒழுக்கம் போன்றவை மீறப்பட்டதாலேயே அவை குறித்த போதனைகளும் அதிகரித்தன.
இவ்விலக்கியங்கள் மனித ஒழுக்கத்தை வலியுறுத்திய முக்கியமான நெறி நூல்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை பெரும்பாலும் "தனிமனிதன் திருந்தினால் சமூகம் மாறிவிடும்" என்ற புள்ளியிலேயே சுழல்கின்றன.
நோயின் மூலத்தைக் கண்டறிவதை விட (Diagnosis), நோயின் அறிகுறிக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் போக்கையே பழைய இலக்கியங்கள் கொண்டிருந்தன.
3. தனிமனித அறம் vs சமூகக் கட்டமைப்பு
திருக்குறள் எங்கும் ஒலிக்கிறது. மைதானங்கள் முதல் பேருந்துகள் வரை வள்ளுவன் காலடி படாத இடமே இல்லை. ஆனால், யதார்த்தம் என்ன?
கள்ளுண்ணாமை போதிக்கப்பட்ட மண்ணில்தான் மது விற்பனை உச்சத்தில் இருக்கிறது. கொல்லாமை பேசும் மண்ணில்தான் வன்முறைகள் பெருகுகின்றன.
ஏன் இந்த முரண்?
"எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்பது இயற்பியல் உண்மை. ஆனால், அறநெறிகள் எத்தனை முறை ஊர்ந்தாலும் மனித மனம் எனும் கல் ஏன் தேயவில்லை? இதற்குக் காரணம் சீரழிவுகளின் ஊற்றுக்கண் தனிமனித ஒழுக்கமின்மை அல்ல; மாறாக அது அந்தச் சமூகத்தின் அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பின் வெளிப்பாடாகும்.
வள்ளுவர் காலத்துச் சீரழிவுகளுக்கு நிலவுடைமைச் சமூகம் காரணமாக இருந்தது. இன்றைய சீரழிவுகளுக்குப் பின்னால் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளும், அரை-நிலவுடைமைச் சிந்தனைப் போக்குகளும் உள்ளன. இக்கட்டமைப்புகளை மாற்றாமல், வெறும் போதனைகளால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
4. மார்க்சியப் பார்வையும் இன்றைய தேவையும்
காரல் மார்க்சிற்கு முன்பு வரை, உலகில் எந்த மொழியிலும் சமூகக் கட்டமைப்பை மாற்றுவது குறித்து விரிவான உரையாடல்கள் நிகழவில்லை. பழைய இலக்கியங்கள் மொழியின் பெருமைக்காகவும், வரலாற்றுச் சான்றாகவும் போற்றப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. ஆனால், அவை இன்றைய சிக்கல்களுக்கு நேரடியான நடைமுறைத் தீர்வுகளைத் தந்துவிட முடியாது.
இன்றைய தேவை:
அறநெறிகளைப் புனிதப் பிரதிகளாகப் போற்றுவதைவிட, அவற்றைப் மறுவாசிப்பு செய்வது.
தனிமனிதனைத் திருத்தும் முயற்சியை விட, சுரண்டல் மற்றும் சீரழிவுகளுக்கு அடிப்படையாக உள்ள சமூகக் கட்டமைப்பை மாற்றப் போராடுவது அவசியமாகிறது.
பழைய அறங்களுக்குப் பதிலாக, சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையிலான புதிய அறங்களை நோக்கி நகர வேண்டும்.
முடிவுரை
அறநெறிகள் சமூகத்தை அழகுபடுத்தலாம்; ஆனால் சமூகக் கட்டமைப்பு மாறும்போதுதான் மனித மனங்களின் மீதான அறநெறிகளின் தாக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
கட்டமைப்பு மாறினாலும் சீரழிவுகள் தொடராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, நற்சமூகத்தை அமைக்கத் தொடர்ச்சியான போராட்டங்களும், விழிப்புணர்வுமே ஒரே வழி. பழைய இலக்கியங்களை நினைவுகூருவோம்; ஆனால் புதிய சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னெடுப்போம்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்...(948) என இதற்கும் வள்ளுவன்தான் வழி கூறுகிறான்.
ஊரான்
தொடர்புடைய‌ பதிவு

Saturday, 11 April 2026

வள்ளுவனோடு முரண்படலாமா?

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? (குறள் 420)
அதாவது,

காதுகளால் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அறிவைவிட, உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், உயிருடன் இருந்தாலும் இறந்ததிற்குச் சமமானவர்கள் என்பது வள்ளுவர் கருத்து.
இந்தக் குறளில் இவ்வளவு கடுமையாக ஏன் தெய்வப் புலவர் சாடுகிறார்?

என்று இதன் மீது ஒரு நண்பர் கேள்வி எழுப்புகிறார்.

இதன் மீது எனது புரிதல்,


திருக்குறள் போன்ற ஒரு இலக்கியத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதைச் சமூக-பொருளாதாரப் பின்னணியோடு (Socio-economic context) இணைத்துப் பார்க்கும்  அணுகுமுறை தேவை. இதை கீழ்கண்டவாறு அணுகலாம். 

1. உற்பத்தி முறையும் கால மாற்றமும்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் உற்பத்தி உறவுகள் வேறு, இன்றைய முதலாளித்துவ அல்லது நவீனத் தொழில்மயமான உற்பத்தி உறவுகள் வேறு. அன்றைய அறிவு என்பது பெரும்பாலும் 'கேள்வி' (Oral tradition) வழியாகவே பகிரப்பட்டது. 

அச்சு இயந்திரங்களோ, இணையமோ இல்லாத காலத்தில் 'கேட்டல்' என்பது மட்டுமே தகவல்களைப் பெறுவதற்கான ஒரே வழி. அதனால்தான் வள்ளுவர் 'கேள்வி'க்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். இன்று தகவல் பெருக்கம் (Information Overflow) உள்ள சூழலில், எதைக் கேட்க வேண்டும், எதை விட வேண்டும் என்கிற பகுத்தறிவுதான் முதன்மையானது.

2. "தெண்டத் தீனி" - வள்ளுவரின் சாடல்

"செவியின் சுவையுணரா வாயுணர்வின் ... மாக்கள்" என்று அவர் சொன்னது, அறிவுத் தேடலே இல்லாமல் வெறும் உடல் நுகர்வுக்காக மட்டுமே வாழ்பவர்களைத்தான். 

கேட்டுவிட்டுச் சும்மா இருப்பவர்களைக்கூட அவர் 'தெண்டத் தீனி' என்றுதான் மறைமுகமாகச் சொல்கிறார். 

மற்றொரு குறளில்:

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." (391)

என்று 'கற்றபின் அதற்குத் தக நிற்றலை' (Action) வலியுறுத்துகிறார். வெறும் செவி நுகர்வு மட்டுமே பயன் தந்துவிடாது என்பதை வள்ளுவரும் அறிந்தே வைத்திருந்தார்.

3. மாற்றம் ஏன் நிகழவில்லை?

"ஈராயிரம் ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், யார் மாறினார்கள்?" என்கிற  கேள்வி முக்கியமானது மட்டுமல்ல அதுதான் யதார்த்தமானது. ஒரு கருத்தியல் (Ideology) என்பது தனிமனித ஒழுக்கமாக மட்டும் இருக்கும் வரை அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அது ஒரு சமூக இயக்கமாகவோ அல்லது உற்பத்தி முறையில் மாற்றத்தையோ கொண்டு வரும்போதுதான் பலன் தரும். 

திருக்குறள் தனிமனித அறத்தைச் சொல்கிறதே தவிர, கட்டமைப்புகளை (Structures) மாற்றுவது பற்றிப் பேசுவதில்லை என்கிற விமர்சனமும் உண்டு.

4. பழையதை வைத்துப் புதியதை உருவாக்குதல்

"பழையதை நினைவில் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப புதியதை உருவாக்குவது தான் அறிவுடைமை" - இதுதான் மிகச்சரியான புரிதல். 

இதையே வள்ளுவர்,

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" (355)

என்கிறார். 

அன்று அவர் சொன்ன அறம் என்பது அன்றைய சமூகக் கட்டுமானத்தைக் காக்கப் பயன்பட்டிருக்கலாம். ஆனால், இன்று அந்த அறத்தை இன்றைய வர்க்கப் போராட்டங்கள், பொருளாதாரச் சமநிலையின்மை மற்றும் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப மறுவாசிப்பு (Re-reading) செய்வது அவசியம்.

முடிவாக,

கேட்பது என்பது ஒரு தொடக்கமே தவிர அதுவே முடிவல்ல. 'கேட்டல் + சிந்தித்தல் + செயலாற்றல்' என்ற மூன்று நிலைகளும் சேரும்போதுதான் ஒரு கருத்து முழுமை பெறுகிறது. 

உற்பத்தி உறவுகள் மாறிவிட்ட நிலையில், பழைய அறநெறிகளை அப்படியே ஒரு "புனித நூலாகப்" பார்க்காமல், இன்றைய காலத்திற்குத் தேவையான 'புதிய அறங்களை' நோக்கி நகர்வதே சரியான பாதையாக இருக்கும். இந்தப் பார்வை இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமானது.

ஊரான்

தேர்தலில் வாக்களிப்பதற்கான அளவுகோல் என்ன?

முன்னுரை

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒன்று மிகவும் வெளிப்படையாகக் காணப்படுகிறது. 

“நாங்கள் தமிழ்நாட்டில் இத்தனை சதவீதம் இருக்கிறோம்”, 

“இந்தத் தொகுதியில் எங்கள் சாதியினர் இத்தனை பேர் இருக்கிறார்கள்”, 

“எங்களுக்கு எந்தக் கட்சியும் வாய்ப்பு தரவில்லை” 

என்று ஒவ்வொரு சாதி அமைப்புகளும் அங்கலாய்ப்பதைப் பார்க்க முடிகிறது.

சில இடங்களில், வாய்ப்பு கிடைக்காததால் ஒரு சில உயர்சாதியினர் தாங்கள்தான் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகம் என்று கதைப்பதையும் காண்கிறோம். உண்மையில், சாதியை சாதி என்று குறிப்பிடாமல் “சமூகம்” என்று அழைப்பதே ஒரு அபத்தமான அரசியல் மொழியாக மாறியுள்ளது.


வாய்ப்பு யாருக்கு?

“அவர் ஒருவரேதான் போட்டியிட வேண்டுமா? வேறு யாரும் இல்லையா? நேற்று கட்சிக்கு வந்தவனுக்கும் எங்கோ இருந்து வந்தவனுக்கும் இங்கே வாய்ப்பா? அந்த வாய்ப்பு எங்கள் சாதிக்குக் கிடையாதா?” 

என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல், ஏற்கனவே ஒரு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரின் மகனுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால்,

“இந்தத் தொகுதி என்ன அவர்கள் குடும்பச் சொத்தா?
வாரிசுகளுக்கே கொடுத்தால் மற்றவர்கள் எதற்காகக் கட்சியில் உழைக்க வேண்டும்?”

என்று பலர் கோபப்படுவதையும் காண முடிகிறது.
 
உண்மையான நோக்கம் என்ன?

ஆனால் இவ்வாறு கேட்பவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

பல நேரங்களில், வேறு சாதியைச் சேர்ந்த ஒருவர் வாய்ப்பு பெற்றால் அதனால் தங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது என்பதால்தான் எதிர்ப்பு எழுகிறது. ஆனால் அதே வாய்ப்பு தனது சாதியைச் சேர்ந்தவருக்கு கிடைத்தால், அது பெருமையாகக் கருதப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் — அந்த நபர் அந்தத் தொகுதிக்காக நல்லது செய்வாரா இல்லையா என்பது பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

சாதிப் பெருமை மற்றும் தனிப்பட்ட ஆதாயம் என்ற அளவில்தான் இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
 
வாரிசு அரசியல்: உண்மையான அளவுகோல்

ஒரே நபர் தொடர்ந்து ஒரு தொகுதியில் போட்டியிடுவது அல்லது அவருடைய வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து பெரும் விவாதம் எழுகிறது.
ஆனால் ஒரு அடிப்படை கேள்வியை நாம் கேட்க மறந்துவிடுகிறோம்.

ஒருவர் அந்தத் தொகுதி மக்களுக்கு உண்மையாக நல்லது செய்து கொண்டிருந்தால் அவர் தொடர்ந்து இருப்பதில் என்ன தவறு?
அவருடைய வாரிசு வந்தாலும் அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்றால் அதில் என்ன பிரச்சனை?

மக்களுக்கு நல்லது செய்வதில்லை என்ற உணர்வு உருவாகும்போதுதான் வேட்பாளர் மீதான கோபமும் உருவாகிறது.
ஒருவருடைய வாரிசு வந்தால் அவர் நல்லது செய்வார் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.

அதேபோல், தனது சாதியைச் சேர்ந்தவர் வந்தால் அவர் நல்லது செய்வார் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.
 
அபாயகரமான சாதி அரசியல்

“தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என்ற அடிப்படை உண்மையை ஒதுக்கி வைத்து, “என் சாதியினர்” என்ற காரணத்திற்காக ஒருவரை ஆதரிக்கும் அரசியல் மிகவும் அபாயகரமான தன்னல அரசியலாகும்.

தேர்தல் அரசியலில் முக்கியமான அளவுகோல்:

  • அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதல்ல
  • அவர் யாருடைய வாரிசு என்பதுமல்ல
  • அவர் மக்களுக்கு நல்லது செய்கிறாரா அல்லது செய்வாரா என்பதுதான்
இதுவே தேர்தலில் வாக்களிப்பதற்கான அடிப்படை அடிச்சுவடி.
 
மதவாத அரசியலின் ஆபத்து

இதை கணக்கில் எடுத்துக் கொள்வதோடு, இன்னொரு முக்கியமான ஒன்றையும் நாம் மறந்து விடக்கூடாது.
இன்றைய அரசியல் சூழலில் சனாதன மதவாத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றன. இந்த சக்திகள் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் சமூக சமத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.

எனவே, தேர்தலில் வாக்களிக்கும் போது:
  • சாதி அரசியலையும்
  • மதவாத அரசியலையும்
இரண்டையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தான சக்திகளை முற்றிலுமாக புறக்கணிப்பது அவசியம்.
 
முடிவுரை

தேர்தல் அரசியலில் நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி ஒன்று தான்:
“இந்த நபர் எனது சாதியா?” என்பது அல்ல; “இந்த நபர் மக்களுக்கு நல்லது செய்வாரா?” என்பதே.

சாதி எண்ணிக்கையையும் குடும்ப வாரிசையும் தாண்டி, மக்கள் நலனை மையமாகக் கொண்டு அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் போது மட்டுமே ஜனநாயகம் உண்மையான பொருளில் வலுப்படும்.

ஊரான்

மாதவிடாய் தீண்டாமையும் சனாதனப் பெண்ணடிமைத்தனமும்: நீதியரசர் நாகரத்னாவின் அறச்சீற்றம்

அண்மையில் உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.வி.நாகரத்னா அவர்கள், மாதவிடாய் குறித்து சமுதாயத்தில் நிலவும் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தைச் சாடி மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளார். சபரிமலை கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாகுபாடு குறித்த விசாரணையின் போது அவர் எழுப்பிய வினா, சனாதன தர்மம் கட்டமைத்துள்ள போலிப் புனிதங்களின் வேர்களையே அசைத்துப் பார்த்துள்ளது.

நீதியரசர் நாகரத்னா

1.நீதியரசர் நாகரத்னாவின் மையக் கருத்து

நீதியரசர் நாகரத்னா அவர்கள் தனது கருத்தில்,

“ஒரு பெண் மாதத்தில் மூன்று நாட்கள் தீண்டத்தகாதவளாகவும் (Untouchable), நான்காம் நாளில் தீண்டத்தக்கவளாகவும் கருதப்படுவது எந்த வகையில் நியாயம்? ஒரு பெண்ணை இத்தகைய தீண்டாமைக்கு உள்ளாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.”

என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு பெண் நீதிபதியின் இந்த அறச்சீற்றம், பல நூற்றாண்டுகளாக சனாதன மரபுகள் ‘தீட்டு’ என்ற பெயரில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்தி வைத்திருக்கின்றன என்பதைத் தெளிவாக வெளிக்கொணர்கிறது.

2.சனாதனம் கட்டமைத்துள்ள பெண்ணடிமைத்தனம்

சனாதன தர்மத்தின் அடிப்படை நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் மனுஸ்மிருதி, பெண்களைச் சுதந்திரமான மனிதர்களாகக் கருதாமல், அவர்களை அடிமைப்படுத்தும் விதமான பல விதிகளை முன்வைக்கிறது.

தீட்டு எனும் ஆயுதம்

மனுஸ்மிருதி (5:85) படி, மாதவிடாயான பெண்ணைத் தொடுவது என்பது பிணத்தையோ அல்லது தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்டவர்களையோ தொடுவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது. அவர்களைத் தொட்டால் குளிப்பதன் மூலம் மட்டுமே ஒருவன் புனிதமடைய முடியும் என அந்த நூல் குறிப்பிடுகிறது.

வழிபாட்டு மறுப்பு

சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பதும் இதே ‘தீட்டு’ கோட்பாடுதான்.

ஐயப்பனின் ‘நைஷ்டிக பிரம்மச்சரியத்தை’ ஒரு பெண்ணின் உயிரியல் சுழற்சி கெடுத்துவிடும் என்று வாதிடுவது, பெண்ணின் உடலை அசுத்தமான ஒன்றாகச் சித்தரிக்கும் அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது.

3.வாழ்வியல் தீட்டுகளும் இழிவுபடுத்தப்படும் தாய்மையும்

பெண்ணின் வாழ்வில் இயல்பாக நிகழும் பல உயிரியல் மாற்றங்களையே சனாதனச் சடங்குகள் ‘தோஷம்’ அல்லது ‘தீட்டு’ எனக் குறிக்கின்றன.

பூப்பு மற்றும் பிரசவம்

பெண் பூப்பெய்துவதையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் கூட தீட்டாகக் கருதி அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சமூகச் செயல்பாடுகளிலிருந்து ஒதுக்கி வைக்கும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன (மனு 4:212, 5:62).

வளைகாப்பு / சீமந்தம்

இன்று நாம் கொண்டாடும் ‘சீமந்தம்’ அல்லது ‘வளைகாப்பு’ சடங்கு கூட, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ‘தோஷங்களை’ நீக்கும் பரிகாரமாகவே சில மரபுகள் விளக்குகின்றன.

ஒரு உயிரைச் சுமக்கும் தாய்மையை ‘அசுத்தம்’ என்ற கோணத்தில் பார்க்கும் இந்த மனநிலை, பெண்ணிய மரியாதைக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.

4.சித்தர்களின் கலகக்குரல்: 1500 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த எதிர்ப்பு

நீதியரசர் நாகரத்னா இன்று எழுப்பிய அதே தர்க்கரீதியான கேள்வியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிவவாக்கியர் தனது பாடல்களில் முன்வைத்துள்ளார்.

“மாதமாதம் தூமைதான்,
மறந்துபோன தூமைதான்…
நாதம் ஏது, வேதம் ஏது,
நற்குலங்கள் ஏதடா?”

மனித இனவிருத்திக்குத் தேவையான இயற்கைச் செயலாக இருக்கும் மாதவிடாயை ‘தீட்டு’ எனக் கூறுவோர், அதே உயிரியல் செயல்முறையின் வழியாகத்தான் இந்த உலகிற்கு வந்தவர்கள் என்பதைக் குறிப்பிடும் இந்தக் கேள்வி, சமூகக் கட்டுக்கதைகளுக்கு சவால் விடுகிறது.

5.நவீன காலப் போராட்டமும் விடுப்பு உரிமையும்

மாதவிடாயை ‘தீட்டு’ என்று கூறி பெண்களை வீட்டுக்குள் கட்டுப்படுத்தும் முயற்சிகள் இருந்தாலும், இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.

ஆனால், வேலை செய்கிற பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் ரீதியான வலிகளை சமூகமும் பணியிடங்களும் இன்னும் போதுமான அளவில் அங்கீகரிக்கவில்லை.

உயிர் வாழும் உரிமை

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி மாரடைப்பிற்குச் சமமானது (Menstrual pain is as bad as a heart attack). இக்காலங்களில் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் அவர்களின் 'உயிர் வாழும் உரிமை' சார்ந்ததாகும்.

சமூகப் பார்வை

சுப்பிரமணிய பாரதி பாடிய
“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்”
என்ற வரிகள் இன்றும் முழுமையாக சமூக வாழ்வில் நடைமுறைபடுத்தப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

முடிவுரை

நீதியரசர்  பி.வி நாகரத்னா அவர்களின் கருத்து வெறும் சட்ட ரீதியான கருத்தாக மட்டும் பார்க்க முடியாது; அது கோடிக்கணக்கான பெண்களின் சுயமரியாதைக்கான குரலாகும்.

பெண்களை ‘புனிதம்’ என்ற பெயரில் உயர்த்திப் பேசும் மரபுகள், நடைமுறையில் அவர்களை ‘தீட்டு’ என்ற பெயரில் கட்டுப்படுத்தி வைத்திருப்பது ஒரு முரண்பாடான நிலையாகவே உள்ளது.

பெண்களின் உயிரியல் மாற்றங்களை இயற்கையாக ஏற்றுக்கொண்டு, வழிபாட்டுத் தலங்களிலிருந்து பணியிடங்கள் வரை அவர்களுக்குச் சம உரிமையும் கண்ணியமும் வழங்கப்படும் நாளில்தான் பெண்களை அடக்கி வைத்துள்ள பழைய மனநிலைகள் முற்றிலும் ஒழியும்.

பொன். சேகர்
வழக்கறிஞர்

Friday, 10 April 2026

தேர்தல் களம் Vs வாழ்க்கைத் தளம்: சனாதனத்தை வீழ்த்தும் உண்மையான போர் எது?

முன்னுரை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல; அது இருவேறு துருவக் கொள்கைகளுக்கு இடையிலான வாழ்வா–சாவா போராட்டம். 

ஒருபுறம் பாசிச அதிகாரக் குவியல்; மறுபுறம் ஜனநாயகத்தைக் காப்பதற்கான அறப்போராட்டம்.
ஆனால் இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி முழுமையானதா என்ற கேள்வி நம் முன்னே பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.


பாசிசத்தின் கரங்களும் கார்ப்பரேட் கூட்டணியும்

இன்று நம் நாட்டின் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் சனாதன சக்திகள். இவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் சேவகர்களாகவும், அதே சமயம் சனாதன தர்மத்தின் பிதாமகர்களாகவும் இரட்டை முகத்துடன் செயல்படுகிறார்கள்.
முதலாளித்துவமும் சனாதனமும் கைகோர்க்கும் போது அங்கே ஒடுக்குமுறை மட்டுமே எஞ்சுகிறது. 

ஹிட்லர் மற்றும் முசோலினி பாணியிலான அதிகாரப் பசியுடன் செயல்படும் இந்த சக்திகள் ஜனநாயகத்தை ஒருபோதும் சகிக்கத் தயாராக இல்லை.
இவர்கள் கையில் அதிகாரம் சென்றுவிட்டால், தமிழனின் பாரம்பரியம், மொழி, பண்பாடு ஆகியவை சிதைக்கப்பட்டு சனாதனமே கோலோச்சும் அபாயம் உருவாகும்.

தேர்தல் களத்தில் தற்காப்புப் போர்

இந்தச் சூழலில், பாசிச சக்திகளை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுப்பது மிக முக்கியமானது. அதற்காகவே புரட்சிகர ஜனநாயக சக்திகள் கூட தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பாசிச சக்திகளை அதிகாரப் பீடத்தில் அமர விடாமல் தடுப்பது இந்தத் தேர்தலின் முதல்நிலை அரசியல் போராகும்.

ஆன்மாவை ஆட்டிப் படைக்கும் சனாதனம்

ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் இன்னும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை என்றாலும், அவர்கள் ஏற்கனவே ஒவ்வொரு தமிழனின் இல்லத்திற்குள்ளும் புகுந்துவிட்டார்கள்.

சனாதனத்தை அரசியல் மேடைகளில் கடுமையாக எதிர்க்கும் கட்சிகளில் உள்ள பலர், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சனாதனப் பிடியிலிருந்து விடுபடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்றாட வாழ்வில் தொடரும் அடிமைத்தனம்
திருமணம், குழந்தை பிறப்பு, ஜாதகம், ஜோதிடம், நல்ல நேரம் – கெட்ட நேரம் பார்ப்பது, கிரகப்பிரவேசம், தீட்டு மற்றும் மாதவிடாய் தொடர்பான எண்ணற்ற நம்பிக்கைகள், இறப்புச் சடங்குகள் என வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் சனாதனம் கூறும் விதிகளையே நாம் இன்றும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வெளியே சனாதனத்தை எதிர்த்து முழக்கமிட்டுவிட்டு, வீட்டிற்குள் அதன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன் சனாதனத்தின் அடிமையே தவிர போராளி அல்ல.

வாழ்க்கைத் தளத்தில் சனாதனியாக வாழ்ந்து கொண்டு, தேர்தல் களத்தில் மட்டும் அவர்களை வென்றுவிட்டோம் என்று மார் தட்டிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை.

உண்மையான போர் எப்போது தொடங்கும்?

சனாதனம் உங்களை வீட்டிற்குள்ளும், உங்கள் சிந்தனைக்குள்ளும் இருந்து கொண்டுதான் உங்களை ஆட்சி செய்கிறது. அதிகார பீடத்தில் அவர்கள் அமர்வதைவிட, உங்கள் ஆன்மாவில் அவர்கள் அமர்ந்திருப்பதுதான் மிக ஆபத்தானது.

சனாதனத்தை எப்போது உங்களது வீட்டை விட்டு வெளியே வீசி எறிகிறீர்களோ...

எப்போது சடங்குகளின் பிடியிலிருந்து விடுபட்டு பகுத்தறிவுப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ...

அன்றுதான் சனாதனத்திற்கு எதிரான உண்மையான போர் தொடங்குகிறது.

முடிவுரை

இந்த சட்டமன்றத் தேர்தல் நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான்: பாசிசத்தை வாக்குச்சீட்டுகளால் மட்டும் வீழ்த்திவிட முடியாது; அது நம் வாழ்க்கை முறையிலிருந்தே வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.

சனாதனத்தின் அடிமை விலங்குகளை வீட்டிற்குள் உடைக்காதவரை, வெளியே நாம் பெறும் வெற்றி தற்காலிகமானதுதான்.

உண்மையான விடுதலை என்பது மனமாற்றத்திலும், வாழ்க்கை மாற்றத்திலும் மட்டுமே அடங்கியிருக்கிறது.

ஊரான்

Thursday, 9 April 2026

தேர்தல் 2026: உன் கையில் இருப்பது வாக்குச் சீட்டா? சாதிச் சீட்டா?

முன்னுரை

பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் என பல துறைகளில் முன்னேற்றம் கண்ட மாநிலமாக தமிழ்நாடு அடிக்கடி பாராட்டப்படுகிறது. ஆனால் தேர்தல் அரசியல் என்று வரும்போது அந்த முன்னேற்றத்தின் முகம் மங்கிவிடுகிறது.

மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டிய ஜனநாயகம், நடைமுறையில் பல இடங்களில் ‘சாதிப் பெரும்பான்மை ஆட்சி’யாக சுருங்கி நிற்பது வேதனைக்குரிய உண்மை. வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்கள் உயர்ந்தாலும், வாக்குச் சாவடிக்குச் செல்லும் மனிதனின் மனதில் இன்னும் சாதி அரசியலே ஆட்சி செய்வது சமூக முன்னேற்றத்தையே கேள்விக்குள்ளாக்கும் அருவருப்பான உண்மை.


சித்தாந்தப் போர்வையில் ஒளிந்து கொள்ளும் சாதிய அரசியல்

இந்தத் தேர்தல் சூழலில் ஒரு விசித்திரமான முரண்பாடு தென்படுகிறது. ஒருபுறம் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைகளை தாங்கிப்பிடிப்பதாகக் கூறும் கட்சிகளும் இயக்கங்களும்; மறுபுறம் திராவிடப் பாரம்பரியம் பேசும் அரசியல் சக்திகளும்; இன்னொரு புறம் சனாதன அரசியலை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகளும் அரசியல் மேடையில் நிற்கின்றன.

ஆனால் மேடைகளில் அனைவரும் அவரவர் கொள்கை, கோட்பாடுகளைப் பேசினாலும், வேட்பாளர் தேர்வில் மட்டும் “அந்தத் தொகுதியில் எந்தச் சாதி பெரும்பான்மை?” என்ற கணக்கே முதன்மையாகிறது. அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள விஜய் தலைமையிலான தவெகவும் இதற்கு விதிவிலக்கல்ல. 

தேர்தலைத் தீர்மானிக்கும் சாதிய இயக்கங்கள்

அரசியல் கட்சிகளுக்கு இணையாக சாதிய இயக்கங்களும் இன்று தேர்தல் களத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. “எந்தக் கட்சி என்றாலும் பரவாயில்லை; நமது சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று பல இடங்களில் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைச் சிந்தனையையே சிதைக்கும் போக்காகும்.

சில நேரங்களில் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடும் போது மட்டுமே அவர்கள் பேசும் கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுவும் எல்லா நேரங்களிலும் உண்மையாக இருப்பதில்லை. பல இடங்களில் தனிப்பட்ட நெருக்கம் முதன்மை பெறுகிறது. வேட்பாளரின் திறமை, கொள்கை, நேர்மை ஆகியவற்றை விட சாதியை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதே நடைமுறையாக இருந்து வருகிறது.

சாதிய அரசியலால் வலுப்பெறும் சனாதன சக்திகள்

சனாதன சக்திகள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடக்கூடாது என்று ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் வலியுறுத்துகின்றன. ஆனால் சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் அரசியல் நடைமுறைகள் இறுதியில் சனாதன சக்திகளுக்கே வலுசேர்க்கின்றன.

சாதிப் பிரிவினையே சனாதன அரசியலின் அடிப்படை என்றால், சாதியை வலுப்படுத்தும் ஒவ்வொரு செயலும் அதற்கே உரமாய் மாறுகிறது. 

ஆம், சாதி பார்த்து வாக்களிக்கும் அனைவருமே ஒரு வகையில் சனாதனத்தின் காவலர்களாகவே மாறுகின்றனர். சாதி பார்த்து வாக்களிப்பதில் படிக்காதவனைவிட படித்தவனே முன்னிலை வகிக்கிறான். பட்டியல் சாதியினரும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதே கசப்பான உண்மை.

வெளிப்படையாக சனாதனத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, நடைமுறையில் சாதி அரசியலை ஏற்றுக்கொள்வது, தாம் பேசும் கொள்கைகளையே பலவீனப்படுத்தும் செயலாகிவிடுகிறது.

சாதி எனும் வேர் இருக்கும் வரை சனாதனம் எனும் நச்சு மரம் விழுவதில்லை.

வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கும் சாதி அரசியல்

தமிழ்நாடு தொழில்நுட்பம், கல்வி, உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் தேர்தல் அரசியலில் இன்னும் சாதியே முக்கியத் தகுதியாகக் கருதப்படும் சூழல் நிலவுவது அந்த வளர்ச்சியையே கேள்விக்குள்ளாக்குகிறது.

திறமை, கொள்கை, நேர்மை ஆகியவற்றை விட சாதி அடையாளம் மேலோங்கும் இடத்தில் உண்மையான சமூகநீதி நிலைநிறுத்தப்படுவது கடினமே.

முடிவுரை

அரசியல் என்பது சாதியவாதிகளுக்கான களம் அல்ல; அது மக்களுக்கு சேவை செய்வதற்கான தளம். சாதி அரசியல் ஜனநாயகத்தின் உடலில் ஊறும் மெதுவான நஞ்சு போன்றது.

அதை நிராகரித்து, கொள்கை, திறமை, மனிதநேயம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிக்கும் அரசியல் பண்பே தமிழ்நாட்டை உண்மையான முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். சாதி அடையாளங்களைத் தாண்டி சிந்திக்கும் அரசியல் பண்பே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.

சாதியவாதிகளின் பிடியில் இருந்து ஜனநாயகம் விடுபடும் நாளில்தான் தமிழ்நாட்டை உண்மையாக முன்னேறிய மாநிலமாகக் கருத முடியும்.

எது எப்படி இருந்தாலும், இந்தத் தேர்தலில் சனாதன சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலை உருவாக விடக்கூடாது. ஜனநாயகமும் சமூகநீதியும் வலுப்பெற வேண்டும் என்றால், சாதி அரசியலை நிராகரித்து விழிப்புணர்வுடன் செயல்படுவது சமூகப் பொறுப்பாகிறது.

ஊரான்

Wednesday, 8 April 2026

நமது அடையாளத்தை மீட்பதற்கான அறப்போர்: இந்தத் தேர்தல் வாழ்வா - சாவா போராட்டம்?

முன்னுரை:

2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே, அவர்கள் கொண்டு வரப்போகும் மக்கள் விரோதத் திட்டங்களை நாம் எச்சரித்திருந்தோம். இந்த கட்டுரைக்கு கீழே, 'தொடர்புடைய பதிவுகளில்' உள்ள மூன்று இணைப்புகளிலும் இவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. 

இன்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த அச்சங்கள் அனைத்தும் உண்மையாகிவிட்டன. நாட்டின் பொருளாதாரம், உற்பத்தித் துறை மற்றும் சமூகக் கட்டமைப்பு என அனைத்தும் சிதைக்கப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாடு இன்று தனது மிக முக்கியமான தேர்தலைச் சந்திக்கிறது. இது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல; நமது பண்பாடு, நாகரிகம் மற்றும் அடையாளத்தைக் காப்பதற்கான தேர்தல்.


பாஜகவின் மக்கள் விரோதத் திட்டங்களும் தமிழ்நாட்டின் அச்சமும்:

கடந்த காலங்களில் நாம் சுட்டிக்காட்டியபடி, பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு எதிரானவை. கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கைகள், பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை, மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டங்கள் எனத் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்றன.

பாஜகவும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் அதிகாரத்தைப் பிடித்தால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் அரங்கேறிய அதே பேரழிவுகள் தமிழ்நாட்டிலும் தொடரும். இது வெறும் அரசியல் மாற்றம் அல்ல, நமது மண்ணின் ஆன்மாவைச் சிதைக்கும் முயற்சி.

விஜய் போன்ற புதிய வரவுகளின் பின்னணி:

திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியை முன்னிறுத்தித் தற்போது களம் இறக்கப்பட்டுள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' விஜய் போன்றவர்கள், உண்மையில் திமுகவை வீழ்த்துவதற்காகச் சங்பரிவாரக் கும்பலால் ஏவி விடப்பட்டவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டின் திராவிட இயக்க வரலாற்றையும், சமூக நீதிப் பின்புலத்தையும் சிதைக்கத் துடிக்கும் சக்திகளின் கைக்கூலிகளாகவே இவர்கள் செயல்படுகின்றனர். இவர்களது அரசியல் வரவு என்பது சனாதன சக்திகளுக்குத் தமிழ்நாட்டில் வழி ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு தந்திரமே தவிர வேறல்ல.

பொருளாதாரப் புறக்கணிப்பும் இலவசப் பேச்சுகளும்:

இந்தத் தேர்தலிலும் தமிழ்நாட்டின் அடிப்படைப் பொருளாதாரம், சிறு தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் துறை மேம்பாடு குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மறைக்கப்படுகின்றன.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளும், இலவசங்களும் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. இவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தமிழ்நாட்டின் சுயசார்புப் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கப்போவது யார்? என்ற கேள்விக்கு பாஜக கூட்டணியிடம் பதில் இல்லை.

அடையாளத்தை இழக்கப் போகிறோமா?

பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், நமது சனாதன எதிர்ப்பு எனும் திராவிடப் பண்பாடு , தமிழ் மொழி அடையாளம் மற்றும் சமூக நீதி வரலாறு ஆகியவை முற்றிலுமாக அழிக்கப்படும். அதற்குப் பதிலாகப் புதிய 'சனாதன வரலாற்றையும்' பிற்போக்குத்தனமான பண்பாட்டையும் திணிக்கப் பார்ப்பார்கள். நமது மொழி, இனம் மற்றும் கலாச்சார அடையாளத்தை இழந்துவிட்டு நாம் வாழ்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது?
நமது கடமை என்ன?

எனவே, நமது தனித்துவமான அடையாளத்தையும், சமூக நீதியையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்:
  • சனாதன சக்திகளான பாஜகவை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • அவர்களுக்கு நேரடியாகத் துணை போகும் அதிமுக மற்றும்  மறைமுகமாகத் துணை போகும் தவெக , நாம் தமிழர் போன்ற கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக தலைமையிலான கூட்டணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

முடிவுரை:

இந்தத் தேர்தல் வெறும் வாக்குப்பதிவு அல்ல; இது நமது நாகரிகத்தையும், வரலாற்றையும் காக்கும் அறப்போர். நமது அடையாளத்தை இழக்கத் துடிக்கும் அந்நிய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, எதிர் வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம். நமது அடையாளமே நமது வலிமை!

'வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை' என்று பெருமை பேசுவதில் பொருள் ஏதும் இல்லை. மாறாக திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதிலேயே நமது ஜனநாயக கடமை உள்ளடங்கியுள்ளது! 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

Sunday, 5 April 2026

மூன்றாம் உலகப்போர்: உக்ரைனில் அல்ல, உங்கள் வீட்டிற்குள்!

சமையலறையில் தொடங்கி சொத்துடைமை அரசியலில் முடியும் இல்லத்துப் போர்களின் கதை


முன்னுரை: அடுப்பங்கரையை அணைக்கும் போர்கள்


முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் பற்றி நாம் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். சமகாலத்தில் நடக்கும் உக்ரைன் – ரஷ்யா போரை நாம் ஊடகங்கள் வழியாக ஒரு செய்தியாகக் கடந்து விடுகிறோம். ஆனால், எப்போது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஒரு ஏவுகணையை ஏவும்போது நமக்குள் ஒரு கோபம் எழுகிறதோ, அப்போதுதான் ஒரு உண்மை புரிகிறது – அந்த ஏவுகணை எங்கோ தொலைவில் விழுவதில்லை; நம் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும், தக்காளி விலையிலும் வந்து விழுகிறது.

ஆம், வெளியூர்ப் போர் நம் வீட்டு அடுப்பங்கரையை அணைக்கத் தொடங்கும்போதுதான் உலக அரசியலின் தாக்கம் நமக்குத் தெளிவாக உணரப்படுகிறது.



அருகாமை யுத்தங்களும் அமைதி ஒப்பந்தங்களும்


பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர், நிலத்துக்காரர் என அருகாமையில் உள்ளவர்களோடு நடக்கும் சிறு யுத்தங்கள் ஒரு வகை. இவை பெரும்பாலும் இடமாற்றம் செய்துவிடும்போதோ, அல்லது “இனி உன்னோடு பேச்சே கிடையாது” என்று உறவைத் துண்டித்துவிடும்போதோ ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை அடைந்து விடுகின்றன. வெளிப்படையான போர் அப்போது முடிந்தாலும், அதன் சின்னஞ்சிறு காயங்கள் மனதிற்குள் புதைந்து கிடக்கும்.


பங்காளிகள், அண்ணன்-தம்பிகள், தந்தை-மகன் போன்ற இரத்த உறவுகளுக்குள் எழும் போர்களின் அடிப்படை காரணம் பெரும்பாலும் ‘சொத்து’ தான். அந்தச் சொத்து பிரிக்கப்பட்டாலோ அல்லது சட்டரீதியாக தீர்க்கப்பட்டாலோ, அந்தப் போர்களும் ஒரு முடிவை அடைந்து விடுகின்றன.


முடிவே இல்லாத ‘உள்நாட்டுப் போர்’


ஆனால், உலகிலேயே நீண்டகாலமாகத் தொடரும், ஒருபோதும் முழுமையாக முடிவுக்கு வராத, எந்த ஐக்கிய நாடுகள் சபையாலும் தீர்த்து வைக்க முடியாத ஒரு போர் உண்டென்றால், அது கணவன்–மனைவிக்கிடையிலான போர்தான்!


இந்தப் போர் எப்போது தொடங்கும், எதற்காக வெடிக்கும் என்று எவராலும் கணிக்க முடியாது.


“பொரியலில் காரம் அதிகம்!”


“ரசத்தில் உப்பு ஏன் கம்மி?”


“சாம்பார் ஏன் இவ்வளவு நெடி?”


போன்ற அற்பமான காரணங்களே சில நேரங்களில் ஒரு பெரிய அணு ஆயுதப் போரின் தொடக்கமாக மாறிவிடலாம். இது வெளிப்படையாக சத்தம் இல்லாத போராக இருந்தாலும், வாழ்க்கை முழுவதும் நீடிக்கக்கூடிய ஒரு ‘கரில்லா யுத்தம்’ போன்றது.


செயற்கை நுண்ணறிவை வெல்லும் ‘மனைவி நுண்ணறிவு’ (WI vs AI)


இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் நாம் கேட்கும் தகவல்களை கண நேரத்தில் தேடி வழங்குகிறது. ஆனால், கணவன்–மனைவி போரின் தரவுகளைப் பார்த்தால், குறிப்பாக மனைவிமார்கள் கையாளும் நினைவகத்தைப் பார்த்தால், AI கூட சில சமயம் தோற்றுப்போகும் போல தோன்றும்.


பல ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்தின் தொடக்க நாட்களில் கணவன் செய்த ஒரு சிறிய தவறோ அல்லது மாமியார் சொன்ன ஒரு வார்த்தையோ, தற்போதைய “ரசத்தில் உப்பு இல்லாத” பிரச்சினைக்கான ஆதாரமாக திடீரென நினைவகத்திலிருந்து மீட்டெடுக்கப்படுகிறது.


இந்தத் தரவுகளைச் சரியான நேரத்தில் “Retrieve” செய்து கொண்டு வந்து அடுக்குவதில் மனித மூளை சில நேரங்களில் சூப்பர் கம்ப்யூட்டரையே மிஞ்சிவிடுகிறது. செயற்கை நுண்ணறிவால் மனித நினைவகத்தை முழுமையாக வெல்ல முடியாது என்பதற்கு இந்த ‘குடும்பத் தரவுத் தொகுப்பு’ (Data Retrieval) ஒன்றே ஒரு சுவாரஸ்யமான சாட்சி.


யுத்தத்தின் ஆணிவேர்: அங்கீகாரமா? சொத்துடைமையா?


விளையாட்டாகத் தோன்றினாலும், இந்த இல்லத்துப் போரின் ஆணிவேர் மிகவும் சீரியஸானது.

ஒரு பெண் மருமகளாக ஒரு வீட்டிற்குள் வரும்போது, அவள் ஒரு மனித உயிர் என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறாளா என்பது விட, “அவள் எவ்வளவு சொத்து கொண்டு வந்தாள்?” என்ற அளவுகோலே பல இடங்களில் முக்கியமாகிறது.

சொத்து கொண்டு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி – தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் அவளை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், குடும்பத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டால் பின்னாளில் இந்தப் போர்கள் இவ்வளவு தீவிரமாக மாறாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் தொடக்கமே வார்த்தை யுத்தங்களாக மாறிவிடுகிறது.


தன்னை வெறும் சொத்தின் அளவுகோலில் மதிப்பிடும் இந்த அமைப்பை எதிர்கொள்ளும் போது, தனது கணவன் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொத்து பலன்களையும் வசதிகளையும் வழங்குவதைப் பார்த்தால் அந்தப் பெண்ணின் மனதில் ஒரு ஆதங்கம் உருவாகிறது.


“நமக்குச் சேர வேண்டியதை எல்லாம் பிறருக்கே வழங்கிவிட்டானே!” என்ற அந்தக் கசப்பான உணர்வே, பின்னாளில் கணவனோடு எழும் முரண்பாடுகளுக்குப் பெரும் ‘கிரியா ஊக்கி’யாக (Catalyst) மாறுகிறது. தன்னிடம் நடந்த அநீதிக்கான நியாயத்தை அவள் கணவனிடம் தேடும்போதுதான் அந்தச் சிறு முரண்பாடுகள் பெரிய போராக வெடிக்கின்றன.


இந்தப் போரில் கணவன் மட்டும் குற்றவாளி அல்ல; பல சமயங்களில் குடும்ப அமைப்பே இந்த முரண்பாடுகளுக்கான அடிப்படை காரணமாக மாறுகிறது.


முடிவுரை: சொத்தா? மனிதாபிமானமா?


வணிகப் பிரச்சினைகளுக்காகத் தொடங்கும் உலகப் போர்கள் கூட ஒரு கட்டத்தில் சமரசத்தில் முடிந்து விடுகின்றன. ஆனால், குடும்பப் போர்கள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் மனநிலையில் மாற்றம் தேவை.


சொத்தை நேசிப்பதற்குப் பதிலாக உழைப்பையும் மனிதத்தையும் முதன்மையாக மதிக்கும் மனப்பான்மை உருவாக வேண்டும்.


பெண்ணைச் சொத்தாகப் பார்ப்பதையும், சொத்துக்காகப் பெண்ணைப் பயன்படுத்துவதையும் நிறுத்தாமல் விட்டால் – ‘சொத்துடைமை’ என்ற அதிகாரக் கட்டமைப்பை மாற்றாமல் விட்டால் – இல்லத்துக்குள் நடக்கும் இந்தப் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமே.


ஊரான்