Thursday, 9 April 2026

தேர்தல் 2026: உன் கையில் இருப்பது வாக்குச் சீட்டா? சாதிச் சீட்டா?

முன்னுரை

பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் என பல துறைகளில் முன்னேற்றம் கண்ட மாநிலமாக தமிழ்நாடு அடிக்கடி பாராட்டப்படுகிறது. ஆனால் தேர்தல் அரசியல் என்று வரும்போது அந்த முன்னேற்றத்தின் முகம் மங்கிவிடுகிறது.

மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டிய ஜனநாயகம், நடைமுறையில் பல இடங்களில் ‘சாதிப் பெரும்பான்மை ஆட்சி’யாக சுருங்கி நிற்பது வேதனைக்குரிய உண்மை. வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்கள் உயர்ந்தாலும், வாக்குச் சாவடிக்குச் செல்லும் மனிதனின் மனதில் இன்னும் சாதி அரசியலே ஆட்சி செய்வது சமூக முன்னேற்றத்தையே கேள்விக்குள்ளாக்கும் அருவருப்பான உண்மை.


சித்தாந்தப் போர்வையில் ஒளிந்து கொள்ளும் சாதிய அரசியல்

இந்தத் தேர்தல் சூழலில் ஒரு விசித்திரமான முரண்பாடு தென்படுகிறது. ஒருபுறம் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைகளை தாங்கிப்பிடிப்பதாகக் கூறும் கட்சிகளும் இயக்கங்களும்; மறுபுறம் திராவிடப் பாரம்பரியம் பேசும் அரசியல் சக்திகளும்; இன்னொரு புறம் சனாதன அரசியலை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகளும் அரசியல் மேடையில் நிற்கின்றன.

ஆனால் மேடைகளில் அனைவரும் அவரவர் கொள்கை, கோட்பாடுகளைப் பேசினாலும், வேட்பாளர் தேர்வில் மட்டும் “அந்தத் தொகுதியில் எந்தச் சாதி பெரும்பான்மை?” என்ற கணக்கே முதன்மையாகிறது. அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள விஜய் தலைமையிலான தவெகவும் இதற்கு விதிவிலக்கல்ல. 

தேர்தலைத் தீர்மானிக்கும் சாதிய இயக்கங்கள்

அரசியல் கட்சிகளுக்கு இணையாக சாதிய இயக்கங்களும் இன்று தேர்தல் களத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. “எந்தக் கட்சி என்றாலும் பரவாயில்லை; நமது சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று பல இடங்களில் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைச் சிந்தனையையே சிதைக்கும் போக்காகும்.

சில நேரங்களில் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடும் போது மட்டுமே அவர்கள் பேசும் கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுவும் எல்லா நேரங்களிலும் உண்மையாக இருப்பதில்லை. பல இடங்களில் தனிப்பட்ட நெருக்கம் முதன்மை பெறுகிறது. வேட்பாளரின் திறமை, கொள்கை, நேர்மை ஆகியவற்றை விட சாதியை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதே நடைமுறையாக இருந்து வருகிறது.

சாதிய அரசியலால் வலுப்பெறும் சனாதன சக்திகள்

சனாதன சக்திகள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடக்கூடாது என்று ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் வலியுறுத்துகின்றன. ஆனால் சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் அரசியல் நடைமுறைகள் இறுதியில் சனாதன சக்திகளுக்கே வலுசேர்க்கின்றன.

சாதிப் பிரிவினையே சனாதன அரசியலின் அடிப்படை என்றால், சாதியை வலுப்படுத்தும் ஒவ்வொரு செயலும் அதற்கே உரமாய் மாறுகிறது. 

ஆம், சாதி பார்த்து வாக்களிக்கும் அனைவருமே ஒரு வகையில் சனாதனத்தின் காவலர்களாகவே மாறுகின்றனர். சாதி பார்த்து வாக்களிப்பதில் படிக்காதவனைவிட படித்தவனே முன்னிலை வகிக்கிறான். பட்டியல் சாதியினரும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதே கசப்பான உண்மை.

வெளிப்படையாக சனாதனத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, நடைமுறையில் சாதி அரசியலை ஏற்றுக்கொள்வது, தாம் பேசும் கொள்கைகளையே பலவீனப்படுத்தும் செயலாகிவிடுகிறது.

சாதி எனும் வேர் இருக்கும் வரை சனாதனம் எனும் நச்சு மரம் விழுவதில்லை.

வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கும் சாதி அரசியல்

தமிழ்நாடு தொழில்நுட்பம், கல்வி, உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் தேர்தல் அரசியலில் இன்னும் சாதியே முக்கியத் தகுதியாகக் கருதப்படும் சூழல் நிலவுவது அந்த வளர்ச்சியையே கேள்விக்குள்ளாக்குகிறது.

திறமை, கொள்கை, நேர்மை ஆகியவற்றை விட சாதி அடையாளம் மேலோங்கும் இடத்தில் உண்மையான சமூகநீதி நிலைநிறுத்தப்படுவது கடினமே.

முடிவுரை

அரசியல் என்பது சாதியவாதிகளுக்கான களம் அல்ல; அது மக்களுக்கு சேவை செய்வதற்கான தளம். சாதி அரசியல் ஜனநாயகத்தின் உடலில் ஊறும் மெதுவான நஞ்சு போன்றது.

அதை நிராகரித்து, கொள்கை, திறமை, மனிதநேயம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிக்கும் அரசியல் பண்பே தமிழ்நாட்டை உண்மையான முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். சாதி அடையாளங்களைத் தாண்டி சிந்திக்கும் அரசியல் பண்பே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.

சாதியவாதிகளின் பிடியில் இருந்து ஜனநாயகம் விடுபடும் நாளில்தான் தமிழ்நாட்டை உண்மையாக முன்னேறிய மாநிலமாகக் கருத முடியும்.

எது எப்படி இருந்தாலும், இந்தத் தேர்தலில் சனாதன சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலை உருவாக விடக்கூடாது. ஜனநாயகமும் சமூகநீதியும் வலுப்பெற வேண்டும் என்றால், சாதி அரசியலை நிராகரித்து விழிப்புணர்வுடன் செயல்படுவது சமூகப் பொறுப்பாகிறது.

ஊரான்

No comments: