Wednesday, 12 June 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!


முன்னொரு காலத்திலே அண்டகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானாம். வருவோர் போவோரையெல்லாம் வம்புக்கு இழுப்பதுதான் அவனுக்கு வேலையாம். சண்டை போடாமல் அவனால் சும்மா இருக்க முடியாதாம். ஒரு நாள், சண்டைக்கு யாரும் கிடைக்காததால். சிவனையே சண்டைக்கு அழைத்தானாம். சிவன் என்ன லேசுபட்ட ஆளா. அழிப்பதுதானே அவனது தொழில். அதனால் அண்டகாசுரனோடு சிவன் மோதினானாம். இருவரும் பலமாக முட்டி மோதிக் கொண்ட போது அண்டகாசுரனுடைய நெற்றியிலிருந்து விழுந்த வேர்வைத் துளியிலிருந்து ஒரு கரிய பூதம் தோன்றியதாம். அந்த பூதத்திற்கு வாஸ்து என்று பெயராம்.

அது ஆகோரப் பசி கொண்ட பூதம் என்பதால் அண்டகாசுரனையே விழுங்கி விட்டதாம். பசி அடங்காமல் கண்ணில் பட்டதையெல்லாம் விழுங்கத் தொடங்கியதாம். அடுத்து இருப்பதோ லோகம் மட்டும்தான். இதைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டார்களாம். புதுவீடு கட்டுபவர்கள் சாஸ்திரப்படி வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து சாப்பாடு போட்டால் பூதத்தின் பசியைப் போக்க முடியும் என வழி சொன்னானாம் பிரம்மா. படைப்புக் கடவுள் ஆயிற்றே. அவன் சொல்படிதானே பூதமும் நடந்து கொள்ள முடியும்.

வீடு கட்ட கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரம் பூதத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டு அதுவே வாஸ்து சாஸ்திரம் எனலாயிற்றாம். எனவே புது வீடு கட்டினால் வாஸ்து சாஸ்திரப்படி கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போட வேண்டுமாம். வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்காமல் வீடு கட்டி, பூஜை எதுவும் செய்யாமல் குடிபோனால் பூதத்தின் பசியை எப்படி போக்க முடியும்? அதுவும் குடி போகும் அன்றைக்கு மட்டும்தான் அந்த பூதத்தின் பசியைப் போக்க முடியுமாம்.

தனது சாஸ்திரத்தை மதியாமல், தனக்கு சாப்பாடும் போடாமல் குடி போனால், பசியோடு அலையும் வாஸ்து பூதம் சும்மா விட்டுவிடுமா? கோபத்தில் அந்தக் குடும்பத்திற்கு பல்வேறு தீங்குகளைச் செய்யுமாம் அந்தப் பூதம். வாஸ்து சாஸ்திரத்தை மதியாமல் சாப்பாடு மட்டும் போட்டுவிட்டு குடி போனாலும் தப்பிக்க முடியாதாம். ஏனென்றால் தனது சாஸ்திரத்தை மதியாமல் வீடு கட்டி போடப்படும் சாப்பாட்டை அது சாப்பிடாதாம்.

என்ன இப்பொழுதே பயம் வந்து விட்டதா? வேறு வழி? பார்ப்பன புரோகிதனைத் தேட வேண்டியதுதான். வேறு யாரையும் வைத்து செய்ய முடியாதே. பாப்பானுக்குத்தானே சாஸ்திரம் தெரியும். அதைச் செய்யும் அதிகாரமும் அவனுக்கு மட்டும்தானே உண்டு.

தொடரும்

வாசிப்பில் முனைப்பு காட்டும் இளைஞர்கள்!


இராணிப்பேட்டை, பெல் வாளகத்தில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் 19-வது சந்திப்பு கடந்த 30.05.2019 அன்று நடை பெற்றது. 

தோழர் துரை.பாலகிருட்டிணன் நெறியாளுகை செய்தார். 

தோழர் செ.விநோதினி வரவேற்புரை நிகழ்த்தினார். இதுதான் அவருக்கு முதல் மேடை என்றாலும் வரும் காலம் இளைஞர்கள் கையில்தான் என்பதை குறிப்பால் உணர்த்தினார்.

தே.இலட்சுமணன் எழுதிய “பகுத்தறிவாளர் புத்தர்” என்கிற நூல் குறித்து தோழர் மு.தங்கவேல் உரையாற்றினார். சமத்துவத்தை போதித்த பௌத்தத்தை பார்ப்பனர்கள் எவ்வாறு வீழ்த்தினர் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மிக அழுத்தமாக தனது உரையில் வெளிப்படுத்தினார்.

கே.பாலகோபால் எழுதிய “கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்” என்கிற நூல் குறித்து தோழர் நா.பாலாஜி மிகச் சிறப்பாக உரையாற்றினார். காஷ்மீரின் வரலாறு, காஷ்மீர் குறித்த இந்திய பாகிஸ்தான் இரு அரசுகளின் நிலைப்பாடு, இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை முதன் முறையாக இருந்தாலும் மிகத் தெளிவாக இவர் முன்வைத்ததைப் பார்க்கும் போது இவர் இந்நூலை மிக ஆழமாக ஊன்றிப் படித்துள்ளார் என்பதைக் காண முடிந்தது.

வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் வே.இந்திரன் நன்றி கூறினார்.

இத்தகைய வாசிப்புகள் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், சமூகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவும் என்பதை அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் உணர்த்தி வருகிறது.

வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுகள்.

ஊரான்


 

துரை.பாலகிருட்டிணன்
 

 செ.விநோதினி

 
மு.தங்கவேல்

நா.பாலாஜி
 

 பார்வையாளர்கள்

 வே.இந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க முனைத்து மூக்குடைபட்ட ஆதிக்கக் கும்பல்!




 

Tuesday, 14 May 2019

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க முனைந்து மூக்குடைபட்ட ஆதிக்கக் கும்பல்!

அம்பேத்கர்-பெரியார் பெயரில் இராணிப்பேட்டை பெல் வளாகத்தில் ஒரு படிப்பு வட்டம். பல்வேறு துறைகளில் தங்களது படிப்பை முடித்துவிட்டு நல்லதொரு வேலையில் சேர்ந்து பணியாற்றுவோர் - பணியாற்றி ஓய்வு பெற்றோர் மற்றும் அவர்தம் குடும்பத்தார். இவர்கள்தான் இந்த படிப்பு வட்டத்தின் அங்கத்தினர்கள். எட்டு மணி நேரம் அலுவலகத்தில்-ஆலையில் பணிபுரிகிறார்கள். எட்டு மணி நேரம் உறங்குகிறார்கள். மீதி எட்டு மணி நேரத்தில் என்ன செய்வது? இந்த எட்டு மணி நேரத்தில் வாசிப்பின் மூலம் நாட்டு நடப்பை-சமூக அவலங்களை அலசுகிறார்கள். 

இவர்களின் இந்த அலசல் சாதி-மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி வயிறு வளர்க்கும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடி வயிற்றைக் கலக்குகிறது. அன்று நம் பாட்டன்களை படிக்கவிடாமல் தற்குறியாக்கியது போல இன்று நமது அறிவுத் தேடலை முடக்கப் பார்க்கின்றனர். இது அவர்களால் முடியாது என்ற போதிலும் அதிகாரத்தைக் கொண்டு அச்சுறுத்த முனைகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் தங்கள் பீச்சைக் கையால் புறந்தள்ளிவிட்டு வாசிப்பை வளர்த்தெடுக்கும் பயணத்தைத் தொடர்கின்றனர் இந்தப் படிப்பு வட்டத்தினர். 

அன்று நமது பாட்டன்கள் படித்தால் நாக்கை அறுக்கச் சொன்னார்கள்; படிப்பைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னார்கள். இப்படி எல்லாம்கூட நடந்திருக்குமா என நீங்கள் கேள்வி எழுப்பலாம். தற்குறிகளாய் இருந்த நமது முப்பாட்டன்களே இதற்கு சாட்சிகளாய் காட்சியளிக்கிறார்களே!

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த ஓராண்டில் ஏராளமான வாசிப்புகள்; கருத்துரைகள்;  கலந்துரையாடல்கள் என நீள்கிறது இவர்களின் தேடல். இருபதைத் தொட்டவர்கள் முதல் அறுபதைக் கடந்தவர்கள் வரை; ஆண்கள்-பெண்கள்  என அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது இந்த வட்டம். படித்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒரு போட்டியே நிலவுகிறது. ஆம்! அனைவரும் இங்கு நெறியாளர்கள்; கருத்தாளர்கள்தான்.

இத்தகைய சிறப்புமிக்கதொரு வாசகர் வட்டத்தை பொது வெளியில் அறிமுகப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவை முடக்குவதற்காக அதிகாரத்திலிருக்கும் ஆதிக்கக் கூட்டத்தினர் சென்னையிலிருந்தும் வேலூரிலிருந்தும் முயன்று மூக்குடைபட்டுப் போனார்கள்.  அறிமுக விழா 16.02.2019 அன்று இராணிப்பேட்டையில் அமர்க்கலமாய் நடந்தது. இராணிப்பேட்டையைத் தாண்டி தமிழக அளவில் தடம் பதித்தது அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம். இந்த விழா வாசகர் வட்டத்தின் 15-வது சந்திப்பு.
அறிமுக விழா-முழுக் காணொளி: இணைப்பு: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அறிமுக விழா. https://www.youtube.com/watch?v=39354ZH6xlU&t=126s

அறிமுக விழாவைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற வாசகர் வட்ட நிகழ்வுகள்.

14.03.2019 அன்று தோழர் அரங்க பெருமாள் தலைமையில் நடைபெற்ற 16-வது சந்திப்பில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் “நமக்கான குடும்பம்” நூல் குறித்து தோழர் சிறீதர் அவர்களும், ரோசலிண்ட் மைல்ஸ் அவர்களின் ”பெண் என்ன செய்தாள்?” நூல் குறித்து தோழர் இளங்கீரன் அவர்களும் உரையாற்றினார்கள். தோழர் கிருபா வரவேற்புரையாற்றினார். தோழர் கோவிந்தசாமி நன்றி உரையாற்றினார்.






23.04.2019 அன்று தோழர் இந்திரன் தலைமையில் உலக புத்தக நாள் மற்றும் வாசகர் வட்டத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழாவாக நடைபெற்ற 17-வது சந்திப்பில் தோழர் பொன்.சேகர் அவர்கள் வட்டத்தின் நோக்கம் குறித்தும்,  எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உலக புத்தக நாள் குறித்தும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தோழர் கிருபா வரவேற்புரை ஆற்ற, தோழர் கோவிந்தசாமி நன்றி கூறினார். திரளானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.















 அம்பேத்கர் பிறந்த நாள் விழா!

இராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்  சார்பில் 05.04.2019 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் முக்கிய வாயிலில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது. பரவலாக சுவரோட்டிகள் ஒட்டப்பட்டன.















03.05.2019 அன்று தோழர் கலைவாணன்  தலைமையில் நடைபெற்ற 18-வது சந்திப்பில் தோழர் பூர்ணிமா வரவேற்புரை நிகழ்த்த, “மே நாளும் கார்ல்மார்க்சும்” என்கிற தலைப்பில் தோழர் சிலம்பரசன், “தொழிலாளர்களின் தோழர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் தோழர் இரவி ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் அரங்க.மேகநாதன் நன்றி கூறினார்.






வாசகர் வட்ட சந்திப்புகள் வெறும் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படவில்லை. வாசகர் வட்ட சந்திப்பு குறித்து வட்டத்தின் அமைப்புச் செயலாளர் நீலகண்டன் “அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் வாசிப்பின் மூலம் இக்கால கட்டத்தில் இளைஞர்களுக்கு ஒரு முற்போக்கு சிந்தனையில் தொடர்ந்து தொலை நோக்குப் பார்வையுடன் இக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறது” என்கிறார். வட்டத்தின் வெற்றி இதுதான். தொடரட்டும் உங்களது பணி. வாழ்த்துகளுடன்

ஊரான்


தொடர்புடைய பதிவுகள்