Thursday, 29 October 2015

ஷர்மாவும் வர்மாவும் தலித் ஆன கதை!

மத்திய காலத்தில் (கி.பி.8 முதல் 18ம் நூற்றாண்டு காலகட்டத்தில்) இந்தியாவில் ஊடுருவிய இஸ்லாமியர்களால் தூய்மையற்ற தொழில்கள் தலித்துகள் மீது திணிக்கப்பட்டதாலேயே அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிற ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிஜர் சோன்கர் சாஸ்திரி.

அவர் மேலும் சொல்கிறார்.

மத்திய காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவில் ஊடுருவிய போது அவர்களுக்கு மிகப்பெரிய தடையாக இந்துயிசம் இருந்ததாம். குறிப்பாக பார்ப்பனர்களும் சத்திரியர்களும் மட்டுமே இந்துமதப் பண்பாட்டின் பாதுகாவலர்களாகவும் பூகோள எல்லையைக் காப்பவர்களாகவும் இருந்தார்களாம். இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு இவர்கள் மீது வன்கொடுமைகள் ஏவப்பட்டதாம்.

செத்தாலும் பரவாயில்லை; எது நேர்ந்தாலும் இஸ்லாத்தைத் தழுவ முடியாது என சில பார்ப்பனர்களும் சத்திரியர்களும் முடிவெடுத்தார்களாம். இவர்களின் மத கௌரவத்தையும், சுயமரியாதையையும், தேசிய பெருமிதத்தையும் சிதைப்பதற்காக மலக்கழிவுகளை எடுக்கின்ற வேலைகளிலும், தோல் தொடர்பான வேலைகளிலும் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் ஈடுபடுத்தப்பட்டார்களாம். அதனாலேயே பார்ப்பனர்களும் சத்திரியர்களும் தீண்டத்தகாதவர்கள் அதாவது தலித்துகள் ஆக்கப்பட்டார்களாம்.

கி.பி.400க்குப் பிறகு மாட்டிறைச்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்கிற தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவிலிருந்து பிஜர் சோன்கர் சாஸ்திரி மாறுபடுகிறாராம்.

மாட்டிறைச்சியை வெறுத்த இந்துக்கள் (உயர்சாதியினர்) மாட்டிறைச்சி உண்ணும் சிலரை தீண்டத்தகாதவர்களாக்கினர் என தொகுதி 7ல் (ஆங்கிலம்) அம்பேத்கர் கூறிய கருத்தை மறுதளித்து,. தூய்மையற்ற தொழில்தான் தீண்டாமைக்குக் காரணம் என்கிறார் பிஜர் சோன்கர் சாஸ்திரி.

தீண்டாமை குறித்த இவரது கருத்து ஆர்.எஸ்.எஸின் இணைச்செயலாளர் கிருஷ்ண கோபால் என்பவர் அண்மையில் ஆர்கனைசர் பத்திரிக்கையில் எழுதிய கருத்துடன் ஒத்ததாக உள்ளது.

கிருஷ்ண கோபால் கருத்தின்படி தீண்டாமை குறித்த முதல் சான்று தாகிர் குடும்பத்தில் உள்ளதாம். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுடனான போரில் தாகிர் தோற்றுப் போனானாம். ஆக்கிரப்பாளர்கள் தாகிரின் அரண்மனைக்குள் நுழைந்த போது, ”அவர்கள் மிலேச்சர்கள், அதாவது அழுக்கானவர்கள், அவர்கள் நம்மைத் தொட்டால் நாம் அசுத்தமாகி விடுவோம். அதனால் நாம் நம்மையே கொன்று கொள்வோம்” என தாகிரின் குடும்பப் பெண்கள் சொன்னார்களாம். .இஸ்லாமியர்கள் தொட்டதால்தான் தாகிர்கள் தீண்டத்தகாதவர்களானார்கள் என்பதுதான் கிருஷ்ண கோபாலின் கருத்து..

இதுதான் தீண்டாமையின் முதல் சான்றாம்.   

பிஜர் சோன்கர் சாஸ்திரி மேலும் சொல்கிறார்…

தலித்துகளில் ஒரு சாரார் அம்பேத்கரை தவறாகப் புரிந்து கொண்டார்களாம். 1927ல் மனுதர்மத்தை எரித்த அம்பேத்கர் 1948ல் மனுவுக்கு நற்சான்றிதழ் அளித்தாராம். அம்பேத்கர் 1927ல் சொன்னதை ஏற்கும் இன்றைய தலித்துகள் 1948ல் அம்பேத்கர் சொன்னதை ஏற்க மறுக்கிறார்களாம்.

இது அம்பேத்கர் பார்வையில் ஏற்பட்ட மாற்றமாம். ஆரியக் கருத்தியலை பிற்காலத்தில் அம்பேத்கர் மறுதளித்தாராம். ஆரிக் கருத்தியல் என்பது மிகப்பெரிய அரசியல் நகைச்சுவையாம். தாங்கள் மட்டுமே அந்நியர்கள் அல்ல; பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அந்நியர்களே என்கிற கருத்தியலை ஊக்குவிக்கவே பிரிட்டிஷார் ஆரியக் கருத்தியலை உயர்த்திப் பிடித்தார்களாம்.

கடைசியாக பிஜர் சோன்கர் சாஸ்திரி சொல்கிறார்.

இஸ்லாமியர்களால் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட பார்ப்னர்களும் சத்தியர்களுமே பின்னர் பழங்குடியினர்(ST) ஆனார்களாம். (ஆதாரம்: THE HINDU, 29.10.2015)

தீண்டாமைக்கு வித்திட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதே ஒரு கடைந்தெடுத்த அடிமுட்டாள்தனமான கருத்து. தீண்டாமை குறித்து மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள விவரங்களை ஏற்கவே நாம் பரிசீலித்திருக்கிறோம் (தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2)

மனுவின் காலம் கி.மு 150லிருந்து கி.மு 200 என்கின்றனர். ஆனால் இஸ்லாமியர்களின் காலமோ கி.பி 1200லிருந்துதான் தொடங்குகிறது. கி.மு.150க்கு முன்பே தீண்டாமையை மனு பதிவு செய்திருக்கிற போது கி.பி.1200க்குப் பிறகு வந்த இஸ்லாமியர்களே தீண்டாமைக்குக் காரணம் என்று சொல்வது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்!. இந்தப் பொய்யை பிஜர் சோன்கர் சாஸ்திரி என்கிற ஒரு தலித் மூலமாக இந்துத்துவாவாதிகளால் சொல்ல முடிகிறது என்றால் அதுதான் இந்துத்துவாவாதிகளின் வெற்றி! நமது தோல்வி!

இங்கே அர்ஜீன் சம்பத்துகள் இருக்கும் போது அங்கே பிஜர் சோன்கர் சாஸ்திரிகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே! 

அம்பேத்கர்-பெரியார் இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுக்காத வரை நாம் தோற்றுக் கொண்டேதான் இருப்போம்.

குறிப்பு: ஷர்மா பார்ப்பனர்களைக் குறிக்கும் வர்மா சத்திரியர்களைக் குறிக்கும்.

செய்தி ஆதாரம்: THE HINDU, 29.10.2015

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! இறுதிப் பகுதி

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*‘நமஸ்காரம்’ சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!
எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Tuesday, 27 October 2015

மாட்டிலாக்கா!

மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது என காவிகள் சொல்கிறார்களே! மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற ஆசையை மற்றவர்களிடமும் தூண்டிவிட்டு ஆங்காங்கே மாட்டிறைச்சி விழாக்களை நடத்துவதற்கு ஊக்கமளித்து வருவதோடு அவ்வாறு மாட்டிறைச்சி விருந்து நடத்துவோரை தாக்குவதன் மூலம் மாட்டிறைச்சியின் பக்கம் மேலும் பலரை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும் காவிகளுக்கு நாம் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.

இதுவரை மாட்டிறைச்சியைத் தேடித்தேடி யாரும் உண்டதில்லை. கிடைக்கும்போது உண்பதோடு சரி. மாட்டிறைச்சிக்குத் தடை என்று வந்த பிறகுதான் இன்று நாடெங்கும் மாட்டிறைச்சி விழாக்கள் பெருகி வருகின்றன.. 'சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பது போல இன்று மாட்டிறைச்சிக்குத் தடைவிதித்ததன் மூலம் மாட்டிறைச்சியின் பக்கம் மக்களை தள்ளிவிட்டுள்ளார்கள்.

ஒரு காலத்தில் தனக்குப் போகதான் மீதிப் பாலை விற்பனை செய்வான் விவசாயி. அதனால் அவன் வீட்டில் எப்பொழுதும் மோர் இருக்கும். அந்த மோர்கூட கேப்பைக் கூழுக்கும் கம்பங்கூழுக்கும் சுவை சேர்க்கவும், கோடை காலங்களில் தாகம் தீர்க்கவும்தானேயொழிய காவியைத் தூக்கித்திரியும் தயிர்வடைகளைப்போல தயிரில் மூழ்கி, வெண்ணையில் புரண்டு, நெய்யில் மிதப்பதற்கு அல்ல!.

விவசாயம் பொய்த்துவரும் இன்றைய சூழலில், விவசாயிகள் எந்த நேரத்திலும் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாடுகளை விற்கத் தயங்கமாட்டார்கள் என்பதால் வழக்கமாக மாடுகளை பராமரிக்கும் சூத்திர விவசாயிகளை நம்புவது அர்த்தமற்றது என்பதால் மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை இனி காவியைத் தூக்கித்திரியும் தயிர்வடைகளிடம் ஒப்படைப்பது என நடுவண் அரசு முடிவெடுத்துள்ளது. மாடுகளை பாதுகாப்பதற்கென தனியாக 'மாட்டிலாக்கா!' ஒன்றையும் அரசு உருவாக்க உள்ளது.


மாட்டிலாகா கேந்திரமான துறை என்பதால், மாடுகளை பராமரிப்பதற்கான பயிற்சி முறையாக அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கான பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தினமும் காலையில் எழுந்தவுடன் சாணியை அள்ளி கோமியத்தைத் தள்ளி தொழுவத்தைத் தொடச்சிக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். கோமியத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட சாணியை கூடையில் அள்ளிப் போட்டு தலையில் சுமந்து சென்று கொல்லை மேட்டுலயும் கழனிகாட்டுலயும் இருக்கிற எருக்குழியில் கொட்டவேண்டும். சாணியை சுமந்து செல்லும் போது கூடையின் இடுக்குகளில் உள்ள ஓட்டைகளின் வழியாக வழியும் சாணிக் கழிவுகள் முகத்திலும் தோளிலும் வழியும் போது அவற்றை லாவகமாக வழித்துவிட வேண்டும்.

குப்பையில் கொட்டிய சாணி, மக்கி எருவான பிறகு அதைக் கூடையில் வாரிப் போட்டு தலையில் சுமந்து சென்று வயல் வெளிகளில், விலைநிலங்களில் தூவ வேண்டும். எருக்குழியை தோண்டும் போது வெளியே வரும் பூரான்களையும், மண்புழுக்களையும், நட்டுவாக்கிளியையும், தவளைகளையும் இன்ன பிற பூச்சிகளையும் எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும்.

காலை - மலை இரண்டு வேலையும் பால் கறக்க வேண்டும். பால் கறப்பது அவ்வளவு சுலபமான வேலை கிடையாது.  பசுவின் இரண்டு கால்களையும் கயிற்றைக் கொண்டு கட்ட வேண்டும். சரியாவும் எச்சரிக்கையாகவும் கட்டத் தெரியவில்லை என்றால் மூஞ்சி பேந்திரும். பசுவின் காலை கட்டிய பிறகு தூரத்தில் கட்டி வைக்கப்பட்டு பாலுக்காக ஏங்கி நிற்கும் கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட வேண்டும். கன்றுக் குட்டியின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் ஒரு முனை எப்பொழுதும் கையில் இருக்க வேண்டும். பாவம் கன்றுக்குட்டி என்ன செய்யும்? முதல் நாள் மாலை பால்கறக்கும் போது நனைந்த தொண்டை அதன்பிறகு இரவு முழுக்க காய்ந்து அகோரப்பசியில் இருக்கும் கன்று, அவிழ்த்து விட்ட வேகத்தில் பசுவின் மடியை 10000 kgf ஆற்றலோடு முட்டும் போது பசுவே சற்றுத் தள்ளாடும். இருந்தாலும் கன்று தனது குழந்தையல்லவா! அந்த முட்டலை மகிழ்வோடு பசு ஏற்றுக் கொள்ளும். பசுவின் ஒவ்வொரு காம்பையும் சப்பி சப்பி ஈரமாக்கி கன்று பாலை குடிக்கும் போது தனது குழந்தைக்கு பால்கொடுக்கும் மகிழ்ச்சியில் பசு தனது நாவால் கன்றை நக்கும் போது ஒரு தாயின் அரவணைப்பைப் பார்க்க முடியும்.

இந்த அரவணைப்பைக் கண்டு சொக்கிப் போய் நின்றால், கொஞ்ச நேரத்தில் மடி காலி. அதையடுத்து உனது வேலையும் காலி. எனவே கன்று பால் குடிக்கும் போது காம்புகளை ஈரப்படுத்தும்வரைதான் அனுமதிக்க வேண்டும். உடனே கையில் இருக்கும் கயிற்றை இழுத்து பசுவின் மடி எட்டாத தூரத்தில் கன்றை கட்டிவிட வேண்டும். ஆனால் சில கன்றுகள் கில்லாடிகளாக இருக்கும். ஒரு காம்பை மட்டுமே ஈரப்படுத்தி அதிலிருந்து மட்டுமே பாலைக் குடிக்கும். கன்று சப்பாத காம்பில் பால் சுரக்காது. மற்ற காம்புகளையும் ஈரப்படுத்தும் வரை காத்திருந்தால் அப்போதும் பால் காலி. உனது வேலையும் காலி.

கன்றுக்குட்டியை இழுப்பதற்கு யானை பலம் வேண்டும். அதுக்கு மோரும் தயிரும் மட்டும் சாப்பிட்டா போதாது. அப்பப்ப கொஞ்சம் கறியை கடிச்சிருக்கனும். ஆடோ! மாடோ! எதுவானாலும் பரவாயில்லை. இப்போதைக்கு மாட்டுக்கறிக்குத் தடை இருப்பதால் உடும்புக்கறி உசிதமாக இருக்கும்.

கைகளில் தண்ணீரை அள்ளி மாட்டின் மடியில் அடித்து காம்புகளைக் கழுவ வேண்டும். பால் கறப்பதற்கு மற்றோரு முக்கியமான திறமை வேண்டும். பசுவின் மடியருகே குத்துக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு பால்பாத்திரத்தை - அனேகமாக உருண்டையான ஒரு குண்டான் – கக்கத்தில் இடுக்குவது போல இரண்டு முட்டிகளுக்கிடையில் தொடையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் ஒவ்வொரு காம்பாக அழுத்தி இழுத்து "சர்! சர்!" என பால் பாத்திரத்தில் விழும்படி பால் கறக்க வேண்டும். தொடையை கொஞ்சம் விரித்தாலே, பாத்திரம் குப்புற கவிழுந்து பாலெல்லாம் மண்ணோடு மண்ணாய்ப்போகும். அதோடு உனது வேலையும் மண்ணைக் கவ்வும்.

ஒருதடவையில் பசுவின் பாலை கறந்துவிட முடியாது. மறுமுறையும் கன்றை அவிழ்த்துவிட்டு பசுவின் காம்பு ஈரமான பிறகு கன்றை இழுத்துக் கட்டி மீண்டும் மேலே கூறியது போல பால் கறக்க வேண்டும்.

தவிடு - புண்ணாக்கு அளவா வைக்கத் தெறிஞ்சிருக்க வேண்டும். ஒரு தொட்டியில் தவிடையும், புண்ணாக்கையும் போட்டு முழங்கை நனைகிற அளவுக்கு கையை தொட்டியின் உள்ளே நுழைத்து தவிட்டையும் புண்ணாக்கையும் துழாவித் துழாவி கரைத்து கலக்க கேண்டும். எச்சரிக்கை! மாட்டை அவிழ்த்துவிட்டுவிட்டு தொட்டியை கலக்கினால் புண்ணாக்கு எனக் கருதி கைவிரலை மாடு கவ்வி விடும். விரல் ஜாக்கிரதை!.
  
வைக்கோல் அளவாகப் போட வேண்டும். அதிகம் போட்டால் பால் பாதியாகிவிடும். பால் அதிகம் வேண்டும் என்றால் தவிடு புண்ணாக்கு மட்டும் போதாது. வாய்கா வரப்புல- ஏரிக்கறையில பசுவை ஓட்டிட்டுப் போய் மேய்க்க வேண்டும். மேய்க்கும் போது பக்கத்து வயல்காரன் பயிர மேய்ஞ்சிட்டா தீராப் பகை. பாத்துக்க!

மாடு மேய்க்கும் போது வெயிலடிச்சா நெழலத் தேட வேண்டும். மழை பேஞ்சா கொட்டாயத் தேட வேண்டும். மாடு அழுக்கானா தேய்ச்சிக் கழுவ வேண்டும்.

பால் அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் பசுவுக்கு பசும்புல் அதிகம் கொடுக்க வேண்டும். பசும்புல் கிடைக்க வேண்டுமென்றால் வயல் வரப்புகளில், கொல்லைமேடுகளில் உள்ள புற்களைத் தேடித் தேடி அறுத்தோ, பிடுங்கியோ, கட்டுக் கட்டியோ, புற்கள் குட்டையாக இருந்தால் சாக்குப் பையில் திணித்தோ சுமந்து வரவேண்டும். கதிர்அருவா கொண்டு புற்களை அறுக்கும் போது கைவிரல்கள் பத்திரம். அதுவும் குட்டையான புற்களை இடது கையால் கொத்தாக கோர்த்து வலது கையில் உள்ள அருவாவால் அறுக்கும் போது அனேகமாக சுண்டுவிரலில் இரத்தம் பார்க்காமல் புல் அறுக்க முடியாது.

சொந்த வயல் வரப்புகளில் புற்கள் இல்லை என்பதற்காக பக்கத்து வயல் வரப்புகளில் புற்கள் இருந்தால் வயக்காரனுக்குத் தெரியாமல் புற்களை அறுத்துவிடக்கூடாது. பக்கத்து வயல்காரன் பங்காளியே ஆனாலும் அனுமதி பெற்றே அறுக்க வேண்டும். இல்லையேல் அதற்கு ஒரு வெட்டுக் - குத்து, கோர்ட் - கேசு என அலைய வேண்டியிருக்கும். 

புற்களை மாட்டுக்குப் போடும் போது குட்டையான புற்கள் என்றால் கூடையில் வைத்தும், நீளமான புற்கள் என்றால் அப்படியே போடவும் தெரிந்திருக்க வேண்டும்.

மாட்டுக்கு மூக்குக் குத்த வேண்டும். அப்பப்ப மூக்குக் கயித்த மாற்ற வேண்டும். காசுருக்க (புளிச்சக் கீரை) நாரைக் கொண்டு கயிறு திரிக்க தெரிந்து கொள்ள வேண்டும். கயிறை காசுக்கு வாங்கினால் கறக்கும் பால் கயித்துக்கே சரியாயிடும்.

மாட்டை கட்டி வைக்க மொளயடிக்க வேண்டும். சுருக்கு போட்டு கயித்த கட்டத் தெரிய வேண்டும். மாடு தனது கழுத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டாமல் இருக்க மொளக்குச்சியையொட்டி ஒரு முழம் அளவு நீளம் மட்டுமே கயிறு இருக்க வேண்டும். அதிக நீளமாக கயிற்றை விட்டுக் கட்டினால் கழுத்தை வேகமாக ஆட்டி ஆட்டி, ஒன்று கயிற்றை அறுத்துவிடும்; இல்லையேல் பக்கத்து மொளையில் கட்டியுள்ள மாட்டோடு மல்லுக் கட்டும்.

கன்றுக்குட்டியை சரியா கட்டத் தெரியலன்னாலும் அல்லது பசுவிற்கு அருகே கட்டினாலும் மறுநாள் காலையில பசுவின் மடி வத்திப் போயிடும். தண்ணிய தெளிச்சு மடிய அடி அடின்னு அடிச்சாலும் பாலு வராது. காம்புதான் கண்ணிப் போகும்.

அப்பப்ப மாட்டுக்கு கொம்பு சீவ வேண்டும். சீவின கொம்புகளுக்கு பெயிண்ட்டும் அடிக்க வேண்டும். மாட்டுப் பொங்கலின் போது இது கட்டாயம்.

மாடுகளைப் பராமரிப்பதற்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. மற்றவைகளை வேலையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: மாட்டிறைச்சிக்குத் தடை கோரி கூப்பாடு போடும் தயிர்வடை காவிப் பசங்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்கு உடன்பட மறுத்தாலோ அல்லது மாடுகளை பராமரிக்க மறுத்தாலோ அவர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

மாட்டுக் கறி சாப்பிடாதவன் நல்ல இந்துவே அல்ல!

ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!


Tuesday, 13 October 2015

மாட்டுக் கறி சாப்பிடாதவன் நல்ல இந்துவே அல்ல!

ஓரளவுக்காவது மார்க்சியக் கோட்பாடுளைத் தெரிந்திருந்தால்தான் மார்க்சியத்தை ஆதரிக்க முடியும். மார்க்சியக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவன் அக்கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர தீவிரமாகப் போராடுவான். அதே போல நாத்திகக் கோட்பாடுகளையும் பெரியாரியலையும் தெரிந்தவன் மட்டுமே அதற்காகப் போராட முன்வருவான்.

ஆனால் இன்று இந்து மதக் கோட்பாடுகளை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக கூப்பாடு போடும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் போர்வையில் போராடும் நபர்களுக்கு உண்மையில் இந்து மதக்கோட்பாடு பற்றி எதுவும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொன்னப் போனால் அவர்கள் இந்து மதத்திற்கு எதிராகத்தான் போராடுகிறார்கள்.

இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உணவு பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது? இறைச்சி உணவை அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உணவை தடை செய்ய வேண்டும் என இவர்கள் கூப்பாடு போடுவதன் உள்நோக்கம் என்ன? இந்து மத சமய நூல்களை இவர்கள் என்றைக்காவது புரட்டி இருப்பார்களா? இவர்கள் உண்மையிலேயே பசுவைப் பாதுகாக்கத்தான் போராடுகிறார்களா? இல்லை மாட்டிறைச்சியை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்களா?

இந்து மதம் உள்ளிட்ட உலகில் உள்ள அனேக மதங்கள் மதப் புனிதத்தைப் போற்றிக்காக்க விலங்குகளை பலியிட்டுள்ளனர். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் உணவுக்காகவே விலங்குகள் பலியிடப்பட்டதற்கு மனுஸ்மிருதி, வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், தர்மசூத்திரங்கள் உள்ளிட்ட இந்து மத சமய நூல்கள்களே சான்றாக உள்ளன.

”சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல”. (மனு: 5-30)

“மதச் சடங்குகளில் முறையாக ஈடுபட்டுள்ள ஒருவன் இறைச்சி உண்ணவில்லை எனில், அவன் இறைச்சி உண்ணாத பாவத்திற்காக அடுத்து வரும் 21 பிறப்புகளிலும் பலியிடப்படுகிற விலங்காகவே பிறப்பான்”. (மனு: 5-35)

“நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான்” - சத்பத பிராமணத்தில் மகரிஷி யாக்யவல்கியன். (3/1/2/21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்” என்கிறது அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1/3/10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும் (10/85/13), பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான் (6/17/1) என்கிறது ரிக் வேதம்.

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான் என்கிறது வஷிஸ்த தர்ம சூத்திரம் (11/34).

இப்படி இறைச்சிக் கொழுப்பின், குறிப்பாக மாட்டிறைச்சிக் கொழுப்பின் வழவழப்பு புராணங்களின் பக்கங்களில் வழிந்தோடுகிறது.

புராணங்களில் வழிந்தோடும் இந்தக் கொழுப்பை தனது வாலால் வழித்து மறைக்கப் பார்க்கின்றன சங்பரிவார வானரங்கள்

காலம் கடந்து விட்டதால் இனி வானரங்கள் ஒரு போதும் மனிதனாக பரிணாம வளர்ச்சி பெறும் என எதிர்பார்ப்பது அறிவீனம். அதே வேளையில் ஒட்டு மொத்த மனிதர்களையும் வானரங்களாக மாற்ற முயல்வதை வேடிக்கை பார்ப்பது கோழைத்தனம்.

“பழைய இந்து சமய சடங்குகளின்படி மாட்டிறைச்சியை சாப்பிடாத ஒரு மனிதன் நல்ல இந்து அல்ல!” என்கிறார் சுவாமி விவேகானந்தர். (விவேகானந்தர் தொகுப்பு; பகுதி:3, பக்கம்: 536)

வெறும் இந்துவாக வாழ்வதை விட – நல்
இந்துவாக வாழ்வதே மேல்!.
------------
தொடர்புடைய பதிவுகள்:

‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?


Saturday, 10 October 2015

‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?

2015, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொலைக்காட்சி விவாதத்தின் போது “பசு வேறு! மாடு வேறு!” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

ஒரே குழப்பம். தொலைக்காட்சி விவாதத்தை நடத்திய நெறியாளர், தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றவர்கள்,  என்னைப் போன்று அந்த விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மற்றும் மாடுகளைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கிற அனைவருக்குமே ஒரே குழப்பம்தான்.

மனதில் ஏற்படுவதுதானே குழப்பம். உடலில் பிரச்சனை என்றால் சில சமயம் கை வைத்தியமே போதுமானது. ஆனால் மனக் குழப்பம் என்றால் மன நல மருத்துவரைத்தான் நாட வேண்டும். இல்லையேல் சென்னை கீழ்பாக்கமோ, வேலூர் பாகாயமோ கதி எனக் கிடக்கவேண்டியதுதான்.

குழப்பம் (confusion) வந்தாலே ஒரு மனிதன் நோயாளி ஆகிறான் என்கிறார் கிரேக்க நாட்டைச் சேர்ந்த வித்தல்காஸ் என்கிற ஹோமியோபதி அறிஞர்.

மனதளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஹோமியோபதி சிறந்த மருத்துவம் என்கிறார்கள். அதனால் சின்தசிஸ் ரெப்ரட்டிரியை (மருந்து காண உதவும் களஞ்சியம்) புரட்டினேன். அதில் ”மாடு வேறு! பசு வேறு!” என்கிற குழப்பத்திற்கு நேரடியான ரூப்ரிக் (நோய்க்குறி) இல்லாததால் மனக்குழப்பம் (confusion of mind) என்கிற பொதுவான ரூப்ரிக்கில் மருந்து தேடினேன். இந்த ரூப்ரிக்கில் ஏபியஸ் கனாடென்சிஸ் (abies canadensis) முதல் ஜிங்கம் பாஸ்பாரிகம் (zincum phosphoricum) வரை சுமார் ஐநூறு வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தனித்துவமான குறி இருந்தால் மட்டுமே சரியான மருந்தைத் தேர்வு செய்வது சாத்தியமானது என்பதை ஹோமியோபதி மருத்துவமுறை சொல்கிறது. இந்த நிலையில் தனித்துவமான குறி இல்லாத போது ஒரு பொதுக்குறியைக் கொண்டு இந்த ஐநூறு மருந்துகளில் சரியான மருந்து ஒன்றை தேர்வு செய்வது இயலாத செயல் என்பதால் மீண்டும் வித்தல்காசின் உதவியை நாடினேன்.

எவன் ஒருவன் தெளிவாக (clarity) இருக்கிறானோ அவன் நோயற்றவன். அதாவது அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள். உடல் நலம் (health) குறித்து வித்தல்காஸ் கொடுத்த இந்த விளக்கத்தைப் பரிசீலித்தேன். மாடு-பசு குறித்தத் தெளிவு எனக்கு ஏற்பட்டுவிட்டால் குழப்பம் நீங்கி நான் நலமாகிவிடுவேன்; எனக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவைப்படாது.

அதனால் தெளிவைத் தேடினேன். நர்மதாவின் தமிழ் அகராதியைப் புரட்டினேன். பசு என்றால் பாலுக்காக வீட்டில் வளர்த்திடும் எருமை அல்லாத மாட்டினத்தின் பெண் விலங்கு; எருமை அல்லாத மாட்டினத்தினைக் குறிக்கும் பொதுப் பெயர் என பொருள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அது என்ன ‘எருமை அல்லாத’? இங்கே எருமை என்றால் என்னவென்று தெரிந்தால் மட்டுமே பசு என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருமை என்றால் நீளமான வளைந்த கொம்பையும், கரிய நிறத்தையும், தடிமனான தோலையும் உடைய மாடு வகை. (எம தருமனின் வாகனம் எருமை ஆகும் - ஏண்டா எருமை! படிக்காம எங்கேடா போய் சுத்திக்கிட்ட வர்ற?)

பசு மற்றும் எருமை ஆகிய இரு விளக்கங்களிலும் ‘எருமை அல்லாத மாட்டினம்’ என்றும் ‘மாடு வகை’ என்றும் சொற்றொடர்கள் வருகின்றன. எனவே மாடு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால்தான் பசுவைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

மாடு என்றால் விவசாய வேலைகளுக்கும் வண்டி இழுத்தல் போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படும் ஆண் விலங்கையும், பாலைத் தரும் பெண் விலங்கையும் குறிக்கும் பொதுப் பெயர்.

என்ன? ஏதாவது விளங்கியதா? மீண்டும் குழப்பமா? பால் கொடுப்பது பசு. ஏர் இழுப்பது எருது. இது என்ன புதுசா எருது? இப்பொழுது எருது என்றால் என்னவென்று தெரிந்தால்தான் பசுவைப் பற்றியும் மாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருது என்றால் காளை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இது போதுமானதல்ல. எருது என்றால் வண்டியில் பூட்டிப் பிரயாணம் செய்யவும், வயலில் உழுதிடவும் பயன்படும் காயடிக்கப் பெற்ற ஆண் மாடு. காளை என்றால் இளமைப் பருவத்தில் இருக்கும் இனவிருத்திக்கான காயடிக்கப்படாத ஆண் மாடு.

அப்படியானால் எருமை வகையில் பால் கொடுக்கும் பெண் எருமையை என்னவென்பது? அது பசு வகையில் சேராதா? வண்டி இழுக்கவும் மற்றும் ஏர் உழவு செய்யவும் பயன்படும் ஆண் எருமையை என்னவென்பது? பெண் எருமையை எருமைப் பசு என்றும் ஆண் எருமையை எருமைக்கிடா என்றும் சொல்லலாமா? மொத்தத்தில் இவைகளும் மாடுகள்தானே?

ஆவின் பாலில் இருக்கும் ‘ஆ’வும் பசுதான். ‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா? 

மொத்தத்தில் பசு, எருது, காளை, எருமை எல்லாமே மாடுகள்தான். நாட்டு மாட்டில் பால் கொடுக்கும் பசு உண்டு. ஏர் உழும் எருது உண்டு. இனவிருத்திக்கு பயன்படும் காளை உண்டு. எருமை மாட்டிலும் பால் கொடுக்கும் எருமைப் பசு உண்டு. ஏர் உழும் எருமைக் கிடா உண்டு.

நாட்டு மாடோ! எருமை மாடோ! இரண்டு வகை மாடுகளுமே மனிதனுக்குச் செய்கின்ற சேவைகள் ஒன்றுதானே. இதில் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? நாட்டுப் பசுவை மட்டும் புனிதம் என்பது நன்றிகெட்டச் செயல் அல்லவா?

உழவன் என்னவோ இவைகளுக்கு ஒரே மரியாதையைத்தான் தருகிறான். ஆனால் ‘ஆ’வை ‘கோ’வாக்கிய  சில தயிர் வடைகள்தான் புனிதம் - புண்ணாக்கு என பீற்றித் திரிகின்றனர். 
பசு

காளை

எருது

எருமை பசு

எருமை கிடா

ஏர் உழும் எருமை




தொடர்புடைய பதிவு:

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!