Thursday, 2 April 2026

பாழும் காடாகும் நாடு: வழி காட்டும் ஒரிசா கிராமம்!

வீட்டை விட்டு வெளியே வந்தால் வீதிகளில் நடமாட முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் பாலித்தீன் பைகளும், காலி பாட்டில்களும் பரவி விரவிக்கிடக்கின்றன. வீட்டுக் குப்பைகளை வீதி ஓரங்களில் வீசி விட்டுச் செல்கின்ற பலரை அன்றாடம் காண முடிகிறது. இந்தக் குப்பைகள் எல்லாம் மழைக்காலங்களில் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு இடத்தில் தேங்கி அழுகி நாறி மூக்கைத் துளைக்கின்றன.

ஏரிகளும், குட்டைகளும், ஆறுகளும் இன்று குப்பைகளால் நிரம்பி வழிகின்றன. அரசு மருத்துவமனைக் கழிவறைகள், நகராட்சி மற்றும் பேருந்து நிலையக் கழிவறைகள் போன்றவை இன்று 'நோய் பரப்பும் படுகுழிகள்'. 

பாபோஜோலா கிராமம்: ஒரிசா

போதிய பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாததால், மக்கள் ஒதுக்குப்புறங்களிலும் குட்டிச்சுவர்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவ்விடங்களில் இருந்து எழும் மூத்திர நாற்றம் காற்றையே கதிகலங்க வைக்கிறது.

வனங்களைக்கூட நம் குடிமக்கள் விட்டு வைக்கவில்லை. சுற்றுலா மற்றும் ஆன்மீகம் என்ற பெயரில் அங்கே படையெடுப்பவர்கள், வனங்களைத் தங்கள் கழிவுகளால் குத்திக் கிளறி இரணமாக்குகிறார்கள்.

போதாக்குறைக்கு, நகரின் ஒவ்வொரு வீதியிலும் திரியும் நாய்கள் கழிக்கும் மலக்குவியல்கள், பாதசாரிகள் கால் வைக்கவே கூசும் நிலையை உருவாக்கியுள்ளன.

சாராயம் - ஒரு காலத்தில் ஒளிந்து குடித்தவர்கள் இன்று கூச்சமின்றி 'ஓப்பனாக' குடித்துவிட்டுப் பாட்டில்களைக் கண்டபடி வீசுவதால், தமிழ்நாடு எங்கும் கண்ணாடிக் காடுகள் செழிப்போடு வளர்ந்துள்ளன.

இந்தக் காடுகளை உழுது உரமிட்டு வளர்ப்பது அரசாங்கம் என்பதுதான் ஒரு பக்கம் மானக்கேடு. 

ஊராட்சி மற்றும் நகராட்சிகள் சேகரிக்கும் குப்பைகளைக்கூட நவீன முறையில் மறுசுழற்சி செய்யவோ, மதிப்புக்கூட்டவோ வக்கற்று, அவற்றை நீர்நிலை ஓரங்களில் கொட்டிப் பேரழிவை உருவாக்குகிறார்கள்.

இவையெல்லாம் மக்களுக்கும் தெரியும், அரசு நிர்வாகங்களுக்கும் தெரியும். எல்லாம் தெரிந்தேதான் இத்தனையும் நடக்கின்றன.

அப்படியானால் இதில் ஒளிந்திருக்கும் உண்மையான அவலம் என்ன? அது, அரசின் நிர்வாகத்தில் இருக்கும் பொறுப்பற்ற தன்மையும், பொதுமக்களின் எதற்கும் கட்டுப்படாத, எந்த ஒழுங்கிற்கும் வராத விட்டேத்தித்தனமான குணமும்தான்.

ஒட்டுமொத்தத்தில், சுகாதாரத்தில் நாடே ஒரு சுடுகாடு. சுடுகாடுகூடச் சுத்தமாக இருக்கும்; ஆனால் நாடு ஒரு பாழும் காடு.

நிர்வாகத்தின் வெற்றி: பாபோஜோலா கிராமம்!

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டமே இந்தச் சீர்கேட்டில் சிக்கியிருக்கும்போது, ஒடிசாவின் பாபோஜோலா (Babojola) கிராமம் நமக்கு ஒரு சாட்டை அடியாகத் திகழ்கிறது. அங்கே மாற்றம் என்பது வெறும் தனிமனிதப் பொறுப்பால் மட்டும் வரவில்லை; அங்கிருக்கும் கிராம நிர்வாகத்தின் (Local Administration) முறையான திட்டமிடலால் வந்தது.

அங்கே மது குடிப்பதற்கும் புகை பிடிப்பதற்கும், ஏன் எச்சில் தூங்குவதற்கும், குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 

1.முறையான கட்டமைப்பு: கிராம நிர்வாகமே குப்பைத் தொட்டிகளை அமைத்து, அவற்றைச் சேகரிக்க இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்துள்ளது.

2.தொழில்நுட்பக் கண்காணிப்பு: யாராவது குப்பை போடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது நிர்வாகத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

3.தண்டனை மற்றும் விதிமுறைகள்: விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதும், அவர்களைச் சுத்தம் செய்ய வைப்பதும் ஒரு வலுவான 'நிர்வாகச் செயல்பாடே' அன்றி வெறும் அறிவுரை அல்ல.

மாற்றத்திற்கான தருணம்: நிர்வாகப் போராட்டமும் பண்பாட்டுப் புரட்சியும்!

பாபோஜோலா கிராமத்தின் வெற்றிக்குத் தனிமனித ஒழுக்கம் ஒரு தொடக்கப்புள்ளிதான். ஆனால், அந்தத் தூய்மை நிலைத்து நிற்பதற்குக் காரணம் அங்கே செயல்படும் வலுவான கிராம நிர்வாகம். நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதில் அரசாங்கத்தின் பணியே முதன்மையானது. ஒரு குக்கிராமத்தால் சிசிடிவி கேமராக்கள் மூலம் தன் வீதிகளைக் கண்காணிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கில் நிதி வைத்திருக்கும் நகராட்சிகளால் ஏன் முடியாது?

ஆனால், நிர்வாகத்தை மட்டும் குற்றம் சொல்லி நாம் தப்பித்துவிட முடியாது. நிர்வாகத்தைச் சரி செய்வதற்கான போராட்டமும், மக்களின் மனங்களை மாற்றுவதற்கான 'பண்பாட்டுப் புரட்சியும்' ஒருங்கிணைய வேண்டிய தருணம் இது. 

அரசு இயந்திரத்தைச் சரியாகச் செயல்பட வைப்பதும், அதே சமயம் பொதுவெளியைச் சுத்தமாகப் பேணும் ஒழுக்கத்தை மக்களிடம் உருவாக்குவதும் காலத்தின் கட்டாயம்.

இந்தத் தேர்தல் காலத்திலாவது இதை நாம் உரத்துப் பேச வேண்டும். வாக்கு கேட்டு வருபவர்களிடம் வீதிகளின் சுத்தம் குறித்தும், கழிவு மேலாண்மை குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும். நிர்வாகத்தின் உறுதியான செயல்பாடும், மக்களின் பண்பாட்டு மாற்றமும் இணையும்போதுதான் இந்த 'பாழும் காடு' மீண்டும் ‘பசுமை நாடாக’ மாறும்!

ஒரு சிறிய கிராமம் செய்ய முடிந்ததை ஒரு பெரிய நாடு செய்ய முடியாதா?

சுகாதாரம் அரசின் பொறுப்பு மட்டும் அல்ல; அது குடிமக்களின் ஒழுக்கமும் ஆகும்!

ஊரான்

ஒரிசா செய்தி ஆதாரம்: The Economic Times / Times of India

No comments: