Showing posts with label பன்சாரே. Show all posts
Showing posts with label பன்சாரே. Show all posts

Sunday, 30 December 2018

பெரியாரைக் கொண்டாடு! இல்லையேல் திண்டாடுவாய்!


இரு பெரும் அபாயங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளது. ஒன்று காவி பயங்கரவாதம். மற்றொன்று கார்பரேட் பயங்கரவாதம். அப்பாவி அக்லக் படுகொலை, ரோகித் வெமுலா தற்கொலை, நாடெங்கிலும் தொடரும் ஆணவப் படுகொலைகள், பகுத்தறிவாளர்கள் கௌரி லங்கேஷ்-நரேந்திர தபோல்கர்-கோவிந்த் பன்சாரே-எம்.எம்.கல்புர்கி ஆகியோர் படுகொலைகள் என காவி பயங்கரவாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. குறிப்பாக காவிக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இப்படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. ஜனநாயகம் மற்றும் சமத்துவத்துவத்திற்கு எதிரானது காவி பயங்கரவாதம்.

யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டுக் கம்பெனி போபாலில் நடத்திய கோரப்படுகொலை ஆயிரக்கணக்கோரின் உயிர்களைக் காவு கொண்டதை நாம் மறந்து விட முடியுமா? பன்னாட்டு மற்றும் கார்பரேட் கம்பெனிகள் கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சியாளர்களால் இந்தியாவின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இக்கம்பெனிகளால் ஏற்படும் சூற்றுச்சூழல் கேடுகளால் மக்கள் சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாகின்றனர். எதிர்த்துக் கேள்வி கேட்டால் குருவிகளைச் சுடுவதைப்போல அப்பாவி மக்கள் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய அப்பாவிகள் 14 பேரை கொன்றொழித்தனர். மொத்தத்தில் மக்களுக்கு எதிரானது கார்பரேட் பயங்கரவாதம்.

நாம் நிம்மதியாக வாழ வேண்டுமானால் காவிகளையும் கார்பரேட்டுகளையும் துரத்தியாக வேண்டும். அதற்கு நாம் ஓரணியில் சேருவது இன்றைய காலத்தின் கட்டாயம். ஓரணியில் சேர வேண்டுமானால் நம்மிடையே கருத்தொற்றுமை தேவை. கருத்துப் பரிமாற்றமே கருத்தொற்றுமைக்கு வழி வகுக்கும். கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவை வாசிப்பும் விவாதமும். இதை குறிக்கோளாகக் கொண்டு இராணிப்பேட்டை 'பெல்' வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் 13-வது சந்திப்பு 27.12.2018 அன்று தந்தை பெரியாரின் 45-வது நினைவு நாள் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் பெ.இந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார். தோழர் பெ.ஜெயக்கொடி தலைமை ஏற்று மிகச் சிறப்பாக இந்நிகழ்வை ஒழுங்கு படுத்தினார். தோழர்.சுப.நீலகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தோழர் தி.க.சின்னதுரை அவர்கள் பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்தி உரையாற்றினார்.

தோழர் கு.விஜயகுமார் அவர்கள் பெரியார் குறித்து வீரவணக்க உரை நிகழ்த்தினார். சமூக ஏற்றத் தாழ்வுகள், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் மீதான பெரியாரின் பங்களிப்பை அவர் தனது உரையில் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரியாரை நிறுத்துவது மிகமிக ஆபத்தானது; அது காவிபயங்கரவாதிகளுக்கே வலுசேர்க்கும் என்பதை தக்க ஆதாரங்களோடு அவர் விளக்கினார். பெரியாரைக் கொண்டாடவில்லை என்றால் நாம் திண்டாடுவோம் என்பதை உணர்த்துவதாக அமைந்தது அவரது உரை.

“தமிழகத்தின் அழகிய முகம், அந்த முகம் யார்? அவர் பெரியார். தமிழகத்துக்கு முகவரி தந்த பெரியார்.” என்கிற மிகச் சிறப்பான பாடல் ஒன்றை தோழர் தங்கவேல் பாடினார். இப்பாடல் அனைவரின் வரவேற்பைப் பெற்றது.

இறுதியில் தோழர் ரெ.மேகநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தோழர்.க.பாலசுப்பிரமணியன்.

‘பெல்’ அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தொடர்ந்து முன்னெடுக்கும் இது போன்ற நிகழ்வுகள் மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தொடரட்டும் அவர்களது பணி.

வாழ்த்துகளுடன்
ஊரான்
இந்திரன்

ஜெயக்கொடி

நீலகண்டன்

சின்னதுரை

தங்கவேல்

விஜயகுமார்


மேகநாதன்
தொடர்புடைய பதிவுகள்

மராட்டியம் மறந்தாலும் மகாத்மா புலேவை மறக்காத தமிழகம்!



Tuesday, 7 August 2018

கலைஞர் கடைசி அசுரனா?

இவன் வேதம் கூறும் நியதிகளையும், நெறிமுறைகளையும் ஒதுக்கித் தள்ளினான். மனுஸ்மிருதியின் விதிகளுக்கு விரோதமாக  செயல்பட்டான். இவனது ஆட்சியில் வேத நூல்களுக்குத்  தடை விதித்தான். இவன்தான் ஹரிவம்சம் எனும் நூலில் சொல்லப்ட்டுள்ள வீணா என்கிற அரசன்.

இவன் ஒரு பலம் கொண்ட மன்னன். இவனே ஒரு பலசாலி என்பதால் பார்ப்பனர்களின் ஆலோசனைகளைக் கேட்க மறுத்தான். இவன்தான் மகாபாரதம், ஆதிபருவத்தில் குறிப்பிடப்படும் புரூவரன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பனர்களின் வேத மந்திரங்களை ஏற்க மறுத்தான். இவன் புரூவரனின் மகன். இவன்தான் மகாபாரதம், உத்யோகப் பருவத்தில் சொல்லப்பட்டுள்ள நகுஷன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பன ரிஷி வசிட்டருடன் முரண்பட்டதால் சாபத்திற்குள்ளாகி கொல்லப்பட்டவன். இவன்தான் விஷ்ணு புராணத்தில  சொல்லப்பட்டுள்ள நிமி என்கிற அரசன்.

வேதங்கள் கூடாது என்பதனால் இவனது ஆட்சியில் வேத பாடசாலைகள் கிடையாது. இவன்தான் வாமண புராணத்தில் சொல்லப்படும் கேரள மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட மகாபலி சக்ரவர்த்தி. சும்மா விடுவார்களா பார்ப்னர்கள்? சூழ்ச்சியால் மகாபலியை ஒழித்துக் கட்டினார்கள்.

பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ள இரணியன் என்கிற இரணிய கசிபு. இவன் பிரகலாதனின் தந்தை. இவன் பார்ப்பனர்களை எதிர்த்த ஒரு மாபெரும் அரசன். நரசிங்க அவதாரம் மூலம் இவனையும் கொலை செய்தனர் பார்ப்பனர்கள்.

இலங்கைக்கே அதிபதியாக இருந்த இராவணனைக் கொன்றார்கள். இப்படி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட மன்னர்களின் பட்டியல் மிக நீளமானது.

மன்னர்களின் ஆட்சிகள் எல்லாம் ஒன்றும் பொதுவுடமை ஆட்சிகள் அல்ல. இவர்களது ஆட்சிக் காலத்திலும் மக்கள் பல்வேறு அரசியல்-பொருளாதார பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்திருப்பார்கள். மன்னரும் அவரது குடும்பமும் செல்வச் செழிப்போடு சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள்.

இவர்கள் மாபெரும் சக்ரவர்த்திகளாக, மன்னர்களாக, அரசர்களாக கோலாச்சிய போதும் இவர்களை ஏன் அசுரர்களாக, அரக்கர்களாக அதாவது இழிவானவர்களாக புராணங்கள் அடையாளப்படுத்துகின்றன? இவர்களது ஆட்சிக் காலத்தில் மக்கள் தும்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்காகவா? அல்லது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தை ஏற்க மறுத்ததற்காகவா?

பார்ப்பனர்களை வணங்காமையால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் உள்ளிட்ட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவரையும் 
நான்காம் வர்ணமான இழிவான சூத்திர நிலைக்குத் தகுதி இறக்கம் செய்கிறான் மனு. (மனுஸ்மிருதி 10 - 43, 44).

யாரெல்லாம் வேதங்களையும், பார்ப்பன இந்து மதத்தின் வர்ணாசிரம தத்துவங்களையும் கேள்விக்குள்ளாக்கினார்களோ, அவர்களெல்லாம் அசுரர்கள் என இழிவு படுத்தப்பட்டார்கள். சதி மற்றும் நயவஞ்சகத்தால் கொன்றொழிக்கப்பட்டார்கள். புத்தரில் தொடங்கி பல்வேறு மன்னர்கள் ஈடாக அதைத் தொடர்ந்து வள்ளலார், பசவன்னர், மகாத்மா புலே, பெரியார், அண்ணா, அம்பேத்கர், கௌரிலங்கேஷ்நரேந்திர தபோல்கர்கோவிந்த் பன்சாரேஎம்.எம்.கல்புர்கி என்கிற இந்த அசுரர்களின் பட்டியல் மிக நீளமானது. இந்த வரிசையில் இதோ இன்னுமொரு அசுரன். யாருடைய மரணத்தை பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்களோ, யாருடைய மரணம் பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவர் நிச்சயம் அசுரர்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு இது இறுதி மகிழ்ச்சி அல்ல!

ஊரான்

Thursday, 7 September 2017

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஜவார்கி அருகே சன்னூர் என்கிற குக்கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்கிறார்கள் என்பதற்காக அந்தக் கிணற்றில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து கிணற்று நீரை நஞ்சாக்கியிருக்கிறார்கள் இந்து மத கவுடா சாதி வெறியர்கள். 
இத்தகையை இந்து மதவெறிக் கொடுங்கோண்மைக்கு எதிராக துணிச்சலாக, ஒரு பெண்மணி, அதுவும் தன்னந்தனியாய் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொடூரமாக - கோழைத்தனமாக படுகொலை செய்துள்ளது ஆர்.எஸ்.எஸின் இந்து மதவெறிக் கும்பல். 
கவுரி லங்கேஷ்
'கோழையே..!'
என்னிடம் தோட்டாக்கள்
என்னிடம் அழியா வார்த்தைகள்
எதற்கும் அஞ்ச மாட்டேன்.
நான் கவுரி லங்கேஷ்'
இதுதான் இந்து மதவெறிக் கோழைகளுக்கு அவர் விட்டுச் சென்ற வீரஞ்செறிந்த போர் முழக்கம்.
இந்து மதம் இருக்கின்றவரை சமூக ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கவே செய்யும். ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் வரை கவுரி லங்கேஷ்க்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டுமனால் இந்து மதத்தை அழித்தாக வேண்டும். இந்து மதத்தை அழிக்க கவுரி லங்கேஷ்களாய், நரேந்திர தபோல்கர்களாய், கோதவிந்த் பன்சாரேக்களாய், எம்.எம்.கல்புர்கிகளாய் உருவெடுப்போம்! 
பெரியாரும், அம்பேத்கரும் காட்டிய வழியில் பார்ப்பன பாசிச இந்து மதவெறிக் கும்பலுக்கு சவக்குழி தோண்ட அணியமாவோம்! 
தொடர்புடைய பதிவுகள்:
நேற்று நான் கல்புர்கி... இன்று நான் கவுரி லங்கேஷ்!

எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டேன்: கவுரி லங்கேஷின் நண்பர் வேதனை

கர்நாடகாவில் தலித் மக்களின் குடிநீர் கிணற்றில் விஷம் கலப்பு: 3 பேர் கைது